Friday, August 17, 2012

அட்டகத்தி
மிக இயல்பாய் ஒரு திரைப்படம். காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசன உச்சரிப்பு என அத்தனையும் மிக இயல்பாய் இருக்கிறது. பதின்பருவத்தில் எல்லா இளைஞனும் இளைஞியும் கடந்து வரும் வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும், அவர்களின் வாழ் சூழ்நிலையைப் பொருத்து, அவர்களுக்கான பதின்ம வயது காதல் அல்லது பாலுணர்ச்சி கடந்து செல்கிறது. இப்படத்தில், சென்னையின் விளிம்பில் பரவி இருக்கும் சிறு கிராமங்களில் ஒன்றைக் களமாகவும், அதன் இளம் பருவத்தினரை பாத்திரங்களாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

படிப்பு, வேலை பொருட்டு தினமும் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பதின்பருவத்தினர், அநேகமாக எல்லோரும் சந்தித்த காதல் நாட்கள் திரையில் விரிகின்றன. பேருந்துக் காதல் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கிறது. இதை தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படியான காதல் காட்சிகளும், விடலைத்தனங்களும் கொண்ட சம்பவங்களால் படத்தை நிறைத்திருக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திரையரங்கு கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அப்படியான நாட்களை கடத்து வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை பெரும்பாலானோருக்கு அந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்படித் தோன்றியது என்பதிலிருந்து இதைச் சொல்லுகிறேன். கதை சொல்லத் தேவையான இடத்தை சம்பவங்களின் மூலம் நிறைத்திருப்பதும், கதை சொல்ல மிகக் குறைவான நேரத்தையே எடுத்துக் கொண்டிருப்பதும் ஒருவேளை குறைகளாகத் தோன்றினாலும், ஒரு சுவாரசியமான படத்தைப் பார்த்த நிறைவு கிடைக்கிறது.

கதாநாயகன் தினேஷ், கதாநாயகி நந்திதா, நாயகனின் குடும்பம் குறிப்பாக அவரின் அப்பா, நண்பர்கள், பெண்கள், அடியாட்கள் என படம் முழுவதும் வரும் கதாப்பாத்திரங்கள் நிறைவாக இருக்கிறார்கள். சரியான பாத்திரத் தேர்வு செய்யப்பட்டு, நல்ல நடிப்பும் வாங்கப்பட்டிருக்கிறது. கதாநாயகன் தினேஷை குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் பாத்திரத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான நடிகரைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. நாயகி நந்திதாவும் அழகாக இருக்கிறார். நடிப்பும் அழகு. இருவரையும் வாழ்த்தி வரவேற்போம்.

துவக்கக் காட்சியிலிருந்து படம் முழுவதும் இயக்குனர் காட்டி இருக்கும் நுணுக்கங்கள் அபாரம். கதைக்கு நேரடியாகத் தேவையற்ற பல ஷாட்டுகள் படத்திலிருக்கின்றன. அவை இல்லாமல் கூட அக்காட்சியை எடுக்க முடியும். அது நிறைவாக கூட இருக்கும். ஆனால் அத்தகைய ஷாட்டுகளை வைத்திருப்பதன் மூலம், கதை நிகழும் களத்தை, காலத்தை நிர்ணயிக்க மட்டுமல்லாமல் அதை ஒரு பதிவாகவே இயக்குனர் கையாண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. காட்சியோடு சம்பந்தப்படாத அட்மாஸ்பியர் ஆட்களின் அசைவுகளையும், சிறு செயல்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இது அவரின் உழைப்பை, ஒரு சூழ்நிலையை அவர் அவதானிக்கும் விதத்தை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வகையில் கதையின் நம்பகத் தன்மையை, இயல்பை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, பின்னணியிசை என எல்லாம் நிறைவாகச் செய்யப்பட்டிருக்கிறது. மிக இயல்பான ஒளியமைப்பைச் செய்திருக்கிறார் பி.கே.வர்மா. நிறைவாக இருக்கிறது. இசையும் இதம். உறுத்தலற்று இயல்பாய் தேவையான அளவு இருக்கிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் கவனிக்கப்பட வேண்டியவர். மிக நேர்த்தியான ஒரு படத்தை அதன் இயல்போடு கொடுக்க முயன்றிருக்கிறார். அதை நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார். மிகக் கடினமான உழைப்பும், செய்நேர்த்தியும், தொழில் ஆளுமையும் கொண்ட இயக்குனராக இருக்கிறார். அநேகமாக இது அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதையாகவே இருக்க முடியும். படித்து, கேள்விப்பட்டு மட்டுமே எடுத்து விடக்கூடிய சாத்தியமில்லா வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. வாழ்ந்திருந்தால் மட்டுமே இது முடியும்.

இத்தகைய படங்கள் ஓடுவதன் மூலம்தான், தமிழ் சமூகம் தமக்கான திரைப்படங்கள் எடுப்பதை நோக்கி நகர முடியும் என நினைக்கிறேன். அண்மையில் திரு.பாலுமகேந்திரா இப்படிக் குறிப்பிட்டார். ‘நாம் வாழும் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை அதாவது நம் கதை, தொழில் புலமை கொண்ட ஒரு படைப்பாளியால் எவ்வித சமரசங்களும் செய்துக் கொள்ளாமல் எடுக்கப்பட்டால், அது நல்ல படமாக இருக்க சாத்தியம் இருக்கிறது’. இதில் சாத்தியம் என்பதை அழுத்திச் சொன்னார். மேலும் இப்படி எடுக்கப்படுகின்ற எல்லா படங்களுமே நல்ல படங்களாக இருந்து விடும் என்பதில்லை, சாத்தியம் மட்டுமே இருக்கிறது என்றார். எனில், எது நல்ல படம்? அதற்கும் அவரே பதில் சொல்லுகிறார்.. அது அம்மாவின் உணவைப்போன்று இருக்க வேண்டும். அக்கறையோடு உடலைக் கெடுக்காத வகையில் சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதேபோல சமூக அக்கறையோடும், தனி மனிதனுக்குள் உறங்கும் மிருகத்தை தூண்டாத வகையிலும் எடுக்கப்பட்ட படத்தை நல்ல படம் என அடையாளம் கொள்ளலாம் என்றார்.

நம் சமூகம் சார்ந்த கதைகளைத் திரைப்படங்களாக்கும் காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அடையாளத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. விடலைக் காதலைப் பற்றி பேசும் படமானாலும் இது வரவேற்கப்பட வேண்டிய படம் என நான் கருதுகிறேன். சினிமாத்தனமான, வாழ்க்கையில் முயற்சித்துக்கூட பார்க்க முடியாத பல காதல்களை நம் திரைப்படங்கள் அரங்கேற்றியிருக்கின்றன. அவை வெற்றிப் படங்களாகக்கூட இருந்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், இப்படம் நம் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டக் காதலைச் சொல்லுகிறது. நம் சக மனிதர்களைப் பற்றி பேசுகிறது. ஒரு இளைஞனின் பதின்ம பருவத்துக் காதலையும், அதற்கான காட்சிகளைக் கொண்டிருப்பினும் ஒரு சமூகத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது. சென்னையின் புறநகர் வாழ்க்கை, அதன் இயல்போடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்துக் கானா முதல் மரண கானா வரை அது விரவிக் கிடக்கிறது. காதல் கதையின் மூலமாகவாவது நம் சமூகத்தை பதிவு செய்யும் இந்த முயற்சி, மெது மெதுவாக ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நம் திரைப்படங்களை நகர்த்தும் என நினைக்கிறேன். ஒருவேளை, இது ஒரு மசாலா படத்தின் வெற்றியால் முறியடிக்கப்படலாம். இருப்பினும் எதிர்காலத் திரைப்படங்களை நோக்கிய நற்சிந்தனையை இப்படம் கொடுக்கிறது.

நம் சமூகம் சார்ந்த கதையை அதன் களனோடும், செய்நேர்த்தியோடும் கொடுத்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தை பெருத்த கரவோசையோடு நாம் வரவேற்கலாம்.

அட்டக்கத்தியானாலும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.
   

Wednesday, August 8, 2012

யுத்த மலர்கள்
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்த இப்போர் வரலாற்றில் மறக்க முடியாத போர்களில் ஒன்று. இரண்டாம் உலகப்போரில் இது நடந்தபோதும், இதற்கெனத் தனியாக சுவடுகள் உண்டு. உலக மானுடத்தின் மீது இப்போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் மறையாதவை. ஜூலை 7, 1937 முதல் செப்டம்பர் 2 ,1945 வரை நடந்த இப்போரை ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ (Second Sino-Japanese War) என அழைக்கிறார்கள்.  1937-இல் துவங்கிய இப்போர் 1941 வரை சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே மட்டும்தான் நடந்துகொண்டிருந்தது. டிசம்பர்  7, 1941-ஆம் ஆண்டு ஜப்பான், வட அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருந்த  ‘பேர்ல் ஹார்பர்’ (Pearl Harbor)-ஐத் தாக்கியதும் அதற்கு பதிலடி கொடுக்கறேன் பேர்வழி என வட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்கியதும் நாம் அறிந்ததுதான். அதன்பிறகு ஜப்பானுக்கு பெரும் எதிரிகள் வந்து சேர்ந்தார்கள்.

சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே முதல் போர் மூண்டது ஆகஸ்டு 1,1894 – ஏப்ரல் 17,1895 காலகட்டத்தில். ‘முதலாம் சீன ஜப்பானியப் போர்’ என அழைக்கப்படும் இப்போர், கொரியாவை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கொரியா நீண்ட காலமாக சீனாவின் ‘குயிங் வம்சத்தின்’(Qing Dynasty) ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அதைத் தட்டிப்பறிப்பதன் மூலம் கொரியாவின் வளங்களைத் தனதாக்கிக் கொள்ள ஜப்பான் விரும்பியது. அதன் பொருட்டே அந்த முதல் போர் அவ்விருநாடுகளுக்கிடையே ஏற்பட்டது.  ஜப்பானுக்கு சாதக‌மாக அப்போர் முடிவடைந்தது.

பின்பு 1931-லிருந்தே இரண்டு நாடுகளுக்குமிடையே அவ்வப்போது சிறிய அளவில் போர்கள் நடந்த போதும், 1937-க்கு பிறகு ஒரு பெரும் போர் உருவெடுத்தது. சீனாவை ஆக்கரமிப்பதன் மூலம் அதன் பரந்து விரிந்த நிலப்பரப்பை அடைவதுடன், அதன் வளங்களையும் தனதாக்கிக் கொள்ள முயன்றது ஜப்பான். குறிப்பாக அதன் மக்கள் மற்றும் உணவு வளத்தை குறிவைத்தே ஜப்பான் போர் தொடுத்தது. ஜப்பானின் ஏகாதிபத்திய கொள்கையின் முகமாகவே இது பார்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த போர்களிலேயே ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ தான் ஆசியாவின் மிகப்பெரிய போர் என பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

1937-க்குப் பிறகு உக்கிரம் அடைந்த இப்போரில், முதலில் ஷாங்காய் நகரை ஜப்பான் கைப்பற்றியது. பின்பு அவ்வாண்டின் இறுயில் (டிசம்பர் 13), சீனாவின் அப்போதைய தலைநகராக இருந்த  ‘நாகிங்’ (Nanking) நகர் ஜப்பானின் கைகளில் விழுந்தது. தாக்குப் பிடிக்க முடியாத சீனக் குடியரசு அரசாங்கம் தன் தலைநகரைக் காலி செய்துவிட்டு  ‘வுகன்’ (Wuhan) நகருக்கு தப்பி ஓடியது. அதன் பின்தான் வரலாற்றில் மறக்க முடியாத அச்சம்பவங்கள் நடந்தேறியன.  ‘நாகிங் படுகொலை’ (Nanking Massacre) என அழைக்கப்படும் அச்சம்பவம் பெரும் துயரங்களைக் கொண்டது. பெரும் எண்ணிக்கையில் படுகொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகள் நடந்தேறின. சீன அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, கேட்க நாதியற்ற அப்பாவி நாகிங் நகர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர். எதிர்த்து நிற்க ஆள் இல்லாதது ஜப்பானியர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகியது. கட்டுப்பாடற்ற பெரும் அராஜகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.

இரண்டரையிலிருந்து மூன்று லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.  இதற்கு சிறுமிகளும், வயதானவர்களும் கூட தப்ப முடியவில்லை. இங்கே எழுத முடியாத அளவிற்கு அவர்கள் துன்புறுத்தபட்டு கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை விருப்பம் போல் துன்புறுத்திக் கொன்றார்கள். ஆறு வாரத்திற்குள்ளாகவே பெரும் எண்ணிக்கையில் படுகொலை நிகழ்ந்தேறியது. ஜப்பானிய அதிகாரிகள் தங்களுக்குள்ளாக பல போட்டிகள் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று, யார் விரைவாக நூறு சீனர்களின் தலைகளை கத்தியால் கொய்வது என்பது. அப்படி போட்டியிட்டுக் கொண்ட இரண்டு ஜப்பானிய அதிகாரிகளின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு அதிகாரிகளும் போரின் முடிவில் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 2, 1945-இல் ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்று, சரணடைந்தப் பிறகுதான் இப்படுகொலைகள் முடிவுக்கு வந்தன‌.

அப்படி ஒரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்று ஜப்பான் இன்று வரை மறுக்கிறது.  கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், அப்போது நாகிங் நகரில் வாழ்ந்துகொன்டிருந்த‌ வெளிநாட்டினரால், அங்கே நடந்த பெரும்பாலானவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன‌.. அரசுகள் ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ, வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துதான் வந்திருக்கிறது.

நாகிங் படுகொலைகள் நடந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  ‘நாகிங்கின் பதின்மூன்று மலர்கள்’ (13 Flowers of Nanking) என்ற நாவலை தழுவி ‘The Flowers of War’ என்றொரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற இயக்குனரான ‘ஜாங் யுமோ’ (Zhang Yimou)-வின் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் மிக உருக்கமான ஒரு சம்பவத்தை நம் கண் முன்னே நிகழ்த்துகிறது.

நாகிங் நகரம் ஜப்பானின் பிடிக்குள் விழுந்துக் கொண்டிருக்கும் நேரம் அது. யுத்த பூமி எங்கும் புகையும், புழுதியும் நிரம்பிக் கிடக்கிறது. நகரமே புகையால் மூடப்பட்டிருக்கிறது. மக்கள் தப்பி ஓடுகிறார்கள். பிழைத்துக் கிடந்த, தனித்து விடப்பட்ட சீன வீரர்கள் தங்களால் முடிந்த மட்டும் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த முயலுகிறார்கள். புகையின் ஊடாக அவ்வப்போது எதிர்ப்படும் மனிதர்கள் யார் என்பதைக்கூட அடையாளம் காண முடியா நிலைமை அது. அப்புகையின் ஊடே சில சிறுமிகள் தப்பி ஓடி வருகிறார்கள். ஒரு குதிரை வண்டியில் சில பெண்கள் தப்பி ஓடுகிறார்கள். ஒரு புறம் ஜப்பானியர்கள் சீனர்களைத் தேடித்தேடி கொல்லுகிறார்கள். ஒரு அமெரிக்க மனிதனும் தப்பி ஓடிவருகிறான். இவர்கள் அனைவரும் பெரும் பாடுபட்டு ஒரு கத்தோலிக்க மடத்தில் அடைக்கல‌ம் அடைகிறார்கள்.

சிறுமிகள் அனைவரும் அக்கத்தோலிக்க மடத்தில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் மதகுரு இறந்து போய்விட்டார். அவர்களுக்கு காவலாக அம்மதகுருவால் தத்தெடுக்கப்பட்டிருந்த‌ சிறுவன் ஒருவன் இருக்கிறான். வண்டியில் தப்பி ஓடி வந்த பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக வாழ்பவர்கள். அந்த அமெரிக்கன் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்பவன். இறந்து போன அம்மடத்தின் குருவிற்கு இறுதிச் சடங்கு செய்யவே அவன் இங்கே வருகிறான். அவர்கள் அனைவருக்கும் இப்போது அம்மடம் மட்டும்தான் ஒரே பாதுகாப்பான இடம்.

சிறுமிகளுக்கு அலங்காரமாக இருக்கும் விபச்சாரிகளைக் கண்டால் பிடிக்கவில்லை. தங்கள் இடத்தில் அப்பெண்கள் இருப்பதை வெறுக்கிறார்கள். தங்கள் உடமைகளையும் குளியல் அறை, சமையல் அறை போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துவதையும் கண்டு வெறுப்படைகிறார்கள். அதை தடுக்கவும் முனைகிறார்கள். அதனால் அவர்களிடையே சண்டை வருகிறது. அப்பெண்களுக்கும் இச்சிறுமிகளைப் பிடிக்கவில்லை. வெளியே ஜப்பானியர்கள் இருப்பதனால் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அமெரிக்கனுக்கோ, தான் எப்படியாவது தப்பிப் போகவேண்டும் என்பதே குறிக்கோள். இந்நிலையில் ஜப்பானிய படைப்பிரிவொன்று மடத்திற்குள் நுழைகிறது. விபச்சாரிகள் அடித்தளத்தில் மறைந்துக் கொள்கிறார்கள். சிறுமிகள் ஜப்பானியர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஜப்பானியர்களால் சூழப்படும் அவர்களைக் காக்க, அமெரிக்கன் தானே இம்மடத்தின் பாதிரியார் என்று பொய் சொல்லுவதோடு இவர்கள் இங்கே படிக்கும் சிறு பிள்ளைகள் எனவும் அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வருவதை தான் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லுகிறான். அங்கே இருந்த பாதிரியாரின் அங்கியை அணிந்துக்கொண்டு அவ்வாறு அவர்களை நம்பச் செய்கிறான். அதை நம்பிய ஜப்பானிய அதிகாரி அம்மடத்தைச் சுற்றி காவல் வைப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வராது என்றும் உறுதி தருகிறார். ஆனாலும் அக்காவல் இவர்களுக்கான பாதுகாப்பிற்கல்ல என்பதும், அது இவர்கள் தப்பி ஓடி விடாதபடி உறுதி செய்யத்தான் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
அமெரிக்கன் தான் எப்படியாவது தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். விபச்சாரிகளின் தலைவியாக இருக்கும் பெண் அவனிடம், தங்களையும் உடன் அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறாள். அப்படிச் செய்தால் அதற்கு தக்க பலன் அவனுக்கு கிடைக்கும் என்றும் ஆசை காட்டுகிறாள். சிறுமிகளையும் அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை வருகிறது. ஆனால் எப்படி? இக்காவலை மீறி எப்படி தப்பிச் செல்வது? அமெரிக்கன் அங்கே இருக்கும் ஒரு பழுதடைந்த வண்டியை சரி செய்து அதில் தப்ப முடிவெடுக்கிறான். ஆனால் அதற்கு பல கருவிகள் வேண்டும். அப்போதுதான் அவ்வண்டியை ஓடச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்வது? அவர்களுக்கு ஒரு வழி பிறக்கிறது. அம்மடத்தில் அடைந்து கிடக்கும் ஒரு சிறுமியின் தந்தை ஜப்பானியர்களோடு நட்பாக இருக்கிறார். அவர் எப்படியாவது தன் மகளை இந்நகரத்திலிருந்து மீட்டு, கொண்டு சென்று விடவேண்டும் என முயல்கிறார். அவரின் மூலம் வண்டிக்கு தேவையானப் பாகங்கள் கிடைக்கிறது. சிறிது சிறிதாக, காவலர்களின் கண்ணில் படாமல் அவ்வண்டியை அமெரிக்கன் சரி செய்கிறான். ஒரு நாள் வண்டி தயாராகி விடுகிறது. இந்நிலையில் திடீரென ஜப்பானிய அதிகாரி அம்மடத்திற்கு வருகிறார். அவரை மகிழ்விக்க சிறுமிகள் அனைவரும் சேர்ந்து பாடல் பாடுகிறார்கள். அப்பாட்டில் மகிழ்ந்த அவ்வதிகாரி, அவர்கள் அனைவரும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஜப்பானிய வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் உயர் அதிகார்களை பாடி மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதை அமெரிக்கன் மறுக்க, அவர் அதை ஒரு கட்டளையாக பிரப்பித்துவிட்டு செல்கிறார்.

நகரம் முழுவதும் சூரையாடப்படும் இந்நிலையில், ஜப்பானிய கூடாரத்திற்கு செல்லுவது தற்கொலைக்கு சமம் என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும் சிறுமிகளை அவர்கள் அழைப்பது பாடுவதற்காக அல்ல என்பதையும், அங்கே சிறுமிகள் சென்றால் என்ன கொடூரம் நிகழும் என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர்.  இச்சிறுமிகள் மொத்தம் பனிரெண்டுபேர், ஆனால் தவறுதலாக விபச்சாரி ஒருவளையும் சேர்ந்து பதிமூன்று பேர்கள் என இராணுவ அதிகாரி கணக்கிட்டுச் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் அடுத்தநாள் கண்டிப்பாக விருந்துக்கு வர வேண்டும் என கட்டளை இடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டிலிருந்து எப்படி விடுபடுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்கிறார்கள். சிறுமிகள் அழத்துவங்குகிறார்கள். விபச்சாரிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தவறுதலாக சிறுமிகளோடு கணக்கிடப்பட்ட விபச்சாரப் பெண் அழுதுக் கொண்டே இருக்கிறாள். மரணம் போல வரும் மறுநாளை எப்படி எதிர்கொள்வது என்ற பெரும் கேள்வியோடு அவரவர் அறைகளுக்குத் திரும்புகிறார்கள். அன்றைய இரவு மொத்த சிறுமிகளும் ஒரு முடிவெடுக்கிறார்கள். அது, மடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்வதாகும். நெஞ்சைப் பதற‌ வைக்கும் இம்முடிவும், அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் நாம் கற்பனை செய்ய முடியாதது. அதை, படத்தில் பாருங்கள். பன்னிரெண்டு விபச்சாரிகள், பன்னிரெண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு அமெரிக்கன். இவர்களை வைத்து நாம் வாழ்வில் கடந்து வரவே முடியாத ஒரு தியாகத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் இயக்குனர்.  இப்படம் மிக அற்புதமான, நெகிழ்வான பல கணங்களைக் கொண்டுள்ள‌து.

தேசம், அரசு, அரசியல், போர், வன்மம், படுகொலைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்த மனித இனம் பிழைத்திருப்பது எப்படி என்பது விடை தெரியாக் கேள்விதான். ஆயினும், மனித வரலாறு அற்புதமான பல கணங்களையும் மறக்க முடியாத பெரும் தியாகங்களையும் கொண்டது.  இம்மனிதக் கூட்டம் இப்பூமிப் பந்தில் வாழ்ந்து கிடப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்குமாயின், அது இம்மாதிரியான தியாகங்களுக்காக மட்டுமே என்ற எண்ணத்தை இப்படம் ஏற்படுத்துகிறது.Saturday, August 4, 2012

புதிய இணையத்தளம்நண்பர்களே ..

புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்..! :)