ரொம்ப நாளா (ரொம்ப வருடமா) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும்’.
விவசாயம் கடினம், அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது… “நான் பட்ட கஷ்டத்த, எம் புள்ள படவேண்டாம்யா… அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும்”
அப்படி… உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா? அது கடினமுன்னா... நாம் சாப்பிடறது எப்படி? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா, இந்த உலகம் இயங்குமா? அப்படித்தானே, பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க. பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா?
எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம், கருத்து உண்டாக வேண்டுமானால், அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி… ‘விவசாயம் செய்து பார்த்துவிடுவது’ என்று தோன்றியது.
கிராமத்தில் என் நண்பன் ‘பெருமாளையும்’ உடன் சேர்த்துக்கொண்டு கடந்த ஒரு வருடமாக விவசாயம் செய்துக்கொண்டிருக்கிறேன். முதலில் காய்கறிகள் பயிரிட்டோம். விவசாயம் என்று வந்துவிட்டதனால், அது இயற்கை விவசாயமாக (Organic Farming) இருக்கட்டும் என்று கருதினோம். இரசாயண உரங்கள் இல்லாத காய்கறிகள் அத்தனை சுவையாக இருந்தது என்று நான் சொன்னால் உங்களால் உணரவே முடியாது, நீங்களே அதனை சாப்பிட்டுப்பார்த்தால் தான் புரியும். கத்திரிக்காய், வெண்டக்காய், கொத்தவங்காய, வெள்ளரிப்பிச்சு, சிறுகீரை, அரக்கீரை, கேழ்வரகு என்று சிலவற்றை கடந்த கோடைக்காலத்தில் பயிரிட்டோம். பெருமாளின் பிள்ளைகளும் எங்களோடு சேர்ந்துக்கொண்டார்கள். ஆட்டமும் பாட்டமுமாக கடந்த நாட்கள் அவை. நாக்கும், மனமும் சுவையறிந்தது.
பிறகு... ஆடி மாதத்தில் ‘பொன்னி நெல்லும்… துயமல்லி நெல்லும்’ பயிரிட்டோம். ஏற்கனவே முடிவு செய்ததுதான். விவசாயம் செய்தால் அது Organic வழி விவசாயம் தான். கூடவே இன்னொரு முயற்சியும் எடுத்தோம்.
பொதுவாக நாற்று உற்பத்தி செய்து(நாற்றங்கால்), அதனை இருபது, இருபத்தைந்து நாட்களுக்குப்பிறகு வேரொரு இடத்தில்(நெல் வயல்) பிடிங்கி நட்டுதான் நெல் பயிர் செய்வார்கள். மற்றொரு வழி, நேரடியாக நெல்லை விதைப்பது. இதில் நாற்றங்கால் தனியாக, நெல்வயல் தனியாக என்று இருக்காது. நாற்று நடும் வேலை இல்லை. நேரடி விதைப்பில் இரண்டு வகை இருக்கிறது. கைகளால் நெல் விதைகளை தூவி விடுவது… மற்றொன்று ‘Drum Seeder’ என்றொரு கருவி மூலம் நேர்க்கோட்டில் நெல் விதைகளை விதைப்பது… அதைத்தான் செய்திருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம்.
இன்று நெல் அறுத்து, அரிசியாக்கி வைத்திருக்கிறோம். எங்கள் தேவைக்குபோக மீதமுள்ளதை நண்பர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் விற்பனை செய்து விடலாம் என்று நினைக்கிறோம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.
நாங்கள் விவசாயம் செய்ததைப்பற்றி தொடர்ந்து எழுத விருப்பம்.. ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து வாருங்கள்.
(தொடரும்)
பின்குறிப்பு: நாங்கள் செய்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வீடியோ பதிவாக யூடியூப் சேனலில், இன்ஸ்டாவில், முகநூலில் பதிவு செய்து வருகிறோம்.அதற்கான லிங்க்...
YouTube: https://www.youtube.com/@AruvadaiFarm
Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr
Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d
#organicfarming #organics #இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங் #vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக