முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்



இந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.

மெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.

நீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்குதான் தரப்பட்டிருக்கிறது இதுகாலம் வரை. காரணம், குற்றம் சாட்டப்பட்டவர் பெரும்பாலும் வெற்றியாளராக இருப்பார். அதனால் அவர் பக்கமே சமூகம் நிற்கும். எனில், அதில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற அறச்சீற்றம் எல்லாம் இருந்ததாக தெரியவில்லை. அது அந்த நேரத்து செய்தி அவ்வளவுதான். அடுத்து அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். இதான், நம் பொதுபுத்தியின் இயல்பு.

இப்போது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இச்சமூகம் (அல்லது சிலபேர்) தோண்டி எடுத்திருக்கிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்ற கேள்வியைக்கூட அது எழுப்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு எழுத முயல்கிறது. இங்கே சந்தேகத்தின் பலன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.

சட்டத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு வழக்கில் குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றால் ‘சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகத் தந்தே’ தீர்ப்பு சொல்லப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இங்கே அது எதிர்மறையாக இருக்கிறது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன..

1. குற்றம் சாட்டியவர் இன்று ஜெயித்து விட்டார். அதுவும் சமூகம் போற்றும் ஒரு நல்ல படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே முதல் காரணம். ஜெயிக்கவில்லை என்றால், அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருந்தவர்கள் தான் நாம்.

2. அன்று, கோபி அவர்கள் போராடிய போது, மௌனம் காத்தவர்கள் அல்லது அவருக்கு எதிராக பேசியவர்களுக்கு இன்று, ஏதோ ஒருவிதத்தில் மனச்சாட்சி சுடுகிறது. தங்களின் குற்ற உணர்ச்சிக்கு களிம்பாக, இப்பிரச்சனையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி உண்மை எது என்று நிறுவ வேண்டிய நோக்கமெல்லாம் இல்லை.

3. குற்றம் சாட்டியவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலமும், அவர்களின் சாதியும் (!?) இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அதனைப் பொறுத்தே, இங்கே இத்தனைக் கூச்சல் ஏற்படுகிறது.  கூர்ந்து கவனிக்க வேண்டியது கூட இல்லை, மேலோட்டமாக பார்க்கும்போதே அது தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு பேர், அதில் ஒருவர் மீது மட்டும், இன்று தீர்ப்பு எழுத முற்படும் போக்கை பார்த்தால் அதனை புரிந்துக்கொள்ளலாம். மற்றபடி நீதி, நியாயம், அறம், உண்மை எல்லாம் ஒரு பாவலா..!

ஏன், இத்தனை விரிவாக பேசவேண்டியதிருக்கிறது என்றால்.. இப்பிரச்சனையின் அடிநாதத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போதுதான், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏன் பிரயோகிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

சரி.. நான் விஷயத்திற்கு வருகிறேன். எனக்குத் தெரிந்த ‘கறுப்பர் நகரத்தின்’ கதையும் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் கதையும் ஒன்றா..!?

இதற்கு ஒருவார்த்தையில் ஆம்.. இல்லை என்று பதில் சொல்லுவதற்கு முன்பாக கொஞ்சம் பேச வேண்டியதிருக்கிறது. அதற்கு காரணங்கள் மூன்று..

1. எதையும் முடிவெடுப்பதற்கு முன்பாக தீர விசாரிப்பதே நலம்.

2. எனக்கு தெரிந்தது மட்டும்தான் உண்மை என்றில்லை. எனக்குத் தெரியாத சில விஷயங்களும் இதில் இருக்கின்றன.

3. ஒரு திரைப்படத்தை, அதன் மையத்தை, அதன் அரசியலை, அதன் கலைத்தன்மையை புரிந்துக்கொள்ளுவதும், விவாதிப்பதும், “சாம்பாரில் உப்பு இருக்கிறதா.? இல்லையா..?” என்பதைப்போன்று இலகுவானது இல்லை.

எனக்கு எப்படி ‘கறுப்பர் நகரத்தின்’ கதை தெரியும் என்பதற்கான பதில்.. நான் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். அப்போது, அத்திரைப்படத்தின் முழு திரைக்கதையையும் நான் படித்திருக்கிறேன்.

‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தின் களம், வட சென்னையும் அதன் மக்களும்தான். பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக, காட்சிகளை படித்துவிட்டு, அதற்கான ‘லொக்கேஷன்களை’ இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், மேலாளர் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய ஒரு குழு சென்று தேர்ந்தெடுத்து, மற்ற ஏற்பாடுகளுக்கு பின்பு படப்பிடிப்பிற்குச் செல்லுவோம். அதுதான் நடைமுறை. ஆனால், கறுப்பர் நகரத்தில் அது மட்டுமே நடக்கவில்லை. இயக்குநர் கோபி அவர்கள், தனியாக என்னை மட்டும் மீண்டும் வட சென்னை பகுதிகளுக்கு அழைத்துச்செல்லுவார். காரணம், ஒளிப்பதிவாளராக நான் வட சென்னையை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.  அப்போதுதான், அதன் களம் மற்றும் எதார்த்தம் முழுமையாக திரைப்படத்தில் வரும் என்று நம்பினார். அவருக்கு தன் மண்னின் நிலைமையை,அதன் இயல்பை தன் படைப்பில் அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆவல். அதனால், பல தடவை நாங்கள் இருவரும் வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றி வந்திருக்கிறோம்.

படித்தும், கேள்விப்பட்டும், மட்டுமே இருந்த வடசென்னையைப் பற்றி அப்போதுதான் எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. இதுகாலம் வரை, நம் திரைப்படங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் வட சென்னை உண்மையில் அதன் எதார்த்தத்திற்கு அருகில் கூட செல்லவில்லை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

குடிசையும், ஹவுசிங் போர்ட் அடுக்குமாடி கட்டிடங்களும் நிறைந்தப் பகுதிகள் அவை. ஒவ்வொரு கட்டிடத்திலும் பல நூறு குடும்பங்கள் வாழுகின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலைமையில் தான் இருக்கின்றன. அநேகமாக, இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி குப்பை கொட்டும் இடமாகத்தான் எல்லாவிடத்திலும் இருக்கிறது. ஜன நெருக்கடி நிறைந்த பகுதி கூட. அங்கிருக்கும் மக்கள், ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டிற்கு வெளியேதான் கழிக்கிறார்கள். அது குளிப்பதாகட்டும், சாப்பிடுவதாகட்டும், சண்டை இடுவதாகட்டும், விளையாட்டாகட்டும்.. எல்லாம்.. எல்லாம் தெருவில்தான். காரணம், வீட்டில் இடமிருப்பதில்லை. வீடு என்பது இரவில் உறங்குவதற்கு மட்டும்தான் போல.

எல்லாமே சிறிய வீடுகள். அதில், பெரும்பகுதி பொருட்களால் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இருட்டால் நிரம்பி வழியும் வீடுகள் அவை. இதுவே எனக்கு முதல் அதிர்ச்சி.. காரணம், படபிடிப்பிற்கு தேவையான, இடம், ஒளி போன்றவற்றை எப்படி இவ்வீடுகளில் கொண்டு வருவது. சிறிய இடம் அதனால், டிராலி, கிரேன் போன்ற துணைக்கருவிகளை பயன்படுத்த முடியாது. இருட்டால் சூழ்ந்த வீடுகள். படபிடிப்பிற்கு ஏற்ற அதிக ஒளி அமைத்தால், அது எதார்த்தத்திலிருந்து விலகியதாக இருக்கும்.. எனில் எப்படிதான் அதன் இயல்பு தன்மையை திரைப்படத்தில் கொண்டு வருவது.!? இதற்காகதான்.. இந்த புரிதலுக்காகத்தான் கோபி அவர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

மேலும், வட சென்னையின் பிரத்தியேக அடையாளங்களான.. ‘ஃபுட்பால் வாலிபர்கள்’, ‘பாக்சர்கள்’, ‘சுவர் ஓவியங்கள்’, ‘ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன்’, ‘முந்நாள், இந்நாள் ரவுடிகளின் சுவர் ஓவியங்கள்’, ‘அநேகமாக எல்லா வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள்’, ‘பிக்பாக்கட்டிலிருந்து.. கொலை வரை செய்து விட்டு இயல்பாக நடமாடிக்கொண்டிருக்கும் நபர்கள்’, ‘போலிஸின் பொய் குற்றச்சாட்டுகள், அதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்’, ‘வீட்டுக்கு ஒரு அரசியல்’, ‘ஏழ்மை’, ‘சுகாதாரமின்மை’, ‘வேலை வாய்ப்புகள்’, ‘அன்பு நிறைந்த மனிதர்கள்’, ‘எந்நேரமும் சண்டைக்கு தயாராகயிருக்கும் நபர்கள்’, ‘குழாயடி சண்டைகள்’, ‘அவர்களின் விழாக்கள்’, ‘சடங்குகள்’, ‘எளிய மனிதர்களின் நட்பு’.. என பலவற்றை எனக்கு கோபி அறிமுகப்படுத்தினார்.  அப்பகுதி ‘சாவு மேளம்’, இறப்புக்கு பாடப்படும் பாடல், அதன் தன்மை எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. தமிழகத்தின் பிறகு பகுதியின் வழக்கத்திலிருந்து இது வேறுபட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தில், ஃபுட்பால் இளைஞர்கள், பாக்சர்கள், சுவர் ஓவியங்கள், ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன், சாவு வீடு, அரசியல், அரசியல்வாதிகள் என எல்லாமிருந்தன. கதையை நான் இங்கே சொல்லலாமா என்று தெரியவில்லை. திரு.கோபி அவர்களே சொன்ன மாதிரி, அது ‘ஒரு ஃபுட்பால் பிளேயரின் வாழ்க்கை.. விளையாட்டில் சாதித்திருக்க வேண்டிய அவனை எப்படி ஒரு ரவுடியாக அந்த சூழல், அதன் அரசியல் மாற்றுகிறது’ என்பதுதான் கதை.

அது ஒருவனுடைய கதை அல்ல. அதுதான் அங்கே பெரும்பாலான ரவுடிகளின் கதை என்றார் கோபி. அவர்களின் வாழ்வில், ஃபுட்பால் உண்டு. பாக்சிங் உண்டு. அது அவர்களின் வாழ்கையோடு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. கறுப்பர் நகரம் என்று அப்பகுதிக்கு ஏன் பெயர் வந்தது என்பதைப்பற்றியும் கோபி விளக்கி கூறினார். இப்போதும், சர்வதேச தரத்தில் விளையாடக்கூடிய ஃபுட்பால் பிளேயர்கள் அங்கே உண்டு, பாக்சர்கள் உண்டு. இந்தியாவின் பெரும்பகுதியில் எப்படி கிரிகெட்டில் ஆர்வமிருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் இருக்கிறார்களோ அதுபோல, அங்கே பெரும்பாலான இளைஞர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் ஃபுட்பாலிலும், பாக்சிங்கிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள், தங்கள் பிள்ளைகள் அவ்விளையாட்டுகளில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இந்திய அளவில் போட்டிகளில் பங்கு பெறும் பல விளையாட்டு வீரர்களை சந்தித்தோம்.

சிறந்த விளையாட்டு வீரனாக திகழும் அவர்களின் ஒருவனைத்தான், அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் மற்றும் சூழல் ரவுடியாக மாற்றுகிறது என்பதுதான் கசக்கும் நிஜம் அங்கே. அதைத்தான், அதன் களத்தின் தன்மையோடு ஒரு திரைப்படமாக பதிவு செய்ய கோபி முயன்றார்.

எனக்கு அதன் கதையையும், களனையும் அறிந்த போது, உண்மையில் மலைப்பாகத்தான் இருந்தது. இதை எப்படி ஒரு திரைப்படத்தில் கொண்டுவருவது. அதுவும், ஒரு சிறிய படத்தில். அக்கதையை திரைப்படமாக்க பெரும் பொருட்செலவு ஆகும்..கூடவே கடின உழைப்பும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும்.  காரணம், அப்பகுதியின் வாழ்வியல் முறை, சன நெருக்கடி, இடப்பற்றாக்குறை போன்றவை, படிப்பிடிப்பிற்கு ஏற்றவை அல்ல. பல இடைஞ்சல்கள் உண்டு அங்கே. அவற்றிற்கிடையே ஒரு முழுமையான படத்தை எடுக்க அசாத்தியமான துணிச்சல் மற்றும் உழைப்பு தேவைப்படும்.

ஆயினும், எங்களுக்கு ஒரு உற்சாகம் இருந்தது. ஒரு வாழ்வியலை அதன் களத்தோடு பதிவு செய்யப்போகிறோம் என்ற எண்ணமே பெரும் ஊக்கமாக இருந்தது. உற்சாகமாக பணிகளை தொடர்ந்திட்டோம்.படபிடிப்பு நம்பிக்கையோடு நடந்தது.  ஆயினும், திட்டமிட்டபடி படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. பின்பு சில காலங்களுக்கு பிறகு அப்படத்திலிருந்து சில காரணங்களால் நான் விலகிக் கொண்டேன். மேலும் சில காலங்களுக்கு பிறகு அப்படம் கைவிடப்பட்டது என்ற தகவலும் அறிந்தேன். அதே நேரம், மெட்ராஸ்,கத்தி திரைப்படங்களின் சர்ச்சையும் செய்திக்கு வந்தது.

இது ஒருபுறமிருக்க, இடையே ‘அட்டக்கத்தி’ திரைப்படம் வெளியாகி, அதை நான் பார்த்த போது, எனக்கு கறுப்பர் நகரம் நினைவுக்கு வந்ததற்கு காரணம் பல உண்டு.. அதில் முதன்மையானது.. அப்படத்தில் பதிவாகியிருந்த வட சென்னையின் வாழ்வியல் மற்றும் களம். அதிலிருந்த உண்மை எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததனால், அதன் இயக்குநரை உயர்வாக மதிப்பிடவும் செய்தேன். மேலும், அட்டக்கத்தியில் இடம் பெற்ற பெரும்பாலான சூழல்களை (கவனிக்கவும்.. சூழல்களை என்றுதான் சொல்லுகிறேன்.. காட்சிகள் அல்ல) நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அதன் சாயலில், பின்புலத்தில் காட்சிகள் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கறுப்பர் நகரம் திரைக்கதையில் இருந்தன. ஒரே சூழலில், அதன் களத்தின் தன்மையில் காட்சிகளை வடிவமைப்பது என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம். அவருக்கு அச்சூழல் பழக்கமானதா இல்லையா என்பதைப் பொறுத்து அதன் கலைத்தன்மை மற்றும் இயல்பு தன்மை வெளிப்படும். அவ்வகையில் அட்டக்கத்தியில் நான் பல காட்சிகளைப்பார்த்தேன். அதனால் எனக்கு வடசென்னையின் களமும், கறுப்பர் நகரத்தின் நினைவுகளும் வந்து போயின. ஆனால், ஒருபோதும் அது கறுப்பர் நகரத்தின் காப்பி என்ற எண்ணம் எனக்கு எழவே இல்லை. படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதன் இயல்புதன்மை, வாழ்வியல் பதிவு மற்றும் கதை சொன்ன விதம் என்று அப்படம் எனக்கு நிறைவைக் கொடுத்தது. அப்படத்தைப்பற்றியும், அதன் கலைத்தன்மைப்பற்றியும் அப்போது என் வலைப்பூவில் எழுதினேன்.

பின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டம் வந்தது. அதுவும் வடசென்னை மற்றும் அதன் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட கதைகளம் என்பதனால், மீண்டும் கறுப்பர் நகரத்தின் நினைவும் கோபியின் நினைவும் வந்தன. குறிப்பாக ’அந்த சுவர்’ காட்டப்பட்டபோது, வட சென்னையின் பெரிய பெரிய சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் நினைவுக்கு வந்ததன. கறுப்பர் நகரத்தில் அச்சுவர் ஓவியம் மையக் கதாப்பாத்திரம் அல்ல. ஆனால், அப்படியான சுவர்கள் தம் கதையில் இருக்க வேண்டும் என்று கோபி விரும்பினார். சொல்லப்போனால், அதற்காக போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கறுப்பர் நகரத்தின் நாயகன் மற்றும் அவனின் நண்பர்கள் பாக்சிங் மற்றும் ஃபுட்பால் பயிற்சி எடுக்கும் பகுதியின் பின்புலத்திலிருக்கும் சுவர்களில் இப்பிரமாண்டமான ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கோபி விரும்பினார். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் என்று தெரியவந்தபோது, தயக்கம் வந்தது. அதை பேனராக வைத்துவிடுவோமா..? செலவு குறையும்..அல்லது அது அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்தது. ஆயினும் அது தமக்கு கண்டிப்பாக வேண்டும் என்று கோபி பிடிவாதமாக இருந்தார். காரணம் அது சொல்லும் அரசியல் மற்றும் சூழலின் தன்மை என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இதெல்லாம்தான் மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டமும், அச்சுவரும் நினைவுப்படுத்தியது. அதன் பின்புதான் மெட்ராஸ், கத்தி திரைப்படங்களின் கதைப் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது.

மெட்ராஸ் திரைப்படம் வெளியானது. நான் முதல் நாளே அப்படத்திற்கு சென்றிருந்தேன். காரணம், அப்படத்தின் முன்னோட்டம் ஏற்படுத்தியிருந்த ஆர்வம் மற்றும் ரஞ்சித்தும் அவரின் முந்தைய படமான அட்டக்கத்தியும். எல்லோருக்கும் தெரிந்ததுதான், மெட்ராஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம். அதன் கதை, திரைக்கதை,கலைநயம், வாழ்வியல் பதிவு, அரசியல் என பலத்தளங்களில் அப்படம் நம்மை வசீகரித்தது. நிறைவான திரைப்படமும் கூட. என்னைப் பொறுத்த வரை, அது ‘ரஞ்சித்’ என்கிற மகத்தான கலைஞனின் படைப்பு. அரசியலிலும், கலையிலும் பயிற்சியும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு அது. அவ்வளவுதான். அதைத்தாண்டி.. அது வேறெந்த மலரும் நினைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனக்கு.

இடையில், ஒரு உணவகத்தில் கோபி அவர்களை சந்தித்தேன். அதைப்பற்றி என்னுடைய ‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

பின்பு, கத்தி பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது. கோபி பேட்டிகளை கொடுத்தார். அதில் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டுதான், மேலே குறிப்பிட்ட கட்டுரையை எழுதினேன். அது அப்போது, மிக அதிகமாக ‘ஷேர்’ செய்யப்பட்டது. பல இணைய பத்திரிக்கைகள் நகல் எடுத்து எழுதியிருந்தன. காரணம், அதுநாள் வரை கோபி மாத்திரம் தனியாக தன் கதை திருடப்பட்டது.. திருடப்பட்டது என்று முறையிட்டுக்கொண்டிருந்தார். கோபியின் கதை தெரிந்தவர்களில், திரைத்துறைக்கு வெளியே இருந்த சில நண்பர்கள் அவருக்கு ஆதரவாக எழுதி இருந்தனர். ஆனால், திரைத்துறையில் அவரோடு பணிபுரிந்தவர்கள், கோபியின் கதை தெரிந்தவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. இந்நிலையின் என்னுடைய கட்டுரை, பெரும் சாட்சியாக மாறியது.  கோபியின் பக்கம் ஏதோ உண்மை இருக்கும்தான் போல என்று பெரும்பாலானோர் நம்ப முயன்றார்கள். (நம்பினார்களா என்று எனக்கு தெரியாது.. அல்லது நம்பத்தான் வேண்டுமா..?)

என்னைப் பொறுத்தவரை, கோபியின் வீடியோ பேட்டியைப் பார்த்துவிட்டு, அதைப்பற்றி பலர் பலவிதமாக பேசிக்கொண்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் பேசி இருந்த பெரும்பாலான தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் உண்மைதான் பேசுகிறார் என்று நான் கருதியததனாலும், எனக்கு தெரிந்த உண்மையை நான் எழுத வேண்டியது வந்தது. அவ்வளவே. மறுக்க முடியாத உண்மை இதுதான் என்று எனக்கு இப்போதும் தெரியாது. கோபியின் தகுதியை பற்றி பேசிய கட்டுரை அது. அவ்வளவுதான்.

இப்போது, அறம் திரைப்படத்திற்கு பின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் கதைப்பற்றிய சர்ச்சையில், என்னுடைய
‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையை மேற்கோள் காட்டி விவாதிக்கப்படுவதனால், நான் இப்போதும் பேச வேண்டியதாயிற்று.

என்னைக்கேட்டால், இருவேறு திரைப்படங்களை ஒப்பிடும் போது, அதன் கதை, அக்கதையின் மைய ஓட்டம், அதன் பின்புலம், களம், அதன் கதாப்பாத்திரங்கள், அதன் அரசியல், அதன் திரைக்கதை, அது பயணிக்கம் பாதை, நோக்கம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் ஒற்றைவரியை மட்டும் வைத்துக்கொண்டோ, அதன் கதாப்பாத்திரங்களின் ஒன்றுமையை மட்டும் வைத்துக்கொண்டோ, அதில் இடம் பெறும் சில காட்சிகளைக் கொண்டோ, வசனங்களை கொண்டோ மதிப்பிட முடியாது, கூடாது.

எனில், இவ்விரு படங்களின் கதைக் களம் ஒன்றாக இருப்பதனாலும், அதன் சில கதாப்பாத்திரங்களிலிருக்கும் ஒன்றுமையினாலும் இவை ஒரே கதை என்று சொல்ல மாட்டேன். இரண்டும் வெவ்வேறான கதைகள். இரு வெவ்வேறான கலைஞர்களின் வாழ்விலிருந்து வந்த படைப்பு என்றே நினைக்கிறேன்.

இப்போது கேளுங்கள்.. மெட்ராஸ் கதையும், கறுப்பர் நகரத்தின் கதையும் ஒன்றா..!? இல்லை என்பதே என் ஒரு வார்த்தை பதில். ஆனால்… இந்த ஆனாலுக்குதான் மேலே சொன்னவை அனைத்தும். இதைப் புரிந்துக்கொள்ளவே மேலே அத்தனை நீட்டி முழக்கி கதை சொல்ல வேண்டி வந்தது. ஆர்வமும், உண்மையிலேயே அக்கறையும் கொண்டவர்கள்.. கொஞ்சம் நிதானமாக படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.

அப்புறம், ரஞ்சிதத்திடம் கோபி அவர்கள் கதை சொன்னாரா இல்லையா..? சொல்லப்பட்ட கதையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி வேறுகதை ரஞ்சித் எழுதினாரா..? என்பது போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அவர்கள் சந்தித்தார்களா.. கதை பேசினார்களா.. என்பதெல்லாம் அவர்களுக்குதான் தெரியும், எனக்கு தெரியாது. இப்பிரச்சனையின் ஆணிவேரை அவர்கள்தான் பிடுங்கிப்போட வேண்டும். நாம் அல்ல.

மேலும், மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். ஒரு கதையை திருடி, மெட்ராஸ் போன்ற ஒரு படத்தை எடுக்க முடியுமா..!? வாழ்ந்து பார்க்காமல் அப்படியான படத்தை எடுத்துவிட முடியுமா..!? அதேப்போல ’அறம்’ போன்ற ஒரு படத்தை வேறொருவர் எடுத்துவிட முடியுமா? எழுதி விட முடியுமா? மக்களிலிருந்து வந்த கலைஞர்களால் மட்டுமே இப்படியான படைப்புகளைத் தந்திட முடியும் என்பதே உண்மை. அதை இன்று உலகம் ஏற்றுக் கொள்ளுகிறது.

என்னைப் பொறுத்தவரை.. பா.ரஞ்சித், கோபி நயினார் இருவருமே மகத்தான கலைஞர்கள். எளிய மனிதர்களாக.. எளிய மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து, அவர்களுக்கான கதையை, அவ்வாழ்க்கையிலிருந்தே எடுப்பவர்கள். அவர்கள் இருவரையும் வாழ்த்துவதும், அவர்கள் தொடர்ந்து இயங்கிட உதவுவதுமே நாம் செய்யக்கூடிய அறச்செயலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி..!

- விஜய் ஆம்ஸ்ட்ராங்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,