முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 2)

முந்தைய கட்டுரையில்  ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

Jason and the Argonauts — Stop Motion:

திரைப்படம் என்பதே தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும் ஃப்ரேம்களால் (Frames) ஆனது என்பதையும், அப்படிப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஃப்ரேமிலும், பிம்பம் சிறிது நகர்ந்திருக்கும் என்பதையும், அதை நாம் ஒரே சீராக ஓட்டிப்பார்ப்பதன் மூலம் அதில் உறைந்திருக்கும் நகர்வை உணர்கிறோம் என்பதையும் ஏற்கனவே நாம் அறிவோம். இந்த ஸ்டாப் மோஷன் என்பதும் ஏறக்குறைய அதேதான். நகரும் தன்மையற்ற பொருட்களை நாமாக நகர்த்தி வைப்பதன் மூலம், அப்பொருள் நகர்வதாக ஒரு பாவனையை உருவாக்கலாம். உதாரணத்திற்கு, காட்சியில் ஒரு பொம்மை இருப்பதாக கொள்வோம். அந்த பொம்மைக்குள் ஒரு பேய் புகுந்துகொண்டு அதை நகர்த்துவதாக காட்ட வேண்டுமென்றால், என்ன செய்வது? அங்கேதான் இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பம் வருகிறது. ஒவ்வொரு ஃப்ரேமாக படம் பிடிப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமிலும் அந்த பொம்மையை கொஞ்சம் நகர்த்தி வைப்பார்கள். இப்படி நமக்கு தேவையான அளவிற்கு அந்த பொம்மையை நகர்த்தி ஒவ்வொரு ஃபிரேமாக படம் பிடித்து, அதை தொடர்ச்சியாக ஓட்டிப்பார்க்க, அந்த பொம்மை நகர்வதை போன்ற ஒரு காட்சியை நாம் காண முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி காட்சியில் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமல்ல, மொத்த காட்சியையும் இப்படி படம் பிடிப்பதுண்டு. நகரா பொருட்களை நகர்த்தியும், அல்லது மனிதர்களைப் போன்ற உருவங்களை பொம்மைகளாக வடித்தும் காட்சிகளை படம் பிடிப்பர். இத்தொழில்நுட்பம் 1890-களிலேயே பயன்படுத்தப்பட்டு விட்டது. இன்றைய அனிமேஷன் தொழில்நுட்பத்திற்கு முன்னோடி இது. 1933-இல் வெளியான ’ King Kong’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் இத்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவைதான். 

1963 -இல் வெளியான ‘Jason and the Argonauts’ திரைப்படத்தில், இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படத்தில் இடம் பெற்ற எலும்புக்கூடுகள் வாட்போரிடும் அற்புதமான காட்சி ஒன்றை உலகமே வாய் மூடாது பார்த்தது. இன்று வரையும் அக்காட்சி பிரமிக்கத் தக்கதுதான். 










---------------------------------------------------------

The Ten Commandments — Water Effects:


தொழில்நுட்பம் அவ்வளவாக வளர்ந்திராத அந்நாளிலேயே, இயக்குனர்  ‘Cecil B. DeMille’ அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். 1956 – இல் வெளியான  ‘The Ten Commandments’  திரைப்படத்தில், பைபிளின் ஒரு முக்கிய காட்சியான செங்கடல் (Red Sea) இரண்டாகப் பிரிந்து வழி விட்ட காட்சியை, பல நுணுக்கங்களை ஒன்றிணைத்துப் பயன்படுத்தி படம்பிடித்தார். அந்நாளில் மிக பரபரப்பாக பேசப்பட்ட காட்சி அது. Matte Paintings, Rear Projection, Pyrotechnics, Miniatures போன்ற தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து அக்காட்சியை, நம்பத் தகுந்த விதத்தில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். 3,00,000 கேலன்கள் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. 32 அடி உயர அணையும் பயன்படுத்தப்பட்டது. இரண்டு பக்கமும் இருந்து தண்ணீரைக் கொட்டி, அது உருண்டோடி வந்து ஒன்று சேருவதை படம் பிடித்து, பின்பு அந்த படச்சுருளை பின்னோக்கி (backward) ஓட்டி, அக்காட்சியை சாத்தியமாக்கினார். அன்றைய நாளில் மிக அதிக செலவு பிடித்த ‘special effect’ காட்சியாக அது வரலாற்றில் இடம் பிடித்தது.  












-------------------------------------------------------------

The Parent Trap — Doubling (split-screen technology):


1961 -இல், டிஸ்னி தயாரிப்பில் வெளியான ‘The Parent Trap’ திரைப்படம் இந்த ‘Special Effects’ துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அக்கதையில் பங்கு பெற்ற இரு கதாப்பாத்திரங்கள், இரட்டையர்களாக இருந்தனர். அதாவது ஒரே நடிகையே இரு பாத்திரங்களையும் ஏற்று நடித்தார். நம்ம ஊரில் இரண்டு சிவாஜி, இரண்டு கமல் பார்த்திருப்பவர்கள்தானே நாம். அதேதான். இதை திரையில் எப்படி நிகழ்த்தி காட்டினார்கள்? ரொம்ப சுலபம். முதலில் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரம் காட்சியின் வலது புறம் இருந்தார் என்றால், அக்காட்சியின் பரப்பளவை இரு பாகமாக பிரித்து. வலதுபுறம் ஒருவர், இடது புறம் மற்றொருவர், என்ற விதத்தில் கணக்கிட்டு, கேமரா லென்சில் இடது புறத்தை கறுப்பு அட்டையால் மூடி விடுவர். அப்போதுதானே இடதுபுறம் இருக்கும் படச்சுருளின் பாகத்தில் ஒளி படாமலிருக்கும். ஒளி பட்டால்தானே காட்சி பதிவாகும். இது புரியும் என்று நினைக்கிறேன். சரி, இப்போது வலதுபுறம் நின்ற கதாப்பாத்திரம் நடித்தாயிற்று. பின்பு அவர் இடதுபுறம் வந்து அடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பார். இப்போது கேமராவில், வலதுபுறம் மறைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே வலதுபுற கதாப்பாத்திரத்தை பதிவு செய்த அதே படச்சுருளை பின்நோக்கி சுற்றி, மீண்டும் அதே படச்சுருளில் இடதுபுறம் நின்றவரை படம் பிடிப்பர். இப்போது இரண்டு நபர்களும் ஒரே படச்சுருளில் பதிவாகியிருப்பர் என்பதும் உங்ளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொழில்நுட்பத்தை ‘split-screen technology’ என்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்பு Blue Matte / Green Matte தொழில்நுட்பம் வந்து இதை காலாவதியாக்கியது தனி கதை. இதைப்பற்றி தனி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. 











-------------------------------------------------------------


Star Wars — Motion Control:

 ‘Star Wars’ படத்தை யாரும் கேள்விப்படாமல் இருக்க முடியாது. திரைப்பட வரலாற்றிலேயே மிக முக்கியமான படம் அது. 1977-இல் அதன் முதல் பாகம் வெளியானபோது பல காரணங்களால், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம். அதில் முக்கியமானது, அப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம். வான்வெளியும், வேற்று கிரகங்களும் என பின்னப்பட்ட அக்கதையை திரையில் நிகழ்த்திக்காட்ட பல தொழில்நுட்பங்கள் கைகொடுத்தன. இப்படத்தைப்பற்றியும், அது உருவாக்கப்பட்ட கதையையும் தனியாகவே ஒரு புத்தகம் எழுதலாம். அப்படத்திற்காகவே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் என ஒரு பட்டியலையே போடலாம். ஆயினும் அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பமாக ‘Motion Control’ தொழில்நுட்பமிருக்கிறது. வழக்கமாக கேமராவை நகர்த்த, Crane, Track and Trally, Dolly போன்ற துணை உபகரணங்களை பயன்படுத்துவர். இக்கருவிகளை மனிதர்கள்தான் இயக்க வேண்டியதிருக்கும். கிரேனோ, டிராலியோ அதை இயக்க, அதாவது காட்சிக்கு தக்கபடி நகர்த்த ஒரு வல்லுநர் இருப்பார். இந்த மோஷன் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தில், மனிதர்களுக்கு பதிலாக, அந்த டிராலியை, கிரேனை தானியங்கி கருவிகள் இயக்கும். கணினியோடு இணைக்கப்பட்ட ஒரு கருவி இந்த மொத்த வேலையும் செய்யும். அதாவது கேமராவை நகர்த்தும் உயர்த்தும், காட்சிக்கு தக்கவாறு கேமராவைத் திருப்பும் (Tilt/Pan). இதில் என்ன பயன் என்றால், ஒரே விதமான கேமரா நகர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். சிறு மாற்றம் கூட இல்லாமல் பல முறை அதே நேர்த்தியோடு கேமராவை நகர்த்த முடியும். மனிதர்களால் செய்யமுடியாத நுண்ணிய நகர்வை, இயக்கத்தை இத்தொழில்நுட்பத்தால் செயல்படுத்த முடியும். இதுவே ‘motion-control system’ எனப்படுகிறது. தமிழில் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் இதை முதன் முறையாக உபயோகித்தார்கள். ‘கஜினி’, ’எந்திரன்’ போன்ற பல படங்களில் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரே காட்சியில் இரட்டை வேடம் போடும் நடிகர்கள் இருக்கும்போது இக்கருவியின் பயன் அதிகமாகியிருக்கிறது. இரண்டு கதாப்பாத்திரங்களுக்காக இருமுறை அக்காட்சியை பதிவு செய்ய வேண்டியதிருப்பதால், முன்பெல்லாம் அக்காட்சியை படம் பிடிக்கும்போது கேமராவை நகர்த்தாமல் இருப்பார்கள். அப்போதுதான் காட்சி சரியாக வரும். காரணம், கேமராவை நகர்த்தினால், இருமுறை அதே விதமான கேமரா நகர்வை கொண்டு வர முடியாதில்லையா.? ஆனால் ‘motion-control system’ வந்த பிறகு, அந்தக் கவலை இல்லை. இரண்டு முறை, மூன்று முறை அல்ல. எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே விதமான நகர்வை ஏற்படுத்த முடிவதுதான் இதன் சிறப்பு. கஜினியின் இரண்டு வில்லன்களோடு சூர்யா மோதும் காட்சியில் இதை பயன்படுத்தி இருப்பார்கள். எந்திரனில் பல ரஜினிகள் வரும் காட்சியில் இதை பயன்படுத்தினார்கள். இந்த motion-control system என்பது ஒருவகையான தொழில்நுட்பம். குறிப்பிட்ட ஒரு கருவியை இது குறிப்பதில்லை. தேவைக்கு தகுந்த மாதிரி பல வகையான கருவிகள் ஒன்றிணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.

ஸ்டார் வார்ஸ் படத்தில் முதல் முறையாக இந்நுட்பம் பயன்படுத்தப்பட்டு பல அற்புதமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. விஷுவல் எஃபெட்ஸ் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற படம் இது. இப்படத்தில் பணிபுரிந்த விஷுவல் எஃபெட்ஸ் தொழில்நுட்ப வல்லூநர் ‘John Dykstra’ -வின்  பெயராலேயே, இதில் பயன்படுத்தப்பட்ட கருவி ‘Dykstraflex motion-control system’ என்று அழைப்பட்டது

APOGEE effects specialists David Robin and Don Dow work on this model for Battlestar Galactica. The Dykstraflex can be seen in the foreground.


The Dykstraflex camera









-------------------------------------------------------------


An American Werewolf in London — Makeup:

பொதுவாக திகில்(Horror) வகைப்படங்களில் ஒப்பனை(Makeup) கலைஞர்களின் பங்கு மிக அதிகமாகயிருக்கும். பேய், கொடூர மிருகம் போன்ற உருவங்களை அவர்கள் ஒப்பனை மூலமாக கொண்டு வருவார்கள். காலம் காலமாக இவ்வகை யுத்தி பின்பற்றப்பட்டு வருகிறது என்றாலும் 1981-இல் வெளியான  ‘An American Werewolf in London’ என்னும் திரைப்படம், இக்கலையின் அடுத்தக்கட்டத்தை அடைந்தது. ஒப்பனைக்கென்று முதன் முறையாக ஆஸ்கர் (Academy Award for Best Makeup) விருது பெற்றபடம் இது. ஒப்பனைக்கென்றே பிரத்தியேகமான ரசாயனக் கலவையையும், இயந்திர உறுப்புகளையும்(Prosthetics and robotic limbs) இப்படத்தில் பயன்படுத்தினர். நம்ம ஊரில் கமல்ஹாசனால் புகழடைந்த ஒப்பனை நுட்பம் அது. இந்தியன், தசாவதாரம் போன்ற படங்களில் அவர் இதை பயன்படுத்தியதை நாம் அறிவோம். விக்ரம் ‘ஐ’ படத்தில் இத்தகைய ஒப்பனையைத்தான் பயன்படுத்தினார். இன்றைய நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் இவ்வகை ஒப்பனை நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகை ஒப்பனை யுத்தியைப் பயன்படுத்தி வெறும் திகில் படங்கள் மட்டுமல்ல, பல அற்புதமான கதாப்பாத்திரங்களை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள். 

































-------------------------------------------------------------


Young Sherlock Holmes — CGI:

ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் (Star Wars, Star Trek) போன்ற படங்களில் CGI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தபோதும், முதன் முறையாக ஒரு முழுமையான கதாப்பாத்திரத்தை CGI -இல் வடிவமைத்தது (first realistic yet fully CGI-animated character) 1985-இல் வெளியான ‘Young Sherlock Holmes’  என்னும் படத்தில்தான். இப்படம் புகழ்பெற்ற துப்பறிவாளர் ஷெர்லக் ஹோம்ஸின் சாகசத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் இடம் பெற்ற "stained-glass man” என்ற கதாப்பாத்திரம் முழுமையாக CGI பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. படத்தில் முப்பது நொடி வரும் இக்காட்சியை உருவாக்க ஆறு மாதம் எடுத்ததாம். லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேரடியாக படச்சுருளில் அக்கதாப்பாத்திரத்தை வரைந்திருக்கிறார்கள் (first CG character to be scanned and painted directly onto film using a laser). அப்போதைய லூக்காஸ் ஃபிலிம்ஸின் முதன்மை விஷூவல் எஃபெட்க்ஸ் அதிகாரி ஜான் லேஸிடர்( Lucasfilm's John Lasseter) இக்காட்சியை வடிவமைத்திருக்கிறார். கணினியின் துணைகொண்டு முழுமையாக மொத்த உருவத்தையும் வடிவமைக்கும் இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னோடி இந்தப்படமாகும். 




-------------------------------------------------------------


Jurassic Park — Movie Monsters:

பொதுவாக ஹாலிவுட் இயக்குனர்களுக்கு ஒரு பழக்கம் அல்லது ஆசை இருந்துக்கொண்டே இருக்கிறது. அது பிரமாண்டமான ராட்சச உருவங்களை தன் கதையில் கதாப்பாத்திரங்களாக உலவ விடுவது. அல்லது அப்படியான ராட்சச உருவங்களின் கதையை திரைப்படமாக எடுப்பது. 1912-இல் இயக்குனர் ஜார்ஜ் மில்லிஸ் (George Melies) முதன் முறையாக அப்படியான ஒரு அரக்கனை வடிவமைத்தார். தன்னுடைய ‘Conquest of the Pole’ என்னும் படத்தில், பனி மலையில் ஒரு அரக்கன், மனிதர்களை விழுங்குவதாக காட்சிப்படுத்தி இருந்தார். அதை திரையில் காட்சிப்படுத்த, பல நுணுக்கங்களை அவர் பின்பற்றியிருந்தார். பிளாஸ்டர், காகிதக்கூழ் (plaster, wood and paper-mache) போன்றவற்றை உபயோகித்து அவ்வரக்கனின் தோற்றத்தையும், அதை இயக்க பல இயந்திரவியல் கருவிகளையும், மனித ஆற்றலையும் (pulleys, winches and capstans) பயன்படுத்திக்கொண்டார். இன்று ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும்  ‘Animatronics’ என்னும் துறைக்கு முன்னோடி இது. பிறகு 1925-இல் வெளியான ‘The Lost World’ என்னும் படத்திலும் மிக பிரம்மாண்டமான டைனோசர் மிருகங்கள் வடிவமைக்கப்பட்டன. 1993-இல் வெளியாகி உலகையே உலுக்கிய, இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘Jurassic Park’ படத்திற்கு முன்னோடி இந்தப்படம். ஜுராசிக் பார்க் படத்தின் இடம்பெற்ற ராட்சச டைனோசர்கள் படம் பார்த்த அத்தனைபேரையும் மிரள வைத்தது. இன்று ஹாலிவுட் படங்களில் அதகளப்படுத்தும் அத்தனை மெகா உருவங்களுக்கும் காரணகர்த்தா இப்படம்தான். இப்படத்தின் மாபெரும் வெற்றி ஹாலிவுட்டில் ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கு மிகப்பலமாக அடிக்கல் நாட்டியது. அதுதான் ‘Animatronics’ என்னும் துறை.

மிருகங்களையோ, வேற்று கிரக வாசிகளையோ, அல்லது எந்திரன்களையோ திரையில் காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. உருவங்களை இயற்பியல், இயந்திரவியல், மின்னணுவியல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைப்பது இத்துறையின் சிறப்பு. இயந்திரங்களை வடிவமைப்பது போன்று தமக்கு தேவையான உருவங்களை முதலில் வடிவமைக்கிறார்கள். பின்பு அதை இயக்குவதற்கான மோட்டார், மின்னணு மற்றும் மின்சாரக் பொறியியல் (electronics and electrical) தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட இயந்திரங்களின் மேற்புற வடிவமைப்பை பிளாஸ்டர் ஆப் பேரிஸ், தோல், பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி உறுதி/இறுதி செய்கிறார்கள். பின்பு அவ்வுருவங்களை இயக்கி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அப்படிப் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளோடு கணினி துணைகொண்டு உருவாக்கப்பட்ட காட்சிகளோடு இணைத்து அக்காட்சியின் நம்பகத் தன்மையையும், தரத்தையும் உயர்த்துகிறார்கள்.

அதாவது, ஒரு விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சியை உருவாக்க, இயந்திரங்கள், மின்னணு மற்றும் மின்சாரக் பொறியியல், CGI போன்ற பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் தொழில்நுட்ப பிரிவு இது.

நமது ஊரில், இத்தனை வளர்ந்த பிறகும், இப்படியான ஒரு பிரிவு கிடையவே கிடையாது. தமிழில், எந்திரன் படத்திற்கு இப்பிரிவை பயன்படுத்தினர். அதற்கும் ஹாலிவுட்டிலிருந்துதான் வந்தார்கள். CG, Miniature, Matte Painting போன்ற மற்ற நுட்பங்களையாவது நம்மூரில் அவ்வப்போது முயன்றிருக்கிறார்கள். ஆனால், இந்த அனிமேட்ரானிஸ் நுட்பத்தை இன்னும் யாரும் முயலவே இல்லை. அப்படி ஒரு பிரிவை தமிழ் திரையுலகம் உருவாக்குமா என்பது இப்போதைக்கு சந்தேகம்தான்.

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் இடம் பெற்ற 14 நிமிட டைனோசர் காட்சியில் நான்கு நிமிடங்கள் மட்டுமே கணினியில் உருவாக்கப்பட்டது, மீதம் இருப்பவை அனைத்தும் இந்த அனிமேட்ரானிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் எடுத்தார்கள். 20 அடி உயர ‘T-Rex’ என்னும் டைனோசரும் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. இயந்திரங்களின் உதவியோடு மனிதர்கள் ரப்பர் உடைகளை (rubber Velociraptors costumes) அணிந்துக்கொண்டும் சில காட்சிகளை உருவாக்கினர்.


“Giant of the Snow.”

The_Lost_World_(1925)_-_film_poster 
'Brontosaurus'

-------------------------------------------------------------


Toy Story — Animated CGI:

அனிமேஷன் திரைப்படங்களின் காலம் 1937-லேயே வால்ட் டிஸ்னியால் துவங்கப்பட்டு, தொடர்ந்து பல அற்புதமான படங்களை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பிறகு வந்தது அந்த பிரமாதமான மாற்றம். அனிமேஷன் படங்களின் அடுத்த கட்டம் அது. அதை வெறும் அடுத்த கட்டம் என்று சொல்ல முடியாது. அது ஒரு பாய்ச்சல். முற்றிலுமாக ஒரு புதிய அனுபவத்தை கொடுத்த பாய்ச்சல். 1995 -இல் அப்படம் வெளியாயிற்று. 

‘Toy Story’ என்ற அப்படம், பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைக்கொடுத்தது. தொடர்ந்து அனிமேஷன் படங்களை பார்த்து வந்த, அதன் ரசிகர்களாக இருந்தவர்களையும் மட்டுமல்லாமல் பார்த்த அத்தனைப்பேரையுமே அது கவர்ந்தது. அதுவரை அனிமேஷன் திரைப்படம் என்பது இருப்பரிமாணத்தன்மைக் (2D) கொண்டதுதான். ஒரு காகிதத்தில் வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படி. ஆனால் இந்த ‘Toy Story’ திரைப்படம் முப்பரிமாணத்தில் இருந்தது. இன்றைய 3D வகைப்படங்களோடு இதை குழப்பிக்கொள்ளாதீர்கள். இது முற்றிலும் வேறான 3D மாடலிங் (Modelling) எனப்படும் கணினித் தொழில்நுட்பம். ‘Toy Story’ திரைப்படத்தில் இருந்த அத்தனை கதாப்பாத்திரங்களும் நம் வீடுகளில் வைத்து விளையாடும் பொம்மைகளைப்போன்று இருந்தது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேப்பரில் வரைந்த உருவத்திற்கும், ஒரு பொம்மைக்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள முடிகிறதுதானே?. அதான் ‘Toy Story’  படத்திற்கும், முந்திய அனிமேஷன் திரைப்படங்களுக்குமான வித்தியாசம்.




‘Toy Story’ திரைப்படத்தின் கதையும் அதுதான். நம் வீட்டில் குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளுக்கு உயிர் வந்து, அவற்றிற்கு இடையே நிகழும் நல்லவன் கெட்டவன் கதைதான் அது. அதை, இரு பரிமாண ஓவியங்களாக கொடுக்காமல், முப்பரிமாணத்தன்மையில், பொம்மைகளைப் போன்றே தோற்றம் கொண்டிருந்த அப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அனைத்தும், நம்மை வியப்பில் ஆழ்த்தியன. படமும் சிறப்பாக வந்திருந்தது. மாபெரும் வெற்றியையும் அடைந்தது.

 'Pixar Studio' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட படம் அது. அது வரை, இத்தனை பெரிதாக ஒரு CGI திரைப்படம் உருவானதில்லை. 1,000 gigabytes அளவிற்கு அதன் அனிமேஷன் வேலைகள் நிகழ்ந்தன. 8,00,000 மணி நேரம், அதன் படத்தொகுப்பு பணிக்கு தேவைப்பட்டது. 'Pixar' ஒரு புதிய வரலாறு படைத்தது. அனிமேஷன் படங்களில் புதிய பாணி ஒன்று உருவாயிற்று. 





-------------------------------------------------------------

தொடரும்..

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன