முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடக்கமுடியாத வலிகளுண்டு

அவர் இறந்துபோனபோது வயது 55 இருக்கும். என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் "நா.இராமகிருஷ்ணன்", ஊர் "கீக்களூர்" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.


அவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி.  எதிர்பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச் செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகை வந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதித்திருக்கவில்லை.




இந்த மரணமே என்னைப் பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடியிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல, பெரிய குடும்பஸ்தரும் கூட. எங்கள் பாட்டியின் பெயர் "லட்சுமி அம்மாள்", (இவர் என் தந்தையின் அக்கா.  அக்கா மகளையே என் தந்தை மணமுடித்திருந்தார்.) இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். ஆறு பெண்கள், மூன்று மகன்கள். என் அம்மா மூத்தவர், அவருக்கு அடுத்து "அரசு சித்தி", அப்புறம் "மணி மாமா", "முருகன் மாமா", "தனம் சித்தி", தமிழ் சித்தி, "மாறன் மாமா", "விழி சித்தி", "சித்திரா சித்தி" என்று கலந்துக்கட்டிய வரிசையில் பிள்ளைகள். இதில் அரசு சித்திக்கும், தனம் சித்திக்கும் திருமணம் ஆகியிருந்தது. அரசு சித்திக்கு இரண்டு மகன்கள். "கவாஸ்கர்" மற்றும் "கார்த்திக்". இந்த இரண்டுபேரும்தான் என் தோழர்கள், விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்குச்செல்லும் போதெல்லாம் இவர்களும் வந்திருப்பார்கள்.  நானும், என் அண்ணன் "லெலினும்" இவர்களோடு சேர்ந்தே சிறுவயதைக் கடந்தோம்.  விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு எங்களை அனுப்பி வைப்பதில், எங்கள் பெற்றோர்கள் ஒரு சிறு வரைமுறை வைத்திருந்தார்கள். அதாவது எங்கள் வீட்டிலிருந்து இருவரும், சித்தி வீட்டுலிருந்து இருவரும் என அனைவரும் ஒன்றாக தாத்தா வீட்டிற்கு அனுப்பப்படுவதில்லை, இங்கிருந்து ஒருவர், அங்கிருந்து ஒருவர் என்ற முறை இருந்தது. அதாவது நான் போகும் போது கவாஸ்கரோ, கார்த்தியோ இருவரில் ஒருவன் வருவான், அண்ணன் போகும் போது மற்றவன் வருவான். அண்ணன், தம்பி இருவரும் பெற்றோர் பார்வைகளுக்கப்பால் இருக்கும் போது சண்டைபோட்டுக்கொள்ளும் சாத்தியம் அதிகமிருப்பதினால் இந்த ஏற்பாடு. அதனால் நாங்கள் நான்குபேரும் ஒரே சமயத்தில் தாத்தா வீட்டில் இருந்ததில்லை, விஷேச காலங்களைத் தவிர. 

ஆனால் இன்று நாங்கள் நான்குபேரும் அங்கே இருந்தோம்.


உறவுகள் அனைத்தும் கூடியிருந்தது. "தாத்தாவை பார்த்தியாடா" என்று என்னைக் கட்டிக்கொண்டு அம்மா, பாட்டி, சித்திகள் வரை அனைவரும் அழுதார்கள். எல்லாரும் அழுதுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரும் தாத்தாவை அவர்களுக்கும் தாத்தாவிற்குமான உறவு முறையை வைத்து அழைத்து அழுதுகொண்டிருந்தார்கள். அப்பா, மாமா , அண்ணா, தம்பி என்று பல உறவுமுறை அழைப்புகள், விசும்பல்களுக்கிடையேவும், அழுகைக்கிடையேவும் கேட்டுக்கொண்டிருந்தது.  நான் என் துக்கம் தாண்டி இதை கவனிக்கத் துவங்கினேன்.  ஏனெனில் என் மனதில் தாத்தா என்ற அடையாளப் பெயர்தான் அவருக்கிருக்கிறது, மற்றவர்கள் அவரை வேறு அடையாளப்பெயர் சொல்லி அழைப்பது இப்போதுதான்  என் கவனத்திற்கு வருகிறது. அம்மாவோ, சித்திகளோ, பாட்டியோ "தாத்தா கூப்பிட்டார், தாத்தாவிடம் கேள், தாத்தா....தாத்தா..." என்றே எப்போதும் அவரை அடையாளப்படுத்திருக்கிறார்கள். அவர்களுக்கான உறவுமுறையில் அவரை அழைத்ததை நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் அல்லது அது அவ்வளவாக என் மனதில் பதியவில்லை.  ஆனால் இப்போது அதை முழுமையாக கவனிக்க முடிந்தது. மரணித்த மனிதனிடமிருந்துதான் நாம் நம் உறவை புதுப்பிக்கிறோம் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயும் இல்லாத அளவிற்கு உறவுமுறை வைத்து அழைப்பதை மரணம் சம்பவித்த வீட்டில் அதிகமாக பார்த்திருக்கிறேன்.


இப்படி ஒவ்வொருவரும் என்ன சொல்லி அழைக்கிறார்களென பார்க்கத்துவங்கினேன்.  பார்த்துக்கொண்டு வரும் போதுதான் அந்தக் குரலை கேட்டேன்.  "மகனே.. மகனே.." என்று அரற்றிக்கொண்டிருந்தாள் அந்தப் பாட்டி, ஆம் அவர்கள் என் தாத்தாவின் அம்மா.  ஐம்பத்தைந்து வயதைக் கடந்த, பல பிள்ளைகளும் பேரன்களும் கொண்டிருந்த என் தாத்தாவிற்கு அம்மா என்ற உறவு அவள்.  உயிரோடு இருந்தாள், தன் கண் முன்னேயே தன் ஒரே மகன் இறந்துபோவதைக் காண்கிறாள். ஆண்டு அனுபவித்த மகன், மரணவயதை நெருங்கியவன்தான் ஆனாலும், ஒரு தாயின் கண் முன்னே மகன் மரணித்துப்போவது என்பது எந்தத் தாயாலும் தாங்கிக் கொள்ளமுடியாதது.  அழுதுக்கொண்டேயிருந்தாள், "மகனே மகனே" என்றும், சில சமயங்களில் வாய்க்குள்ளாகவும், சட்டென்று பெருங்குரலெடுத்தும் கத்தினாள், " நான் பாவி ஆயிடேன்.., நான் பாவி ஆயிட்டேன்.. நீ செத்து, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே? அந்த எமன் என் உயிரை எடுத்துக்கிட்டு உன்னை விட்டு இருக்கக் கூடாதா?" என்று தாத்தாவின் உடலைப்பார்த்துப் பார்த்து அழுதாள்.  துக்கம் மறந்திருந்த எனக்கு அவளின் அழுகை என்னவோ செய்தது. விசும்பத் துவங்கினேன், அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு துக்கம் அதிகமாயிற்று, அழத்துவங்கினேன். அதுவே நான் என் வாழ்வில் முதன் முதலில் கண்ட பிரிவின் வலி என்று இப்போது உணரமுடிகிறது.


அந்தப் பாட்டியின் (கொள்ளுப்பாட்டி) பெயர் "அன்னம்மாள்". கொள்ளுத்தாத்தா (நாராயண வர்மா) அவளை ஏறக்குறைய காதல் திருமணம் செய்திருந்தார். அதாவது ஒருதலைக் காதல், அவர் இளம்பிராயத்தில் குதிரையில் சுற்றிக்கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் ஆடு மேய்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணைக் கண்டார், கண்டதும் காதல், அந்தப் பெண் சிவப்பாக,ஒல்லியாக, நெடுநெடுவென வளர்ந்து அழகாக இருந்தாளாம்.  நேரே வீட்டுக்கு வந்தவர் முதல் வேலையாக அந்தப் பெண்ணைப்பற்றி வீட்டில் சொல்லிருக்கிறார். வீட்டில் பல காரணங்கள் சொல்லி தடுத்திருக்கிறார்கள்.  அதில் ஒன்று ஏழ்மை, இவர் வீடு வசதியான வீடு, அவளுடையதோ ஆடு மேய்த்து வாழும் குடும்பம். மற்றொரு காரணம் மிக முக்கியமானது. அவள் அப்போது வயதிற்கே வந்திருக்கவில்லை.  ஆனாலும் அவர் கேட்கவில்லை, அடம்பிடித்து அவளை திருமணம் செய்து எங்களுக்கெல்லாம் கொள்ளுப்பாட்டியாக்கினார். பாட்டி வயதுக்கு வந்தது என் தாத்தாவின் வீட்டில்தானாம்.


அவளை அவர் மிகச்செல்லமாக பார்த்துக்கொண்டாராம், எந்த வேலையையும் செய்ய விடமாட்டாராம், ராணியைப்போல் வைத்திருந்திருக்கிறார், இருக்காதா பின்னே, கண்டதும் காதலிக்க வைத்தவள் அல்லவா!. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அதுதான் என் தாத்தா. அவர் பிறந்து ஒன்றரையாண்டுகளிலேயே என் கொள்ளுத்தாத்தா ஏதோ வியாதியில் மரணமடைந்திருக்கிறார். அதுவே அவளின் சந்தோஷமான காலத்தின் கடைசி நாளாயிற்று. அதன் பிறகு எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் மறுமணம் செய்துக்கொள்ளவில்லை, தன் மகனே போதும், அவனுக்காகவே வாழ்வேன் என்று வாழ்ந்தவள். மகன் வளர்ந்து, திருமணம் முடித்து, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என பெற்றெடுத்த போது, அவர்களையெல்லாம் தூக்கி வளர்த்தவள்.


அவள் யாருக்காக வாழ்ந்தாளோ, யாரைத் தன் வாழ்வாக நினைத்தாளோ அந்த மகன் தான் இப்போது இறந்துபோனது. நினைத்துப்பாருங்கள், நாம் வாழ்வில் பல துன்பங்களைக் கடந்துவந்திருக்கிறோம், ஆனால் சிறுவயதிலேயே கணவனை இழந்து, மகனுக்காக வாழ்ந்த அந்தத் தாய் கண்முன்னேயே தன் மகனைப் பறிகொடுத்த துயரம், இருந்த ஒரே இரத்த உறவையும் இழந்த துக்கம் எத்தகைய பெரிது, எவ்வளவு வலி. எந்த வலியையும் தாங்கிகொள்ளலாம், கடந்து போக வாழ்க்கை மீதமிருந்தால். ஆனால் அவளுக்கு?


தாத்தாவின் உடலைக் குளிப்பாட்டும்போது தானே செய்வேன் என்றாள். அழுதுக்கொண்டே குளிப்பாட்டினாள், தண்ணீரைவிட கண்ணீரையே அதிகம் ஊற்றினாள். ஊரே அழுதது. நான் அழுது கொண்டேயிருந்தேன். உடலை புதைக்கும்வரை உடன் வந்தாள், மரபை மீறிய செயல், ஆனால் யாரும் தடுக்கவில்லை. நான் அன்று அழுததைவிட இன்று இதை எழுதும்போது அதிக துக்கமும், கண்ணீரும் வருகிறது. அடுத்து வந்த சில மாதங்களில் அவள் இறந்து போனாள். அவளின் மரண காரியங்களுக்கு நான் செல்லமுடியாமல் போயிற்று. ஆனாலும் அந்த கொள்ளுப்பாட்டி எப்போதும் என் நினைவிலிருப்பாள்.


என் சிறுவயதில் கவனித்தது உண்டு, தினமும் கழனிக்குச் செல்வாள், விவசாயம் பார்ப்பாள், வீட்டில் இருபதுக்கும் அதிகமான மாடுகளும், நூற்றுக்கும் மேலாக ஆடுகளும் வளர்த்தாள். எங்களைத் தூங்கவைக்க கதைசொன்ன கடைசி பாட்டி அவள் தான்.


"நான் பாவியாயிட்டேன்..நான் பாவியாயிட்டேன்" என்று அன்று அவள் கதறியது, இன்றும் என் நினைவிலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதை நினைக்கும்போதெல்லாம், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடக்க முடியாத வலிகளுண்டு என்பதை என் மனம் நினைவில் நிறுத்திக்கொண்டேயிருக்கிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு