முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரத்தத்தில் உறைந்த வைரம்



வைரக் கற்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்று. தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் நாடு. 'டைட்டானியம்', 'பாக்சைட்' மற்றும் தங்கம் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உலகின் மூன்றாவது பெரிய இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட நாடும் கூட... ஆனாலும் அதன் எழுபது சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அந்நாடு 'சியரா லியோன்' (Sierra Leone).

மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கரையை ஒட்டியமைந்த ஒரு சிறு நாடு. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே எல்லா இயற்கை வளங்களையும் கொண்டது. சுரங்கத் தொழிலை ஆதாரமாக கொண்ட நாடு, குறிப்பாக வைரக் கற்களை அதிகமாக தோண்டி எடுக்கும் நாடு. ஐம்பத்தி நான்கு லட்சத்திலிருந்து அறுபத்தி நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அறுபது சதவிதம் முகமதியர்களும், அதிக அளவு கிருத்துவ சிறுபான்மையர்களும் வாழ்கிறார்கள். பதினாறு சிறு இனக்குழுக்கள், சமவிகிதத்தில் நாட்டின் முப்பது சதவிகித மக்கள் தொகையாக வாழ்ந்தாலும், அவர்களிடையே இனப்பிரச்சனையோ, மதப்பிரச்சனையோ எழுவதில்லை. உலகின் 'மத சகிப்புத்தன்மை' கொண்ட நாடுகளில் ஒன்றாக சியரா லியோன் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இயற்கை வாரி வழங்கி இருந்தாலும் அந்நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்.. நாம் நன்கு அறிந்த காலனிய ஆதிக்கமும் அந்நிய நிறுவனங்களின் கொள்ளையும் தான்.  


'சியரா லியோனும்' மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே பல அந்நிய ஆட்சிகளுக்கு உட்பட்டு, பிரித்தானியர்களின் காலனிகளில் ஒன்றாக இருந்து 27, ஏப்ரல் 1961-இல் விடுதலை அடைந்தது. அதன் முதல் பிரதமரான 'சர் மில்டன் மார்க்கே' (Milton Margai)-வில் துவங்கி அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்நாட்டிற்கு நல்லாட்சியை வழங்கிவிடவில்லை. ஊழல், நிர்வாக சீர்கேடு, தேர்தலில் வன்முறை, அதிகார கயமைத்தனம் போன்றவை நாட்டைச் சீர்குலைத்தது.

1968-இல் ஆட்சிக்கு வந்த 'சைக்கா ஸ்டிவன்ஸ்' (Siaka Stevens)-இன் காலத்திலேயே அந்நாட்டின் இயற்கை வளங்கள், பெரும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. வைரங்கள் பெரும் அளவில் கிடைக்க கூடிய வாய்ப்பே அந்நாட்டை பெரும் துயரத்தில் தள்ளியது எனலாம். வைரத் தொழிலில் பெரும் நிறுவனமான 'டிபியர்ஸ்' (DeBeers)-உடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கை, பெரும் கொள்ளையாக இருந்தது. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வசதிகளை பெருக்கவே அவை உதவின. 1984-இல் 'டி பியர்ஸ்' அரசாங்கத்துடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டது என்றாலும் கள்ளத்தனமாக வைரங்கள் கடத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் முழுவதும் தனியாரின் வசம் குவிந்தது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் கருவூலம் சிதறுண்டு போனது. அரசாங்க ஊழியர்களுக்குக்கூட ஊதியம் தரமுடியாத நிலை உண்டானது. கல்வி, வேலை வாய்ப்பு என எதுவும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. தலைநகரமான ஃபிரிடவுனிலேயே (Freetown) எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு மிக மோசமான நிலையை அடைந்ததும், அதன் மேல்மட்ட வர்க்கமும், தொழில்முறை வர்க்கமும் (professional class) வெளிநாடுகளுக்கு ஓடிப்போயின. 1991-இல் 'சியரா லியோன்' உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாறிப்போனது.

RUF

நாட்டின் இந்நிலை கண்டு எழுந்து நின்ற இளைஞர் கூட்டம் ஒன்று, 'புரட்சிகர ஐக்கிய முன்னணி' - Revolutionary United Front' (RUF) என்ற அமைப்பின் பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியது. 'ஃபோடே சங்கா' (Foday Sankoh) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

'அடிமையும் இல்லை, முதலாளியும் இல்லை, அதிகாரமும் செல்வமும் மக்களுக்கே' ('No More Slaves, No More Masters. Power and Wealth to the People') என்று 'RUF' முழங்கியது. இலவசக் கல்வி, சுகாதாரம் மற்றும் வைர வருமானத்தில் சரிவிகித பங்கு என்பது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மக்கள் 'RUF'-ஐ வரவேற்றார்கள், இணைந்தார்கள்.

இருண்ட அரசாங்கத்தை காய் அடிப்பதும், மக்கள் அரசை நிறுவுவதும் மக்களின் பெரும் கனவாகிப்போனது. அது கொடுத்த உத்வேகம் அத்தேசத்தை 'உள்நாட்டுப் போரில்' உற்சாகமாக ஈடுபடத் தூண்டியது.

'RUF' துவக்கி வைத்த இப்போர் பல கட்டங்களைக் கடந்து வர வேண்டியதாக இருந்தது. புரட்சிக்குழு அடைந்த வெற்றியும், பெற்ற ஆதரவும், அரசாங்க படைத்துறையின் ஒரு பிரிவை 'RUF'-வோடு இணையத் தூண்டியது, இவ்விரண்டு படைகளைச் சமாளிக்க உருவான மக்கள் படை, இவற்றை அடக்க வந்த வெளிநாட்டுப்படை, அமைதிப்படை, தனியார் படை, ஐநா படை என பல பெரும் படைகள் பங்கு கொண்ட இப்போர், அம்மக்களுக்கு பெரும் இன்னல்களைக் கொண்டுவந்தது.

மற்ற எந்த உள்நாட்டுப் போரிலும் நிகழாத ஒரு கொடுமை இங்கே நடந்தது. பொது மக்களின் கை கால்களை துண்டிப்பது. ஆம்.. ஒருபுறம் 'RUF' மக்கள் தேர்தலில் ஓட்டு போடாமல் இருக்க அவர்களின் கைகளைத் துண்டித்தது. மறுபுறம் அரசு படை 'RUF'-இல் இணையாமல் இருக்க மக்களின் கை கால்களைத் துண்டித்தது. மேலும் சிறுவர்களை போரில் ஈடுபத்தியதும், வைரம் தோண்ட மக்களை அடிமைப்படுத்தியதும் நிகழ்ந்தது. சிறு பிள்ளைகளின் கைகளும் வெட்டப்பட்டன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கொடுமைகளை விளக்க ஒரு புத்தகமே எழுதவேண்டும். இங்கே அதற்கு இடம் போதாது.


23 மார்சு 1991-இல் துவங்கிய 'சியரா லியோனின்' உள்நாட்டுப் போர், பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு 18 ஜனவரி 2002-இல் முடிவுக்கு வந்தபோது அது எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனில் பதினோரு ஆண்டு கால போராட்டத்தின் பயன் என்ன?

வேறன்ன.. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் பேர், முழுமையாகச் சீர்குலைந்து போன உள்கட்டமைப்பு, இருபது லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது, பல்லாயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்தது மற்றும் மீண்டு வர முடிய வறுமையும்தான்.

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் வருமானம் என்பது ஒரு டாலருக்கும் கீழ்தான். போதிய ஆகாரம் இன்மையால் நான்கில் ஒரு குழந்தை ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகிறது. இன்றும் அந்நாட்டின் வளம் அந்நியர்களின் கைகளில் தான் இருக்கிறது.


இதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில்.. நாம் அறிந்ததுதான். அரசியல் அயோக்கியத்தனம், உலகப்பொருளாதாரம், ஐக்கிய நாட்டு சபை, உலகயமைதி, பன்னாட்டு சமூகம், துரோகம், பேராசை.. என நீண்டுக் கொண்டே போகும் காரணங்கள் பல.    

இப்போரில் ஈடுபட்ட 'RUF'-க்கு பணம் எங்கிருந்து வந்தது? அது அந்நாட்டின் வளங்களில் ஒன்றான வைரங்களை கள்ளச் சந்தையில் விற்றதில் வந்த பணம். அப்பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

இப்படி வைரங்களைக் கள்ளச் சந்தையில் விற்று, போருக்கான ஆயுதங்கள் வாங்கப்படுகிறது என்பது 'அங்கோலிய உள்நாட்டுப் போரின்' (Angolan Civil War) போதுதான் உலகத்தாருக்கு தெரியவந்தது.  அடிமைகளால் தோண்டி எடுக்கப்பட்ட அவ்வைரங்கள் 'இரத்த வைரங்கள்' (Blood Diamond) என அழைக்கப்படுகின்றன. உலக வைரத் தொழிலில் இவ்வைரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.


2006-இல் வெளியான 'Blood Diamond' என்னும் படம் 'சியரா லியோனின் உள்நாட்டுப் போர்' நடந்த காலகட்டத்தில் நிகழும் கதை ஒன்றின் மூலமாக, 'இரத்த வைரங்கள்' பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


'RUF' படையிடம் தன் மகனைப் பறிகொடுத்துவிட்டு, அடிமையாக சிக்கிக் கொண்டு சுரங்கத்தில் வைரம் தோண்டும் ஒரு தகப்பன். இரத்த வைரங்களை கடத்த முயன்று மாட்டிக்கொள்ளும் கதாநாயகன். இப்போரைக் கட்டுரையாக்க வந்த செய்தியாளராக கதாநாயகி. மூவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அப்போரை விவரிக்கிறார் அதன் இயக்குனர்.


'The Empire in Africa'(2006) என்னும் ஆவணப்படம் இப்போரைக் களக்காட்சிகளோடு விவரிக்கிறது. இப்போரில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்படம் பாரபட்சம் இன்றி அலசுகிறது. இரு தரப்பு படைகளும், பன்னாட்டு சமூகமும் இம்மக்களுக்குச் செய்யத்தவறியதை, செய்த துரோகத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது.    

   

கருத்துகள்

  1. எவ்வளவு சிறப்புகள் மிக்க பதிவு..
    எத்தனையோ புதுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள வழிவகுத்த தங்களுக்கு எனது நன்றிகளோடு வாழ்த்துக்கள்

    சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஆம்ஸ்ட்ராங் ,
    வணக்கம் . மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்திய பதிவு. Blood Diamond , Hotel Rwanda போன்ற ஆப்பிகாவைக் கதைக் களமாகக் கொண்ட அதுவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்னை பெரிய அளவில் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்தவை. அதுவும் நீங்கள் போட்ட படங்கள் வார்த்தைகளால் கூறமுடியாத துயரத்தை உருவாக்குகிறது.
    Hotel Rwanda - Paul Rusesabagina எனக்கு கடவுளாகவே தென்படுகிறார்.

    தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!

    நன்றி,
    பிரவின் சி.

    பதிலளிநீக்கு
  3. கண்களை ஈரமாக்கிய திரைப்படம் விஜய்:-(
    ப்ளாக் தலைப்பை பார்த்தே Blood Diamond ஆக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்...

    பதிலளிநீக்கு
  4. அறிந்திராத திரைப்படம் மற்றும் அறியாத பல தகவல்களை வழங்கிய சிறப்பான பதிவு..!!

    பதிலளிநீக்கு
  5. நன்றி நண்பர்களே..பிரவின்,Bharathi Dhas,சேலம் தேவா

    பதிலளிநீக்கு
  6. சமூக அக்கறை உள்ள ஓர் திரைக் கலைஞன் நமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. விஜய்,

    அருமையான தகவலைப் பதிவு செய்திருக்கீங்க.
    இந்த தகவல்கள் அடங்கிய நூல் எதுவும் தமிழில் கிடைக்கிறதா?

    பதிலளிநீக்கு
  8. நன்றி நண்பர்களே..Siraju.Gopal Kannan

    //இந்த தகவல்கள் அடங்கிய நூல் எதுவும் தமிழில் கிடைக்கிறதா?// தெரியவில்லை சார்

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையின் லிங்க்-ஐ என் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடுகிறேன். என்னால் இறுதியில் நீங்கள் இணைத்திருக்கும் காட்சிகளை முழுமையாக பார்க்க முடியவில்லை. அமெரிக்க ஐரோப்பிய பணம் தின்னும் பேய்களின் கூட்டு வெறியாட்டத்தின், எளிய மக்களின் இயலாமையிலிருந்தும் அவர்களின் வறுமையிலிருந்தும் ரத்தத்தையும் சதையையும் கொடூர வைரங்களாக உறிஞ்சி எடுக்கும் பேரவலத்தின் முழு பரிணாமமும் அந்த காட்சி பதிவுகளில் தெரிகின்றது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு