Friday, April 3, 2020

நான் எப்படி ஒளிப்பதிவாளனானேன்…! (பாகம் 02)


ஒரு திரைப்படம், ஒரு பாடல் காட்சி என்னை சினிமாவிற்கு அழைத்து வந்ததா..!?

முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தேன்பம்பாய் திரைப்படமும், அதில் இடம் பெற்றஉயிரே உயிரே..’ பாடலும், அதன் ஒளிப்பதிவும்தான், நான் ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியன என்று. எனில், ஒரு திரைப்படம், ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்று நான் ஒளிப்பதிவாளனாகிருப்பதற்கு காரணமா..?!

இதற்கு பதில்ஆம், இல்லைஇரண்டும்தான்.

ஒளிப்பதிவு எனும் கலையை கண்டு பிரமித்தபோது, எனக்கு அதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதற்கு முன்பாக வாழ்நாளில் எப்போதும் அதைக்குறித்து சிந்தித்திருக்கவில்லை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன், அப்போது, என்னுடை சித்திதனம் சித்தி, அம்மாவின் தங்கை, திருவண்ணாமலைக்கு அருகே இருக்கும் கிராமத்திற்கு திருமணம் ஆகி சென்றிருந்தார். விடுமுறையில் அவரைக்கான சென்றிருந்த போது, எங்கள் சித்தப்பா திருவண்ணாமலைக்கு திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றார். அது ‘VBC’ திரையரங்கம், படம்அபூர்வ சகோதரர்கள்’. அப்படம், எனக்குள் கமல் மீது அபிமானத்தை ஏற்படுத்தியது. அதன் பின் கமல் ரசிகனானேன். ஆயினும், அப்படத்தின் ஒளிப்பதிவு குறித்தெல்லாம் எவ்வித கவனமுமில்லை. காட்சிகள் எல்லாம் அழகாக, பளிச்சென்றிருந்ததாக(!?) நினைவு. யார் ஒளிப்பதிவாளர் என்று தெரியாது. அவ்வளவு ஏன் ஒளிப்பதிவாளர் என்னும் ஒருகலைஞன்இருக்கிறார் என்று கூட தெரியாது. எல்லோரையும் போல, எனக்கு தெரிந்தது நடிகர்கள், நடிகைகள் மட்டுமே. பிற்காலங்களில் கமலின் படங்களை தொடர்ந்து பார்ப்பது வழக்கமாயிற்று

பின்பு, நாகர்ஜூனா நடிப்பில் வெளிவந்தஇதயத்தை திருடாதேதிரைப்படம் என்னைக் கவர்ந்தது. அதன் ஒளிப்பதிவு குறித்து ஒரு கவனம் வந்தது. அதன் இயக்குநர் மணிரத்னம் என்று, என் அம்மாவின் மூலம் அறிந்துக்கொண்டேன். என் அம்மா, மணிரத்னத்தின் ரசிகை. அவரின் திரைப்படங்களை கொண்டாடுவார். மௌனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன் போன்ற படங்கள் அவர்களை கவர்ந்திருக்கிறது. கமல் ரசிகையும் கூட. அவர்தான், திரைப்படமென்பது ஒரு இயக்குநரின் படைப்பு என்ற தகவலை முதன் முதலில் எனக்கு சொன்னவர். மணிரத்னத்தின் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்றும் சிலாகித்தார். ஆயினும், அப்போதும் எனக்கு ஒரு இயக்குநரின் பணி என்னவென்று எதுவும் தெரியாது.இதயத்தை திருடாதேபடத்தின் ஒளிப்பதிவு தனித்துவம் வாய்ந்தது. படம் முழுவதும் பனிபடர்ந்தக் காட்சிகள் நிறைந்து கிடக்கும். கதவிடுக்கில் கசிந்துவரும் பனி, இருட்டையும் ஒளியையும் தனித்தனியாக கவனத்தில் கொள்ளத்தக்க ஒளிப்பதிவு என அதுவரை பார்த்த திரைப்படங்களிலிருந்து இது வேறுபட்டிருந்தது. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. பத்திரிக்கைகள் அதன் ஒளிப்பதிவைக் குறித்தும், அதன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் குறித்தும் பாராட்டி எழுதி இருந்தன. அதன் மூலம், பி.சி.ஶ்ரீராம் எனும் பெயர் என் கவனத்திற்கு வந்தது. ஆயினும் ஒளிப்பதிவாளரின் பணியைப் பற்றி எவ்வித புரிதலும் அப்போது இல்லைபிற்காலங்களில், கமல் படங்களை தவிர்த்து, தளபதி, ரோஜா, ஜெண்டில்மேன், டூயட் போன்ற திரைப்படங்கள் என்னை கவர்ந்தன. அவைகள் யாவும் .ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தவைகள் என்பதும் ஒரு காரணம்.(தளபதி - இளையராசா இசை) ‘தேவர் மகன்திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அதுவும் அதே ‘VBC’ திரையரங்கம் தான்(அட..?.. இப்போதும்தான், இதை எழுதும் போதுதான், கவனத்திற்கு வருகிறது, VBC திரையரங்கம் என் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றி இருப்பது) அதன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் என்று தெரிந்திருந்தது. அவரின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது அப்போது. அவர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்ற தகவலும் தெரியும். அதனால், ரோஜா, தளபதி படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர் என்று (தவறாக) நான் திரைத்துறைக்குள் வரும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன்

பாரதிராஜாவின்கிழக்கு சீமையிலேதிரைப்படமும், அதன் பாடல்களும் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன. ஆயினும் அதன் ஒளிப்பதிவாளர் யார்  என்று தெரியாது. பிற்காலத்தில் அவரே என் குருவாக ஆகப்போவது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் இரவு தூதர்ஷன் தொலைக்காட்சியில்மூன்றாம் பிறைதிரைப்படம் பார்த்தேன். அப்படம் என்னை வெகுவாக பாதித்தது. அதில் இருந்த காதலும், இசையும், காட்சிகளின் அழகும் என்னை கவர்ந்தன. அதன் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பதும், அவருக்குகேமரா கவிஞர்என்ற பட்டப்பெயரும் இருப்பதை அறிந்துக்கொண்டேன்

எனக்கு பிடித்த திரைப்பட சுவரொட்டிகளில் பி.லெனின் என்றொரு பெயரையும் அடிக்கடி பார்த்திருக்கிறேன் (என் அண்ணனின் பெயரும் லெனின் தான்). அவர் படத்தொகுப்பாளர் என்பதையும் அறிந்திருந்தேன். ஆனால், படத்தொகுப்பு என்றால், என்னவென்றெல்லாம் தெரியாது. இதைத் தவீர்த்து, ‘சூரியன்திரைப்படம் பிடித்ததனால் சரத்குமார் எனும் நடிகர், கவுண்டமணி, செந்தில் போன்ற சிலரைத் தெரிந்திருந்தது. பவித்ரன் எனும் இயக்குநரையும் அறிந்திருந்தேன்

பம்பாய்திரைப்படம் பார்ப்பதற்கு முன்பாக, சினிமாவைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தவைகள், கமல்ஹாசன், மணிரதனம், .ஆர்.ரகுமான், ஷங்கர், இளையராசா, பி.சி.ஶ்ரீராம், கே.பி.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பி.லெனின் மற்றும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்கள். அவ்வளவுதான், என்னுடைய சினிமா ஞானம் அப்போது.

அச்சூழலில் தான்உயிரே உயிரேபாடல் என்னை கவர்ந்தது. ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது

அது ஏன்..? ஒளிப்பதிவு குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவனுக்கு ஒரு பாடல் காட்சியின் அழகு அவனை ஒளிப்பதிவாளனாக மாற வேண்டும் என்ற வேட்கையை எப்படி ஏற்படுத்தியது?

அதற்கானகாரணத்தைபிற்காலத்தில் யோசிக்க.. என்னுடைய சினிமா அறிவிற்கு வெளியே, அது இருந்தது என்பது தெரியவந்தது.

காட்சிகளின் மீதான கவனம், அதன் அழகு, அது வெளிப்படுத்தும் செய்தி போன்றவற்றைப்பற்றிய புரிதல் எனக்கு ஏற்கனவே இருந்திருக்கிறது. அதுகாமிக்ஸ்படித்ததன் மூலம் உண்டாகிருந்தது. படங்களின் மூலம் கதைச் சொல்லும் அதன் உத்தி என்னை வெகுவாக கவர்ந்தது. சிறுவயது முதல், அதாவது நான் இரண்டாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து காமிக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதும் கூட படிக்கிறேன். இன்று நான் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்குகாமிக்ஸ்முதல் விதை.காமிக்ஸின் தொடர்ச்சியாக, அதில் கண்ட உருவங்களை வரைந்து பார்க்கும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டிருந்தது. நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கையில், பள்ளி ஓவியப்போட்டியில்  ‘மிக்கி மௌஸ்’- வரைந்து வென்றிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டு, கமல், ரஜினி, சரத்குமார் என முகங்களை வரைவதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். பிற்காலங்களில் பள்ளிகளுக்கிடையே நடக்கும் ஓவியப்போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன். ஓவியம் வரைதலும், அதை ஓட்டிய ஆர்வமும், இன்று நான் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கான இரண்டாம் விதை.

இதனோடு சேர்ந்துதான்… ‘உயிரே..உயிரேபாடலின் ஒளிப்பதிவு என்னை ஒளிப்பதிவுத்துறையை தேர்த்தெடுக்க தூண்டியது எனலாம்

ஒளிப்பதிவாளனாக ஆனது அத்தனை சுலபமாக இருக்கவில்லைஅது ஒரு நீண்ட பயணம்

பயணக் களைப்பைப் போக்கவழியில் நான் கடந்தவற்றைப்பற்றி ஒவ்வொன்றாக சொல்லுகிறேன்

முதலில், காமிக்ஸ் மற்றும் ஓவியம் குறித்து அடுத்த கட்டுரையில் பேசுவோம்.  


(தொடரும்)

2 comments:

  1. அருமை சார்... நான் ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊடகவியல் படித்தேன், அங்கு ஒளிப்பதிவு சொல்லி கொடுக்கும் அளவிற்கு தேர்ந்தவர்கள் யாருமில்லை, பின்னர் குடும்ப
    சூழல் காரணமாக தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்தேன். ஒளிப்பதிவு மீதிருந்த தீரகாதல் என்னை விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைத்தது. அச்சமயம் ஒளிப்பதிவு குறித்து போதிய அறிவு என்னிடம் இல்லை... அப்போது ஒளிப்பதிவு தொழில்நுட்பம் குறித்து தமிழில் அறிந்த கொள்ள தங்களின் அறிய படைப்பான ஒளியின் மொழி பேருதவியாக இருந்தது. எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். analog மற்றும் digital இரண்டையும் ஒரே புத்தகத்தில் பதிவுசெய்தது, தமிழ் வழிமாணவர்களுக்கு சிறந்த ஏடாக ஒளியின் மொழி என்றும் இருக்கிறது. அதுபோலவே ஒளிப்பதிவு குறித்து தாங்கள் அதிகம் எழுத வேண்டும் என்பது என்னை போன்று தாங்களை பின்தொடர்பவர்களுக்கு போருதவியாக இருக்கும்...

    ReplyDelete