• விஜய் ஆம்ஸ்ட்ராங், ஒளிப்பதிவாளர்

  • கற்றதும் பெற்றதும் . .  யாவருக்கும்!

Canon EOS 5D Mark III vs Red Mx Test

டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள் அணிவகுக்கின்றன. மற்றொரு புறம் ARRI Alex, Blackmagic Cinema Camera, Blackmagic Production Camera 4K, Blackmagic Pocket Cinema Camera, Gopro, Sony, Panasonic எனப் பல கேமராக்களும், நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன.

ஒவ்வொரு புதிய கேமாராக்கள் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் அதன் தரம் உயர்வதும், தொழில்நுட்பம் அதன் சாத்திய எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய வளர்ச்சி திரைப்பட ஆக்கத்திற்கான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் படைப்பு ரீதியாகவும் உதவுகின்றன. படைப்பாளுமைக்கும், தொழில்நுட்பத்திற்கும் நேரடியாக தொடர்பு இல்லையாயினும் ஒரு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி அத்துறை சார்ந்த கலைஞர்களின் படைப்பாளுமையைப் பாதிக்கத்தான் செய்கின்றது. புதிய தொழில்நுட்பங்களின் பரிச்சயம் ஒரு கலைஞனின் சிந்தனையையும் அவன் தன் படைப்பை அணுகும் விதத்தையும் மாற்றியமைக்கத்தான் செய்யும். மேலும் புதிய தொழில்நுட்பங்களின் பலத்தால், பல புதிய படைப்பாளிகள் உருவாகவும் முடிகிறது.

திரைத்துறையைப் பொருத்தமட்டும் ஒரு கலைஞன் தன் படைப்பை உருவாக்க இத்துறையில் பணிபுரிந்த முன் அனுபவம், அதன் வாயிலாக ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், அத்தொடர்புகளுக்கு ஊடாக கட்டமைத்த நம்பிக்கைகள் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய காரணிகள் பலமிழந்து போவதைக் காணமுடிகிறது. அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் பலத்தால் தன் படைப்பை உருவாக்கி விடுவதுமட்டுமல்லாமல், அதை வெற்றிகரமானதாகவும் மாற்றிக் காட்டுகிறார்கள் என்பதை அண்மைக்காலத் திரைப்படங்களிலிருந்து கண்டுணர்ந்திருக்கிறோம்.

இளைஞர்கள், அவர்களுக்கான தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அதன் பலத்தால் உருவாகும் புதிய அலை என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பம் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கிருக்கிறது என்பதை மனமுவந்தோ அல்லது மனகசப்போடோ நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதிய தலைமுறையின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகப்போகிறது. முந்தைய தலைமுறைக் கலைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட நாள் அனுபவம், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள், கட்டமைத்த நம்பிக்கைகள் எல்லாம் பயனற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப அறிவின் அவசியத்தைக் கண்கூடாக கண்டும், அதை மறுதலிப்பதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள தவறுவதும் பாதகமாகக்கூடும். இப்படி நான் சொல்லுவதால் ஒரு கலைஞனின் ‘படைப்பாளுமையை, திறமையை’ குறைத்து மதிப்பிடுவதாக, கேள்விக்குள்ளாக்குவதாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். திறமையும் அதன் வாயிலாக அமையப்பெற்ற படைப்பாளுமையும் மட்டும் இன்றைய நவீன உலகில் பிழைத்திருப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை என்பதை முன் அனுபவங்களிலிருந்து நாம் கண்டு கொள்ள வேண்டும். இதே தமிழ்த் திரையிசையுலகில் ஏ.ஆர்,ரகுமான் பிரவேசித்தபோதும் அதன் பின் நிகழ்ந்த மாற்றங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இசைத்துறையில் அவருக்கு பின்னால் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை நம்மில் பெரும்பாலானோர் அறிந்தே இருக்கிறோம். தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொண்ட திறமையான இளைஞர்கள்தான் இன்று வெற்றிகரமான இசை அமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு காலத்தில் தான் இன்றைய தமிழ்த் திரைப்படத்துறை இருக்கிறது. திரைப்படத்துறையின் எல்லா துறைகளிலும் தொழில்நுட்பத்தின் புரட்சி நடந்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவை பெரும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைப்போடுகின்றன.

ஒருபுறம் படச்சுருளை டெவலப் செய்யும் லேபுகள் (Lab) வேலையற்றுப்போகின்றன. வாரத்தில் எல்லா நாட்களும் இயங்கிக் கொண்டிருந்த லேபுகள் தற்போது சில நாட்கள் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காரணம் டிஜிட்டல் மயமும், படச்சுருள்களுக்கு வேலையற்றுப்போவதும். (படச்சுருள் தயாரிப்பு நிறுவனங்களின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது) மறுபுறம் 'Film Camera' -விலிருந்து ‘Digital Camera'-விற்கும் மாறும் யூனிட்டுகள் (படப்பிடிப்புக்கு தேவையான கேமரா, விளக்குகள் போன்ற கருவிகளை வாடகைக்கு தரும் நிறுவனங்களை யூனிட் என்று அழைப்போம்). வேறு வழி.? எது தேவைப்படுகிறதோ அதற்குதானே தயாராக இருக்க வேண்டும். மற்றொருபுறம் புதிது புதிதாக உருவாகும் ‘Post Production Unit'-கள். படத்தொகுப்பு, டப்பிங், பின்னணியிசை, இசைக் கோர்ப்பு, DI போன்ற வேலைகளுக்கு பல புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே போகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கின்றன. அதன் வகையில் இன்றைய தமிழ் சினிமா ஒரு புதிய தளத்தில் நடைபோடத் துவங்கிருக்கிறது.  சுற்றி இருக்கும் சூழலும் நாம் இயங்கும் அமைப்பும் நவீனமாகும் போது நாமும் அதனோடு சேர்ந்து மேம்பட வேண்டும். இல்லை எனில் நாம் தனித்து விடப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முந்தைய தலைமுறைக் கலைஞர்கள், படைப்பாளிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் படைப்பாளுமையை, கற்பனா சக்தியை மேம்படுத்திக் கொள்ளக் காட்டிய அதே ஈடுபாட்டை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குக் காட்ட வேண்டிய நேரமிது. அது அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுமட்டுமல்ல.. அவர்களின் படைப்பாளுமையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன்.    

---------


அண்மையில் 'Canon EOS 5D Mark III' கேமராவையும் 'Red MX' கேமராவையும் ‘Test' எடுத்தேன். விளக்குகள் எதையும் பயன்படுத்தவில்லை. Availabel Light-ஐ மட்டும் பயன்படுத்தி எடுத்தேன். இதுவே இக்கேமராக்களின் முழுத் தகுதி என்று சொல்லமுடியாது. தரம் என்பது படம்பிடிக்கப்படும் முறையையும் அதைக் கையாளும் கலைஞர்களையும் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கேமராக்களின் முழு தரத்தையும் சோதிக்கும் முறையாக இல்லாமல், இத்தொழில்நுட்பத்தின் அதிக பட்ச தாங்கும் சக்தியை (in extreme conditions) சோதிக்கும் ஒரு சோதனையாக மட்டுமே இதை அணுகினேன். அதனால் நடிகர்களை நிழலிலும், பின்புலங்களை வெயிலாகவும் (to blown out) வைத்து சோதித்துப்பார்த்தேன். பின்பு DI-யில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இரண்டு கேமராக்களில் விடியோக்களும் இருக்கின்றன. இவ்விடியோ இணையத்திற்காக அதன் ‘Size’ குறைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்திய கருவிகள்:

Camera:  Canon EOS 5D Mark III
Lens: CP2 + Canon L Series
Lights: None


Camera: Red MX
Lens: Carl Zeiss + HR Zoom
Lights: None

DI: Base Light

Video:


7 comments

Armstrong Vijay said...

Wow super info vijay

Armstrong Vijay said...

நன்றி ஜெயகாந்தன் பழனி சார்..

Armstrong Vijay said...

நன்றி விஷ்வா சார்..

naga raj said...

இரண்டு கேமராவிற்க்கு உள்ள் வித்தியாசம் பற்றி சரியாக சொல்ல வில்லையே. அந்த வீடியோவிலும் இருப்பது எந்த கேமராவின் ரஷ் என்று நீங்கள் வகைப் படுத்திகாட்டவில்லையே?

SATHISH MUTHUSAMY said...

five c of cinematography article inimel varatha sir?

SATHISH MUTHUSAMY said...

five c of cinematography article inimel varattha sir?

SATHISH MUTHUSAMY said...

five c of cinematography article inimel varattha sir?

About Me

My photo

Cinematographer from Tamil Film Industry..Chennai.Tamil Nadu. India

Search This Blog

Popular Content

About us

Amazon

123RF

Toggle menu