Interesting interplay of Dark and Light tones - The Hindu

Cinematographer Vijay Armstrong indulges in an interesting interplay of dark and light tones - The Hindu

வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திறிக்கிறார் ஒளிப்பதிவாளர் - Sun TV

கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைச்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திறிக்கிறார் ஒளிப்பதிவாளர். - Sun TV

ஃபோட்டோகிராபி ரொம்ப புரபஷனலாக இருக்கு - ஹாசினி பேசும் படம்

ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-மிடம் இருக்கிறது - ஹாசினி பேசும் படம்

The camera has been handled very well - -Behing Woods

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது. - தமிழ் கூடல்.com

Technically, the film top-notches with colorful visuals

Technically, the film top-notches with colorful visuals offering a pleasant touch to film’s ambience. What Works: Second half and Cinematography - Top 10 Cinema

Cinematography was top notch -Bharatstudent.com

Vijay Armstrong's camera work is commendable - The Hindu

Sunday, May 6, 2012

‘வழக்கு எண் 18/9’ :


மனித பிறவியில் மிகக் கொடுரமானது ஏழ்மையாக இருப்பதுதான். ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கும் குரூரத்தன்மைக்கு எவ்வித விளக்கமும் தந்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதல்ல, நீதி என்று ஒன்று இருப்பதும் அதில் ஏழைகளுக்கும் சம்பந்தம் உண்டா என்பதும் கேள்விக்குறியானதே!.

ஏழையாக பிறந்துவிட்ட ஒருவனின் அவல நிலையையும் இச்சமுகம் அவனுக்கு வழங்கும் வாழ்க்கையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

ஒரு ஏழை இளைஞனின் காதலும் அதற்கான சிக்கலுமல்ல இப்படம். இது ஒரு காதல் படமாக என்னால் பார்க்க முடியவில்லை. சமுகத்தில் வருமையின் பிடியில் உழன்று கிடக்கும் பல கோடி அப்பாவி மானுடர்களின் அவல நிலையை பதிவுசெய்யும் ஒரு முயற்சியாகத்தான் இப்படத்தைப் பார்க்க முடிகிறது.

ஒரு படைப்பு எப்படியானதாக இருக்க வேண்டுமோ அப்படியானதாக இப்படம் இருக்கிறது. ஒரு கலை வடிவத்தின் ஆதார நோக்கம் எதுவாக இருக்க வேண்டுமோ அதுவே இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது.

முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்துக்கொண்டு தேர்ந்த கலைஞன் ஒரு அற்புத படைப்பை கொடுத்திருக்கிறார். கதை, கதாபாத்திர தேர்வு, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

‘கேனான் 5D’ போன்ற சிறிய கேமராவின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, கதை நிகழும் களத்தில் பார்வையாளனை கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். கேனான் 5D கேமராவை மிக சிறப்பாக பயன்படுத்திய திரைப்படமாக , என் வரையில் இதுவே முதல் படம் என்பேன்.

ஒரு நல்ல திரைப்படம், ஒன்றுப்பட்ட மனநிலையில், ஒத்த சிந்தனையின் குவிமையத்தில் ஒட்டிமொத்த பார்வையாளர்களையும் கொண்டு போய் நிறுத்தும். அந்நேரங்களில் ஒவ்வொரு பார்வையாளனின் சிந்தனையும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அத்தகைய ஒரு நிலையை இப்படத்தில் பார்க்க முடிந்தது. காவல்துறை அதிகாரி அவ்விளைஞனுக்கு செய்யும் அநீதியின் போது, திரையரங்கில் ‘போலிஸ்கார தே..பையா’ என்றொரு குரலெழுந்தது. அடுத்த கனம் ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டியது. தொடர்ந்து பல முனைகளிலிருந்தும் அதே சொல்லைப் பயன்படுத்தி வசவுகள் வந்துகொண்டே இருந்தது. அதுவொன்றே சாட்சி, இத்திரைப்படம் சமுகத்தை எந்தளவிற்கு பிரதிபலித்திருக்கிறது என்பதற்கு.

மிகுந்த மனநிறைவோடும் பெருமிதத்தோடும் திரு பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, April 19, 2012

நான்கு செய்தியாளர்களும் ஒரு போர்களமும்:



உலகம் இன்று செய்திகளால் நிரம்பி வழிகிறது. நடப்புகள் அனைத்தும்
செய்தியாக்கப்படுகின்றன. ஏதோவொரு ஊடகத்தில் அவை பதிவு செய்யப்படுகின்றன.

போட்டிகள் நிறைந்த இத்துறையில், பரபரப்பான செய்திகள் தேவைப்படுகின்றன. சுடச்சுட பரிமாறப்பட வேண்டியது அவசியமாகிறது. தவறும் ஒவ்வொரு கணமும், அது செய்தியை சாகடித்து விடக்கூடும்.

ஒவ்வொரு செய்தியாளனும், பத்திரிக்கையாளனும் சந்திக்கும் நெருக்கடிகள்
ஏராளம். துறைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறமென்றால், அறம் சார்ந்த
நெருக்கடிகள் மறுபுறம். மற்ற எந்த வேலையை விடவும் பத்திரிக்கையாளனாக தன் பணியை தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதனின் அறம் சார்ந்த கடமை மிக
முக்கியமானது. உயிர் காக்கும் மருத்தவருக்கு இருக்கும் அதே கடமையும்
பொறுப்பும் ஒரு பத்திரிக்கையாளனுக்கு உண்டு. சொல்லப்போனால் அதைவிட
அதிகமாகவே.

ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையோர் பத்திரிக்கையாளனாக தங்கள் பணியை தேர்ந்தெடுப்பது ஒருவித பொறுப்புணர்வினால்தான். சமுகத்தின் மீதிருக்கும் பொறுப்பும் அக்கரையுமே ஒரு மனிதனை பத்திரிக்கையாளனாக (நல்ல) மாற்றக்கூடும்.

ஒரு நடப்பை செய்தியாக்குவது எதற்காக? செய்திகளை உலகம் அறிய செய்வது எதன் பொருட்டு? பணம் செய்யவா? பரபரப்புக்காகவா? இல்லை..! விழிப்புணர்வுக்காக. ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்? விழிப்புணர்வே மனிதனை காக்கும்.

இப்படி மனிதம் காக்கும் பணியில் எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் உலக
முழுவதும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்திக்காக
அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. செய்திகளை தவற
விட்டுவிடக்கூடாது என்பதற்கு அவர்கள் எடுக்கும் மெனக்கெடலை நாம் அறிவோம்.

தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முண்டியடிக்கும்
வாகனங்களில் துரத்தும், எப்போதும் பரப்பரப்பான கூட்டமாக அவர்களை நாம்
அறிவோம். இது எதற்காக? சக பத்திரிக்கையாளன் மற்றும் போட்டி ஊடகத்தைவிட செய்தியை முந்தி தந்துவிடவேண்டும், எச்செய்தியையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமா? வெறும் போட்டிக்காகவா? இல்லை.

வெறும் போட்டிக்காக என்றால் பெரும்பான்மையோர் அடுத்த நாளே வேலையை விட்டு போய் விடுவார்கள். தினமும் கூட்டத்தோடு கூட்டமாக,
முண்டியடித்துக்கொண்டும், துரத்திக்கொண்டும் இருக்க யார்
விரும்புவார்கள்!? இதைவிட நல்ல, சுகமான வேலைகள் பல உண்டு என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா என்ன? ஆனால் அப்படி யாரும் வேறு வேலைக்குப்போவதில்லை. ஏன்? இவ்வேலையில் அவர்கள் அடையும் ஆத்ம திருப்தி. இது ஒரு வகையான கடமை. சமூகத்திற்கு, சகமனிதனுக்கு அவர்கள் ஆற்ற விரும்பும் சேவை. ஆகவேதான் செய்தியாளனாக இருப்பது ஒருவகையில் அறம் சார்ந்தது என்கிறேன்.

செய்தியாளர்களில் பல வகை உண்டு. சினிமா, அரசியல், வணிகம், அறிவியல்,
நாகரிகம் எனத் தொடரும் இப்பட்டியலில் போர் செய்தியாளர் அல்லது போர்
பத்திரிக்கையாளர் என்பதும் ஒரு பிரிவு. போர் நடக்கும் இடங்களில் போரின்
ஊடாக பயணித்து செய்திகளைத் தருபர்களை ‘போர் செய்தியாளர்’(War
correspondent) என்கிறோம். இவர்களின் பணி மிக கடுமையானது. மரணங்களின்
ஊடாக பயணிப்பவர்கள். பல மரணங்களை செய்தியாக்குபவர்கள். சில சமயங்களில் தாங்களே செய்தியாகுபவர்கள். ஆமாம். உலக முழுவதும் பணியில் மரணமடைந்த, பணியின் பொருட்டு மாண்டு போன, செய்தியாளர்கள் பலர் உண்டு.

அண்மையில் கொல்லப்பட்ட ‘மேரி கொல்வினை’ நாம் அறிவோம். பணியில்
கொல்லப்பட்ட செய்தியாளர்களின் புள்ளிவிவரத்தை ‘பத்திரிகையாளர்கள்
பாதுகாப்புக் குழு’ (committee to protect journalists) என்னும் அமைப்பு
வெளியிட்டிருக்கிறது.

2012-இல் மட்டும் 17 செய்தியாளர்களும் 1992-இலிருந்து இக்கட்டுரை
எழுதப்படும் வரை 911 செய்தியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 179
செய்தியாளர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேரி கொல்வின்

உலகின் இருபது அபாயகரமான நாடுகள் மற்றும் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை:

1. ஈராக்: 151
2. பிலிப்பைன்ஸ்: 72
3. அல்ஜீரியா: 60
4. ரஷ்யா: 53
5. கொலம்பியா: 43
6. பாக்கிஸ்தான்: 42
7. சொமாலியா: 40
8. இந்தியா: 28
9. மெக்ஸிக்கோ: 27
10. ஆப்கானிஸ்தான்: 24
11. பிரேசில்: 21
12. துருக்கி: 20
13. போஸ்னியா: 19
14. இலங்கை: 19
15. ருவாண்டா: 17
16. தாஜிக்ஸ்தான்: 17
17. சியரா லியோன்: 16
18. வங்காளம்: 12
19. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மண்டலம்: 10
20. நைஜீரியா: 10

இதில் பெரும்பாலான நாடுகளில் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
பாக்கிஸ்தான், பங்காளதேஷ் போன்ற நாடுகளின் ஆட்சி அமைப்பு முறையில்
இருக்கும் குறையை நாம் அறிவோம். ஆனால் இந்தியாவில்?

எட்டாமிடம்.

இருபத்தெட்டு செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில்
தினகரன் எரிப்பில் கொல்லப்பட்ட வினோத்குமார், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூவரின் கணக்கு தனி. மேலும் காரணம் தெரியாத கொலைகளின் வரிசையில் 18 செய்தியாளர்கள் வருகிறார்கள்.

உலக முழுவதும் 160 செய்தியாளர்கள், போரில் செய்தி சேகரிக்கும்போது
கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22, 2012-இல் கொல்லப்பட்ட மேரி
கொல்வினிக்கு பிறகு மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு முழுவதும், ஏன் இந்த செய்தியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரிக்கிறார்கள்? தங்கள் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கதை அங்கே இருக்கிறது? அவர்களின் உயிரை விட பெரிதாக எதை நினைக்கிறார்கள்?

இக்கேள்விகளுக்கு பதில் வேண்டுமாயின், அவர்களோடு நாம் பயணித்தால்
மட்டுமே கண்டெடுக்க முடியும். ‘The Bang Bang Club’ என்னும் திரைப்படம்
நமக்கு அப்படியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. கனடிய-தென்
ஆப்பிரிக்க படமான இதை ‘ஸ்டீவன் சில்வர்’(Steven Silver) இயக்கி
இருக்கிறார்.


‘கெவின் கார்ட்டர்’(Kevin Carter),‘கிரெக் போரினொவிச்’(Greg
Marinovich),‘கென் ஓஸ்டர்புக்’(Ken Oosterbroek) மற்றும் ‘ஜோவா சில்வா’(João Silva) ஆகிய நான்கு, போர் புகைப்படச் செய்தியாளர்களின் போர்
அனுபவத்தை சொல்லுகிறது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் போரில்,
குறிப்பாக 1990 முதல் 1994-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த நான்கு
புகைப்படக்காரர்களுக்கு நடந்த அனுபவத்தை பதிவுசெய்திருக்கிறது. இந்த
நால்வர் குழுவின் பெயர் தான் ‘The Bang Bang Club’.

கென் ஓஸ்டர்புக்
கெவின் கார்ட்டர்

ஜோவா சில்வா
கிரெக் போரினொவிச்

இந்நால்வர் குழு சந்திக்கும் சிக்கல்களையும், போராட்டத்தையும்,
மனவுளைச்சலையும் இப்படம் விவரிக்கிறது. ‘கிரெக் போரினொவிச்’ 1991-இலும், ‘கெவின் கார்ட்டர்’ 1994-இலும் புலிட்சார் விருதுகளை பெற்றார்கள். 18,
ஏப்ரல் 1994-இல் ‘கென் ஓஸ்டர்புக்’ பணியில் இருக்கும்போது துப்பாக்கி
சூட்டில் கொல்லப்பட்டார். 1994 ஜூலையில் ‘கெவின் கார்ட்டர்’ தற்கொலை
செய்துக்கொள்கிறார். (மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்)

பிறகு 2010 அக்டோபரில் கந்தகர் போரின்போது ‘ஜோவா சில்வா’ கண்ணிவெடியில் கால்வைத்ததனால் தன் இரு கால்களையும் இழக்கிறார். கிரெக் போரினொவிசும் ஜோவா சில்வாவும் இணைந்து எழுதிய இதே பெயரைக்கொண்ட புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


படத்தைப்பாருங்கள். போர்க்களத்தின் ஊடே ஒரு புகைப்படக்காரனாக பயணிப்பதில் இருக்கும் சவால்களையும் சாகாசத்தையும் மானுடத்தையும் காணமுடியும்.

ஒரு முன்னாள் புகைப்படச் செய்தியாளனாக இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. 2000 ஆம் ஆண்டு, விகடனின் மாணவ பத்திரிக்கையாளனாக பெங்களூரில் பணிபுரிந்த காலகட்டத்தில், அப்போது வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் பற்றி செய்திகளுக்காக ஓடிய ஓட்டத்தை இப்போது புன்முறுவலோடு நினைத்துக்கொள்கிறேன்.


The Bang Bang Club TRAILER



Saturday, March 31, 2012

'Flash mob' -உம் ‘why this Kolaveri Di’- யும்

நகரம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நகரத்தின் பரபரப்பான இடம் அது. கடைவீதி, தொடர்வண்டி நிலையம், பேருந்துநிலையம், வணிகவளாகம் போன்ற ஒரு பொது இடம். மக்கள் கூடுமிடம்.

அங்கே இருந்த ஒலிபெருக்கி ஏதோ ஒரு இசையை ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிரபல பாடல் ஒலிக்கத்துவங்குகிறது. அங்கே வந்த ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தின் மையத்திற்கு வந்து அப்பாடலுக்கு ஆடத் துவங்குகிறார். கூட்டத்தில் சிலர் அதை கவணிக்கிறார்கள். அப்படி பார்த்தவர்களில் ஒருவர் அருகில் வந்து அவரும் ஆடிக்கொண்டிருப்போரோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார். பாடலும், அதிலிருக்கும் துள்ளலும் வசீகரமாக இருக்கிறது. அதைப்பார்த்த மேலும் சிலரும் அவர்களோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார்கள். கூட்டம் இதை ஆச்சரியத்தோடு பார்க்கத்துவங்குகிறது. ஆட்டத்தின் உற்சாகம் மெல்லப் பரவுகிறது. மேலும் பலர் ஆட்டத்தில் இணைந்துக்கொள்கிறார்கள்.

கூட்டம் இவ்வாட்டத்திற்கு ஒத்திசைந்து கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறது. வேடிக்கை பார்த்தவர்கள், அவ்வழியே கடந்துச் சென்றவர்கள் எல்லோரும் தங்கள் உடமைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு, அவ்வாட்டதில் பங்கெடுக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆடுபவர்கள் அனைவரும் ஒத்திசைந்து ஒரேவிதமான நடனத்தை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்திற்கு இன்னும் மகிழ்ச்சி. பரவசம், கொண்டாட்டம் என அவ்விடமே கோலாகலமாகிறது. ஆட்டம் தொடர்கிறது. கூட்டம் பரவசப்படுகிறது. ஆடுபவர்களும் வேடிக்கை பார்ப்பவர்களும் தங்கள் நிலை மறந்து ஆட்டத்தோடு ஒன்றிப்போய் பரவசப்படுகிறார்கள். சட்டென்று ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிகிறது. ஆடியவர்கள் அனைவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் வழியே கலைந்து சென்று விடுகிறார்கள். வேடிக்கைப் பார்த்த கூட்டமும், பிரமிப்போடு கலைந்துச் செல்லுகிறது. நகரம் அதன் போக்கில் இயக்கி கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு நிகழ்ச்சி, பரபரப்பான நம் நகர வாழ்க்கையில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப்பாருங்கள். ஓடிக்கொண்டிருக்கும் வேலைகளிடையே, இசையும் அதனோடு ஒத்திசைந்த நடனமும் காணக்கிடைத்தால்?. அதுவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் அதில் இணைந்து ஆடினால், நம் மனநிலை என்னவாகயிருக்கும்? முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பின்பு இசையில் நடனத்தில் கவரப்பட்டு மனம் பரவசப்படும் அல்லவா.. நம்முடைய எல்லா அலுவல்களையும் மறந்து அதில் கவனம் செலுத்துவோம் அல்லவா?

ரோட்டில் ஒரு கூட்டம் கூடி இருந்தாலே என்னவென்று எட்டிப்பார்க்கும் ஆட்கள் நாம். இதில் இசையும் நடனமும் என்றால், கேட்டவா வேண்டும்.. நின்று, கைத்தட்டி, ரசித்துவிட்டுதான் அவ்விடத்தை விட்டு நகருவோம். இது எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இந்த மனநிலையைத்தான் இத்தகைய ஆட்டங்கள் குறிவைக்கின்றன. அதுவே இவ்வகையான நடனம் உருவாவதற்கு அடிப்படை.

இவ்வகையான நடனத்தை நிகழ்த்துபவர்களை ‘Flash mob’ என்கிறார்கள். சட்டென்று தோன்றி மறையும் கும்பல் என்று அர்த்தம் கொள்ளலாம். இவ்வகையான கும்பல், தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஒன்றிணைக்கப்படுகிறது.


ஒரு பொது இடத்தில் கூடும் இக்கும்பல், ஒரு பிரபலமான பாடலுக்கு நடனம் ஆடத்துவங்குகிறது. கேளிக்கை (entertainment), சமூக சாடல்-நையாண்டி (satire), கலை வெளிப்பாடு (artistic expression) போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவ்வகை நடனம் நிகழ்த்தப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் ஆர்பாட்டம், வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் விளம்பர யுத்தி போன்றவை இப்பிரிவில் அடையாளப்படுத்தப்படுவதில்லை. பொது விழிப்புணர்வுக்காக, முன்னேற்பாடுகளோடு நிகழ்த்தப்படும் நடனங்களும் இவ்வகையில் உண்டு.

முதல்முறையாக 2003-இல் மேன்ஹாட்டன் நகரத்தில், ‘Bill Wasik’ என்னும் ‘Harper's Magazine’ ஆசிரியரால் இது ஒன்றிணைக்கப்பட்டது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவதாக அதே ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ஒரு பல்பொருள் அங்காடியில் இருநூறு நபர்கள் ஒன்று கூடி, ஒத்திசைத்து கைத்தட்டி, ‘Flash mob’வகையை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஏப்ரல் 2006-இல் லண்டன் ஒரு தரையடி தொடர்வண்டி நிலையத்தில்(Underground station) ஒன்று கூடிய கும்பல் ஆடிய நடனம் உலக கவனத்தை கவர்ந்தது. அவரவர் கையடக்க இசைக்கருவிகளின் (portable music devices) மூலம் இசையை ஏற்படுத்திக்கொண்டு, நடனம் ஆடினார்கள். நான்காயிரம் நபர்களை உள்ளடக்கிய அந்த ஒன்றுகூடல், அந்நிலையத்தின் இயல்பு நிலையை பாதித்தது. ‘silent disco’ என்று பெயரிடப்பட்ட அந்த நடனம் தான், இன்று வரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ‘Flash mob’ நிகழ்வாக இருக்கிறது. அது மிக அதிக அளவில் இணையத்தின் மூலமும், தொலைபேசியின் மூலம் பரப்பப்பட்டது.

பல நாடுகளில் பிரபலம் அடைந்த இவ்வகை ஒன்றுகூடல், உலக முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. ஒருவித உற்சாக கவன ஈர்ப்புக்காக நிகழ்த்தப்படும் இவ்வகை நடன ஒன்றுகூடல், சில சமயங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. அருகிலிருக்கும் கடைகளுக்கு சேதம் ஏற்படுத்துவது, பொதுமக்களுக்கு தொந்தரவு தருவது என சில சங்கடமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. ஆகையால் சில நாடுகளில் இதை தடை செய்திருக்கிறார்கள். அதற்காகவே தனி சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நடனங்கள் ஒருவகையில் நம்முடைய ‘தெருமுனை நாடகம்’ போன்றவைதான். பரபரப்பான அன்றாட அலுவலில் உழலும் மனிதர்களிடையே திடிரென்று இசையையும் கதையையும் நுழைத்து கவணத்தைப் பெறுவது. அதனூடாக கருத்துக்களை பரப்புவது. அதன் நவீனவடிவமாக இதனைக் கொள்ளலாம்.

இவ்வடிவத்தை ‘why this Kolaveri Di’ பாடலை பிரபலப்படுத்த அத்திரைப்படக்குழு மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டது. சென்னை, மும்பை, அமெரிக்கா, லண்டன் என தொடங்கி பல நாடுகளில் ‘Flash mob’ நடனம், இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. youtube-இல் தேடிப்பாருங்கள். பல கானொளிகள் காணக்கிடைக்கும்.


இன்றைய இளைய தலைமுறை பல விதங்களில் தங்களை ஒன்றிணைக்கிறது. பல காரணங்களுக்கு ஒன்று கூடுகிறது. அப்படி ஒன்றுகூட பல வழிகள் அவர்களுக்கு இருக்கிறது. கொண்டாட்டம், மகிழ்ச்சி பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல், பல சமூக காரணங்களுக்காகவும் இன்றைய இளைய தலைமுறை ஒன்று கூடுகிறது என்பதை மறுக்க முடியாது.

இதைப்போன்று மற்றொரு வகை ஒன்றுகூடல் இருக்கிறது. அதை  ‘Smart mob’ என்று அழைக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன தொலைத்தொடர்பு முறைகளான இணையம், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், chat மற்றும் மின்கருவிகள் மூலம் சமுதாய, அரசியல் கருத்துக்களை, தகவல்களை பரிமாறிக்கொள்ளுவதும் அதன் அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுவதும் இக்குழுக்களின் பண்பு. இவை ஏனைய போராட்ட முறைகளைப்போல் இல்லாமல் அறிவுச்சார்ந்து, பயன் தரும் விதத்தில் இயங்குவதால் ‘புத்திசாலி கும்பல்’ என்று அழைக்கிறார்கள்.

‘Howard Rheingold’ என்ற எழுத்தாளர் தன் ‘Smart Mobs: The Next Social Revolution’என்ற புத்தகம் மூலம் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்துவரும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், மக்களுக்கான அதிகாரத்தை கொடுக்கும் என்பதற்கான அறிகுறியே ‘Smart mob’என்றார். 2002-இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ‘Smart mob’ கருத்தாக்கத்தை அவ்வாண்டின் ‘Year in Ideas’ என குறிப்பிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியில், தொலைத்தொடர்புத்துறை நீண்ட தூரம் வந்துவிட்டது. இவ்வளர்ச்சி ஆட்சியாளருக்கும் பணமுதலாளிகளுக்கும் எவ்வகையில் உதவுகிறதோ அதே வகையில், சாமானியனுக்கும் உதவுகிறது. மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள பல அறிவியல் சாதனங்கள் உதவுகின்றன. பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.

வியாபார ஊடகங்களை நம்பிக்கொண்டிருக்காமல் தகவல்களை மிக வேகமாக பரப்ப முடிகிறது. முகநூல், டுவிட்டர், மின்னஞ்சல், வலைப்பூ, இணையக்குழு, தொலைபேசி போன்றவை அதற்கான முன்னோடிகள். இன்றைய தலைமுறையின் எண்ணங்களை பரிமாறும் வாகனங்கள் இவைகள்தான். ஒருவகையில் மக்களுக்கான அதிகாரத்தை, அங்கீகாரத்தை பெற்றுத்தருகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த ஆண்டுகளில், உலகில் நடந்த பல போராட்டங்கள் இத்தகைய சாத்தியங்களை பயன்படுத்திதான் நடந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எகிப்தியர்களிலிருந்து தமிழன் வரை இணையத்தின் மூலம் பரிமாறிக்கொண்ட கருத்துகளும், அதன் அடிப்படையில் ஒன்றுகூடியதும் நாம் அறிந்தவைதான். இத்தகைய வசதிகளை சரியான பாதையில் கொண்டுச் செல்லுவதும் அதனை பயனுறு வகையில் வளர்த்தெடுப்பதும் வரும்காலத்திற்கு வலுசேர்க்கும். மக்களுக்கான ஊடகங்களை தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி இருக்கிறது. அதை சரியான விதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது நம் பொறுப்பு.

Friday, March 2, 2012

“I am the Greatest.” - நான் மிகச் சிறந்தவன்






“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக, நான் நிறைய செய்ய முடியும்.

கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  


ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.


இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றை தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையை படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கை ஒர் வரலாற்று நிகழ்வுப்போலவே ஆனது.

அந்த மனிதன்.. அரசன்அல்ல, தலைவன் அல்ல, புரட்சி வீரனும்மல்ல. உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன் தான்.  ஆனால் அவனின் வாழ்வாதாரப்போராட்டம் என்பது, அவனின் சுயவளர்ச்சியாக மட்டுமில்லை. அவனின் இன எழுச்சியாகவும் இருந்தது.

அது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.
 
ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த மனிதனின் வாழ்க்கையை பார்க்கவேண்டும்.

அந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது  ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.

பனிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியை திருடக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலிஸ்காரர் அவனுக்கு குத்துச்சண்டையை பயிற்றுவித்தார்.  உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காக கலந்துக்கொண்டான்.  தொடர்ந்து வெற்றிதான்.  அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக'  இருந்தவன் ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உறுமாறுகிறான்.

1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துக்கொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ்.
அவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே அது இதுதான் போல.

அதேப்போல மற்றொறு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்பித்தான் அவன்.

“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்

“I won’t be who you want me to be!” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்லுகிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.



இப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை.

எதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருகுலைப்பதும் அவனுக்கு கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்?' என்று 'சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். மேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' ("float like a butterfly and sting like a bee,") என்றான்.

இப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான்.

அதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.



1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முதன் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனின் வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன் தான்.

தன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கிகாரமாக, மாற்ற முயன்றான்.  ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனின் வெளிப்பாடாக இருந்தது.

தான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான்.  அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா?.. அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனின் செயல்பாடுகள் இருந்தன.

ஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிருபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா?



தன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரை கலைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.

ஆம் தோழர்களே! உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி' தான் அவர். அவரின் முந்திய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது.  தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

Ernie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார்.  அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதற்கு தண்டிக்க நினைத்தார்.

அந்த போட்டி முடியும் முன்பாக "என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும்வரை, ஒவ்வொரு குத்தின் போதும் "What's my name, Uncle Tom ... What's my name?" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

டெரில் மிக மூர்க்கமாக தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனை தாக்கினார் அலி என்கிறார்கள்.



பெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி? இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த அவரின் இனத்தின் சார்பாக விழுந்த அடி அது.  இந்த சுதந்திர பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.



அது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார்.

“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்காங்கிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.
"இல்லை, நான் போகப்போவதில்லை, 10,000 மைல் தாண்டிபோய், மக்களை கொன்று, அவர்களின் உடைமைகளை கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தொடர்வதற்கு உதவப்போவதில்லை"

"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுப்போடச்சொல்லுகிறார்கள். இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது"

இவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார்.  ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.

இந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்திய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார்.  மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி அலியின் முன் வந்து "கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா? அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்" என்றார்.

மறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது. 

தன் சுதந்திரத்திற்கான, அங்கிகாரத்திற்காக, போராடி பெற்ற பட்டத்தையும்  தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார்.  ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது.
அலி மக்களோடுப் பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடிச்செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.



பிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார்.  ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி "The Rumble In The Jungle" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்பு சாம்பியன். அவரை வெல்லுவது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லியன.

அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம்.  எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்க கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது.

அப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாக புரியும்.  

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக, நான் நிறைய செய்ய முடியும்.


கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  


ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.


அச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுத்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துக்கொண்டு அடிகளை தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார்.

ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார்.

இதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி "The Rope-A-Dope" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings'(மன்னர்களா நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர்(1996) விருதையும் பெற்றது.

முன்னோட்டம்..


முழுப்படம்..

1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார்.  அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.

அதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இனமக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார்.  மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்க பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-இருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரை சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைதாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு.
1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவுத்தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு.  பின்பு 1996-இல் அட்லாண்ட ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்று தங்கப்பதக்கம் இவருக்கு தரப்பட்டது.



இவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அலி(Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்'  முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.

இப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது.


ALI - Trailer - HQ - (2001)

அற்புதமான படம். மிகுந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்லுகிறது. 

ஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுப்போக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னை பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன்.  ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையான நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என்வரையில் நல்லபடமாக கருதுகிறேன்.

சிலப்படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாட செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சிலப்படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..!

இப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது.  அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது.

இந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாலனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று.  மிக கடினமான கட்டுமானத்தை கொண்டது இப்படம்.  இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னனியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 

"நானே மிகச் சிறந்தவன், நானே அறிந்துக்கொள்வதற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்" -முகமத் அலி

"நானே மிகச் சிறந்தவன்" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.

தன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை.  தன் வெற்றி தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொலைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும்,  'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.

அலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் "I shook up the world!" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை மேன்மையும், நன்மைம் பிரகாசிக்க தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை.

அலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான்.  நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.




"மற்றவர்களுக்கு சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை" -முகமத் அலி       


குறிப்பு: இது மீள்பதிவு – முகமது அலியைப்பற்றி மீண்டும் படிக்கவும் 'When We Were Kings' படத்தை பார்க்கவும் முடிந்தது. அதன் விளைவே இது. அம்மனிதனைப் பற்றி பேசிகொண்டே இருக்கலாம் போல உள்ளது. இவ்வுலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதன் அவன் தான்.

 'When We Were Kings' படத்தை உடனடியாக பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். வாழ்நாளில் தவரவிட்டுவிடக்கூடாத படம். இதுவரை நான் பார்த்த திரைப்படங்களிலேயே மிகச்சிறந்தப் படம். படத்தின் முடிவிற்குள்ளாகவே ’அலி’ நம்மிடையே மாபெரும் மனிதனாக உருவமெடுப்பதை உணரமுடியும்.

Sunday, February 26, 2012

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2:

இக்கட்டுரை,  'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில் - என்ற கட்டுரையின் தொடர்ச்சி. அதை படித்துவிட்டு தொடரவும்.

ஒரு டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக அதன்..
அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)
ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)
இ. ரெக்கார்டிங் (Recording)
ஈ. வியு பைண்டர் (View Finder)

போன்றவைகள் கருதப்படுகின்றன என்பதையும், அதில் ‘லென்ஸ் மௌண்டு’ பற்றி முந்திய கட்டுரையில் பார்த்துவிட்டோம் என்பதை நீங்கள் படித்துவிட்டுதான் இங்கே வந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை தொடர்கிறேன்.. 

ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor):
டிஜிட்டல் கேமராக்களில் மிக ஆதார பாகம், அதன் சென்சார் தான். சென்சாரின் தரத்தைப் பொருத்தே டிஜிட்டல் கேமராக்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. 'Single CCD', '3 CCD' கேமராக்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ‘CCD’ மூலம் ஒளியை உள்வாங்கி பதிவுசெய்வது என்பது 'Single CCD' கேமரா எனவும், மூன்று ஆதார வண்ணங்களுக்கு ஏற்ப, மூன்று தனித்தனியான 'CCD'-க்கள் மூலமாக ஒளியை பிரித்து உள்வாங்கி, பதிவுசெய்வது '3CCD' கேமரா என, வகைப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். பெரும்பாலான ‘தொழில்முறை’(professional) கேமராக்கள் '3CCD' வகையைச் சார்ந்தவைகள் தான்.


'CCD' என்பது ஒரு வகையான சென்சார் என்றால், ‘CMOS’ என்பது மற்றொரு வகை சென்சார். இவைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தையும் தொழில்நுட்ப செயல்பாடுகளையும் அறிந்துக்கொள்ள, தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். விரைவில் அதைப்பற்றி எழுதுகிறேன். இங்கே நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ‘CMOS’ என்று ஒரு சென்சாரும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதும், அந்த ‘CMOS’ சென்சார்தான் ‘ALEXA’ கேமராவில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தான்.

‘ALEXA’ கேமராவில் ‘35mm format ALEV III CMOS’ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. முழு சென்சாரின் அளவு (Sensor Size) 3392 x 2200 Pixels என்றாலும், '16:9'Aspect Ratio-வில் நமக்கு பயன்படுவது (Image Out) 2880 x 1620 Pixels தான்.

(The ALEV III sensor has a horizontal pixel count of 3.5K resulting in true 2K
resolution. It covers the full Super-35 format and it provides a latitude of 14 stops and a base sensitivity of 800 ASA)

இந்த சென்சார் 800ASA திறன் கொண்டது. ‘14-stops latitude’ கொண்டது. இந்த ‘latitude’ மிக முக்கியமானது. ஃபிலிமைப் போல அதிக ‘latitude’ திறன் என்பது ஒரு டிஜிட்டல் கேமராவின் மதிப்பைக் கூட்டும். பொதுவாக டிஜிட்டல் கேமராக்கள் ‘latitude’ திறனில் தான் அடிவாங்கும். ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்கும் இருக்கும் வித்தியாசங்களில், இந்த ‘latitude’-தான் மிக முக்கியமானது. சில டிஜிட்டல் கேமராக்கள் ‘3-stops’ அல்லது ‘5-stops latitude’ திறன் தான் கொண்டிருக்கும்.

800ASA என்பதும் ‘14stops latitude’ என்பதும் ‘ALEXA’ கேமராவை திறன் வாய்ந்ததாகக் கருத செய்கிறது. 800ASA-வினால் குறைந்த வெளிச்சத்திலும் இக்கேமராவைப் பயன்படுத்த முடிகிறது. மேலும் உட்புற (Indoor) படபிடிப்பு மற்றும் இரவு நேரக்காட்சிகளில் குறைந்த அளவு ஒளியமைப்பே போதுமானதாக இருக்கிறது. குறைந்த அளவு ஒளியமைப்பு என்று நான் குறிப்பிடுவது ‘ஒளியின் அளவைத்தானே’(quantity of Light)தவிர, ஒளியமைப்பின் முறையை (Way of Light - Lighting Pattern) அல்ல .



குறிப்பாக உட்புற படபிடிப்பின் போது பெரிய விளக்குகளுக்கு (4K PAR) பதிலாக, சிறிய விளக்கை (4Bank/10 Bank) பயன்படுத்த முடிகிறது. இப்படி சிறிய விளக்குகளை பயன்படுத்துவது செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். ‘ஒண்டிப்புலி’ படத்தில் மிக குறைந்த ஒளியைப் பயன்படுத்தி சில காட்சிகள் எடுத்தேன். ஒரு காட்சியில் சிறுவிளக்குகளையும் கொஞ்சம் ‘fill light’-யும் பயன்படுத்தி பதிவுசெய்திருக்கிறேன்.

இரவு..

சிறுவிளக்குகள் + Photoflood Light

தீ..மட்டுமே

‘ALEXA’ கேமராவில் ‘14stops latitude’ திறன் இருப்பதனால் வெளிப்புற படப்பிடிப்பும் சுலபமானதாக இருக்கிறது. ஃபிலிமைப் பயன்படுத்துவதைப் போலவே ‘ALEXA’ கேமராவையும் பயன்படுத்த முடிகிறது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காட்சியை ஃபிலிம் கேமரா மற்றும் ‘ALEXA’ கேமராவையும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் படம்பிடித்து பார்த்தால், இரண்டு கேமராக்களும் பதிவுசெய்த பிம்பங்களில் வித்தியாசம் இருக்கலாம்(ஒருவேளை) என்றுதான் நினைக்கிறேன். அதுவும் ‘latitude’ சார்ந்து பெரிதாக வித்தியாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் மிக மிக குறைவாகவே இருக்கும். அது ‘half stop’ அல்லது ‘one stop’-ஆகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தனியாக ‘Camera Test’ எடுத்துதான் அதைப் பார்க்கவேண்டும்.


இங்கே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்..‘ALEXA’ கேமராவை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒரு ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்துவது போலவே, வெளிப்புறப் படப்பிடிப்புகளில்  பயன்படுத்தலாம்/பயன்படுத்த முடிகிறது என்பதைத்தான். மேலும் ‘SHADOWS’-உம்‘HIGHLIGHTS’-உம் ஃபிலிமைப் போலவே பதிவுசெய்கிறது. இதனால் பிம்பத்தின் ‘Contrast Ratio’ பாதிக்கப்படாமல் இருக்கிறது.

'35mm size' சென்சார் என்பதனால் ‘SHALLOW DEPTH OF FIELD’ ஆனது 35mm ஃபிலிமில் கிடைப்பதைப்போன்றே கிடைக்கிறது.

மொத்தத்தில் Alexa-வின் ‘இமேஜ் சென்சார்’, நமக்கு போதுமானதாக இருக்கிறது என்பது உண்மை. ஃபிலிமுக்கு இணையான(ஏறக்குறைய) தரத்தில், பிம்பத்தை பதிவுசெய்கிறது என்பது என் அனுபவம்.



மற்றவை அடுத்தக்கட்டுரையில் தொடரும்...

LinkWithin

Related Posts with Thumbnails

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More