• விஜய் ஆம்ஸ்ட்ராங், ஒளிப்பதிவாளர்

  • கற்றதும் பெற்றதும் . .  யாவருக்கும்!

‘மோனோ ரூடோ’ - தைவானின் சின்னம்




1930, அக்டோபர் 27. தைவானின் வாஷா (Wushe) பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பானிய காலனி கிராமத்தின் ஒரு பள்ளிக்கூடம். பள்ளி விளையாட்டு போட்டிகளுக்கான முன் தயாரிப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஜப்பானிய அதிகாரிகளும் குழுமி இருக்கிறார்கள். ஆங்காங்கே காவலாளிகள் நிற்கிறார்கள். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக ஜப்பானியக் கொடி ஏற்றப்படுகிறது. தேசியகீதம் ஒலிக்கத் துவங்குகிறது. கூடி இருந்தோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் துவங்குகின்றனர். அப்போது, திடீரென்று ஒருவன் கத்தியோடு பாய்ந்து வந்து காவல் காத்த ஒரு காவலாளியின் தலையைக் கொய்கிறான். அதைத் தொடர்ந்து நாலாபுறமிருந்தும் பெரும்கூட்டம் ஒன்று ஆரவாரமான சத்தங்களோடு கூட்டத்தின் மீது பாய்கிறது. கூட்டத்தினுள் புகுந்த அக்கும்பல், ஜப்பானியர்களை தேடித்தேடி வெட்டிச் சாய்க்கிறது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், ஆசிரியர்கள், காவலாளிகள் என பலரும் வெட்டி கொல்லப்படுகின்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்தப் பெரும் படுகொலை நிகழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. 136 ஜப்பானிய ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். 215 ஜப்பானியர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது அங்கே 428 சீன தைவானியர்கள் (Chinese-Taiwanese) இருந்தபோதும், அவர்களில் இருவர் மட்டுமே கொல்லப்படுகிறார்கள். அதுவும் தவறுதலாக. அந்த படுகொலைக் காரியம் மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்டது. ஜப்பானியர்கள் மீது மட்டுமே குறிவைக்கப்பட்டது. அது ஏன்? யாரால்?


1895-இல் சீனாவிடமிருந்து ‘ஷிமோனாசகி உடன்படிக்கை’ (Treaty of Shimonoseki) மூலமாக தைவான் தீவு, ஜப்பானின் கைக்கு வருகிறது. அழகிய தீவு (aka Formosa) என அழைக்கப்படும் அப்பகுதியில் உடனடியாக பதட்டம் துவங்கி விடுகிறது. அதற்கு காரணம் அப்பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் பூர்வ பழங்குடிகள். அம்மலைப்பகுதிகளையே தங்களின் பூர்வ பூமியாக பாவித்து வாழ்ந்து வரும் அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய தேவை ஜப்பானியர்களுக்கு இருக்கிறது. காரணம்? ..வழக்கமானதுதான். மண் சார்ந்த கனிம வளங்கள்!

மண்ணின் மைந்தர்களைத் துரத்தி அடித்தால்தானே, வளத்தைக் கொள்ளை அடிக்க முடியும்? அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின. பெரும்பாலான பூர்வ குடிகள் கொல்லப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் அடக்கப்படுகிறார்கள். அப்போது அப்பகுதியில் ஆறு பழங்குடிகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒன்று ‘அட்யல் பழங்குடி’(Atayal tribe). அதன் தலைவராக ‘ரூடோ பாய்’(Rudao Bai) என்பவர் அப்போது இருந்தார். அவருக்கு ‘மோனா ரூடோ’ (Mona Rudao) என்ற மூத்த மகன் இருந்தான். அப்போதைய தைவான் கிளர்ச்சி 1916-இல் அடக்கப்பட்டது. இதில் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். ரூடோ பாய் கொல்லப்பட்டார். அவரின் மகனான மோனோவும் ரூடோ சிறை பிடிக்கப்பட்டார்.

சிறை பிடிக்கப்பட்ட பூர்வ குடிகள் காட்டுமிராண்டிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டன. தடை செய்யப்பட்டன. அதில் முக்கியமானது, அவர்களில் ஆதி உரிமையான வேட்டையாடுதல் மற்றும் முகத்தில் பச்சை குத்திக்கொள்ளுதல். முகத்தில் பச்சைக் குத்திக்கொள்வது என்பது அவர்களின் வீரத்தின் அடையாளம். சிறுவன் ஒருவன் இளைஞனாவதின் அடையாளம் அது. அப்படி நெற்றியிலும் முகவாயிலும் பச்சை குத்திக்கொள்ள அவன் செய்ய வேண்டியது, ஒரு எதிரியின் தலையை வெட்டி எடுத்து வருவதுதான். ஆம், மனித தலை. அடுத்த அல்லது எதிரி குழுவிலிருந்து ஒருவனின் தலையை வெட்டி எடுத்துவருவதன் மூலம் அவ்விளைஞன் ஆண் மகனாகிறான் (Boy to Man) என்பது அவர்களின் நம்பிக்கை. அதே போல, அவர்கள் வேட்டையாடும் பூர்வ நிலத்தை பாதுகாப்பதும், அதை எதிரிகள் கைப்பற்றி விடாமல் தற்காத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வதும் அவர்களின் மரபு. இந்த இரண்டையும்தான் ஜப்பான் அரசு தடை செய்தது.


பின்பு ஜப்பான் அப்பகுதியில் கிராமம் அமைத்தது. பள்ளிக்கூடம், காவல்நிலையம், தபால் நிலையம் என அமைக்கப்பட்ட அக்கிராமத்தின் அனைத்து வேலைகளும் பிடிபட்ட பூர்வ குடிகளைக் கொண்டே செய்யப்பட்டன. எந்த வனத்தை இத்தனை காலமாக வழிவழியாக காத்து வந்தார்களோ அந்த வனம் அவர்களின் கைகளாளேயே அழிக்கப்பட்டது. மரத்தை வெட்டுவது ஒவ்வொரு பூர்வகுடி இளைஞனுக்கும் பெரும் வேதனையை கொடுத்தது. தங்களின் வேட்டை பூமி தங்களின் கைகளாலேயே அழிக்கப்படுவது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை.

காலம் உருண்டோடியது. ஜப்பான் அப்பகுதியில் பல இடங்களில் பாலங்கள் அமைத்தது. இரயில்பாதை அமைத்தது. கனிமங்களைத் தோண்டி எடுத்தது. அதே நேரம் பூர்வ குடிகளுக்கு நாகரிகம் கற்றுத்தருகிறேன் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஜப்பானிய கல்வி போதிக்கப்பட்டது. பூர்வ குடிகளின் கிராமங்கள் முழுவதும் கண்காணிப்புக்கு உள்ளாயின. ஒவ்வொரு கிராத்திற்கும் தனித்தனியாக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அத்தகைய காவல் நிலைய அதிகாரிகள் அக்கிராமத் தலைவரின் மகளை மணக்க ஊக்குவிக்கப்பட்டனர், அதனால் பூர்வ குடிகளோடு ஜப்பானியர்களுக்கு உறவுமுறை ஏற்பட்டு, எதிர் புரட்சி செய்யமாட்டார்கள் என்ற காரணத்திற்காக.

அதே போல, பூர்வ குடிகளின் தலைவர் குடும்பங்களுக்கு ஜப்பானிய கல்வி போதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ‘மோனோ ரூடோ’-வுக்கும் கல்வி போதிக்கப்பட்டது. அவரும் கல்வியில் சிறந்து தேறினார். ஜப்பானிய மொழியில் நன்கு பேசவும் கற்றுக்கொண்டார். நன்மதிப்பைப் பெற்ற அவரையும் சேர்த்து பதினெட்டு பூர்வ குடிகளை  1910-இல் ஜப்பானுக்கும் அழைத்துச் சென்று வந்தது அரசு. அவரின் மூத்த மகளை ஒரு ஜப்பானிய காவல் அதிகாரிக்கு திருமணம் செய்து கொடுத்தார்.  ஜப்பானிய அரசுக்கு இணக்கமாக வாழ்ந்து வந்தார் அவர்.

பல சமயங்களில் இளைஞர்கள் ஜப்பானியர்களுக்கு எதிராக செயல்பட துணியும்போதெல்லாம் அவர்களை அடக்கி அமைதியாக இருக்கும் படி செந்துவந்தார். இப்படியாக காலம் 1930 வரை வந்துவிட்டது. ஒருநாள் அவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. அந்த விழாவை, அவ்வினக் குழுவைச் சார்ந்த அனைவரும் மகிழ்ச்சியாக குடித்தும் ஆடியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காவல் அதிகாரிக்கும் மது கொடுக்க  ‘மோனோ ரூடோ’-வின் மகன் முயல, அது ஒரு சிறிய சண்டையில் போய் முடிகிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் அந்த அதிகாரியை கொல்ல முயல்கின்றனர். அப்போது அங்கே வரும் ‘மோனோ ரூடோ’ அதைத் தடுத்து காவல் அதிகாரியை பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார். மேலும் அடுத்த நாள் காவல் அதிகாரியைத் தேடிச்சென்று மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரி, இவரை வெளி அனுப்புவது மட்டுமல்லாமல் மேலே ஜப்பானிய அரசுக்கும் இதை ஒரு புகாராக அனுப்பி வைக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துகிறது. என்ன விளைவை ஏற்படுத்துமோ என்ற கலக்கம் எல்லாரிடமும் ஏற்படுகிறது.

அதே நேரம், ‘மோனோ ரூடோ’ தன் வீட்டின் தனிமையில் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கிறார். யாருக்கும் தெரியாமல், மிகுந்த இரகசியத்தோடு செய்யும் அச்செயல்.. தீக்குச்சியிலிருக்கும் மருந்தை மெல்லப் பிரித்தெடுத்து சிறிய குப்பியில் சேமிப்பதாகும். நிரம்பிய அக்குப்பியை தன் கட்டிலுக்கு அடியில் வைக்கிறார். அங்கே பல குப்பிகள் மருந்து நிரப்பப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிறு தீப்பெட்டியிலிருந்து இத்தனை குப்பிகள் சேர்க்க அவருக்கு பல காலம் தேவைப்பட்டிருக்கும். அப்போதுதான் இத்தனை குப்பிகள் சேமிக்க சாத்தியம்..! ஆம்.. இதை அவர் பல காலமாகத்தான் செய்துவருகிறார். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வெடிமருத்தை சேமித்து வருகிறார். எதிரியை வீழ்த்த கோபம் மட்டுமிருந்தால் போதாது, வீரமிருந்தால் மட்டும் போதாது, விவேகமும் திட்டமிடலும் வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

தன் தாய் மண்ணின் மீது அந்நியனின் கால் என்று பட்டதோ, எப்போது தன் வேட்டை நிலம் தன் கைவிட்டு போனதோ, தன் இனத்தின் வீரத்தழும்பு மரபு என்று தடுக்கப்பட்டதோ.. அப்போதிருந்தே அவரின் போராட்டம் துவங்கி விட்டது. அப்போதைய போராட்டத்தின் போது, அவரால் கொல்லப்பட்ட ஒரு ஜப்பானிய வீரனுக்கு பதிலாக அவரின் மொத்த குடும்பமும் உயிரோடு கொளுத்தப்பட்டது. அதை அவர் இன்னும் மறக்கவில்லை. அடுத்த மனைவிக்கு பிறந்த தன் மூத்தமகளை திருமணம் செய்துக்கொண்ட ஜப்பானிய காவல் அதிகாரி அவளை விட்டு பிரிந்து நாடு திரும்பியதும், தன் மகள் தனிமையில் தவிப்பதையும் அவர் மறக்கவில்லை. இதை எல்லாம் விட, தன் பூர்வ பூமியை காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய தன் கடமையும், அதற்காக சிந்த வேண்டிய புனித ரத்தத்தையும் அவர் மறக்கவில்லை. அந்த இரத்தக் காவுக்காகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறார். “முன்னோர்களே உங்களுக்கான இரத்தக் காவு விரைவில் கொடுப்பேன், அதுவரை எனக்குத் துணையிருங்கள்” என்பதுதான் அவரின் வேண்டுதலாக எப்போதுமிருந்தது.

இரத்தக் காவு வாங்கும் அந்த நாளும் வந்தது. அதுதான் அக்டோபர் 27, 1930. மற்ற குழுக்களுக்கு செய்தி இரகசியமாகச் சொல்லப்பட்டது. சிலர் இணைந்தார்கள். சிலர் மறுத்துவிட்டனர். 300 போராளிகள், ‘மோனோ ரூடோ’-வின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.  முதலில் கிராமம் தோறும் நிர்ணயிக்கப்பட்டிருந்த காவல் நிலையங்களை தாக்கினர். அங்கே இருந்த ஆயுதங்களைக் கவர்ந்து சென்றனர். பின்னர் மெதுவாக வாஷா கிராமத்தை சூழ்ந்தனர். நேரம் பார்த்து தாக்கத் துவங்கினார்கள். அந்த தாக்குதல்தான் பெரும் படுகொலையில் போய் முடிந்தது. அதை ‘வாஷா புரட்சி’(Wushe Revolution) அல்லது ‘வாஷா சம்பவம்’(Wushe Incident) அல்லது ‘வாஷா படுகொலை’(Wushe massacre) என உலகம் அழைக்கிறது. நாம் அதை ‘வாஷா புரட்சி’ என்று நினைவில் கொள்வோம்.

அங்கே கூடி இருந்த ஒட்டுமொத்த ஜப்பானியர்களும் அழிக்கப்பட்டனர். சீனர்களை யாரும் எதுவும் செய்யவில்லை. ஒரு சீன பெண் ஜப்பானிய உடை அணிந்து இருந்ததனால் தவறுதலாக கொல்லப்பட்டாள். அதேப்போல ஒரு சீனரும் தவறுதலாக கொல்லப்பட்டார். அவ்வளவுதான். மற்றவர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பூர்வ குடிகளும் தங்கள் கிராமங்களை நோக்கி நகரத்துவங்கினர். இதனிடையே ஜப்பான் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அது பெரும் படை ஒன்றை இங்கே அனுப்பி வைக்கிறது. இரண்டாயிரம் பேர் கொண்ட அந்த படையால், பல ஆயுதங்கள் கொண்டு போராடியும் வெறும் முந்நூறு பேர்களை மட்டுமே கொண்ட பூர்வ குடிகளை வெல்ல முடியவில்லை. காடுகள் பெரும் அரணாக இருந்தன. இரவில் தாக்குவது பூர்வ குடிகளுக்கு பெரும் பலமாக அமைந்தது. மேலும் தாக்கு பிடிக்க முடியாத ஜப்பானிய அரசு இரண்டு குறுக்கு வழிகளை கையாண்டது.


முதலாவது, பூர்வ குடிகளுக்கு உள்ளாகவே இருந்த பகை உணர்ச்சியை பயன்படுத்தி அடுத்த குழுவை இவர்களின் மீது ஏவி விட்டது. இரண்டாவதாக, உலகம் அன்றுவரை செய்தே இராத ஒரு பாதகச்செயலை செய்யவும் துணிந்தது. அது.. ‘விஷ குண்டுகளை’ பயன்படுத்துவது. ஆம், அதுவே உலகில் முதன் முதலாக விஷ குண்டுகள் எதிரிகள் மீது வீசப்பட்ட நிகழ்வாகும். காடுகளில் பதுங்கி இருந்த பூர்வ குடிகளின் மீது விஷ குண்டு வீசப்பட்டன. குண்டுகளில் இருந்து வெளிப்பட்ட விஷப்புகைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் மாண்டு விழுந்தனர். கூடவே விமானங்களிலிருந்து துண்டுச் சீட்டுகள் போடபட்டன. அதில் சரணடையச் சொல்லி நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். தாங்கள் இனி தாக்கு பிடிக்க முடியாது என்பதை ‘மோனோ ரூடோ’ உணர்ந்துக்கொண்டார். அவர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

அம்முடிவு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி.. தங்கள் வீடுகளை அவர்களே கொளுத்தத் துவங்கினர். தீக்கிரையாக்கப்பட்ட தங்களின் கிராமங்களிலிருந்து மக்கள் மொத்தமாக வெளியேறினர். காடுகளை நோக்கி அவர்கள் பயணம் இருந்தது. இடையே கர்ப்பிணிப் பெண்களை தனியாக பிரித்து அவர்களை தனி குழுவாக்கி அனுப்பி வைத்தனர், ஜப்பானியர்களிடம் சரணடையச்சொல்லி. மீதம் இருந்தவர்களில் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிந்து சென்றனர். தனித்துச் சென்ற பெண்கள் செய்த செயல் இன்று வரை இவ்வுலகம் கண்டிராதது. அப்பெண்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டார்கள். மரக்கொடிகளில் தூக்கு மாட்டிக் கொண்டு தங்களை மாய்த்துக் கொண்டனர், போராடப் போகும் ஆண்களுக்கு தாங்கள் பாரமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக. அவர்களின் மரணத்திற்கு முன்பாக தங்கள் பிள்ளைகளை தாங்களே கொன்றனர்.


பிரிந்து சென்ற ஆண்கள் பல நிலைகளில் எதிரிகளோடு போராடினர். பீரங்கி, துப்பாக்கி என பல ஆயுதங்கள் கொண்ட பெரும் படையான ஜப்பானியர்களிடம் தாக்கு பிடிக்க முடியவில்லை. பலர் இறந்து போனார்கள். தங்கள் போராட்டம் முடிவை நோக்கி வந்துவிட்டதை உணர்ந்துக் கொண்ட ‘மோனோ ரூடோ’ அடுத்து போராட்டத்தை அவரின் மூத்த மகன் ‘டாடோ மோனோ’(Tado Mouna)-விடம் ஒப்படைத்துவிட்டு காடு நோக்கி செல்கிறார். எதிரியின் கையில் தான் சிக்கி அவமானப்பட அவர் விரும்பவில்லை. ‘டாடோ மோனோ’-வும் ஒரு கட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தன் சகாக்களோடு தற்கொலை செய்துக்கொள்கிறார். இந்த புரட்சி ஐம்பது நாட்கள் நடந்து, முடிவுக்கு வந்தது. இதில் 1200 பூர்வ குடிகள் நேரடியாக பங்கு பெற்றனர். 644 பேர் கொல்லப்பட்டார்கள். 290 பேர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். பிடிபட்டவர்களில் 216 பேர் பின்பு கொல்லப்பட்டனர். 298 பேர் தனித் தீவில் அடைக்கப்பட்டனர்.

காடுகளுக்குள் சென்ற ‘மோனோ ரூடோ’ என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை. காடு முழுவதும் தேடப்பட்டார். ஆனால் அவர் கிடைக்க வில்லை. காலங்கள் கடந்தோடின. ‘மோனோ ரூடோ’-வின் பெயர் அப்போது மிகப் பிரபலமானது.

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு 1934-இல் ஒரு குகையில் அவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பாதி அழுகிய நிலையில் இருந்த அது அவர்தான் என்பதற்கு சாட்சியாக அவரின் ஆயுதங்கள் உடனிருந்தன. அவரின் உடலை கைப்பற்றிய ஜப்பானிய அரசு, மக்களை எச்சரிக்கும் விதமாக, அதை மக்களின் பார்வைக்கு வைத்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் தைவானை விட்டு ஜப்பான் வெளியேறியது. அதன் பின்பு ‘மோனோ ரூடோ’-வின் உடல் மீண்டும் காணாமல் போனது. அந்த உடல் என்னவானது என்று யாருக்கும் தெரியவில்லை. பின்பு 1981-இல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரின் உடல், அது அவருடையதுதான் என்று உறுதி செய்யப்பட்டு அவரின் பூர்வ கிராமத்தில் புதைக்கப்பட்டது. அவரின் மண்ணுக்கே அவர் திரும்ப வந்து சேர்ந்தார்.

நடுவில் இருப்பவர்..
தைவானின் வரலாற்றில் ஜப்பானியர்களை எதிர்த்து நின்ற ஒரே மனிதன் ‘மோனோ ரூடோ’, தைவானின் சின்னமானார் (Taiwanese icon).

இக்கதையை, 2011-இல் வெளியான தைவானிய படமான ‘Warriors of the Rainbow: Seediq Bale’ என்ற படம் பதிவு செய்திருக்கிறது. இரண்டு பாகங்களான இப்படம் மொத்தம் நான்கரை மணி நேரம் ஓடக்கூடியது. ஒரு பூர்வ குடியின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் அழிவையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது. படம் நெடுக நெகிழ்வான, மனதை பதற வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ளன. பல அற்புத காட்சிகளைக் கொண்ட இப்படம், மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தின் முடிவில், மனித இனம் இப்பூமியில் வாழ்வது எதன் பொருட்டு என்ற கேள்வி ஒன்று எழுந்து என் மனதெங்கும் அரிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நீண்ட நேரம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்திருந்தேன். சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்து மறைந்த அம்மனிதர்களும் அவர்களின் தலைவன் ‘மோனோ ரூடோ’-வும் மனதெங்கும் நிறைந்திருந்தார்கள். அம்மாமனிதர்களுக்கு அல்லது அந்த அப்பாவி மனிதர்களுக்கு கண்ணீரைத் தவிர வேறென்ன தந்துவிட முடியும் நாம் இன்று?  

6 comments

sridhar said...

ஒரு நல்ல பாடத்தை தந்த படத்தை, பார்க்கதூண்டும் விதமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Kabilan said...

நன்றி விஜய் ஆம்ஸ்ட்ராங் - அருமையான பதிவு -

ஆதி தாமிரா said...

ஒரு விமர்சனம் போல அல்லாமல் ஒரு மனதைப் பாதித்த நிகழ்வாக, அறிமுகமாக நீங்கள் படங்களைப்பற்றி எழுதும் கட்டுரைகள் சிறப்பானவை. அந்த வகையில் இதுவும் ஒரு மிகச்சிறப்பான கட்டுரை என்பதில் சந்தேகமில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு சார் ! நன்றி ! வாழ்த்துக்கள் !

k n vijaya kumar said...

இப்படத்தின் முடிவில், மனித இனம் இப்பூமியில் வாழ்வது எதன் பொருட்டு என்ற கேள்வி ஒன்று எழுந்து என் மனதெங்கும் அரிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. உங்கள் கட்டுரையைப் படித்து முடிக்கையில் இதுதான் என் நிலையும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

k n vijaya kumar said...

இப்படத்தின் முடிவில், மனித இனம் இப்பூமியில் வாழ்வது எதன் பொருட்டு என்ற கேள்வி ஒன்று எழுந்து என் மனதெங்கும் அரிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. உங்கள் கட்டுரையைப் படித்து முடிக்கையில் இதுதான் என் நிலையும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

About Me

My photo

Cinematographer from Tamil Film Industry..Chennai.Tamil Nadu. India

Search This Blog

Blog Archive

Popular Content

About us

Amazon

123RF

Toggle menu