(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..)
கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ்வப்போது சென்றிருந்தாலும் அவை எல்லாம் குறுகிய பயணமாக அமைந்ததனால் சிலரைச் சந்தித்தும், பலரைச் சந்திக்காமலும் இருந்திருக்கிறேன். அப்படிச் சந்தித்த, சந்திக்காது விட்டுப்போன சிலரை இப்பயணத்தில் சந்தித்தேன்.
இந்த பதினெட்டு ஆண்டு கால இடைவெளியில் எங்களிடையே பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. பலர் (ஏன்?!.. எல்லாருமே!) திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்றுவிட்டனர். வேலை, கல்யாணம், பிள்ளை, வீடு கட்டுதல் என சமூக மதிப்பீட்டுத் தளத்தில் நிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக, அதற்கே உரிய இன்ப துன்பங்களின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகான சந்தித்தலில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருந்தோம். அவர்கள் வாழ்க்கையில் பல படிகள் கடந்து வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவனான நான் எங்கே நிற்கிறேன் என்ற கேள்வியை எதிர்கொள்ளும் வரை..!
இத்தகைய கேள்வி எழும் சந்தர்ப்பம், பல சந்திப்புகளில் அமைந்தது. ஒன்று நண்பர்கள் அதை நேரடியாக கேட்டார்கள் அல்லது பேசும் தோரணையில் அதே கேள்வியை என் எண்ணத்தில் ஏற்படுத்தினார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் பணிபுரியச் சென்றுவிட்ட ஒரு நண்பர். பள்ளியில் எனக்கு மூத்தவர். ஒரு வகுப்பு முன் கடந்தவர். ஆனாலும் நண்பர். பல வருடங்களுக்கு பின் அவரைச் சந்திக்கிறேன். அவர் இப்படி என்னிடம் கேட்டார், “ஆமாம் நீ சினிமாவில் இருக்கியாமே? ஏண்டா? கோபி சொன்னான். எனக்கு ஆச்சரியம் தாங்கல.. நீ நல்ல பையனாச்சே?!”
இந்த கேள்வியைச் சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். என் நண்பன் ஒருவன் என்னைப்பற்றி அவரிடம், நான் சினிமாவில் இருப்பதை சொல்லி இருக்கிறான். அதற்கு அவரின் ரியாக்ஷன் ‘அட அவன் (நான்) நல்ல பையனாச்சே’ என்பது. அதாவது நல்ல பையனான நான், சினிமாவில் ஏன் இருக்கிறேன்? என்பதும் ஏன் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறேன் என்பதும் அவரின் ஆதங்கம். இதை அவர் என்னிடமே சொன்னபோது அதற்கு நான் என்ன ரியாக்ஷன் செய்வது என்று தெரியவில்லை.
அடுத்து, மற்றொரு நண்பர். இத்தனை வருடங்களில் அவ்வப்போது சந்திக்க கூடியவர்தான். பத்தாவதிலேயோ அல்லது பன்னிரெண்டாவதிலேயே படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பத் தொழிலான ஸ்டேஷனரி கடை நடத்திக் கொண்டிருப்பவர். இம்முறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது என்ன படம் செய்கிறேன், வேலை எல்லாம் எப்படிப் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் விசாரித்தவர். கடைசியாக, மெல்லிய குரலில் கேட்டார் “எப்படிச் சமாளிக்கற? இது தேவைதானா?”
இந்த இரண்டு கேள்விகளும், என் வேலை மட்டும் சார்ந்த கேள்விகள் அல்ல. இவ்வளவு நாட்கள் நான் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீது வைக்க பட்ட கேள்விகள் என்பதாய் பார்க்கிறேன். ஏனெனில் எல்லாரையும் போல, கடமையாகக் கொள்ளப்பட்ட பள்ளி படிப்பிற்கு பிறகு என் வாழ்க்கையை முன் நகர்த்த நான் ஈடுபட்ட அத்தனை செயல்களையும் இக்கேள்விகள் அர்த்தமற்றதாக்கிவிடுகின்றன.
ஆம்.. எல்லாரையும் போல், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடுகட்டுதல் என்று இல்லாமல்.. லட்சியம், போராட்டம், புண்ணாக்கு என்று உழலும் நான், அவர்களால் எப்படி மதிப்பிடப்படுகிறேன் என்பதை அறியும் போது, மிகுந்த ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகிறேன்.
இன்று, நான் வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகிறார்கள். ஒருவர் என் தொழிலையே சந்தேகிக்கிறார். ஒழுக்கமற்றதாக, சமூக மதிப்பீடுகளுக்கு அடங்காததாக, நல்ல பையனொருவன் இருக்கத் தகுதி அற்ற இடமாக அதை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் இது ஒரு பிழைப்புக்கு ஆகாத தொழிலாக பார்க்கிறார் எனும் போது, நான் கொள்ளும் மனநிலையை எப்படி விவரிப்பது?
இதற்கா இத்தனை ஆண்டுகள் செலவழித்தேன்? இதற்கா இத்தனை வருட போராட்டம்? இதற்கா இத்தனைத் தகுதியாக்கிக் கொள்ளல்?
மனமெங்கும் பெரும் பாரம் குடி கொண்டது நண்பர்களே.. இச்சமூகம் ஒரு சினிமாக்காரனை (அட்லீஸ்டு.. வெற்றி பெறாதவனை) எப்படி மதிப்பிடுகிறது என்று பார்த்தீர்களா?
இவர்கள் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நண்பனான என்னையே இவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் போதுதான் ஒரு பெரும் கோபம் எழுகிறது. அவர்கள் என் மீது அன்பு கொண்டே கேட்டார்கள் என்ற போதும்.. அக்கேள்விகளுக்கு இரண்டு பதில்கள்தான் இருக்க முடியும்.
ஒன்று.. பிழைக்க வழியில்லாத, கேடு கெட்ட சினிமாவில் உழன்று கிடக்கும் நான், ஒரு துப்பு கெட்ட பிறவியாக இருக்க வேண்டும்.
இரண்டு.. மேற்சொன்னவர்களைப் போன்றோர் அறியாத ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவனாக நான் இருக்க வேண்டும்.
இதில் எது சரி என்பதை, காலமும் நான் கொள்ளும் வெற்றியும்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் நண்பர்களே..
கடமைக்கு படித்து, பணம் மட்டுமே சம்பாதிக்க வேலைக்குப் போய், ஊர் மெச்சும் வாழ்க்கை வாழத் தகுதி அற்றவன் நான். விருப்பமற்றதாலோ, இயலாமையாலோ அத்தகைய ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்காதவன். படிப்பு என்பது அறிதல் பொருட்டு என்று கொண்டவன். வாழ்க்கை என்பது கடமையின் பொருட்டும், அக்கடமை ஒரு இலக்கு நோக்கி ஒழுங்கு செய்யப்படவேண்டியது என்றும் கற்பிக்கப்பட்டவன். அதை நோக்கியே என் பயணம் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
சிறுவயது படக்கதை வாசிப்பும், ஓவியப் பயிற்சியும், புகைப்படங்களும் திரைப்படங்களும், புகைப்படத்துறை மீது ஈர்ப்பை ஏற்படுத்தின. புகைப்படத்தின் நீட்சியான ஒளிப்பதிவின் மீது காதல் உண்டானது ‘பெரிதினும் பெரிது கேள்’ வழி வந்தது. பள்ளிப் படிப்பு முடிந்தபோது என் வருங்காலம் எதை நோக்கியது என்பதை முடிவெடுத்து வைத்திருந்தேன். அது திரைப்பட ஒளிப்பதிவாளனாகுவது. ஏன் ஒளிப்பதிவாளனாக ஆக வேண்டும்? சினிமாவின் மீது இருக்கும் மயக்கமா? ஆர்வக்கோளாறா? மோகமா? இவை எல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியும். அப்படி சொன்னால் அது முழு உண்மையாகாது நண்பர்களே.. ஆம், எல்லாரையும் போல சினிமாவின் மீது ஒருவித மயக்கமிருந்தது, மோகம் இருந்தது, ஆர்வம் இருந்தது. ஆனால் அது கோளாறு இல்லை.!
இங்கே சமூகத்தில் பெரும்பாலானோருக்கு ஒன்று புரிவதில்லை, திரைத்துறையில் வெற்றி கொள்வதற்கு எத்தனை முயற்சியும் தகுதியும் வேண்டும் என்பது. அதை வெறும் உல்லாச இடமாக கருதுகிறார்கள். விளையாட்டில், அரசியலில், ஏன் ஒரு பெரும் அரசுப்பணியில் தங்களுக்கான இடத்தை அடைவது எவ்வளவு கடினமோ, அதேவிதமான கடினம் இங்கேயும் உண்டு. ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர், பொறியாளர் வேலைகளுக்கு என்ன தகுதி வேண்டுமோ அதே போன்றதொரு தகுதி திரைத்துறையில் வெற்றி பெறவும் தேவையாக இருக்கிறது. இவ்வேலைகளை விடவும் திரைத்துறையில் இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, கலை இயக்குனராக, படத்தொகுப்பாளராக, இசைப்பொறியாளராக இருப்பதில் எவ்வித தகுதிக் குறைவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒளிப்பதிவாளனாக உருவாக வேண்டும் என்று முடிவெடுத்ததும், நான் ஒன்றும் திரைத்துறையை நோக்கி ஓடி வந்துவிடவில்லை. அது ஒரு நீண்ட நாள் இலக்காகத்தான் நிர்ணயித்திருந்தேன். அதை நோக்கிய படிக்கட்டுகளை செதுக்கும் வேலையைத்தான் இவ்வளவு நாட்களும் செய்துகொண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்புக்கு பிறகு, கல்லூரிப் படிப்பு, அதனோடு சேர்ந்து புகைப்படக்கலையிலும் கிராபிக் டிசைனராக தேர்ச்சி, விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சியும், அது கொடுத்த தன்னம்பிக்கையின் வாயிலாக திரைத்துறை பிரவேசமும் என அது ஏழு வருடங்களை எடுத்துக்கொண்டது. ஐந்து வருடங்கள் உதவி ஒளிப்பதிவாளனாக பயிற்சி பெற்று இறுதியில் ஒளிப்பதிவாளனாக என் இலக்கை அடைந்துவிட்டேன். ஆனால் அது முடிவன்று. ஏனெனில், சினிமாவில் வெற்றி பெற்றவனாகவும் இருக்க வேண்டும். இல்லையேல், அதற்கென்று எவ்வித மதிப்பும் கிடையாது.. பாம்பாக இருந்தாலும் சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்க வேண்டும்.
சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்கதான் எத்தனை போராட்டம்? எத்தனை அவமானங்கள்? எத்தனை இழப்புகள்?
இதற்குத்தான் பதினெட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் பல வருடங்கள் ஊருக்குப் போகாமல் இருக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் பல வருடங்கள் தந்தையின் புறக்கணிப்பை ஏற்க வேண்டியதிருந்தது. இதற்குதான் காதலை விட்டு கொடுக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முடியாதவனாக இருக்க வேண்டியிருந்தது. இதற்குதான் முப்பத்தைந்து வயதுக்கப்புறமும் பிரமச்சாரியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தனை நாட்களையும்தான் என் நண்பர்களின் கேள்விகள் அர்த்தமற்றதாக்கி விட்டன. இவ்வளவு நாட்கள் மெனக்கெட்டது அத்தனையும் பயனற்றதோ? வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உண்டாக்கிவிட்டார்கள்.
வெற்றியைச் சந்திக்கும் முன்னர் வரையான சூழலை ஒருவன் எப்படி எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை நான் அறிந்தவனே ஆனாலும் அதை நேரில் அனுபவிக்கையில், அதையும் நானறிந்த நண்பர்களிடமே பெற்றதும் அதன் வலியை எனக்கு உணர்த்தியது.
ஆனால் நண்பர்களே.. இப்படி வாழ்க்கையை வீணடித்தவன் நான் மட்டுமல்ல. என்னைப்போலவே பல நண்பர்களை நான் அறிவேன். நான் கடந்துவந்த பாதையை இங்கே சொல்லிவிட்டேன். அப்படி சொல்ல வாய்ப்பற்றவர்கள் பலருண்டு. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வேட்கையை அறிவேன். அவர்களின் தகுதிகளை அறிவேன். அவர்களின் முயற்சியையும் இழப்பையும் வேதனையும் அறிவேன். அவற்றுக்குப் பின்னே பெரும் கனவொன்று உண்டு என்பதும் அதை நனவாக்க முயலும் அவர்களின் தகுதியும், இருப்புமே என்னை மீட்டெடுக்கின்றன. இத்தனை பேரின் இருப்பும் முயற்சியும் பொருளற்றவை அல்ல என்பதை உணர்ந்தவனாக, என் அவநம்பிக்கைகளைத் துரத்தி அடிக்கிறேன். அவர்களின் பொருட்டே, அவர்களைக் கொண்டே என் மீது ஏவப்பட்ட அக்கேள்விகளை துடைத்து எறியவும் முற்படுகிறேன்.
நல்லவர்கள் இருக்கத் தகுதி அற்ற இடமாக, பிழைக்க வழி அற்ற துறையாக சினிமா இல்லை என்பதற்கு என் நண்பர்களே சாட்சி. நேர்மையான, தகுதியான பல நண்பர்களை நான் அறிவேன். அவர்களே என்னைப் பலவானாக்குகிறார்கள். அவர்களே என்னை நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். இதே கேள்விகளை அவர்களும் எதிர்கொண்டிருக்கக் கூடும். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்க கூடும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
அவர்களின் பொருட்டும் இக்கேள்வியை இங்கே பதிவும் செய்கிறேன்.
நாங்கள் என்ன.. மதியற்ற, ஒழுக்கமற்ற, பிழைக்கத் தெரியா துப்பு கெட்டவர்களா?