முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Light Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்_Part-1

புகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.

புகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.


திரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.லைட் மீட்டரின் அடிப்படை:

நாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினாடிக்கு எத்தனை ஃபிரேம்கள்' (fps) மற்றும் 'ஷாட்டர் ஆங்கிள்' (Shutter Angle) ஆகியவற்றோடு தொடர்பு உடையது. இந்த மூன்றின் அடிப்படையில் 'எக்ஸ்போஷர்' தரப்படுகிறது.

புகைப்படமோ அல்லது ஒளிப்பதிவோ இரண்டுமே 'ஒரு Subject-இன் மீது விழுந்த ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பை பதிவு செய்வதின் மூலம்தான் நிகழ்கிறது. அதேபோல் எந்த பொருளும் தன் மேல் விழும் ஒளியை இரண்டு விதமாக கையாள்கின்றன, உள்வாங்கிக் கொள்வது மற்றும் பிரதிபலிப்பது. இந்த இரண்டு ஆதார செயல்பாடுகளும் பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறது. மரம் அல்லது மனித உடல் போன்றவை பிரதிபலிப்பதற்கும் கண்ணாடி, இரும்பு போன்ற பொருட்கள் பிரதிபலிப்பதிற்கும் வித்தியாசம் இருக்கும் இல்லையா? அதேபோல் ஒவ்வொரு வண்ணத்தைப் பொருத்தும் அதன் பிரதிபலிப்பு மாறுபடும்.

இப்படிப் பிரதிபலிக்கும் ஒளியானது, அந்தப்பொருளின் வடிவத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும், இந்த பிரதிபலிப்பை பதிவு செய்வதன் மூலம்தான் நாம் புகைப்படம் எடுக்க முடிகிறது. புகைப்படத்தை நாம் நிழற்படம் என்றும் சொல்கிறோம் அல்லவா, உண்மையில் அது நிழலைப் படம் பிடிப்பது அல்ல, இப்படிப் பிரதிபலிக்கப்பட்டப் பிரதி என்பதைக் குறிக்கத்தான் நாம் அதை நிழற்படம் என்கிறோம்.

இதை அடிப்படையாகக் கொண்டுதான் இரண்டு வகை மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது.


இரண்டு வகை லைட் மீட்டர்கள்: Incident and Reflected


இன்சிடண்ட் மீட்டர்: Incident Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தும் போது, மீட்டரை 'subject'-இன் இடத்தில் வைத்து 'Subject'-இன் மீது விழும் ஒளியை அளக்க முடியும். அதாவது 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அது.

செயல்படும் முறை: முகப்பில் இருக்கும் கூம்பின் மீது விழும் ஒளியை மின்சாரமாக மாற்றுவதின் மூலம் அந்த ஒளியை அளக்கிறது. இதனால் தன் மேல் விழும் ஒளியின் அளவை (amount of light) அது தருகிறது.

அனலாக் மீட்டர்

அனலாக் மீட்டர்:
a. ISO அல்லது Film Speed அமைக்கும் இடம்.
b. ஒளியை அளக்கும் கூம்பு.
c. கருவியை இயக்கும் பொத்தான். இதை அழுத்தும் போது ஒளி அளக்கப்படுகிறது.
d. அளவைக் காட்டும் முள்.
e. அளவுகள் 'foot-candle scale'-இல் காட்டப்படுகிறது.
f/g. காட்டும் அளவை அமைக்கும் பகுதி.
h. Shutter speed scale
i. Aperture scale

டிஜிட்டல் மீட்டர்:
டிஜிட்டல் மீட்டர்ரிப்லக்டட் மீட்டர்: Reflected Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தி நம் 'Subject'-லிருந்து பிரதிபலிக்கும் (Reflected) ஒளியின் அளவை அளக்க முடியும். அதாவது கேமரா இருக்கும் இடத்தில் மீட்டரை வைத்து 'Subject'-லிருந்து பிரதிபலித்த ஒளியை அளப்பது.


ரிப்லக்டட் மீட்டர் or Spot Meter

செயல்படும் முறை: நாம் படம்பிடிக்கும் பொருள் நோக்கி இந்த மீட்டரை திருப்பி, (அதில் பார்ப்பதிற்கான கருவிகள் இருக்கும்) ஒளியின் அளவை எடுக்கும் போது அது பார்க்கும் பொருளின் ஒளியை அது அளவிடுகிறது. அதாவது அந்த பொருளில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியின் அளவு அது. ஒரு குறிப்பிட்ட இடத்தின் (spot) ஒளியை அளப்பதால் இதை 'Spot Meter' என்கிறோம்.


18% கிரே அடிப்படை: The 18% Neutral Gray Standard

லைட் மீட்டர்கள் தன் மீது விழும் ஒளியின் அளவை நிலையான விதத்தில் அளக்க உருவாக்கப்பட்டவை. அவை படம் பிடிக்கப்படும் பொருள்களில் இருக்கும் வித்தியாசத்தை உணரக்கூடியவை அல்ல. நமக்குத் தெரியும், படம் பிடிக்கும் பொருள் எந்த நிறத்தில் இருக்கிறது, நபர் என்றால் அவர் கருப்பா, சிவப்பா என்பது போல. ஆனால் மீட்டர்கள் அப்படி அல்ல, அதற்கு பச்சைப் பலூனுக்கும், சிவப்புப் பலூனுக்கும் வித்தியாசம் தெரியாது. இன்சிடண்ட் மீட்டர் தன் மீது விழுந்த ஒளியின் அளவைத்தான் சொல்லும், சுற்றி இருக்கும் பொருள்களின் பிரதிபலிப்பு தன்மையை கருத்தில் கொள்ளாது.

ரிப்லக்டட் மீட்டர் தான் பார்க்கும் பொருளின் வண்ணம் மற்றும் அதன் பிரதிபலிப்பு தன்மைச் சார்ந்து ஒளியின் அளவைக்காட்டும்.

இந்த இரண்டு மீட்டர்களுமே தாங்கள் அளக்கும் பொருட்கள் எல்லாம் 18% பிரதிபலிப்பு தன்மைக்கொண்டது அல்லது 18% கிரே (average 18% reflectance, or neutral gray) தன்மைக் கொண்டதாக எடுத்துக்கொள்ளும் (assume) படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒரு நிலையான அளவைப் பெறமுடிகிறது.

18% neutral gray முறை மீட்டர்கள் ஒரு சராசரியான பொருளை சராசரியான ஒளியில் அளப்பதிற்கு பயன்படுகிறது. ரிப்லக்டட் மீட்டர் பயன்படுத்தும் போது 18% கிரேக் கார்டு பயன்படுத்துவது இதனால் தான்.


இன்சிடண்ட் மீட்டர் மற்றும் ரிப்லக்டட் மீட்டர் இரண்டும் இணைந்த நவீன டிஜிட்டல் மீட்டர்

சமன்பாடுகள்: இந்த அளவுகளைக்கொண்டு எக்ஸ்போஷர் கொடுப்பதற்கு சில சமன்பாடுகள் பயன்படுகின்றன. இன்றைய நவீன மீட்டர்கள் தங்களுக்குள் சிறிய அளவில் கணினித் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் அவை தானாகவே சமன்பாடுகளைச் செய்து நமக்குத் தேவையான எக்ஸ்போஷர்களைத் தருகிறது.

(இங்கே அந்த சமன்பாடுகளை விளக்க எனக்கு விருப்பம்தான், ஆனால் அவற்றை விளக்க துவங்கினால் இந்த கட்டுரையை படிப்பதை நீங்கள் இத்தோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்பதனால் அதைத் தவிர்க்கிறேன். அதுவும் இல்லாமல் நான் என்ன உங்களுக்கு பாடமா நடத்துகிறேன்? எனக்குத் தெரிந்ததை அல்லது தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருப்பதை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன், அவ்வளவுதானே!.)

இந்த இரண்டு மீட்டர்களிலும் இருக்கும் நன்மை, தீமை என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் சொல்லுகிறேன்.

நான் மீட்டரிங் (Metering) செய்கிறேன் - பொம்மலாட்டம் படத்தின் போது: வலதுபுறம் 'நானா படேகர்' இடதுபுறம் இயக்குனர் பாரதிராஜா

பொம்மலாட்டம் படத்தின் போதுகருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.