முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Gray Card - ஒரு அறிமுகம்:

புகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் இரண்டிலுமே 'கிரே கார்ட்' (Gray Card) மிக முக்கியமானது. சரியான வண்ணத்தைப் பதிவுசெய்ய/பெறுவதிற்கு (Reproduce) மற்றும் பிம்பத்தை 'சரியாக பதிவு செய்யவும்' (Expose) இந்த 'கிரே கார்ட்' பயன்படுகிறது. 'ஃபிலிம்' அல்லது 'டிஜிட்டல்' எதுவாகினும் இந்த 'கிரே கார்ட்' தேவையாகிறது. அதனால் அதைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிக முக்கியம்.


'கிரே கார்ட்' என்றால் என்ன?

'கிரே கார்ட்' என்பது ஒரு சதுரமான கிரே (கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட) வண்ணம் கொண்ட அட்டை. கருப்பு வண்ணத்தோடு வெள்ளை வண்ணமோ அல்லது வெள்ளை வண்ணத்தோடு கருப்பு வண்ணமோ கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கும் போது, அதன் ஆரம்ப வண்ணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிரே வண்ணம் கிடைக்கும். அதில் அடர் கிரேவிலிருந்து வெளிர் கிரே வரை பல நிலைகளில் கிரே வண்ணம் கிடைக்கும் அல்லவா.. இதில் எந்த வண்ணத்தை (கிரே) அளவாகக் கொள்வது என்ற குழப்பத்தை போக்க 18% கிரே என்பதை அளவாக நிர்ணயித்திருக்கிறார்கள். 100% என்பதை வெள்ளை வண்ணமாகவும் 0% கருப்பு வண்ணமாகவும் கொண்டீர்களானால் 18% கிரே என்பதை புரிந்துக்கொள்ளலாம்.'கிரே கார்டின்' தேவை என்ன?
வண்ணத்தை நாம் புரிந்து கொள்வதற்கும், பிம்பத்தைப் பதிவு செய்ய நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களான 'ஃபிலிம்' அல்லது 'CCD/CMOS' (டிஜிட்டல்) ஆகியவற்றைப் புரிந்து கொள்வதிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு வெள்ளைக் காகிதத்தை நாம் சூரிய ஒளியில் காண்கிறோம் என்றால் நாம் அதை வெள்ளைக் காகிதம் என்று புரிந்துக்கொள்வோம். அதே காகிதத்தை வீட்டின் உள்ளே 'டியுப் லைட்' (ஃபுளோரசண்ட்) வெளிச்சத்திலோ அல்லது 'குண்டு பல்பு' (டங்ஸ்டன்) வெளிச்சத்திலோ பார்த்தாலும் நாம் அதை வெள்ளைக் காகிதம் என்றுதான் புரிந்துக்கொள்ளோம். ஆனால், உண்மையில் இப்படி மாறுபட்ட வெளிச்சத்தில் ஒரு வெள்ளைக்காகிதத்தை வைக்கும்போது அதன் மீது விழும் வெளிச்சத்திலிருக்கும் வண்ணம் சார்ந்து அதன் நிறம் மாறித் தெரியும். அதே காகித்ததின் மீது நீல வண்ண ஒளியை பாய்ச்சினால் அது நீல நிறக்காகிதமாகத் தெரியுமல்லவா, அதேபோல்தான் இந்த மாறுபட்ட வெளிச்சத்தில் காட்டினாலும் அதன் நிறம் மாறித் தெரியும், என்றாலும் நம்முடைய அறிவின் காரணமாக அது வெள்ளைகாகிதம்தான் என்று முன் அனுபவதிலிருந்து அதை புரிந்து கொள்கிறோம்.(ஒவ்வொரு விளக்கிற்கும் ஒரு வித வண்ணத்தன்மை உண்டு என்பதும், அதன் நிறமாலையில் ஏற்படும் மாற்றம், 'டெம்ரேச்சர்' (Temperature) அதை அளக்க 'கெல்வின்' (Kelvin) அளவீடு பயன்படுகிறது என்பதும், உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன், அதன் அடிப்படையில் 'ஃபுளோரசண்ட்', 'டங்ஸ்டன்' மற்றும் 'சூரிய ஒளி' ஆகியவை வெவ்வேறு வண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்)

ஃபிலிமோ அல்லது CCD/CMOS-களோ அப்படி புரிந்து கொள்ளாது, பார்க்கும் வெளிச்சத்தை, அதிலிருக்கும் வண்ணத்தை அப்படியேதான் பதிவு செய்யும், ஏனெனில் அதற்கு முன் அறிவு கிடையாது என்பதும், ஒவ்வொரு தொழில்நுட்பமும் சில விதிகளுக்கு உட்பட்டது என்பதும், இதன் அடிப்படையில்தான் ஃபிலிமில் 'டே லைட்' மற்றும் 'டங்ஸ்டன்' படச்சுருள்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் நாம் அறிந்ததுதான். டிஜிட்டலில் இதை சமாளிக்கத்தான் 'ஒயிட் பேலன்ஸ்' (White Balance) என்ற முறையை கடைபிடிக்கிறோம்.

என்றாலும் எல்லா சமயங்களிலும் உண்மையான வண்ணங்களை அப்படியே பெற முடியாது, ஏனெனில் சூரிய ஒளி என்பது காலையிலிருந்து மாலைக்குள்ளாக பல வண்ணங்களைக் கொண்டதாக மாறுவதும், செயற்கை விளக்குகள் எப்போதும் ஒரே தரத்தில் வெளிச்சத்தை தரமுடிவதில்லை என்பதாலும் (மின்சாரத்திலிருக்கும் மாற்றும்/காலக் கெடுவை தாண்டின விளக்குகள்) சில சமயங்களில் 'Mixed Lighting' செய்வதனாலும் சரியான வண்ணத்தை நாம் பெற முடிவதில்லை.

சரியான வண்ணத்தைப் பெறுவது அவ்வளவு அவசியமா? என்றால், அவசியம் தான், குறிப்பாக 'ஸ்கின் டோன்' (Skin Tone)-ஐ சரியாக கொண்டுவருவது மிக அவசியம். சில சமயங்களில் கதைக்கேற்ப, ரசனைக்காக அல்லது காலத்தை மாற்றிக்காட்ட (Flash Back, Period Films) என்று நாம் மாற்று வண்ணங்களைப் பயன்படுத்துகிறோம் என்றாலும், பொதுவாக சரியான வண்ணத்தை பதிவு செய்வதும் பெறுவதும் மிக அவசியம்.

'கிரே காட்டின்' தேவை:

வண்ணங்கள் என்பது ஆதாரமாக மூன்று வண்ணங்களின் கூட்டால் உருவாகிறது/ உருவாக்க முடியும் என்பதும் நாம் அறிந்ததுதான். RGB/CMYK மதிப்புகளாகக் கொள்கிறோம் அல்லவா, அதில் RGB-இல் வண்ணத்திற்கு '1' விலிருந்து '255' வரை மதிப்பு கொடுத்திருக்கிறார்கள். '0-0-0' என்பது கருப்பும் '255-255-255' என்பது வெள்ளையாகவும் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வண்ணத்திற்கும் மதிப்புப் புள்ளிகள் இருக்கின்றன.


ஒரு டிஜிட்டல் பிம்பத்தைப் பல கூறுகளாகப் பிரிக்க முடிகிறது. RGB என்ற வண்ணத்தின் அடிப்படையில் பிரித்தாலும், Highlight, Mid, Shadow என அதன் வெளிச்சப்பகுதிகளின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கிறார்கள், மேலும் Hue, Saturation, Brightness ஆகவும் இந்த ஒவ்வொன்றையும் அடிப்படையாக கொண்டு பலவிதமான வண்ண நிர்ணயித்தலைச் (Color Correction) செய்யமுடியும். டிஜிட்டல் பிம்பத்தைப்பற்றியும் வண்ண அறிவியல், (Color Science/Color Theory) மற்றும் வண்ணத்தின் அடிப்படை பற்றியும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது Highlight, Mid, Shadow என பிரிக்கப்படும் டிஜிட்டல் பிம்பத்தில் 'Highlight' என்பது அதிக வெளிச்சப்பகுதி (வெள்ளை), 'Mid' என்பது இடைப்பட்ட வெளிச்சப் பகுதி (கிரே), 'Shadow' என்பது வெளிச்சம் குறைந்த அல்லது இருண்ட பகுதி (கருப்பு) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த மூன்று நிலைகளை, சரியாக நிர்ணயிப்பதன் மூலம் மிகச்சரியான வண்ண நிர்ணயித்தலை நாம் செய்ய முடியும். இந்த மூன்று நிலைகளை நிர்ணயிக்க கணினி/டெலிசினி போன்ற கருவிகளில் தேவையான 'Tools' இருக்கிறது.

பதிவு செய்யப்பட்ட பிம்பத்திலிருந்து சரியான வண்ணத்தைப் பெறுவதற்கு, சில வழிமுறைகள் உண்டு. அதில் மிகச்சுலபமானது அந்த பிம்பத்தில் ஒரு பொது வண்ணத்தை அல்லது நடுநிலையான வண்ணத்தை (Neutral Color) அடையாளம் காணுவது. கணினிக்கோ அல்லது 'டெலிசினி' கருவிக்கோ அத்தகைய வண்ணத்தை அடையாளம் காட்டுவதின் மூலம் மற்ற வண்ணங்களைச் சரியாக மீட்டெடுக்க முடியும்.

Highlight, Mid, Shadow ஆகியவற்றில் ஏதோவொன்றை சரியாக நிர்ணயிப்பதன் மூலம் சரியான வண்ணத்தை கொண்டுவர முடிந்தாலும், கிரேவை (Mid) நிர்ணயித்தலின் மூலம் சுலபமாக வண்ணங்களை நிர்ணயிக்கலாம்.

இங்கேதான் கிரே கார்டின் தேவை வருகிறது, எந்த வண்ணமும் இல்லாமல், நடுநிலையான வண்ணம் (R200 G200 B200) மற்றும் வெளிச்சப் பகுதியான கிரே வண்ணத்தை கணினி/டெலிசினி கருவிக்கு அடையாளப்படுத்துகிறார்கள். இதன்மூலம் பிம்பத்தில் ஒரு வண்ணம் சரியாக அடையாளம் காணப்படுவதால், மற்ற வண்ணங்கள்ச் சரியான நிறத்தில் கொண்டுவந்துவிட முடிகிறது.

உதாரணத்திற்கு இந்தப் படங்களை பாருங்கள். Photoshop-இல் கிரே கார்டை உபயோகித்து வண்ணம் நிர்ணயித்தல்.


கிரே கார்டோடு எடுக்கப்பட்ட படம், 'ஃபுளோரசண்ட்' (florescent lights) வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. பார்க்க சரியாக இருப்பதாக தோன்றுகிறது அல்லவா. ஆனாலும் இதில் கொஞ்சம் நீலவண்ணம் அதிகமாக இருக்கிறது, மேலும் போதுமான 'Contrast' இல்லை.ஃபோட்டோசாப்பில் 'LEVELS'-ஐப் பயன்படுத்தி 'கிரேவை' (Setting Gray Point) நிர்ணயித்த பிம்பம்.


எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா, பின்பு Highlight மற்றும் Shadow பகுதிகளை நிர்ணயித்து, வண்ணத்தில் மாற்றங்கள் செய்து நமக்குத் தேவையான விதத்தில் பிம்பங்களை மாற்றியமைக்கலாம்.

ஒரு பிம்பத்தின் சரியான வண்ணத்தை கொண்டுவர 'கிரே கார்ட்' எப்படி பயன்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது என நினைக்கிறேன். ஆகவேதான் டெலிசினி மற்றும் 'DI' கணினியில் வண்ண நிர்ணயித்தலின் போது இந்த கிரே கார்டை அடிப்படையாகக் கொண்டு வண்ணத்தை சீரமைக்கிறார்கள்.


கிரே கார்டைப் பயன்படுத்தி 'Exposure' தரும் சந்தர்ப்பங்கள்:

'Spot Meter'-ஐக் கொண்டு 'Meter Reading' பார்க்கும் போது பயன்படுத்தலாம். இதன் மூலம் சரியான 'Exposure'-ஐ தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு.. ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு.

வெள்ளைப் பின்புலத்தில் இருக்கும் கருப்பு பூனை.வெள்ளைப் பின்புலத்தை அளவாகக் கொண்டு எக்ஸ்போஸ் செய்தால் 'Under Expose' ஆகிவிடும், கருப்புப் பூனையை அளவாகக் கொண்டு எக்ஸ்போஸ் செய்தால் 'Over Expose' ஆகிவிடும், இந்த சமையங்களில் கிரே கார்டு மிக உதவியாக இருக்கும். கிரே கார்டை பயன்படுத்தி எக்ஸ்போஸர் எடுக்கும்போது, இரண்டு எதிர் முனை வண்ணங்களும் (வெள்ளை/கருப்பு) சரியாகப் பதிவுசெய்யப்பட்டுவிடுகிறது.


கிரே கார்டை பயன்படுத்துவது எப்படி?

கிரே கார்டில் பல இருந்தாலும் 'KODAK Gray Card Plus' என்பது வெகுவாக பயன்படுத்துக்கூடியதாக இருக்கிறது. இது கோடாக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
  • காட்சிப் பதிவின் போது, நாம் படம்பிடிக்கும் பொருளுக்கு அல்லது நடிகருக்கு (Subject) அருகில் இருக்கும்படி கிரே கார்டை வைக்கவேண்டும். இதனால் 'Subject' மீது விழும் அதே ஒளியே கிரே கார்டின் மீது விழும்/விழவேண்டும்.
  • 'Frame'-இன் 15% இடத்தை நிரப்பும் விதத்தில் கிரே கார்டை வைக்கவேண்டும்.
  • கிரே கார்டிலிருந்து 'flare' (ஒளி பிரதிபலிப்பு) வராதபடியும், 'Shadows' (நிழல்) விழாதபடியும் பொருத்தவேண்டும். கார்டு முழுவதும் ஒளி படும்படி செய்யவேண்டும்.
  • Mixed Lighting சந்தர்ப்பங்களில் எந்த வண்ண ஒளி அதிகமாக 'Subject'-இன் மீது விழுகிறதோ அந்த ஒளியில் கிரே கார்டை வைக்க வேண்டும்.
  • 'Incident light Meter' பயன்படுத்தித் தேவையான அளவில் 'Exposure'-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு 'Reflected Spot meter'-ஐப் பயன்படுத்தி நாம் தேர்ந்தெடுத்த 'Exposure'-ஐ சரிபார்க்க வேண்டும்.
  • காட்சியின் முன்பாக 'கிரே கார்டோடு' சேர்த்து 'Subject'-ஐ சில அடிகள் (ft) பதிவுசெய்துக் கொள்ளவேண்டும்.
இந்த முறையை, ஒளியமைப்பு மாறும்போதும் 'Roll' (படச்சுருள்/Film)-ஐ மாற்றும்போதும் ஒவ்வொரு தடவையும் செய்யவேண்டும்.

இந்தக் காட்சியை டெலிசினி செய்யும் போது 'கிரே கார்டை' ஆதாரமாகக் கொண்டு சரியான வண்ணத்தைக் கொண்டுவருவார்கள்.
கிரே கார்டினால் கிடைக்கும் பயன்கள்: 

1. சரியான அளவில் வண்ணமும், எக்ஸ்போஷரும் கிடைக்க உதவுகிறது.
2. கலவையான வண்ணத்தில் ஒளியமைப்பு செய்யும் போது, அதைச் சிறப்பாக மீட்டெடுக்க (Reproduce) உதவுகிறது.
3. தேவையான வண்ண மாறுபாட்டை, வண்ண நிர்ணயித்தலை சுட்டிக் காட்டுகிறது.
4. ஒரு பிம்பத்தின் ஆதார வண்ணத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

மேலும் தகவலுக்கு
http://motion.kodak.com/US/en/motion/Products/Lab_And_Post_Production/Gray_Card/index.htm


பின்குறிப்பு:


1.இந்த கிரே கார்டு என்பது 18% கிரே என்பது நிர்ணயிக்கப்பட்ட பொதுவிதி. இதை அடிப்படையாகக் கொண்டே 'Light Meters', 'Flash Meters' மற்றும் டிஜிட்டல் கேமராவில் இணைக்கப்பட்டிருக்கும் Meters எல்லாம் செயல்படுகின்றன.

2. இந்த 18% கிரே என்பது உண்மையில்லை, 'ANSI standards' என்பது அதை குறிக்கவில்லை என்றும், அவை உண்மையில் 12% அல்லது 13% தான் என்றும் சில விவாதங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அதைப்பற்றி அறிய விருப்பமானால் இந்த சுட்டிகளை சொடுக்குங்கள்.

http://www.bythom.com/graycards.htm
http://photo.net/bboard/q-and-a-fetch-msg?msg_id=000eWN
http://www.richardhess.com/photo/18no.htm

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன