அண்மையில் உலகசினிமா ரசிகனின் 'காட்பாதர்- 1972[ஆங்கிலம்] வன்முறையைக் கொண்டாடுவோம்' என்றப் பதிவால் தூண்டப்பட்டு, மூன்று 'காட்ஃபாதர்' படங்களையும் மீண்டும் ஒருசேரப் பார்த்தேன். அது ஏற்படுத்திய தாக்கமும், அனுபவமும் அதிலிருக்கும் ஒழுக்கமும், செய்நேர்த்தியும் என்னை ஒரு தொழில்நுட்பாளனாக பிரமிக்க வைத்தன.
இதன் இயக்குனர் 'ஃபிரான்சிஸ் ஃபோர்டு கொப்பலா'. அந்த மாபெரும் கலைஞனின் ஆற்றல் பல ஆண்டுகள் கடந்தும் புதுமையாக இருக்கிறது.
கொப்பலா, அண்மையில் கொடுத்த நேர்காணலின் தமிழாக்கத்தைக் காண, 'வார்த்தைகள்' வலைப்பூவில் 'கொப்பலாவின் பதில்கள்' பதிவுகளைப் படியுங்கள்.
அந்தப்படத்தைப் பற்றிய சில தகவல்களை, உங்களோடு பகிர்ந்துக்கொள்ள இந்தப் பதிவு.
கொண்டாட்டம் மற்றும் மரணம்:
காட்ஃபாதர் - மூன்று பாகப் படங்களும், தமக்குள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. மூன்று படங்களும் ஏதேனும் ஒரு குடும்ப விழாவில் (கொண்டாட்டத்தில்) துவங்கி, குடும்ப உறுப்பினர் மரணத்தில் முடிகின்றது.
முதல் பாகம் 'விட்டோ கோர்லியானின்' (மார்லன் பிராண்டோ - காட்ஃபாதர்) மகள் 'Connie'க்கும் 'Carlo Rizzi'-க்குமான திருமணக் கொண்டாட்டத்தில் துவங்குகிறது. 'காட்ஃபாதரின்' இளைய மகனான 'மைக்கேல்' (அல்பாச்சினோ) இந்த மாப்பிள்ளை 'Carlo Rizzi' -ஐ கொல்லுவதில் படம் முடிகிறது.
இரண்டாம் பாகம் 'மைக்கேலின்' மகன் 'ஆண்டனியின்' 'First Communion' கொண்டாட்டத்தில் துவங்குகிறது . மைக்கேலின் சகோதரன் 'Fredo'வைக் கொல்லுவதில் முடிகிறது.
மூன்றாம் பாகம் மைக்கேலின் பெயர் சூட்டு (Commander of the Order of St. Sebastian) விழாவில் துவங்கி அவரின் மகள் மற்றும் அவரின் மரணத்தில் முடிகிறது.
இந்த மூன்று பாகங்களிலும் வரும் விழாக்களும், மரணங்களும் பல செய்திகளைச் சொல்லுகின்றன. இவை ஒருவித குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதமுடிகிறது.
மூன்று பாகங்களிலும் வரும் ஆரம்பக் கொண்டாட்டங்கள் மிக நீண்ட நேரக் காட்சிகளாக நிகழ்கின்றன. இருபது முதல் முப்பது நிமிடக் காட்சியாக அது இருக்கின்றது. இந்தக் காட்சியின் ஊடாக அப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார நோக்கம் அல்லது பிரச்சனையை இயக்குனர் நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்.
மூன்று பாகங்களின் இறுதி காட்சிகளும் மரணங்களில், அதாவது அக்குடும்பம் மற்றும் 'காட்ஃபாதர் சாம்ராஜியத்தின்' எதிரிகளைக் கொல்வதில் முடிகின்றன.
மூன்று பாகமும் துரோகம் மற்றும் அதற்கான மரணதண்டனை, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தின் துவக்கம் என்ற செய்தியோடு முடிகிறது.
கலாச்சாரம், அரசியல் மற்றும் நிகழ்வுகள்:
மூன்று பாகங்களிலும் அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள், போகிறபோக்கில் கதையோட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போர், இத்தாலிய அமெரிக்கர்களின் விழாக்கள், லாஸ் வேகாஸ், கியூபாவில் காஸ்ட்ரோவின் போராட்டம், அமெரிக்க அரசியலில் மாஃபியாவின் ஆதிக்கம், இத்தாலிய கட்டுமான நிறுவனமான 'Immobiliare'-'வாட்டிக்கனுக்கு' அதிலிருக்கும் தொடர்பு, இத்தாலியக் கலாச்சாரம், வாழ்க்கை முறை, அதன் வரலாற்றுப் பின்புலம் மற்றும் சிசிலியின் அழகு என்று அந்தக் கதையின் ஆதார கதாப்பாத்திரங்களான காட்ஃபாதர் குடும்பத்தாரின் பூர்வீக தேசத்தின் அடையாளங்களைச் சிறப்பாகவும் முழுமையாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். மேலும் அவரின் பூர்விகமும் இத்தாலிதான்.
நடிகர்கள்:
தன் மகன் மற்றும் மகளை இந்தப்படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் கொப்பலா. அவரின் மகள் 'சோபியா கொப்பலா' மூன்றாம் பாகத்தில் மரியாவாக (மைக்கேலின் மகள்) நடித்திருக்கிறார். பிற்காலத்தில் இவர் திரைப்பட இயக்குனராகி ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.
சோபியா கொப்பலா |
முதல் பாகம் 1972லும் இரண்டாம் பாகம் 1974லும் மூன்றாம் பாகம் 1990லும் எடுக்கப்பட்டன. முதல் பாகம் 1945 காலவாக்கில் நடக்கும் கதையாகவும், இரண்டாம் பாகம் 1958-59 காலகட்டத்தில் நிகழும் கதையாகவும், மூன்றாம் பாகம் 1979யில் நடக்கும் கதையாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சில நடிகர்களைத் தவிர முக்கிய கதாப்பாத்திர நடிகர்கள் மூன்று பாகங்களிலும் நடித்திருக்கிறார்கள். இதில் மூன்றாம் பாகம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னால் எடுத்திருப்பதினால் அதில் நடித்த நடிகர்களின் தோற்ற மாறுபாடு கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது.
படபிடிப்பு:
- முதல் பாகம் மொத்தம் வெறும் 77 நாட்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் உத்தேசித்தது 83 நாட்கள். ஆனால் முன்பாகவே முடித்து விட்டிருக்கிறார்கள். (நம்ம ஊரில் சராசரியாக 60-80 நாட்கள். சில இயக்குனர்கள் 230-250 நாட்கள் வேண்டும் என்கிறார்கள்)
-கொல்லும் காட்சிகளில் பல நுண்ணிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சுடும் போதோ அல்லது கத்தியால் குத்தும் போதோ வெளிப்படும் இரத்தத் தெறிப்புகளை அற்புதமாகப் படமாக்கிருக்கிறார்கள்.
-முதல் பாகத்தின் துவக்கக் காட்சியில் ஒரு நடிகனின் முகக் குளோசப்பாக துவங்கி 'Zoom back' வந்து காட்ஃபாதரை காட்டும் ஒரு 'shot' படமாகப்பட்டிருக்கிறது. இந்த ஷாட் மூன்று நிமிடம் நிகழ்கிறது. இந்த ஷாட்டை எடுக்க கணினியில் இணைக்கப்பட்ட 'zoom lens' பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கொப்பலா |
விருதுகள்:
முதல் பாகம்: சிறந்தப் படம்,திரைக்கதை மற்றும் நடிகர் (மார்லன் பிராண்டோ) என மூன்று ஆஸ்கார் விருதுகளையும், ஐந்து 'கோல்டன் குளோப்' மற்றும் ஒரு 'கிராமி' விருதும் பெற்றிருக்கிறது.
இரண்டாம் பாகம்: சிறந்தத் துணை நடிகர் (ராபர்ட் டி நீரோ), சிறந்தக் கலை இயக்கம், சிறந்த இயக்குனர், சிறந்த இசைக் கோர்ப்பு, சிறந்த படம் மற்றும் சிறந்தத் திரைக்கதை என ஆறு ஆஸ்கர் விருதும், ஒரு 'BAFTA' சிறந்த நடிகர் (அல்பாச்சினோ) விருதும் பெற்றிருக்கிறது.
மூன்றாம் பாகம்: ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டும் ஒரு விருதையும் பெறவில்லை. இன்றுவரை இந்த ஒரு படம் மட்டும்தான், இரண்டு பாகங்களுக்கு சிறந்த படம் என விருதைப் பெற்றப்படமாகும்.
இரண்டாம் பாகம் வெளியான அதே ஆண்டு (1974) கொப்பலாவின் மற்றொரு படமும் (The Conversation) வெளியாகியது. இரண்டு படங்களும் சிறந்தப் படங்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. இப்படி ஒரே ஆண்டில் இரண்டு படங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களில் கொப்பலோ இரண்டாமானவர்.
முதல் இயக்குனர்: 1941-யில்'ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்' (Foreign Correspondent and Rebecca)
மற்ற இயக்குனர்கள்: 1977-யில் 'Herbert Ross' ( The Goodbye Girl and The Turning Point )
2000யில் - ' Steven Soderbergh' (Erin Brockovich and Traffic)
................
The Godfather Saga (1977) என்றப் பெயரில் தொலைக்காட்சி தொடராக இதன் இரண்டு பாகங்கள் வந்திருக்கின்றன. திரைப்படமாக வெளியிட்ட போது இடம் பெறாத காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டன. ஒரு மூன்று மணிநேரப் பாகமாகவும், மூன்று, இரண்டு மணி நேரப் பாகமாகவும் நான்கு நாட்களில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. மொத்தம் 434 நிமிடங்கள்.
The Godfather 1901-1959: The Complete Epic (1981) என்றப் பெயரில் 'VHS' விடியோவாக இரண்டுபாகமும் வெளிவந்தது. மொத்தம் 386 நிமிடங்கள்.
The Godfather Trilogy: 1901–1980 (1992) என்ற பெயரில் இதன் மூன்று பாகங்களும் இணைத்தும் வெளியிடப்பட்டது. மொத்தம் 583 நிமிடங்கள் (9 hours, 43 minutes).
மூன்று பாகங்களும் 'The Godfather DVD Collection' என்றப் பெயரில் DVD ஆக 2001-இல் வெளிவந்தது.
'The Godfather: The Coppola Restoration' இப்படத்தின் மூன்று பாகங்களும் 'Blu-ray' டிஸ்காக 2008-யில் வெளிவந்தன.
............................
காட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களின் ஒளிப்பதிவாளர் 'Gordon Willis'. இவரைப் பற்றியக் கட்டுரை அடுத்தப் பதிவாக.
நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஒரு ஒளிப்பதிவாளரின் பார்வையாக....நல்ல படங்களை நேசிப்பவராக காட்பாதரின் ஆன்மாவை சகல தளங்களிலும் தரிசித்ததை தங்கள் பதிவில் உணரமுடிகிறது.மூன்று படங்களின் துவக்கமும்,முடிவும் ஒன்றாக இயங்கினாலும் கிளிஷேவாக உணரமுடியாமல் கொண்டாட்டமாக இருப்பதற்க்கு காரணம் கொப்பல்லோவின் திரைமொழிதான்.
நன்றி உலக சினிமா ரசிகன் , இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது நாம் உணர்வதை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் எதாவது சொல்ல வேண்டும் என்பதாய் தோன்றுகிறது. 'குருடர்கள் கையில் கிடைத்த யானையாய்' எதைப்பற்றியாவதுச் சொல்லி அதை வரையறுத்துவிட வேண்டும் என்று ஆவல் எழுகிறது. இந்தப்படத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம்.
பதிலளிநீக்குநல்ல கட்டுரை விஜய் ஆர்ம்ஸ்ட்ராங். 'கொப்பலா-வின் பதில்கள்' 4ஆம் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விரைவிலேயே அவருடைய ஏதாவது ஒரு படத்தைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். உங்கள் கட்டுரையைப் படித்தபின்பு அந்த ஆர்வம் கூடியிருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி சார்லஸ் சார்.
பதிலளிநீக்கு//விரைவிலேயே அவருடைய ஏதாவது ஒரு படத்தைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். // சீக்கரம் எழுதுங்கள், காத்திருக்கிறேன்.
படம் தந்த அனுபவத்தை சொல்லியிருப்பீர்களோ என எதிர்ப்பார்த்தேன். அதைவிடவும் படத்தைப்பற்றிய தகவல்கள்தான் நிறைய எழுதியிருக்கிறீர்கள். மேலும் எழுதுங்கள். எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குநான் காட்ஃபாதர் முதல் பாகம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.தங்களது பதிவைப் படித்த பின் மற்ற இரண்டையும் இப்பொழுதே பார்த்துவிட வேண்டும் எனத் தோன்றுகிறது.நான் தற்போதுதான் உலக சினிமாக்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.தங்களது கட்டுரை எனக்கு மிகவும் பயன்படுகிறது.நன்றி.
பதிலளிநீக்குஇப்படிக்கு அருண்.