LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

காமிக்ஸ் விதைமிக நீண்ட கால காமிக்ஸ் ரசிகன் நான். பள்ளிப் பருவத்தில் துவங்கிய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. ஒரு நேர்த்தியானப் படத்தை, ஒரு சிறந்த நாவலை எப்படி அணுகுகிறேனோ அதேவிதத்தில் தான் ஒரு காமிக்ஸையும் அணுகுகிறேன் என்பதை அறிந்த என் நண்பர்கள் எப்போதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள்.  “அட என்ன சின்னப்புள்ளையாட்டும் இன்னும் காமிக்ஸ் படிக்கிறீர்கள்..?!” என்று கேட்ட பல நண்பர்கள் எனக்குண்டு. என்ன செய்வது, நண்பர்கள் பலவிதம். .  :)

இருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மதிய நேரம், ‘ஜேம்ஸ்பாண்டு 007’-ஐ நாயகனாகக் கொண்ட ‘அழகியைத் தேடி’ என்னும் ராணிக் காமிக்ஸ் ஒன்று என் கையில் வரமாக வந்து சேர்ந்தது. அவ்வரத்தை தந்தவர், என் பெரிய மாமா ‘கலைவாணன்’ அவர்கள். தன் அக்காவையும் அக்கா மகன்களையும் பார்க்க வந்தவர், எங்களுக்கு அன்பளிப்பாக இக்காமிக்ஸை கொண்டுவந்திருந்தார். அன்று படித்த அந்தக்கதை இன்றும் நினைவிலிருக்கிறது. தமிழை எழுத்து கூட்டியே படிக்கத் தெரிந்த போதும், விடாமல் வாசித்தோம். நண்பர்கள் கூடி வாசித்தோம்.

யோசிக்க.. அந்தப் புத்தகமே என் வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளமாகியிருப்பது புரிகிறது. மேலும் எப்போதும் எங்கள் வீட்டில் புத்தகங்கள் இருக்கும். எங்கள் வீட்டிற்கு, வாரத்தின் எல்லா நாட்களும் ஏதேனும் ஒரு புத்தகம் வந்துக்கொண்டே இருக்கும். என் பெற்றோர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததே அதற்கு காரணம். அப்பா அரசியல் படிப்பார். அம்மா எல்லாவற்றையும் படிப்பார். ஆனந்தவிகடன், குமுதம், சாவி, குங்குமம், கல்கி, கல்கண்டு, ஜூனியர் விகடன், ராணி முத்து என தொடரும் பட்டியலில் எந்த புத்தகமும் விட்டுப்போகாது. வாரத்தின் எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒருபுத்தகம் வெளியாகும். அது அன்றைய மாலைக்குள்ளாக எங்கள் வீட்டிலிருக்கும். அந்த புத்தகக் குவியலே என் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தியது. வீடு என்பது புத்தகங்களும் சேர்ந்ததுதான் என்பது யாரும் சொல்லித்தராமலே வந்துவிட்ட பழக்கமாகிவிட்டது.. அச்சச்சோ..கதை எங்கேயோ போகுதே..?!

ஆங்.. என்ன சொல்ல வந்தேன்னா?.. ராணிக்காமிக்ஸில் துவங்கிய என் காமிக்ஸ் வாசிப்பு, பின்பு எப்படியோ ‘லயன்/முத்து’ காமிக்ஸ் வழியே தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ராணி காமிக்ஸ் ஒரு அற்புதம்ன்னா.. முத்து/லயன் காமிக்ஸ் ஒரு புதையல். எவ்வளவு கதைகள்.!? எத்தனை நாயகர்கள்.!?. மனதெங்கும் நீங்கா இடம் பிடித்த நாயகர்களின் பட்டியல் பெரியது. தமிழ் நாட்டில், எண்பதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள்  புண்ணியவான்கள் என்றுதான் சொல்லுவேன். அக்காலகட்டத்தில் வெளிவந்த பல காமிக்ஸ்கள்தான் எங்களைப் போன்றவர்களை வடிவமைத்தது எனலாம். அத்தகைய காமிக்ஸ் நாயகர்களின் வழியேதான் நாங்கள் நல்லது கெட்டதை அறிந்துக்கொண்டோம். நீதி நேர்மையை படித்துக் கொண்டோம். மனிதம் பயின்றோம். தீயதை அழிக்க நல்லவனொருவன் உண்டு என்பதும் அவன் வல்லவன் என்பதும் மனதில் பதிந்துபோயிற்று. யோசிக்க.. அக்கதாநாயகர்களே இன்றும் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாகயிருக்க முயல்கிறார்கள். அவர்களே நமக்குள்ளிருக்கும் நாயக பிம்பத்தை உயிர்ப்பித்து வைத்திருக்கிறார்கள். அப்பிம்பமே, நீதி, நேர்மை, நியாயம், மனிதம், இரக்கம், உரிமை, விடுதலை போன்றவற்றின் மீதிருக்கும் ஆவலுக்கும் தேடலுக்கும் காரணமாகிருக்கிறது.

ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான். “எப்படி நீ எப்ப பார்த்தாலும் படித்துக் கொண்டேயிருக்கிற..? போரடிக்காதா?”.. அக்கேள்விக்கு நான் இன்றுவரை பதில் சொல்லவே இல்லை. உண்மையில் எனக்கு அக்கேள்வியும் புரியல, பதிலும் தெரியல. எப்படி அவனால் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிந்தது என்ற புதியதொரு கேள்வி தோன்றியதுதான் மிச்சம்.

உண்மையில் நம்மை புத்தகங்களே வடிவமைக்கின்றன என்று கருதுகிறேன். சொல்லித் தரப்பட்ட, கற்பிக்கப்பட்ட, அனுபவித்த எதையும் விட புத்தகங்கள் மூலம் உணரும் புரிந்துக்கொள்ளும் வாழ்க்கையே, நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கவைப்பதும் அதன் வழிப்பெற்ற அனுபவத்தை அர்த்தமுள்ளதாக்குவதும் படிப்பினையாக்குவதும் புத்தகங்கள் தான். புத்தகம் சுட்டிக் காட்டிய பிறகுதான் நாம் கவனிக்கத் துவங்குகிறோம். புத்தகம் சொல்லும் செய்தியை, நம் வாழ்க்கையில் தேடிப் புரிந்துக் கொள்கிறோம்.

புத்தகம் நம்மை வடிவமைக்கிறது எனில், என்னைப் போன்றவனுக்கு காமிக்ஸே அதன் மூலம் என்று நினைக்கிறேன். காமிக்ஸ் படிக்கும் பழக்கமே, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. கிரைம் நாவல், வரலாற்று நாவல், காதல், கவிதை, இலக்கியம், தத்துவம், அரசியல் எனத் தொடரும் அப்பழக்கத்திற்கான விதை காமிக்ஸ் படிக்க துவங்கியதில் விழுந்தது என்பதை மறுக்க முடியாது. அப்படித் தொடர்ந்து காமிக்ஸை படித்து வரும் எண்ணிலடங்கா இளைஞர் கூட்டம் இங்குண்டு என்பதை நாம் அறிவோம். அவர்களில் நானும் ஒருவன். ஆயினும் இது வரை காமிக்ஸ் வாசித்தல் பற்றி நான் எதுவுமே எழுதியதில்லை. இன்று வாசித்த ஒரு காமிக்ஸ் இந்த கட்டுரையை எழுத தூண்டிவிட்டது.

‘Wild West ஷ்பெஷல்’ என்று பெயரிடப்பட்ட ‘முத்து காமிக்ஸின்’ இம்மாத பதிப்பே அப்புத்தகம். இப்புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ‘எமனின் திசை மேற்கு’ மற்றொன்று ‘மரண நகரம் மிசௌரி’.

இதில் ‘எமனின் திசை மேற்கு’என்னும் கதை ஒரு அற்புதம். தமிழில் முதல் முறையாக ஒரு ‘Graphic Novel’ என்ற அடைமொழியோடு வெளியாகிருக்கிறது. அது உண்மைதான். மிக நேர்த்தியாக வரையப்பட்டப் படங்கள், நுணுக்கமாக செய்யப்பட்ட வண்ண வேலைப்பாடுகள் மற்றும் சிறப்பான நகர்வும் கொண்ட ஒரு கதை இது. ஒரு சிறந்த திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை இக்கதை கொடுக்கிறது. ஒரு திரைப்படம் என்பது பல ‘காட்சித் துண்டுகளால் -(shots)’ ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். அதேப்போலத்தான் காமிக்ஸும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வகையில் கதையை நகர்த்த பிரிக்கப்பட்ட இக்காமிக்ஸின் ஷாட்டுகள் மிக நேர்த்தியானவைகள். ஒவ்வொரு காட்சித் துண்டும் அற்புதமானவைகளாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் கதை ஓட்டம் ஒருபுறமெனில், அப்பக்கத்தைத் திருப்ப மனம் வராது கட்டிப்போடும் ஓவியங்கள் மறுபுறம். ஆகா.. படிக்க.. பார்க்க.. ரசிக்க என மிக அற்புதமான ஒரு அனுபவத்தை இக்காமிக்ஸ் கதை தருகிறது. இதுவரை என் காமிக்ஸ் அனுபவத்தில் ஒரு கதையின் முடிவில் கண்ணீர்த் துளி எட்டிப்பார்த்தது இக்கதையில் தான்.

இதைப் படைத்தவர் ‘Jean Van Hamme’ என்று அறிந்த போது மனம் பெரும் மகிழ்ச்சி கொண்டது. ஏற்கனவே அவரின் ‘Largo Winch’ மற்றும்  ‘XIII’ கதைகளுக்கு நான் பெரும் ரசிகன்.இந்தக்கதைக்கு எவ்வகையிலும் குறைவில்லா தன்மைக்கொண்டது  ‘மரண நகரம் மிசௌரி’. என்னுடைய பிரியமான நாயகர்களில் ஒருவரான ‘டைகரின்’ சாகசத்தை வண்ணத்தில் பார்த்து..படித்து.. மகிழ்ந்துபோனேன். இப்படி ஒரு காமிக்ஸை கொடுத்த லயன்/முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்கும் அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து இப்படியான புத்தகங்களை அவர் தந்திட வேண்டும் என்றும் விண்ணப்பம் வைக்கிறேன்.

நண்பர்களே.. இதுவரை நீங்கள் காமிக்ஸ் படிக்காதவர்களாக இருந்தாலும் .. இப்புத்தகத்தின் மூலமாக அதை துவங்கிடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். காமிக்ஸ் தானே என்று அலட்சியமாக கருதாதீர்கள். அதன் பின்னால் இருக்கும் உழைப்பை அறிந்திட்டால்.. மலைத்துப்போவீர்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை ஒரு காமிக்ஸை உருவாக்குவது. கதை எழுதுவது, அதை காட்சித்துண்டுகளாக பிரிப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, நேர்த்தியாக கதை நகர்வை முன்னெடுக்கும் காட்சித்துண்டுகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கேற்ற வசனத்தை எழுதுவது, அதை வடிவமைப்பது/அச்சடிப்பது என பெரும் வேலைகளைக் கொண்டது அது.

குறிப்பாக திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் கண்டிப்பாக காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு காமிக்ஸிலிருந்தும் பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். (கதைகளை என்று புரிந்து கொள்ளாதீர்கள்..  :) )


Comments

 1. விஜய் உங்களுக்கு அழகான எழுத்து நடை மிக லாவகமா வருகிறது . இதுவரை காமிக்ஸ் புத்தகம் எதுவும் வாங்கி வாசித்தது இல்ல.இது என் முதல் புத்தகமா இருக்கும்

  ReplyDelete
 2. நன்றி திருமா சார். கண்டிப்பாக படியுங்கள். பிடித்திருந்தால்..லயன்/முத்து காமிக்ஸின் பழைய புத்தகங்கள் தொகுப்பாக கிடைக்கிறது. அதை வாங்கி விடுங்கள்.

  ReplyDelete
 3. எங்களுக்குப் படக்கதை அறிமுகமானது குமுதத்தில் வேதாளம் (phantom), மந்திரவாதி மேண்ட்ரக், பிறகு இரும்புக்கை மாயாவி (notorious அ.கொ.தீ.) இந்திரஜால் காமிக்ஸ் etc. பிடித்தவர்களில் இருவர் டென்னிஸ் மற்றும் டின்டின்

  ReplyDelete
 4. பத்து வருசத்துக்கு அப்புறம் காமிக்ஸ் படித்தது ஒரு புது அனுபவமாக இருந்துச்சு. அன்பின் விஜய் அவர்களே , சார் லாம் சொல்லாதிங்க . அந்த அளவுக்கு நன் பெரியவன் இல்ல .

  ReplyDelete
 5. உங்கள் பதிவு, என் சிறுவயது காமிக்ஸ் மோகத்தை ஞாபகப்படுத்தியது. ஒரு
  கிருத்துவ நண்பர் (பெயர் மறந்துவிட்டது, அந்த நண்பர் என்னை
  மன்னிக்கவும். என் மறதியை நினைத்து வருத்தப்படுவது இதைப்போல நேரங்களில்
  மட்டும்தான்) வீட்டுக்கு சென்று காமிக்ஸ் படிப்போம். கிராமத்தில்
  இருந்ததால், நகரத்துக்கு சென்று புத்தகம் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை.
  பாடம் படிக்கும் புத்தகமே, அண்ணன் உபயோகித்ததுதான் என்னிடம் வரும். ஒரு
  பாடப்புத்தகம், இது போல் ஐந்தாறு பேர் படிக்க உதவும். நீங்கள்
  சொன்னதைப்போல், காமிக்ஸ் ஒரு நல்ல படிப்பினையை அந்தவயதில் தந்தது.
  அந்தவயதில் எனக்கு தெரிந்த தவறுகளுக்கு எதிராக காமிக்ஸ் கதாநாயகனை போல்
  நினைத்துக்கொண்டு சண்டைப்போட்டிருக்கிறேன். இப்போது புத்தகம் படிக்கும்
  பழக்கமே போய்விட்டது. படித்தாலும் உபயோகப்படப்போவதில்லை. என்னுடைய அறிவின்
  வளர்ச்சி, என்னை ஒதுங்கிசெல்ல பழக்கிவிட்டுவிட்டது.

  ReplyDelete
 6. அட்டகாசம்.

  இன்றுதான் எதேச்சையாக உங்கள் தளத்தை பார்த்தேன். நீங்களும் ஒரு காமிரேட் என்பதில் பெரு மகிழ்ச்சி.

  ஒரே ஒரு சிறிய திருத்தம் : அந்த ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பான்ட் புத்தகத்தின் பெயர் அழகியைத் தேடி. 1984ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த புத்தகம் அது.


  சொல்லப்போனால் ராணி காமிக்ஸின் முதல் புத்தகமும் கூட. அதே மாதம்தான் நம்ம லயன் காமிக்ஸின் முதல் இதழும் வெளிவந்தது.

  ReplyDelete
 7. ஆமாம்..ஆமாம் சார். அது ‘அழகியைத் தேடி’ தான். :) ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. சார்,

  முதலில் சார் என்று அழைப்பதை நிறுத்துங்கள்,கூச்சமாக உள்ளது. விஸ்வா என்றழையுங்கள்.

  இரும்புக் கை ஏஜென்ட் கதைகள் தமிழில் மிகவும் குறைவே. மொத்தம் மூன்று கதைகளே (இரண்டு புத்தகங்களில்) வந்துள்ளன. இரண்டுமே திகில் காமிக்ஸ். இதோ அவற்றின் மேலதிக விவரங்கள்:
  இரும்புக் கை ஏஜென்ட்-அறிமுக விளம்பரம்

  திகில் கோடை மலர் பின்னட்டை-தமிழில் முதல் அறிமுகம்

  திகில் பயணம்-நீங்கள் சொன்ன கதை-முதல் பக்கம்

  இரும்புக் கை ஏஜென்ட்-இரண்டாவது கதை - திகில் காமிக்ஸ் #18 Cover

  கடற்கோட்டை மர்மம் முதல் பக்கம்

  விண்ணில் மறைந்த விண்கலங்கள் முதல் பக்கம்

  இந்த ஹீரோவைப்பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்:

  http://www.internationalhero.co.uk/u/uk.htm

  இந்த இரண்டு புத்தகங்களுமே மிகவும் அரிதானவை என்பதால் கிடைப்பது சந்தேகமே. உங்களுக்காக டபுள்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.

  ReplyDelete
 9. நன்றி..சார். ம்ம்...விஸ்வா.. :)

  ReplyDelete
 10. வலைச்சரம் மூலம் உங்களுடைய இந்தத் தளம் பற்றி அறிந்தேன். அருமையான பதிவுகள்!

  புத்தகம் ஒரு மனிதனின் வாழ்வை வடிவமைப்பது பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கருத்துக்கள் படிக்கும் பழக்கதுடைய ஒவ்வொருவரின் உள்ளக்குரல்! இதைப் பதிவு செய்தமைக்கு நன்றி!

  எனக்கும் சித்திரக்கதைகள் என்றால் உயிர். ஆனால், முத்து, ராணி, லயன் போன்ற அதிரடிச் சித்திரக்கதைகள் பிடிக்காது. வாண்டுமாமா எழுதுகிற, கோகுலம், பூந்தளிர் போன்ற வகைப்பட்ட சித்திரக்கதைகள்தாம் எனக்குப் பிடித்தவை. ஆனால், வெகுகாலமாக ராணி காமிக்சைத் தொடர்ந்து வாங்கி வந்தவன்தான் நானும். ஆனால், கோகுலம் படிக்கக் கிடைத்த பின் ராணி காமிக்சு வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

  சித்திரக்கதைகளை உருவாக்கவும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அளவுக்கான உழைப்பு தேவைப்படுகிறது எனும் உங்கள் தகவல் எனக்குப் புதிது! நன்றி!

  மேலும், பதிவர் எனும் முறையில் உங்கள் தளத்தின் வடிவமைப்பு எனக்கு மலைப்பைத் தருகிறது! இப்படி ஓர் வடிவமைப்பைத் தமிழில் நான் இப்பொழுதுதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 11. நன்றி..ஞானப்பிரகாசன் சார்.

  ReplyDelete
 12. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விஜய் ஆம்ஸ்ட்ராங் அவர்களே! பதிவுலகில் புதுக்குருதி பாய்ச்சி வரும் 'பன்முகப் பதிவர்' விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்!

  தங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!

  விருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள என் பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  நன்றி! வணக்கம்!

  ReplyDelete
 13. நன்றி இ.பு.ஞானப்பிரகாசன் சார்

  ReplyDelete
 14. 'சார்' வேண்டா! பெயர் சொல்லி அழைத்தாலே போதும்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்