Friday, July 22, 2011

காட்ஃபாதர் - கொண்டாட்டம் மற்றும் மரணம்
அண்மையில் உலகசினிமா ரசிகனின் 'காட்பாதர்- 1972[ஆங்கிலம்] வன்முறையைக் கொண்டாடுவோம்'  என்றப் பதிவால் தூண்டப்பட்டு, மூன்று 'காட்ஃபாதர்' படங்களையும் மீண்டும் ஒருசேரப் பார்த்தேன். அது ஏற்படுத்திய தாக்கமும், அனுபவமும் அதிலிருக்கும் ஒழுக்கமும், செய்நேர்த்தியும் என்னை ஒரு தொழில்நுட்பாளனாக பிரமிக்க வைத்தன.

இதன் இயக்குனர் 'ஃபிரான்சிஸ் ஃபோர்டு கொப்பலா'. அந்த மாபெரும் கலைஞனின் ஆற்றல் பல ஆண்டுகள் கடந்தும் புதுமையாக இருக்கிறது.


கொப்பலா, அண்மையில் கொடுத்த நேர்காணலின் தமிழாக்கத்தைக் காண, 'வார்த்தைகள்' வலைப்பூவில் 'கொப்பலாவின் பதில்கள்' பதிவுகளைப் படியுங்கள்.

அந்தப்படத்தைப் பற்றிய சில தகவல்களை, உங்களோடு பகிர்ந்துக்கொள்ள இந்தப் பதிவு.

கொண்டாட்டம் மற்றும் மரணம்:

காட்ஃபாதர் - மூன்று பாகப் படங்களும், தமக்குள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. மூன்று படங்களும் ஏதேனும் ஒரு குடும்ப விழாவில் (கொண்டாட்டத்தில்) துவங்கி, குடும்ப உறுப்பினர் மரணத்தில் முடிகின்றது.


முதல் பாகம் 'விட்டோ கோர்லியானின்' (மார்லன் பிராண்டோ - காட்ஃபாதர்) மகள் 'Connie'க்கும் 'Carlo Rizzi'-க்குமான திருமணக் கொண்டாட்டத்தில் துவங்குகிறது. 'காட்ஃபாதரின்' இளைய மகனான 'மைக்கேல்' (அல்பாச்சினோ) இந்த மாப்பிள்ளை 'Carlo Rizzi' -ஐ கொல்லுவதில் படம் முடிகிறது.


இரண்டாம் பாகம் 'மைக்கேலின்' மகன் 'ஆண்டனியின்' 'First Communion' கொண்டாட்டத்தில் துவங்குகிறது . மைக்கேலின் சகோதரன் 'Fredo'வைக் கொல்லுவதில் முடிகிறது.


மூன்றாம் பாகம் மைக்கேலின் பெயர் சூட்டு (Commander of the Order of St. Sebastian) விழாவில் துவங்கி அவரின் மகள் மற்றும் அவரின் மரணத்தில் முடிகிறது.

இந்த மூன்று பாகங்களிலும் வரும் விழாக்களும், மரணங்களும் பல செய்திகளைச் சொல்லுகின்றன. இவை ஒருவித குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதமுடிகிறது.

மூன்று பாகங்களிலும் வரும் ஆரம்பக் கொண்டாட்டங்கள் மிக நீண்ட நேரக் காட்சிகளாக நிகழ்கின்றன. இருபது முதல் முப்பது நிமிடக் காட்சியாக அது இருக்கின்றது. இந்தக் காட்சியின் ஊடாக அப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார நோக்கம் அல்லது பிரச்சனையை இயக்குனர் நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்.

மூன்று பாகங்களின் இறுதி காட்சிகளும் மரணங்களில், அதாவது அக்குடும்பம் மற்றும் 'காட்ஃபாதர் சாம்ராஜியத்தின்' எதிரிகளைக் கொல்வதில் முடிகின்றன.

மூன்று பாகமும் துரோகம் மற்றும் அதற்கான மரணதண்டனை, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தின் துவக்கம் என்ற செய்தியோடு முடிகிறது.


கலாச்சாரம், அரசியல் மற்றும் நிகழ்வுகள்:

மூன்று பாகங்களிலும் அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள், போகிறபோக்கில் கதையோட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
 இரண்டாம் உலகப்போர், இத்தாலிய அமெரிக்கர்களின் விழாக்கள், லாஸ் வேகாஸ், கியூபாவில் காஸ்ட்ரோவின் போராட்டம், அமெரிக்க அரசியலில் மாஃபியாவின் ஆதிக்கம், இத்தாலிய கட்டுமான நிறுவனமான 'Immobiliare'-'வாட்டிக்கனுக்கு' அதிலிருக்கும் தொடர்பு, இத்தாலியக் கலாச்சாரம், வாழ்க்கை முறை, அதன் வரலாற்றுப் பின்புலம் மற்றும் சிசிலியின் அழகு என்று அந்தக் கதையின் ஆதார கதாப்பாத்திரங்களான காட்ஃபாதர் குடும்பத்தாரின் பூர்வீக தேசத்தின் அடையாளங்களைச் சிறப்பாகவும் முழுமையாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். மேலும் அவரின் பூர்விகமும் இத்தாலிதான்.


நடிகர்கள்:

தன் மகன் மற்றும் மகளை இந்தப்படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் கொப்பலா. அவரின் மகள் 'சோபியா கொப்பலா' மூன்றாம் பாகத்தில் மரியாவாக (மைக்கேலின் மகள்) நடித்திருக்கிறார். பிற்காலத்தில் இவர் திரைப்பட இயக்குனராகி ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.
சோபியா கொப்பலா
இப்படத்தில் வசனங்களற்று, உடல் மொழியில் பல கதாப்பாத்திரங்கள் பேசிக் கொள்வது மிகச் சிறப்பான ஒன்று. அல்பாச்சினோவின் நடிப்புக்கு தீனிப் போட்ட படங்கள் இவை. முதல் இரண்டு பாகங்களிலிருந்து மூன்றாம் பாகத்தில் அல்பாச்சினோவின் நடிப்பு மாறுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.

முதல் பாகம் 1972லும் இரண்டாம் பாகம் 1974லும் மூன்றாம் பாகம் 1990லும் எடுக்கப்பட்டன. முதல் பாகம் 1945 காலவாக்கில் நடக்கும் கதையாகவும், இரண்டாம் பாகம் 1958-59 காலகட்டத்தில் நிகழும் கதையாகவும், மூன்றாம் பாகம் 1979யில் நடக்கும் கதையாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சில நடிகர்களைத் தவிர முக்கிய கதாப்பாத்திர நடிகர்கள் மூன்று பாகங்களிலும் நடித்திருக்கிறார்கள். இதில் மூன்றாம் பாகம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னால் எடுத்திருப்பதினால் அதில் நடித்த நடிகர்களின் தோற்ற மாறுபாடு கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது.


படபிடிப்பு: 

- முதல் பாகம் மொத்தம் வெறும் 77 நாட்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் உத்தேசித்தது 83 நாட்கள். ஆனால் முன்பாகவே முடித்து விட்டிருக்கிறார்கள். (நம்ம ஊரில் சராசரியாக 60-80 நாட்கள். சில இயக்குனர்கள் 230-250 நாட்கள் வேண்டும் என்கிறார்கள்)

-கொல்லும் காட்சிகளில் பல நுண்ணிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சுடும் போதோ அல்லது கத்தியால் குத்தும் போதோ வெளிப்படும் இரத்தத் தெறிப்புகளை அற்புதமாகப் படமாக்கிருக்கிறார்கள்.

-முதல் பாகத்தின் துவக்கக் காட்சியில் ஒரு நடிகனின் முகக் குளோசப்பாக துவங்கி 'Zoom back' வந்து காட்ஃபாதரை காட்டும் ஒரு 'shot' படமாகப்பட்டிருக்கிறது. இந்த ஷாட் மூன்று நிமிடம் நிகழ்கிறது. இந்த ஷாட்டை எடுக்க கணினியில் இணைக்கப்பட்ட 'zoom lens' பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொப்பலா

விருதுகள்:

முதல் பாகம்: சிறந்தப் படம்,திரைக்கதை மற்றும் நடிகர் (மார்லன் பிராண்டோ) என மூன்று ஆஸ்கார் விருதுகளையும், ஐந்து 'கோல்டன் குளோப்' மற்றும் ஒரு 'கிராமி' விருதும் பெற்றிருக்கிறது.

இரண்டாம் பாகம்: சிறந்தத் துணை நடிகர் (ராபர்ட் டி நீரோ), சிறந்தக் கலை இயக்கம், சிறந்த இயக்குனர், சிறந்த இசைக் கோர்ப்பு, சிறந்த படம் மற்றும் சிறந்தத் திரைக்கதை என ஆறு ஆஸ்கர் விருதும், ஒரு 'BAFTA' சிறந்த நடிகர் (அல்பாச்சினோ) விருதும் பெற்றிருக்கிறது.

மூன்றாம் பாகம்: ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டும் ஒரு விருதையும் பெறவில்லை. இன்றுவரை இந்த ஒரு படம் மட்டும்தான், இரண்டு பாகங்களுக்கு சிறந்த படம் என விருதைப் பெற்றப்படமாகும்.

இரண்டாம் பாகம் வெளியான அதே ஆண்டு (1974) கொப்பலாவின் மற்றொரு படமும் (The Conversation) வெளியாகியது. இரண்டு படங்களும் சிறந்தப் படங்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. இப்படி ஒரே ஆண்டில் இரண்டு படங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களில் கொப்பலோ இரண்டாமானவர்.

முதல் இயக்குனர்: 1941-யில்'ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்' (Foreign Correspondent and Rebecca)
மற்ற இயக்குனர்கள்: 1977-யில்  'Herbert Ross' ( The Goodbye Girl and The Turning Point )
2000யில் - ' Steven Soderbergh' (Erin Brockovich and Traffic)


................


The Godfather Saga (1977) என்றப் பெயரில் தொலைக்காட்சி தொடராக இதன் இரண்டு பாகங்கள் வந்திருக்கின்றன. திரைப்படமாக வெளியிட்ட போது இடம் பெறாத காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டன. ஒரு மூன்று மணிநேரப் பாகமாகவும், மூன்று, இரண்டு மணி நேரப் பாகமாகவும் நான்கு நாட்களில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. மொத்தம் 434 நிமிடங்கள்.

The Godfather 1901-1959: The Complete Epic (1981) என்றப் பெயரில் 'VHS' விடியோவாக இரண்டுபாகமும் வெளிவந்தது. மொத்தம் 386 நிமிடங்கள்.

 The Godfather Trilogy: 1901–1980 (1992) என்ற பெயரில் இதன் மூன்று பாகங்களும் இணைத்தும் வெளியிடப்பட்டது. மொத்தம் 583 நிமிடங்கள் (9 hours, 43 minutes).

மூன்று பாகங்களும் 'The Godfather DVD Collection' என்றப் பெயரில் DVD ஆக 2001-இல் வெளிவந்தது.

'The Godfather: The Coppola Restoration' இப்படத்தின் மூன்று பாகங்களும் 'Blu-ray' டிஸ்காக 2008-யில் வெளிவந்தன.


............................

காட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களின் ஒளிப்பதிவாளர் 'Gordon Willis'. இவரைப் பற்றியக் கட்டுரை அடுத்தப் பதிவாக.


Wednesday, July 20, 2011

தெய்வத்திருமகள் - நெகிழ்ச்சிப் பொட்டலம்

விக்ரம் என்னும் அற்புதமானக் கலைஞனின் நடிப்பு, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் 'புகைப்படங்களைப்' பார்த்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஒருவேளை நடிப்பு என்று சொல்லி, நம்மைப் படுத்தி எடுத்துவிடுவாரோ என்று. ஆனால் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் நம்மைக் கவர்ந்துவிட்டார்.

முதல் காட்சியிலிருந்தே, குறிப்பாக நீதிமன்றக் காட்சியிலிருந்து விக்ரம் தன் இயல்பான நடிப்பால் நம்மை, படத்திற்குள் இழுத்துவிடுகிறார். அவர் இளைத்திருக்கும் விதமும், தலைகலைந்து, கண்கள் சோர்ந்து அதனூடே அவர் வெளிப்படுத்தும் சோகமும் இயலாமையும் நம்மை அவரோடு இணைத்துவிடுகிறது.

அவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சாரா) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமும் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம்.

இந்தக் கதையை விக்ரம் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. தன் நடிப்புக்குத் தீனி போடும் என்பதாலோ அல்லது ஒரு அற்புதமான கதையில், கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆவலிலோ இருக்கலாம். ஆனால் இயக்குனர் விஜய் இந்தக் கதையை ஒரு காரணத்திற்காக மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அது, அற்புதமான ஒரு வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவரும் சாத்தியத்திற்கான முயற்சியாக இருக்க கூடும். இது, அவர் தன் திறமைகளின் மேல் கொண்ட பரிசோதனை முயற்சி என்று கூடச் சொல்லலாம்.

அற்புதமானக் காட்சி - இரண்டு பேரின் முகங்களில் இருக்கும் உணர்ச்சிகளைப் பாருங்கள்

ஒரு வெகுசன சினிமாவை உருவாக்குவது என்பது கடினமான ஒரு பணி என்றாலும், கொஞ்சம் முயன்றால் ரசிக்கும் விதமாக, ரசிகனின் பொழுதைப்போக்கும் (பொழுதுப்போக்கு) படமாக உருவாக்கி விட முடியும், ஆனால் ஒரு சிறந்தப் படத்தை உருவாக்குவது என்பது மிகக் கடினமான செயல். அதுவும் இந்த மாதிரியானக் கதையை இரண்டரை மணிநேரம் களைப்பு ஏற்படாமல், சுவாரசியமாகக் கொண்டு செல்லுவது, தேர்ந்த ஒரு கலைஞனால் மட்டும்தான் முடியும். அதை இயக்குனர் விஜய் சிறப்பாகச் செய்திருக்கிறார்.


இயக்குனர் விஜய்

வழக்கமான வெட்டுக்குத்து, பழிவாங்கல், துரத்தல், காதல் போன்றவை இல்லாமல் சொல்லுவதற்கு, பல கதைகள் உண்டு. அப்படியான கதைகள் திரைப்படமாக உருவாக இந்தப்படம் ஓடுவதும், அதை மக்கள் ஏற்றுக்கொள்வதும் உதவியாக இருக்கும்.

உண்மையில் ஒரு பொழுதுபோக்குப் படத்தை விட, இந்த மாதிரியான 'இயல்பான' படம் எடுக்கும் போதுதான் அதன் இயக்குனர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தொழில்நுட்ப குழுவும் தன் அதிகபட்ச திறமையை, நேர்மையோடு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு அற்புதமானக் கலைப் படைப்பைத் தோன்றுவிக்க முடியும். இப்படத்தின் ஒட்டு மொத்த குழுவும் அதைச் செய்திருக்கிறது.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதனால், திரைப்படத்தின் நேர்த்தி என்பது முதலில் அதன் ஒளிப்பதிவின் மூலமாகவே பார்வையாளனைச் சென்று அடைகிறது.  சிறப்பான ஒளிப்பதிவால் கிடைக்கும் காட்சியானது (பிம்பம்) பார்வையாளனை உள்ளே இழுக்கப் பெரிதும் உதவும். பிறகு அதன் இசை, நடிப்பு, இயக்கம், வசனம், படத்தொகுப்பு என, பல தொழில்நுட்ப பிரிவுகளைக் கொண்டு பார்வையாளனை தன்வசத்தில் இருத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் 'நீரவ் ஷா' தன் பங்களிப்பை மிக நேர்த்தியோடு செய்திருக்கிறார். அற்புதமான தன் திறமையின் மூலம் கவித்துவமான காட்சிகளை ஓவியமாக நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.

இசையமைப்பாளர் 'ஜி.வி.பிரகாஷ்' தன் இசையால் உணர்ச்சிகளை சிறப்பாக மீட்டெடுத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

'லாஜிக்' மீறல் என்பது சில இடங்களில் இருந்தாலும் அவை, படத்தை சுவாரசியமாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனால் பெரிதாக இடரவில்லை.


இப்படம் பல அற்புதமான கணங்களைக் கொண்டிருக்கிறது. படம் முழுவதும் ஒருவிதப் பரவசமும், நெகிழ்ச்சியும் பரவிக்கிடக்கிறது.

கண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளைக் கொண்ட படங்கள் மிக அரிதாகவே வருகின்றன. பார்க்கும்போது மட்டுமல்லாமல், திரைப்படத்திற்கு வெளியேயும், நினைக்கும்போதெல்லாம் கண்ணீரை வரவழைத்துவிடும் காட்சிகள் மிக மிக அரிது.

இப்படம் அப்படியானக் காட்சிகள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இறுதியில் வரும் நீதிமன்றக் காட்சி. அந்தக்காட்சியில் விக்ரமும் அந்தக் குட்டித் தேவதையும் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகள் கண்ணீரை வரவைக்கின்றன. பார்த்தபோது மட்டுமல்ல, இப்போதும் இதை எழுதும் போதும், நான் உணர்ச்சிவசப்படுகிறேன். உண்மையில் வாய்விட்டு அழவேண்டும் என்று தோன்றுகிறது, சூழ்நிலையின் கட்டுப்பாட்டால் அதை தவிர்த்தேன், தவிர்க்கிறேன்.

இந்தக் காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

குழந்தைகளின் அறியாமையில், வெகுளித்தனத்தில், கள்ளம் கபடம் அற்றத் தூய்மையான மழலை உலகில் சில மணி நேரமாவது வாழ்ந்துவர விரும்பினால், இந்தப் படத்தைப் பாருங்கள். 'விக்ரமும் சாராவும்' அதைச் சாத்தியமாக்குகிறார்கள். நாம் தவற விடுகிற அல்லது கண்டு கொள்ளாத வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை இப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.

இயக்குனர் விஜய்,விக்ரம்,குட்டித் தேவதை 'சாரா' மற்றும் குழுவினருக்கு என் நன்றி.

பிற்சேர்க்கை:

அதே நேரம், இப்படம் 'I Am Sam' என்னும் ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, பலமான விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. தெய்வத்திருமகள் படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள், காட்சி அமைப்பு, இசை மற்றும் நடிப்பு வரை, அப்படியே ஆங்கிலப்படத்தைப் பார்த்து பிரதி எடுக்கப்பட்டிருக்கிறது, ஆதனால் இப்படத்தை எவ்வகையில் கொண்டாடுவது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்பது ஒரு விதத்தில் உண்மைதான். அதை இயக்குனர் குறிப்பிட்டு இருக்க வேண்டும், அப்படிச் செய்யாதது அவருக்கு மூளைத் திருடர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆங்கிலப்படத்தின் இயக்குனரான 'ஜெசி நெல்சன்' (Jessie Nelson)-க்கு நன்றியாவது தெரிவித்து இருக்க வேண்டும். நன்றி தெரிவிப்பதில் கூட ஏராளமான சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. என்றாலும், அதை வெளிப்படுத்துவதுதான் நாகரிகம். செய்யவில்லை என்பது கண்டிக்க கூடியதும் வருத்தம் தரக்கூடியதும்தான்.

ஒரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தினால், அதைப்போலவே ஒன்றைச் செய்து பார்க்க முயலுவதும், ஒரு படைப்பின் தழுவலாக மற்றொரு படைப்பு உருவாவதும் காலம் காலமாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். அப்படியான நகல் முயற்சிகள் ஏற்றுக் கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் அப்படைப்பின் தரத்தையும் முழுமையையும் பொருத்து அமைகிறது.Friday, July 15, 2011

இனி ரஜினி, தான் யார் என்பதைத் தெரிவிப்பாரா?


ரஜினியைத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

இதுநாள் வரை தன் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த இடம் என்ன, அவர்களை அவர் எப்படிப் பயன்படுத்தினார், அவருக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு என்ன என்பது தமிழ்ச் சமுகம் அறிந்ததுதான். அதைப்பற்றிப் பேசினால் விவாதமாகும் என்பதும் நாம் அறிந்ததுதான். அதனால் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை.

நான் கேட்க விரும்புவது, இனி வரும் காலங்களில் ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதுதான்.

சிங்கப்பூர் மருத்துவத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பேச்சில் "நான் அப்படி என்ன செய்துவிட்டேன், பணம் வாங்குறேன்.. நடிக்கிறேன்.. நீங்கள் எல்லாம் பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் நடந்து கொள்கிறேன் ராசாக்களா" என்று தன் ரசிகர்களுக்குச் சொன்னார்.

அன்று அவர் சொன்னதன் பொருள் என்ன? பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் அப்படி அவர் என்ன செய்யப்போகிறார்? தமிழர்கள் அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இனியாவது அவர் உணர்வாரா?

லட்சக்கணக்கான சகோதரர்களும், சகோதரிகளும் கொல்லப்பட்டபோதும் வீதிக்கு வராத தமிழன், ரஜினியின் பிரார்த்தனைக்கு வந்தான். உன்னதத் தலைவனைப் பெற்றெடுத்த தாயாரின் சிகிச்சைக்குத் தடை வந்தபோது கூடாத தமிழன் ரஜினியை வரவேற்க விமான நிலையத்தில் கூடினான். இதை நினைத்தால் தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல ரஜினியே வெட்கப்படவேண்டும். தன் இனத்திற்காக ஒன்றுகூடாத மக்களைத் தன் ரசிகர்களாகக் கொண்டிருப்பதற்கு.

தமிழர்களுக்கு, வேண்டாம் வேண்டாம்.. அவரது ரசிகர்களுக்கு மட்டுமாவதும், அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் அப்பாவி ரசிகனுக்கும் அவர் என்ன செய்யப் போகிறார்?

தமிழர்களின் இன்றைய பிரச்சனைகளில் அவர் தலையிடுவாரா?

தமிழர்களின் போராட்டங்களில் அவர் கலந்துக் கொள்வாரா?

தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அவர், இனியாவது அதை உளமாற உணர்வாரா? (இப்போது கூட இல்லை என்றால் பிறகு எப்போது?)

தமிழ்த் திரைப்படத்துறைக்கு அவர் அதிகம் செய்ய வேண்டாம். ஒன்றே ஒன்று செய்தால் கூட போதும். வருடத்திற்கு 10 (குறைந்தது) படங்கள் எடுக்கலாம். பெரும் முதலீடுகள் கூட வேண்டாம். சிறு பட்ஜட் படங்களை அவர் எடுக்கலாம். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புத் தரலாம். அவரது இத்தனை ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் பல இணை/உதவி இயக்குனர்களை கடந்து வந்திருப்பார், அவர்களில் இருந்து பலருக்கு வாய்ப்புகள் தரலாம். மேலும் ஒரு குழு அமைத்து புதிய தலைமுறையில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் தரலாம். அவருக்கு தெரியாதா என்ன? சினிமாவின் போராட்டம். அவர் நினைத்தால் பலபேரின் வாழ்க்கைக்கு வழி காட்டலாம்.

அவர் எடுக்கும் படங்களில் பாதி படங்கள் ஓடாவிட்டாலும் கூட மற்ற படங்களிலிருந்து போட்ட பணத்தை எடுத்துவிட முடியும். அதுவே பெரும் வெற்றி என்றால் லாபமும் பார்த்துவிட முடியும். அப்படியே நஷ்டம் வந்தால் என்ன? அவரால் தாங்கவா முடியாது? இதை விட பெரும் பணம் அவருக்கு தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. இதை ஒரு தடவையாவது அவர் முயன்று பார்க்கலாம்.

அவருக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த பல தமிழர்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். அத்தகைய தமிழனுக்கும் தமிழ் சினிமாவிற்கும் அவர் 'ஒரு சூப்பர் ஸ்டாராக' வேண்டாம், ஒரு மனிதனாக என்ன செய்யப்போகிறார்?

தமிழர்கள், நாங்கள் யார் என்பதை தெரிந்துகொண்டோம், தெரிவித்துவிட்டோம். இனி ரஜினி தான் யார் என்பதை தெரிவிப்பாரா?

.

Tuesday, July 12, 2011

பாலை - “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"- இப்படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன்.

இப்படத்தில் முதலில் பணி புரிந்தேன். சில காரணங்களால் தொடர முடியவில்லை. 

இங்கே காணக்கிடைக்கும் காட்சிகள் அப்படத்திற்காக எடுக்கப்பட்டவை. சில வண்ணங்களை நிர்ணயித்துப் பார்த்தேன். 

அது உங்கள் பார்வைக்கு.