பொதுவாக எவ்வித தொழிநுட்பத்திலும், service sector-இலும், குறிப்பாக Software, UI/UX பயன்பாடுகளில் இவ்வார்த்தைகளை நாம் கேட்டு இருக்க முடியும்… ‘Think About Users, Keep It Simple, User-Friendliness and Customer Satisfaction’.
இதற்கு பொருள், உன்னுடைய ‘பயன்பாட்டாளனை திருப்திப்படுத்து’ என்பதுதான். என்னைக்கேட்டால், அது எல்லாத்துறைக்கும் பொருந்தும் என்றுதான் சொல்வேன். நீங்கள் எத்தனை உயர்ந்த ஒன்றைப் பற்றிப்பேசினாலும் சரி, படைத்தாளும் சரி, அது அவனுக்கு புரியவேண்டும், பயன்படவேண்டும். திரைப்படங்களுக்கும் இது பொருந்தும், பொருந்தவேண்டும் என்பதுதான் என் விருப்பம். காரணம் எந்த படைப்பிற்கும் அடிப்படை ‘நுகர்வோர்’ தானே..!?
ஏன் ஒரு பார்வையாளன், திரைப்படங்களை புரிந்துக்கொள்ள (ஓரளவிற்கு மேல்) எவ்வித சிரத்தையும் எடுப்பதில்லை என்றால், குறிப்பிட்ட திரைப்படத்தை அவன் பார்க்க நினைத்த, அவனுடைய ஆதாரமான நோக்கத்திற்கு எதிராக இருப்பதுதான். அது என்ன ஆதார நோக்கம்? வேறென்ன ‘சுவாரசியமாக’ பொழுதை கழிப்பதுதான்.
அது வரலாறாக, வாழ்வியலாக, புனையப்பட்ட கதையாக என்று எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதன் ஆதார நோக்கம் சுவாரசியமாக இருப்பது. அப்போதுதான் பார்வையாளன் பின் தொடர முடியும். அது இல்லாத போது, அப்படைப்பிலிருந்து பார்வையாளன் விலகிவிடுகிறான். அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இருப்பதில்லை.
நீங்கள் முனைவர் பட்டம், மாஸ்டர் டிகிரி என எதைவேண்டுமானாலும் முயலுங்கள், வாங்கி இருங்கள்… உங்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள், படைப்புகள், கண்டுபிடிப்புகள், சராசரியாக எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் அத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காவது புரியவேண்டும், பயன்பட வேண்டும்.
சரி, விடுங்கள். நான் சொல்லவருவது என்னவென்றால் ‘புரிகிற மாதிரி படம் எடுங்கள், புரிகிற மாதிரி எழுதுங்கள், புரிகிற மாதிரி பேசுங்கள், பயன்படுகிற மாதிரி தயாரிங்கள்’ அவ்வளவுதான்.
கூழாங்கல் திரைப்படத்திற்கு வருவோம்…
இது ஒரு கலைப்படம். அதாவது வாழ்வியலைப் பேசும் படம். ஒரு வரண்ட பூமியின் மனிதர்களை, அவர்களின் குணநலன்களை, அவர்களின் துயரத்தை எதார்த்தம் குலையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறப்படம்.
கோபம் கொண்ட தந்தை, எங்கே தன் அம்மாவை கொன்றுவிடுவாரோ என்று கலங்கும் ஒரு சிறுவனின் கதை. தன் தந்தை, அம்மாவை சந்தித்து விடுவதை தம்மால் முடிந்தவரை தடுக்க நினைக்கிறான். சந்தித்துவிட்டால், அம்மாவை கொன்றுவிடுவார் என்ற பயம். இரு ஊர்களை இணைக்கும், ஒரு பாதையும், அதன் வரண்ட பூமியும்தான் கதை களம். அந்த நடை பயணத்தில் நிகழும் அப்பாவிற்கும் மகனிற்கு இடையேயான சம்பவங்களே கதை.
இதை கேட்கும்போது, உங்களுக்குள் உண்டாகும் கற்பனையே, இது ஒரு சுவாரசியமான திரைப்படமாவதற்கு ஏற்ற களம் என்று தோன்றுமே…! ஒரு வெகுசன திரைப்படத்திற்கான ‘கதைக் கரு’ இது. இதை வைத்துக்கொண்டு மிக சுவாரசியமான ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும். ஆனால் இதன் இயக்குநர், ஒரு கலைப்படத்தை எடுத்திருக்கிறார்.
ஆம். இது சுவாரசியமான படம்தான். ஆனால் யாருக்கு?
நீங்கள் கலைப்படங்களை பார்த்து பழகியவராக இருக்க வேண்டும். கொஞ்சம்… கொஞ்சம் என்ன கொஞ்சம்… கூடதலாகவே ஒரு திரைப்படத்தை புரிந்துக்கொள்ள மெனக்கெடுபவராக, சிரத்தை உடைபவராக இருக்க வேண்டும்.
காரணம், இத்திரைப்படத்தில் உங்களை மகிழ்விக்கும் பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, பன்ச் டயலாக் இல்லை அவ்வளவு ஏன்… கதாநாயகி கூட இல்லை.
ஆனால்…
அற்புதமான நடிப்பு இருக்கிறது
அற்புதமான திரைப்படமாக்கம் இருக்கிறது
கடின உழைப்பு இருக்கிறது
தேர்ந்த திரைமொழி இருக்கிறது
வரண்ட பூமியின் மண்மனம் இருக்கிறது
அரசியல் இருக்கிறது
மனித மனம் இருக்கிறது
மனிதத்துயர் இருக்கிறது
வாழ்வு இருக்கிறது
இதுபோதும் என்றால், இது உங்களுக்கான திரைப்படம். நமக்கான திரைப்படம். மக்களுக்கான திரைப்படம்.
படம் பார்த்துவிட்டு வாருங்கள்… மேலும் பேசுவோம்.
பின்குறிப்பு: SonyLiv OTT தளத்தில் இருக்கிறது.
#koozhangalmovie #koozhangalthemovie #tamilcinema #tamil #cinema #movies #vijayarmstrong #கூழாங்கல் #கூழாங்கல்திரைப்படம்
கருத்துகள்
கருத்துரையிடுக