முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது மேம்படுதல் நேரம் (Time for an update)
அண்மையில் ஒரு முக்கியமான ஹாலிவுட் இயக்குனரின் '3D' படமொன்றைப் பார்க்க சத்யம் போயிருந்தேன். அது என்ன படம் என்று சொன்னால், இங்கேயே இக்கட்டுரையை மூடிவிட்டு ஓடிவிடுவீர்களோ என்று பயமாகயிருக்கிறது. அவ்வளவு மொக்கையான படமது. இக்கட்டுரை அப்படத்தைப்பற்றியது அல்ல என்பதனால், நீங்கள் தைரியமாகத் தொடர்ந்து படிக்கலாம்.

பார்க்கப்போன படம் ‘3D' படமென்பதால், இதனிடையே திரையிடப்பட்ட மற்ற படங்களின் முன்னோட்டமும் ‘3D'-ஆக அமைந்தது. மூன்று படங்களுக்கான முன்னோட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதில் ஒன்று 'The Hobbit ' திரைப்படத்தினுடையது. நான் இதுவரை பல ‘3D' படங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் 'The Hobbit ' படத்தின் முன்னோட்டம் திரையில் ஓடத் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிலிருக்கும் வித்தியாசத்தை உணரமுடிந்தது.

‘3D’ திரைப்படம் என்பது, திரையில் முப்பரிமாணத் தன்மையை கொண்டுவர முயலும் ஒரு முயற்சி. கதாபாத்திரங்களை, அவர்களின் சூழலில் ‘foreground’ மற்றும் ‘background’-இலிருந்து பிரித்துக் காட்ட முயல்வது. அத்துடன் திரைக்கும் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை திரையில் காட்டப்படும் காட்சிகளில் இருக்கும் ‘Foreground Object’ மூலம் நிறைக்க முயல்வது. பொதுவாக இந்த யுத்தி, அதிகம் பார்வையாளனை பயமுறுத்தவும், சட்டென்று அதிர்ச்சி கொள்ள வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (உங்களை நோக்கி வரும் ஈட்டி, கை, நெருப்பு).

இதற்காக பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு கேமராக்களை அருகருகில் வைத்து, படம் பிடித்து அதை இரு புரொஜக்டர்கள் கொண்டு திரையிடுவதில் துவங்கி, ஒரு கேமராவில் இரண்டு லென்சுகளைப் பொருத்தி படம் பிடிப்பது எனத் தொடரும் இத்தொழில்நுட்பம், நவீன டிஜிட்டல் காலத்தில் மேலும் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. வழக்கமான முறையில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக்கூட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘3D’ காட்சியாக மாற்றிவிட முடிகிறது இப்போது.

இப்படி ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் உரிய முறையில், முப்பரிமாணத்தன்மை திரையில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நாம் இயற்கையாக பார்க்கும் உலகம் முப்பரிமாணத்தன்மை கொண்டது அல்லவா? அதற்கு இணையாக, அதேபோலான உணர்வை இருபரிமாணத்திரையில் காட்டப்படும் காட்சியிலும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் பல காலமாக நம் தொழில்நுட்பவியலாளர்களும் கலைஞர்களும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாத்தியப்பட்டுக்
கொண்டிருக்கிறது. இன்னும் அதன் முழுமையை அடையவில்லை. எனினும், நம்மால் ஒரு ‘3D’ திரைப்படத்தைப் பார்க்கும்போது அது கொடுக்கும் பரவசத்தை உணரமுடிகிறது. ‘அவதார்’ திரைப்படம் ‘3D’ அனுபவத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், கேமரா (Simulcam) போன்றவற்றைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அதை இங்கே விவரித்தால் இக்கட்டுரையில் சொல்ல வந்த செய்தியை சொல்லமுடியாது என்பதனால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.


‘The Hobbit ’ படத்தின் முன்னோட்டம் திரையில் ஓடத் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிலிருக்கும் வித்தியாசத்தை உணரமுடிந்தது என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அது என்னவென்றால், காட்சி ஓட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, திரையில் இருந்த கதாபாத்திரங்கள், பார்வையாளனுக்கும் திரைக்கும் இடைப்பட்ட இடைவெளியை நிறைத்தார்கள். எனக்கும் திரைக்கும் இடையே இருந்த இடைவெளியில், திரையிலிருந்து வெளிப்பட்ட கதாபாத்திரம் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். திரையில் இருந்த காட்சியில் அதன் பின்புலங்கள் (background) நீண்டு விரிந்து உட்செல்லுவதை உணரமுடிந்தது. அதாவது ஒரு ‘3D’ திரைப்படத்தின் ஆதார நோக்கமான முப்பரிமாணத்தன்மையை முழுமையாக உணரமுடிந்தது. கதாபாத்திரங்கள் அதன் சூழலிலிருந்து பிரிந்து அதன் ’foreground’ மற்றும் ‘background’-லிருந்து பிரிந்திருந்தது மட்டுமல்லாமல் அது ஒரு முழுமையான முப்பரிமாணத்தை கொடுத்தது. எனக்கோ பயங்கர பரவசம். திரையில் வரும் காட்சியில் எதை பார்ப்பது என்றே தெரியவில்லை. கண்களை அங்கே இங்கே என்று ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு முப்பரிமாண உலகில் இருப்பதாக உணர்ந்தேன். காட்சிகள் ஓட ஓட.. பரவசம் அதிகமானது. ஆஹா.. ஆஹா என மனம் மகிழ்ந்தது.

‘The Hobbit ’ படத்தின் முன்னோட்டம் முடிந்து, அடுத்தப்படத்தின் முன்னோட்டம் ஓடத் துவங்கியது. ஆனால் இதில் முன்பு பார்த்த மாதிரியான முப்பரிமாணத்தன்மை இல்லை. அது வழக்கமானது போல இருந்தது. பின்பு முன்னோட்டங்கள் முடிந்து படம் ஓடத்துவங்கியது. அதுவும் அப்படித்தான் வழக்கம்போல இருந்தது. பார்த்த திரைப்படமோ மகாமொக்கையான ஒரு படம். அப்படம் கொடுத்த ஏமாற்றத்தையும் மீறி என் மனமெங்கும் ‘The Hobbit ’ படத்தின் முன்னோட்டம் கொடுத்த அனுபவமும், பரவசமும் நிறைந்திருந்தது.

வீட்டிற்கு வந்து, அப்படி என்னதான் ‘The Hobbit ’ திரைப்படத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்று இணையத்தில் தேடினால், அதன் இயக்குனர் ‘பீட்டர் ஜாக்சன்’ (Peter Jackson) இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைப் பற்றி பல தகவல்களைக் கொடுத்திருக்கிறார். அதில் முக்கியமானது இப்படம் ‘48 fps' முறையில் படம் பிடிக்கப்பட்டு ‘48 fps'-இல் திரையிடப்படுவதையும் பற்றியது.

வழக்கமாக திரைப்படங்கள் ‘24 fps'-இல் படம் பிடிக்கப்பட்டு ‘24 fps'-இல் திரையிடப்படுவதை நாம் அறிந்திருப்போம். அதேபோல் ’Slow motion’ ஷாட்டுகளை உருவாக்க ‘48 fps' முதல் ‘150 fps' வரை படம் பிடித்து அதை ‘24 fps'-இல் திரையிடுவோம்.

தற்போது நவீன கேமராக்களின் வருகையால் ‘2000 fps'-இல் கூட படம் பிடிக்க முடிகிறது. ஆனால் இவை எல்லாம் ‘24 fps'-இல் தான் திரையிடப்படுகின்றன. ஆனால் ’The Hobbit ’ திரைப்படம் முழுவதுமே ‘48 fps'-இல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திரையிடுவது ‘48 fps'-இல் இருக்கிறது. இதனால் திரையில் காட்டப்படும் காட்சியின் தரம் கூடுகிறது என்கிறார் பீட்டர் ஜாக்சன். அதாவது இதுவரை திரைப்படத்தில், ஒரு நொடியில் நடக்கும் காட்சியை கொண்டுவர 24 ஃபிரேம்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீட்டர் ஜாக்சன் அதை 48 ஃபிரேமாக அதிகரித்திருக்கிறார்.

நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்பதை புரிந்துக்கொள்ள.. ஒருவர் நடந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் நடப்பதை படம் பிடிக்கும்போது நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்று ஒரு திரைப்படக்கேமரா படம் பிடிக்கிறது. அதாவது அந்த 24 ஃபிரேம்களில் அவர் குறிப்பிட்ட தூரம் நகர்ந்திருப்பார் இல்லையா? அப்படியானால் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் கொஞ்சம் நகர்ந்திருக்கவேண்டும். இப்படி ஒரு ஃபிரேமுக்கும் அடுத்த ஃபிரேமுக்கும் இடையில் ஏற்படும் நகர்வு, பதிவாக்கப்படும்போது கொஞ்சம் தெளிவில்லாமல் ‘blur’-ஆக இருக்கும். ஆனால் நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்ற கணக்கில் வேகமாக அவை திரையிடப்படுவதால் நாம் அதை உணர்வதில்லை. இதையே நொடிக்கு 48 ஃபிரேம்கள் என்று படம் பிடித்தால், அந்த நகர்வு இரண்டு மடங்கு அதிகமான ஃபிரேம்களில் படம் பிடிக்கப்படுவதோடு, ஒவ்வொரு நகர்வும் துல்லியமாக (clarity/sharp)-ஆக பதிவாகும். இதனால் நமக்கு clarity மற்றும் smooth-ஆன படம் கிடைக்கிறது.

24 fps-இல் படம் பிடிப்பது என்பது 1920-களின் பிற்பகுதியில்(1927?) வந்தது. அதற்கு முன்பு வரை 16 fps-களில் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சார்லி சாப்லின் படங்களில் பார்த்திருக்கலாம். பிறகு 24 fps என்பதை அடிப்படை/ஆதார ஃபிரேம் ரேட்டாக (frame rate) நிர்ணயித்தார்கள். அதற்கு காரணம் திரைப்பட சுருளோடு இணைந்திருந்த ஒலியை பிரித்தெடுக்க உபயோகிக்கப்பட்ட அப்போதைய தொழில்நுட்பத் தேவையாக இருக்கலாம் (24 fps was chosen based on the technical requirements of the early sound era. I suspect it was the
minimum speed required to get some audio fidelity out of the first optical sound tracks- peter jackson)


அதேபோல் நொடிக்கு 24 ஃபிரேம்கள் பயன்படுத்துவதே மிக அதிக செலவு பிடிக்கும் ஒரு செயல். 35mm படச்சுருள் அதிக விலை உடையது. ஆகையால் குறைந்த பட்ச செலவில், நமக்கு தேவையான இயல்பு நிலை நகர்வை திரையில் கொண்டுவர தேவையான ஃபிரேம் ரேட்டை (frame rate) அடிப்படைத் தேவையாக நிர்ணயித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த 90 வருடங்களாக நாம் திரைப்படங்களை 24 ஃபிரேம்களின் படம்பிடித்து 24 ஃபிரேம்களில் திரையிட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் கேமராவும் புரஜக்டரும் வடிவமைக்கப்பட்டன. இந்த ஃபிரேம் எண்ணிக்கையை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதற்காக கருவிகள் தனியாக உருவாக்க வேண்டியிருக்கும்.

ஆனால் தற்போதைய டிஜிட்டல் சூழலில், எத்தகைய மாற்றங்களையும் சுலபமாக நிகழ்த்திவிட முடிகிறது. அதற்கான சாத்தியத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தி கொடுக்கிறது. செலவும் அதிகரிப்பதில்லை. இப்போது இருக்கும் டிஜிட்டல் கேமராவிலும் டிஜிட்டல் புரஜக்டரிலும் 48fps-ஆக மாற்ற அதன் மென்பொருளை மேம்படுத்தினாலேயே (update) போதுமானது. ஆகையில் இப்போது 48fps-க்கு மாறுவதில் எவ்வகை சிக்கலும் இல்லை என்கிறார் ஜாக்சன்.

ஆகையால், தன் ’The Hobbit ’ திரைப்படத்தை 48fps-இல் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் மிகத் தெளிவானக் காட்சிகளைப் பார்க்க முடியும் என்றும், ‘3D’ காட்சிப்படுத்துதலில் முப்பரிமாணத் தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் கூறுகிறார். அதன்படியே பல சோதனைகள் செய்து பார்த்து, அதில் திருப்தி கொண்டு, படத்தை எடுத்திருக்கிறார். மேலும் வழக்கமான கேமரா ‘Shutter Angle' ஆன 172.8 அல்லது 180 டிகிரி இல்லாமல் 270 டிகிரி ஷட்டர் ஆங்கிளைப் பயன்படுத்தி இருக்கிறார். RED Epic கேமராவில் 5K -வில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை 48fps-இல் திரையிடத் தேவையான திரையரங்குகள் உலக முழுவதும் 10,000 இருப்பதாக சொல்லுகிறார். அப்படி 48fps-இல் திரையிடும் வசதி இல்லாத திரையரங்குகளுக்கு வழக்கம் போல 24fps-இல் ஓடும் காட்சி பிரதியும் தயார் செய்யப்படுகிறது. (நான் பார்த்த முன்னோட்டம் 24fps-இல் திரையிடப்பட்டது என நினைக்கிறேன்)


அண்மையில் இப்படத்திலிருந்து சில காட்சிகளை ‘Cinemacon exhibitors convention’ in Las Vegas-வில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் மாறுபட்டக் கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். பிடித்தது என்று சிலரும், பிடிக்கவில்லை, காட்சிகள் HD video-வைப் போன்று இருக்கிறது என்றும் "looked like a made-for-TV movie" என்றும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இது கொடுக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஜாக்சன் பதிலளித்திருக்கிறார். “இவர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு இன்னும் பழகவில்லை, பத்து நிமிடம் காட்சியிடல் போதுமானதாக இருந்திருக்காது. பழக இன்னும் நேரம் தேவைப்படும்” என்று. மேலும் முழுப்படமும் பார்க்கும்போது அதை அவர்கள் ரசிப்பார்கள் என்கிறார். அதுவும் ஒரு காவியப் படத்தை 3D-இல் பார்க்க 48fps பெரிதும் உதவும் என்கிறார். மேலும் வருங்காலம் இதை தொடரவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.

எனக்கு என்னவோ அவர் சொல்லுவதுதான் நடக்க போகிறது என்று தோன்றுகிறது. 24fps-இலிருந்து 48fps-க்கு மாறி விடுவோம் என்றுதான் நினைக்கிறேன். இப்படித்தான் பல நிலைகளை கடந்து நாம் இன்று இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். மாற்றம் இல்லாதது எதுவும் உண்டா? வாருங்கள் இது மேம்படுத்தலுக்கான நேரம். மேம்படுவோம்.

கருத்துகள்

 1. எளிய தமிழில் அரிய தொழில்நுட்பம் பற்றிய விளக்கம் அருமை. அந்த மொக்கை படம் prometheus தானே. நல்லவேளை நான் அதை 2d -ல் தான் பார்த்தேன் :)

  பதிலளிநீக்கு
 2. நண்பரே...
  அவதார் செய்த புரட்சி இன்று மிகவும் காசாக்கும் வித்தையாகி விட்டது.
  பீட்டர் ஜாக்சன் ஜெயித்தால் இதுவும் தொடரும்.
  தமிழ் திரையுலகில் முதல் முறையாக என்றும் நாறடிக்கப்படும்.

  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தகவல்கள் அருமை...சினிமா பத்தின பார்வை ஆவலை தூண்டுகிறது...

  பதிலளிநீக்கு
 4. நேற்றுதான் அந்த போர் அடிக்கும் படமான ப்ரோமிதியாஸ் பார்த்தேன். அதனிடையே உற்சாகம் தந்த டிரெய்லர் இந்த The Hobbit.குழந்தைகளுக்கிடையே பிரபலமான இந்த கதையை திரையில் பார்க்கும் போது அரங்கில் பல இடங்களில் மகிழ்ச்சி ஆராவராம் !

  இதன் பின்னனியில் உள்ள தொழில்நுட்ப விவரங்களை நீ தொகுத்துள்ள விவரம், உனது ஆராய்ச்சி அறிவு,,,,உனது ஆர்வம் என எல்லாம் பிரமிக்க வைக்கிறது ! You are really in a different route.....Keep it up Mr.Armstrong

  பதிலளிநீக்கு
 5. பிரமிப்பு, துள்ளல், அதே குவாலிடியோடு இங்கு இப்போதைக்கு நாம் அதை பார்க்கமுடியாதே என்ற ஏக்கம் அத்தனையையும் ஏற்படுத்தியது இந்தக் கட்டுரை.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம். ஒளிப்பதிவாளரே..!
  மதுரையிலிருந்து பேராசிரியர் பி.ஜி.கதிரவன் .சமீபத்தில் தான் உங்கள் தளத்திற்கு வர நேர்ந்தது.(இயக்குநர் சார்லஸ் தளம் வாயிலாக).
  வந்து பார்த்து அசந்து போய்விட்டேன். அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபியாய் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். என் போன்ற திரைத்துறையில் நுழைய விரும்பும் நபர்களுக்குச் சரியான தீனி கிடைக்கிறது.ஒரு கேள்வி. 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' மற்றும்' மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி' போன்ற திரைப்படங்களை புகைப்பட கேமராக்களைப்(SLR) பயன்படுத்தி எடுத்தார்களே.. அதைப்பற்றிக்கொஞ்சம் சொல்ல முடியுமா..?

  பதிலளிநீக்கு
 7. பி.ஜி.கதிரவன்: நன்றி சார்.. உங்களின் பாராட்டு, மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. புகைப்படக் கேமராவில் Canon 5D/7D/60D போன்ற கேமராக்களில் HD விடியோக்களை எடுக்க முடிகிறது. அவ்வீடியோக்களின் தரம், வெந்திரைக்கு போதுமானதாக இருக்கிறது. அதனால்..அதைப்பயன்படுத்தி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். அண்மையில் வந்த ‘வழக்கு எண்’ ‘மெரினா’ வரப்போகும் ‘கலிகாலம்’ போன்றா படங்கள் அத்தகைய புகைப்படக் கேமராக்களைப் பயன்படுத்தி எடுத்தவைகள் தான். http://blog.vijayarmstrong.com/2010/10/eos-5d-mark-ii.html இந்த லிங்கை பார்க்கவும். நன்றி

  பதிலளிநீக்கு
 8. Nice article brother:) good to know that 48 fps projection details......gathering details....very good article:) keep writing brother:)
  All the best:-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு