முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘எளியோர் செய்த போர்’


வாழ்ந்து வந்த பாதையைப் பதிவு செய்து வைப்பது வருங்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையே வரலாறுகள் எழுதப்பட்டதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். ஒரு தேசம், ஒரு இனம் இன்று நிற்கும் இடம் என்பது எவ்வளவு தூரத்தை, பாதையை கடந்து வந்தது என்பதை வரலாறுகள் நினைவுறுத்த வேண்டும்.

வரலாறு என்பது என்ன? ஆண்ட அரசனையும், மாண்ட மன்னனையும் துதி பாடுவதா? பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா? இல்லை.. அது வாழ்ந்த, செழித்த, வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும்.

தனித்து வாழ்ந்த மனிதன் குழுவாக இணைந்து வாழத்துவங்கியபோது மொழி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என வளர்ச்சியடைந்தான். வளர்ச்சி எப்போதும் இன்னொரு சாராருக்கு ஏக்கம் கொள்ள வைக்கும். ஏக்கம் பகைமையாக மாறும். பகைமை ஆபத்தை விளைவிக்கும். ஆக்கிரமிப்பு, அடிமைமுறை என பல வடிவங்களில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தத் தூண்டும். அவ்வழியிலேயே பல இனங்கள் அடிமைப்பட்டுப்போயின.

அடிமை கொண்டவன், அடிமைப்பட்டவனின் வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையும் ஆக்கிரமித்தான். கட்டுக்கதையும், அயோக்கியத்தனமும் உருவெடுத்தன. பொய்யும், புரட்டும், ஆடம்பரமும், பெருமிதங்களும் நிரம்பி வழிந்தன. அடிமைகொண்டவனும் அண்டிப்பிழைத்தவனும் வரலாறானான், மண்ணின் மைந்தன் மண்ணுக்குள் புதைந்துபோனான்.


அடிமைப்பட்டு மறைந்துபோன பல இனங்களின் சுவடுகள் இன்று இல்லை. அரசியலும் புரட்டும் அதைச் சவக்குழியில் தள்ளி மண் மூடிவிட்டன. தப்பிப் பிழைத்த இனங்களில் ஒன்றான தமிழினம் இன்றும் அதன் போராட்டக் களத்தில் நிற்கிறது. பிழைத்துக்கிடப்பது உயிர்களின் ஆதார குணம். அந்த ஆதார உணர்ச்சி மட்டும்தான் இன்றும் தமிழினம் உயிர்த்திருப்பதற்கான காரணம்.

சுயம் தேடுதலும், சுதந்திரமும், அங்கீகாரமும் கூட உயிர்களின் ஆதார உணர்ச்சிகளின் வரிசையில் வருபவைதான். அவற்றைத்தான் தமிழினம் துறந்து கிடக்கிறது. மறந்த சுயமும், இழந்த சுதந்திரமும் மீட்டெடுக்கப்பட்டால் மட்டுமே நமக்கான அங்கீகாரம் வந்து சேரும்.

தன் சுயம் அறிய கடந்த காலம் உதவும். கடந்து வந்தப் பாதை எப்போதும் பாடமாகும். கற்காமல் போனால் காலம் சுழன்று கடந்துபோன பாதையிலேயே மீண்டும் நடக்க நேரிடும். அப்போதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாய்ப்பையும் தவறவிடும் இனம் காலத்தால் மறக்கப்பட்டுவிடும். தமிழினம் கடந்துவந்த பாதையிலேயே மீண்டும் இப்போது நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இம்முறை நம்மைத் தூண்ட, நாம் மறந்து போனதை நினைவுறுத்த, ஒரு தூண்டுகோலாக ‘பாலை’ என்னும் திரைப்படம் உருவாகிருக்கிறது.


வாழ்ந்து செழித்த பூர்வ குடிமக்கள் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பால் இடமாறி ஓடுவதும், பிழைத்துக்கிடக்க முயல்வதும், அதனால் உண்டாகும் பகைமையும், போருமே ‘பாலை’ திரைப்படம் பதிவு செய்திருக்கும் செய்திகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழினத்தின் கதை எனச் சொல்லப்பட்டாலும், நிகழ்காலத்திலிருந்து அக்கதை எவ்வகையிலும் மாறுபட்டிருக்கவில்லை. அன்று போல் இன்றும் இத்தமிழினத்தின் மீது நிகழ்த்தப்படும் போரையும், பகைமையையும் நினைவுறுத்துகிறது இப்படம்.

வரலாற்றுப்படம் என்றாலே அது அரசன் கதையாகத்தான் இருக்கமுடியும் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் நமக்கு, இப்படம் ஒரு இன்ப ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஆம்.. இப்படம் அரசனைப்பற்றி பேசவில்லை. உங்களைப்போல என்னைப்போல சாதாரண மானுடனைப்பற்றி பேசுகிறது. மனிதன் பத்து முதல் இருபது நபர்கள் கொண்ட சிறு குழுக்களாக வாழ்ந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை நம் தமிழினத்தின் முன்னோர்  வாழ்ந்த வாழ்க்கையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அழகியலையும் பேசுகிறது.

புலி முத்திரை தாங்கிய முல்லைக் குடியினருக்கும், சிங்க முத்திரை தாங்கிய ஆயக்குடி வந்தேறிகளுக்கும் இடையேயான போர்தான் பாலை படத்தின் கரு. அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள போராடும் ஒரு சிறு குழுவின் போராட்டம்தான் இப்படத்தின் முழுக்கதையும்.


உடன்போக்கு, ஆநிரை கவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என பல தகவல்களை இப்படம் பதிவுசெய்திருக்கிறது. தமிழ்ச் சமூகம் பெண்ணை அடிமை கொள்ளாமல், ஆணுக்கு நிகராக வைத்திருந்தது என்பதையும், தேவை ஏற்படின் இவ்வினத்தின் பெண்டிரும் சிறுபிள்ளைகளும் போர் முனைக்கு வருவார்கள் என்பதும் காலத்தே நினைவுறுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் பாலை மறவனின் வசனங்கள் அர்த்தம் பொதிந்தவை. தலைவனுக்கு அவர் சொல்லும் உபதேசங்களும் பாலை பற்றி சொல்லும் கதையும் உன்னிப்பாகக் கவனிக்கப் படவேண்டியவை.

‘எளியோர் செய்த போர்’ என்று இத்திரைப்படத்தை அதன் இயக்குனர் ம.செந்தமிழன் அறிமுகப்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை. ‘எளியோர் செய்த போர்’ என்பது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, இத்திரைப்படத்திற்கே பொருந்தக் கூடியது.

இன்றைய சூழ்நிலையில் இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது கூட ஒருவகையில் ‘போர்’தான். அண்டிப்பிழைத்தும், இனத்தைக் காவு கொடுத்தும் சம்பாதித்த பெரும்பணத்தில் உழலும் முதலைகள் கோலோச்சும் திரைத்துறையில் இப்படியான ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததே ஒரு போருக்கான அறை கூவலாகவேப் படுகிறது.


பெரும் பொருட்செலவில், ஒன்றுக்கும் உதவா வெட்டிக்கதைகளை ஆடம்பரமாக அரங்கேற்றும் வெள்ளித்திரையில், அர்த்தம் பொதிந்த, காலத்தே தேவையான ஒரு கதையை நிகழ்த்திக் காட்ட முயன்றதே இயக்குனரின் துணிச்சலையும் நோக்கத்தையும் பறைசாற்றுகிறது. குறைந்த, தேவையான பொருட்செலவில், தரம் குறையாது ஒரு திரைப்படத்தின் அத்துணை கூறுகளையும் உள்ளடக்கி நிறைவான ஒரு படத்தை படைத்திருக்கும் ‘பாலை’ திரைப்படக் குழுவினருக்கு நாம் பாராட்டை, நன்றியோடு சேர்த்து சொல்ல வேண்டும்.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் பாத்திரங்களின் தேர்வு என அத்துணையும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. நாம் வழக்கமாக பார்க்கும் பொழுதுபோக்கு படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது. திரைப்படம் சார்ந்த உங்களின் முன்னனுபவத்தை மறந்துவிட்டு இப்படத்தைப் பாருங்கள், ஒரு புதிய அனுபவத்தில் திளைப்பீர்கள். கலைகள் மனிதனை மகிழ்விக்கும் அதே நேரம் சிந்திக்கவும் தூண்ட வேண்டும். இப்படம் அதைச் சிறப்பாகச் செய்கிறது.

     

கருத்துகள்

  1. ஒரு காட்சியில் சிங்கத்தின் உருவம் பொறித்த கொடியை சென்சார் செய்திருந்தார்கள் கவனித்தீர்களா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி Philosophy Prabhakaran..//ஒரு காட்சியில் சிங்கத்தின் உருவம் பொறித்த கொடியை சென்சார் செய்திருந்தார்கள் கவனித்தீர்களா//

    ஆமாம் கவனித்தேன்..அதனால் என்ன.. சொல்ல வந்ததை இயக்குனர் உணர்த்தி விட்டார்.

    பதிலளிநீக்கு
  3. வரலாறு என்பது என்ன? ஆண்ட அரசனையும் மாண்ட மன்னனையும் துதி பாடுவதா? பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா? இல்லை..அது வாழ்ந்த, செழித்த,வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும்.//

    அன்று போல் இன்றும் இத்தமிழினத்தின் மீது நிகழ்த்தப்படும் போரையும் பகைமையையும் நினைவுறுத்துகிறது இப்படம்.//

    Amen.


    இன்று தான் உங்கள் வலையில் நுழைந்தேன்...உங்கள் காமராவும்...எழுத்தும் போட்டிபோடுகின்றன...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள்.... நல்ல விமர்சனம்..
    ன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு