முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்கப்பட வேண்டியவர்கள்

சமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலை செய்து வருவதைக் கண்டித்து நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். 


நமக்கு அந்தப் படுகொலைகளைப்பற்றி தெரிந்ததெல்லாம் கொஞ்சம்தான். மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும், சமீபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாகவும் மட்டும்தான் அறிந்து வைத்திருக்கிறோம்.



அந்த மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காகத்தான் அரசாங்கம் போராடி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த ' ஆப்பரேஷன் கிரின் ஹண்ட்' நடைபெறுவதாகவும் அரசும், ஊடகங்களும் சொல்லுகின்றன. நாமும் 'ஐய்யோ என்ன அநியாயம்' என்பதாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ காதில் கேட்டுவிட்டு கடந்து போய் விடுகிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிய நாம் எந்த வித பிரயத்தனமும் கொள்வதில்லை. அதன் போக்கில் ஊடங்களின் கத்தலினால் நம் காதில் விழுவதுதான் நாம் அந்த பிரச்சனையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதெல்லாம். அதைப்பற்றி நாம் விவாதிப்பதோ கூடுதல் தகவல் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பதோ இல்லை, குறைந்தது உண்மை என்ன என்று கூட அறிந்துக்கொள்ளக்கூட நாம் ஆர்வம் காட்டுவதில்லை.




இந்த கட்டுரை, அதை உங்களுக்கு முழுதுமாக சொல்லும் நோக்கம் கொண்டதுமில்லை. அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்துப் போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதும், நம்மை சுற்றி இருக்கும் உலகத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் கவலையும், ஏமாற்றமும், ஆதங்கமும், கோபமும் வருகிறது. நம் வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மையும், கையாலாகத்தன்மையும் என்னை ஆற்றாமையில் தள்ளிவிட்டன. 


அங்கே மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரம் உட்பட மத்திய மாநிலங்களில் என்னதான் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டால்தான், அதன் வலியை உணரமுடியும்.


ஒரு நாட்டின் வளங்களைப்பற்றிக் குறிப்பிடும் போது, அந்த நாட்டின் கனிம வளங்களைப் பற்றி குறிப்பிடுவார்கள். கனிம வளங்களின் மதிப்பைப் பொறுத்து அந்த நாட்டின் பொருளாதார மதிப்பீடுகள் மதிப்பிடப்படும். அந்த வகையில் தன் எல்லைக்குள்ளிருக்கும் கனிம வளங்களை பயன்படுத்திக்கொள்ளுவது அந்த நாட்டின் உரிமை. அதைத்தான் இந்திய அரசாங்கம் செய்ய நினைக்கிறது. அதைபோய் குற்றம் சொல்லலாமா?


அப்படி தண்டகாரண்யா என அழைக்கப்பட்ட காடுகளில் அரிய கனிம வளங்களான 'பாக்சைட், இரும்புத்தாதுகள், நிலக்கரி, யுரேனியம், டாலமைட், வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிம பொருட்கள் புதைந்துக்கிடக்கின்றன.  அந்த வளங்களை தோண்டி எடுக்க நினைத்து. அதை தனியார், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தாகிவிட்டது. அவர்கள் அங்கே தோண்டப் போகிறார்கள். அதற்கு இடையூறு செய்யலாமா?. அவர்கள் தோண்டுவதிற்கு வசதியாய் அங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் நகர்ந்து நின்று வழி கொடுக்க வேண்டும். முடிந்தால் சம்மட்டி, கடப்பாறை கொடுத்து உதவி செய்யனும், அதானே மனிதத் தன்மை. ஆனால் அங்கே இருக்கும் மக்கள் அதை எதையும் செய்யாமல், தோண்டவும் விட மாட்டேன் என்று தகராறு செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டால் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்துகொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். என்ன கொடுமை சார்? சரி அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா? நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டாமா? சொல்லுங்க.. உங்களுக்கு அந்த கனவு இல்லையா? எத்தனைபேரின் கனவு அது. அப்துல் கலாம் எவ்வளவுக் கஷ்டப்பட்டு அதை நாடு முழுவதும் ஏற்படுத்தினார். அதை வெறும் கனவாக போய் விட அனுமதிக்க முடியுமா? சொல்லுங்க.. அதற்காகத்தான் இந்த 'ஆப்ரேஷன் கிரின் ஹண்ட்' (பச்சை வேட்டை). 



சரிப்பா அப்படி என்னதான் செய்யப்போகிறீர்கள் என்றால், ஒன்றுமில்லை.. தோண்டுவதிற்கு தடையாக இருக்கும் நபர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தப் போகிறோம் அவ்வளவுதான் என்கிறது அரசாங்கம். நமக்கும் சரி என்றாகத்தான் படுகிறது. ஆனால் நண்பர்களே, அவர்கள் அப்புறப்படுத்துவது என்பதற்கு அர்த்தம் நாம் நினைப்பதைப்போலில்லாமல், அரசாங்கத்திற்கே உரிய தனிப்பட்ட அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. 


புதிதாக ஒன்றுமில்லை நண்பர்களே. வழக்கம் போலத்தான். அரசாங்கம் தன் நண்பர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது. தம் தேர்தல் செலவுகளை கவனித்துக் கொண்டவர்களுக்கும், தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை கவனித்துக் கொள்பவர்களுக்கும் பிரதி உபகாரம் செய்ய நினைக்கிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்கிறது, நாட்டை வல்லரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. அவ்வளவுதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? வேறென்ன.! வழக்கம் போலத்தான், ஏழைகளை ஒழிக்கவேண்டும். நாடு பணக்கார நாடாக வேண்டுமானால்  ஏழைகளே இல்லாமல் ஆக்க வேண்டும். ஏழைகளே இல்லாமல் செய்ய சுலபமான வழி ஏழைகளை அழித்துவிடுவது. நண்பர்களே இங்கே தான் நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும். ஏழ்மையை அழிப்பதில்லை, ஏழையை அழிப்பது.


இது ஒன்றும் புதிய யுத்தி இல்லை. வழக்கமானதுதான். பல நாடுகளில் சரித்திரப்பூர்வமாக பின்பற்றிய வழிதான். காலம் காலமாக நல்ல பலன் தரும் முறை. நம்பகமான முறை. உத்தரவாதம் தருவதிற்கு பல நாடுகள் இருக்கின்றன. அதைத்தான் இங்கே இந்திய அரசாங்கமும் நடைமுறைப் படுத்துகிறது. அதைப் போய் குற்றம் சொல்லலாமா?


சரி வழிமுறை இருக்கிறது. அதை எப்படி செயல்படுத்துவது? அது அந்த அந்த நாட்டின் சாமார்த்தியம். அங்கே அரசாங்கம் என்ன செய்தது.? 




அங்கே தோண்டுவதற்கு இடையூராக இருப்பது ஒருவரோ பத்து பேரோ அல்ல. பல லட்சக்கணக்கான பேர்கள், இவர்களின் எண்ணிக்கை சில நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் எண்ணிக்கையை விட அதிகம். தோண்டுவதற்கு அவர்கள் தடை சொல்கிறார்கள், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் தோண்டுவது என்வீட்டுத் தோட்டத்தில் அல்ல. என் வீட்டையேதான் என்கிறார்கள். அதுவும் அதை எல்லோரும் கோரஸாகச் சொல்லுகிறார்கள். ஆம் நண்பர்களே அரசாங்கம் தோண்டப்போகிறேன் என்றுச்சொல்லுவது இவர்களின் வீடுகளைத்தான். அவர்களின் வாழ்விடங்களைத்தான். அவர்கள் உண்டு களித்து வாழ்ந்த இடங்களைத்தான் நண்பர்களே.


அவர்கள் பழங்குடினர், காடுகளையும் மலைகளையும் பரம்பரைப் பரம்பரையாக வாழ்விடங்களாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அவர்களுடையது. காடுகளே அவர்களின் சொத்து, அது கொடுக்கும் வளங்களே அவர்களின் வருமானம். அதுவே அவர்களின் ஆதாரம்.  அவர்களின் பூமி அது. 


அதைதான் இந்திய அரசாங்கம் தோண்டுவேன் என்கிறது. மக்கள் போராடிப்பார்த்தார்கள். யாரும் காது கொடுப்பதாக இல்லை. அவர்களுக்கு உதவ மாவோயிஸ்டுகள் வந்தார்கள். மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் வெடித்தது.


அரசாங்கம் என்ன சொல்லுகிறது.? நகர்ந்து போங்கள், உங்களுக்கு வேறு இடம் தருகிறோம். முகாம்களுக்கு வாருங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் (கவனித்து, கொல்கிறோம்) என்றது. அப்படி எல்லாம் நாங்கள் எங்கள் வீட்டை விட்டுப்போக முடியாது என்ற மக்களை, சரி அப்படி என்றால் செத்துப்போங்கள் என்கிறது அரசாங்கம். எப்படி.. நல்ல முடிவு இல்லையா?!


அதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது? முதலில் 'சால்வா ஜூடும்'  என்னும் ஒரு அமைப்பை நிறுவியது (2005-இல்), அது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றது. அரசாங்கமே ஏற்படுத்திய அராஜகப் படை அது. 700 கிராமங்கள் கொளுத்தப்பட்டன. கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றனர். அரசாங்கம் அமைத்த முகாமிற்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வந்து தங்கவேண்டும் என்றனர். உண்மையில் துரத்தப்பட்டனர். பெரும் மக்கள் அண்டை மாநிலங்களுக்கும் தப்பி ஓடினர்.  சிலர் எதிர்த்து ஆயுதம் தூக்கினார்கள். அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் போராட்ட வழிமுறையையும் தலைமையையும் கொடுத்தார்கள்.


அப்போதுதான் அரசாங்கம் அலர ஆரம்பித்தது, ஐய்யய்யோ இந்த மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்கிறார்கள். நாட்டைத் துண்டாட துடிக்கிறார்கள், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் அலறுகிறார்கள். அரசாங்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் இவைகள் தான்.



மாவோயிஸ்டுகள் பள்ளிக் கட்டிடங்களை வெடிவைத்துத் தகர்க்கிறார்கள். பாதுகாப்புப் படையினரை கொல்கிறார்கள். இரயிலைக் குண்டுவைத்துத் தகர்க்கிறார்கள். அரசாங்கப் பணிகள் நடைபெறாமல் தடுக்கிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். 


இதை எதையுமே மாவோயிஸ்டுகள் மறுப்பதில்லை நண்பர்களே. .


ஏனெனில்..


அவர்கள் குண்டு வைத்தபோது, பள்ளிகளில் இருந்தது பிள்ளைகள் இல்லை, ஆயுதப்படை. 


அவர்கள் கொன்று போட்டவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.


தகர்த்த இரயில்களில் படைகள் இருந்தன.


அரசாங்கப்பணி என்ன என்பது நமக்கு தெரிந்ததுதான்.!


பழங்குடியினர் எல்லோரும் மாவோயிஸ்டுகளாக மாறுகிறார்கள் என்கிறார்கள். அருந்ததி ராய் ஒரு விஷயம் சொல்கிறார். அதாவது பழங்குடினர் 99 சதவிதம் மாவோயிஸ்டுகள் இல்லை, ஆனால் மாவோயிஸ்டுகளில் 99 சதவிதம் பழங்குடினரே என்கிறார். 


அருந்ததி ராய், அங்கே அந்தப் போராட்டக்காரர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி சுடப்பட்டு இறந்திருந்த சடலங்களைக்காட்டி இவர்களெல்லாம் மாவோயிஸ்டுகள் என்றாராம், அதற்கு ராய் "நான் எப்படி அதை நம்புவது, அவர்களின் நெற்றியில் என்ன எழுதியா இருக்கிறது" என்றாராம். அதற்கு அந்த அதிரிகாரி கொடுத்த மாவோயிஸ்டுகளுக்கான அடையாளம் என்ன தெரியுமா? இறந்துப்போனவர்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்கள், குண்டு வைத்திருக்கிறார்கள் என்பதில்லை. ’இறந்து போனவர்கள் 'மலேரியாவிற்கான' மருந்துகள் வைத்திருக்கிறார்கள்.. பார்த்தீர்களா?’ என்றாராம். அதாவது மக்கள் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டு காடுகளில் வாழ்கிறார்கள். சரியான சுகாதார வசதி இன்மை, மழைக்காலம், மருத்துவம் இல்லாதது எல்லாம் சேர்த்து அவர்களுக்கு தொற்று நோய்களும் மலேரியாவும் வந்து இறந்து போகிறார்கள். அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்கள் வைத்திருக்கும் மருந்துகள்தான் அவர்கள் மாவோஸ்டுகள் என அடையாளப்படுத்துகிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவர்களின் ஏழ்மையையும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும்.


மற்றவர்களைக்காட்டிலும் நாம் அதை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும், ஏனெனில் நம் வீடுகளிலும் அதே போன்ற கொடுமைகள் சமீபத்தில் நடந்தன. ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை, இந்தப் படுகொலைகள். 


ராய், நிறைய பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நெஞ்சைச் சுடுபவை. அவர் முடிக்கும் போது ஒன்று சொன்னார். அந்த வார்த்தைகள்தான் இப்போதும் என் மனதில் உறுத்திக்கொண்டிருப்பவை.. அது..


"இந்த நாடு, தன் நாட்டு மக்களிலே மிகவும் பின்தங்கியவர்களை, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருபவர்களை, மிகவும் ஏழ்மையானவர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. அது மிகவும் அவமானகரமான செயல். அதைவிட, அதைக்கண்டு எதுவும் செய்யாமல், அதை எதிர்க்காமல், குரல்கூடக் கொடுக்காமல் இருக்கும் நாமெல்லாம் மிகுந்த அவமானப்படவேண்டியவர்கள்.. அவமானப்படவேண்டியவர்கள்.. அவமானப்படவேண்டியவர்கள்.." என்றார்.



உண்மைதான் நண்பர்களே.. கீழான நிலையிலிருக்கும், அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்று வாழும் எவ்வளவோ மக்களை நாம் தினமும் பார்க்கிறோம். அவர்களுக்காக நாம் எதுவும் செய்வதில்லை. யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவன் ஒருவனிடமிருந்து அவன் நாளெல்லாம் உழைத்து சம்பாதித்து வாங்கிய ஒரு ரொட்டித்துண்டை உண்ணப்போகும்போது, அதை இன்னொருவன் பிடுங்கித் தின்றுவிட்டு அவனை எட்டி உதைத்துவிட்டு சென்றால் எப்படி இருக்கும்? அதுவும் அதை நாம் பார்த்தும் ஒன்றும் கேளாமல் வந்துவிட்டால், உங்களுக்கு எப்படி இருக்கும். இரவு உணவு உண்ணத் தோன்றுமா? உறக்கம் வருமா? அப்படித்தான் எனக்கு இருக்கிறது, அருந்ததி ராயின் அந்த வார்த்தைகள்.


நான் வெட்கப்படவேண்டியவன்தான்.. 


நான் வெட்கப்படப்படுகிறேன். 


  

கருத்துகள்

  1. விஜய் நானும் கூட வந்திருந்தேன், சத்தியமான வாத்த்தைகள், இதை பற்றி வினவு நிறைய எழுதியிருக்காங்க இங்க சென்று வாசிக்கலாம்

    http://www.vinavu.com/tag/operation-green-hunt/

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு சார்.. இது போல சமுதாய பதிவுகளையும் இந்த தளத்தில் இனி எதிர்பார்க்கின்றேன்...
    கார்ல போறவன் சைக்கிள்ல போறவன் இருக்கவே கூடாதுன்னு நினைக்கிறான் இல்லை ஆத போலதான்...

    மவுண்ட் ரோடுல சைக்கிள்காரனுக்கான வழி முதல்ல நடுவில இருந்தது...நாகரீகம் வளர்ச்சி பெற பெற இப்ப சைக்கிள் பாதை ஓரமா வந்துடிச்சி இல்லை.. அது போலதான்... இந்தடயலாக் நாம் என்ற படத்துல வைத்து இருப்பார்கள்...


    அன்புடன்
    ஜாக்கி..

    பதிலளிநீக்கு
  3. இதுபோன்ற கொடூரங்களைக் காணும்போதெல்லாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

    பூர்வகுடி மக்களை வேரோடு பெயர்த்தெடுப்பதே காலம் காலமாக ஆட்சியாளர்களின் வழக்கமாகிப் போய்விட்டது.

    மிக நல்லதொரு ஆய்வுக் கட்டுரை சார்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நானும் வெட்கத்தில் கூனி குறுகித்தான் போகிறேன்.
    இந்த இணைப்பை, சில இந்திய எதிர்கால தூண்களிடம் பகிர்ந்து கொள்ள விளைகிறேன் தோழரே.

    பதிலளிநீக்கு
  5. "ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை இந்த படுகொலைகள். "
    நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே. முடியுமானவரை உண்மை செய்திகளை உங்களைப் போன்ற பதிவர்கள் வெளிக் கொணர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கோடு போட்ட கொன்னு போடு
    வேலி போட்ட வெட்டி போடு
    நேத்துவரைக்கும் உங்க சட்டம்
    இன்னைகிருந்து எங்க சட்டம்
    கோடு போட்ட கொன்னு போடு
    வேலி போட்ட வெட்டி போடு
    வில்ல போல வலஞ்ச கூட்டம்
    வேல போல நிமிர்ந்து விட்டோம்
    சோத்துல பங்கு கேட்ட ஆட எலயபோடு எலய
    சொத்துல பங்கு கேட்ட அவன் தலைய போடு தலைய
    ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரும் நாடு மசியாது
    மேகம் வந்து சத்தம் போட்ட ஆகாயம் தான் கேக்காது
    பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடா கூடாது
    பாம்ப கூட பழகி பசும் பால ஓத்தும் சாதி
    தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
    கள்ளி காட்டு புள்ளதாச்சி கள்ளபெத்த வீரனடா
    ஜல்லி கட்டு மாடு கிழிச்ச சரியும் குடலே மாலையாட
    செத்த கெழவன் எழுதி வெச்ச ஒத்த சொத்து வீரமடா
    கோடு போட்ட கொன்னு போடு
    வேலி போட்ட வெட்டி போடு
    எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
    எங்க தண்ணி ஏறி சாராயம் போல் உரைக்கும்
    வத்தி போன உசுரோட வாழ்வானே சம்சாரி
    ஒரு சப்பாத்தி கள்ளி வாழ வேணாமே உம்மாரி
    எட்டுகாணி போன அட எவனும் ஏழ இல்ல
    மானம் மட்டும் போன நீ மைக்க நாளே ஏழை
    மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
    சியான் காட்ட தோண்டி பாத்தா
    செம்மண் ஊத்து ரத்தம்தான்
    கோடு போட்ட கொன்னு போடு
    வேலி போட்ட வெட்டி போடு
    நேத்துவரைக்கும் உங்க சட்டம்
    இன்னைகிருந்து எங்க சட்டம்
    கோடு போட்ட கொன்னு போடு
    வேலி போட்ட வெட்டி போடு
    Correct song in ravanan
    All the best to mavo

    பதிலளிநீக்கு
  7. சரவணன், திருப்பூர்.8 ஜூன், 2010 அன்று 12:04 PM

    ஒரு வெள்ளையனால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி நடத்தும் நாட்டில் இதெல்லாம் இல்லாமலிருந்தால் தான் ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  8. Vijay sir,

    roy solvathu unmai than aanal athu mattume unmai alla.avar oru pakka sarpaga solvar.

    Govt than muthalil kevalamana thappu seythathu aanal ippothu maoist kalum thavarana vanmurail irangivittarkal.

    Operation green hunt theeviram petrathu p.chidambaram home minister aana piraguthan,avar pinnal iruppathu vedanda groups anil agarval enra uk nri.

    Thoothukudi sterlite copper pollution violationku famous athu vedanda groups company than. P.c vedanda vin ex board of director and legal adviser.

    பதிலளிநீக்கு
  9. அண்மையில் ப.சிதம்பரம் "மாவோயிஸ்டுகள் 3000.00 சம்பளம் ரூபா கொடுத்து பொது மக்களை போராட்டத்திற்க்கு சேர்க்கிறார்கள்" என்று சொன்னார்.

    அந்த 3000.00 ரூபாவை சம்பாதிக்கும் ஒரு பொருளாதார நிலைமைக்கு கூட மக்களை அரசு உயர்த்தவில்லை என்பதை பொருளாதாரம் படித்த ஒரு அமைச்சரால் ஏன் உணர முடியவில்லை!

    உண்மையிலேயே சிதம்பரத்திற்க்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் அதைவிட முதலாளிகளின் நலம் முக்கியம் அல்லவா!!

    விஜய்,
    நாம் வெட்கப்படுதால் மட்டுமே எதுவும் நடக்கப் போவதில்லை.
    ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது எதிர்ப்பை காட்டுவதன் மூலமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  10. Vijay,

    I want to touch another aspect of this issue (and this blog post). These Adivasis should be careful with people like Arundhati roy, in other words they should identify who are their friends. I am not supporting what Adivasis are doing now, but I believe they have problems and the Indian government instead of helping them, just like they do it for others, suck and oppress them.

    Adivasis should think thoroughly to find out what they want and how best they can achieve it. They can discuss and consult with journalists, activists (Arundhati roy, so-called Maoists) and with the Indian Government officials to figure out what is the best solution and the way of achieving it, but they should make a decision. If they listen and follow non-native people such as Arundhati roy and Maoists, the result will be like what happened in Srilanka and African countries like Sierra Leone, Nigeria, Liberia etc.

    I know what I am saying is very difficult for them, they have to go through a lot of obstacles and back stabings.

    Mohan

    பதிலளிநீக்கு
  11. அருந்ததி ராய் குறித்து செய்திகள் படிக்கும் போதெல்லாம் இவர் தமிழ்நாட்டில் பிறந்து இதே போர்க்குணம் இருந்து இருந்தால் ஈழம் குறித்து இன்னும் வெகுஜனம் அறிந்து இருக்க வாய்ப்புண்டு.

    உங்களை அறிமுகப்படுத்திய அறிவுத்தேடலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் தோழருக்கு

    இது போன்ற செய்திகள் வெகுஜன பத்திரிகையில் வராது. வலைதளங்களில் தமிழும் வளர்ந்திருக்கிறது, எழுதுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள் - அதனால் செய்திகளும் வீச்சாக பலரை சென்றடைகிறது. அருந்ததிராயின் எழுத்துக்கள் பலரை சென்றடைய வேண்டியிருக்கிறது, சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    இங்கொன்றும் அங்கொன்றுமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இது பற்றிய செய்தியை சில ஆங்கில செய்தியாளர்கள் அருமையாக எழுதியிருக்கிறார்கள். அது போன்ற ஆங்கில கட்டுரைகள் சிலவற்றை நான் மொழிபெயர்த்து தமிழில் வினவு டாட் காமில் பதிவு செய்திருக்கிறேன். வினவு.காம் தளத்தில் எழுத்தாளர் கட்டத்தில் சித்திரகுப்தன் என தேர்வுசெய்து மொழிபெயர்ப்பு கட்டுரைகளை படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. Please have a look at BAdri seshadri's latest post.

    We get a confusing picture.

    பதிலளிநீக்கு
  14. "அங்கே மேற்குவங்கம்,ஜார்க்கண்ட்,ஒரிசா,சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரம் உட்பட மத்திய மாநிலங்களில் என்னதான் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டால்தான், அதன் வலியை உணரமுடியும்.
    "
    நல்ல பதிவு !


    By
    இவை கவிதை அல்ல

    பதிலளிநீக்கு
  15. நன்றி முத்துவேல் சிவராமன் சார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...