முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதை மாற்றியப் பயணம்


இரண்டு இளைஞர்கள் இளமையின் துள்ளலில், பயணம் ஒன்றைத் துவங்குகிறார்கள். நாட்டைச் சுற்றி வரும் உல்லாசப் பயணமது. ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டம். பயண நோக்கம் உல்லாசம்,பொழுதுபோக்கு மற்றும் முடிந்த மட்டும் தன் இளமைக்குத் 'தீனி'ப்போடுதல். இளமையின் கொண்டாட்டமும், வாழ்க்கைத் திட்டமிடலும், வருங்காலத்துக்கான கனவும் கொண்ட அவ்விளைஞர்களின் அப்பயணம் அவர்களின் பிற்காலத்தை மாற்றியமைத்தது. அது... அவர்கள் திட்டமிடாதது.


இருவரில் ஒருவர் 'எர்னஸ்ட்டோ குவேரா' (Ernesto Guevara) என்ற பெயரைக் கொண்ட இருபத்தி மூன்று வயது இளைஞர். மற்றொருவர் அவரின் நண்பர் 'ஆல்பர்ட்டோ கிரானடோ' (Alberto Granado). தென்னமெரிக்க நாடுகளைச் சுற்றி வருவது அவர்ளின் நோக்கம். 'பூனஸ் ஏர்ஸ்'-லிருந்து 'ஆண்டிஸ்', 'சிலி', 'அட்டகாமா பாலைவனம்', 'பெரு' வழியாக வெனிசுலாவை அடைவது பயணத் திட்டம். இருபத்தி ஒன்பது வயதைக் கடந்த 'ஆல்பர்ட்டோ' தன் முப்பதாவது வயது பிறந்த நாளை இப்பயணத்தின் முடிவில் வெனிசுலாவில் கொண்டாடுவது என்பதும் வழியில் பெருவில் 'தொழு நோயாளிகளின் குடியிருப்பில்' (leper colony) சில காலம் பணிபுரிவது என்பதும் இப்பயணத்திற்கான காரணங்களில் ஒன்று. 'எர்னஸ்ட்டோ' விரைவில் தன் மருத்துவர் படிப்பை முடிக்க இருந்தார். 'ஆல்பர்ட்டோ' 'Biochemist' படிப்பை முடித்தவர்.


பயணத்தின் துவக்கம் மகிழ்ச்சிகரமானதாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கிறது. மோட்டார் சைக்கிள் அவர்களைச் சுமக்கிறதா அல்லது அவர்கள் அதை சுமக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்த பயணம் அது. வழிநெடுக மோட்டார் சைக்கிளோடு விழுந்து புரளுவதும், வழியில் தென்படும் குதிரைக்காரர்களோடு போட்டிப் போட்டு மோட்டார் சைக்கிளை விரட்டுவதும் அதனால் விழுந்து தொலைப்பதும் என குதூகலமான இளமைப் பயணம் அது. கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் பல பிரதேசங்களிடையே பயணம் கொள்கிறார்கள்.


ஒரு நாள் பழுதாகும் தங்கள் வாகனத்தைச் சரிபார்க்க, ஒரு உள்ளூர் பழுது பார்ப்பவரிடம் செல்கிறார்கள். இரவு நடன நிகழ்ச்சியின் போது அவரின் மனைவிடம் தவறாக நடக்க முயன்று, மொத்த கூட்டமும் இவர்களை துரத்த, தப்பி ஓடி வருவதும், வழியில் 'பிரேக்' (Break) இல்லாது கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தோடு விழுந்ததனால் அவ்வாகனம் உபயோகமற்றதாகி விடுகிறது. அதன் பின் அவர்களின் பயணம் கால் நடையாகவும் அவ்வப்போது கிடைக்கும் இலவச வாகனப் பயணத்தாலும் தொடர்கிறது.


அப்படி ஒரு நாள் எவ்வித வாகன உதவியும் கிடைக்காத நடைப் பயணத்தின் போது ஒரு தம்பதியரைச் சந்திக்கிறார்கள். திறந்த வெளியில் குளிரை விரட்ட நெருப்பு மூட்டிய அவ்விரவில், அத்தம்பதியர்களின் சோக வாழ்வை அறிகிறார்கள். அத்தம்பதியர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு, மகனைப் பிரிந்து வேலை தேடி அலைவதையும் அதற்கு காரணம் அவர்கள் பொதுவுடமைவாதிகள் என்பதையும் அறிகிறார்கள். பிறகு வழி நெடுக பல துயரம் கொண்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இருப்பவன், இல்லாதவன் என்பதற்கிடையே இருக்கும் வித்தியாசத்தை வாழ்வில் முதன் முறையாக உணர்கிறார்கள். எளிய ஏழை மனிதர்களின் அவல நிலை அவர்களைத் தைக்கிறது. இவ்வுலம் எளிய மனிதர்களிடம் நடந்துக்கொள்ளும் விதத்தைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறார்கள். அதுவரை உல்லாசப் பயணமாகயிருந்தது, முற்றிலுமாக மாறிவிடுகிறது.


பெருவில் 'மச்சு பிச்சு' ( Machu Picchu) என்கிற 'Incan' இனத்தின் அழிக்கப்பட்ட ஒரு வரலாற்று பெருநகரத்தைக் காண்கிறார்கள். இங்கேதான் 'எர்னஸ்ட்டோ' பெரும் மனமாற்றத்தை அடைகிறார். வாழ்ந்து மறைந்து போன அம்மாபெரும் இனத்தின் சுவடுகள் அவர்களிடையே ஒரு புதிய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றின் ஊடாக பயணப்பட்ட அவர்களின் சிந்தனையோட்டம் ஒரு முடிவை அடைகிறது. அது, எளியவர்களின் நலன்கள் காக்க, போராட வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்களைக் கொண்டு வருகிறது.  'அல்பர்ட்டோ' அமைதி வழி போராட்ட முறையைப் பற்றி தன் எண்ணத்தைப் பகிர்ந்துக்கொள்ள, எர்னஸ்ட்டோ "துப்பாக்கி அற்ற புரட்சியா? அது வேலைக்காகாது" என்கிறார்.பெருவில் 'அமெசான்' நதியோரத்தில் அமைந்த ஒரு 'தொழு நோயாளிகளின் குடியிருப்பில்'(San Pablo leper) தன்னார்வத் தொண்டர்களாக பணிசெய்ய செல்கிறார்கள். அங்கே போகும் படகுப் பயணத்தில் தனியே தொழு நோயாளிகளைக் கொண்ட ஒரு சிறிய படகு பெரும் படகின் பின்னால் கட்டப்பட்டிருப்பதை எர்னஸ்ட்டோ காண்கிறார். அந்நிவாரண முகாம் 'அமெசான்' நதியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கரையில் மருத்துவர்களும், மறுகரையில் நோயாளிகளும் என பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்.


நோயாளிகள் இருக்கும் கரைக்குச்செல்லும் போது உடன் வரும் மருத்துவர் இவர்களை கையுறை அணியச் சொல்கிறார். தொழு நோய் பரவாதென்பதால் தாங்கள் கையுறை அணியப்போவதில்லை என்று மறுக்கிறார் எர்னஸ்ட்டோ. கையுறை அணியாமல் தங்களோடு கைகுலுக்கும் எர்னஸ்ட்டோவை ஆச்சரியத்தோடும் அன்போடும் பார்க்கிறார்கள் அந்நோயாளிகள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் அவர்களோடு உணவருந்துவதும் விளையாடுவதும் என மிக நெருங்கிப் பழகுகிறார்கள் இவ்விரண்டு நண்பர்களும்.

இந்நிலையில் எர்னஸ்ட்டோவின் பிறந்த நாள் வருகிறது. அவருடைய இருபத்தி நாலாவது பிறந்த நாளை மருத்துவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அக்கொண்டாட்ட அறையிலிருந்து வெளியே வரும் எர்னஸ்ட்டோ மறுகரையில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்கிறார். அவரின் நெஞ்சில் பெரும் துயரம் ஏற்படுகிறது. தன் நண்பனிடம் தான் மறுகரைக்குச் செல்லப்போவதாகவும் அங்கேச் சென்று தன் பிறந்த நாளை அந்நோயாளிகளோடு கொண்டாடப்போவதாகவும் அதற்கு படகு இருக்கிறதா என்று பார்க்கும்படியும் சொல்லுகிறார். படகு இல்லாததால் மறுநாள் காலை அங்கே சென்று கொண்டாடலாம் என நண்பர் சொல்லுகிறார். அதை மறுக்கும் எர்னஸ்ட்டோ தனக்கு இன்றுதான் பிறந்த நாள், அதனால் தான் இப்போதே அங்கே செல்லப்போவதாக சொல்லிவிட்டு, ஆற்றில் இறங்கி மறுகரையை நோக்கி நீந்தத் துவங்கிவிடுகிறார்.எர்னஸ்ட்டோவிற்கு சிறுவயதிலிருந்தே 'ஆஸ்துமா' வியாதி உண்டு. அதனால் ஏற்படும் பெரும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருபவர் அவர். மேலும் அமெசான் நதி முழுவதும் ஆளைக்கொல்லும் பல மிருகங்கள் உண்டு. அந்நதியைத்தான் அந்த இரவில் நீந்திக் கடக்கத் துவங்குகிறார். இங்கே கரையிலிருந்து நண்பரும் மற்ற மருத்துவர்களும் அவரை திரும்பி வந்துவிடும்படி குரல் எழுப்புகிறார்கள். அங்கே மறுகரையில் சத்தம் கேட்டு நோயாளிகள் கரையோரம் வந்து பார்க்கிறார்கள். தங்களை நோக்கி வரும் எர்னஸ்ட்டோவை முதலில் பதற்றத்தோடு பார்த்தாலும் பின்பு உற்சாகப்படுத்துகிறார்கள். ஒருபுறம் திரும்பி வந்துவிடும்படியான கூக்குரலும் மறுபுறம் உற்சாகக் குரலுக்கிடையே, போராடி மறுகரையை அடைகிறார் எர்னஸ்ட்டோ. நோயாளிகள் மிகுந்த ஆராவரத்தோடு எர்னஸ்ட்டோவை தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அன்று இரவை அவர்களோடு கழிக்கிறார்.  
பின் நாளில் 'சே' என உலக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவரும், இன்று வரை உலகம் நினைவில் வைத்திருக்கும் போராளியுமான 'எர்னஸ்ட்டோ சேகுவாராவின்'  இருபத்து நாலாவது பிறந்த நாள், அவர் வாழ்வின் மிக முக்கியமானது. அப்பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதுதான் அவரின் முதல் அரசியல் உரை நிகழ்ந்தது. அவ்வுரையில் தன் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும் நதியை கடப்பதில் காட்டிய தீவிரத்தின் மூலம் தன் செயல்பாட்டில், தான் கொண்ட பிடிப்பை வெளிப்படுத்தினார்.
மறுநாள் ஒரு சிறிய படகின் மூலமாக அங்கிருந்து புறப்பட்டார்கள். அந்நோயாளிகளைப் பிரியும் அக்காட்சி 'சே' மற்றும் 'ஆல்பர்ட்டோ'வின் மனதில் மட்டுமல்ல, நம் மனதிலும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. கைவிடப்பட்டவர்களின் துயரம் நம் கண்முன்னே வந்துபோகிறது.


பிறகு நண்பர்கள் பிரிகிறார்கள். ஆல்பர்ட்டோ வேலைக்குப் போகிறார், தன்னுடன் வந்து விடும்படி 'சே'வை அழைக்கிறார். மறுக்கும் 'சே', இப்பயணம் தனக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், அதைப்பற்றி தான் நீண்ட நாட்கள் சிந்திக்க வேண்டும் என்றும் சொல்கிறார். நண்பர் வேலைக்காக தங்கிவிட, இவர் விமானமேறி ஊர் திரும்புகிறார்.


பிறகு அவ்விரு நண்பர்கள் சந்திக்க எட்டு ஆண்டுகள் ஆயிற்று. இப்பயணம் நிகழ்ந்தது 1952-ம் ஆண்டில். அதன் பின்பு  ‘சே’ கடந்து வந்த பாதையை நாம் அறிவோம். பிடல் கேஸ்ட்ரோவோடு இணைந்து அவர் நடத்திய கியூபப் புரட்சி உலகம் என்றும் மறந்துவிட முடியாதது. பின்பு 1960-இல் ஆல்பர்ட்டோவிற்கு 'சே'விடமிருந்து கடிதம் வந்தது. அதில், கியூபாவிற்கு வந்து பணி செய்யவும் வாழவும் அழைப்பு விடுத்திருந்தார். ஆல்பர்ட்டோ இன்றும் கியூபாவில் வசிக்கிறார். அங்கே அவர் 'Santiago School of Medicine'-ஐ நிறுவினார். 'சே' 1967-இல் பொலிவியாவில் சிஐஏ-வினால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39.


'The Motorcycle Diaries' (2004) என்கிற இப்படம் 'சே'வால் எழுதப்பட்ட, இதே பெயரைக்கொண்ட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் தகவல்களுக்கு 'ஆல்பர்ட்டோ' எழுதிய 'Back on the Road: A Journey Through Latin America' என்ற புத்தகமும் பயன்படுத்தப்பட்டது. இப்படம் முழுக்க 'சே' தன் தாய்க்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அவரின் குரல் வருகிறது.
இரு இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகை அறிய முயன்ற கதை இது. இளமையின் அத்தனை சேட்டைகளோடும் துவங்கிய இப்பயணம், இருவரிடமும் வெவ்வேறு மாதிரியான எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. ஒருவனுக்கு, துன்பமான இவ்வுலகில் தான் பிழைக்க வழி தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் மற்றவனுக்கு இத்துன்பமான சூழலை மாற்றுவதற்கான போராட்டத்தை நோக்கி செல்ல வேண்டிய அவசியத்தையும் கற்பிக்கிறது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின் துவங்கிய பனிப்போரின் விளைவாக தென்னமெரிக்கா முழுவதும் வடஅமெரிக்காவின் அடக்குமுறை பரவியிருந்த காலம் அது. உலக முழுவதும் பரவத் துவங்கிய 'பொதுவுடமை' சித்தாந்தத்தை ஒடுக்கும் பொருட்டு வட அமெரிக்கா தன் அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. சிஐஏ, பொருளாதார அடியாட்கள், குள்ள நரிகள், இராணுவம் என அத்தனை கேடு கெட்ட துறைகளும் களத்தில் இறக்கி விடப்பட்டன. தென்னமெரிக்கா முழுவதும் நிலையான, மக்களுக்கான அரசு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. மக்கள் தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது படுகொலை செய்யப்பட்டார்கள். வட அமெரிக்காவிற்கு ஏதுவான சர்வதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட்டனர்.


தென்னமெரிக்காவின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எல்லாம் வட அமெரிக்காவின் பெருநிறுவனங்களால் சூறையாடப்பட்டன. இதன் விளைவாக கண்டம் முழுவதும் வறுமை நிலவியது. நிலங்கள் பிடுக்கப்பட்ட மக்கள், துரத்தித் துரத்திக் கொல்லப்பட்ட பொதுவுடமைவாதிகள், ஒட்டு மொத்தமாக கைவிடப்பட்டு, நீதி கிடைக்காத மக்கள் என அக்கண்டமே இருட்டில் கிடந்தது.  போராடும் பல குழுக்களும், விடுதலையை நோக்கிய போராட்டங்களும் நிறைந்த காலமது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 'சே'வின் இப்பயணம் அமைகிறது. முன்னதாக 1950-இல் மோட்டார் பொருத்தப்பட்ட தன் மிதிவண்டியில் ஒருமுறையும், பின்பு 1953-இல் மறுமுறையும் 'சே' தன் நாட்டை சுற்றிப் பார்த்திருக்கிறார். இப்பயணங்களே 'சே'வை வடிவமைத்தன, உருவாக்கின என்பது காலம் சொல்லும் செய்தி.சிறுவயதில் சிறுவனாகவும், வாலிப வயதில் வாலிபனாகவும் இருந்தவன் புரட்சியாளனாக உருமாறமுடியும் என்பதும், ஒரு புரட்சியாளன் என்பவன் பிறந்து வருபவனில்லை, சூழலின் அழுத்தமும், மனிதம் மீது கொண்ட ஈர்ப்புமே அவனை உருவாக்குகிறது என்பதும்தான் இப்படம் நமக்குச் சொல்லும் செய்தி.

இப்படத்தின் இறுதியில் 'சே' சொல்லும் வாசகம் இது “நான் இனிமேல் நான் இல்லை, குறைந்த பட்சம் முன்பிருந்த அதே நான் இல்லை”

கருத்துகள்

 1. //"நான் இனிமேல் நான் இல்லை, குறைந்த பட்சம் முன்பிருந்த அதே நான் இல்லை"//

  நல்ல படம்! என் கலெக்சனில் இருக்கிறது! அவர்களின் 'பாதை மாறும்' அந்தக் காட்சிகள் அருமை!
  என்ன பாஸ் செம பிசியா? பார்க்கவே முடியல! :-)

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜீ..ஆமாம் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 3. அருமையான படம் இதுவும் இதன் தொடர்ச்சியான சே முதல் மற்றும் இரண்டாம் பாகமும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் புதிய முயைற்சிக்கு வாழ்துகள்

  பதிலளிநீக்கு
 5. சேவைப்பற்றி எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.உங்கள் எழுத்தில் சிவப்புச்சாயம் தெரிகிறதே!!!!!!!!!பார்த்து.....மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 6. எர்னஸ்ட்டோ அந்த ஆற்றை கடக்கும் காட்சிகள் மிகவும் பிடித்தவை. அருமையான படம். ஆனால் சற்று பொருமை வேண்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.