முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியும்:

டிஜிட்டல் புரட்சி முழுதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட இன்றைய காலகட்டத்தில், அதன் வளர்ச்சியால் திரைப்படத்துறை கண்டிருக்கும் மாற்றங்களையும் நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்த்திரைப்படங்களின் எண்ணிக்கையில், சிறுபடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன என்பதையும், பெருவெற்றி பெற்ற படங்களின் வரிசையில் சிறுபடங்கள் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பிடிப்பதையும் நாம் அறிவோம். புதிய தலைமுறை இயக்குனர்களின் வரவும், அவர்களின் வெற்றியும் டிஜிட்டலின் வளர்ச்சியால் விளைந்த பயன்களில் ஒன்று. அவர்களில் பலர் இளைஞர்கள். பலரும் பாரம்பரியமான திரைப்பட அனுபவமில்லாதவர்கள். ஆனால் எந்தக்குறையுமில்லாத வெற்றிப்படைப்புகளை அவர்கள் தந்தது ஒரு புதிய சிக்கலுக்கு வழிவகுத்திருக்கிறது.

மூத்த அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கான வாய்ப்பை இவர்களின் வெற்றி தடுக்கிறது அல்லது அவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க ஏதுவாக இருக்கிறது என்பது அந்தச் சிக்கல் அல்லது குற்றச்சாட்டு!

அதாவது, இன்று கதை கேட்கும் தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ, தன்னிடம் வரும் படைப்பாளியின் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்களா? குறும்படங்களை இயக்கி இருக்கிறார்களா? டிஜிடலின் சாத்தியங்களை உணர்ந்தவர்களா? என்பது போன்ற புதிய தகுதிகளின் அடிப்படையில் உடன் பணிபுரிய சம்மதிப்பதும் நடக்கிறது. இதனால் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பினும், குறும்படம் இயக்காததனாலும், டிஜிட்டலின் சாத்தியத்தை அறியாதவர்களாக இருப்பதாலும் தாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் குற்றச்சாட்டு இன்று பெரும்பாலான மூத்த கலைஞர்களிடையே இருக்கிறது.
அது ஒருவகையில் உண்மையும் கூடத்தான்.

இளைஞர்கள். இப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை மாணவர்கள். கணினி மயமான உலகத்தில் பயின்றவர்கள். இவர்களால் சுலபமாக டிஜிட்டலின் வளர்ச்சியை உள் வாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் விஷுவல் கம்யூனிகேஷன், டி.எஃப்.டி போன்ற படிப்பும், டிவிடி, இணையம், டோரண்ட் போன்ற வசதிகளும் அவர்களின் திரைப்பட ஆர்வத்திற்கு உரமாக அல்லது வடிகாலாக இருக்கின்றன. அதன் அடிப்படையில் திரைப்படத்துறை மீது ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன், மிகச் சுலபமாக உள்ளே கால் வைத்துவிட முடிகிறது. மேலும் அவர்களின் ஆங்கில அறிவும், கணினி அறிவும், அதைக் கையாளும் திறமையும் அவர்களுக்கு துணைபுரிகிறது. ஆனால் மூத்த கலைஞர்களால் அவ்வளவு சுலபமாக டிஜிட்டலின் வளர்ச்சியை, வசதியை அணுக முடியவில்லை. காரணம், அவர்களின் படிப்பு. கணினியை புத்தகத்தில் மட்டுமே பார்த்த அல்லது அப்படி ஒன்று வரப்போகிறது என்ற தகவலை மட்டுமே கடந்து வந்த தலைமுறை அது. சூழல் முழுவதும் கணினி மயமாகிவிட்ட இன்றை நாளிலும் கூட, கணினியை தொட்டு பார்க்காத அல்லது பயன்படுத்தாத பெரும் கூட்டமொன்று இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. சிலருக்கு அறியாமை. சிலருக்கு இயலாமை. சிலருக்கு ஏழ்மை. கணினியையே இன்னும் எட்டமுடியாத இவர்கள், டிஜிட்டலின் சாத்தியங்களை எப்படி அறிவர்.?

ஒரு படைப்பாளிக்கு அல்லது கலைஞனுக்கு டிஜிட்டலின் வளர்ச்சி அல்லது டிஜிட்டலைப்பற்றிய அறிவு அவசியமா? படைப்பாற்றலுக்கும், தொழில்நுட்ப அறிவுக்குமான உறவு பற்றிய கேள்வி இங்கு மீண்டும் எழுகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறியாதது ஒரு படைப்பாளிக்கு ஊறு விளைவிக்குமா? திரைப்படம் என்னும் கலையை கற்றுத் தேர்ந்தவன், இன்று வந்த தொழில்நுட்ப வெள்ளத்தால் காணாமல் போவானா? போன்ற கேள்விகள் தோன்றுகின்றனஆனால், கலைஞன் என்பவன் தொழில்நுட்பத்தின் தயவால் வாழ்பவனல்லன். ரசனையின் பாற்பட்டு, கற்பனா சக்தியின் அடியொட்டி விளையும் படைப்பாற்றலால் மேன்மையுறுபவன் அவன். ஆயினும், தன் படைப்பாற்றலை கடைவிரிக்க தொழில்நுட்பத்தின் துணை நாட வேண்டிய தேவை அவனுக்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது. அது எந்த கலையாகட்டும் அதில் தொழில்நுட்பத்தின் இழைகள் இல்லாமலில்லை. ஓவியனாகட்டும், இசைக் கலைஞனாகட்டும், எழுத்தாளனாகட்டும் எல்லா படைப்பாளியும் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே தங்கள் படைப்புகளை உருவாக்கிட, பயனாளிகளிடம் கொண்டு சேர்த்திட முடிகிறது.

உண்மையில், பல ஆண்டுகள் அனுபவத்தின் வாயிலாக திரைப்பட ஆக்கத்தின் நுணுக்கங்களை அல்லது நடைமுறைகளை அறிந்துக்கொள்ளும் ஒருவன், இன்று வந்த டிஜிட்டலின் வளர்ச்சியால் விளையும் நற்பயன்களை கற்றுக்கொள்ளுவது மிக எளிதானதுதான். ஆர்வம் மட்டுமே அடிப்படைத்தேவை. டிஜிட்டலை, விரோதமாகக் கருதாமல், அது காலத்தின் தவிர்க்க முடியா மாற்றம் என்பதை முதலில் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். மூத்த கலைஞர்கள் டிஜிட்டலின் வளர்ச்சியை, வசதியை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பது போலவே, திரைத்துறையினரும் ஒன்றை உணரவேண்டும். தொழில்நுட்பங்கள் என்பவை ஒரு வகையான வசதி. செய்யும் செயலை இலகுவாக செய்ய, விரைவாக செய்ய, மலிவாக செய்ய, நேர்த்தியாக செய்ய பயன்படும் நுட்பங்கள். அவ்வளவுதான். அதை அறியாமலிருப்பது பெரும் குற்றமொன்றுமில்லை. தெரிந்துகொள்ளலாம் அல்லது தெரிந்தவர்களின் உதவியோடு பணி செய்து விட்டு போய்விடலாம்.

இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களை தங்களின் உதவியாளர்களாக வைத்துக்கொண்டுதான் திரைப்படங்களை எடுக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஒருவகையில் அது சரியும் கூட. ஆனால், இங்கே வேறொரு சிக்கல் உண்டாகிறது. எல்லோருக்கும் தெரியும், திரைத்துறைக்குள் வருவதற்கே எத்தனை மெனக்கெடல் வேண்டுமென. எத்தனை ஆண்டுகள்? அத்துணையும் தாண்டி அனுபவம் பெற, படும் இன்னல்கள் சொல்லில் அடங்கா என்பது திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு புரியும். குறைந்த பட்சம் இத்துறை சார்ந்தவர்களை நண்பர்களாக பெற்றவர்களுக்கு தெரியும். அப்படியான அனுபவசாலிகளை உதவியாளர்களாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கான நிஜமான வாய்ப்பை மறுத்து, உணவிலிட்ட கருவேப்பிலையாய் தூக்கி எறிவது சொல்லொணா துயரத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. குறைந்தது பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளாக, இத்துறையில் சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு போராடும் அவர்களை ஏமாற்றுவதும் நிராகரிப்பதும் பெரும் துயரம் தரக்கூடியவை.

இது ஒருபுறமிருக்க, டிஜிடலின் மோசமான பின்விளைவாக இன்னொன்றையும் காணமுடியும்.

குறைந்த செலவில் திரைப்படம் எடுத்துவிட முடியும் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தால்.. அது அனேக தரம் குறைந்த படைப்புகள் உருவாகவே வழிவகுக்கும். எத்துறையானாலும் அனுபவம் என்பது எத்தகைய இன்றியமையாதது. புதியவர்களால் தரமான படங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை எண்ணிக்கையில் மிகக் குறைவானவை. கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த புதியவர்களின், படங்களின் தரத்தைப்பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கேள்விக்குள்ளாகின்றன. அதன் அடிப்படையிலேயே அவை மக்களால் நிராகரிப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் உணரலாம். அனுபவமின்மையால் விளைந்த குறை படைப்புகளால் ஒட்டுமொத்த திரைத்துறையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. டிஜிட்டலின் விளைவால் குறைந்த செலவில் திரைப்படங்கள் எடுத்துவிட முடிகிறது என்பது மட்டுமே திரைப்படங்களின் எண்ணிகை அதிகரிக்க காரணமாவது ஒருவிதத்தில் குற்றம் அல்லவா? விலை குறைந்தது என்பதனாலேயே தரமற்றதை அங்கரிக்க முடியுமா? இதன் தொடர்ச்சியாக நஷ்டமிகுந்த ஒரு துறையாக மாறிவிடும் அபாயமுமுண்டு.

தமிழில்வழக்கு எண் 18/9’, ‘மெரினா’, ‘கோலிசோடாபோன்று விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய படங்கள் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிபெற்ற இந்தச் சில திரைப்படங்களுக்கு பின்னே இருந்த கலைஞர்களை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குனர் பாண்டியராஜ் போன்றவர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் யாரும் பொருட்படுத்தவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதேப்போல கடந்த ஆண்டுகளில் வெற்றிப்பெற்ற இளம் இயக்குனர்களான  ‘பீட்சாகார்த்திக் சுப்புராஜ்,  ‘சூதுகவ்வும்நளன் குமாரசாமி, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்பாலாஜி தரணிதரன் போன்றோர்களின் அனுபவத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கார்த்திக்கும், நளனும் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக குறைந்தது பத்து குறும்படங்களாவது இயக்கி இருப்பார்கள். பாலாஜி, திரைப்படக்கல்லூரி மாணவர். இத்திரைப்படத்திற்கு முன்பாகவே படங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர். அப்படங்களின் வாயிலாக அவர்கள் பெற்ற அனுபவமும் முதிர்ச்சியும் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை எல்லோரும் சௌகரியமாக மறந்துவிட்டார்கள்.

அதை விடுத்து, கேனான் 5D போன்ற விலைகுறைந்த காமிராக்கள் தரும் வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு, டிஜிடல் தரும் நம்பிக்கையில், இங்கே, துவங்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா? மெரீனா, வழக்கு எண் போன்ற படங்களை அடியொற்றி, பல படங்கள் இன்று 5D-இல் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் துவங்கப்பட்டன, துவங்கப்படுகின்றன. அவற்றின் இன்றைய நிலை என்ன?

வெற்றி பெறுவதிருக்கட்டும், அப்படி எடுக்கப்பட்ட படங்கள் வெளி வருவதே பெரும்பாட்டை எதிர்கொள்ளவேண்டும் இன்று. முழுமையாக எடுக்கப்பட்டு வெளிவர முடியாமல் நிற்கும் படங்கள் எத்தனை எத்தனை? பாதி முடிக்கப்பட்டு தொடர முடியாமல் பணத்தை முடக்கிப் போட்ட படங்களின் எண்ணிகை மட்டுமே நூறைத் தாண்டுகின்றன ஒவ்வொரு ஆண்டும். ஆக, ஒருபுறம் இளம் படைப்பாளிகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து, தங்கள் தகுதி அறிந்து செயல்படவேண்டும். மற்றொருபுறம் மூத்த கலைஞர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிப்பிடிப்பதும், தகுதி கொண்டவர்கள், தரமான படைப்புகளை உருவாக்குவதும் அவசியம். அத்தகைய சூழலை திரைத்துறை சார்ந்த படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்துதான் செய்ய முடியும்.

தான் இயங்கும் துறையை ஒரு படியேனும் முன்னோக்கி நகர்த்திய கலைஞனைத்தான் காலம் நினைவில் கொள்ளும். அதற்குத் தொழில்நுட்பங்கள் துணையாகயிருந்திருக்கின்றன (கவனிக்க: துணையாக!). சிறந்த கலைஞர்களுக்கு தொழில்நுட்பங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு அத்தகைய கலைஞர்கள் பக்கபலமாகயிருக்க வேண்டும். ஒரு தொழில்நுட்பாளனும், ஒரு கலைஞனும் இணைந்து நடை போட வேண்டும். கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் இருவரும் தங்களின் தகுதி கொடுக்கும் கர்வத்தில் தனித்து இயங்க முயல்வது பொருளற்ற, பயனற்ற முடிவையே தரும். படைப்பாக்கமும், தொழில்நுட்பமும் ஒன்றின் ஊடாக ஒன்றை மேம்படுத்திக் கொள்ளும். அதை அறிந்து இயங்குவதே நமக்கு நன்மை பயக்கும்.

இறுதியாக.. 

டிஜிட்டலின் வளர்ச்சி, திரைப்படத்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தவல்லதேயன்றி, அதனால், ஒட்டுமொத்த சினிமாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. இன்னும், அது படைப்பாளிகளின் ஆளுமையில்தான் இருக்கிறது. எப்போதும் அப்படித்தான் இருக்கும், இருக்கமுடியும்! அற்புதமான ஒரு கணத்தை, ஒரு கலையை, ஒரு அனுபவத்தை, ஒரு வாழ்வை, திரையில் நிகழ்த்திக் காட்ட படைப்பாளி ஒருவன் தேவைப்படுகிறான். கேமரா, ஒளிப்பதிவு, ஒளியமைப்பு, படத்தொகுப்பு, பிற்தயாரிப்பு பணிகள் போன்றவற்றில் இருக்கும் சிரமத்தை குறைக்கவே டிஜிட்டலின் புரட்சி நிகழ்கிறது. இது சினிமா என்னும் கலையின் மீதான படையெடுப்பல்ல.


டிஜிட்டலின் வளர்ச்சியை, சினிமாவின் வளர்ச்சியாகத்தான் உலகம் பார்க்கிறது. கலைஞனுக்கும் தொழில்நுட்பாளனுக்கு இடையே சிக்கி அல்லலுற்ற சினிமா என்னும் கலையை டிஜிட்டல் புரட்சி மீட்டெடுத்திருக்கிறது என்றொரு பார்வையும் வல்லுனர்கள், சினிமா ஆர்வலர்களிடையே உள்ளது. மாய உலகில் சிக்குண்டிருந்த சினிமா இன்று சாமானியனின் கைகளுக்கு வந்திருக்கிறது என்பது அவர்கள் கருத்து. பிரபல படத்தொகுப்பாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான திரு. பி.லெனின் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். “தொழில்நுட்பம் சினிமாவை, சாமானியனின் கையில் கொண்டு போய் சேர்க்கும். அவனே படமெடுத்து, அவன் ஊரிலேயே வெளியிடப்போகிறான். அவனுக்கான சினிமாவை அவனே உருவாக்கிக்கொள்ளும் காலம் விரைவில் வரும்என்று. அது நிகழத்தான் போகிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நூற்றாண்டு காலமாக குறிப்பிட்ட ஒரு கூட்டத்திடம் மட்டுமே இருந்த சினிமா என்னும் மாபெரும் கலை, டிஜிடலின் உதவியோடு இன்று அதன் எல்லைகளை உடைத்துக்கொண்டு பெரும் வெள்ளமாக பாய ஆயுத்தமாகிறது. காலம் வழங்கும் அத்தகைய வாய்ப்பை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்

* (காட்சிப்பிழை இதழில் வெளியானக் கட்டுரை)

கருத்துகள்

  1. சினிமா ஆசையில் இன்னமும் சென்னைக்கு படையெடுக்கும் இளைஞர்கள் தவற விடகூடாத பதிவு!

    பதிலளிநீக்கு
  2. ஒரு குறும்படத்தை காமிராவுக்கு முன்பு நடிக்கும் நடிகர்கள் தவிர வேறு யார் துணையின்றியும் எடுத்து எடிட்டி இசை சேர்த்து வெளியிட்டு பார்க்கையில் தெரிந்தது . . . டிஜிட்டல் தொழில்நுட்பம் அசாத்தியமானது ! பழைய நுட்பத்தை விட மிகவும் நுட்பமானது ! ஆனால் நல்ல படத்தை 2கே வோ 4 கேவோ தந்துவிடவும் முடியாது என்ற “கோல்டன் மீன்” தத்துவமே ! அருமையான வளைப்பூ விஜய் ! சியர்ஸ் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு