முதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின் வாயிலாகவே வந்தது.
காலா.. அக்மார்க் பா.இரஞ்சித் படம். இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு திரைப்படமென்பது ஒரு அரசியல் செயல்பாடு. கலை, அழகுணர்ச்சி, வணிக வெற்றி என எல்லாவற்றையும் தாண்டி, அவர் பேசும் அரசியலை முன்னிறுத்தும் ஒரு கருவி அல்லது ஊடகம். எளிய மனிதர்களின் வாழ்வியலை, அரசியலை, போராட்டத்தை, சவால்களை பேசுவதே அவரின் நோக்கம். காலாவும் அப்படியே.
கதை, திரைக்கதை, வசனம், பாத்திரப்படைப்பு, நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என ஒரு திரைப்படத்தைப்பற்றி பேசுவதைப்போல, ரஞ்சித்தின் திரைப்படத்தை பேச வேண்டியதிருக்காது எப்போதும். காரணம், அவருடைய படங்களில் நாம் பொருட்படுத்த வேண்டியது, அது பேசும் அரசியலைத்தான். அது பதிவுசெய்யும் வாழ்வியலைத்தான். அதைத்தான் இரஞ்சித்தும் விரும்புவார். அவ்வகையில், காலாவில், தான் பேச விரும்பிய அரசியலை, கச்சிதமாக அல்லது விஸ்தாரமாக இரஞ்சித் பேச முயன்றிருக்கிறார். அது என்னவென்பதை படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் உணர்ந்துக்கொள்ள முடியும். ஆகவே நான் அதைப்பற்றி எதுவும் பேசப்போவதில்லை.
எனக்கு இருக்கும் கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்..!
ரஜினி ஏன் இப்படத்தை செய்ய ஒத்துக்கொண்டார்..!?
எனக்கு தெரிந்து, ரஜினி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவானவர் இல்லை. இந்துத்துவா அரசியலுக்கு எதிரானவரும் இல்லை. இந்திய ஆளும் வர்கத்தினர்க்கு எதிரானவரும் இல்லை. எனில்.. காலாவை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்..!?
ஒரு குப்பம், அங்கே வாழும் மக்களை துரத்துவிட்டு, அவ்விடத்தை அபகரிக்க ஒரு அரசியல்வாதி முயற்சிக்கிறான். அதை தட்டிக்கேட்கும் ‘தாதா’ நாயகன். இதானே கதை..!? இது என்ன புதுக்கதையா? ரஜினி இம்மாதிரியான திரைப்படத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லையா..!? இந்திய திரைப்படங்கள் எடுக்கப்பட்டதில்லையா..!? இது ரஜினிக்கு தெரியாதா என்ன..? இருந்து அவர் ஏன் காலாவின் நடிக்க ஒத்துக்கொண்டார்..!?
1. இளையதலைமுறை இயக்குநர்களோடு திரைப்படம் செய்வதன் மூலம், ரஜினி அவர்களின் திரைவாழ்வில், இது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் தவரொன்றுமில்லை.
2. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி(!?) எனில், இது குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை தனக்கு சாதகமாக மாற்ற உதவும் என்று நினைத்திருக்கலாம். அது தலித்துகளின் ஓட்டு எனில், தலித்துகளின் ஓட்டு, ரஜினிக்கு விழுவது அத்துனை உகந்ததல்ல. ஏற்கனவே களத்திலிருக்கும் தலைவர்களுக்குதான் அது பாதகமாக முடியும்.
ரஜினிக்கு தலித்துகளின் ஓட்டுகள் விழுவது, அவருக்கு வேண்டுமானாலும் நன்மையாக இருக்கலாமே ஒழிய, தலித்துகளுக்கு எவ்விதத்திலும் பயன் இருக்கபோவதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இது பா.இரஞ்சித் அவர்களுக்கும் தெரியும் என்று நம்பலாம்.
3. அட.. அப்படி எல்லாம் இல்லப்பா. இதில் எந்த எந்த அரசியலுமில்லை. இது ஒரு தொழில். இவரால் அவருக்கு லாபம். அவரால் இவருக்கு லாபம். அவ்வளவுதான். இதில் இத்தனை தூரம் பேச வேண்டியதில்லை என்போரும் உண்டெனில்.. அவர்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை.
பின்குறிப்பு: மெட்ராஸ் போன்ற ஒரு திரைப்படத்தைத்தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் இரஞ்சித் தோழர். இல்லையெனில் குறைந்த பட்சம் அட்டக்கத்தியாவது தாருங்கள்.
அருமையான பதுவு தோழர்
பதிலளிநீக்குI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News