முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!



(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..)


கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ்வப்போது சென்றிருந்தாலும் அவை எல்லாம் குறுகிய பயணமாக அமைந்ததனால் சிலரைச் சந்தித்தும், பலரைச் சந்திக்காமலும் இருந்திருக்கிறேன். அப்படிச் சந்தித்த, சந்திக்காது விட்டுப்போன சிலரை இப்பயணத்தில் சந்தித்தேன்.

இந்த பதினெட்டு ஆண்டு கால இடைவெளியில் எங்களிடையே பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. பலர் (ஏன்?!.. எல்லாருமே!) திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்றுவிட்டனர். வேலை, கல்யாணம், பிள்ளை, வீடு கட்டுதல் என சமூக மதிப்பீட்டுத் தளத்தில் நிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக, அதற்கே உரிய இன்ப துன்பங்களின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகான சந்தித்தலில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருந்தோம். அவர்கள் வாழ்க்கையில் பல படிகள் கடந்து வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவனான நான் எங்கே நிற்கிறேன் என்ற கேள்வியை எதிர்கொள்ளும் வரை..!

இத்தகைய கேள்வி எழும் சந்தர்ப்பம், பல சந்திப்புகளில் அமைந்தது. ஒன்று நண்பர்கள் அதை நேரடியாக கேட்டார்கள் அல்லது பேசும் தோரணையில் அதே கேள்வியை என் எண்ணத்தில் ஏற்படுத்தினார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் பணிபுரியச் சென்றுவிட்ட ஒரு நண்பர். பள்ளியில் எனக்கு மூத்தவர். ஒரு வகுப்பு முன் கடந்தவர். ஆனாலும் நண்பர். பல வருடங்களுக்கு பின் அவரைச் சந்திக்கிறேன். அவர் இப்படி என்னிடம் கேட்டார், “ஆமாம் நீ சினிமாவில் இருக்கியாமே? ஏண்டா? கோபி சொன்னான். எனக்கு ஆச்சரியம் தாங்கல.. நீ நல்ல பையனாச்சே?!”

இந்த கேள்வியைச் சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். என் நண்பன் ஒருவன் என்னைப்பற்றி அவரிடம், நான் சினிமாவில் இருப்பதை சொல்லி இருக்கிறான். அதற்கு அவரின் ரியாக்‌ஷன் ‘அட அவன் (நான்) நல்ல பையனாச்சே’ என்பது. அதாவது நல்ல பையனான நான், சினிமாவில் ஏன் இருக்கிறேன்? என்பதும் ஏன் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறேன் என்பதும் அவரின் ஆதங்கம். இதை அவர் என்னிடமே சொன்னபோது அதற்கு நான் என்ன ரியாக்‌ஷன் செய்வது என்று தெரியவில்லை.

அடுத்து, மற்றொரு நண்பர். இத்தனை வருடங்களில் அவ்வப்போது சந்திக்க கூடியவர்தான். பத்தாவதிலேயோ அல்லது பன்னிரெண்டாவதிலேயே படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பத் தொழிலான ஸ்டேஷனரி கடை நடத்திக் கொண்டிருப்பவர். இம்முறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது என்ன படம் செய்கிறேன், வேலை எல்லாம் எப்படிப் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் விசாரித்தவர். கடைசியாக, மெல்லிய குரலில் கேட்டார் “எப்படிச் சமாளிக்கற? இது தேவைதானா?”

இந்த இரண்டு கேள்விகளும், என் வேலை மட்டும் சார்ந்த கேள்விகள் அல்ல. இவ்வளவு நாட்கள் நான் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீது வைக்க பட்ட கேள்விகள் என்பதாய் பார்க்கிறேன். ஏனெனில் எல்லாரையும் போல, கடமையாகக் கொள்ளப்பட்ட பள்ளி படிப்பிற்கு பிறகு என் வாழ்க்கையை முன் நகர்த்த நான் ஈடுபட்ட அத்தனை செயல்களையும் இக்கேள்விகள் அர்த்தமற்றதாக்கிவிடுகின்றன.

ஆம்.. எல்லாரையும் போல், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடுகட்டுதல் என்று இல்லாமல்.. லட்சியம், போராட்டம், புண்ணாக்கு என்று உழலும் நான், அவர்களால் எப்படி மதிப்பிடப்படுகிறேன் என்பதை அறியும் போது, மிகுந்த ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகிறேன்.

இன்று, நான் வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகிறார்கள். ஒருவர் என் தொழிலையே சந்தேகிக்கிறார். ஒழுக்கமற்றதாக, சமூக மதிப்பீடுகளுக்கு அடங்காததாக, நல்ல பையனொருவன் இருக்கத் தகுதி அற்ற இடமாக அதை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் இது ஒரு பிழைப்புக்கு ஆகாத தொழிலாக பார்க்கிறார் எனும் போது, நான் கொள்ளும் மனநிலையை எப்படி விவரிப்பது?

இதற்கா இத்தனை ஆண்டுகள் செலவழித்தேன்? இதற்கா இத்தனை வருட போராட்டம்? இதற்கா இத்தனைத் தகுதியாக்கிக் கொள்ளல்?

மனமெங்கும் பெரும் பாரம் குடி கொண்டது நண்பர்களே.. இச்சமூகம் ஒரு சினிமாக்காரனை (அட்லீஸ்டு.. வெற்றி பெறாதவனை) எப்படி மதிப்பிடுகிறது என்று பார்த்தீர்களா?

இவர்கள் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நண்பனான என்னையே இவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் போதுதான் ஒரு பெரும் கோபம் எழுகிறது. அவர்கள் என் மீது அன்பு கொண்டே கேட்டார்கள் என்ற போதும்.. அக்கேள்விகளுக்கு இரண்டு பதில்கள்தான் இருக்க முடியும்.

ஒன்று.. பிழைக்க வழியில்லாத, கேடு கெட்ட சினிமாவில் உழன்று கிடக்கும் நான், ஒரு துப்பு கெட்ட பிறவியாக இருக்க வேண்டும்.

இரண்டு.. மேற்சொன்னவர்களைப் போன்றோர் அறியாத ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவனாக நான் இருக்க வேண்டும்.

இதில் எது சரி என்பதை, காலமும் நான் கொள்ளும் வெற்றியும்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் நண்பர்களே..

கடமைக்கு படித்து, பணம் மட்டுமே சம்பாதிக்க வேலைக்குப் போய், ஊர் மெச்சும் வாழ்க்கை வாழத் தகுதி அற்றவன் நான். விருப்பமற்றதாலோ, இயலாமையாலோ அத்தகைய ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்காதவன். படிப்பு என்பது அறிதல் பொருட்டு என்று கொண்டவன். வாழ்க்கை என்பது கடமையின் பொருட்டும், அக்கடமை ஒரு இலக்கு நோக்கி ஒழுங்கு செய்யப்படவேண்டியது என்றும் கற்பிக்கப்பட்டவன். அதை நோக்கியே என் பயணம் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சிறுவயது படக்கதை வாசிப்பும், ஓவியப் பயிற்சியும், புகைப்படங்களும் திரைப்படங்களும், புகைப்படத்துறை மீது ஈர்ப்பை ஏற்படுத்தின. புகைப்படத்தின் நீட்சியான ஒளிப்பதிவின் மீது காதல் உண்டானது ‘பெரிதினும் பெரிது கேள்’ வழி வந்தது. பள்ளிப் படிப்பு முடிந்தபோது என் வருங்காலம் எதை நோக்கியது என்பதை முடிவெடுத்து வைத்திருந்தேன். அது திரைப்பட ஒளிப்பதிவாளனாகுவது. ஏன் ஒளிப்பதிவாளனாக ஆக வேண்டும்? சினிமாவின் மீது இருக்கும் மயக்கமா? ஆர்வக்கோளாறா? மோகமா? இவை எல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியும். அப்படி சொன்னால் அது முழு உண்மையாகாது நண்பர்களே.. ஆம், எல்லாரையும் போல சினிமாவின் மீது ஒருவித மயக்கமிருந்தது, மோகம் இருந்தது, ஆர்வம் இருந்தது. ஆனால் அது கோளாறு இல்லை.!

இங்கே சமூகத்தில் பெரும்பாலானோருக்கு ஒன்று புரிவதில்லை, திரைத்துறையில் வெற்றி கொள்வதற்கு எத்தனை முயற்சியும் தகுதியும் வேண்டும் என்பது. அதை வெறும் உல்லாச இடமாக கருதுகிறார்கள். விளையாட்டில், அரசியலில், ஏன் ஒரு பெரும் அரசுப்பணியில் தங்களுக்கான இடத்தை அடைவது எவ்வளவு கடினமோ, அதேவிதமான கடினம் இங்கேயும் உண்டு. ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர், பொறியாளர் வேலைகளுக்கு என்ன தகுதி வேண்டுமோ அதே போன்றதொரு தகுதி திரைத்துறையில் வெற்றி பெறவும் தேவையாக இருக்கிறது. இவ்வேலைகளை விடவும் திரைத்துறையில் இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, கலை இயக்குனராக, படத்தொகுப்பாளராக, இசைப்பொறியாளராக இருப்பதில் எவ்வித தகுதிக் குறைவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒளிப்பதிவாளனாக உருவாக வேண்டும் என்று முடிவெடுத்ததும், நான் ஒன்றும் திரைத்துறையை நோக்கி ஓடி வந்துவிடவில்லை. அது ஒரு நீண்ட நாள் இலக்காகத்தான் நிர்ணயித்திருந்தேன். அதை நோக்கிய படிக்கட்டுகளை செதுக்கும் வேலையைத்தான் இவ்வளவு நாட்களும் செய்துகொண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்புக்கு பிறகு, கல்லூரிப் படிப்பு, அதனோடு சேர்ந்து புகைப்படக்கலையிலும் கிராபிக் டிசைனராக தேர்ச்சி, விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சியும், அது கொடுத்த தன்னம்பிக்கையின் வாயிலாக திரைத்துறை பிரவேசமும் என அது ஏழு வருடங்களை எடுத்துக்கொண்டது. ஐந்து வருடங்கள் உதவி ஒளிப்பதிவாளனாக பயிற்சி பெற்று இறுதியில் ஒளிப்பதிவாளனாக என் இலக்கை அடைந்துவிட்டேன். ஆனால் அது முடிவன்று. ஏனெனில், சினிமாவில் வெற்றி பெற்றவனாகவும் இருக்க வேண்டும். இல்லையேல், அதற்கென்று எவ்வித மதிப்பும் கிடையாது.. பாம்பாக இருந்தாலும் சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்க வேண்டும்.

சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்கதான் எத்தனை போராட்டம்? எத்தனை அவமானங்கள்? எத்தனை இழப்புகள்?

இதற்குத்தான் பதினெட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் பல வருடங்கள் ஊருக்குப் போகாமல் இருக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் பல வருடங்கள் தந்தையின் புறக்கணிப்பை ஏற்க வேண்டியதிருந்தது. இதற்குதான் காதலை விட்டு கொடுக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முடியாதவனாக இருக்க வேண்டியிருந்தது. இதற்குதான் முப்பத்தைந்து வயதுக்கப்புறமும் பிரமச்சாரியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தனை நாட்களையும்தான் என் நண்பர்களின் கேள்விகள் அர்த்தமற்றதாக்கி விட்டன. இவ்வளவு நாட்கள் மெனக்கெட்டது அத்தனையும் பயனற்றதோ? வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

வெற்றியைச் சந்திக்கும் முன்னர் வரையான சூழலை ஒருவன் எப்படி எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை நான் அறிந்தவனே ஆனாலும் அதை நேரில் அனுபவிக்கையில், அதையும் நானறிந்த நண்பர்களிடமே பெற்றதும் அதன் வலியை எனக்கு உணர்த்தியது.

ஆனால் நண்பர்களே.. இப்படி வாழ்க்கையை வீணடித்தவன் நான் மட்டுமல்ல. என்னைப்போலவே பல நண்பர்களை நான் அறிவேன். நான் கடந்துவந்த பாதையை இங்கே சொல்லிவிட்டேன். அப்படி சொல்ல வாய்ப்பற்றவர்கள் பலருண்டு. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வேட்கையை அறிவேன். அவர்களின் தகுதிகளை அறிவேன். அவர்களின் முயற்சியையும் இழப்பையும் வேதனையும் அறிவேன். அவற்றுக்குப் பின்னே பெரும் கனவொன்று உண்டு என்பதும் அதை நனவாக்க முயலும் அவர்களின் தகுதியும், இருப்புமே என்னை மீட்டெடுக்கின்றன. இத்தனை பேரின் இருப்பும் முயற்சியும் பொருளற்றவை அல்ல என்பதை உணர்ந்தவனாக, என் அவநம்பிக்கைகளைத் துரத்தி அடிக்கிறேன். அவர்களின் பொருட்டே, அவர்களைக் கொண்டே என் மீது ஏவப்பட்ட அக்கேள்விகளை துடைத்து எறியவும் முற்படுகிறேன்.

நல்லவர்கள் இருக்கத் தகுதி அற்ற இடமாக, பிழைக்க வழி அற்ற துறையாக சினிமா இல்லை என்பதற்கு என் நண்பர்களே சாட்சி. நேர்மையான, தகுதியான பல நண்பர்களை நான் அறிவேன். அவர்களே என்னைப் பலவானாக்குகிறார்கள். அவர்களே என்னை நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். இதே கேள்விகளை அவர்களும் எதிர்கொண்டிருக்கக் கூடும். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்க கூடும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

அவர்களின் பொருட்டும் இக்கேள்வியை இங்கே பதிவும் செய்கிறேன்.

நாங்கள் என்ன.. மதியற்ற, ஒழுக்கமற்ற, பிழைக்கத் தெரியா துப்பு கெட்டவர்களா?

கருத்துகள்

  1. இதற்குத்தான் பதினெட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் பல வருடங்கள் ஊருக்கு போகாமல் இருக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் பல வருடங்கள் தந்தையின் புறக்கணிப்பை ஏற்க வேண்டியதிருந்தது. இதற்குதான் காதலை விட்டு கொடுக்க வேண்டியதிருந்தது. இதற்குதான் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முடியாதவனாக இருக்க வேண்டிருந்தது. இதற்குதான் முப்பத்தைந்து வயதுக்கப்பறமும் பிரமச்சாரியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தனை நாட்களையும்தான் என் நண்பர்களின் கேள்விகள் அர்த்தமற்றதாக்கி விட்டன. இவ்வளவு நாட்கள் மெனக்கெட்டது அத்தனையும் பயனற்றதோ? வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உண்டாக்கிவிட்டார்கள். --//

    வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்திய வரிகள்... இதுவே ஒரு பெரிய படத்தில் ஜெயித்து இருந்தால்... ஆம்ஸ் என் நண்பன் சின்ன வயிசுலேயே படக்கதை டிராயிங்கின்னு கலக்குவான்... நல்லா வருவான்னு எனக்கு அப்பவே தெரியும்.. என்று சொல்லுவார்கள்.. உங்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்ப்பவன் ந்ல்ல நண்பனே அல்ல....

    பதிலளிநீக்கு
  2. நான் உங்க கூட ஒர்க் பண்ணி இருக்கேன்.. நான் பார்த்தவரையில் ரொம்ப ரொம்ப அலட்டல் இல்லாத ஆள்.. சினிமாவுல எந்த கெட்ட பழக்கமும் அல்ட்டல் இல்லாத கேமராமேன்னு சொன்ன.. ஒன்னு நீங்க மற்றது செந்துரப்பூவே,காமராஜர் படங்களின் கேமராமேன் திரு ரங்கசாமி.. இந்த ரெண்டு பேருகிட்டயும் நான் ரொம்ப நல்லா பழகி இருக்கேன்.. அதே போல கெட்டபழக்கம் ஏதும் இல்லாத கேமராமேன் யாராவது இருக்கலாம்.. பட் நான் பழகிய வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் எந்த கெட்டபழக்கமும் இல்லை... நீங்க ரெண்டு பேருமே எனக்கு மிக நெசிப்பான நண்பர்கள்... சினிமாவில் கெட்ட பழக்கம் ஏதும் இல்லாமல் இவ்வளவு தூரம் அறியப்படுவதே ரொம்ப பெரிய விஷயம் என்பது என் கருத்து..

    குரு படத்துல ஒரு பாட்டு வரும்...

    ஒரே கனா என் வாழ்விலே
    அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
    கனா மெய்யாகும் நாள் வரை
    உயிர் கையில் வைத்திருப்பேன்

    வானே என் மேலே சாய்ந்தாலுமே
    நான் மீண்டு காட்டுவேன்......

    வேறு என்ன சொல்ல......?

    காலம் கை கூட... கனவுகள் மெய்ப்பட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்..


    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற்றவனை மட்டும் இந்த உலகம் கணக்கில் கொள்ளும்.
    வரம் கிடைக்கும் வரை...
    உங்கள் தவத்தின் வலிமை மற்றவர்களுக்கு புரியாது.
    வெற்றி என்ற ராமன் மிதிக்கும் வரை... கல் அகலிகைதான் நீங்கள்.
    எல்லோரும் ஏறி மிதிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆம்..எல்லாரையும் போல், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடுகட்டுதல்... இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே!!! ஓரு ப_னி கூடத்தான் பிள்ளை பெற்று சந்தோஷிக்கிறது... மனிதனுக்கும் அவன் வாழ்விற்கும் ஒரு வித்தியாசம், இந்த உலகுக்கான கடன் உள்ளதே! ஒரு செவிட்டு தவளையைப்போல வற்றிப்போன கிணறைவிட்டு வெளியேறுங்கள்! பணியில் சிறக்க வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. தங்களது வலியை உணர்ந்தவனாக

    பதிலளிநீக்கு
  6. விஜய், மனதைத் தொடும் பதிவு. உங்கள் துறை என்று இல்லை... தேவைக்கு மேல் அதீத பணம் ஈட்டாத அனைவரும், நீங்கள் எதிர்கொண்ட கேள்விகளை எதிர்நோக்கித்தான் உள்ளார்கள். இங்கே ஒருவனின் தகுதி அவனின் சம்பாத்தியத்தில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ௩௫ வயதிற்குள் இங்கே ஒருவன் கல்யாணம் முடித்து ஒன்றோ இரண்டோ குழந்தைகளைப் பெற்று ஒரு வீடு, ஒரு கார் வைத்திருக்க வேண்டும். அவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் ஆகிறான். மற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றியை எதிர் நோக்கியோ... இல்லை போராட்டத்திலோ இருப்பவர்கள். பணம் ஈட்டியவன் எந்த முறையில் ஈட்டினான் என்பதெல்லாம் இங்கே கவலை இல்லை. பணம் வைத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்...

    பதிலளிநீக்கு
  7. ஒரு நல்ல நிலையை அடைய ஏற்படுத்திக் கொள்ளும் காலகட்டமே ஒரு போராட்டம் தான்.இந்த போராட்டத்தில் நாம் இழந்தவை எத்தனையோ இருந்தாலும் சாதித்த பின்னாடி அத்தனையும் இதற்காக தானே கஷ்ட பட்டோம் என்று நினைக்கையில அடைகிற சுகம் இருக்கே அது தனி.எந்த வித லட்சியமும் இல்லாதவனுக்கு அடுத்தவனின் லட்சியம் பற்றி என்ன தெரியும்.இருட்டில் இருக்கும் சூரியன் கண்டிப்பாய் வெளியில் வரும்.நண்பர்களின் கேள்வியை புறந்தள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. ungalukku ithu pulambal aga irukkalam, ithai padichappa, enakku en nilamaya patha madri irundhuchu...

    ungal ennam seyalaga, seyal vetri pera vazhthukal....

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கு அறிவுரை சொன்னவர்கள் மட்டும் பேரின்ப பெருவாழ்வு வாழ்பவர்களா என்றால் நிச்சயம் இல்லை.சமூகத்திற்காக வாழ்பவர்களே தவிர தங்கள் மனத்திருப்திக்காக வாழ்பவர்களாக இருக்க மாட்டார்கள். வெற்றியடையும் வரை இதுபோன்ற நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தல் நலம்.எண்ணங்கள் வலிமையானது.இதுபோன்ற மன அயற்சியை உண்டாக்கும் வார்த்தைகளை யாரும் உங்களிடம் கேட்காதவண்ணம் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  10. தோழரே,
    மற்றவர்கள் சாதாரண வாழ்கை வாழ்கிறார்கள். அதை எல்லோராலும் செய்ய முடியும். நீங்கள் உங்கள் கனவுகளை, லட்சியங்களை துரத்துகிறீர்கள். உங்கள் இலட்சியத்தை அடைந்த பிறகு, மற்றவர்கள் 15 ஆண்டுகள் செய்த அனைத்தையும், ஒரே வாரத்தில் செய்வீர்கள்.
    வாழ்கையின் இறுதி கட்டத்தில் நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்த்தை உணருவீர்கள்.
    keep going ...

    பதிலளிநீக்கு
  11. தோழரே,
    மற்றவர்கள் சாதாரண வாழ்கை வாழ்கிறார்கள். அதை எல்லோராலும் செய்ய முடியும். நீங்கள் உங்கள் கனவுகளை, லட்சியங்களை துரத்துகிறீர்கள். உங்கள் இலட்சியத்தை அடைந்த பிறகு, மற்றவர்கள் 15 ஆண்டுகள் செய்த அனைத்தையும், ஒரே வாரத்தில் செய்வீர்கள்.
    வாழ்கையின் இறுதி கட்டத்தில் நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததை உணருவீர்கள்.
    keep going ...

    பதிலளிநீக்கு
  12. என்ன சொல்றதுனே தெரியல பாஸ்!

    பதிலளிநீக்கு
  13. ஒளிப்பதிவாளரே..!
    கைநிறைய சம்பாதித்தும் வாழ்க்கையை வெறுமையாகவே விட்டு வைத்திருக்காமல், கனவுகளுக்கும் வயிற்றுக்கும் இடையே கிடந்து போராடாமல், தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் விரும்பியதை நோக்கி நடை போடுகிற நீங்கள் நிச்சயமாய் படைப்பாளி மட்டுமல்ல. போராளியும் கூட.தனிப்பட்ட முறையில் உங்களை எனக்குத்தெரியாது. ஆனால் என்ன, எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளட்டும் என பொது வெளியில் நீங்கள் கற்றவற்றை பரிமாறும் குணமே உங்களை மிகச்சிறப்பாக அடையாளப்படுத்துகிறதே!.உங்கள் நண்பர்கள் யாரென்று உலகுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் அப்படியல்ல!உங்களை வாசித்தபின் மனசுக்குள் பட்சி சொல்லுகிறது. அதிவிரைவிலேயே நீங்கள் கொண்டாடப்படுவீர்கள். நண்பர்களும் வந்து இணைந்து கொள்வார்கள்.
    வார்த்தைகளால் வலி துடைக்கும்....பேராசிரியர் பி.ஜி.கதிரவன்

    பதிலளிநீக்கு
  14. Armstrong Sir, ugal kayaingalai naan unargirane. ithu namakkana vallkai.
    Namm latchiyangalai pattri mattumay yoceepom.ugallodu work panna yannaku
    oru kannavu unduu.. annaal yennal ungal pakathill kooda vara mudiyavillai.(2 varushama try pannugirane.) yankku neengal avallavu uarathil irukirirgal... neengalay ithai pulalambal yena sollallama..
    permumayaga sollungal " venthathai thindru vithi vanthal saaga namm ondrum satharana manithargal alla.. sathika piranthavargal... porrkunamm ynepathu unmai thamillargalin marabhu vali sothu...''.viraivill oru kit kooduthu , verti peara valluthukkal... producer huntingill irukane...kidaithathum ungalai santhipane...
    tirunelvelill iruthu ungal nanbhan muthamil(9994704604)

    பதிலளிநீக்கு
  15. 99 அடி தோண்டியாச்சு இன்னும் ஒரு அடிதான் பாஸ் ...

    பதிலளிநீக்கு
  16. தோழா
    நிலாவில் நெல் விளையும்

    பதிலளிநீக்கு
  17. மிகவும் வெளிப்படையான பதிவு.தனிமையில் நாம் நம் மனதை வெளிச்சத்தில் பார்த்துக்கொள்கிறோம்.

    அவர்கள் திட்டமிட்டு செய்வதாக நான் நினைக்கவில்லை.18 வருசத்தில் அவர்கள் உங்களைப் பற்றியே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.என்ன சொன்னாலும் அவரவர் வாழ்க்கை அவரவர் பாதைதான்.உள்மனதில் நீங்கள் பாராட்டை எதிர்பார்த்தீர்களா என்ன?

    அதிலும் சினிமாத்துறையில் ஜெயிக்க நினைப்பவன் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக்கொள்வது மிக அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.திடீரென்று ஒரு கல்(அது சொல்!)வந்து தாக்கி தரையில் விழவைத்துவிடும். அதிலிருந்து எழுந்து மீண்டும் நடக்க பெரும்பாலும் குடியை நாடுவார்கள்...இதுதான் மனம் இயங்கும் முறை! என்ன நடந்தாலும் பாராட்டை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் நல்லது என்றே நான் நினைக்கிறேன்.அதுவே-உந்துதல் அளிக்காத,முயற்சியை ஏளனம் செய்கிற சொற்களிடமிருந்து- நம்மை பாதுகாக்கிற ஒரு பாதுகாப்பு வளையமும் கூட.

    வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. விஜய் சார், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பல முறை நான் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் நீங்கள் பதிலளிக்க வில்லை
    நான் நேற்று உங்கள் கட்டுரை படித்தேன். உங்கள் வலியை நான் உணர்ந்தேன்.

    நிச்சயம் ஒரு நாள் நேரம் பதிலளிக்கும்.

    வாழ்த்துக்கள் -- professor karthy

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவு நிறையவே என்னை பாதித்து விட்டது... நிச்சயம் செய்கின்ற வேலை மீது ஒரு காதல்... பிடிப்பு ஏதுமில்லாமல் பணம் ஒன்றே நோக்கம் என வேலை செய்துகொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம். மனதுக்கு பிடித்த வேலையே நீங்கள் செய்கிறீர்கள்... நிச்சயம் வெகு விரைவில் இலக்கை அடைவீர்கள்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. sir i was an assistant director to a movie that was dropped, am now in pursuit for another project to work on .

    your line strung true, that too coming from a man who has created a name, think what guys like me must be going through .

    i wish u ended this article not in regret but in hope which might help guys like me gear up and face another day . i rather feel too sad than it already is after reading ur article .

    பதிலளிநீக்கு
  21. Hi Vijay,

    You are definitely running behind #2.

    இரண்டு.. மேற்சொன்னவர்களைப் போன்றோர் அறியாத ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவனாக நான் இருக்க வேண்டும்.

    I understand what you are going through and wish you best of luck in acheiving your ambition.

    Regards,
    Raj

    பதிலளிநீக்கு
  22. todays world is materialistic one cannot satisfy this world even if one do a job which has a low pay people will ask him like what are you doing for a living?

    unakkagave oru ragasiyam by sathguru jakki vasudev is veryuseful as i had also faced several things like you

    பதிலளிநீக்கு
  23. I mentioned this to you before, the articles you wrote about different cameras and techniques took me back to my boyhood days. You don't know me and I know only through this web-site but you did the magic to me. Whatelse you want? Let us take my case: My wife loves me and I have two lovely kids. Do I think that I am better than you and I achieved everything? No my friend, Victory is something you decide that you achived it or not. If you enjoy what you are doing that is all required in life.

    பதிலளிநீக்கு
  24. அண்ணா,
    இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. பதினெட்டு வருடமாக போராடும் உங்களை, இந்த சின்ன இரு பயணங்கள் சஞ்சலப்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் நண்பர்களின் அறியாமைக்காக அவர்களை கொபித்துக்கொல்வதிலும் அர்த்தம் இல்லை. சமூகம் வரையறுத்த வாழ்க்கை வாழும் எங்களை பார்த்து ஏங்காமல், உங்களுடைய பாதையில் யோசிக்காமல் செல்லுங்கள். comfortable zone -ல் வாழ்வது வலியை எதிர்கொள்ளமுடியாத கோழைகளின் வாழ்க்கை. உங்களை போல போராடுபவர்களே தங்களுடைய வாழ்க்கையை வாழுகிறார்கள்.

    சினிமாவிற்குபோயிட்டு இன்னும் நல்லவராவே இருக்கிங்கலேனு நானும் முதல்ல ஆச்சரியப்பட்டேன். அப்போது உங்களை முழுமையாக தெரியாத காலம். இப்ப சாக்கடைன்னு சொல்றவங்க, ஒரு நாளைக்கு நீங்க இருக்கற இடம் கொஞ்சம் நல்ல தண்ணி இருக்கும்னு சொல்வாங்கன்னு நம்புகிறேன்.

    வரலாறு ஆசிரியர் கணிதத்தாளை திருத்தினால், விடையை மட்டும்தான் பார்ப்பார். உங்கள் தொழிலில் உள்ளவர்களை கேட்டால், நீங்கள் எத்தனை படிகளை தாண்டிவிட்டீர்கள் என சொல்வார்கள். ஒவ்வொரு படியும் ஒரு சின்ன வெற்றிதான். தெரியாதவர்களுக்கு விடையுடன் காமிக்கும் நேரம் அருகில் இருக்கிறது என நம்புகிறேன்.

    உங்கள் இலட்சியத்திற்காக உங்கள் வாழ்நாளின் இரண்டு பருவத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள். வீணடிக்கவில்லை. நீங்கள் அடையப்போகிற/அனுபவிக்கப்போகின்ற கனியின் சுவை, நீங்கள் அதற்காக செலவிட்ட காலத்தின் பலனையும் சேர்த்து தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

    தம்பி
    ஸ்ரீதர்

    பதிலளிநீக்கு
  25. I am Karthik. You don't know about me. software engineer.

    1 yearku munnadi, appadia camera related articles search pannum pothu.. ungalodia articles padikum vaiipu kedathathu.. ungalodia elathu enna veguvaga bathithu iruku...

    intha article, ungaloida valakamana artilce vittasa puthusa iruku.. Postive thought mattuma pathivu seithu kondu irupavar (Hitler pathi sollum pothu kuda), negative thoughta muthal muriaa pathivum seith irukirgal... Ellorida manasalium commona irukara, oru mana poratathai opena solli irukinga... solrathuku oru thani thairam venum...

    Ungalodia perumbalana articleodia main theme. Purathci or Warnu sollida mudiathu.. Naan observe pannathu..

    perseverance - peria porattam, strugglum thandii oru determination
    Erium Thanal
    pionist
    Sundharathin Thuram 4000 mile
    Dream evalvu perusa irunthalum, vida muirachiadu
    Thalivan Konda pathai
    Pathi maria Payanam
    I am the greatest

    but intha blog, Kandipa our postive thakkathia negativea erupadithi iruku....neenda nallaga manathi arithu kondu iruntha, neria questionku oru partial answer kedachu iruku..
    - Oru chinna paian pola, uluga anubavam illamal, ippadi enna oru safana valakai
    - Enathu theriamagaluum, dreamgium mariathu, our polidana sirinbathuku thedi odavathaa
    - enukkaa valamal, appa/amma, sociatiodia perumikka valavathu...
    - chinna vetri, sathinium, saritharathium padikathu..
    - ungala mathri, ennodia dream pinnadi oru poratama ulagathuku naan enn thaira aga kudathu...
    innum neria... Oru manasuku pudichal valkoida poradra sugama different than.. naanuku athukana muiarchia edathutu irukan.....

    Naan intha blogia, unga cinimala vara interverla irukumnu nenikeran...

    Putia thirupangalodu,ungaloida second half ethir parthu kondu irukum...
    Karthik

    பதிலளிநீக்கு
  26. நண்பரே, நேற்றுத் தான் உங்கள் வலைப்பூவுக்கு வந்து பழைய பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது, முகமது அலி பற்றி நீங்கள் எழுதியிருந்த when we were kings படத்தை பற்றி படித்து ஈர்ப்பாகி அதனை டவுன்லோடி பார்த்தேன். ஒரு சமூகத்தின் புறக்கணிப்பை மீட்டெடுக்க, நான் ஜெயிக்கப்பிறந்தவன் என்று அடித்தொண்டையில் கத்தும் அலியின் வேகம், எனக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது. நீங்களும் அதே மனநிலையில் இயங்குகிறீர்கள் என எண்ணினேன். நாம் ஜெயிக்கும் வரை சமூகம் நம்மை தோற்றவராகவே கருதும். உங்களின் உன்னதமான சிந்தனையையும் உழைப்பையும் இது போன்ற அர்த்தமற்ற, அறியாமையால் எழும் கேள்விகளுக்கும் விமர்சனத்துக்கும் வீணாக்கவேண்டாம். தாம் விரும்பும் ஒரு விஷயத்தையே வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக்கொண்டவர்கள் பெரும் பாக்கியவான்கள். நீங்கள் மிகப் பெரிய பாக்கியவான்.

    பதிலளிநீக்கு
  27. நெருடலான ஒரு பதிவு ... எதிர்பார்க்கவில்லை ...
    -------------------------------------------
    "வாழ்ந்தாலும் ஏசும் ... தாழ்ந்தாலும் ஏசும் ...
    வையகம் இதுதானடா ... " எனும் பழைய பாடல் நினைவுக்கு வருகிறது
    வெற்றி பெரும் வரை "வீண் முயற்சி" என்பார்கள்
    பெற்ற பின் - "விடா முயற்சி" என்பார்கள் ...
    "இக்கரைக்கு அக்கரை பச்சை"யாய் எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடாதவர்கள் சொற்பமே ...
    "வீட்டுக்கு வீடு வாசற்படி" தான் ...
    தங்களைப் போல் என் வாழ்க்கை அமையவில்லையே என நான் சில சமயங்களில் நினைத்தது கூட உண்டு ...
    "வீழ்வது தோல்வியல்ல ... வீழ்ந்து கிடப்பதே தோல்வி ... "

    பதிலளிநீக்கு
  28. கண்டிப்பாக சந்திக்கலாம் நண்பரே.. என் எண்:94443 55683

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,