LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

சுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்

நீண்ட நெடிய பயணம்தான் மனிதனின் இன்றைய பரிணாம நிலைக்கான காரணம். ஒரு செல் உயிரியாக இருந்து பரிணாம வளர்ச்சியில் இத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறோம். மனிதத் தோன்றலுக்கு மட்டுமில்லை, மனிதன் தன் உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் கடந்து வந்த தூரங்கள் அதிகம்.

'வாழ்க்கை என்பது ஒரு பயணம்', 'இது ஒரு பயணம், அதன் பெயர் வாழ்க்கை' என்றெல்லாம் வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது சொல்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் பயணம் செய்கிறார்கள். சிலர் வாழ்க்கையைப் பயணமாகப் பார்க்கிறார்கள். இதெல்லாம் யாருக்கு சாத்தியமாகிறது என்றால், குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சமாக அவர்கள் உயிர்த்திருத்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருப்போருக்கு. ஆனால் உயிர்த்திருத்தலுக்கே சாத்தியமில்லாத, அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டும், எந்த நேரத்திலும் பிணம் என்றழைக்கப்பட்டுவிடும் சாத்தியம் கொண்ட வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டோர் பலர் கொண்ட உலகம் இது.

அப்படித் தன் உரிமையை, உடமையை மட்டுமல்ல தன் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் மக்களை நாம் அறிவோம். பல தேசங்கள் அப்படிப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பல மக்கள் அப்படிப்பட்ட தேசங்களை கடந்துவர முயல்கிறார்கள்.

இந்த முயற்சி இரண்டுவிதமாக நடக்கிறது, ஒன்று அந்த மக்கள் தன்னை அடிமை கொள்ளும் தேசத்திலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது தன்னை அடிமை கொள்ளாத தேசத்தை வடிவமைக்கிறார்கள். இந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அடிமை கொள்ளும் தேசத்திலிருந்து வெளியேறும் மக்களை 'அகதிகள்' என்று உலகம் அழைக்கிறது, தனக்கானத் தேசத்தை வடிவமைக்கும் மக்களை 'போராளிகள்' என அடையாளப் படுத்துகிறது.

இப்படித் தன் உயிருக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மிக நீண்ட நெடிய பயணம் கொண்ட சில மனிதர்களைப்பற்றிய கதை இது. 'பனி பொழியும் மலைகள்' 'பாலைவனம்' மற்றும் 'இமயமலை' ஆகியவற்றை அவர்கள் கடந்துவர வேண்டியதிருந்தது. அவர்கள் பயணம் செய்த தூரம் '4000 மைல்கள்'. எடுத்துக்கொண்ட காலம் 'பதினோறு மாதங்கள்'.

இரண்டாம் உலகப்போரின் போது 'போலந்து', சோவியத்தின் பிடியிலிருந்த நேரம் அது. ஜெனுஸ் (Janusz) என்கிற ஒரு போலந்துக்காரரை ஒரு சோவியத் அதிகாரி விசாரித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் போலந்துக்காரர் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். அப்போது அவரின் மனைவி அங்கே அழைத்து வரப்படுகிறார். அவளைப் பார்க்கும்போதே தெரிகிறது அவள் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவள் என்பது. அதிகாரி அவளிடம் அவள் கணவனைப்பற்றி அவள் தெரிந்து கொண்டதை சொல்லச்சொல்கிறார்.

தன் கணவன் அவனது நண்பர்களோடு பேசியதிலிருந்தும், செயல்பட்டதிலிருந்தும் அவன் ஒரு உளவாளி என தான் தெரிந்து கொண்டதாக அவள் சொல்கிறாள். இதை சொல்லும்போது தன் கணவனைப் பார்க்கமுடியாமல் தலைகுனிந்து கண்ணீர் விடுகிறாள். மனைவியின் வாக்குமூலத்தின் மூலமாகவே அவனைக் குற்றவாளியாக்கி சைபீரியாவில் இருக்கும் ‘போர்க்குற்றவாளிகளுக்கான சிறையில்(POW)’ அடைக்கிறார்கள்.

சிறையில் அவனுக்கு சில நண்பர்கள் கிடைக்கிறார்கள். 'மிஸ்டர்.ஸ்மித்' என்கிற ஒரு அமெரிக்கர், 'கபரோய்' என்ற நடிகன், 'வால்கா' என்ற ருஷ்யக் குற்றவாளி (கொலை,கொள்ளைக்காக கைது செய்யப்பட்டவன்), 'தோமாஸ்' என்ற ஓவியன், (இவன் நிர்வாணப் பெண்கள் படத்தை வரைந்து அதை துணிகளுக்கும் உணவுக்கும் பண்டமாற்றாகப் பயன்படுத்துகிறான்), 'காசிக்' என்னும் போலந்துக்காரன், இவனுக்கு இரவில் கண் தெரியாது. 'வோஸ்' என்கிற லுத்துவேனிய போதகர் மற்றும் ’ஸோரன்’ என்கிற யுகோஸ்லேவிய கணக்காளன்.

நடிகன் கபரோய் சிறையில் இருந்து தப்பிப்பதைப்பற்றி ஜெனுஸிடம் சொல்கிறான். இதை ஸ்மித் மறுக்கிறார், அது நடக்கிற காரியம் அல்ல என்று. ஏனெனில் அந்தச் சிறை அமைந்திருப்பது ஒரு அடர்ந்த காட்டில், சுற்றிலும் பனிபடர்ந்த காடுகளையும், மலைகளையும் பல மைல்களுக்குக் கொண்டது அது. இதனால் தப்பிப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள்.

ஆனாலும் பனிப்புயல் வீசும் ஒரு நள்ளிரவில் இவர்கள் ஏழுபேரும் தப்பிக்கிறார்கள். இவர்களோடு நடிகன் வரவில்லை. பின்னால் இராணுவம் துரத்த தப்பி, காட்டுக்குள் ஓடுகிறார்கள். இவர்களின் நோக்கம் எப்படியாவது எல்லைதாண்டி 'மங்கோலியா'விற்குள் சென்றுவிடுவது. இதற்கு அவர்கள் கடக்க வேண்டியது பனியும், கொடிய மிருகங்களும் நிறைந்து கிடக்கும் அடர்ந்த ஒரு காட்டையும், ஒரு பெரிய ஏரியையும். முதல்நாள் இரவில் குளிரை விரட்ட தீ மூட்ட விறகு தேடுதலில் இரவில் கண் தெரியாத ’காசிக்’ குளிரில் விரைத்து இறந்து போகிறான். அவனைப் புதைத்துவிட்டு முன்னேறுகிறார்கள். ஜெனுஸ் சூரியனைக்கொண்டு வழிகாட்டுகிறான். வெற்றிகரமாக சைபீரிய பனிக்காடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள். சிறையில் உண்ணாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்து கையோடு கொண்டு வந்த உணவுகளைச் சிறிது சிறிதாக உண்கிறார்கள். உணவு தீர்ந்துபோய், பசியோடு பயணம் செய்கிறார்கள்.

வழியில் 'இரினா' என்ற பெண்ணை சந்திக்கிறார்கள். அவள் வார்சோ (Warsaw)விலிருந்து தப்பி வந்தவள் என்றும் அவள் பெற்றோர்களை, சோவியத் இராணுவம் கொன்றுவிட்டது என்றும் சொல்கிறாள். அவளையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். அவள் சொன்னது பொய் என்பது பின்னால் தெரியவருகிறது. அவள் மேல் பரிதாபம் வரவே அப்படி சொன்னாள் என்பதும், அவள் ஜெர்மனியர்களிடமிருந்து தப்பி ஓடிவந்த ஒரு யூதப்பெண் என்பதும் தெரியவருகிறது. பயணம் தொடர்கிறது.

அவர்கள் கடக்க வேண்டிய ஏரியை வந்தடைந்தபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள், ஏனெனில் அந்த ஏரி முழுவதும் பனியால் உறைந்து கிடக்கிறது. அதுவும் திடமான பனி அல்ல, மேலே ஏறினால் உடைந்துவிடுகிற பனி. நீந்திச்செல்லவும் முடியாது என்பதனால் ஏரியைச் சுற்றித்தான் செல்லவேண்டும் என தயங்கி நிற்கிறார்கள். அப்போது இரினா சட்டென்று பனி மீதேறி ஓடுகிறாள், அவள் ஓட ஓட பனி உடைகிறது, ஆனாலும் சமாளித்து அடுத்த கரையை அடைந்துவிடுகிறாள். இதைப்பார்த்த அனைவருக்குள்ளும் உத்வேகம் வந்து பனியின் மீது ஓடி அடுத்த கரையை அடைகிறார்கள். பின்பு அவர்களின் பயணம் பல மைல் தூரம் தொடர்கிறது. வழியில் புதைசேற்றில் மாட்டிக்கொண்ட ஒரு மான் தென்படுகிறது. அதை அடித்து உணவருந்துகிறார்கள். ஒரு வழியாக மங்கோலிய எல்லைக்கு வருகிறார்கள்.

எல்லாரும் எல்லையைக் கடக்க 'வால்கா' (ருஷ்ய குற்றவாளி) மட்டும், தான் மீண்டும் ருஷ்யாவிற்கேச் செல்லப்போவதாகச் சொல்கிறான். ஏனெனில் ருஷ்யாவே அவனது மண் என்றும் 'ஸ்டாலினே' அவனது நாயகன்(Hero) என்றும் சொல்கிறான். அவனைத் தவிர்த்து மற்றவர்கள் மங்கோலியாவிற்குள் செல்கிறார்கள். அங்கே எதிர்ப்படும் முகப்பு வளைவில் 'ஸ்டாலின்' மற்றும் 'சிவப்பு நட்சத்திர' ஓவியத்தையும் பார்க்கிறார்கள். அதனால் அங்கே செல்வது ஆபத்து என்றும், தப்பி பிழைக்க ஒரே வழி திபெத்தின் வழியாக இந்தியாவிற்கு போவதுதான் என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை, அவர்களின் வழியை மறித்துக்கொண்டிருப்பது 'கோபி' பாலைவனம் என்னும் உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமும், உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்ட இமயமலையும்.

அவர்களுக்கு உயிர் பிழைக்க வேறு வழியில்லை, கோபி பாலைவனத்தைக் கடக்கத் துவங்குகிறார்கள். வழியில் நீர் இல்லாமலும், மணல் புயலில் சிக்கியும் பெரும் துயரத்தை அடைகிறார்கள். இதில் இலியான மரணம் அடைகிறாள். அவர்களின் பயணம் தொடர்கிறது. ஓவியன் தோமாஸும் இறக்கிறான்.

ஒருபுறம் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம், மறுபுறம் கையில் நீர் இல்லாமை என்று அவர்கள் பெரும் துயரம் கொள்கிறார்கள். வழியில் 'மிஸ்டர்.ஸ்மித்தால்' முடியாமல் போகிறது. தான் இனிமேல் பிழைக்கப்போவதில்லை, பிழைக்கவேண்டிய தேவையும் தனக்கு இல்லை என்றும், தன் மகனை ருஷ்யாவிற்கு அழைத்து வந்த குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட, தான் இறப்பதுதான் சரி என்றும், மற்றவர்கள் தன்னை அங்கே விட்டு விட்டு பயணத்தைத் தொடரும்படியும் சொல்கிறார். (இவரின் மகன் ருஷ்யர்களால் கொல்லப்பட்டான்)

ஜெனுஸ் அவருக்கு ஆறுதல் சொல்கிறான். தான் பிழைத்திருக்க நினைப்பதே தன் மனைவிக்காகத்தான் என்றும், தன் மனைவியை மீண்டும் சந்திப்பதன் மூலம் அவள் என்னைக் காட்டிகொடுத்த குற்றவுணர்ச்சியிலிருந்து அவள் வெளிவருவதற்கும்தான் என்றும் சொல்கிறான். மிஸ்டர் ஸ்மித்தையும் உடன் அழைத்துச் செல்கிறான்.

பிறகு, இவர்கள் பல இன்னல்களுக்கிடையே திபெத்தை அடைகிறார்கள். அங்கே இருந்து ஸ்மித் லாசாவிற்குப் பிரிந்து செல்கிறார். ஏனெனில் அங்கே அமெரிக்க இராணுவம் அப்போது முகாமிட்டிருந்தது. அவர்கள் மூலம் அவர் அமெரிக்கா சென்றுவிட முடியும் என்பதனால். மற்ற மூவரும் இமயமலையைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழைகிறார்கள். அங்கே உள்ளூர் மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தது 1941 மத்தியில், இந்தியா வந்து சேர்ந்தது 1942 மார்ச்சு மாத வாக்கில். பின்பு 1965-இல் ஜெனுஸ் போலந்து சென்று தன் மனைவியைச் சந்தித்ததாக படம் முடிவடைகிறது.

The Way Back (2010) என்னும் இந்தப்படம், The Long Walk என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அண்மையில்தான் இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. 1942-இல் இந்தியாவில் நுழைந்த அந்த மூன்று பேருக்கும் இந்த படம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

பிழைத்திருத்தல், உயிர்த்திருத்தல் என்பதற்கானப் போராட்டத்தை இந்தப்படம் சித்தரித்தாலும், சுதந்திரமாகயிருத்தல் என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.

இரவில் கண் தெரியாத 'காசிக்' தானும் இவர்களோடு தப்பித்து வருதாகச் சொல்லும்போது ஜெனுஸ் அவனிடம் கேட்கிறான். "நீ எப்படித் தாக்குப்பிடிக்க முடியும், உன்னால் தான் இரவில் பார்க்கமுடியாதே" என்று.

அதற்கு காசிக் சொல்லும் பதில், "சரிதான், ஆயினும் அப்போது நான் சுதந்திர மனிதனாக இறப்பேன்".
.


Comments

 1. அருமையான எழுத்து நடை சார்.. நன்றி பகிர்ந்தமைக்கு

  ReplyDelete
 2. நன்றி இராமசாமி..

  ReplyDelete
 3. இந்தப்படம் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை மிக நியாயமாக தூண்டும் பதிவு.

  ReplyDelete
 4. நன்றி உலக சினிமா ரசிகன் - பார்க்கவேண்டிய படம் தான், ஆனால் ஒரு வெகுசன சினிமா இல்லை இது. படம் முடியும் போது அதிலிருக்கும் அரசியலோடு படம் பார்த்திருந்தால் மட்டுமே நிறைவை கொடுக்கும்.

  ReplyDelete
 5. படம் பார்க்கும் ஆவலை தங்கள் விமர்சனம் தூண்டி விட்டது. இன்று இரவே இதை டவுன்லோடி விடுகின்றேன். (டவுன்லோடுவதை தவிர வேற வழி இல்லை, மன்னிக்கவும் )

  ReplyDelete
 6. நன்றி தனுசுராசி

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள்... பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்