• விஜய் ஆம்ஸ்ட்ராங், ஒளிப்பதிவாளர்

  • கற்றதும் பெற்றதும் . .  யாவருக்கும்!

மைக்கேல் காலின்ஸ்: Michael Collins

படம்: மைக்கேல் காலின்ஸ் (Michael Collins)
திரைக்கு வந்த ஆண்டு:1996
இயக்குனர்: நீல் ஜோர்டன் (Neil Jordan)


"சில மனிதர்கள் கால ஓட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை. இப்போது அவர் இறந்துவிட்டார், ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அவரே அதை சாத்தியப்படுத்தினார்". 
துக்கத்திலிருக்கும் கிட்டி கிர்னனிடம் (Kitty Kiernan), மைக்கேல் காலின்ஸின் நாட்டுப்பற்றைப் பற்றி அவரின் தோழர் ஜோ (Joe O'Reilly) சொல்லுவதிலிருந்து இந்தப் படம் துவங்கிறது. 'கிட்டி கிர்னன்' மைக்கேல் காலின்ஸின் வாழ்க்கைத் துணைவியாக நிச்சயிக்கப்பட்டிருந்தவர். அது 1922 ஆம் ஆண்டு.


கதை இங்கே இருந்து 1916க்குப் பின்நோக்கிச் செல்லுகிறது. உக்கிரமாக 'ஈஸ்டர் எழுச்சி' (Easter Rising) நடந்து கொண்டிருக்கிறது. இருபுறங்களிலிருந்தும் துப்பாக்கிச்சூடுகள், குண்டு வீச்சு என ரணகளப்படுகிறது. முடிவில் 'ஈஸ்டர் எழுச்சி' தோல்வியடைந்து 'மைக்கேல் காலின்ஸ்', 'ஹாரி போலண்ட்' மற்றும் 'எமோன் தேவ் வலிரா'(Eamon de Valera) போன்ற முக்கியமானவர்களோடு சேர்ந்து போராட்டக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்களால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். 'எமோன் தேவ் வலிரா' அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதினால் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். மைக்கேல் காலின்ஸும், ஹாரி போலண்டும் வேல்சிலிருக்கும் (Wales) சிறை முகாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். 


சிறையிலிருந்து வெளிவந்ததும் காலின்ஸ் பல போராட்டங்களில் ஈடுபடுகிறார். ஒரு கூட்டத்தின் போது காலின்ஸ் தாக்கப்படுகிறார். ஹாரி போலண்ட் அவரைக் காப்பாற்றி கிட்டி கிர்னனின் வீட்டில் தங்க வைக்கிறார். அங்கேதான் காலின்ஸ் கிட்டி கிர்னனை முதல் முறையாகச் சந்திக்கிறார். அவள் ஹாரி போலண்டை காதலிக்கிறாள். காலின்ஸோடு நட்பாக இருக்கிறாள்.


1918-இல் தன்னைப் பின் தொடரும் ஒரு இரகசிய உளவாளி நெட் பிராயை காலின்ஸ் பிடிக்கிறார். அவர் இவருக்கு உதவுவதாகக் கூறி, மொத்த இயக்க உறுப்பினர்களையும் இன்று இரவு கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாகச் சொல்லுகிறார். இதை நம்புவதா இல்லையா என்று காலின்ஸுக்குத் தெரியவில்லை. இந்தத் தகவலை இயக்கக் கூட்டத்தில் சொல்லி அனைவரும் இன்று இரவு வழக்கமான இடங்களில் தங்காமல் வேறு இடங்களில் தங்கச்சொல்லுகிறார். ஆனால் 'எமோன் தேவ் வலிரா' இதை மறுத்துவிடுகிறார். அப்படி எதாவது நடந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார். இரவு அனைத்து முக்கிய தலைவர்களும் கைதுச் செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காலின்ஸும் ஹாரிபோலண்டும் மட்டும் தப்பிக்கிறார்கள். போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை.


மைக்கேல் காலின்ஸ் தன் குழுவோடு பிரிட்டிஷ் காவல்நிலையங்களின் மீது 'கெரில்லாப் போர்' முறையில் தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுகிறார். நெட் பிராயின் உதவியோடு பிரிட்டிஷ் உளவுத்துறை கட்டிடத்திற்குள் புகுந்து தகவல்களைக் கொண்டுவருகிறார். பின் போராட்டக்காரர்களிலிருந்து 12 சிறந்த இளைஞர்களைக்கொண்டு ஒரு குழு அமைக்கிறார். பிரிட்டீஷ்காரர்களுக்கு உதவுபவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மரணதண்டனை விதிக்கிறார். விசாரனை இன்றி மரணதண்டனை,  சிறப்புக் குழுவைக்கொண்டு அது நிறைவேற்றப்படுகிறது.


மைக்கேல் காலின்ஸும் ஹாரிபோலண்டும் இங்கிலாந்து சென்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 'எமோன் தேவ் வலிரா'-வை விடுவிக்கிறார்கள். தப்பி வந்தவுடன் 'எமோன் தேவ் வலிரா' அமெரிக்கா சென்று அவர்களின் போராட்டத்திற்கு அமெரிக்க அதிபரின் ஆதரவை பெறப்போகிறார். தன்னுடன் ஹாரிபோலண்டையும் அழைத்துச்செல்கிறார். கிட்டி கிர்னனுடன் காலின்ஸின் நட்பு தொடர்கிறது. இதற்கிடையே இங்கிலாந்திலிருந்து புதிய உளவுப்படை வரவழைக்கப்படுகிறது. அவர்களின் தொல்லை அதிகரிப்பதைக்கண்டு, அவர்களின் மேல் போர்ப் பிரகடனம் செய்கிறார் காலின்ஸ். இதற்கு முந்தைய விடுதலைப்போராட்டங்கள் இவர்களைப்போல உளவாளிகளாலேயே தடுக்கப்பட்டன என்ற கோபம் அவருக்கு.


ஒரு ஞாயிற்றுக்கிழமை காலின்ஸின் படை தன் வேலையை துவங்குகிறது. பல உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையைச்சார்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள்.  அன்று மதியம் காவல்துறை ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். இரவு 'நெட் பிராய்' பிடிபட்டு கொல்லப்படுகிறார். சரித்திரம் அந்த நாளை 'இரத்த ஞாயிறு' (Bloody Sunday) என குறிப்பிடுகிறது.


அமெரிக்காவிலிருந்து ஏமாற்றத்தோடு திரும்பி வரும் 'எமோன் தேவ் வலிரா' இனி நாம் நேரடி இராணுவ யுத்தம் செய்யவேண்டும் என்றும், இப்படி 'கெரில்லா' தாக்குதல்களால் நம்மை 'கொலைகாரர்கள்' என்றார்கள் என்கிறார். காலின்ஸோடு விவாதம் வருகிறது. போராட்டம் தொடர்கிறது. சிலர் கொல்லப்படுகிறார்கள், பலர் பிடிபடுகிறார்கள். இன்னும் ஒருவாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றிருக்கும் நிலையில் எதிர்பாராதவிதமாக பிரிட்டீஷ்காரர்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகிறார்கள். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு மைக்கேல் காலின்ஸை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கிறார் 'எமோன் தேவ் வலிரா'.  காலின்ஸ் இங்கிலாந்திலிருக்கும் காலகட்டத்தில், தான் காலின்ஸை காதலிப்பதாக ஹாரி போலண்டிடம் 'கிட்டி கிர்னன்' சொல்லுகிறாள்.


உடன்படிக்கை கையெழுத்தாகிறது. அதாவது அயர்லாந்தை இரண்டாகப் பிரித்து 'Irish Free State' என்ற பகுதியை பிரிட்டீஷ்காரர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட அயர்லாந்துகாரர்களே ஆண்டு கொள்ளலாம் என்றும், ஆறு மாகாணங்கள் உள்ளடங்கியப் பகுதிகளைத் தனியாகப்பிரித்து 'Northern Ireland'-ஐ உருவாக்கி, அதை பிரிட்டீஷ் தன் ஆளுகையில் வைத்துக்கொள்வது என்பதுமே 'Anglo-Irish Treaty' -இன் சாரம்சம். மிகுந்த மனவேதனையோடு இதில் கையெழுத்திட்டு விட்டு நாடு திரும்புகிறார் மைக்கேல் காலின்ஸ். இதை 'எமோன் தேவ் வலிரா' எதிர்க்கிறார், காலின்ஸ் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டார் என்றும், நாட்டைப் பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். "நான் இல்லை, யார் சென்றிருந்தாலும் இதைத்தவிர வேறு முடிவு எடுத்திருக்க முடியாது, இது  'எமோன் தேவ் வலிரா' -க்குத் முன்பேத் தெரியும், அதனால் தான் பழி சுமக்க என்னை அனுப்பினார்" என்கிறார் காலின்ஸ். விவாதம் வருகிறது. ஓட்டெடுப்பின் மூலம் முடிவைத் தீர்மானிக்கலாம் என்று கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  உடன்படிக்கைக்குக் ஆதரவாக 64-57 என்ற வாக்கில் தீர்மானம் வெற்றிப் பெறுகிறது. 'எமோன் தேவ் வலிரா' தன் ஆதரவாளர்களோடு வெளியேறுகிறார். ஹாரி போலண்டும் அவர்களோடு செல்கிறான். காலின்ஸ் அவனைத் தடுக்கிறார். "யார் வேண்டுமானலும் செல்லட்டும், நீ மட்டும் செல்லாதே" என்றார். ஆனாலும் அவன் வெளியேறுகிறான். தன் காதலியை இவர் பறித்துக்கொண்டார் என்ற கோபம் அவனுக்கு. இயக்கம் இரண்டாக உடைகிறது. நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்படுகிறது. ஒருபுறம் காலின்ஸும், மறுபுறம் 'எமோன் தேவ் வலிரா'-வும் பிரச்சாரம் செய்கிறார்கள். பிரச்சாரத்தின் போது காலின்ஸ் தாக்கப்பட்டு, தப்பிக்கிறார். இடையே 'கிட்டி கிர்னனிடம்' தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி காலின்ஸ் கேட்கிறார். அவள் சம்மதிக்கிறாள். ஜூன் 1922 உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப் படுகிறது. காலின்ஸ் 'Chairman of the Provisional Government' மற்றும் இராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்கிறார்.


இரண்டு பிரிவினர்களிடையே உள்நாட்டு யுத்தம் துவங்குகிறது. உடன்படிக்கையை எற்றுக்கொள்பவர்கள் ஒருபுறம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஒருபுறம் என தேசம் முட்டிக்கொள்கிறது. உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 'Four Courts' எனச் சொல்லப்படும் இடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள். காலின்ஸ் அவர்களை வெளியேறச்செல்லுகிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அயர்லாந்து அமைச்சகமும், இங்கிலாந்தும் அவர்களை வெளியேறச்சொல்கிறது. காலின்ஸுக்கு வேறு வழியில்லாமல் போகிறது. இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தன் மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியதாகிறது. நாடு முழுவதும் 'Anti-Treaty IRA' போராளிகளோடு சண்டை நடக்கிறது. தலைமை ஏற்கும் ஹாரி போலண்டை உயிரோடு பிடிக்க முயச்சிக்கிறார் காலின்ஸ். ஆனால் ஹாரி போலண்ட் கொல்லப்படுகிறான். 


ஹாரி போலண்டின் மரணம் காலின்ஸை வெகுவாக பாதிக்கிறது. எதிர்த்தரப்பை சாமாதானப்படுத்தி அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கிறார்.  'எமோன் தேவ் வலிரா'-வைச் சந்திக்க அவர் மறைந்து வாழும் 'County Cork' என்னும் பகுதிக்குச் செல்ல முடிவு செய்கிறார். அங்கே செல்ல வேண்டாம், அது உங்களின் உயிருக்கு ஆபத்து என 'ஜோ' தடுக்கிறார். அது, தான் பிறந்த பூமி அங்கே யாரும் என்னை கொல்ல மாட்டார்கள் என அதை மறுக்கிறார் காலின்ஸ்.  


'County Cork' பகுதிக்கு, 'எமோன் தேவ் வலிரா' வரச்சொன்னதாக சொல்லப்பட்ட இடத்திற்குச் செல்கிறார். தன் திருமணத்திற்கு 'எமோன் தேவ் வலிரா'-வையும் 'வின்சண்ட் சர்ச்சியலையும்' அழைக்க வேண்டும் என 'ஜோ'விடம் சொல்கிறார். அவரின் திருமணம் இன்னும் பத்து நாட்களில் நடப்பதாக இருக்கிறது. வழியில் போராட்டக்காரர்கள் தாக்குகிறார்கள். மைக்கேல் காலின்ஸ் தலையில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார். அங்கே 'கிட்டி கிர்னன்' தன் திருமண உடையை தேர்வு செய்துகொண்டிருக்கும் போது மைக்கேல் காலின்ஸின் மரணம் அவளிடம் தெரிவிக்கப்படுகிறது.


இந்தப்படம் மைக்கேல் காலின்ஸின் உன்மையான மரண ஊர்வலத்தின் ஆவணக்காட்சிகளோடு முடிகிறது. ஐந்து லட்சம் மக்கள் அவருக்கு இறுதி மரியாதைச் செய்தார்கள். அதாவது தேசத்தின் ஐந்தில் ஒருபகுதி மக்கள். 


இந்தப்படத்தில் ஒரு கூட்டத்தில் மைக்கேல் காலின்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது காவல்துறையால் தாக்கப்படும் காட்சி ஒன்று வருகிறது. அப்போது அவர் மக்களைப் பார்த்து கேட்கிறார் 


"என்னை அழிக்க முயற்சி நடக்கிறது, நான் அகற்றப்பட்டால் என் இடத்தை யார் நிரப்புவீர்கள்?" ..


கூட்டம் நான்..நான் என்று கை தூக்குகிறது.


உண்மைத்தான், இந்தக் கேள்வியும் இந்தப் பதிலும் காலம் காலமாக மெய்ப்பிக்கப்பட்டு வருவதினால்தான், மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது.


...................................................................................................................ஐரோப்பாக் கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்துத் தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916, ஈஸ்டர் நாளில் துவங்கப்பட்ட "Easter Rising" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.


இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலின்ஸ்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Féin' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கெரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்தத் துவங்கினார். இவரின் 'கெரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டங்களில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்' (Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பப்பட்டு வந்த இளம் ஏழைத் தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.


இந்தப்போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்று அழைக்கப்பட்ட அந்த நாள். பிரிட்டீஷ் உளவாளிகளாலேயே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடனம் செய்தார்.  12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு (IRA) அவர்களைக் கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரிட்டீஷ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரிட்டீஷ் இராணுவம் 'Croke Park'  நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியொரு நபர்களைப் பலி கொண்ட அந்த ஞாயிறை, சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுச்செய்து வைத்திருக்கிறது.


போராட்டம், பேச்சுவார்த்தை உடன்படிக்கை என நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் நடந்தது. 'மைக்கேல் காலின்ஸ்' என்ற சிறந்த தலைவனை அந்த தேசமே கொன்றது. 'Irish Free State' என அழைக்கப்பட்ட பகுதி 1922-இலிருந்து பிரிட்டீஸ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அயர்லாந்து பாராளும் மன்றம் என்ற இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. 1937க்குப் பிறகு அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உருவாகியது. வட அயர்லாந்து இன்று வரை பிரிட்டீஷ் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. 

About Me

My photo

Cinematographer from Tamil Film Industry..Chennai.Tamil Nadu. India

Search This Blog

Blog Archive

Popular Content

About us

Amazon

123RF

Toggle menu