திரைப்படம் என்பது என்ன? திரைப்படத்தின் தேவை என்ன? திரைப்படம் நம்முடைய எந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது? என்பதான கேள்விகளை என்றேனும் நீங்கள் உங்களையே கேட்டுக்கொண்டது உண்டா? திரைப்படம் என்பது ஒருவகையில், கலைச்சார் சாதனம். கதை சொல்லிகளுக்கு கிடைத்திட்ட ஒரு தொழில்நுட்ப ஊடகம். மற்றொரு வகையில் வணிகர்களுக்கு கிடைத்திட்ட ஒரு வர்த்தகப் பிரிவு. கலை மற்றும் வணிகம் இரண்டும் கலந்திட்ட ஒரு தொழில்நுட்ப விளைவு. சரிதானே.? கலைஞர்களுக்கு தன் கலையை, கதையை, உணர்வை, எண்ணத்தை, கற்பனையை பார்வையாளக்குக் கடத்திட காலம் வழங்கிய வரம் அல்லது கலம். பேச்சு, இசை, ஓவியம், எழுத்து, கூத்து, நாடகம் வரிசையில் திரைப்படமும் ஒரு ஊடகம். வணிகனுக்கு என்னவாக இருக்கிறது என்பதைப்பற்றி நாம் இங்கே கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு கலைஞன்பால் இவ்வூடகம் கொண்டிருக்கும் ஆளுமை அல்லது இக்கலையின் மீது கலைஞன் கொண்டிருக்கும் ஆளுமையைப்பற்றி மட்டும் இங்கே கொஞ்சம் பேசுவோம். ஒரு திரைப்படமென்று எடுத்துக்கொண்டால், அதில் பல கலைகளின் சங்கமம் இருந்தாலும், அவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் (கதை.. உணர்ச்சி.. கருத்து..) அடிப்படையில் ஒழுங்கமைக...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!