Wednesday, April 14, 2010

The Battle of Algiers: அல்ஜீரியப் போர்
The Battle of Algiers: அல்ஜீரியப் போர்

அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அடுத்து இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக ஃபிரான்ஸின் காலனியாக இருந்து வந்ததிலிருந்து சுதந்திரம் பெற 1954-ல் போராடத்துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கெரில்லா தாக்குதல்கள் மூலம் தங்களுடைய சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார்கள். ஃபிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களைத் தாக்குவது, சித்திரவதைகளைக் கையாள்வது என இராணுவம் ஈடுபட...  வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச்சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடி கொடுத்தது. இரண்டு புறமும் சரிச்சமமாக வன்முறைகள் கையாளப்பட்டன.


பிரான்ஸ் வேறொரு சதிவேலையும் செய்தது. 1926-களில் அல்ஜீரியாவின் சுதந்திர போராட்ட காலத்தில் போராடிவிட்டு ஓய்ந்துபோன 'மெசாலி ஹட்ஜ்'(Messali Hadj) என்பரைக் கொண்டு MLA (Algerian National Movement) என்ற அமைப்பை உருவாக்கி, FLN-னுடன் போரிட வைத்தது. தன்னைக் காத்துக் கொள்ள, சகோதர்களுக்குள் அடித்துக்கொள்ள வைப்பது காலனியாதிக்க நாடுகள் காலம் காலமாக பின்பற்றும் வழிமுறைதான். இரண்டும் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டன. FLN-னுக்கும் MLA-வுக்கும் இடையே நடந்தப் போர்களை 'கேஃப் போர்'(Cafe War) என்று அழைக்கிறார்கள்.


பிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு பல தாக்குதல்கள் செய்தது. FLN தலைவர்களைத் தேடிப்பிடித்துக் கொல்வது, அரேபியர்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி வேலி அமைத்து சோதனை செய்த பிறகே வெளியேற அனுமதிப்பது போன்றவற்றைச் செய்தது. FLN உறுப்பினர் என்றால் பிடித்து உள்ளே போடுவது மட்டுமல்லாமல் முக்கியமானவர்கள் என்று தெரிந்தால் மரணதண்டனை தந்து சுட்டுக்கொன்றார்கள். இந்தச் செயல் பல அல்ஜீரிய இளைஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. பலரும் விரும்பி FLN-னில் இணைந்தார்கள். ஆரம்பத்தில் அமைதியான முறையில் ஒரு தீர்வை எதிர்பார்த்த மக்களிடையேக்கூட கோபத்தை தூண்டும் நிகழ்வுகள் நடந்தன. மறைமுகமாகவோ நேரிடையாகவோ FLN-க்கு மக்கள் உதவத் துவங்கினார்கள். மற்ற சகோதர அரேபிய தேசங்களின் உதவியுடன் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.


அல்ஜீரியர்களின் இந்த சுதந்திரப் போராட்டம் ஃபிரான்ஸிலும் இரண்டு விதமான போக்கைத் தோற்றுவித்தது. அல்ஜீரியாவை பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட (பிர)தேசமாக வைத்திருப்பது அல்லது முழுவதும் சுதந்திர நாடாக அனுமதிப்பது என்று இரு தரப்பினர் உருவானார்கள். காலனியாதிக்க எதிர்ப்புணர்வு பரவலாக பரவி வந்த காலமது. இது நடந்தது நான்காவது பிரான்ஸ் குடியரசு ( French Fourth Republic's 1948-58) ஆட்சிக் காலத்தில்.

பின்பு வந்த 'Charles de Gaulle's'-ஐ அதிபராகக் கொண்ட ஐந்தாவது குடியரசு அல்ஜீரியாவிற்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய வாக்கெடுப்பு நடத்தியது.  அதில் அல்ஜீரியர்கள் தங்களின் சுதந்திரத்தை தேர்ந்தெடுத்தார்கள். பின்பு 1962ல் அல்ஜீரியா சுதந்திரம் அடைந்தது. 'அகெமத் மென் மெலா'(Ahmed Ben Bella) அதன் முதல் அதிபரானார். இவர் 1956 போராட்டத்தின் போது மற்ற FLN தலைவர்களுடன் கைதானவர். இந்த சுதந்திரப்போராட்டம் 1954-ல் துவங்கி 1962-ல் சுதந்திரம் பெரும் வரை நடந்தது.


.............................................................................................................................................................
படம்: The Battle of Algiers: அல்ஜீரியப் போர்
திரைக்கு வந்த வருடம்: 1967
இயக்குனர்: Gillo Pontecorvo. 


இந்தப் படம் அல்ஜீரியாவில் இருந்த பிரான்ஸின் இராணுவச்சிறையில் துவங்குகிறது. ஒரு FLN-ன் உறுப்பினரைப் பிடித்துவந்து சித்திரவதை செய்து 'அலி லா பாய்ண்டி'(Ali la Pointe) என்ற FLN தளபதியின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டபின் அவனைத் தேடிச்செல்கிறது இராணுவம். அங்கே அவன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரகசிய பதுங்குத் தளத்தில் போலியான சுவரை உருவாக்கி சுவருக்கு மறுபுறம் பதுங்கி இருக்கிறான்.  அவனுடன் அவனுக்கு உதவிபுரிந்த ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் மற்றொரு ஆணும் இருக்கிறார்கள். கட்டிடத்தைச் சுற்றி வளைக்கிறது இராணுவம். இராணுவ அதிகாரி அவனைச் சரணடையும்படி கேட்கிறார். கதை இங்கே இருந்து பின்னோக்கிச் செல்கிறது.


இந்த 'அலி லா பாய்ண்டி' என்பவன் ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரன், போக்கிரி, பல வழக்குகள் அவன் மேல் உண்டு. தெருவில் ஒரு ஏமாற்று வித்தையில்  ஈடுபடும்போது பிடிபட்டு சிறைச் செல்கிறான்.  அங்கே ஒரு FLN போராளி மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்க்கிறான்.  அதன்பிறகு அவனுக்கு அரசியலில் நாட்டம் வந்து FLN-இல் இணைய முயற்சிக்கிறான்.  விடுதலை ஆன பிறகு அவனை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி FLN-இல் இணைத்துக் கொள்கிறார்கள்.  தொடர்ச்சியாக பல கொலைகள் செய்கிறான். FLN-யின் வன்முறை அதிகரிக்கிறது. இதைக் கண்ட பிரான்ஸ் அரசு தன்னுடைய இராணுவத்தை அனுப்புகிறது. இராணுவம் 'கேஸ்பா'(Casbah) என்ற அரேபியர்கள் வாழும் பகுதியைச்சுற்றி வேலி அமைத்து FLN உறுப்பினர்களைத் தேடத்துவங்கிறது.  மக்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்ட பிறகே வெளியேர முடியும், வேலைக்குச் சென்றுவர முடியும்.  எல்லாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.  அடையாள அட்டை இல்லாமல் வேலைக்குச் செல்ல முயற்சிக்கும் அப்பாவி மக்களைக்கூட திரும்ப வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.


இந்த சோதனைச் சாவடியை சாமார்த்தியமாக மீறிச்சென்று FLN தன் காரியங்களைச் செய்கிறது.  கோபம் கொண்ட இராணுவம், அரேபியர்கள் வாழுமிடங்களில் குண்டு வைத்து பல அப்பாவிகளை கொல்லுகிறது.  மக்கள் கதறுகிறார்கள், கொதித்தெழுகிறார்கள். தாங்கள் அதற்காகப் பழிவாங்குவதாக FLN மக்களிடம் உறுதியளிக்கிறார்கள். பொது மக்கள், பெண்கள் உதவியோடு 'அலி லா பாய்ண்டி'(Ali la Pointe)-இன் பொறுப்பில் பழிவாங்கப்படுகிறது. இராணுவம் அடக்குமுறையைக் கையாள்கிறது. பல நாச காரியங்களைச் செய்கிறது. எப்படியாவது FLN-னின் தலைவர்களைப் பிடித்து விடவேண்டும் அல்லது கொன்று விட வேண்டும் என்ற  நோக்கோடு செயல்படுகிறது.


எவ்வளவு முயன்றும் இராணுவத்தால் முழுமையாக FLN தலைவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் FLN ஒரு விசித்திர அதிகார அடுக்கு முறையில் செயல்படுகிறது.  பிரமிடு போன்ற அதிகார அடுக்கு. அதாவது தலைவர்-1 என்பவரின் கீழ் உறுப்பினர்-2 மற்றும் உறுப்பினர்-3 இருப்பார்கள். உறுப்பினர்-2ன் கீழ் உறுப்பினர்4-5 இருப்பார்கள். உறுப்பினர்-3ன் கீழ் உறுப்பினர்6-7 இருப்பார்கள். ஒருத்தரின் கீழ் இருப்பவர்களுக்கு தனக்கு முன் இருக்கும் அடுக்கின் தலைவர்களைத் தெரியாது.  அதாவது உறுப்பினர்4-5 க்கு உறுப்பினர்1 யார் என்று தெரியாது. இரண்டு பேருக்கு ஒரு தலைவர் என்ற முறையில் செயல்பட்டது. இந்த அதிகார அடுக்கு அப்படியே தொடச்சியாக தொடர்ந்தது. அதனால் இராணுவத்தால் ஒருவனைப் பிடிக்க முடிந்தால் அவனோடு சம்மந்தப்பட்ட இரண்டு நபர்களைத்தான் பிடிக்க முடிந்தது.


இன்னொரு யுக்தியையும் FLN பின்பற்றியது. கைதாகும் தன் உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்கு எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கச்சொல்லியது. அதற்குள்ளாக முன் அடுக்கில் உள்ளவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். பின்பு சித்திரவதை தாங்க முடியாமல் உண்மையைச் சொன்னாலும் பயன் ஒன்றும் இருக்காது. பெரும்பாடு பட்டுதான் FLN உறுப்பினர்களை இராணுவத்தால் பிடிக்கமுடிந்தது. பல கட்ட தலைவர்களைப் படிப்படியாகப் பிடித்தவர்கள் கடைசியாக மிஞ்சிய தலைவனைப் பிடிக்க முயன்றார்கள். அது 'அலி லா பாய்ண்டி'(Ali la Pointe). நம்முடைய கதாநாயகன். பிடித்தவர்களை பெரும் சித்தரவதைக்கு உட்படுத்தி உண்மையை வரவழைத்தார்கள்.  அப்படி பெறப்பட்ட தகவலைக்கொண்டே 'அலி லா பாய்ண்டி'(Ali la Pointe)-ஐ பிடிக்க அவன் பதுங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்கள்.  கதை இங்கே நிகழ்காலத்திற்கு வருகிறது.


இரகசிய சுவருக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் அவனிடம் இராணுவ அதிகாரி பேசிப்பார்க்கிறார். சரணடையும் படி கேட்கப்படுகிறது. அவன் வெளியே வருவதாக இல்லை. அவனிடம் வெடிகுண்டு இருக்கலாம் என்பதினால் இராணுவம் சுவரை உடைக்க தயங்குகிறது. பலவாறு பேசிப்பார்க்கிறார்கள். அவன் சம்மதிக்காமல் போகவே அந்தச் சுவரில் வெடிகுண்டை பொருத்திவிட்டு திரியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவனிடம் மீண்டும் சரணடையும்படி பேசிப் பார்க்கிறார்கள். குண்டை வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அவன் சரணடைவதாக இல்லை. தன்னுடன் இருக்கும் சிறுவன், பெண் மற்றும் ஆணை வெளியேறச்சொல்லுகிறான். அவர்கள் மறுத்து விடுகிறார்கள். வெளியே இராணுவ அதிகாரி மிரட்டுகிறார். நேரக்கெடு விதிக்கிறார். ஊரே கூடி நின்று இவர்களுக்காக அழுகிறது. நகர் முழுவதும் வீட்டு மாடிகளில் நின்று மக்கள் கதறுகிறார்கள், பிராத்தனைச்செய்கிறார்கள். என்ன நடக்குமோ என்று பதைப்பதைப்புடன் பார்க்கிறார்கள்.  கெடு முடிகிறது. இராணுவ அதிகாரி உத்தரவுத் தருகிறார். மக்கள் கண் முன்னேயே அந்த குண்டு வெடிக்கிறது....


வெடித்துச் சிதறிய புழுதி அடங்கும் போது, தன் கட்டுப்பாட்டிலிருந்து மீறி கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமியைக் கடந்து செல்லும் இராணுவ அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.  FLN-னின் தலைமை அழிக்கப்பட்டதாகவும், FLN இனிமேல் கிடையாது என்கிறார் ஒருவர். அதற்கு மற்றவர் இப்போதைக்காவது என்கிறார்.


இரண்டு வருட அமைதிக்குப்பிறகு திடீரென்று ஒரு நாள் மக்கள் வீதிக்கு வந்தார்கள், வந்தவர்கள் கோஷம் போட்டார்கள்.  இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான கொடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  போராட்டம் உருவானது.  இதற்கு யார் காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. நாட்டைவிட்டு வெளியேறிய FLN உறுப்பினர்களைக் கேட்டால், அதற்கு நாங்கள் காரணமில்லை என்றார்கள்.


காவல்துறை போராட்டக்காரர்களை அடக்கப்பார்க்கிறது. கலவரமாகிறது. இராணுவம் வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. மக்கள் இறந்து விழத் தயாராகிறார்கள். ஊர் முழுவதும் பெண்கள் போடும் குலவைச்சத்தம் ஆக்கிரமிக்கிறது. போராட்டம் பல நாட்கள் நடக்கிறது. இராணுவம் பீரங்கி வண்டியைக் கொண்டு வந்து தாக்குகிறது. பலர் மடிந்து விழுகிறார்கள். இரவு முழுவதும் அரேபியர்களின் பகுதியிலிருந்து குலவைச் சத்தம் வந்துக்கொண்டே இருக்கிறது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரே புழுதியாகக் காட்சியளிக்கிறது.


கடைசி நாள் அன்று, ஒரு இராணுவ அதிகாரி ஒலி பெருக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு புழுதியால் மூடப்பட்டிருக்கும் அரேபிய பகுதியைப் பார்த்து எரிச்சலுடன் கேட்கிறார்..


"உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களுக்கு என்ன தான் வேண்டும்?"


கொஞ்ச நேர அமைதிக்குப்பின்பு, புழுதிக்கு அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.


"சுதந்திரம்....எங்களின் உரிமை" என்று.. ஒரு குரல், பல குரல்களாக வலுக்கிறது. புழுதி கொஞ்சம் கொஞ்சமாக விலக மக்கள் கூட்டம் கோஷமிட்டுக்கொண்டே வருகிறது. பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஆடிக்கொண்டே குரலெழுப்புகிறார்கள். போராட்டம் தொடர்கிறது.


இன்னும் இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஜூலை 2, 1962 ஆம் ஆண்டு அல்ஜீரியா சுதந்திரம் பெற்று தனி நாடாகிறது.


படம் இங்கே முடிகிறது. சில கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் சேர்த்து ஒரு போராட்ட வரலாற்றை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். போராட்டம் என்றால் என்ன என்பது புரியும். தியாகம் எத்தகைய பெரியது என்பது புரியும். போராட்டக்களத்தில் அடிபட்டு வந்ததைப்போல் உணர்வீர்கள். இதற்கு முன் போராட்டக்களத்திற்கு செல்லாதவர் நீங்கள் என்றால் உங்களைத் தலைகுனியச்செய்யும் இந்தப் படம்.

13 comments:

 1. போர் திரைப்படங்க்ளின் முன்னாடி இது என்று சொல்லலாம். நான் ரொம்ப காலம் எழுதணும்னு நினைச்சிருந்தேன். இனி அது தேவை இல்லை.நீங்க அருமையா எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம்... கடைசியில் குறிப்பிட்டது உண்மைதான்! போராடி பெற்றதைப் பேணிக்காக்காமல் பாழக்கும் நமது அரசியல்வாதிகள்தான் நினைவிற்கு வருகிறார்கள்...

  FLN பிரமிட் யுக்தி பிரம்மிப்பாய் இருந்தது.

  இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பா!

  பிரபாகர்...

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம் சார், நிறைய தகவலகள் அறிந்துகொண்டேன் சார். உங்கள் புகைப்படம் திரைப்படம் ஒளிப்பதிவு ரொம்ப அருமையா பண்ணிருந்தீங்க.. ரொம்ப ரசித்து பார்த்தேன். இன்னும் நிறைய தகவல்கள் தெரியப்படுத்துங்கள் சார்.

  ReplyDelete
 4. ஒரு அருமையான திரைப்படத்தைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மிகச் சிறந்த கட்டுரை. வாழ்த்துக்கள், இன்னும் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 5. நண்பர்கள் உங்களின் கருத்துகளுக்கு நன்றி. இது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.
  விஜய் ஆம்ஸ்ட்ராங். ஒளிப்பதிவாளர்

  ReplyDelete
 6. வணக்கம் ஆம்ஸ்ட்ராங். வாழ்த்துக்கள். மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக பரிணமித்திருக்கிறீர்கள். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற வாழ்த்துகிறேன். படம் எனக்கு மிக பிடித்தமான படம். உலக வரலாற்றில் தன் தேச விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் உணர்வுப்பூர்வமான வீரம் செறிந்த கதைதான் . நமக்கு மட்டும் அல்ல ஈழ விடுதலைக்காக போராடியவர்களின் உந்துதலுக்கும் காரணமான படம் இது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்களுடன் பாரதிக்குமார்.

  ReplyDelete
 7. நன்றி பாரதிக்குமார்..உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகிறது. தொடர்ந்து எழுத நினைக்கிறேன். தொடர்ந்து உங்களின் கருத்துகள் வேண்டும். மேலும் ஒளிப்பதிவைப்பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லவும்.

  ReplyDelete
 8. மிக அருமையான படம்
  நிஜ புரட்சியாளர்களை பார்ப்பது போலவே இருக்கும்,Ennio Morricone இசை மனதை நகர்த்தும்.அருமையான போர் படம்,1966 ஸ்டாண்டர்டுக்கு மாபெரும் முயற்சி

  ReplyDelete
 9. Panasonic AG-HMC40 camera வை Short films shoot பண்ண வாங்கலாமா ?எந்த அளவுக்கு use பண்ணலாம் .

  ReplyDelete
 10. நன்றி வண்டிக்காரன்...விரைவில் பதில் சொல்லுகிறேன்..

  ReplyDelete
 11. வண்டிக்காரன்..
  Panasonic AG-HMC40 கேமராவை வாங்கலாம். short film எடுக்க சிறந்த கேமரா..இந்த வகையில் சோனியிலும் கேமராக்கள் உண்டு. HDTV படங்கள் எடுக்கலாம்.

  ReplyDelete
 12. கேபிள் சங்கர் பதிவின் மூலம் உங்கள் பதிவின் அறிமுகம் கிடைத்தது.

  அருமையான விமர்சனம்.

  பல பயனுள்ள விசயங்கள் இருக்கின்றன.முழுமையாக உங்கள் பதிவை படிக்கவேண்டும்.

  நன்றி.

  ReplyDelete