முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்


‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்தில் அப்படியான இழப்பீடோ, அங்கீகாரமோ புகார் தெரிவித்தவருக்கு தரப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. ஆக, தொடர்ந்து இப்படியான புகார்கள் தெரிவிப்பவர்கள் பலனுக்காத்தான் இதை செய்கிறார்கள் என்றவாதம் அடிபட்டுப்போகிறது. எனில் தொடர்ந்து இப்படியான புகார்கள் ஏன் வந்துகொண்டே இருக்கிறது? என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. ஆனால் புகார்களில் உண்மையும் கூட இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் ஒருபுறமிருக்கட்டும்.

தற்போது, கத்தி சிக்கலில், புகார்தாரரான இயக்குனர் கோபியை, நான் நன்கு அறிவேன். காரணம் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய 'கருப்பர் நகரம்' திரைப்படத்தின் இயக்குனர் அவர். அப்படத்தையும், மெட்ராஸ் படத்தையும் இணைத்து கடந்தமாதம் இதே இணையத்தில் பல விவாதங்கள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் உண்மை நிலை என்ன என்பதைப்பற்றி பல நண்பர்கள் கேட்டார்கள், பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட உரையாடலில் என் கருத்தை பகிர்ந்துக்கொண்டேன். பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு காரணம், அப்படத்தைப்பற்றி கோபி அவர்களே பொதுவெளியில் கருத்து சொல்லவில்லை என்பதும், மேலும் அதில் அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்பதும்தான். நமக்குத் தெரிந்ததை எல்லாம் பொதுவெளியில் சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ஆனால் இப்போது கத்தி கதையில், எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்த வீடியோவில் இயக்குனர் கோபி சொல்லும் செய்திகள் பெரும்பாலானவை நான் முன்பே அறிந்ததுதான். இவற்றைப்பற்றிய தகவல்களை கருப்பர் நகரம் திரைப்பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை, வெறும் தகவல்களாக மட்டுமே அவை பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. காரணம், அப்போது அவர் ஒருபடத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர். அதைத்தவிர்த்து வேறதுவும் முக்கியமானதில்லை. அப்போது ஏழாம் அறிவு பட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாக நினைவு. (அதன் தலைப்பு பற்றியும் அப்போது என்னிடம் குறிப்பிட்டார் கோபி. "ஏழாம் அறிவு என்பது போரை குறிக்கிறது" என்றார்) தான் இயக்குனர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், பின்பு அது தள்ளிபோய் விட்டதாகவும் சொன்னார். திரைத்திறையில் இது மிகவும் சகஜம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தான் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக முருகதாஸை சந்தித்தது பற்றி ஓய்வு நேர உரையாடல்களில் அவர் பகிர்ந்துக்கொண்டார். மேலும் அது விவசாயிகளின் பிரச்சனைப்பற்றியது என்பதும் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுப்பதைப் பற்றியது என்பதைக்கூட சொன்னார். மேலும் சில தகவல்களை அவர் அப்போது பகிர்ந்துக்கொண்ட போதும், அவை எனக்கு இப்போது நினைவிலில்லை. பின்பு அவற்றைப்பற்றி நான் மறந்து கூட போனேன். காரணம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு கோபிக்கும் தொடர்பில்லை என்பதுதான். சில காரணங்களால் கருப்பர் நகரம் படம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. நான் மற்ற படங்கள் செய்ய வந்துவிட்டேன். இப்போது, கோபியின் பேட்டியை பார்த்தபோதுதான், இவற்றைப்பற்றி அவர் அன்றே பகிர்ந்துகொண்டது நினைவிற்கு வருகிறது.

அப்பேட்டியில் கோபி பொய் பேசவில்லை என்பது என் எண்ணம். காரணம், அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு முன்பே சொல்லப்பட்டவை. கத்தி படமொன்று உருவாகும், அதில் விஜய் நடிப்பார் போன்ற தகவல்கள் தெரிவதற்கு முன்பே சொல்லப்பட்டவை. அப்போது அந்த தகவலுக்கு எந்த மதிப்புமில்லை. வெறும் தகவல்களாக, பொழுதைக்கடத்தும் வேளைகளில் சொல்லப்பட்டவை அவ்வளவுதான். அக்கதை படமாகும் என்ற நம்பிக்கை கூட கோபியிடமில்லை அப்போது. இப்படியான பல நிகழ்வுகள் திரைத்துறையில் உண்டு.. ஒரு கதையை சொல்லி, அது தேர்வு செய்யப்பட்டு, படமாக்கும் முயற்சிகள் நடந்து, பின்பு அது அப்படியே கிடப்பில் போடப்படுவது திரைத்துறையின் மிகச்சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.

மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கறுப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப்பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த 'ஆவணப்படங்களை' மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத்து மனம் வேதனைக்கொண்டது.

இவ்வளவு அறிவு கொண்ட கோபி ஏன் தன் கதையை 'காப்புரிமை' பெற்று வைத்திருக்கவில்லை என்ற வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. ஏராளமான துறைகளில் உலகளாவிய அளவில் காப்புரிமை வழக்குகளின் நிலை  (Apple vs Samsung) எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இங்கே கலைத்துறையில் அது உதவாது என்பது மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமுமற்றது என்பதை நாம் உணர வேண்டும். காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவை, அத்திரைப்படம் திரைக்கு வரும்வரை திருத்தம் செய்ய சாத்தியம் கொண்டவை. மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாகவே பெரும்பாலானோர் தன் கதை இதுதான் என்று அறுதியிட்டு காப்பீடு செய்ய முயலுவதில்லை. மேலும் தமிழ்த்திரையுலம், அப்படி ஒன்றும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் துறையல்ல. தனக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற தவிப்புக்கு, அத்துணை கலைஞர்களையும் உள்ளாக்கும் துறை இது. ஆகையால், தன் கதையை ஏன் கோபி முன்பே காப்புரிமை செய்து வைத்திருக்கவில்லை என்ற வாதம், வீண் என்பதை உணர்க.

முடிவாக, கத்தி சிக்கலை ஒட்டிய அவரின் பேட்டியைப்பார்க்கும் போது, அதை வழக்கமான பணம் பிடுங்க நடத்தப்படும் தகிடுத்தத்தமாக கருதி ஒதுக்கிச்சென்று விட என்னால் முடியவில்லை. அப்பேட்டியின் முடிவில், "நான் பொய் சொல்லுகிறேன் என்பதை கண்டுபிடிக்கவாவது விசாரணை நடத்துங்கள்" என்ற அவரின் வாதம் ஞாயமானதாக எனக்குப்படுகிறது. மேலும் தான் போராடுவது, பணத்திற்காக மட்டுமில்லை, அது என் கதை என்ற அங்கீகாரத்திற்காகவும்தான் என்று அவர் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அங்கீகாரத்திற்காக போராடும் சமூகத்திலிருந்தும், அதன் போராட்ட அரசியலிலிருந்தும் வந்த மனிதர் அவர். நீதி மன்றம் எப்போதும் நீதியை நிலை நாட்டிவிடும் என்ற நம்பிக்கையை கொடுக்கவியலா தன்மைக்கொண்டது, என்ற முன்னனுபவம் கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதனால், சமூகத்தின் மீதும், திரைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. மற்றவர்கள் எப்படியோ, கோபியைப் பொருத்தவரை, அவர் தகுதியானவர் என்பதை அறிந்தவன் என்பதனாலேயே இக்கட்டுரையை நான் எழுத வேண்டியதாகிற்று.

சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த்திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.


கருத்துகள்

  1. அருமையான பதிவு. கோபி அவர்களுக்கு அவருக்கான அங்கீகாரம் விரைந்து கிடைக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கோபி அவர்கள் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக எனக்கு நன்கு அறிமுகம் உள்ளவர். அவர் அப்போது தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்காக ‘குதிர” என்ற திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார். அந்த முயற்சி அவருக்கு பலனளிக்கவில்லை. அதன்பின் நண்பர் ரெங்கராஜனிடம் ”மூத்தகுடி’ என்ற கதையை சொல்லி அவரை தயாரிக்க உதவும்படி கேட்டிருந்தார். அந்த ‘மூத்தகுடி’ தான் இன்று கத்தியாக தீட்டப்பட்டிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  3. கோபி எனக்கு தீபாவளியன்று போன் செய்து கதை திருட்டைப் பற்றி சொன்னார், நான் உங்கள் பக்கம் தோழர் என்றேன். இப்போது உங்கள் கட்டுரை அவரின் வலியை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. உங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. Karuppar Nagaram Iyakkunar Thiru Natraj Gopi allava, Ivar Minjur Gopi allava Iruvarum Ondru thaana??

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கட்டுரை ஆறுதல் அளிக்கும் வண்ணம் உள்ளது.எனது கதை கரு ஒன்று தற்போது ஒரு பெரிய இயக்குனரால் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதாக சில உதவி இயக்குனர்கள் மூலம் அறிந்தேன்.எதிர்கொள்ள முடியாமல் மௌனமாக இருக்கின்றேன்.அந்த படம் வெளி வந்தால் எனை சுற்றி உள்ள நெல்லை நண்பர்கள் மட்டும் எனது கூற்றை உண்மை என்று அறிவார்கள்.என்ன செய்வது ஏழை சொல் இந்த நாட்டில் அம்பலத்தில் ஏறாது.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கட்டுரை ஆறுதல் அளிக்கும் வண்ணம் உள்ளது.எனது கதை கரு ஒன்று தற்போது ஒரு பெரிய இயக்குனரால் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதாக சில உதவி இயக்குனர்கள் மூலம் அறிந்தேன்.எதிர்கொள்ள முடியாமல் மௌனமாக இருக்கின்றேன்.அந்த படம் வெளி வந்தால் எனை சுற்றி உள்ள நெல்லை நண்பர்கள் மட்டும் எனது கூற்றை உண்மை என்று அறிவார்கள்.என்ன செய்வது ஏழை சொல் இந்த நாட்டில் அம்பலத்தில் ஏறாது.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான கட்டுரை,உங்கள் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒரு உண்மையான படைப்பாளி தோற்கக்கூடாதே என்று நடந்த உண்மையைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி , 'கறுப்பர் நகரம்' பெயர் சரிதானா?கருப்பர் நகரம் என்பது தானே சரியானது blackers town ற்கு

    இவருடைய அசல் கதையை முருருகதாஸ் முறையாக வாங்கி ஹீரோவுக்கான சாகசங்களுமில்லாமல் படமாக்கியிருந்தால் தமிழ்சினிமாவில் ஒரு நல்ல படம் தேறியிருக்கும்,ஒரு படைப்பாளியும் அவன் குடும்பமும் பஞ்சம் பிழைத்திருக்கும் ,ஒரே உதாரணம் இவரின் மூலக்கதையின் நாயகன் பன்றி மேய்ப்பவன்,அவனிடம் ஆயிரம் பன்றிகள்,உண்டு,

    அவனின் குடும்பத்தின் வருமானமே அப்பன்றிகளின் விட்டைகளை இயற்கை எருவாக்கி உள்ளூர் விவசாயிகளுக்கு விற்பதில் தான் கிடைக்கிறது,அப்படிப்பட்ட ஒருவனின் நிலமும்,அவன் நம்பியிருக்கும் விவசாயிகளின் நிலங்களும் பன்னாட்டு நிறுவனத்தால் கபளீகரம் செய்யப்படுகையில் வெடிக்கும் உள்ளக்குமுறல் மெல்ல பெரிதாகி அந்த ஊரையே திரட்டிப் போராட வழி வகுக்கிறது, இது தான் திரி

    ஆனால் பிள்ளையார் செய்ய வைத்த களிமண்ணில் குரங்கைப் பிடித்திருக்கிறார் முருகதாஸ்,அவர் பாணியிலேயே சொன்னால் படம் வேகாத இட்லியாகிவிட்டது,இப்படித்தான் மூலக்கதையை யாரிடமோ திருடி அதை கதை இலாகா [?] விவாதத்தில் முடிந்த வரை மசாலா சேர்த்துப் பாழடிக்கும் வேலை தமிழ் சினிமாவில் பரவலாக நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. Karthikeyan Vasudevan sir.. கருப்பர் நகரம் என்பதுதான் சரி.. பிழைதிருத்தம் செய்துவிட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
  9. S. Muthamil அவர்களுக்கு. கதைக்கரு ஏராளமான படங்களுக்கு ஒன்றுதான். உலகிலேயே மொத்தம் 36 கதைகள் தான் மாற்றி மாற்றி இருக்கின்றன என்பதை விளக்கும் ஒரு புத்தகமே உள்ளது. உடனடியாக உங்களின் கருவிற்கான திரைக்கதை எழுதுங்கள். அல்லது உங்களின் கதைக்கருவையே பல வடிவங்களில் எழுதி உங்களுக்கு acknowledgement உடன் கூடிய பதிவுத்தபாலில் அனுப்பி அந்த தபாலை பிரிக்காமல் acknowledgement சான்றுடன் வைத்திருங்கள். எதிர் காலத்தில் வழக்கிற்கு மிகவும் உதவும்.

    முழுமையாக எழுதப்பட்ட திரைக்கதைகளையே திருடி விழுங்கி ஏப்பம் விடும் முதலைகளுக்கு முன் கதைக்கருவை தங்களுடையது என்று நிரூபிப்பது சிரமம் என்பதை மட்டும் முதலிலேயே உணருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. உண்மையை உலகுக்கு உணர்த்தும் தங்களின் முயற்சி வெற்றி பெறும் !
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு தோழர் கோபி அவர்களை 20 ஆண்டுகளாக எனக்கு பழக்கம் கருப்பர் நகரம் . குதிரை .மூத்தகுடி , போன்ற கதைகளை 8 வருடங்கள் முன்னால் ஏங்களிடம் சொல்லபட்ட கதை அதிக நேரங்களில் விம்கோ இரயில் நிலையங்களில் கதையை பற்றி எங்கள் தோழர்கள் அனைவரும் விவாதித்து இருக்கிறோம் .... உண்மையை தாங்கள் பதிவிட்டியதற்கு மிக்க நன்றி......நன்றி

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு தோழர் கோபி அவர்களை 20 ஆண்டுகளாக எனக்கு பழக்கம் கருப்பர் நகரம் . குதிரை .மூத்தகுடி , போன்ற கதைகளை 8 வருடங்கள் முன்னால் ஏங்களிடம் சொல்லபட்ட கதை அதிக நேரங்களில் விம்கோ இரயில் நிலையங்களில் கதையை பற்றி எங்கள் தோழர்கள் அனைவரும் விவாதித்து இருக்கிறோம் .... உண்மையை தாங்கள் பதிவிட்டியதற்கு மிக்க நன்றி......நன்றி

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பதிவு பற்றி உங்களின் பெயரை இணைத்து ஒரு கானொளி உருவாக்கி youtube - இல் போட அனுமதி கிடைக்குமா ? சமீபத்தில்தான் kollywoodgalatta என்ற Channelil கோபி அவர்களுக்கு ஆதரவாக காணொளி செய்தோம். 48000 பின்தொடர்பாளர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். உண்மையை எடுத்து செல்ல ஆவலாக இருக்கிறோம். திரைத்துறையில் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் செய்தி, நீதிக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

    பதிலளிநீக்கு
  14. Tamil Cine News. நன்றி. இப்பதிவிலிருப்பதைப் பற்றி போடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

    பதிலளிநீக்கு
  15. பதில் கூறியதற்கும், அனுமதி தந்ததிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. S Muthamil உங்கள் கதையை இன்னொருவர் எடுத்து வெளியிடுவதற்கு முன்னால் ஒரு தொடராக இணையத்தில் வெளியிடுங்கள்.பேஸ்புக்,வலைப்பதிவு போன்றவற்றை பயன் படுத்தலாமே.பணம் கிடைக்காவிட்டால் கூட அங்கீகாரமாவது கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  17. @Narayanan, கோபி எப்படி முருகதாசை நம்பி கதை சொன்னார் என்று தெரியவில்லை. நான் முருகதாசிடம் கதை சொல்லவேண்டும் என்று கூறிய பொழுது என் நண்பர்கள் என்னை தடுத்து விட்டார்கள். அதே போல் தனன்ஜெயனிடம் நான் சென்ற போது அவர் உங்களுடைய ஸ்க்ரிப்ட குடுங்க படிச்சிட்டு சொல்லறேன் என்று சொன்ன போது நான் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் எதற்கு இதை கூறுகிறேன், எனில் எட்டு வருடம் மும்பையில் இருந்துவிட்டு மிக குறைந்த தொடர்புகளுடன் இருந்த எனக்கே முருகதாசை பற்றி கூற நண்பர்கள் இருந்த பொழுது எப்படி கோபி முருகதாசை நம்பினார் என்று எனது மனதில் கேள்வி எழுந்தது. இதை பற்றி விஸ்வாஸ் சுந்தர் எதாவது வாய் திறந்தாரா?

    பதிலளிநீக்கு
  18. Iyakkunar Gobibkku udhava samooga valaithalangalil pakkangal uruvaaki emadhu viruppugalai valanga udhavi seiiungal

    பதிலளிநீக்கு
  19. Actually this is not the first time ARM resorts to plagiarism!!!

    Just think Gajini - Memento 'similarities' !!!

    Even Ramana and Thupakki were good mainly because of his associate directors. Especially VZ Durai - Original Name Peer Moideen. Durai is the man behind some movies with good and different screenplay including Mugavari, Nepali and Thotti Jaya. Also you can see him in a small but significant role in Ramana - as a part of ACF, the student who requests Ramana to 'Kill' his father fast without inflicting much pain to his father.

    Having said that, such claims (like the one made by Gopi now) could have been easily proved if the creator of the original story takes some precautions.

    For Instance,

    a. The creator should send himself the story through a registered post and should not open the cover and preserved. In case the same story is stolen by anyone, the ownership of the story can be proved by submitting the sealed cover (which will contain post office's date seal on it) as an evidence to the court.

    b. More simple - Can send the softcopy of the story to his own mail id (provided the same is not accessible by any others)
    The date of mail can act as a proof of the creator's claim.

    c. Can apply for copyright - need to spend money.

    But unfortunately in India, the law says that even if there are just 4 or more 'significant' differences between the two stories, the same will not be considered as plagiarism !!!!!!!

    BUT SEE THE IRONY OF THE ENTIRE STORY !!!!!

    A DIRECTOR HAS CONVEYED A STORY OF "SELFISH AND SELF-CENTERED" CITY BRED PEOPLE WHO 'EXTRACT' THE RIGHT AND LIVES OF 'APPAAVI' VILLAGERS.

    BUT THE STORY OF KATHTHI SEEMS TO BE STOLEN BY A"SELFLESS" VILLAGER (FROM KALLAKURICHI - ARM) FROM A "SELFISH" CITY-BRED MAN (FROM MINJUR, CHENNAI) !!!!!

    பதிலளிநீக்கு
  20. பதிவிற்கு நன்றி....ஒரு வழக்கை பாதிக்கப்பட்டவரே வாதாட நமது சட்டத்தில் வழி உண்டு. மிகவும் எளிய வழி. அதற்கான ஒரு வழிகாட்டி தளத்தின் முகவரியை இணைத்துள்ளேன். http://www.neethiyaithedy.org/ அவர்கள் பதித்த நூல்களை படித்தால் எளிமையாக வாதாடி வெல்லலாம் . தோழர் கோபியிடம் இந்த தகவலை பகிரவும்.. நிச்சயம் உதவியாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  21. நானும் அந்த பதிவை பார்த்தேன்... அவர் கூறுவது உண்மை என்பது அவரது பேச்சிலிருந்தே புரிகிறது. உண்மை உலகம் அறியும்... அறிய வேண்டும்... அப்போதுதான் இது போன்ற திருடர்கள் பயப்படுவார்கள்.சிறுவர்களுக்கான தொடர் டோரா புஜ்ஜி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்... அதில் ஒரு குள்ளநரி அவ்வபோது திருட வரும்... அப்போது குழந்தைகளை பார்த்து டோரா ... குள்ள நரி திருடாதேன்னு சொல்லுங்க என்று சொல்லுவாள்... பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும்... குள்ளநரி திருடாதே என்று சொல்லும் .... அதை போல நாமும் இது போன்ற குள்ளநரிகளை பார்த்து பாதிக்கப் பட்டவர்களுடன் நாமும் ‘’குள்ளநரி திருடாதே என்று சொல்லவேண்டும்...அப்போதும் குள்ளநரிகளின் திருட்டு குறையும்

    பதிலளிநீக்கு
  22. ஆம் நண்பரே...நானும் கோபியை அறிவேன்..அவர் திரை உலக நெருக்கடியை தாக்குபிடிக்கவில்லை என்பதை விட..சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளிகளை இந்த கலை உலகம் விரட்டுகிறது என்பது தான் உண்மை.உங்கள் பதிவு நேர்மையாய் நெஞ்சம் தொட்டது நன்றி

    பதிலளிநீக்கு
  23. So what his Story is Stolen? Where did Gobi Took the Story From? Did he created the Story by himself? If he has given the Full Story in the court Before the Movie Release..Why he is worries? he can easily win the case! What is the prove that he has that he saw Muragadoos!!! He seems like a person knows about a lot of things...Doesn't he know he needs to protect his stories? If he is a good story maker? Where is his movies? Where is his stories? No matter how many people support...or nomatter what tactics Gobi use....he is trying to get a name and symapthy for himself....

    பதிலளிநீக்கு
  24. படைப்பாளி தோழர் கோபிக்கு உரிய நியம் கிடைக்க உணர்வுடன் ஓன்று கூடுவோம்.

    பதிலளிநீக்கு
  25. படித்தேன் தோழர். மிக அக்கறையின் பால் எழுதுப்பட்ட கட்டுரை. அதுவும் நீங்கள் youtube ல் tamil cine news க்கு அனுமதி கொடுத்ததை நான் முக்கியமான செயல்பாடாகக் கருதுகிறேன்.
    உங்களை நண்பனாகப் பெற்றதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தோழர் கோபி நம்பிக்கையை தளரவிடவேண்டாம்.

    -வீரா

    பதிலளிநீக்கு
  26. Finally a creator wins.......ARAM is a big hit. Thankyou vijay sir....and all supporters and friends.

    பதிலளிநீக்கு
  27. Timely written article with a thrilling flashback. Gopi has won finally. ARAM SUPER HIT.

    He has proved himself - shown
    the world he is better director & creator than AR M Doss. I hope the coward 'unknown' who had commented against Gopi now realizes his blunder.































    பதிலளிநீக்கு
  28. Thanks to you for bringing out the forgotten KATTHI issue now, so that people will now realize the truth about the truthfullness of Gopi.

    பதிலளிநீக்கு
  29. Thanks to you for bringing out the forgotten KATTHI issue now, so that people will now realize the truth about the truthfullness of Gopi.

    பதிலளிநீக்கு
  30. நல்ல பதிவு. இன்று இயக்குனர் கோபி அவர்கள் 'அறம்' திரைப்படம் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...