பெங்களூரில் சட்டம் படிக்கப்போன போதும், ஒளிப்பதிவின் மீதான ஆர்வத்தின் காரணமாக, புகைப்படத்துறையின் நுட்பங்களையும், கேமராக்களைப்பற்றி அறிந்துக்கொள்ளவும் ‘கேமரா பழுதுப் பார்க்கும்’ நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன் என்று முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அங்கே பணி செய்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது, அதைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் குறிப்பிட்ட ஒரு தகவலை, சம்பவத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
அதன் தலைப்பு… Connecting Dot (புள்ளிகளை இணைப்பது அல்லது இணைக்கப்படும் புள்ளிகள்)
ஸ்டீவ் ஜாப் ஆற்றிய ஒரு உரையில் இதனைக் குறிப்பிடுகிறார். தன் வாழ்வில், ஏன் எதற்கு என்று தெரியாமலையே, அவர் வைத்த புள்ளிகள், பிற்காலங்கள் இணைக்கப்பட்ட போது, அதற்கு ஒரு வடிவம் கிடைத்ததைப்பற்றியப் பேச்சு அது. அதாவது, அவருடைய பள்ளிக்காலத்தில், படிப்பு சரியாக வராமல் போனபோதும், பொழுதைக் கழிக்க அவர் சென்ற இடம், அப்போது அப்பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘calligraphy’ வகுப்பு.
‘calligraphy’ என்பது, எழுத்தை அழகாக எழுதுவதைப்பற்றிய ஒரு கலை. இப்போது வகை வகையாக ‘Font’-களைப் பயன்படுத்துகிறோம் அல்லவா… அதற்கெல்லாம் முன்னோடி. வெவ்வேறு வடிவத்தில் அழகுற எழுதுவதைப்பற்றிய படிப்பு அது. அப்போது, அவருக்கு அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் அவ்வகுப்புக்கு சென்றிருக்கிறார். ஆனால், அது எதற்கு பயன்படப்போகிறது என்றெல்லாம் அவருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை. வெறும் ஆர்வம் காரணமாக கற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான்.
பிற்காலத்தில், Mac கணினியை வடிவமைத்தபோது, அந்தக் கணினியில் ஒரு மென்பொருளை(Software) கொண்டுவர விரும்புகிறார். அதுநாள் வரை, கணினி என்பது கணித சமன்பாடுகள், கணக்கிடுதல், அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு என்றுதான் நினைத்தார்கள். ஸ்டீவ் ஜாப் அதனை மாற்ற முயன்றார். அதன்படி, தன்னுடைய கணினியில், வகை வகையான Fonts-களைக்கொண்டு கடிதத்தை, போஸ்டரை, பிரசன்டேஷன்களை வடிவகைக்கத் தேவையான ஒரு மென்பொருள் இருக்கவேண்டும் என்றார். அதை உடன் பணிபுரிந்தவர்கள் முதலில் ஏற்காதபோதும், பிறகு MacPaint என்ற அந்த மென்பொருள் முதல் மேக் கணினியில் அமைக்கப்பட்டது. அதுவே இன்று நாம் பயன்படுத்தும் Photoshop, Corel Draw, Illustrator போன்ற வடிவமைப்புக்கு பயன்படும் மென்பொருள்களின் முன்னோடி.
இதனைக்குறித்துதான், ஸ்டீவ் ஜாப் ‘Connecting Dot’ என்று குறிப்பிடுகிறார். ஏன் எதற்கு என்று தெரியாமலையே நாம் கற்றுக்கொள்ளும் ஒரு ‘கலை’ அல்லது ‘நுட்பம்’ பிற்காலத்தில், மிகச்சரியான நேரத்தில் நமக்கு கைக்கொடுத்து, அப்போதைய தேவையை முழுமையாக்கும் அல்லது நாம் முன்னோக்கி நகர உதவிகரமாக இருக்கும். இப்படி வாழ்வில் பல்வேறு ‘புள்ளிகள்’ விரவிக்கிடக்கிறது, அவை ஒருநாள் இணைக்கப்படும், முழுமைப்பெறும், அதனால் உற்சாகமாக முன்னோக்கி நடைப்போடுகள் என்பதுதான் அவர் சொல்ல வரும் கருத்து.
இது அப்படியே என்வாழ்வில் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு புள்ளிகள் இணைந்து, அழகிய வடிவங்களாக, ஓவியங்களாக மலர்ந்த கணங்கள் பலவுண்டு. இப்போதைக்கு ஒன்றை சொல்கிறேன். அதுதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட சம்பவம்.
நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒரு கணினி இருந்தது. அது 1997-ஆம் ஆண்டு. அந்த கணியில் Window 95 இருந்ததாக நியாபகம். அந்நிறுவனத்தின் தலைவரும், முக்கியமான சிலரும் அதனை பயன்படுத்துவார்கள். வரவு செலவு கணக்குகள், கேமராவை பழுது நீக்குதல் சம்பந்தமான தகவல்கள், கேமராவை கணியில் இணைந்து பழுது கண்டுபிடித்தல் போன்ற வேலைகளுக்காக அதனைப் பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கடிதம், அட்டவனைப் போன்ற அலுவலகப் பணிகளையும் அதில் செய்வார்கள். அப்படி ஒருநாள் விஜய் அவர்கள் ஏதோ ஒரு கடிதத்தை டைப் செய்துக்கொண்டிருந்தார். அவருக்கும் தட்டச்சு(typewriting) செய்ய தெரிந்திருக்கவில்லை, அதனால் மெதுவாக ஒரே விரலை மட்டும் பயன்படுத்தி டைப் அடித்துக்கொண்டிருந்தார்.(இப்போதும் கூட நம்மில் பலரும் அப்படித்தான் டைப் அடிக்கிறோம் அல்லவா..!?) அருகில் நின்றிருந்த நான், “நான் வேண்டுமானால் அடித்துத் தரட்டுமா?” என்றேன். விஜய் என்னை திருப்பிப்பார்த்து, “உனக்கு கம்பியூட்டர் தெரியுமா?” என்றார். நான் இல்லை என்றேன், “ஆனால் தட்டச்சு செய்ய தெரியும்” என்றேன். அவர் ஒருகணம் என்னை ஆச்சரியமாக பார்த்தார்.
நான் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது, அப்போது எங்கள் பள்ளி அமைந்திருந்த ஊரில், ஒரு தட்டச்சு வகுப்புக்கூடம் துவங்கப்பட்டது. ஒரு ஆர்வத்தில் அதில் கலந்துக்கொண்டேன். நான் படித்தது, 8 கிலோமீட்டர் பேருந்தில் பயணித்துச் செல்ல வேண்டிய அடுத்தவூர். பள்ளிக்குப்பிறகு மாலையில், ஒருமணிநேரம் அங்கே சென்று தட்டச்சு கற்றுக்கொண்டு, இரவு தாமதமாக வீடு திரும்ப வேண்டியதிருந்தது. சில மாதங்கள் தாம், பிறகு நேரமின்மையால் நின்றுபோனது. பிறகு கல்லூரி படிப்பிற்கு பெங்களூர் வந்தபோது, விடுமுறையில் ஒரு மாதம் ஊருக்குப் போனபோது, மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்பட்டது. சும்மாதானே இருக்கிறோம் என்று தட்டச்சு பயில சென்றேன். அப்படி சென்று typewriting Lower, Higher முடித்திருந்தேன். தேர்வுக்குச் சென்றேன். ஆனால் சான்றிதழ் பெறவில்லை. அதன் நம்பிக்கையில்தான் விஜய் இடம் அப்படி சொன்னேன்.
அவரால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. என்னை நம்பி, கணினியைக் கொடுப்பதா? வேண்டாமா? என்ற குழப்பம் அவர் முகத்தில் தெரிந்தது. மறுத்துவிட்டார். காரணம், இப்போது போல அல்ல, அப்போதெல்லாம் கணினி என்பது மிகப்பெரிய விஷயம். பரவலாக பயன்பாட்டிற்கு வராத, ஆரம்ப காலங்கள் அது. எனக்கு தெரிந்து பெங்களூர் போன்ற நகரங்களில் கூட, யார் வீட்டிலும் கணினி அப்போது வந்து சேர்ந்திருக்கவில்லை. அதனால், கணினியைத் தொட அவர் என்னை அனுமதிக்கவில்லை. அவரே, மெதுவாக முயன்று தட்டச்சு செய்துக்கொண்டிருந்தார்.
அடுத்தநாள், அதேப்போல அவர் ஏதோ ஒரு கடிதத்தை தட்டச்சு செய்துக்கொண்டிருந்தார். நான் அருகில் போய் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் தட்டச்சு செய்தவர், என்னிடம் திரும்பி “நீ அடிக்கிறியா?” என்றார். எனக்கு ஆச்சரியம். உற்சாகத்தோடு சரி என்றேன், என்றாலும் ஆச்சமாக இருந்தது. கணினியின் முன்பிருந்து நாற்காலியில் இருந்து எழுந்து, என்னை அமரச்சொன்னார். பயத்தோடும், ஆர்வத்தோடு அமர்ந்தேன்.
அன்று விஜய் என்னை கணினியில் தட்டச்சு செய்ய அனுமதித்தார், கணினி குறித்த சில அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்தார். அதுதான் பிற்காலத்தில் கணினி குறித்த பல்வேறு நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், அப்படி கற்றுக்கொண்டவை ஒளிப்பதிவாளனாக எனக்கு இன்றும் உதவுவதைப்பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக