Thursday, December 14, 2017

‘ஆள் பாதி ஆடைப்பாதி’ - CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai
‘ஆள் பாதி ஆடைப்பாதி’

என்பது போல.. புகைப்படத்துறையிலும், ஒளிப்பதிவுத்துறையிலும்.. பதிவு செய்த பிம்பத்தை, முறையாக ஒழுங்கமைப்பதும், சரியான வண்ணத்தை நிர்ணயிப்பதும் மிக அவசியம்.

காரணம், வண்ணமே எல்லாவற்றிற்கும் அடிப்படை.. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமிருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் அதற்கென்று தனித்துவமான எண்ண அலைகளை ஏற்படுத்தக்கூடியவை.

உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள், ஏன் நம்முடைய படங்களில் சிறந்த படைப்பாளிகளின் படைப்பில் ஒருவகையான நேர்த்தியும், அழகுமிருப்பதற்கு முக்கியகாரணம் இவ்வண்ணங்களே..!

Composition, Lighting எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு Color-உம் முக்கியம். ஒரு திரைப்படத்தின் வண்ணம் என்பது, படம் பிடித்த பிறகு நிர்ணயிப்பதில்லை. அது படம் பிடிப்பதற்கே முன்பே துவங்கி விடுகிறது..

வண்ணம் பற்றி பேச நிறைய இருக்கிறது.. வாருங்கள் பேசும்..CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai

Fees.. Rs.2999/-
CALL:
+91 98842 04348 / +91 98406 32922

Pure Cinema Book Shop
7, W Sivan Koil St, Ottagapalayam,
Somasundara Bharathi Nagar,
Vadapalani, Chennai - 26Tuesday, December 12, 2017

COLOR CORRECTION WORKSHOP for Cinematographers & photographers


 • Manipulating the Audience’s Emotions With Colors..


  An Introduction to Color Correction Process :

  With the advent of digital motion picture cameras, the art and science of digital colour grading has become more important than ever. 

  Colour has the ability to manipulate perception and stimulate emotions. It can focus attention, improve understanding, and ultimately, add production value. But how should filmmakers and film professionals deploy colour successfully in the production pipeline?

  This introduction is aimed at anyone with an interest in colour grading. Cinematographers, Photographers, Colourists, Filmmakers, Directors & Editors. 


  Topics covered include:
  • What is Color Psychology?
  • Meaning of Colors.
  • Psychological Effects of Cool Colors
  • Psychological Effects of Warm Colors
  • Applying Color Psychology to your Image & Movie
  • Introduction: What does a colourist do? Is grading a technical necessity?
  • Introduction to lightroom and Davinci Resolve / Baselight
  • RAW Camera workflow and necessity of colour grading.
  • What is LUT and how it helps to grade 
  • Effects of Colour: Examples of correction, enhancement and effects.


  Fees.. Rs.2999/-

  CALL:
  +91 98842 04348 / +91 98406 32922


Tuesday, December 5, 2017

Cinematography Lighting Workshop (26/11/2017) - நன்றி


நவம்பர் 26ஆம் (2017) தேதி, நம்முடைய ‘ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை’ சிறப்பாக நடந்து முடிந்தது. 
ஒரு காட்சியை, அதன் ஆதார சூழலின் அடிப்படையில் எப்படி எல்லாம் ஒளியமைக்க முடியும் என்பதையும், அக்காட்சியை வெவ்வேறான ஒளியமைப்பில் (Lighting) ஒளிப்பதிவு செய்ய இருக்கும் பல்வேறு சாத்தியங்களைப்பற்றியும், அதனை ஷாட்டுகளாக பிரிப்பது எப்படி என்றும்.. அப்படி பிரிக்கப்பட்ட ஷாட்டுகளை 180° விதியைப்பயன்படுத்தி எவ்வாறு கம்போஸ் செய்வது, பின்பு ‘Lighting Continuity’ உடன் எப்படி ஒளிப்பதிவு செய்வது என்பதையும் செயல்முறை விளக்கமாக செய்துப்பார்த்தோம். 
கலந்துக்கொண்டவர்களின் Feedback இது..
Thank you Vijay Sir for an excellent full-day workshop on lighting. Your passion to share your knowledge was evident and that acted as an engine to climb over the hurdles of resource shortage. The holistic approach that you took gave the participants a capsule of many years of practical experience. Thanks again. - Krishnan
அண்ணா வணக்கம்..நேற்றைய பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. உங்களின் விட முயற்சி எனக்கு பிடித்திருந்தது. அந்த காட்சிகளை நீங்கள் படமாக்கிய விதம் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் சந்தோசம். அடுத்த வகுப்பிற்காக காத்திருக்கிறேன் நன்றி அண்ணா - Muthu Vel
ஆர்வமாக கலந்துக்கொண்ட அத்துனைப்பேருக்கும், Feedback கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி..!
இம்மாத பயிற்சிப்பட்டறை பற்றி அறிவிப்பு விரைவில்..

Wednesday, November 15, 2017

மெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்இந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.

மெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.

நீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்குதான் தரப்பட்டிருக்கிறது இதுகாலம் வரை. காரணம், குற்றம் சாட்டப்பட்டவர் பெரும்பாலும் வெற்றியாளராக இருப்பார். அதனால் அவர் பக்கமே சமூகம் நிற்கும். எனில், அதில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற அறச்சீற்றம் எல்லாம் இருந்ததாக தெரியவில்லை. அது அந்த நேரத்து செய்தி அவ்வளவுதான். அடுத்து அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். இதான், நம் பொதுபுத்தியின் இயல்பு.

இப்போது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இச்சமூகம் (அல்லது சிலபேர்) தோண்டி எடுத்திருக்கிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்ற கேள்வியைக்கூட அது எழுப்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு எழுத முயல்கிறது. இங்கே சந்தேகத்தின் பலன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.

சட்டத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு வழக்கில் குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றால் ‘சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகத் தந்தே’ தீர்ப்பு சொல்லப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இங்கே அது எதிர்மறையாக இருக்கிறது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன..

1. குற்றம் சாட்டியவர் இன்று ஜெயித்து விட்டார். அதுவும் சமூகம் போற்றும் ஒரு நல்ல படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே முதல் காரணம். ஜெயிக்கவில்லை என்றால், அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருந்தவர்கள் தான் நாம்.

2. அன்று, கோபி அவர்கள் போராடிய போது, மௌனம் காத்தவர்கள் அல்லது அவருக்கு எதிராக பேசியவர்களுக்கு இன்று, ஏதோ ஒருவிதத்தில் மனச்சாட்சி சுடுகிறது. தங்களின் குற்ற உணர்ச்சிக்கு களிம்பாக, இப்பிரச்சனையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி உண்மை எது என்று நிறுவ வேண்டிய நோக்கமெல்லாம் இல்லை.

3. குற்றம் சாட்டியவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலமும், அவர்களின் சாதியும் (!?) இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அதனைப் பொறுத்தே, இங்கே இத்தனைக் கூச்சல் ஏற்படுகிறது.  கூர்ந்து கவனிக்க வேண்டியது கூட இல்லை, மேலோட்டமாக பார்க்கும்போதே அது தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு பேர், அதில் ஒருவர் மீது மட்டும், இன்று தீர்ப்பு எழுத முற்படும் போக்கை பார்த்தால் அதனை புரிந்துக்கொள்ளலாம். மற்றபடி நீதி, நியாயம், அறம், உண்மை எல்லாம் ஒரு பாவலா..!

ஏன், இத்தனை விரிவாக பேசவேண்டியதிருக்கிறது என்றால்.. இப்பிரச்சனையின் அடிநாதத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போதுதான், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏன் பிரயோகிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

சரி.. நான் விஷயத்திற்கு வருகிறேன். எனக்குத் தெரிந்த ‘கறுப்பர் நகரத்தின்’ கதையும் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் கதையும் ஒன்றா..!?

இதற்கு ஒருவார்த்தையில் ஆம்.. இல்லை என்று பதில் சொல்லுவதற்கு முன்பாக கொஞ்சம் பேச வேண்டியதிருக்கிறது. அதற்கு காரணங்கள் மூன்று..

1. எதையும் முடிவெடுப்பதற்கு முன்பாக தீர விசாரிப்பதே நலம்.

2. எனக்கு தெரிந்தது மட்டும்தான் உண்மை என்றில்லை. எனக்குத் தெரியாத சில விஷயங்களும் இதில் இருக்கின்றன.

3. ஒரு திரைப்படத்தை, அதன் மையத்தை, அதன் அரசியலை, அதன் கலைத்தன்மையை புரிந்துக்கொள்ளுவதும், விவாதிப்பதும், “சாம்பாரில் உப்பு இருக்கிறதா.? இல்லையா..?” என்பதைப்போன்று இலகுவானது இல்லை.

எனக்கு எப்படி ‘கறுப்பர் நகரத்தின்’ கதை தெரியும் என்பதற்கான பதில்.. நான் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். அப்போது, அத்திரைப்படத்தின் முழு திரைக்கதையையும் நான் படித்திருக்கிறேன்.

‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தின் களம், வட சென்னையும் அதன் மக்களும்தான். பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக, காட்சிகளை படித்துவிட்டு, அதற்கான ‘லொக்கேஷன்களை’ இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், மேலாளர் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய ஒரு குழு சென்று தேர்ந்தெடுத்து, மற்ற ஏற்பாடுகளுக்கு பின்பு படப்பிடிப்பிற்குச் செல்லுவோம். அதுதான் நடைமுறை. ஆனால், கறுப்பர் நகரத்தில் அது மட்டுமே நடக்கவில்லை. இயக்குநர் கோபி அவர்கள், தனியாக என்னை மட்டும் மீண்டும் வட சென்னை பகுதிகளுக்கு அழைத்துச்செல்லுவார். காரணம், ஒளிப்பதிவாளராக நான் வட சென்னையை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.  அப்போதுதான், அதன் களம் மற்றும் எதார்த்தம் முழுமையாக திரைப்படத்தில் வரும் என்று நம்பினார். அவருக்கு தன் மண்னின் நிலைமையை,அதன் இயல்பை தன் படைப்பில் அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆவல். அதனால், பல தடவை நாங்கள் இருவரும் வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றி வந்திருக்கிறோம்.

படித்தும், கேள்விப்பட்டும், மட்டுமே இருந்த வடசென்னையைப் பற்றி அப்போதுதான் எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. இதுகாலம் வரை, நம் திரைப்படங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் வட சென்னை உண்மையில் அதன் எதார்த்தத்திற்கு அருகில் கூட செல்லவில்லை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

குடிசையும், ஹவுசிங் போர்ட் அடுக்குமாடி கட்டிடங்களும் நிறைந்தப் பகுதிகள் அவை. ஒவ்வொரு கட்டிடத்திலும் பல நூறு குடும்பங்கள் வாழுகின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலைமையில் தான் இருக்கின்றன. அநேகமாக, இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி குப்பை கொட்டும் இடமாகத்தான் எல்லாவிடத்திலும் இருக்கிறது. ஜன நெருக்கடி நிறைந்த பகுதி கூட. அங்கிருக்கும் மக்கள், ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டிற்கு வெளியேதான் கழிக்கிறார்கள். அது குளிப்பதாகட்டும், சாப்பிடுவதாகட்டும், சண்டை இடுவதாகட்டும், விளையாட்டாகட்டும்.. எல்லாம்.. எல்லாம் தெருவில்தான். காரணம், வீட்டில் இடமிருப்பதில்லை. வீடு என்பது இரவில் உறங்குவதற்கு மட்டும்தான் போல.

எல்லாமே சிறிய வீடுகள். அதில், பெரும்பகுதி பொருட்களால் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இருட்டால் நிரம்பி வழியும் வீடுகள் அவை. இதுவே எனக்கு முதல் அதிர்ச்சி.. காரணம், படபிடிப்பிற்கு தேவையான, இடம், ஒளி போன்றவற்றை எப்படி இவ்வீடுகளில் கொண்டு வருவது. சிறிய இடம் அதனால், டிராலி, கிரேன் போன்ற துணைக்கருவிகளை பயன்படுத்த முடியாது. இருட்டால் சூழ்ந்த வீடுகள். படபிடிப்பிற்கு ஏற்ற அதிக ஒளி அமைத்தால், அது எதார்த்தத்திலிருந்து விலகியதாக இருக்கும்.. எனில் எப்படிதான் அதன் இயல்பு தன்மையை திரைப்படத்தில் கொண்டு வருவது.!? இதற்காகதான்.. இந்த புரிதலுக்காகத்தான் கோபி அவர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

மேலும், வட சென்னையின் பிரத்தியேக அடையாளங்களான.. ‘ஃபுட்பால் வாலிபர்கள்’, ‘பாக்சர்கள்’, ‘சுவர் ஓவியங்கள்’, ‘ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன்’, ‘முந்நாள், இந்நாள் ரவுடிகளின் சுவர் ஓவியங்கள்’, ‘அநேகமாக எல்லா வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள்’, ‘பிக்பாக்கட்டிலிருந்து.. கொலை வரை செய்து விட்டு இயல்பாக நடமாடிக்கொண்டிருக்கும் நபர்கள்’, ‘போலிஸின் பொய் குற்றச்சாட்டுகள், அதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்’, ‘வீட்டுக்கு ஒரு அரசியல்’, ‘ஏழ்மை’, ‘சுகாதாரமின்மை’, ‘வேலை வாய்ப்புகள்’, ‘அன்பு நிறைந்த மனிதர்கள்’, ‘எந்நேரமும் சண்டைக்கு தயாராகயிருக்கும் நபர்கள்’, ‘குழாயடி சண்டைகள்’, ‘அவர்களின் விழாக்கள்’, ‘சடங்குகள்’, ‘எளிய மனிதர்களின் நட்பு’.. என பலவற்றை எனக்கு கோபி அறிமுகப்படுத்தினார்.  அப்பகுதி ‘சாவு மேளம்’, இறப்புக்கு பாடப்படும் பாடல், அதன் தன்மை எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. தமிழகத்தின் பிறகு பகுதியின் வழக்கத்திலிருந்து இது வேறுபட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தில், ஃபுட்பால் இளைஞர்கள், பாக்சர்கள், சுவர் ஓவியங்கள், ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன், சாவு வீடு, அரசியல், அரசியல்வாதிகள் என எல்லாமிருந்தன. கதையை நான் இங்கே சொல்லலாமா என்று தெரியவில்லை. திரு.கோபி அவர்களே சொன்ன மாதிரி, அது ‘ஒரு ஃபுட்பால் பிளேயரின் வாழ்க்கை.. விளையாட்டில் சாதித்திருக்க வேண்டிய அவனை எப்படி ஒரு ரவுடியாக அந்த சூழல், அதன் அரசியல் மாற்றுகிறது’ என்பதுதான் கதை.

அது ஒருவனுடைய கதை அல்ல. அதுதான் அங்கே பெரும்பாலான ரவுடிகளின் கதை என்றார் கோபி. அவர்களின் வாழ்வில், ஃபுட்பால் உண்டு. பாக்சிங் உண்டு. அது அவர்களின் வாழ்கையோடு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. கறுப்பர் நகரம் என்று அப்பகுதிக்கு ஏன் பெயர் வந்தது என்பதைப்பற்றியும் கோபி விளக்கி கூறினார். இப்போதும், சர்வதேச தரத்தில் விளையாடக்கூடிய ஃபுட்பால் பிளேயர்கள் அங்கே உண்டு, பாக்சர்கள் உண்டு. இந்தியாவின் பெரும்பகுதியில் எப்படி கிரிகெட்டில் ஆர்வமிருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் இருக்கிறார்களோ அதுபோல, அங்கே பெரும்பாலான இளைஞர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் ஃபுட்பாலிலும், பாக்சிங்கிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள், தங்கள் பிள்ளைகள் அவ்விளையாட்டுகளில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இந்திய அளவில் போட்டிகளில் பங்கு பெறும் பல விளையாட்டு வீரர்களை சந்தித்தோம்.

சிறந்த விளையாட்டு வீரனாக திகழும் அவர்களின் ஒருவனைத்தான், அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் மற்றும் சூழல் ரவுடியாக மாற்றுகிறது என்பதுதான் கசக்கும் நிஜம் அங்கே. அதைத்தான், அதன் களத்தின் தன்மையோடு ஒரு திரைப்படமாக பதிவு செய்ய கோபி முயன்றார்.

எனக்கு அதன் கதையையும், களனையும் அறிந்த போது, உண்மையில் மலைப்பாகத்தான் இருந்தது. இதை எப்படி ஒரு திரைப்படத்தில் கொண்டுவருவது. அதுவும், ஒரு சிறிய படத்தில். அக்கதையை திரைப்படமாக்க பெரும் பொருட்செலவு ஆகும்..கூடவே கடின உழைப்பும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும்.  காரணம், அப்பகுதியின் வாழ்வியல் முறை, சன நெருக்கடி, இடப்பற்றாக்குறை போன்றவை, படிப்பிடிப்பிற்கு ஏற்றவை அல்ல. பல இடைஞ்சல்கள் உண்டு அங்கே. அவற்றிற்கிடையே ஒரு முழுமையான படத்தை எடுக்க அசாத்தியமான துணிச்சல் மற்றும் உழைப்பு தேவைப்படும்.

ஆயினும், எங்களுக்கு ஒரு உற்சாகம் இருந்தது. ஒரு வாழ்வியலை அதன் களத்தோடு பதிவு செய்யப்போகிறோம் என்ற எண்ணமே பெரும் ஊக்கமாக இருந்தது. உற்சாகமாக பணிகளை தொடர்ந்திட்டோம்.படபிடிப்பு நம்பிக்கையோடு நடந்தது.  ஆயினும், திட்டமிட்டபடி படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. பின்பு சில காலங்களுக்கு பிறகு அப்படத்திலிருந்து சில காரணங்களால் நான் விலகிக் கொண்டேன். மேலும் சில காலங்களுக்கு பிறகு அப்படம் கைவிடப்பட்டது என்ற தகவலும் அறிந்தேன். அதே நேரம், மெட்ராஸ்,கத்தி திரைப்படங்களின் சர்ச்சையும் செய்திக்கு வந்தது.

இது ஒருபுறமிருக்க, இடையே ‘அட்டக்கத்தி’ திரைப்படம் வெளியாகி, அதை நான் பார்த்த போது, எனக்கு கறுப்பர் நகரம் நினைவுக்கு வந்ததற்கு காரணம் பல உண்டு.. அதில் முதன்மையானது.. அப்படத்தில் பதிவாகியிருந்த வட சென்னையின் வாழ்வியல் மற்றும் களம். அதிலிருந்த உண்மை எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததனால், அதன் இயக்குநரை உயர்வாக மதிப்பிடவும் செய்தேன். மேலும், அட்டக்கத்தியில் இடம் பெற்ற பெரும்பாலான சூழல்களை (கவனிக்கவும்.. சூழல்களை என்றுதான் சொல்லுகிறேன்.. காட்சிகள் அல்ல) நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அதன் சாயலில், பின்புலத்தில் காட்சிகள் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கறுப்பர் நகரம் திரைக்கதையில் இருந்தன. ஒரே சூழலில், அதன் களத்தின் தன்மையில் காட்சிகளை வடிவமைப்பது என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம். அவருக்கு அச்சூழல் பழக்கமானதா இல்லையா என்பதைப் பொறுத்து அதன் கலைத்தன்மை மற்றும் இயல்பு தன்மை வெளிப்படும். அவ்வகையில் அட்டக்கத்தியில் நான் பல காட்சிகளைப்பார்த்தேன். அதனால் எனக்கு வடசென்னையின் களமும், கறுப்பர் நகரத்தின் நினைவுகளும் வந்து போயின. ஆனால், ஒருபோதும் அது கறுப்பர் நகரத்தின் காப்பி என்ற எண்ணம் எனக்கு எழவே இல்லை. படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதன் இயல்புதன்மை, வாழ்வியல் பதிவு மற்றும் கதை சொன்ன விதம் என்று அப்படம் எனக்கு நிறைவைக் கொடுத்தது. அப்படத்தைப்பற்றியும், அதன் கலைத்தன்மைப்பற்றியும் அப்போது என் வலைப்பூவில் எழுதினேன்.

பின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டம் வந்தது. அதுவும் வடசென்னை மற்றும் அதன் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட கதைகளம் என்பதனால், மீண்டும் கறுப்பர் நகரத்தின் நினைவும் கோபியின் நினைவும் வந்தன. குறிப்பாக ’அந்த சுவர்’ காட்டப்பட்டபோது, வட சென்னையின் பெரிய பெரிய சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் நினைவுக்கு வந்ததன. கறுப்பர் நகரத்தில் அச்சுவர் ஓவியம் மையக் கதாப்பாத்திரம் அல்ல. ஆனால், அப்படியான சுவர்கள் தம் கதையில் இருக்க வேண்டும் என்று கோபி விரும்பினார். சொல்லப்போனால், அதற்காக போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கறுப்பர் நகரத்தின் நாயகன் மற்றும் அவனின் நண்பர்கள் பாக்சிங் மற்றும் ஃபுட்பால் பயிற்சி எடுக்கும் பகுதியின் பின்புலத்திலிருக்கும் சுவர்களில் இப்பிரமாண்டமான ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கோபி விரும்பினார். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் என்று தெரியவந்தபோது, தயக்கம் வந்தது. அதை பேனராக வைத்துவிடுவோமா..? செலவு குறையும்..அல்லது அது அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்தது. ஆயினும் அது தமக்கு கண்டிப்பாக வேண்டும் என்று கோபி பிடிவாதமாக இருந்தார். காரணம் அது சொல்லும் அரசியல் மற்றும் சூழலின் தன்மை என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இதெல்லாம்தான் மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டமும், அச்சுவரும் நினைவுப்படுத்தியது. அதன் பின்புதான் மெட்ராஸ், கத்தி திரைப்படங்களின் கதைப் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது.

மெட்ராஸ் திரைப்படம் வெளியானது. நான் முதல் நாளே அப்படத்திற்கு சென்றிருந்தேன். காரணம், அப்படத்தின் முன்னோட்டம் ஏற்படுத்தியிருந்த ஆர்வம் மற்றும் ரஞ்சித்தும் அவரின் முந்தைய படமான அட்டக்கத்தியும். எல்லோருக்கும் தெரிந்ததுதான், மெட்ராஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம். அதன் கதை, திரைக்கதை,கலைநயம், வாழ்வியல் பதிவு, அரசியல் என பலத்தளங்களில் அப்படம் நம்மை வசீகரித்தது. நிறைவான திரைப்படமும் கூட. என்னைப் பொறுத்த வரை, அது ‘ரஞ்சித்’ என்கிற மகத்தான கலைஞனின் படைப்பு. அரசியலிலும், கலையிலும் பயிற்சியும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு அது. அவ்வளவுதான். அதைத்தாண்டி.. அது வேறெந்த மலரும் நினைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனக்கு.

இடையில், ஒரு உணவகத்தில் கோபி அவர்களை சந்தித்தேன். அதைப்பற்றி என்னுடைய ‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

பின்பு, கத்தி பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது. கோபி பேட்டிகளை கொடுத்தார். அதில் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டுதான், மேலே குறிப்பிட்ட கட்டுரையை எழுதினேன். அது அப்போது, மிக அதிகமாக ‘ஷேர்’ செய்யப்பட்டது. பல இணைய பத்திரிக்கைகள் நகல் எடுத்து எழுதியிருந்தன. காரணம், அதுநாள் வரை கோபி மாத்திரம் தனியாக தன் கதை திருடப்பட்டது.. திருடப்பட்டது என்று முறையிட்டுக்கொண்டிருந்தார். கோபியின் கதை தெரிந்தவர்களில், திரைத்துறைக்கு வெளியே இருந்த சில நண்பர்கள் அவருக்கு ஆதரவாக எழுதி இருந்தனர். ஆனால், திரைத்துறையில் அவரோடு பணிபுரிந்தவர்கள், கோபியின் கதை தெரிந்தவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. இந்நிலையின் என்னுடைய கட்டுரை, பெரும் சாட்சியாக மாறியது.  கோபியின் பக்கம் ஏதோ உண்மை இருக்கும்தான் போல என்று பெரும்பாலானோர் நம்ப முயன்றார்கள். (நம்பினார்களா என்று எனக்கு தெரியாது.. அல்லது நம்பத்தான் வேண்டுமா..?)

என்னைப் பொறுத்தவரை, கோபியின் வீடியோ பேட்டியைப் பார்த்துவிட்டு, அதைப்பற்றி பலர் பலவிதமாக பேசிக்கொண்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் பேசி இருந்த பெரும்பாலான தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் உண்மைதான் பேசுகிறார் என்று நான் கருதியததனாலும், எனக்கு தெரிந்த உண்மையை நான் எழுத வேண்டியது வந்தது. அவ்வளவே. மறுக்க முடியாத உண்மை இதுதான் என்று எனக்கு இப்போதும் தெரியாது. கோபியின் தகுதியை பற்றி பேசிய கட்டுரை அது. அவ்வளவுதான்.

இப்போது, அறம் திரைப்படத்திற்கு பின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் கதைப்பற்றிய சர்ச்சையில், என்னுடைய
‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையை மேற்கோள் காட்டி விவாதிக்கப்படுவதனால், நான் இப்போதும் பேச வேண்டியதாயிற்று.

என்னைக்கேட்டால், இருவேறு திரைப்படங்களை ஒப்பிடும் போது, அதன் கதை, அக்கதையின் மைய ஓட்டம், அதன் பின்புலம், களம், அதன் கதாப்பாத்திரங்கள், அதன் அரசியல், அதன் திரைக்கதை, அது பயணிக்கம் பாதை, நோக்கம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் ஒற்றைவரியை மட்டும் வைத்துக்கொண்டோ, அதன் கதாப்பாத்திரங்களின் ஒன்றுமையை மட்டும் வைத்துக்கொண்டோ, அதில் இடம் பெறும் சில காட்சிகளைக் கொண்டோ, வசனங்களை கொண்டோ மதிப்பிட முடியாது, கூடாது.

எனில், இவ்விரு படங்களின் கதைக் களம் ஒன்றாக இருப்பதனாலும், அதன் சில கதாப்பாத்திரங்களிலிருக்கும் ஒன்றுமையினாலும் இவை ஒரே கதை என்று சொல்ல மாட்டேன். இரண்டும் வெவ்வேறான கதைகள். இரு வெவ்வேறான கலைஞர்களின் வாழ்விலிருந்து வந்த படைப்பு என்றே நினைக்கிறேன்.

இப்போது கேளுங்கள்.. மெட்ராஸ் கதையும், கறுப்பர் நகரத்தின் கதையும் ஒன்றா..!? இல்லை என்பதே என் ஒரு வார்த்தை பதில். ஆனால்… இந்த ஆனாலுக்குதான் மேலே சொன்னவை அனைத்தும். இதைப் புரிந்துக்கொள்ளவே மேலே அத்தனை நீட்டி முழக்கி கதை சொல்ல வேண்டி வந்தது. ஆர்வமும், உண்மையிலேயே அக்கறையும் கொண்டவர்கள்.. கொஞ்சம் நிதானமாக படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.

அப்புறம், ரஞ்சிதத்திடம் கோபி அவர்கள் கதை சொன்னாரா இல்லையா..? சொல்லப்பட்ட கதையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி வேறுகதை ரஞ்சித் எழுதினாரா..? என்பது போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அவர்கள் சந்தித்தார்களா.. கதை பேசினார்களா.. என்பதெல்லாம் அவர்களுக்குதான் தெரியும், எனக்கு தெரியாது. இப்பிரச்சனையின் ஆணிவேரை அவர்கள்தான் பிடுங்கிப்போட வேண்டும். நாம் அல்ல.

மேலும், மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். ஒரு கதையை திருடி, மெட்ராஸ் போன்ற ஒரு படத்தை எடுக்க முடியுமா..!? வாழ்ந்து பார்க்காமல் அப்படியான படத்தை எடுத்துவிட முடியுமா..!? அதேப்போல ’அறம்’ போன்ற ஒரு படத்தை வேறொருவர் எடுத்துவிட முடியுமா? எழுதி விட முடியுமா? மக்களிலிருந்து வந்த கலைஞர்களால் மட்டுமே இப்படியான படைப்புகளைத் தந்திட முடியும் என்பதே உண்மை. அதை இன்று உலகம் ஏற்றுக் கொள்ளுகிறது.

என்னைப் பொறுத்தவரை.. பா.ரஞ்சித், கோபி நயினார் இருவருமே மகத்தான கலைஞர்கள். எளிய மனிதர்களாக.. எளிய மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து, அவர்களுக்கான கதையை, அவ்வாழ்க்கையிலிருந்தே எடுப்பவர்கள். அவர்கள் இருவரையும் வாழ்த்துவதும், அவர்கள் தொடர்ந்து இயங்கிட உதவுவதுமே நாம் செய்யக்கூடிய அறச்செயலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி..!

- விஜய் ஆம்ஸ்ட்ராங்

CINEMATOGRAPHY LIGHTING WORKSHOP - Nov 26th 2017 - CHENNAIஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் மற்றும் குறும்படமெடுப்பவர்களுக்கானசினிமேட்டோகிராஃபி லைட்டிங்பயிற்சிப்பட்டறை. 26 நவம்பர் 2017 - சென்னை
காட்சிமொழிக்கு ‘ஒளியமைப்பே’ பிரதானம் என்பது உலகின் பெரும்பாலான திரைமேதைகளின் கூற்றாகும்.

உங்கள் காட்சிகளை படம்பிடிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

நேரடிப் பயிற்சியில்..


ஒளிப்பதிவின் ஆதாரமான ஒளியமைப்பின் அடிப்படை மற்றும் கலை நுணுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஓர் ஒளிப்பதிவாளனாகதிரைக்கதையை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு காட்சியை கோர்வையாகபடத்தொகுப்பின் விதிகளுக்கு உட்பட்டு எப்படி பல்வேறு ஷாட்டுகளாக பிரித்து  படம் பிடிப்பது என்பதைக்  கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு காட்சியின் தன்மையைஅதன் ஆதார மையத்திலிருந்து புரிந்துகொள்ளுவதுஅதனை ஷாட்டுகளாக பிரிப்பதுஅதற்கு ஏற்ற லென்ஸை தேர்ந்தெடுப்பதுஅதற்கான ஒளியமைப்புவண்ணம்டெப்த் ஆஃப் ஃபீல்ட்கேமராவின் கோணம் மற்றும் நகர்வு ஆகியவற்றை அமைப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

HMI, Tungsten, LED மற்றும் Fluorescent விளக்குகளை பயன்படுத்தி நேர்த்தியான ஒளியமைப்பை செய்வது  எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு காட்சிக்கும் (scenes) ஒரு தனிமனித முகத்துக்கும் (portraits) எவ்வாறு ஒளியமைப்புசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

கதையின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவில் செய்ய வேண்டிய வெவ்வேறு ஒளியமைப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

காட்சிப் பூர்வமாக ஒரு கதையை சொல்லும் நுட்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
"Learn How To Shoot Your Scenes"


Dive into the most advanced lighting workshop for Cinematographers, Directors and Shot filmmakers who want to explore dramatic lighting techniques for feature films.

Successful filmmakers all over the world consider lighting to be a primary tool in visual storytelling.
I

Hands-on class will cover topics in ..

Learn the fundamentals of the art and craft of cinematography Lighting.

Analyse a screenplay from the perspective of a cinematographer.

Focus on shot design as they create a scene that can be cut together according to the rules of classical continuity editing.

Learn about shot and sequence design through script interpretation, assessing story content, scene coverage, lighting, composition, colour, depth-of-field, blocking, perspective, lens selection, camera angle and movement using the basic dolly.

Light a scenes with HMI, tungsten, LED and fluorescent lights and use grip equipment to ‘shape the light’ in a series of exercises. 

Learn the fundamentals of lighting portraits and scenes, and address different lighting strategies for films.

Develop the ability to tell stories visually.TO REGISTER..
CALL:
+91 98842 04348 / +91 98406 32922 

Cost of Lighting Workshop :
4700/-  (discount for students & FILM UNION MEMBERS)
4999/-  (early booking discount if booked by 20th Nov 2017)
5999/-  Full Price

Friday, November 10, 2017

அறம்..!நல்ல படமென்பது என்ன? ‘ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்’ அதுவே என்னளவில் நல்லப்படம். - பாலுமகேந்திரா

படைப்பாளிகளில் இரண்டு விதம் உண்டு. ஒரு சாரார் ‘கலை என்பது பொழுதுபோக்கு’ என்று நம்புபவர்கள், மற்றொரு சாரார் ‘கலை என்பது மக்களுக்கானது’ என்று நம்புபவர்கள். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். திரைத்துறையிலும் அப்படியே..!

பொழுது போக்கு என்று குப்பையை எடுப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். பொழுது போக்கு அம்சத்தில், கொஞ்சம் கலையை, அரசியலை, சிந்தனையை கலப்பவர்கள் சிலர் உண்டு இங்கே. பாப்கார்ன் மீது தூவப்படும், மசாலாவைப்போல அது. ஒரு பாசாங்கு..! அவ்வளவுதான்.

திரைப்படம் என்பது பெரும் வணிகத்தோடு சம்பந்தப்பட்டது, அதனால் அதில் லாப நட்டம் மட்டுமே பார்க்க முடியும் என்ற கோட்பாடு ஒன்றுண்டு இங்கே. கலையை மக்களுக்கானது என்று நம்பும் படைப்பாளிகளும் உண்டு. அவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள்.  ஆயினும், அவ்வப்போது அப்படியான படைப்பாளிகளும் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

‘கோபி நயினார்’ அப்படியான ஒரு படைப்பாளி. மக்களிலிருந்து வந்த மக்களுக்கான படைப்பாளி. கோபி நயினாரை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை, ‘மீஞ்சூர் கோபி’ என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடுவார்.  ஆம், அவரேதான். கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், அது தன்னிடமிருந்து திருடப்பட்டது என்றும் கிடைத்த இடங்களிலெல்லாம் முறையிட்டுக் கொண்டிருந்தாரே அவரேதான். அவரின் புகார் மீது எத்தனை பேருக்கு அவநம்பிக்கை இருந்தது..!? ஏன்.. இப்போதும் கூட பலருக்கு இருக்கிறது.  ஜெயித்தவனின் வெற்றியை பறிக்க நினைப்பவராக, தகுதி அற்றவராக, பொய்யனாக, ஏமாற்றுக்காரனாக இந்த சமூகம் அவரைப்பார்த்தது. அதில் சிலர்.. “கதை திருடப்பட்டால் என்ன..? யாரால் அதை முறையாக எடுக்க முடியுமோ அவர்கள் எடுக்கட்டும். இவரால் அக்கதையை திரைப்படமாக எடுக்கவே முடியாது.. தெரியாது” என்று சப்பை கட்டு கட்டினார்கள்.

இருப்பதிலேயே மிகச்சிறந்த பழிவாங்குதல் என்ன தெரியுமா..!? ‘வாழ்ந்து காட்டுவதுதான்’ என்றொரு வாசகம் உண்டு. அதைத்தான் இப்போது கோபி செய்திருக்கிறார் ‘அறம்’ திரைப்படம் மூலமாக.

‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி ’ ‘மூடப்படாத போர்வெல் துளையில் விழுந்த சிறுவன் மரணம்’

எத்தனை முறை இத்தகைய செய்திகளை கடந்து வந்திருப்போம்.! நூற்றுக்கணக்கான முறை இது நிகழ்ந்திருக்கிறது. நமக்கு அது வெறும் செய்திதான். ஆனால்.. அக்குழந்தைகளின் பெற்றோருக்கு.? அவர்களின் உறவினர்களுக்கு? நட்புகளுக்கு.. ஊராருக்கு.? அச்சூழலை கையாண்ட அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு.?

நாம் கடந்து வந்த அச்செய்தியைத்தான் கோபி தன் கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.  சராசரி மனிதர்கள் எதையும் கடந்து வந்துவிடுகிறார்கள்.  கலைஞர்களால் அதனை அத்தனை இலகுவாக கடந்து வந்துவிட முடியாது.  அது அவர்களை தூங்க விடாமல் செய்யும். மனதை கூர் கூராக அறுத்துப்போடும். கலைஞர்களுக்கே இப்படி என்றால், கோபி போன்றவர்கள் போராளிகள்.  மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடக்கூடியவர்கள்.  இத்தனை காலமும் அதைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். மக்களோடு மக்களாக நின்றே.. அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்காகவே அவர் கதை சொல்ல முற்படுகிறார்.

இதுதான் களம். மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள்..!? மீட்டார்களா இல்லையா..!? இதுதான் முழுப்படமும்.

மாவட்ட ஆட்சியராக ‘நயன்தாரா’ அவர்கள், அக்குழந்தையை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சியும், அதன் பின்னே இருந்த அரசியல், கயவாளித்தனம், கையாலாகாத்தனம், போராட்டம், உணர்ச்சி பெருக்கு என படம் முழுவதும் உங்களை கட்டிப்போடும், கலங்கடிக்கும் திரைக்கதை.

இதுதான்.. இதைத்தான்.. கோபி போன்ற ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்த்தோம். அதை நிறைவாக செய்திருக்கிறார்.

வாழ்விலிருந்து ஒரு கதை, அதற்கான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள் தேர்வு, திரைக்கதையை கையாண்டவிதம், காட்சி மொழி, படைப்பாற்றல், வசனம், அது பேசும் எதார்த்தம், அது பேசும் அரசியல், அதைப்பேசும் கதாப்பாத்திரங்கள் என ஒரு முழுமையான நேர்த்தியான திரைப்படத்தை திரு. கோபி நயினார் அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்.

// மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கருப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப்பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த 'ஆவணப்படங்களை' மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத்து மனம் வேதனைக்கொண்டது. //

இது நான் கத்தி பிரச்சனையின் போது எழுதிய கட்டுரையில் இருக்கும் வாசகம். அதன் கடைசி வரியில் “சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த்திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.” என்று எழுதி இருந்தேன். அது இப்போது நிஜமாகி விட்டது என்றுதான் நினைக்கிறேன்.

‘அறம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரா அல்லது நயன்தாரா அவர்களா என்று தெரியாது.. இப்படம் நடப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்று தெரியாது. யாராக இருந்தாலும், அவர்கள் இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு போட வேண்டும். இத்தகைய படைப்பாளியை கை தூக்கி விட்டதற்காக.  இது கோபிக்காக மட்டுமல்ல.. வருங்காலத்திற்கே உதவும். இத்தகைய தகுதியோடு தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற எவ்வித கணிப்புமில்லாத பல நூறு படைப்பாளிகளுக்கு இது உதவும். இக்கதையும், அதை கையாண்ட கோபியும் வெற்றி பெறுவது அத்தனை முக்கியம்.  அதை கோபி செய்து விட்டார்.

இப்படம், கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம். சிறந்த படமும் கூட. பல மொழிகளில் எடுக்கப்படலாம். அல்லது மொழி மாற்றம் செய்யப்படலாம். காரணம், இது இந்திய பிரச்சனை. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் பிரச்சனை.

இப்படம் எண்ணிக்கையில்லா விருதுகளை வென்று குவிக்கும்.. கூடவே மக்களின் மனங்களையும்..!

மகிழ்ச்சியும்.. வாழ்த்தும் திரு. கோபி நயினார் அவர்களுக்கு.

நல்ல படமென்பது ‘ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்’ அதுவே என்னளவில் நல்லப்படம். - பாலுமகேந்திரா

பின்குறிப்பு:

கத்தி பிரச்சனையின் போது, நான் எழுதிய கட்டுரையின் லிங்கை இது.  நேரமிருப்பவர்கள், ஆர்வமிருப்பவர்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள். கோபியின் மீதான உங்கள் எண்ணம் இப்போதாவது மாறுகிறதா என்று பார்ப்போம்.

Friday, July 14, 2017

டிஜிட்டல் கேமரா பயிற்சிப்பட்டறை - சென்னை (09/07/17)
கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னையில் ‘டிஜிடல் கேமரா’ எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது. டிஜிட்டல் கேமராவின் அடிப்படைத் தொழில்நுட்பத்தை மையமாக வைத்துக்கொண்டோம்.  இன்று விரவிக்கிடக்கும் பல்வேறு நிறுவனங்களின் பல வகையான கேமராக்களை புரிந்துக்கொள்ளுவதற்கு, அதன் அடிப்படைத்தொழில்நுட்பத்தை புரிந்துக்கொள்ளுவது அவசியம் அல்லவா..? அதைத்தான் இப்பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்து கொண்டோம்.

டிஜிட்டல் கேமராக்களுக்கும், ஃபிலிம் கேமராக்களுக்குமிடையே இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள், புகைப்படக்கேமராக்களின் அடிப்படைக் கட்டமைப்பில் துவங்கி திரைப்படக்கேமராக்களின் வடிவமைப்பு வரை பார்த்தோம். இன்றைய நவீன டிஜிட்டல் கேமராக்களில் செயல்படும் நுட்பங்களை, அதன் பணிகளை, அவற்றிக்கிடையே இருக்கும் வேற்றுமைகளை, ஒற்றுமைகளைப்பற்றியும் பார்த்தோம். அதற்காக, இன்றைக்கு இத்துறையில் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு கேமராக்களை வரவழைத்திருந்தோம். DSLR -இல் துவங்கி Digital Movie Cameras வரை பல கேமராக்களை மாணவர்களின் பார்வைக்கு வைத்திருந்தோம்.  நாம் கடந்து வந்துவிட்ட ‘Film Camera’ வைப்பற்றி புரிந்துக்கொள்ளுவதற்காக அவ்வகை கேமரா ஒன்றையும் வரவழைத்திருந்தோம். 


வழக்கம் போல, பல்துறை சார்ந்தவர்களும், வெவ்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். பங்கேற்பாளர்கள் கோயம்புத்தூர், டெல்லி, மதுரை போன்ற நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்தும் வந்திருந்தது மகிழ்வூட்டியது.