Thursday, April 19, 2012

நான்கு செய்தியாளர்களும் ஒரு போர்களமும்உலகம் இன்று செய்திகளால் நிரம்பி வழிகிறது. நடப்புகள் அனைத்தும்
செய்தியாக்கப்படுகின்றன. ஏதோவொரு ஊடகத்தில் அவை பதிவு செய்யப்படுகின்றன. போட்டிகள் நிறைந்த இத்துறையில், பரபரப்பான செய்திகள் தேவைப்படுகின்றன. சுடச்சுட பரிமாறப்பட வேண்டியது அவசியமாகிறது. தவறும் ஒவ்வொரு கணமும், அது செய்தியைச் சாகடித்து விடக்கூடும்.

ஒவ்வொரு செய்தியாளனும், பத்திரிக்கையாளனும் சந்திக்கும் நெருக்கடிகள்
ஏராளம். துறைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறமென்றால், அறம் சார்ந்த
நெருக்கடிகள் மறுபுறம். மற்ற எந்த வேலையை விடவும் பத்திரிக்கையாளனாக தன் பணியை தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதனின் அறம் சார்ந்த கடமை மிக முக்கியமானது. உயிர் காக்கும் மருத்தவருக்கு இருக்கும் அதே கடமையும் பொறுப்பும் ஒரு பத்திரிக்கையாளனுக்கு உண்டு. சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே.

ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையோர் பத்திரிக்கையாளனாகத் தங்கள் பணியைத் தேர்ந்தெடுப்பது ஒருவித பொறுப்புணர்வினால்தான். சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பும் அக்கறையுமே ஒரு மனிதனைப் பத்திரிக்கையாளனாக (நல்ல) மாற்றக்கூடும்.

ஒரு நடப்பைச் செய்தியாக்குவது எதற்காக? செய்திகளை உலகம் அறிய செய்வது எதன் பொருட்டு? பணம் செய்யவா? பரபரப்புக்காகவா? இல்லை..! விழிப்புணர்வுக்காக. ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்? விழிப்புணர்வே மனிதனைக் காக்கும்.

இப்படி மனிதம் காக்கும் பணியில் எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் உலக
முழுவதும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்திக்காக
அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. செய்திகளை தவற
விட்டுவிடக்கூடாது என்பதற்கு அவர்கள் எடுக்கும் மெனக்கெடலை நாம் அறிவோம். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முண்டியடிக்கும் வாகனங்களில் துரத்தும், எப்போதும் பரப்பரப்பான கூட்டமாக அவர்களை நாம் அறிவோம். இது எதற்காக? சக பத்திரிக்கையாளன் மற்றும் போட்டி ஊடகத்தைவிட செய்தியை முந்தித் தந்துவிடவேண்டும், எச்செய்தியையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமா? வெறும் போட்டிக்காகவா? இல்லை.

வெறும் போட்டிக்காக என்றால் பெரும்பான்மையோர் அடுத்த நாளே வேலையை விட்டு போய் விடுவார்கள். தினமும் கூட்டத்தோடு கூட்டமாக,
முண்டியடித்துக்கொண்டும், துரத்திக்கொண்டும் இருக்க யார்
விரும்புவார்கள்!? இதைவிட நல்ல, சுகமான வேலைகள் பல உண்டு என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா என்ன? ஆனால் அப்படி யாரும் வேறு வேலைக்குப்போவதில்லை. ஏன்? இவ்வேலையில் அவர்கள் அடையும் ஆத்ம திருப்தி. இது ஒரு வகையான கடமை. சமூகத்திற்கு, சகமனிதனுக்கு அவர்கள் ஆற்ற விரும்பும் சேவை. ஆகவேதான் செய்தியாளனாக இருப்பது ஒருவகையில் அறம் சார்ந்தது என்கிறேன்.

செய்தியாளர்களில் பல வகை உண்டு. சினிமா, அரசியல், வணிகம், அறிவியல், நாகரிகம் எனத் தொடரும் இப்பட்டியலில் போர்ச் செய்தியாளர் அல்லது போர்ப் பத்திரிக்கையாளர் என்பதும் ஒரு பிரிவு. போர் நடக்கும் இடங்களில் போரின் ஊடாகப் பயணித்து செய்திகளைத் தருபர்களை ‘போர்ச் செய்தியாளர்’(War correspondent) என்கிறோம். இவர்களின் பணி மிகக் கடுமையானது. மரணங்களின் ஊடாக பயணிப்பவர்கள். பல மரணங்களை செய்தியாக்குபவர்கள். சில சமயங்களில் தாங்களே செய்தியாகுபவர்கள். ஆமாம். உலக முழுவதும் பணியில் மரணமடைந்த, பணியின் பொருட்டு மாண்டு போன, செய்தியாளர்கள் பலர் உண்டு.

அண்மையில் கொல்லப்பட்ட ‘மேரி கொல்வினை’ நாம் அறிவோம். பணியில்
கொல்லப்பட்ட செய்தியாளர்களின் புள்ளிவிவரத்தை ‘பத்திரிகையாளர்கள்
பாதுகாப்புக் குழு’ (committee to protect journalists) என்னும் அமைப்பு
வெளியிட்டிருக்கிறது.

2012-இல் மட்டும் 17 செய்தியாளர்களும் 1992-இலிருந்து இக்கட்டுரை
எழுதப்படும் வரை 911 செய்தியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 179
செய்தியாளர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேரி கொல்வின்

உலகின் இருபது அபாயகரமான நாடுகள் மற்றும் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை:

1. ஈராக்: 151
2. பிலிப்பைன்ஸ்: 72
3. அல்ஜீரியா: 60
4. ரஷ்யா: 53
5. கொலம்பியா: 43
6. பாக்கிஸ்தான்: 42
7. சொமாலியா: 40
8. இந்தியா: 28
9. மெக்ஸிக்கோ: 27
10. ஆப்கானிஸ்தான்: 24
11. பிரேசில்: 21
12. துருக்கி: 20
13. போஸ்னியா: 19
14. இலங்கை: 19
15. ருவாண்டா: 17
16. தாஜிக்ஸ்தான்: 17
17. சியரா லியோன்: 16
18. வங்காளம்: 12
19. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மண்டலம்: 10
20. நைஜீரியா: 10

இதில் பெரும்பாலான நாடுகளில் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற நாடுகளின் ஆட்சி அமைப்பு முறையில்
இருக்கும் குறையை நாம் அறிவோம். ஆனால் இந்தியாவில்?

எட்டாமிடம்.

இருபத்தெட்டு செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில்
தினகரன் எரிப்பில் கொல்லப்பட்ட வினோத்குமார், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூவரின் கணக்கு தனி. மேலும் காரணம் தெரியாத கொலைகளின் வரிசையில் 18 செய்தியாளர்கள் வருகிறார்கள்.

உலக முழுவதும் 160 செய்தியாளர்கள், போரில் செய்தி சேகரிக்கும்போது
கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22, 2012-இல் கொல்லப்பட்ட மேரி
கொல்வினுக்குப் பிறகு மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு முழுவதும், ஏன் இந்த செய்தியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கிறார்கள்? தங்கள் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கதை அங்கே இருக்கிறது? அவர்களின் உயிரை விட பெரிதாக எதை நினைக்கிறார்கள்?

இக்கேள்விகளுக்கு பதில் வேண்டுமாயின், அவர்களோடு நாம் பயணித்தால்
மட்டுமே கண்டெடுக்க முடியும். ‘The Bang Bang Club’ என்னும் திரைப்படம்
நமக்கு அப்படியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. கனடிய-தென்
ஆப்பிரிக்க படமான இதை ‘ஸ்டீவன் சில்வர்’(Steven Silver) இயக்கி
இருக்கிறார்.


‘கெவின் கார்ட்டர்’(Kevin Carter),‘கிரெக் போரினொவிச்’(Greg
Marinovich),‘கென் ஓஸ்டர்புக்’(Ken Oosterbroek) மற்றும் ‘ஜோவா சில்வா’(João Silva) ஆகிய நான்கு, போர் புகைப்படச் செய்தியாளர்களின் போர்
அனுபவத்தை சொல்லுகிறது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் போரில்,
குறிப்பாக 1990 முதல் 1994-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த நான்கு
புகைப்படக்காரர்களுக்கு நடந்த அனுபவத்தை பதிவுசெய்திருக்கிறது. இந்த
நால்வர் குழுவின் பெயர் தான் ‘The Bang Bang Club’.

கென் ஓஸ்டர்புக்
கெவின் கார்ட்டர்

ஜோவா சில்வா
கிரெக் போரினொவிச்

இந்நால்வர் குழு சந்திக்கும் சிக்கல்களையும், போராட்டத்தையும்,
மனவுளைச்சலையும் இப்படம் விவரிக்கிறது. ‘கிரெக் போரினொவிச்’ 1991-இலும், ‘கெவின் கார்ட்டர்’ 1994-இலும் புலிட்சார் விருதுகளை பெற்றார்கள். 18,
ஏப்ரல் 1994-இல் ‘கென் ஓஸ்டர்புக்’ பணியில் இருக்கும்போது துப்பாக்கி
சூட்டில் கொல்லப்பட்டார். 1994 ஜூலையில் ‘கெவின் கார்ட்டர்’ தற்கொலை
செய்துக்கொள்கிறார். (மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்)

பிறகு 2010 அக்டோபரில் கந்தகர் போரின்போது ‘ஜோவா சில்வா’ கண்ணிவெடியில் கால்வைத்ததனால் தன் இரு கால்களையும் இழக்கிறார். கிரெக் போரினொவிசும் ஜோவா சில்வாவும் இணைந்து எழுதிய இதே பெயரைக்கொண்ட புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


படத்தைப்பாருங்கள். போர்க்களத்தின் ஊடே ஒரு புகைப்படக்காரனாக பயணிப்பதில் இருக்கும் சவால்களையும், சாகாசத்தையும், மானுடத்தையும் காணமுடியும்.

ஒரு முன்னாள் புகைப்படச் செய்தியாளனாக இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. 2000 ஆம் ஆண்டு, விகடனின் மாணவ பத்திரிக்கையாளனாக பெங்களூரில் பணிபுரிந்த காலகட்டத்தில், அப்போது வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் பற்றி செய்திகளுக்காக ஓடிய ஓட்டத்தை இப்போது புன்முறுவலோடு நினைத்துக்கொள்கிறேன்.

The Bang Bang Club TRAILER