விக்ரம் என்னும் அற்புதமானக் கலைஞனின் நடிப்பு, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் 'புகைப்படங்களைப்' பார்த்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஒருவேளை நடிப்பு என்று சொல்லி, நம்மைப் படுத்தி எடுத்துவிடுவாரோ என்று. ஆனால் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் நம்மைக் கவர்ந்துவிட்டார்.
முதல் காட்சியிலிருந்தே, குறிப்பாக நீதிமன்றக் காட்சியிலிருந்து விக்ரம் தன் இயல்பான நடிப்பால் நம்மை, படத்திற்குள் இழுத்துவிடுகிறார். அவர் இளைத்திருக்கும் விதமும், தலைகலைந்து, கண்கள் சோர்ந்து அதனூடே அவர் வெளிப்படுத்தும் சோகமும் இயலாமையும் நம்மை அவரோடு இணைத்துவிடுகிறது.
அவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சாரா) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமும் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம்.
இந்தக் கதையை விக்ரம் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. தன் நடிப்புக்குத் தீனி போடும் என்பதாலோ அல்லது ஒரு அற்புதமான கதையில், கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆவலிலோ இருக்கலாம். ஆனால் இயக்குனர் விஜய் இந்தக் கதையை ஒரு காரணத்திற்காக மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அது, அற்புதமான ஒரு வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவரும் சாத்தியத்திற்கான முயற்சியாக இருக்க கூடும். இது, அவர் தன் திறமைகளின் மேல் கொண்ட பரிசோதனை முயற்சி என்று கூடச் சொல்லலாம்.
 |
அற்புதமானக் காட்சி - இரண்டு பேரின் முகங்களில் இருக்கும் உணர்ச்சிகளைப் பாருங்கள் |
ஒரு வெகுசன சினிமாவை உருவாக்குவது என்பது கடினமான ஒரு பணி என்றாலும், கொஞ்சம் முயன்றால் ரசிக்கும் விதமாக, ரசிகனின் பொழுதைப்போக்கும் (பொழுதுப்போக்கு) படமாக உருவாக்கி விட முடியும், ஆனால் ஒரு சிறந்தப் படத்தை உருவாக்குவது என்பது மிகக் கடினமான செயல். அதுவும் இந்த மாதிரியானக் கதையை இரண்டரை மணிநேரம் களைப்பு ஏற்படாமல், சுவாரசியமாகக் கொண்டு செல்லுவது, தேர்ந்த ஒரு கலைஞனால் மட்டும்தான் முடியும். அதை இயக்குனர் விஜய் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
 |
இயக்குனர் விஜய் |
வழக்கமான வெட்டுக்குத்து, பழிவாங்கல், துரத்தல், காதல் போன்றவை இல்லாமல் சொல்லுவதற்கு, பல கதைகள் உண்டு. அப்படியான கதைகள் திரைப்படமாக உருவாக இந்தப்படம் ஓடுவதும், அதை மக்கள் ஏற்றுக்கொள்வதும் உதவியாக இருக்கும்.
உண்மையில் ஒரு பொழுதுபோக்குப் படத்தை விட, இந்த மாதிரியான 'இயல்பான' படம் எடுக்கும் போதுதான் அதன் இயக்குனர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தொழில்நுட்ப குழுவும் தன் அதிகபட்ச திறமையை, நேர்மையோடு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு அற்புதமானக் கலைப் படைப்பைத் தோன்றுவிக்க முடியும். இப்படத்தின் ஒட்டு மொத்த குழுவும் அதைச் செய்திருக்கிறது.
திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதனால், திரைப்படத்தின் நேர்த்தி என்பது முதலில் அதன் ஒளிப்பதிவின் மூலமாகவே பார்வையாளனைச் சென்று அடைகிறது. சிறப்பான ஒளிப்பதிவால் கிடைக்கும் காட்சியானது (பிம்பம்) பார்வையாளனை உள்ளே இழுக்கப் பெரிதும் உதவும். பிறகு அதன் இசை, நடிப்பு, இயக்கம், வசனம், படத்தொகுப்பு என, பல தொழில்நுட்ப பிரிவுகளைக் கொண்டு பார்வையாளனை தன்வசத்தில் இருத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் 'நீரவ் ஷா' தன் பங்களிப்பை மிக நேர்த்தியோடு செய்திருக்கிறார். அற்புதமான தன் திறமையின் மூலம் கவித்துவமான காட்சிகளை ஓவியமாக நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
இசையமைப்பாளர் 'ஜி.வி.பிரகாஷ்' தன் இசையால் உணர்ச்சிகளை சிறப்பாக மீட்டெடுத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
'லாஜிக்' மீறல் என்பது சில இடங்களில் இருந்தாலும் அவை, படத்தை சுவாரசியமாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனால் பெரிதாக இடரவில்லை.
இப்படம் பல அற்புதமான கணங்களைக் கொண்டிருக்கிறது. படம் முழுவதும் ஒருவிதப் பரவசமும், நெகிழ்ச்சியும் பரவிக்கிடக்கிறது.
கண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளைக் கொண்ட படங்கள் மிக அரிதாகவே வருகின்றன. பார்க்கும்போது மட்டுமல்லாமல், திரைப்படத்திற்கு வெளியேயும், நினைக்கும்போதெல்லாம் கண்ணீரை வரவழைத்துவிடும் காட்சிகள் மிக மிக அரிது.
இப்படம் அப்படியானக் காட்சிகள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இறுதியில் வரும் நீதிமன்றக் காட்சி. அந்தக்காட்சியில் விக்ரமும் அந்தக் குட்டித் தேவதையும் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகள் கண்ணீரை வரவைக்கின்றன. பார்த்தபோது மட்டுமல்ல, இப்போதும் இதை எழுதும் போதும், நான் உணர்ச்சிவசப்படுகிறேன். உண்மையில் வாய்விட்டு அழவேண்டும் என்று தோன்றுகிறது, சூழ்நிலையின் கட்டுப்பாட்டால் அதை தவிர்த்தேன், தவிர்க்கிறேன்.
இந்தக் காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
குழந்தைகளின் அறியாமையில், வெகுளித்தனத்தில், கள்ளம் கபடம் அற்றத் தூய்மையான மழலை உலகில் சில மணி நேரமாவது வாழ்ந்துவர விரும்பினால், இந்தப் படத்தைப் பாருங்கள். 'விக்ரமும் சாராவும்' அதைச் சாத்தியமாக்குகிறார்கள். நாம் தவற விடுகிற அல்லது கண்டு கொள்ளாத வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை இப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.
இயக்குனர் விஜய்,விக்ரம்,குட்டித் தேவதை 'சாரா' மற்றும் குழுவினருக்கு என் நன்றி.
பிற்சேர்க்கை:
அதே நேரம், இப்படம் 'I Am Sam' என்னும் ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, பலமான விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. தெய்வத்திருமகள் படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள், காட்சி அமைப்பு, இசை மற்றும் நடிப்பு வரை, அப்படியே ஆங்கிலப்படத்தைப் பார்த்து பிரதி எடுக்கப்பட்டிருக்கிறது, ஆதனால் இப்படத்தை எவ்வகையில் கொண்டாடுவது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்பது ஒரு விதத்தில் உண்மைதான். அதை இயக்குனர் குறிப்பிட்டு இருக்க வேண்டும், அப்படிச் செய்யாதது அவருக்கு மூளைத் திருடர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆங்கிலப்படத்தின் இயக்குனரான 'ஜெசி நெல்சன்' (Jessie Nelson)-க்கு நன்றியாவது தெரிவித்து இருக்க வேண்டும். நன்றி தெரிவிப்பதில் கூட ஏராளமான சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. என்றாலும், அதை வெளிப்படுத்துவதுதான் நாகரிகம். செய்யவில்லை என்பது கண்டிக்க கூடியதும் வருத்தம் தரக்கூடியதும்தான்.
ஒரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தினால், அதைப்போலவே ஒன்றைச் செய்து பார்க்க முயலுவதும், ஒரு படைப்பின் தழுவலாக மற்றொரு படைப்பு உருவாவதும் காலம் காலமாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். அப்படியான நகல் முயற்சிகள் ஏற்றுக் கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் அப்படைப்பின் தரத்தையும் முழுமையையும் பொருத்து அமைகிறது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteMain aisa hi hoon ... My name is khan but i am not sam! So won't cryry
ReplyDelete"Main aisa hi hoon ... My name is khan but i am not sam" so won't cry!
ReplyDelete"Main aisa hi hoon ... My name is khan but i am not sam" so won't cry!
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteஇயக்குனர் விஜய்யின் எந்தப்படமும் என்னைக்கவரவில்லை.
இருந்தாலும் இப்படத்தை பார்க்க நினைத்தேன்.உங்கள் விமர்சன ஆய்வு இன்றே இப்படத்தை பார் என கட்டளையிட்டுவிட்டது.நன்றி.
உலக சினிமா ரசிகன்:
ReplyDeleteகண்டிப்பாகப் பாருங்கள், இயக்குனர் விஜய் தன் படங்களில் ஒவ்வொன்றாக தன்னை வளர்த்துக்கொண்டே வருகிறார். இயக்கம் என்னும் நுணுக்கத்தை கைக்கொள்ள முயல்கிறார். எதுவும் பழகபழக மேம்படும் என்பது எதற்கும் பொருந்தும் அல்லவா..
அவரைத்தாண்டி 'விக்ரமுக்காகவும்' 'சாராவுக்காகவும்' இந்தப்படத்தைப் பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். முடிந்தால் என்னை தொலைபேசியில் அழையுங்கள். என் எண் 94443 55683
நன்றி.
//இயக்குனர் விஜய் இந்த கதையை ஒரு காரணத்திற்காக மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அது, அற்புதமான ஒரு வாழ்வனுபவத்தை திறையில் கொண்டுவரும் சாத்தியத்திற்கான முயற்சியாக இருக்கவேண்டும். உண்மையில் இது, அவர் தன் திறமைகளின் மேல் கொண்ட பரிசோதனை முயற்சி என்று கூடச் சொல்லலாம்//
ReplyDeleteஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாஸ்!
நான் பேரூந்தில் பார்த்தது திருட்டு DVD என்பதால் பெரிதாக ரசிக்க முடியவில்லை (குறிப்பாக ஒளிப்பதிவு)! நல்ல தரமானது வந்தவுடன் எனது கலெக்சனில் நிச்சயம் இருக்கும் இந்தப்படம்!
அப்புறம் பாஸ், தொலைபேசி எண் 'உலக சினிமா ரசிகனு'க்கு மட்டுமா? :-)
இந்த திரைபடத்தைப் பற்றி இவ்வளவும் சொன்ன நீங்கள், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த I AM SAM என்ற படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் REMAKE செய்திருக்கிரர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை? விக்ரமின் நடிப்பு திறன் வெளிபடும் அனைத்து காட்சிகலிலும் SEAN PENN -ஐ மட்டுமெ நினைவூட்டுகிறது. இருந்தலும் விகரமின் நடிப்பு நன்றாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை.
ReplyDeleteநாம் இன்னொரு படத்தை தழுவி ஒரு படத்தை எடுக்கும்பொது, அதன் கதை யாருடயது (Jessie Nelson) என்று சுட்டிக்காட்டுவதே நல்ல கலைஞனுக்கு அழகு.
இப்போதெல்லம் WRITTEN & DIRECTED BY என்று சுலபமாக போட்டு விடுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் என்று போடுவதில்லை.
குறைந்தபட்சம் Jessie Nelson - க்கு நன்றியாவது சொல்லியிருக்கலாம். இயக்குனர் மிஷ்கின் கூட KIKUJIRO படத்தை நந்தலாலா என்று எடுத்தும் அந்த உண்மையான கலைஞனான Takeshi Kitano - விற்கு நன்றியும் சொல்லவில்லை, கதை என்றும் அவரின் பெயரை சுட்டிக்காட்டவில்லை.
எப்படியொ படம் நன்றாக இருக்கிறது பார்த்துவிட்டு போகவெண்டியதுதான். உலக படம் பார்க்கும் பழக்கம் இல்லாத மக்களை மட்டும் ஏமற்றிவிட்டு நல்ல பெயர் வாங்கிக்கொண்டு சட்டை பையில் சிரித்துவிட்டு சென்றுவிடலாம்.
PRAsad says://இந்த திரைபடத்தைப் பற்றி இவ்வளவும் சொன்ன நீங்கள், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த I AM SAM என்ற படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் REMAKE செய்திருக்கிரர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை?//
ReplyDeleteநண்பரே..இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டது, நான் இன்னும் அந்தப்படத்தைப் பார்க்க வில்லை. தழுவலாக இருப்பதற்கு அதிகச் சாத்தியங்கள் இருக்கிறது. அப்படி இருப்பின் அது எத்தனை சதவிதம் என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதை வெளிப்படுத்துவது நாகரிகம் தான். செய்யவில்லை என்பது கண்டிக்க கூடியதும் வருத்தம் தரக்கூடியதும்தான்.
ஆனால் தமிழில் இப்படியான முயற்சிகள் நடப்பதும், அதைச் சரியாகச் செய்வதும் நம்பிக்கையும் சந்தோஷத்தையும் தருகிறது. இந்த மாதிரியான முழுமையான முயற்சிகள் நாளைய நம்பிக்கைக்கு சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
ஒரு திரைப்படம் என்பது அதன் வெளிப்புறக் காரணங்களை எல்லாம் தாண்டி, அதன் படைப்பாக்கத்தினால் ஏற்படுத்தும் அனுபவமும் மிக முக்கியம். அதன் அடிப்படையில் அது முழுமையானதா என்று மட்டுமே ஒரு பார்வையாளன் பார்க்க வேண்டும். அதுச் சரியாக இருப்பின் அந்தப் படைப்பை பாராட்டுவதும், இல்லை என்றால் அதை மறுதலிப்பதும் தான் ஒரு சராசரி ரசிகனின் நிலைபாடாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு சராசரி ரசிகனின் பார்வையிலேயே என் விமர்சனம் இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
ஜீ... says://அப்புறம் பாஸ், தொலைபேசி எண் 'உலக சினிமா ரசிகனு'க்கு மட்டுமா? :-)//
ReplyDeleteஅப்படி இல்லை நண்பரே..நண்பராக விருப்பம் கொண்ட அனைவருக்கும் தான். நன்றி.. :)
@PRAsad
ReplyDeleteநம்மில் நீங்கள் கூறுவது போலான உலக படங்களை பார்ப்பவர்கள் மிகவும் குறைவு (தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது). அப்படி இருக்க விஜய் போன்றோர் மிகச்சிறந்த இதை போன்ற படங்களை தழுவி எடுப்பது எந்த விதத்திலும் எனக்கு தவறாக தோன்றவில்லை. இதை தவிர்த்து, எத்தகைய முயற்சியாலும் SAM போன்ற படங்களை வெகுஜன ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அது மொழிபெயர்ப்பு படமாக இருந்தாலும் கூட.அது மட்டும் அல்லாமல் நன்றி தெரிவிப்பதில் கூட ஏராளமான சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. நாம் ஒன்றும் சட்டத்தை சரியாக கடைபிடிக்கும் நாட்டில் வாழவில்லை. சட்டப்படி நம் நாட்டில் வாழவும் வாய்ப்பில்லை. இது போன்ற நிலையில் விஜயை குறை கூறுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாததாக என மனம் கருதுகிறது. சொன்ன கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
பார்க்கனும் விஜய்.
ReplyDelete(திருடிட்டான் திருடிட்டான் -ன்னு பல பேரு கூப்பாடு போட்டுக்கிட்டிருக்காங்களே!)
நன்றி சத்ரியன், திருடினாலும் அதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லுவது கடினம். அதை இயக்குனர் மற்றும் நடிகர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை பாராட்டலாம்.
ReplyDeleteநடிகர்கள் - குறிப்பாக விக்ரம், குழந்தை சாரா மட்டுமே பாராட்டப்பட வேண்டியவர்கள். இயக்குனர் அல்ல.
ReplyDeletehttp://www.facebook.com/note.php?saved&¬e_id=10150260510639354
அவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சாரா) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமும் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம்.//
ReplyDeleteஇந்த விஷயத்தைத் தவிர படத்தைப்பற்றி எனக்கு மாற்றக்கருத்தே உள்ளது. படம் பிடிக்கவில்லை.