'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை.

மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ, பொருளீட்டவோ தேசம் கடந்து, கடல் தாண்டும் பிள்ளைகள், தூரதேசத்தில் பிழைத்துக் கிடந்து உறவுக்காக ஏங்கும் ஜீவன்கள் என வாழ்வின் பல சந்தர்ப்பங்களை உதாரணம் காட்ட முடியும்...யோசித்துப்பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்களும் அப்படியான நிலைகளை கடந்துவந்திருப்பதை நினைவில் கொள்ள முடியும்.

திரைத்துறையில் அப்படியான ஒருநேரமிது என்பதை, அண்மை நிகழ்வுகள் சில சுட்டிக் காட்டுகின்றன. மெகா படங்கள் அடிவாங்குவதும், சிறுபடங்கள் வரவேற்பு பெறுவதும், புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வருவதும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அவைகள் ஒருபுறம் மனமகிழ்ச்சியையும் மறுபுறம் துயரத்தையும் ஏற்படுத்தக்கூடியவைகளாகிருக்கின்றன. மெகா படங்கள் அடிவாங்குவது, கமர்சியல் படங்கள் என்ற பெயரில் மொக்கை படங்களின் தொடர்ச்சியை தடுக்கும் எனினும் அது, திரைத்துறையின் முதலீட்டை பாதிக்கும். பெரும் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அத்தடுமாற்றம் பல இன்னல்களைக் கொண்டுவரும். ஆயினும் தவறுகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும் என்பதனாலும், அதன் வழி புதிய படைப்புகள் உருவாக இடமிருப்பதாலும் இதை இரு நிலைகளிலிருந்தே அணுகவேண்டியதிருக்கிறது.

சிறுபடங்களின் வெற்றிகள் ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மறுபுறம் கவலைப்படக்கூடிய பல நிகழ்வுகளை கொண்டிருக்கிறது. நிறைவான சில படங்கள் வெளிவந்த போதும், பல மொக்கைப்படங்கள் உருவாவதை பார்க்க முடிகிறது. இது பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவர்கள் தகுதியானவர்களா என்பதை கவனிக்க தவறிவிடுகிறது. அதனால் பல குறை முயற்சிகள் உருவாகின்றன. இது திரைத்துறையின் நிலைத்தன்மையை பாதிக்கும். சட சடவென வெளி வரும் சிறு முதலீட்டுப் படங்கள் பல நல்ல முயற்சிகளை தடுக்க கூடியதாகியிருக்கிறது என்பதை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டதிலிருந்து உணர முடிகிறது. சிறுமுதலீட்டில் பெரிய லாபம் என்ற கணக்கில் உருவாகும் பல படங்கள் தகுதியான கதை, தொழில்நுட்பாளர்கள், நடிகர்கள் இல்லாமல் குறை படைப்புகளாக வெளிவந்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். தினமும் நாளேடுகளில் பார்க்கிறோம். எத்தனைப் படங்கள்!?.. நினைவில் கொள்ள முடியாத, வாயில் நுழையாத, ஜீரணித்துக் கொள்ள முடியாத தலைப்புகளில் படங்கள் உருவாவதை விளம்பரப்படுத்துகின்றன. அத்தனை படங்களும் உண்மையில் தயாரிக்கப்படுகின்றனவா..?! வெளிவருகின்றனவா..?! அப்படி வெளி வரும் படங்களை பார்க்க முடிகிறதா..?! தரமிருக்கிறதா..?! என்று எதையும் அறிய முடியவில்லை. திரைத்துறையைச் சார்ந்த ஒரு தொழில்நுட்பாளனாக என்னால் இதை இரு நிலைகளிலிருந்தே பார்க்க முடிகிறது. பாதை எங்கே போகிறது? வளர்ச்சியை நோக்கியா? வீழ்ச்சியை நோக்கியா?.. வளர்ச்சியை நோக்கித்தான் என்று நம்புவோம்.

புதியவை அறிமுகமாகும்போதெல்லாம் ஒரு சிக்கல் உருவாகுகிறது. பழையதை என்ன செய்வது என்பதுதான் அது. புதிய தொலைக்காட்சி வாங்கினால் பழையதை என்ன செய்வது?, புதிய சட்டை வாங்கினால் பழையதை என்ன செய்வது? புதிய மனைவி வந்தால் பழைய அம்மாவை என்ன செய்வது? புதிய காதலி வந்தால் பழையவளை என்ன செய்வது என்பதைப்போலவே..புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பத்தை என்ன செய்வது என்ற சிக்கல் பல காலமாகவே இருக்கிறது. பழையதிலிருந்து புதியவற்றிற்கு மாறுவதற்குள்ளாக நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மனத்தடைகள் எண்ணிலடங்காது. புதியவற்றை நாம் உள்வாங்கிக் கொள்வதிலிருக்கும் சிக்கல் ஒருபுறம் என்றால், பழையவற்றை துறக்க மறுக்கும் மனநிலையே பெரும்பாலும் பெரிதாகயிருக்கிறது. HDTV கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை நடைமுறைக்கு கொண்டு வர ஒரு சிக்கல் இருந்ததாக சொல்லுவார்கள். 1970-களிலேயே தயாராகிவிட்ட தொழில்நுட்பம் அது, தள்ளிப்போக பல காரணங்களில் ஒன்று, ஏற்கனவே இருக்கும் பல கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை என்ன செய்வது..? என்ற சிக்கல் தான்!. புதியவை சிறப்பானது எனினும் பழையதை என்ன செய்வது?!. வேறு வழியே இல்லை, மேம்பட்டே ஆகவேண்டும் என்ற நிலையிலேயே HDTV-ஐ பொது பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். அதேதான் இங்கே, திரைத்துறையில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. Black & White Film to Color Film, 4:3 35mm to 2.35:1 Aspect Ratio(Cinemascope), Stereo Sound, AVID என எல்லாவற்றையும் வேறுவழி இல்லா நிலையிலேயே மாற்றி வந்திருக்கிறார்கள். அவை வளர்ச்சியை கொடுத்தன என்றபோதும், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் ஒவ்வொரு முறையும் ஒருவித பிணக்கோடேயே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் இப்போது ‘Digital Cinema’ என்னும் புதிய பூதம்.!

டிஜிட்டல் சினிமா ஒருபுறம் ஆராவாரமாக வரவேற்கப்பட்டாலும் மறுபுறம் ஒருவிதமான சிக்கலையும் ஏற்படுத்துகிறது. டிஜிட்டலின் முக்கிய வளர்ச்சியான ‘விடியோ’தொழில்நுட்பம், திரைத்துறையில் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த ‘Film'-இன் பீடத்தை அசைத்துப் பார்க்கிறது. படச்சுருளின் காலம் முடிவை நோக்கி நகர்கிறது. பல தொழில்நுட்பாளர்கள் புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டாலும் பலர் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள், மிரளுகிறார்கள். அது சினிமாவின் மேன்மையை குலைத்துவிடும், தரமற்றது, தேவையற்றது என்றெல்லாம் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆயினும் அவர்களுக்கு தெரியும், காலம் எல்லாவற்றையும் மாற்றித்தான் போடும் என்பது. டிஜிட்டல் சினிமாதான் எதிர்காலம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

மகா கலைஞன் ‘Quentin Tarantino’ அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லுகிறார். தான் இனிமேல் திரைப்படம் இயக்கப்போவதில்லை, டிஜிட்டல் சினிமா என்னை படுத்துகிறது. பொது தொலைக்காட்சியைப்போல அதன் திரையிடல் திறன் இருக்கிறது. இதற்காக நான் திரைப்படம் இயக்க வரவில்லை. இனிமேல் நாவலாசிரியனாக, திரை விமர்சகனாக, திரைக்கதையாசிரியனாக இருக்க விரும்புகிறேன் என்று..இந்த பேட்டி எனக்கு பெரும் மனக்கவலையைத் தந்தது. மேலும் மற்றொரு கட்டுரை படிக்க நேர்ந்தது. ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனமான ‘20th-century movies’ இனி தன்னுடைய பெரும்பாலான படங்களை 'Print' செய்ய முடியாத நிலையிலிருக்கிறது. காரணம், ‘Technicolor’ லேப் இனி ‘Film Printing’ செய்யப்போவதில்லை என்ற முடிவெடுத்திருப்பதே. இதனால் சிறந்த பலப் படங்கள் இனி அதன் ஆதார தரத்தோடு இருக்கப்போவதில்லை என்று ‘Thelma Schoonmaker’(Martin Scorsese's editor) மிகுந்த மனவருத்தத்தோடு கருத்து தெரிவித்திருக்கிறார்.  ‘Film Negative'-ஆக இருக்கும் திரைப்படங்களை இனி செல்லுலாயிட் பிரிண்டாக எடுக்க முடியாது. டிஜிட்டல் பிரதிதான் எடுக்க முடியும் என்பதும், அப்படி பிரதி எடுக்கும்போது அதன் முந்திய, ஆதார வண்ணங்களை நிர்ணயிக்கவோ கொண்டுவரவோ முடியாமல் போவது பெரும் துயரம் என்றார். காரணம் ஒரு திரைப்படத்தின் ஆதார வண்ணங்களை நிர்ணயிக்க அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி இல்லா பட்சத்தில் தற்போது DI-இல் இருக்கும் Colorist அவரின் விரும்பத்திற்கு ஏற்வகையில் வண்ணத்தை நிர்ணயித்துவிட முடியும். இது அத்திரைப்படத்தின் ஆத்மாவை குலைத்துவிடும் என்று கவலைப்படுகிறார். ஒருபுறம் 'Fuji film' தன் தயாரிப்புகளை நிறுத்த போவதாக அறிவிக்கிறது. மறுபுறம் ‘Kodak’ மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கிறது, மேலும் தன்னுடைய பல படச்சுருள் வகைகளை, நிறுத்தப்போவதாக சொல்லுகிறது.

ஹாலிவுட்டுக்கே இந்த நிலை என்றால் தமிழ் திரையை நினைத்துப்பாருங்கள். நம்முடைய சிறந்த பழையப்படங்கள் என்னவாகப்போகின்றன? பெரும்பாலான படங்களின் நெகட்டிவே இல்லை என்கிறார்கள். எல்லாம் பாதுகாக்காமல் வீணாகிப்போய் விட்டன. மீதமிருக்கும் படங்களின் நெகட்டிவை வைத்துக் கொண்டு என்ன செய்யபோகிறோம். செல்லுலாயிட் பிரதி எடுக்க முடியாத நிலையில் அவற்றை ‘டிஜிட்டல் பிரதியாக’ மாற்றி வைக்க போகிறோமா? அடுத்த தலைமுறைக்கு அவை போய் சேர வேண்டாமா? அதிகமில்லாவிட்டாலும் சில நூறு சிறந்தப் படங்களாவது தேறும் அல்லவா?! அவை டிஜிட்டலாக மாற்றி வைக்கப்பட வேண்டியது அவசியமில்லையா?!

யோசிக்க..மனம் துயரத்தில் ஆழ்கிறது. டிஜிட்டல் சினிமா என்னும் புதியது பழையதை கழித்துவிட்டு புதியதை கொண்டு வருகிறது. ஃபிலிமுக்கு பதில் டிஜிட்டல்.. டிஜிட்டலின் சாத்தியங்கள் மகிழ்ச்சியும் கூடவே ஃபிலிமின் இழப்பு துயரத்தையும் கொடுக்கிறது. ஃபிலிமின் மேன்மையை உணர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இதே மனநிலையை அடைகிறார்கள். ஆனால் டிஜிட்டலின் வளர்ச்சியை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. இந்த கலப்படமான மனநிலையை என்னவென்று சொல்லுவது.? ஒருபுறம் காலத்தின் தேவை/அவசியம், மறுபுறம் பிரிவு கொடுக்கும் துயரம். தவிர்க்க முடியா நிலைதான்... ஆயினும் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ அவசியம்தான் அல்லவா..?!


Comments

Armstrong Vijay said…
நிச்சயம்.மாற்றம் ஒன்றே மாறாதது.
Armstrong Vijay said…
"புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் ஒவ்வொரு முறையும் ஒருவித பிணக்கோடேயே
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் இப்போது ‘Digital Cinema’ என்னும்
புதிய பூதம்.!"

உங்களுடைய இந்த கட்டுரையை படிக்கும்போது "THE
ARTIST" படம் பார்க்கும் பொது எனக்கு எற்பட்ட சோகமும் மகிழ்ச்சியும் கலந்த
ஒரு கலப்படமான மனநிலையையே....இப்போதும் உனர்கின்றேன் .........

சினிமா
சம்மந்தம் இல்லாத........என்னை போல் ஒரு சாதாரண பார்வையாளனாகவும் திரைப்பட
ரசிகனாகவும்.......இப்போது நடை பெரும் இந்த மாற்றம் மகிழ்ச்சியையே
தருகிறது ...... அதே சமயம் வருத்தம் உண்டாவதையும் தவிர்க்க முடியவில்லை
............

ஏனனில், வழக்கு எண் 18/9 மாதிரியான
படங்கள் இங்கே மக்கள் மத்தியில் கொண்டாட படவில்லை ( படம்மாடா இது....இங்க
வந்ததுக்கு OK OK போயிருக்கலாம்..........படம் முடிந்தவுடன் எனக்கு அருகில்
இருந்தவர்கள் பேசியது) ..........இங்கே மக்கள் மத்தியில் ரசனை மாறுபட
வேண்டும் .........இது என்றைக்கு மாறுகிறதோ அன்றைக்கே மொக்கை படம் ஒளிந்து
புது தொழில்நுட்பண்களுடன் சேர்ந்த ஒரு நல்ல படைப்பும் உருவாகும் .......

என்னை
பொறுத்தவரை இன்று உழகமே போற்றும் மிக எளிமையான ,எதார்த்தமான ஈரான் ,
கொரியன் படங்களை விட (பார்ப்பவன் என்ற முறையில்) இங்கே இருப்பவர்கலாகட்டும்
படங்களாகட்டும் ஏதற்கும் ககுறைந்தது இல்லை..........இந்த மாதிரியான
படங்களை அவர்கள் என்றைக்கோ படைத்தது விட்டார்கள்........(முள்ளும்மலரும்,
வீடு,ect ...)

நிச்சயம்.மாற்றம் ஒன்றே சிறந்தது..........அது மக்களின் கலை பார்வையும் .........ரசனையும் .......

(spelling mistake........இருந்தால் மன்னிக்கவும் .......)
Armstrong Vijay said…
நன்றி மகேஷ்வரபாண்டியன். நீங்கள் சொல்லுவது சரிதான். மக்களின் ரசனை மாற வேண்டும். மாறிவிடும் என்றுதான் நினைக்கிறேன். நம்பிக்கைதானே..!
Armstrong Vijay said…
உங்களுடைய இந்த blog ஐ Google லில் search பன்னும்போது பார்க்க நேர்ந்தது (நேற்று)...........

உங்களுடைய இந்த blog ஐ படிக்கும் பொது திடைபடம் மீதான என்னுடைய காதல்,பார்வை,தேடல்..........அதிகரித்து கொண்டே...போவதை உணர முடிகிறது.....

ஆகையால் 2010 இல் இருந்து உங்களுடைய அணைத்து கட்டுரையும் படித்தாகவேண்டும் என்று படிக்க ஆரம்பித்துள்ளேன் (2010 முழுதும் படித்தாயிற்று )......விரைவில் அனைத்தையும் படித்துவிட்டு.......இனிமேலும் தொடருவேன் என்ற முறையில் என்னை அப்டேட் செய்து
கொள்கிறேன்............

இனி வரும் நாட்களில் "FIVE C's -ஐ தெரிந்துக்கொள்ளுங்கள்"
கட்டுரையை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.............

Sydfield எழுதிய "screenplay-the-foundations-of-screenwriting" (இந்த புத்தகத்தில் இவர்
சொல்லியிருந்த பல விஷயங்கள் இன்றளவும் பல Hollywood படங்களாகட்டும் தமிழ் படங்களாகட்டும்....கடைபிடிக்கப்பட்டு வருகின்றன )இதனுடைய தமிழாக்கம் சுஜாதாவின் "திரைகதை எழுதுவது எப்படி" போல..........இதையும் நீங்கள் முழுதும் எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.....

Syd field எழுதிய "screenplay-the-foundations-of-screenwriting" link இங்கே ..........http://bienkichdao.files.wordpress.com/2011/06/screenplay-the-foundations-of-screenwriting-revised-updated-syd-field-2005.pdf

இதனுடைய தமிழக்கம்.....

http://karundhel.com/2011/08/blog-post_16.html
Armstrong Vijay said…
இங்கு இது பற்றி சிறப்பானதொரு கட்டுரை http://kolandha.com/2013/05/cellvsdigi.html

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

GIGALAPSE