முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தண்டிக்கப்பட்ட 'மனித குலத்திற்கு எதிரான குற்றவாளிகள்'

செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. போலந்தை ஆக்கிரமித்தல் (பிடித்தல்) என்பதாக இந்தப் போரை ஜெர்மனி ஆரம்பித்து வைத்தது. பின்பு அது நண்பனுக்கு நண்பன், எதிரிக்கு எதிரி என்பதாய் விரிவடைந்து இரண்டாம் உலகப்போராக உருவெடுத்தது.

ஆரம்பத்தில் ஜெர்மனியின் நாடு பிடிக்கும் போக்கை, சில நாடுகள் நட்பாக இருப்பதன் மூலமாகவும் நடுநிலையாக இருப்பதன் மூலமும் ஆதரித்தன. வலியும் வேதனையும் அவனவனுக்கு வரும்போதுதான் தெரியும் என்ற கணக்காய் ஜெர்மனி மெல்ல தன்னை நோக்கியும் தன் நட்பு நாடுகளை நோக்கியும் தன் கரங்களை நீட்டிய போதுதான் பல தேசங்கள் சுதாரித்துக்கொண்டு ஜெர்மனியை எதிர்க்கத் துவங்கியன. அதற்குள் ஐரோப்பியக் கண்டத்தில் பெரும்பலான நாடுகளை ஜெர்மனி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது. 1939இல் துவங்கிய இந்த போரில் 1941 வரை வட அமெரிக்கா, நடுநிலை நாடு என்ற போர்வையில் தன் ஆயுதங்களை விற்று, கல்லா கட்டிக்கொண்டிருந்தது. டிசம்பர் ஏழு 1941இல் அவாய்(Hawaii) பகுதியில் இருந்த 'பேர்ல் துறைமுகம்' என்னும் அமெரிக்கக் கடற்படைத் தளத்தை ஜப்பான் தாக்கியதால் மட்டுமே வட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் குதித்தது. பல உயிர்களைப் பலிவாங்கி, பல இழப்புகளை ஏற்படுத்தி ஒரு வழியாக இந்த மாபெரும் மரணப்போர் முடிவுக்கு வந்தபோது அது பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கையை குத்து மதிப்பாகத்தான் கணக்கிட முடிந்தது.

உயிரிழப்பு ஐந்திலிருந்து ஏழுகோடியாக இருக்கலாம் என்பதில் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்), அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின் போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.


இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படுகொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல். ஐரோப்பாவில் ஜெர்மனி பிடித்த நாடுகளில் இனப்படுகொலைகள் துவங்குவதிற்கு முன்பாக தொண்ணூறு லட்சம் யூதர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்கிறது ஒரு கணக்கு. அதாவது இட்லரின் இனப் படுகொலையில் கொல்லப்பட்டது மூன்றில் இரண்டு பங்கு யூதர்கள்.

இந்தப் போருக்குக் காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். இட்லர் தற்கொலை செய்து கொண்டான். முசோலனி அவனது நாட்டு மக்களாலேயே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவுக்குப் பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இத்தனை ஆண்டு கால போரிலிருந்து விடுபட்ட நாடுகள் கொண்டாட்டத்தில் மூழ்கின. பல தேசங்கள் தங்களை விடுவித்துக்கொண்டன. பல புதிய தேசங்கள் உருவாயின. உலகம் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்தது..எல்லாம் சரி. இத்தனை உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு இழப்பீடுதான் என்ன? இராணுவத்தினரை விடுங்கள். ஒன்றுமறியா அப்பாவி மக்கள் இத்தனைப்பேர் கொல்லப்பட்டதற்கு பதில் வேண்டுமா இல்லையா?

இதற்குக் குறைந்தபட்சம் இழப்பீடு என்பது இத்தகைய அநியாயம் நிகழ்வதற்குக் காரணமானவர்கள், நிகழ்த்தியவர்கள், துணைபோனவர்கள் தண்டிக்கப்படுவதாகத்தான் இருக்க முடியும். மூலகர்த்தாவான இட்லர் மற்றும் அவனுடைய உயரதிகாரிகள் பலர் போரின் முடிவிற்குள்ளாகவே இறந்து போய் விட்டனர் என்றாலும் அவனுக்குத் துணைபோன, உடனிருந்து கொடுமைகளை நிகழ்த்தியவர்கள் பலர் இன்னும் உயிரோடு இருந்தனர். ஜெர்மனி என்னும் நாடு இட்லரின் எல்லா கொடுமைகளும் அரங்கேர அனுமதித்தது. மேலும் அதன் மக்கள் இதைக் கண்டும் காணாமலும் இருந்தனரா? இந்த மாபெரும் கொடுமைகளுக்கு ஜெர்மனி என்னும் தேசமும் அதன் மக்களும் பொறுப்பாளர்களா? என்ற கேள்வியும் மீதமிருந்தன.  

1943 பிற்பகுதியில் நிகழ்ந்த ருஷ்யத் தலைவர் 'ஜோசப் ஸ்டாலின்', வட அமெரிக்க அதிபர் 'பிராங்களின் ரூஸ்வெல்ட்' மற்றும் பிரித்தானிய பிரதமர் 'வின்சண்ட் சர்ச்சில்' சந்திப்பில் தண்டிப்பதைப்பற்றிய ஒரு பேச்சு துவங்கி இருக்கிறது. ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஜெர்மனிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுத்து விடலாம் என்பது ஸ்டாலினின் கருத்து. அதற்கு ரூஸ்வெல்டின் நகைச்சுவை 49,000 பேருக்கு மரண தண்டனை கொடுத்தால் போதும் என்பதாக இருந்திருக்கிறது. தன் நாட்டிற்குத் தன் கடமையைச் செய்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவதை 'வின்சண்ட் சர்ச்சில்' மறுத்திருக்கிறார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு குற்றத்திற்குக் காரணமானவர்கள் மற்றும் அதை நிகழ்த்தியவர்கள் மீது குற்ற விசாரணை செய்து தண்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவத் தீர்ப்பாயம்' (The International Military Tribunal) துவங்கப்பட்டது. இந்த விசாரணைகள் பெரும் ஜெர்மானிய நகரங்களான 'மூனிச்', 'பெர்லின்' போன்ற நகரங்களில் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு பின்பு 'நியூரம்பர்க்' (Nuremberg) தேர்வு செய்யப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. நியூரம்பர்க்கில்தான் 'நாஜி கட்சி' துவங்கப்பட்டது என்பது ஒன்று, அதுமட்டுமல்லாமல் அப்போதைய காலகட்டத்தில் போரில் குண்டுகளால் பாதிப்படையாத முழுமையான கட்டிடம் அங்கேதான் இருந்தது என்பதும் விசாரணைக்கூடம் மற்றும் சிறை இணைந்த கட்டிடம் நியூரம்பர்க்கில்தான் இருந்தது. இங்கே நடந்ததால், இது 'நியூரம்பர்க் விசாரணை' என அழைக்கப்பட்டது.

இருபத்தி நான்கு முக்கிய ஜெர்மனிய அதிகாரிகள் போர்க் குற்றவாளிகளாகவும், ஆறு குற்ற அமைப்புகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. நாஜி கட்சி (Nazi party), மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity) நிகழ்த்திய 'SS' (Schutzstaffel) என்று அழைக்கப்பட்ட அமைப்பு, புலனாய்வு அமைப்பான 'SD' (Sicherheitsdienst), இரகசிய காவல்துறையான 'கெஸ்டபோ' (Gestapo), இட்லர் அதிகாரத்திற்கு வருவதற்குக் காரணமான 'SA' (Sturmabteilung) மற்றும் 'மேல்மட்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு' (General Staff and High Command) ஆகியவையே அந்த ஆறு அமைப்புகள்.

'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியைக் குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை   குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்பட்டன.

நவம்பர் 20, 1945-இலிருந்து அக்டோபர் 1, 1946 வரை இந்த விசாரணைகள் நடந்தன. இதில் பனிரெண்டு பேருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு நீண்ட நாள் சிறை (15 முதல் 20 ஆண்டுகள்) தண்டனையும் வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம்' (Crime Against Humanity) செய்தவர்கள் என முடிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைகளுக்குப் பின்புதான் உலகம் இனப்படுகொலை (GENOCIDE) என்னும் விவாதத்திற்கு வந்தார்கள். (மேலும் விவரங்களுக்கு கி.வெ எழுதிய மனித குலப்பகைவன் இராசபட்சே - ஐ,நா. குழு அறிக்கையை பார்க்கவும் - பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது)

பிறகு இரண்டாம் ஆணையம் Nuremberg Military Tribunals (NMT)அமைக்கப்பட்டு இரண்டாம் மட்ட போர் குற்றவாளிகள் (lesser war criminals) விசாரிக்கப்பட்டனர். இதை வட அமெரிக்கா நடத்தியது. இதில் யூதர்களை இனப்படுகொலை செய்ய காரணமாகவும் துணையாகவும் இருந்த மருத்துவர்கள் மற்றும் நீதிபதிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த நீதிபதிகளே யூதர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறி தண்டித்தவர்கள், இந்த மருத்துவர்களே யூதர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதிற்கு உதவி புரிந்தவர்கள். 1946 இலிருந்து 1949 வரை இந்த விசாரணைகள் பனிரெண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.


இந்த நியூரம்பர்க் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கற்பனை கதையாக 'ஜட்ஜ்மெண்ட் அட் நியூரம்பர்க் '(Judgment at Nuremberg) என்னும் படம் 1961-இல் எடுக்கப்பட்டது. கற்பனைக் கதாபாத்திரங்களானாலும் இதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் உண்மையான மனிதர்களை அடிப்படையாக கொண்டிருந்தன. இதில் நான்கு நீதிபதிகள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். அப்பாவி யூதர்களைக் கொன்றொழிக்கத் துணைபோனவர்கள் என்பது குற்றசாட்டு. மேலும் ஒட்டுமொத்த ஜெர்மனியர்களும் இந்தக் குற்றங்களுக்குத் துணைபோனார்களா என்ற கேள்விக்குப் பதில் தேடுவதும் இந்த படத்தின் அடிச்சரடு.  இந்த படத்தின் மூலம் நாம் அன்று நடந்த நூரம்பர்க் விசாரணைகளின் மாதிரியை கண்டுணரலாம். அற்புதமாகப் படமாக்கப்பட்டப் படம் இது. மிகச் சிறந்த நடிப்பு, வசனம், இயக்கம் என பல திறமைகளை உள்ளடக்கிய படம் இது.
இந்த உலகம் உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்கள் உலக முழுவதும் பரவலாக தொடர்ந்து கடைபிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' (Crimes against Humanity)  மற்றொன்று 'இனப்படுகொலை' (Genocide). இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும். சுதந்திர மனிதன் என்கிற சித்தாந்தம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரித்தானது. அத்தகைய மனிதத்தை நோக்கி நகருவது நம் இலக்கென்றால் இத்தகைய குற்றங்களைப் புரிபவர்களைத் தண்டிப்பதே அதற்கான பாதையாக இருக்க முடியும். மிக விரைவில் அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைய இருக்கின்றன. அந்த பாதை சரியாக அமைய நம்மால் ஆனா எல்லா சாத்தியங்களையும் நல்க கைகோர்ப்போம் தோழர்களே.    


பின் இணைப்பு:  

இனப்படுகொலை:
உலக வரலாற்றில், சனநாயக காலத்தில் கூட இன அழிப்புகள் நடந்திருந்தாலும் நாஜி இட்லர் குழுவிற்கெதிரான நியூரம்பர்க் விசாரணைதான் இனப்படுகொலை குறித்து விவாதித்த முதல் நிகழ்வாகும். இட்லரின் நாஜிப்படை, யூதர்களை அவர்களது இன அடையாளம் காரணமாகவே கொன்றது. இது குறித்த நியூரம்பர்க் விசாரணையின் போதுதான் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரபேல் லெம்கின் (Raphel Lemkin)  இனப்படுகொலை (GENOCIDE) என்ற விளக்கத்தை முன்வைத்தார்.

இட்லரின் 24 தளபதிகள் மீது அன்றைக்கு விசாரணை நடத்திய நியூரம்பர்க் மன்றம் நடைபெற்ற குற்றம் “மனித குலத்திற்கு எதிரான குற்றம் தான்” (Crime Against Humanity) என்று முடிவு செய்தது. ஏனெனில் அன்று உலகச் சட்டங்களில் ’இனப்படு கொலை’ என்பதற்கான வரையறை ஏதுமில்லை.

ஆயினும் நியூரம்பர்க் தீர்ப்புக்குப் பிறகு உலகச் சட்ட வல்லுனர்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் நடைபெற்ற தொடர் விவாதங்கள் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இவற்றின் விளைவாக ஜெனீவாவில் நடைபெற்ற இனப் படுகொலை குற்றத்தைத் தடுப்பது மற்றும் இக்குற்றத்திற்கான தண்டணை குறித்த ஐ.நா. மாநாடு 1948 டிசம்பர் 9 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது. (தீர்மானம் 260(iii) ) இது 1951இல் உலகச் சட்டமாக ஏற்கப்பட்டது. ஆயினும் வல்லரசுகளின் அடாவடி காரணமாக 1994-ல் தான் செயலுக்கு வந்தது.

இச்சட்டத்தின் விதி 2 'இனப்படுகொலை' என்பதற்கு கீழ்வரும் விளக்கத்தை அளிக்கிறது.

“ஒரு தேசிய இனத்தையோ, பண்பாட்டு இனத்தையோ,  மரபு இனத்தையோ அல்லது மதக் குழுவையோ முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கீழ்வரும் அனைத்துச் செயல்பாடுகளும் இனப்படுகொலை (GENOCIDE) ஆகும்.

மேற்சொன்ன,

அ.) ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது.

ஆ.) ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கொடும் தீங்கை உருவாக்குவது.

இ.) ஒரு குழுவின் முழுமையையோ அதன் ஒரு பகுதியையோ உடல் ரீதியாக அழிப்பதற்கு உரிய வாழ் நிலைமையைத் திட்டமிட்டு உருவாக்குவது.

ஈ.) ஒரு குழுவினரிடையே குழந்தைப் பிறப்பைத் தடுக்க திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்வது.

உ.)  ஒரு குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு குழுவினருடன் இணைத்துவிடுவது”
.

கருத்துகள்

  1. Yes, Vijay...it's a fantastic movie....! I watched this few years ago...! I still remember the fiery words and fantastic performance by 'Schell' who played the role of Defence Attorney in this movie...! Your post describes the story behind WWII trials very neatly....! Kudos to you....!

    பதிலளிநீக்கு
  2. நன்றி சதிஷ்குமார், நீங்கள் சொல்லுவது உண்மைதான், மிக அற்புதமான நடிகர், அந்த படத்திற்கு ஆஸ்கார் வாங்கி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு