Sunday, April 17, 2011

Light Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்_Part-1

புகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.

புகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.

Thursday, April 14, 2011

ஃபேஸ்புக்கும் புரட்சியும்

அண்மைக் காலமாக உலகெங்கும் பல எழுச்சிப் போராட்டங்கள் நடக்கத் துவங்கி விட்டன. குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அடக்குமுறையிலிருந்தும், நீண்ட நாள் அரசாண்டவர்களிடமிருந்தும், மீண்டு வருவதற்கான எந்தனிப்புகள், சுதந்திரத்திற்கான வேட்கையாக அடையாளம் காணப்பட்டு, பல தேசங்களில் நடந்து வருகிறது.

இந்தத் திடீர் தொடர் புரட்சிக்கான உத்வேகம், எகிப்தில் நடந்த புரட்சிக்குப் பின் ஏற்பட்டது. ஜனவரி 25, 2011-இல் துவங்கிய எகிப்துப் புரட்சி பிப்ரவரி 11, 2011-இல், அதன் முப்பது ஆண்டு காலம் ஆட்சியாளரான 'ஹோசனி முபாரக்கை' (Hosni Mubarak) பதவியிலிருந்து துரத்தியடித்தது. வெறும் பதினெட்டே நாட்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அப்புரட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.



வரலாறு முழுவதும் நிறைந்து கிடக்கும் பல புரட்சிகளை, புரட்சிக்கான எந்தனிப்புகளை நாம் அறிவோம். அதில் வெற்றி பெற்றதும், முடக்கப்பட்டதுமான பல புரட்சிகள் 'நிகழ' எடுத்துக்கொண்ட காலங்கள் அதிகம். ஆண்டுகள் பலவாகியும் இன்னுயிர்கள் பல இழந்தும் கிடைக்கப்பட்ட, கிடைக்கப்படாத ‘சுதந்திரப்’ போராட்டங்கள் அவை. மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சி 'எகிப்திய' புரட்சியாகத்தான் இருக்க முடியும். இது எப்படி சாத்தியமாயிற்று? பதினெட்டு நாட்களுக்குள் ஒரு புரட்சியை வெற்றி பெறச் செய்தது எது? முப்பது ஆண்டுகாலம் அரசாண்டவனை துரத்தி அடிக்கும் வலிமைக்கொடுத்தது எது?


இதற்கு மிக எளிமையான பதிலொன்று உண்டென்றால், அது 'மக்கள் சக்தி' என்பதாக மட்டும்தான் இருக்க முடியும். மக்கள் சக்தி ஒன்றிணைந்தபோதெல்லாம் பல மாற்றங்களை நிகழ்த்திக் காட்டி விட முடியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. மக்கள் சக்தியை உலகிற்கு முதலில் அடையாளம் காட்டியது 'ருஷ்யப் புரட்சி'தான். அதிலிருந்த சாத்தியத்தைக் கண்டு கொண்டு உலகம் தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. பல தேசங்கள் விடுதலை பெறவும், புதிய தேசங்கள் உயிர்த்தெழவும் காரணமான அதே மக்கள் சக்திதான் எகிப்துப் புரட்சிக்கும் காரணம் என்றாலும், இந்த எகிப்தியப் புரட்சி பின்பற்றக் கூடிய ஒரு முன்மாதிரியை கொண்டிருக்கிறது. வருங்காலம் தவிர்க்க முடியாத/கூடாத அந்த முன்மாதிரி என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் இரண்டு கேள்விகள்.

1. ஒரு பாவப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அதிகபட்ச இழப்பீடாக எது இருந்துவிட முடியும்?

2. ஒரு இளைஞனின் சிறு சிந்தனை (Idea) ஒன்று புரட்சிக்கு அடித்தளமாக முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரையின் போக்கில் நீங்கள் கண்டெடுத்துவிட முடியும்.

'கலித் மொகமத் சயித்' (Khaled Mohamed Saeed) என்னும் அந்த இருபத்தியெட்டு வயது இளைஞனை எகிப்திய காவல்துறையைச் சார்ந்த இரண்டு காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்று அடித்தே கொன்றுவிடுகிறார்கள். ‘அவன் திருட்டுக்கும், ஆயுத கடத்தலுக்கும் தேடப்பட்டவன்" என்பது காவல்துறை சொன்ன காரணம். ஆனால், உண்மையில் அவன் செய்த குற்றம், போதைக் கடத்தலோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய காணொளியைப் (விடியோ) பரப்ப முயன்றது.

அவனைக் கைது செய்தபோதே, அவன் தலையை சுவற்றில் முட்டியும் உதைத்தும் தரையோடு தரையாக இழுத்தும் சென்றார்கள் என்பதற்கு கண்ணால் பார்த்த சாட்சிகள் பல உண்டு. அவனது உடலைப் பிணவறையில் சென்று பார்த்த அவனது சகோதரன், தன் தொலைபேசியின் மூலமாக, அடித்து உடைக்கப்பட்டிருந்த அம்முகத்தைப் புகைப்படம் எடுத்தான். பின்பு அதை இணையத்தில் வெளியிட்டான். கலித் மொகமத் சயித்தின் அந்தச் சிதைந்த முகம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது.


'கலித் மொகமத் சயித்'

சிதைந்த முகம்

துபாயிலிருக்கும் கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த 'வேயில் கோனிம்' (Wael Ghonim) என்னும் விற்பனை மேலாளர் ஒருவர் அப்புகைப்படத்தை அடையாளமாகக் கொண்டு 'ஃபேஸ்புக்கில்' (Facebook) 'நாங்கள் எல்லாரும் கலித் சயித்'("We are all Khaled Said") என்னும் பக்கத்தைத் துவங்கினார். இந்த இணையப் பக்கம் பலரை ஒன்றிணைத்தது. லட்சக்கணக்கானவர்கள் இப்பக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்டார்கள். பலர் அந்த உடைந்த முகத்தை அடையாளப் புகைப்படமாக தங்களின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வைத்துக் கொண்டார்கள். இதன் ஊடாக மக்களிடையே ஒரு எழுச்சி உண்டானது, மக்கள் இணையத்தின் மூலமாக தங்களின் எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்டார்கள், அவ்வெண்ண ஓட்டங்கள் செழுமையடைந்து, அவர்களை வீதியில் இறங்கிப் போராடத் தூண்டியது.

இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் என்பது, அதை இழைத்தவனுக்குத் தண்டனை என்பதிலிருந்து துவங்கினாலும் அந்த அநீதி மீண்டும் நிகழாவண்ணம் சூழ்நிலையை மாற்றுவதுதான் கொடுமை இழைக்கப்பட்டவனுக்கான சரியான இழப்பீடாக இருக்க முடியும். இதன் அடிப்படையில் கொடூரக் கொலைக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் அதன் ஆதாரமான அரசையே மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஊரெங்கும் கலவரம், போராட்டம், ஊர்வலம் என மக்கள் திரண்டார்கள்.



(முபாரக் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஏழ்மை, ஊழல், தன் மகனை அடுத்த அதிபராக்குவது போன்ற பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், மக்கள் ஒன்று கூடி போராடுவதற்கு இச்சம்பவமே துவக்கமானது)

ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியுப் போன்ற இணையத்தளங்களை, தங்களின் பரப்புரைக்கான ஊடகங்களாகக் கொண்டு மக்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டார்கள். இதனால் எகிப்தில் இணையச் சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது, என்றாலும் மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைந்து புரட்சியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

ஒரு இளைஞனின் மரணம் அத்தேசத்தின் ஆன்மாவைச் சுட்டது. அதன் வெளிப்பாடாக அத்தேசம் தன்னை மீட்டெடுத்துக் கொண்டது. இதை விட அவ்விளைஞனின் மரணத்திற்கு என்ன இழப்பீடு பெற்றுவிட முடியும்..!? மரணத்திற்கு இழப்பீடு விடுதலை என்றால் மரணிப்பதற்கு பல உயிர்கள் உண்டு இவ்வுலகில்.

இப்படி ஒரு இளைஞனின் மரணம் தேசத்தை, விடுதலையை நோக்கி நகர்த்திய காரணங்களில் முதன்மையானது, ஒரு இளைஞனின் எண்ணத்தில் உதித்த ஒரு சிறு சிந்தனைதான். அவ்விளைஞனுக்கும் எகிப்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனால் அவன் அரேபிய தேசங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு நாட்டைச் சார்ந்தவன். அவனது சிந்தனையின் விளைவால் உருவான ஒரு கண்டுபிடிப்பே இன்று அரேபிய தேசங்கள் எங்கும் புரட்சியை நோக்கி நடைபோட செய்திருக்கின்றன.


'மார்க் சக்கர்பர்க்'

அவ்விளைஞனின் பெயர் 'மார்க் சக்கர்பர்க்' (Mark Zuckerberg). வட அமெரிக்காவைச் சார்ந்தவன். 'ஹார்வட்' (Harvard) பல்கலைக் கழகத்தின் மாணவன். அவன் சிந்தனையில் உதித்த அந்த யோசனை, நண்பர்களை ஒன்றிணைப்பது. அதாவது நாம் நண்பர்களாக ஒன்றிணைவதின் மூலம் நம்முடைய நண்பர்களின் நண்பர்களையும் நண்பர்களாக்க முடியும் அல்லவா!? நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற அடிப்படையில் ஒரு நட்பு வலைப்பின்னலை உருவாக்குவது எளிதுதானே.. இதை இணையத்தின் மூலம் சாத்தியமாக்குவது எளிது என்பதனால், அவன் செய்தது எல்லாம் ஒரு சிறிய மென்பொருளை எழுதி அதை இணையத்தில் பதிவேற்றியதுதான். அந்த நண்பர்களுக்கான வலைப்பின்னல் வளர்ந்து இன்று அறுபது கோடி (600 மில்லியன்) நபர்களை இணைத்திருக்கிறது. அவ்விளைஞனை உலகின் இளம் வயது கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

அவனோடு சண்டை போட்டுப் பிரிந்த காதலியைப் பழிவாங்கத் தோன்றிய ஒரு யோசனைதான் இதற்கெல்லாம் அடித்தளம். பிரிந்துபோன காதலியை வெறுப்பேற்றும் விதமாக, அவளது புகைப்படம் மற்றும் பல பெண்களின் படத்தைச் சேகரித்து, அதைக்கொண்டு இரண்டு பெண்களின் புகைப்படத்தை அருகருகேக் கொடுத்து ‘இந்த இரண்டு பெண்களில் யார் அழகானவர்கள்?’ என்று பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்க வைப்பது, என்பதாக இருந்தது அவனது முதல் நோக்கம். இதன் மூலம் தன் முன்னாள் காதலியை வேறொரு அழகான பெண்ணுடன் ஒப்பிட்டு இவள் அழகற்றவள் என்று ஊர் வாயால் சொல்லச் செய்து, அவளை நோகச் செய்து திருப்திப்பட்டுக் கொள்வதே அவனது நோக்கம். அந்த இணையப் பக்கத்திற்கு அவன் வைத்தப் பெயர் 'ஃபேஸ்மேஷ்' (Facemash) என்பதாகும்.

நான்கு மணி நேரத்திற்குள்ளாக 450 பார்வையாளர்களையும் 22,000 புகைப்படப் பார்த்தலையும் நிகழ்த்தியது அத்தளம். இதன் காரணமாக ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தின் இணையச்சேவை சிக்கலுக்குள்ளானது. 'மார்க் சக்கர்பர்க்' விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டான். பின்பு, தண்டனை இரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து யோசித்த யோசனை, ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்குவது என்பது.

இதிலிருந்து தனித்து, இன்னும் கொஞ்சம் விரிவாக்கி நண்பர்களை இணைக்கும் முயற்சியில் ‘மார்க்’ இறங்கினான். அம்முயற்சிக்கு 'தி ஃபேஸ்புக்' (The Facebook) என்று பெயரிட்டான். ஜனவரி 2004-இல் இத்தளத்தை அவன் வெளியிட்டான். இதுவும் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சேவையாக மட்டும்தான் இருந்தது. பின்பு சில நண்பர்களோடு சேர்ந்து இன்னும் மேம்படுத்தி மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் (Stanford, Columbia, மற்றும் Yale) அதன் சேவையை விரிவாக்கினான்.

இத்தளத்தைத் துவங்கிய சில நாட்களிலேயே அவனுடைய மூன்று நண்பர்கள் தங்களின் யோசனையை இவன் திருடி விட்டதாக வழக்கிட்டார்கள், என்றாலும் இந்த 'தி ஃபேஸ்புக்' மேலும் மேலும் வளர்ந்து 2005ஆம் ஆண்டு பல கூட்டு நிறுவன ஊழியர்களுக்குமான சேவையாக மாற்றப்பட்டது. இதில் 'ஆப்பிள்' மற்றும் 'மைக்ரோ சாப்ட்' நிறுவனமும் அடங்கும். பிறகு 'தி ஃபேஸ்புக்' என்பதலிருந்து 'தி' நீக்கப்பட்டு இப்போது அத்தளம் 'ஃபேஸ்புக்' என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 26, 2006-க்கு பிறகு 'இமெயில்' விலாசம் கொண்ட '13 வயதைக்' கடந்தவர்கள் அனைவருக்கும் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம் 'ஃபேஸ்புக்'-இன் 1.6% பங்கை 240 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதனால் 'ஃபேஸ்புக்'-இன் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து நவம்பர் 2010-இல் 41 பில்லியன் டாலராக உயர்ந்தது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் மூன்றாவது இடத்தை 'ஃபேஸ்புக்' பிடித்தது. முதல் இரண்டு - 'கூகுள்' மற்றும் 'அமெசான்'.

உலகின் பல நாடுகளில் இயங்கும் 'சமூக வலைத்தளங்களில்' முதன்மையானதாக 'ஃபேஸ்புக்' இருக்கிறது. சைனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்த்தான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்ய காரணங்களில், இஸ்லாமிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் செயல்பாடுகள் நடைபெறுகிறது என்பதும் ஒன்று. 'ஃபேஸ் புக்' ஒவ்வொரு நாளும் 20,000 உறுப்பினர்களை நீக்குகிறது. அவர்களின் சட்ட திட்டத்திற்கு எதிராக இருப்பது மற்றும் வயது கட்டுபாடுகள் மீறப்படுவது போன்ற காரணங்களினால்.

'ஃபேஸ்புக்' அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது. 2008 வட அமெரிக்க தேர்தலின் போது இரண்டு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களின் 'Debates' (Republican and Democratic debates)-களின் போது மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறிய இத்தளம் பயன்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொண்டனர். கருத்துக் கணிப்புக்கு 'ஃபேஸ்புக்' ஒரு முக்கியத் தளமாக இன்று பயன்படுகிறது. மாணவர்களின் அரசியல் ஈடுபாடும், இளைஞர்களை தங்கள் பிரநிதிகளாகத் தேர்ந்தெடுப்பது மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதும் இதனால் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'மார்க் சக்கர்பர்க்'

பிப்ரவரி 2008-இல் கொலம்பியாவில் ஃபேஸ்புக்கின் ‘One Million Voices Against FARC’ என்னும் குழு, லட்சக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்து கொலம்பிய இராணுவ குழுவிற்கு (FARC) எதிராக ஊர்வலம் நடத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 2010-இல் வடகொரியாவின் அரசாங்க இணையத்தளமான 'Uriminzokkiri' ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறது. Facebook as "ignoring the difference between correlation and causation" என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

இருபது வருடங்கள் பிரிந்திருந்த தன் மகளை ஃபேஸ்புக்கின் வழியாக ஒரு தந்தை கண்டெடுத்திருக்கிறார். நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மகளும் தந்தையும் இணைந்திருக்கிறார்கள். 102 வயதான ஒரு இங்கிலாந்துப் பாட்டிக்கு ஃபேஸ்புக்கின் வழியாக 4,962 நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவள் இறந்தபோது பெரும்பான்மையோர்கள் இரங்கல் கூட்டத்திற்கு வந்தார்கள். இதனால் பிரபலம் அடைந்த அவளது இரங்கல் செய்தி பல ஊடகங்களில் தலைப்பானது. 69% வட அமெரிக்கர்கள், 67% மத்திய கிழக்கு ஆப்பிரிக்கர்கள், 58% தென்னமெரிக்கர்கள், 57% ஐரோப்பியர்கள் மற்றும் 17% ஆசியர்கள் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப் பல வழிகளில் மாற்றங்களை நோக்கி நகரும் இந்த 'ஃபேஸ்புக்' தளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் அதன் ஆரம்ப காலங்களைப்பற்றி 'தி சோசியல் நெட்வொர்க்'(The Social Network) என்னும் படம் விவரிக்கிறது. இதன் நிறுவனர் 'மார்க் சக்கர்பர்க்'-இன் மீது அவரது நண்பர்கள் தொடுத்த வழக்குகளின் விவரிப்பாக நகரும் இப்படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.


படம் பார்க்கப் பார்க்க நம்முள் ஏற்படும் மாற்றங்களை, உற்சாகத்தை, பிரமிப்பை இங்கே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சொல்ல முடியாத ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் இப்படம் ஏற்படுத்துகிறது.

இளைஞர்கள் வருங்காலத் தூண்கள் என்ற சொல்லாடல், பெரும்பாலும் உண்மையாக்கப்படுகிறது. இளைஞர்கள் முதியவர்களாக வேண்டியதில்லை, இளைஞர்களாக இருக்கும்போதே வருங்காலத்தை நிர்மாணிக்கக் கூடியவர்களாக முடியும் என்ற பேருண்மையையும், மனதில் தோன்றும் சிந்தனையானது இப்பூமியெங்கும் நிறைந்து கிடக்கும் மனிதர்களுக்கானதாகயிருப்பின் வருங்காலம் வளமாகும் என்பதும் இப்படம் சொல்லும் செய்தி.



புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்றாக இச்சமூக வலைத்தளங்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றன. இதை உணர்த்தும் எகிப்திய புரட்சி, மாற்றூடகம் ஒன்றை வருகாலத்திற்கான ஒரு புதிய பாதையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.

நம் நாட்டில் இந்த தேர்தலில் 75%-80% வாக்குபதிவுகள் நிகழ்ந்ததுக்கும் கூட, ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிளாக் (Blog) எழுதுதல் போன்ற இணைய சாத்தியங்கள், ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. இதில் இளைஞர்கள் எழுதவும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், விவாதிக்கவும், சண்டைபோடவும் முடிகிறது, அதன் வெளிப்பாடாக செயல்படவும் தூண்டுகிறது என நான் நம்புகிறேன்.



Tuesday, April 12, 2011

Gray Card - ஒரு அறிமுகம்:

புகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் இரண்டிலுமே 'கிரே கார்ட்' (Gray Card) மிக முக்கியமானது. சரியான வண்ணத்தைப் பதிவுசெய்ய/பெறுவதிற்கு (Reproduce) மற்றும் பிம்பத்தை 'சரியாக பதிவு செய்யவும்' (Expose) இந்த 'கிரே கார்ட்' பயன்படுகிறது. 'ஃபிலிம்' அல்லது 'டிஜிட்டல்' எதுவாகினும் இந்த 'கிரே கார்ட்' தேவையாகிறது. அதனால் அதைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிக முக்கியம்.


'கிரே கார்ட்' என்றால் என்ன?

'கிரே கார்ட்' என்பது ஒரு சதுரமான கிரே (கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட) வண்ணம் கொண்ட அட்டை. கருப்பு வண்ணத்தோடு வெள்ளை வண்ணமோ அல்லது வெள்ளை வண்ணத்தோடு கருப்பு வண்ணமோ கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கும் போது, அதன் ஆரம்ப வண்ணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிரே வண்ணம் கிடைக்கும். அதில் அடர் கிரேவிலிருந்து வெளிர் கிரே வரை பல நிலைகளில் கிரே வண்ணம் கிடைக்கும் அல்லவா.. இதில் எந்த வண்ணத்தை (கிரே) அளவாகக் கொள்வது என்ற குழப்பத்தை போக்க 18% கிரே என்பதை அளவாக நிர்ணயித்திருக்கிறார்கள். 100% என்பதை வெள்ளை வண்ணமாகவும் 0% கருப்பு வண்ணமாகவும் கொண்டீர்களானால் 18% கிரே என்பதை புரிந்துக்கொள்ளலாம்.



'கிரே கார்டின்' தேவை என்ன?
வண்ணத்தை நாம் புரிந்து கொள்வதற்கும், பிம்பத்தைப் பதிவு செய்ய நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களான 'ஃபிலிம்' அல்லது 'CCD/CMOS' (டிஜிட்டல்) ஆகியவற்றைப் புரிந்து கொள்வதிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு வெள்ளைக் காகிதத்தை நாம் சூரிய ஒளியில் காண்கிறோம் என்றால் நாம் அதை வெள்ளைக் காகிதம் என்று புரிந்துக்கொள்வோம். அதே காகிதத்தை வீட்டின் உள்ளே 'டியுப் லைட்' (ஃபுளோரசண்ட்) வெளிச்சத்திலோ அல்லது 'குண்டு பல்பு' (டங்ஸ்டன்) வெளிச்சத்திலோ பார்த்தாலும் நாம் அதை வெள்ளைக் காகிதம் என்றுதான் புரிந்துக்கொள்ளோம். ஆனால், உண்மையில் இப்படி மாறுபட்ட வெளிச்சத்தில் ஒரு வெள்ளைக்காகிதத்தை வைக்கும்போது அதன் மீது விழும் வெளிச்சத்திலிருக்கும் வண்ணம் சார்ந்து அதன் நிறம் மாறித் தெரியும். அதே காகித்ததின் மீது நீல வண்ண ஒளியை பாய்ச்சினால் அது நீல நிறக்காகிதமாகத் தெரியுமல்லவா, அதேபோல்தான் இந்த மாறுபட்ட வெளிச்சத்தில் காட்டினாலும் அதன் நிறம் மாறித் தெரியும், என்றாலும் நம்முடைய அறிவின் காரணமாக அது வெள்ளைகாகிதம்தான் என்று முன் அனுபவதிலிருந்து அதை புரிந்து கொள்கிறோம்.



(ஒவ்வொரு விளக்கிற்கும் ஒரு வித வண்ணத்தன்மை உண்டு என்பதும், அதன் நிறமாலையில் ஏற்படும் மாற்றம், 'டெம்ரேச்சர்' (Temperature) அதை அளக்க 'கெல்வின்' (Kelvin) அளவீடு பயன்படுகிறது என்பதும், உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன், அதன் அடிப்படையில் 'ஃபுளோரசண்ட்', 'டங்ஸ்டன்' மற்றும் 'சூரிய ஒளி' ஆகியவை வெவ்வேறு வண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்)

ஃபிலிமோ அல்லது CCD/CMOS-களோ அப்படி புரிந்து கொள்ளாது, பார்க்கும் வெளிச்சத்தை, அதிலிருக்கும் வண்ணத்தை அப்படியேதான் பதிவு செய்யும், ஏனெனில் அதற்கு முன் அறிவு கிடையாது என்பதும், ஒவ்வொரு தொழில்நுட்பமும் சில விதிகளுக்கு உட்பட்டது என்பதும், இதன் அடிப்படையில்தான் ஃபிலிமில் 'டே லைட்' மற்றும் 'டங்ஸ்டன்' படச்சுருள்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் அறிந்ததுதான். டிஜிட்டலில் இதை சமாளிக்கத்தான் 'ஒயிட் பேலன்ஸ்' (White Balance) என்ற முறையை கடைபிடிக்கிறோம்.

என்றாலும் எல்லா சமயங்களிலும் உண்மையான வண்ணங்களை அப்படியே பெற முடியாது, ஏனெனில் சூரிய ஒளி என்பது காலையிலிருந்து மாலைக்குள்ளாக பல வண்ணங்களைக் கொண்டதாக மாறுவதும், செயற்கை விளக்குகள் எப்போதும் ஒரே தரத்தில் வெளிச்சத்தை தரமுடிவதில்லை என்பதாலும் (மின்சாரத்திலிருக்கும் மாற்றும்/காலக் கெடுவை தாண்டின விளக்குகள்) சில சமயங்களில் 'Mixed Lighting' செய்வதனாலும் சரியான வண்ணத்தை நாம் பெற முடிவதில்லை.

சரியான வண்ணத்தைப் பெறுவது அவ்வளவு அவசியமா? என்றால், அவசியம் தான், குறிப்பாக 'ஸ்கின் டோன்' (Skin Tone)-ஐ சரியாக கொண்டுவருவது மிக அவசியம். சில சமயங்களில் கதைக்கேற்ப, ரசனைக்காக அல்லது காலத்தை மாற்றிக்காட்ட (Flash Back, Period Films) என்று நாம் மாற்று வண்ணங்களைப் பயன்படுத்துகிறோம் என்றாலும், பொதுவாக சரியான வண்ணத்தை பதிவு செய்வதும் பெறுவதும் மிக அவசியம்.

'கிரே காட்டின்' தேவை:

வண்ணங்கள் என்பது ஆதாரமாக மூன்று வண்ணங்களின் கூட்டால் உருவாகிறது/ உருவாக்க முடியும் என்பதும் நாம் அறிந்ததுதான். RGB/CMYK மதிப்புகளாகக் கொள்கிறோம் அல்லவா, அதில் RGB-இல் வண்ணத்திற்கு '1' விலிருந்து '255' வரை மதிப்பு கொடுத்திருக்கிறார்கள். '0-0-0' என்பது கருப்பும் '255-255-255' என்பது வெள்ளையாகவும் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வண்ணத்திற்கும் மதிப்புப் புள்ளிகள் இருக்கின்றன.


ஒரு டிஜிட்டல் பிம்பத்தைப் பல கூறுகளாகப் பிரிக்க முடிகிறது. RGB என்ற வண்ணத்தின் அடிப்படையில் பிரித்தாலும், Highlight, Mid, Shadow என அதன் வெளிச்சப்பகுதிகளின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கிறார்கள், மேலும் Hue, Saturation, Brightness ஆகவும் இந்த ஒவ்வொன்றையும் அடிப்படையாக கொண்டு பலவிதமான வண்ண நிர்ணயித்தலைச் (Color Correction) செய்யமுடியும். டிஜிட்டல் பிம்பத்தைப்பற்றியும் வண்ண அறிவியல், (Color Science/Color Theory) மற்றும் வண்ணத்தின் அடிப்படை பற்றியும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.



இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது Highlight, Mid, Shadow என பிரிக்கப்படும் டிஜிட்டல் பிம்பத்தில் 'Highlight' என்பது அதிக வெளிச்சப்பகுதி (வெள்ளை), 'Mid' என்பது இடைப்பட்ட வெளிச்சப் பகுதி (கிரே), 'Shadow' என்பது வெளிச்சம் குறைந்த அல்லது இருண்ட பகுதி (கருப்பு) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த மூன்று நிலைகளை, சரியாக நிர்ணயிப்பதன் மூலம் மிகச்சரியான வண்ண நிர்ணயித்தலை நாம் செய்ய முடியும். இந்த மூன்று நிலைகளை நிர்ணயிக்க கணினி/டெலிசினி போன்ற கருவிகளில் தேவையான 'Tools' இருக்கிறது.

பதிவு செய்யப்பட்ட பிம்பத்திலிருந்து சரியான வண்ணத்தைப் பெறுவதற்கு, சில வழிமுறைகள் உண்டு. அதில் மிகச்சுலபமானது அந்த பிம்பத்தில் ஒரு பொது வண்ணத்தை அல்லது நடுநிலையான வண்ணத்தை (Neutral Color) அடையாளம் காணுவது. கணினிக்கோ அல்லது 'டெலிசினி' கருவிக்கோ அத்தகைய வண்ணத்தை அடையாளம் காட்டுவதின் மூலம் மற்ற வண்ணங்களைச் சரியாக மீட்டெடுக்க முடியும்.

Highlight, Mid, Shadow ஆகியவற்றில் ஏதோவொன்றை சரியாக நிர்ணயிப்பதன் மூலம் சரியான வண்ணத்தை கொண்டுவர முடிந்தாலும், கிரேவை (Mid) நிர்ணயித்தலின் மூலம் சுலபமாக வண்ணங்களை நிர்ணயிக்கலாம்.

இங்கேதான் கிரே கார்டின் தேவை வருகிறது, எந்த வண்ணமும் இல்லாமல், நடுநிலையான வண்ணம் (R200 G200 B200) மற்றும் வெளிச்சப் பகுதியான கிரே வண்ணத்தை கணினி/டெலிசினி கருவிக்கு அடையாளப்படுத்துகிறார்கள். இதன்மூலம் பிம்பத்தில் ஒரு வண்ணம் சரியாக அடையாளம் காணப்படுவதால், மற்ற வண்ணங்கள்ச் சரியான நிறத்தில் கொண்டுவந்துவிட முடிகிறது.

உதாரணத்திற்கு இந்தப் படங்களை பாருங்கள். Photoshop-இல் கிரே கார்டை உபயோகித்து வண்ணம் நிர்ணயித்தல்.


கிரே கார்டோடு எடுக்கப்பட்ட படம், 'ஃபுளோரசண்ட்' (florescent lights) வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. பார்க்க சரியாக இருப்பதாக தோன்றுகிறது அல்லவா. ஆனாலும் இதில் கொஞ்சம் நீலவண்ணம் அதிகமாக இருக்கிறது, மேலும் போதுமான 'Contrast' இல்லை.



ஃபோட்டோசாப்பில் 'LEVELS'-ஐப் பயன்படுத்தி 'கிரேவை' (Setting Gray Point) நிர்ணயித்த பிம்பம்.


எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா, பின்பு Highlight மற்றும் Shadow பகுதிகளை நிர்ணயித்து, வண்ணத்தில் மாற்றங்கள் செய்து நமக்குத் தேவையான விதத்தில் பிம்பங்களை மாற்றியமைக்கலாம்.

ஒரு பிம்பத்தின் சரியான வண்ணத்தை கொண்டுவர 'கிரே கார்ட்' எப்படி பயன்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது என நினைக்கிறேன். ஆகவேதான் டெலிசினி மற்றும் 'DI' கணினியில் வண்ண நிர்ணயித்தலின் போது இந்த கிரே கார்டை அடிப்படையாகக் கொண்டு வண்ணத்தை சீரமைக்கிறார்கள்.


கிரே கார்டைப் பயன்படுத்தி 'Exposure' தரும் சந்தர்ப்பங்கள்:

'Spot Meter'-ஐக் கொண்டு 'Meter Reading' பார்க்கும் போது பயன்படுத்தலாம். இதன் மூலம் சரியான 'Exposure'-ஐ தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு.. ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு.

வெள்ளைப் பின்புலத்தில் இருக்கும் கருப்பு பூனை.



வெள்ளைப் பின்புலத்தை அளவாகக் கொண்டு எக்ஸ்போஸ் செய்தால் 'Under Expose' ஆகிவிடும், கருப்புப் பூனையை அளவாகக் கொண்டு எக்ஸ்போஸ் செய்தால் 'Over Expose' ஆகிவிடும், இந்த சமையங்களில் கிரே கார்டு மிக உதவியாக இருக்கும். கிரே கார்டை பயன்படுத்தி எக்ஸ்போஸர் எடுக்கும்போது, இரண்டு எதிர் முனை வண்ணங்களும் (வெள்ளை/கருப்பு) சரியாகப் பதிவுசெய்யப்பட்டுவிடுகிறது.


கிரே கார்டை பயன்படுத்துவது எப்படி?

கிரே கார்டில் பல இருந்தாலும் 'KODAK Gray Card Plus' என்பது வெகுவாக பயன்படுத்துக்கூடியதாக இருக்கிறது. இது கோடாக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.




  • காட்சிப் பதிவின் போது, நாம் படம்பிடிக்கும் பொருளுக்கு அல்லது நடிகருக்கு (Subject) அருகில் இருக்கும்படி கிரே கார்டை வைக்கவேண்டும். இதனால் 'Subject' மீது விழும் அதே ஒளியே கிரே கார்டின் மீது விழும்/விழவேண்டும்.
  • 'Frame'-இன் 15% இடத்தை நிரப்பும் விதத்தில் கிரே கார்டை வைக்கவேண்டும்.
  • கிரே கார்டிலிருந்து 'flare' (ஒளி பிரதிபலிப்பு) வராதபடியும், 'Shadows' (நிழல்) விழாதபடியும் பொருத்தவேண்டும். கார்டு முழுவதும் ஒளி படும்படி செய்யவேண்டும்.
  • Mixed Lighting சந்தர்ப்பங்களில் எந்த வண்ண ஒளி அதிகமாக 'Subject'-இன் மீது விழுகிறதோ அந்த ஒளியில் கிரே கார்டை வைக்க வேண்டும்.
  • 'Incident light Meter' பயன்படுத்தித் தேவையான அளவில் 'Exposure'-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு 'Reflected Spot meter'-ஐப் பயன்படுத்தி நாம் தேர்ந்தெடுத்த 'Exposure'-ஐ சரிபார்க்க வேண்டும்.
  • காட்சியின் முன்பாக 'கிரே கார்டோடு' சேர்த்து 'Subject'-ஐ சில அடிகள் (ft) பதிவுசெய்துக் கொள்ளவேண்டும்.
இந்த முறையை, ஒளியமைப்பு மாறும்போதும் 'Roll' (படச்சுருள்/Film)-ஐ மாற்றும்போதும் ஒவ்வொரு தடவையும் செய்யவேண்டும்.

இந்தக் காட்சியை டெலிசினி செய்யும் போது 'கிரே கார்டை' ஆதாரமாகக் கொண்டு சரியான வண்ணத்தைக் கொண்டுவருவார்கள்.




கிரே கார்டினால் கிடைக்கும் பயன்கள்: 

1. சரியான அளவில் வண்ணமும், எக்ஸ்போஷரும் கிடைக்க உதவுகிறது.
2. கலவையான வண்ணத்தில் ஒளியமைப்பு செய்யும் போது, அதைச் சிறப்பாக மீட்டெடுக்க (Reproduce) உதவுகிறது.
3. தேவையான வண்ண மாறுபாட்டை, வண்ண நிர்ணயித்தலை சுட்டிக் காட்டுகிறது.
4. ஒரு பிம்பத்தின் ஆதார வண்ணத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

மேலும் தகவலுக்கு
http://motion.kodak.com/US/en/motion/Products/Lab_And_Post_Production/Gray_Card/index.htm


பின்குறிப்பு:


1.இந்த கிரே கார்டு என்பது 18% கிரே என்பது நிர்ணயிக்கப்பட்ட பொதுவிதி. இதை அடிப்படையாகக் கொண்டே 'Light Meters', 'Flash Meters' மற்றும் டிஜிட்டல் கேமராவில் இணைக்கப்பட்டிருக்கும் Meters எல்லாம் செயல்படுகின்றன.

2. இந்த 18% கிரே என்பது உண்மையில்லை, 'ANSI standards' என்பது அதை குறிக்கவில்லை என்றும், அவை உண்மையில் 12% அல்லது 13% தான் என்றும் சில விவாதங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அதைப்பற்றி அறிய விருப்பமானால் இந்த சுட்டிகளை சொடுக்குங்கள்.

http://www.bythom.com/graycards.htm
http://photo.net/bboard/q-and-a-fetch-msg?msg_id=000eWN
http://www.richardhess.com/photo/18no.htm