Sunday, August 31, 2014

இயக்குனர் - ஒரு பார்வை : The Passions and Techniques of Steven Spielberg


திரைப்படம் என்பது என்ன? திரைப்படத்தின் தேவை என்ன? திரைப்படம் நம்முடைய எந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது? என்பதான கேள்விகளை என்றேனும் நீங்கள் உங்களையே கேட்டுக்கொண்டது உண்டா?

திரைப்படம் என்பது ஒருவகையில், கலைச்சார் சாதனம். கதை சொல்லிகளுக்கு கிடைத்திட்ட ஒரு தொழில்நுட்ப ஊடகம். மற்றொரு வகையில் வணிகர்களுக்கு கிடைத்திட்ட ஒரு வர்த்தகப் பிரிவு. கலை மற்றும் வணிகம் இரண்டும் கலந்திட்ட ஒரு தொழில்நுட்ப விளைவு. சரிதானே.? கலைஞர்களுக்கு தன் கலையை, கதையை, உணர்வை, எண்ணத்தை, கற்பனையை பார்வையாளக்குக் கடத்திட காலம் வழங்கிய வரம் அல்லது கலம். பேச்சு, இசை, ஓவியம், எழுத்து, கூத்து, நாடகம் வரிசையில் திரைப்படமும் ஒரு ஊடகம். வணிகனுக்கு என்னவாக இருக்கிறது என்பதைப்பற்றி நாம் இங்கே கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு கலைஞன்பால் இவ்வூடகம் கொண்டிருக்கும் ஆளுமை அல்லது இக்கலையின் மீது கலைஞன் கொண்டிருக்கும் ஆளுமையைப்பற்றி மட்டும் இங்கே கொஞ்சம் பேசுவோம்.

ஒரு திரைப்படமென்று எடுத்துக்கொண்டால், அதில் பல கலைகளின் சங்கமம் இருந்தாலும், அவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் (கதை.. உணர்ச்சி.. கருத்து..) அடிப்படையில் ஒழுங்கமைக்கிற அல்லது ஒருங்கிணைக்கிற பொறுப்பு அத்திரைப்படத்தின் இயக்குனருக்குத்தான் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு இயக்குனரே அத்திரைப்படத்தின் தரத்திற்கு, மேன்மைக்குப் பொறுப்பாளனாகிறான். எனின், ஒரு திரைப்பட இயக்குனரின் பணி என்ன? பெரும்பாலும் கதையை அவர் எழுதுவதில்லை (இந்திய சினிமாத்துறையை விட்டு விடுங்கள்), வசனம், திரைக்கதை எழுதுவதில் பங்கு பெறுகிறார்கள் என்றாலும் அது இயக்குனரின் தகுதிக்குள் வருவதில்லை, அவர்களை வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என்ற பெயரில் அழைக்கிறோம். அப்பணியை இயக்குனரே செய்திருந்தாலும் அதற்கென தனியாக அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. நம்முடைய படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெயர் போடுவது, அவை ஒவ்வொன்று தனித்தனி துறைகள் என்பதனால்தான் அல்லவா? சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு திரைப்படத்தின் கதை, வசனம், திரைக்கதை போன்றவற்றை எழுதுவதனால் அவரை இயக்குனர் என்று அழைத்துவிட முடியாது. சரி, அவர் நடிப்பதுமில்லை, இசையமைப்பதுமில்லை, ஒளிப்பதிவு செய்வதுமில்லை, படத்தொகுப்பு செய்வதுமில்லை எனில் ஒரு இயக்குனரின் பணிதான் என்ன? ஒரு இயக்குனர், அத்திரைப்படத்தைச் சார்ந்து அப்படி என்னதான் செய்கிறார்?

இங்கே, தமிழ்/ இந்திய சினிமாவில் ஒரு இயக்குனரின் பணி என்ன என்பதும், உலகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் இயக்குனரின் பணி என்ன என்பதற்குமிடையே பெரும் வித்தியாசங்களிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. தமிழ்/ இந்திய சினிமாவில் இயங்கும் இயக்குனர்களுக்கு அது தெரிந்திருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு அது மிகச் சரியாக தெரிந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இங்கே ஒரு கதையை எழுதி விட்டவர், ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்துவிட்டவர், ஒரு நடிகனை சம்மதிக்க வைத்துவிட்டவர் என்பதுதான் ஒரு இயக்குனருக்கானத் தகுதியாகப் பார்க்கப்படுறது. மேலும் சில எளிய வழிகளும் உண்டு. பணம் வைத்திருப்பவர், முன்னாள், இன்னாள்களின் வாரிசுகள், மனைவிமார்கள், கணவன்மார்கள் போன்றவர்களும் இயக்குனராக ஆகும் தகுதி படைத்தவர்கள் என்பது இந்திய/தமிழ் சினிமாவின் எழுதப்படாத கோட்பாடுகளில் ஒன்று. இதில் விதி விலக்குகளும் உண்டு. உண்மையிலேயே தன்னை ஒரு கலைஞனாக, படைப்பாளியாக மாற்றிக்கொண்ட அல்லது தகுதியாக்கிக்கொண்ட பல இயக்குனர்களை நாம் அறிவோம். அத்தகைய இயக்குனர்களின் மேன்மையான படைப்புகள் பலவற்றை இந்திய/தமிழ் சினிமா கண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. சரி, அத விடுங்க. நாம் பேசப்போவது அதைப்பற்றி அல்ல.

ஒரு இயக்குனரின் பணி என்ன? என்ற நேரடியான கேள்விக்கு மிக எளிமையான பதில், ஒரு கதையை அதன் மையக் கருவினை அடிப்படையாக கொண்டு அதன் கலையம்சம் (artistic) மற்றும் நாடகத்தன்மையை (dramatic aspects), கலை மற்றும் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பயன்படுத்தி பார்வையாளனுக்கு கடத்தி விடுவது. இதுவே ஒரு திரைப்பட இயக்குனரின் மிக ஆதாரமான பணி. சரி. கடத்தி விடவேண்டும் என்பது புரிகிறது. அதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்? என்ற உப கேள்வியும் உங்களுக்கு தோன்றக்கூடும்.

உண்மைதான். அதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கு நேரடியான, எளிய பதில் சொல்லிவிட முடியாது. இங்கேதான் ஒரு கலைஞனின் இருப்பு உணரப்படுகிறது. கதை, வசனம், திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என பல கூறுகளை ஒன்றிணைத்து ஒரு படைப்பை, கலையை நிகழ்த்துபவராக அவர் இருக்கிறார். ஓவியனின் கைகளில் கிடைத்திட்ட வண்ணங்கள் உயிர்ப்பெற்று ஓவியமாக பரிமாணம் பெறுவதைப்போன்ற ஒரு ரசவாதத்தை ஒரு இயக்குனர் நிகழ்த்திக் காட்டுகிறார். அப்படி ஒரு கலையை நிகழ்த்துவதற்கு அல்லது படைப்பதற்கு அவர் பல நிலைகளை கடந்து வர வேண்டியதிருக்கிறது. பல கலைசார் துறைகளின் ஊடாக பயணிக்க வேண்டியதுமிருக்கிறது. படப்பிடிப்பு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என விரியும் பணிகளுக்கூடே அவர் பயணிப்பதன் ஆதார நோக்கம், பார்வையாளனுக்கு புரியும் விதத்தில் அல்லது அவனை வசீகரிக்கும் விதத்தில் ஓர் அனுபவமாக அத்திரைப்படத்தை படைத்திடுவது என்பது மட்டும்தான். இந்த ஆதார நோக்கத்திற்குத்தான் ஒவ்வொரு இயக்குனரும் செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரின் செயல்பாடும் வெவ்வேறானவை. ஒரு படைப்பை அணுகும் விதமாகட்டும், அதை நிகழ்த்திடும் அல்லது படைத்திடும் விதமாகட்டும் எல்லாம் மாறுபட்டவை. இதன் அடிப்படையிலேயே, ஒரு இயக்குனர் என்பவரைப்பற்றிய தெளிவான ஒரு கோட்பாட்டை உருவாக்க முடிவதில்லை. ஒவ்வொருவரும் ஒரு விதம். அவர்கள் தங்களின் திரைப்படங்களை படைத்திடும் முறைகளும், நுணுக்கங்களும் வெவ்வேறானவை.

உலகின் சிறந்த இயக்குனர்கள் எவரை எடுத்துக்கொண்டாலும், அவர் மற்றவரிலிருந்து மாறுபடுகிறார். அவரின் படைப்பாற்றல், கலை நுணுக்கம் எல்லாம் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. அவர்கள் கையாளும் கதை, திரைக்கதை, வசனங்களில் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையனுபவத்தை கொடுப்பதிலும் தனித்துவத்தை கொண்டிருக்கிறார்கள். உலகின் சிறந்த இயக்குனர்கள் ஒவ்வொருவருமே ஒரு கையேடு. புத்தகம். வழிகாட்டி, ஆசான் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படம், இயக்கம் என்ற கலையை கற்றுக்கொள்ள ஒவ்வொருவரையும்தான் படிக்க வேண்டும். இன்னார்தான் இயக்கத்திற்கான அகராதி, இவரைப் படித்தால் போதும் ஒரு இயக்குனராக பரிமாணித்துவிடலாம் என்றெண்ணுவது ஒருவகையில் குருட்டு நம்பிக்கை. எழுத்தாளனைப்போல, பாடகனைப்போல, இயக்குனருக்கும் தனித்தன்மை இருக்கிறது. தமிழ்த் திரையுலகை எடுத்துக்கொள்ளுங்கள், காலம் கடந்தும் தன் படைப்புகளால் நம்மை வசீகரிக்கும் எத்தனையோ இயக்குனர்களை நாம் அறிவோம். அத்தனைபேரின் தனித்தன்மையும் வெவ்வேறானது அல்லவா?! இதேப்போல உலகமுழுவதும் பல தனித்தன்மை வாய்ந்த இயக்குனர்களை நாம் பெற்றிருக்கிறோம்.

இணையத்தில் இயக்குனர்களைப்பற்றிய விவரங்கள் பரவலாக காணக்கிடைக்கின்றன. இதில் ஒவ்வொரு இயக்குனர்களைப்பற்றியும், அவர்கள் கையாளும் தொழில்நுட்பம் அல்லது கலைநயம் பற்றிய எண்ணற்ற தகவல்களையும் பெறமுடிகிறது. அண்மையில் சில இயக்குனர்களைப் பற்றியும், அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் சில காணொளிகளைப் பார்க்க முடிந்தது. அவை ஒவ்வொன்றும் மிக சுவாரசியமானவை. அவற்றைப்பற்றி நண்பர்களோடு பகிர்ந்துக்கொண்ட போது, ஒவ்வொருவரும் அதன் மீது ஆர்வம் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. அந்த காணொளிகளின் தொடர்பு சுட்டியை (Link) பகிர்ந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு தனி மின்னஞ்சலில் அவற்றை பகிர்ந்துக்கொண்ட போதுதான், அதை ஏன் என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தோன்றியது. அதன் வெளிப்பாடே இந்த பதிவு.


இப்பதிவில், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களைப்பற்றிய காணொளியைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் காணொளி ஸ்பீல்பெர்க்கின் படைப்பாளுமையைப்பற்றி விவரிக்கிறது. பல படங்களில் அவர் கையாண்ட தொழில்நுட்ப நுணுக்கங்களை காட்சிகளோடு விளக்குகிறது. பல படங்களிலிருந்து தொகுக்கப்பட்ட இக்காட்சிகளின் வழியாக பல தகவல்களை, நுட்பங்களை நாம் அறிந்துக்கொள்ள முடியும். இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஒரு இயக்குனரின் படைப்பாளுமையையும், கலை நேர்த்தியையும், நுணுக்கங்களையும் விவரிக்கிறது. அவர் தொடர்ச்சியாக பின்பற்றும், பயன்படுத்தும் கதை சொல்லும் யுத்தியை காட்சிகளோடு விவரிக்கிறது. மிகவும் பயனுள்ள ஒரு காணொளி என்று எனக்குத் தோன்றியது. அதன்பொருட்டே இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன். இதைப்போல பல காணொளிகளை இணையத்தில் காண முடிகிறது. அவற்றை ஒவ்வொன்றாக உங்ளோடு பகிர்ந்துக்கொள்கிறேன். முடிந்தவர்கள், நீங்களாகவே தேடி எடுத்துக்கொள்ளவும் முடியும்.

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் படங்களைப்பற்றி பலவற்றை நாம் பேச முடியும். அது Jaws, Jurassic Park, Indiana Jones and the Temple of Doom, போன்ற வெகுசன சினிமாவாகட்டும், The Color Purple, Schindler's List, Saving Private Ryan, Amistad போன்ற கலை படைப்பாகட்டும் அத்தனையும் தரம் வாய்ந்தவை. செய்நேர்த்தியும் கலைத்தன்மையும் ஒருங்கே இணைந்தவை. அப்படங்கள் கொடுக்கும் திரையனுபவத்தை படம் பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இவருடைய படங்கள் ஒருவகையில் வெகுசன சினிமா வகையை சார்ந்ததுதான். வணிகத்தின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியது. ஆயினும் அதில் இழையோடும் கலைத்தன்மையையும், படைப்பாளுமையையும் நம்மால் உணரமுடியும். அவ்வகையில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இவரின் படங்கள் எப்போதும் ஏமாற்றம் தருவதில்லை. புனைவு ஒரு புறமென்றால் வரலாற்றுப் படங்களையும் இவர் விட்டுவைப்பதில்லை. 

ஸ்பீல்பெர்க்கை பற்றி நினைவு கூறும் போதெல்லாம், எனக்கு Saving Private Ryan திரைப்படத்தின் ஆரம்ப காட்சியும்,  Amistad - இல் வரும் கப்பல் காட்சிகளும் தவறாமல் நினைவுக்கு வரும். அத்தனை எதார்த்தம் அவர் படைப்புகளிலிருக்கும். அது வரலாற்றுப்படமாக இருக்கட்டும், அல்லது விஞ்ஞான கதையாக இருக்கட்டும் அதன் அடிநாதமாக மானுடத்தின் தவிப்பும், மீட்சியும் இருக்கும். அவ்வகையில் என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர். உங்களுக்கும் அவரின் படைப்புகள் பிடிக்குமென்றால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


The Passions and Techniques of Steven Spielberg from Steven Benedict on Vimeo.

மேலும் அவருடைய படங்களில் ஒவ்வொரு ஷாட்டும் (Shot) நீண்ட ஷாட்டுகளாக இருக்கும். நான்கு ஐந்து ஷாட்டுகளில் எடுக்க வேண்டியதை ஒரு ஷாட்டாக அமைத்திருப்பார். அதைப்பற்றிய ஒரு புள்ளி விவரம் இது.


Saturday, August 16, 2014

Rule of Thirds: 'முப்பாக அமைப்பு விதி' - ஒரு அறிமுகம்சில புகைப்படங்கள் பார்த்தவுடன் சட்டென்று நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. அது நம்மை வசீகரிப்பதாக நம் மனது சொல்கிறது.

அதற்கு காரணமென்ன? அப்புகைப்படத்திலிருக்கும் காட்சியா? அப்புகைப்படத்தின் வண்ணச்சேர்க்கையா? ஒளிச்சிதறல்களா? அது சொல்லும் செய்தியா? எது.. எது நம்மை அப்புகைப்படத்தை நோக்கி இழுக்கிறது?

இதற்கான சரியான பதில், மேலே சொன்ன எல்லாமே என்றுதான் இருக்கும். ஆமாம், ஒரு புகைப்படம் என்பது ஆதாரமாகக் கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் பொருட்டே வண்ணமும், ஒளியும், இருளும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவை எல்லாம் சேர்ந்தே அப்புகைப்படமெடுத்த கலைஞனின் எண்ணத்தை பார்வையாளனுக்கு கடத்துகின்றன.

சரி. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் படைப்பாற்றல் மற்றும் உள்ளடக்கத்தைச் சார்ந்தவை என்றாகிறது. எனில், இதன் பின்னேயிருக்கும் தொழில்நுட்பத்தைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமா? எத்தொழிலாகட்டும் அல்லது எக்கலையாகட்டும் அவற்றிற்கென சில ஆதார விதிகளும், நுட்பங்களும் உண்டு என்பதை நாம் அறிவோம்.

ஒளிப்பதிவுத்துறையில், புகைப்படத்துறையில் மிக முக்கியமானதும் ஆதாரமானதுமான பல்வேறு கூறுகளின் ஒத்திசைவை / கூட்டமைவை (Composition) அமைப்பதைப் பற்றிய விதிகள் சில உண்டு. ‘Rule of Thirds’, ‘Balancing Elements’, ‘Leading Lines’, ‘Symmetry and Patterns’, ‘Viewpoint’, ‘Background’, ‘Depth’, ‘Framing’, ‘Cropping’ என அவை அனேகமிருந்தாலும், அவற்றில் முக்கியமான ஒன்று இந்த முப்பாக அமைப்பு விதி – ரூல் ஆஃப் தேர்ட்ஸ் (Rule of Thirds) ஆகும்.


‘Rule of Thirds’ என்றால் என்ன?
ஒரு பிம்பத்தை மூன்று பாகங்களாக குறுக்கும் நெடுக்குமாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது குறுக்காக மூன்று பாகம் வருவது போல் சமதூரத்தில் இரண்டு கோடுகள், அதே போன்று நெடுக்காக இரண்டு கோடுகள். இதன் மூலம், ஒரு பிம்பமானது ஒன்பது பாகங்களாக பிரிக்கப்படுகிறது.இப்படி ஒரு அமைப்பை ஒரு புகைப்படமெடுக்கும்போது உங்களின் மனதில் கற்பனையாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் புகைப்படத்தின் ஆதாரக் கூறுகளை (elements) எங்கே அமைக்க வேண்டும் என்று இவ்விதி சொல்கிறது. அதாவது ஒரு புகைப்படத்தின் மைய கருத்தை அல்லது பார்வையாளன் கவனிக்க வேண்டிய முக்கியமான மூலத்தை (subject), இந்த ஒன்பது கட்டங்களில் எங்கே அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இவ்விதி உதவுகிறது.

பொதுவாக, நாம் புகைப்படமெடுக்கும்போது அதில் subject -ஐ மையத்தில் வைக்க முயல்வோம். ஆனால், மேலே காட்டப்பட்டிருக்கும் நான்கு கோடுகளும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் அல்லது அவற்றின் உட்பகுதியில் Subject வைக்கப்படுமானால் அது, பார்வையாளர்களை இன்னும் எளிதாகச் சென்றடையும் என்கிறது Rule of thirds!


உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் subject அந்த பெண்தான் என்பது நமக்குத்தெரியும். எனில், அப்பெண் புகைப்படத்தின் மையத்தில் வைக்கப்படாமல் கோடுகள் சந்திக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்தக் கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில் அல்லது அதற்கு உட்பட்ட பகுதிகளில் நமது subject -ஐ வைத்துப்படமாக்கும்போது, அவை பார்வையாளனை வெகுவாக கவர்கின்றன என்கின்றன ஆய்வு முடிவுகள். இதன் மூலம் அப்புகைப்படங்கள் நேர்த்தியாகவும் ஈர்ப்புடனும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இவ்விதி மனிதர்களை படம் பிடிக்கும்போது மட்டுமல்ல, ஏனைய படங்களுக்கும் பொருந்தும்.

கீழே உள்ள புகைப்படத்தைப்பாருங்கள். இதில் எது முக்கியமான பகுதி?


கண்டிப்பாக அது வலதுபுரத்திலிருக்கும் பாறைதான் இல்லையா? அதுதானே நம் கண்ணை முதலில் கவர்கிறது.? எனில் அப்பாறை, மையத்தில் இல்லாமல் ஏன் ஒரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.? காரணம் இப்புகைப்படம் ‘Rule of Thirds’ -ஐ பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.


அதாவது மையப்பாத்திரம் (Subject) புகைப்படத்தின் மொத்த பரப்பளவை குறுக்கும் நெடுக்கமாக மூன்று பாகங்களாக பிரித்து, அதில் நெடுக்கு வாட்டத்திலிருக்கும் மூன்றில் ஒரு பாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அக்கோடுகள் சந்தித்துக்கொள்ளும் இடத்தில். மேலும் கீழே இருக்கும் நிழல் பகுதி புகைப்படத்தில் கிடைவாக்கில் மூன்றாம் பாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போல ‘Horizon' கோடும் மேலேயிருக்கும் மூன்றாம் பாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். (‘Horizon' கோடு என்பது வானமும் பூமியும் சந்திக்கும் கோட்டை குறிப்பதாகும்)

எனில், நாம் எடுக்கும் அத்தனைப் புகைப்படங்களும் இவ்விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டுமா? இல்லை, அப்படி இல்லை!

இவ்விதிகள் ஒரு வகையான வழிகாட்டி, அவ்வளவுதான். இவை மனிதனின் இயல்பான உள்வாங்கும் திறனை அடிப்படையாகக்கொண்டு, ஆய்வுகளின் முடிவாக உருவாக்கப்பட்டவை. இவை புகைப்படங்களுக்கு எளிதில் புதிய பரிமாணங்களைத் தருகின்றன.

‘நிலத்தோற்றங்களைப்’ (landscapes) புகைப்படமெடுக்கும்போது ‘Horizon' கோட்டை, மேல் அல்லது கீழ் மூன்றாம் பாகத்திலும், மனிதர்கள், மிருகம், கட்டிடங்கள், பாறைகள் போன்ற ‘Subjects’ -ஐ படம்பிடிக்கும்போது அவற்றை வலது அல்லது இடது மூன்றாம் பாகத்திலும் வையுங்கள் என்று இவ்விதி சொல்கிறது. அப்படி எடுக்கும்போது நிலத்தோற்றங்களுக்கு ஒரு ஆற்றல்மிகுந்த தன்மையும் (dynamic), ‘Subjects’-க்கு ‘திசை உணர்வையும்’ (sense of direction) கொடுக்கிறது என்றும் சொல்கிறார்கள்.மேலே இருக்கும் படங்களில், மிதிவண்டியில் செல்பவர் போகும் திசை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதேப்போல பறவை எந்நேரத்திலும் வலதுபுறமாக பறந்து விடலாம் என்ற எண்ணத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இவ்வகை தகவல் அல்லது எண்ணவோட்டம் அப்புகைப்படத்திற்கு ஒருவகையான உயிர்ப்பை ஏற்படுத்துகிறது.


 

மேலே இருக்கும் இரண்டு படங்களில், முதல் புகைப்படத்தில் ‘Horizon’ புகைப்படத்தில் நடுவில் இருக்கிறது. இரண்டாவது படத்தில், அதே புகைப்படம் CROP செய்யப்படுவதன் மூலமாக, Horizon கோடு மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது நம்மை இன்னும் வசீகரிக்கிறது அல்லவா? மேலும் இதில் முக்கிய பகுதியான வலதுபுறத்துப் பாறையின் மீதிருக்கும் கட்டிடம் நம் கவனத்தை ஈர்ப்பதையும் கவனியுங்கள்.

இதோ மற்றொரு உதாரணம்.


சரி, இந்த 'Rule of thirds'-ஐ  எப்படி நம் படங்களில் பயன்படுத்துவது? அதுவொன்றும் கடினமானதில்லை. ஒவ்வொரு புகைப்படத்தை எடுக்கும்போது இரண்டு கேள்விகளுக்கு பதில் தேடுங்கள்,
  1. இப்படத்தில் எதுவெல்லாம் சுவாரசியமானவை.? - What are the points of interest in this shot?
  2. அவற்றை நான் எங்கே வைக்கப்போகிறேன்? - Where am I intentionally placing them?
அவ்வளவுதான். பிரச்சனை முடிந்தது. தொடர்ந்து இதைப் பயிற்சி செய்வதன் மூலம் தேர்ச்சி அடைந்துவிடலாம். பின்பு அது உங்களின் இயல்பில் ஒன்றாகி விடும். உலகின் சிறந்த புகைப்படக்காரர்கள் இவ்விதியை தவறாமல் பின்பற்றுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராகிட, இந்த அறிமுகம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

இதேதான் ஒளிப்பதிவிலும் பின்பற்றப்படுகிறது. ஒளிப்பதிவுத்துறைக்கென்று பல விதிகள் இருந்தாலும், இந்த 'Rule of thirds' –ம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக இவ்விதியின் மேம்பட்ட வடிவமாக அல்லது மற்றொரு விதியாக ‘Golden Ratio’ என்றொரு விதி இருக்கிறது. அதைப்புரிந்துக்கொள்ள ‘Fibonacci numbers’, ‘Fibonacci sequence’, ‘Golden spiral’, ‘Divine Proportion’ என்பதை எல்லாம் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியதிருக்கும்.

பூக்களின் அடுக்குகள், இலைகளின் துளிர்ப்பு, நீரலைகளின் பரவல் என இயற்கையெங்கும், ‘Fibonacci விதி ஒளிந்துகொண்டுள்ளது. உலகின் சிறந்த கலைஞர்கள் எல்லாம் இதைப் பின்பற்றி தங்களின் படைப்புகளை படைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அது, எகிப்தின் பிரமீடாகட்டும், நவீன உலகின் அடையாளமான அமெரிக்க கட்டிடங்களாகட்டும், லியார்னோடோ டாவின்ஸியின் மோனலிசா ஓவியமாகட்டும், எல்லாவற்றிலும் இந்த ‘Fibonacci’ அடிப்படை இருக்கிறது என்கிறார்கள். இந்த விதி ஒளிப்பதிவிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இவற்றைப்பற்றி மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.

இப்போதைக்கு, 'Rule of thirds' -ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

'Rule of Thirds' விதியை விளக்கும் கானொளி: