முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 02



கடவுளின் இருப்பு (Existence of God) குறித்து, எப்போது கவனம் செலுத்த துவங்கினேன் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டேன் அல்லவா… 


நாம் ஒன்றைக்குறித்த அறிமுகத்தை, தகவலை எப்படி பெறுகிறோம்


  • மற்றவர் சொல்லித்தருவதனால். பிறந்ததிலிருந்து, நாம் சந்திக்கும் ஒவ்வொருத்தரும், எதையாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்புத்தி அல்லது கேள்வியறிவு. பெரும்பாலும் இப்படிதான், நாம் அறிவு சேகரிப்பு நிகழ்கிறது.
  • அனுபவம் வாயிலாக உணர்ந்துக்கொள்வது. கேள்விப்பட்டதை, மற்றவர் போதித்ததை, சொந்த அனுபவம் கொண்டு புரிந்துக்கொள்ள முயல்வதனாலும். பட்டறிவு என்கிறோம் இதை.
  • படிப்பதன் வாயிலாக, பார்ப்பதன் வாயிலாக சேகரித்துக்கொள்ளும் விபரங்கள். அதில் நம்முடைய ஈடுபாடு எதுவுமிருக்காது. வெறும் புள்ளிவிபரங்கள் அவை. தகவல் சேகரிப்பு.


எனில், கடவுள் குறித்தான புரிதலுக்கு சொந்த அனுபவம் என்று ஒன்று வாய்ப்பதற்கு முன்பாக, நம்மை வந்தடைவது கேள்வியறிவுதான் இல்லையா? கடவுள் இருப்பை தரிசிக்க பெரும்பாலும் வாழ்வில் சந்தர்ப்பம் அமையாது. ஆயினும் கடவுள் போன்ற ஒன்றை நாம் உணர்ந்துக்கொண்டதாக நம்புகிறோம். நம்மால் ஆகாது என்ற கையறு நிலையில் வந்து சேரும் உதவியை, துணையத்தான் நாம் பெரும்பாலும் கடவுள் இருப்பு அல்லது கடவுள் செயல் என்று நினைக்கிறோம்


அதாவது, நாமாக செய்யக்கூடிய அத்தனையும் செய்துவிட்டேம், என்றாலும் இது போதாது, இதிலிருந்து என்னை மீட்க அல்லது என்னை மேலே தூக்கிவிட ஒரு கைத் தேவைப்படுகிறது, அரூபமான ஒரு துணைத்தேவைப்படுகிறது. துன்பத்தில் துவண்டு கிடக்கும் போது, கட்டியணைத்து ஆறுதல் படுத்த, முயன்று முன்னேற முயலுகையில் தோள்கொடுத்து தூக்கிவிட, நம் கை நீள முடியாத தூரத்து இலக்கை எட்டிப்பிடிக்க முயற்சிக்கையில், அங்கே இருந்து நீண்டு வரும் ஒரு கையினுடைய ஆதரவான ஒரு பிடிப்பு, பலமான ஒரு தோள், எல்லையில்லா சக்தி கொண்ட ஒரு துணைத்தேவைப்படுகிறது. அங்கேதான் கடவுள் இருப்பு அவசியமாகிறது.


மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்தானோ, அதனை வணங்கினான். அதற்கென்று ஒரு கடவுளைக் கற்பித்தான். எனில் பயத்திலிருந்து கடவுள் தோன்றினார் என்கிறார்கள். பயமே கடவுள் இருப்புக்கு காரணமாகிறது. கடவுளே அண்ட சாராச்சரங்களை, உலகை, உயிரங்களை படைத்தார். எல்லாம் அவன் செயல். அதாவது நாம் அறிதாத, புரிந்துக்கொள்ள முடியாதவற்றை கடவுளோடு தொடர்பு படுத்திவிடுவது ஒரு சௌகரியம். நன்மை செய்தால் கடவுள், கெடுதல் செய்தால் சாத்தான்இதைப்பற்றியெல்லாம் எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. விவாதமும் இல்லை. நான் கடவுள் இருப்பின் அவசியத்தை உணர்ந்ததைப்பற்றி மட்டுமே இங்கே பேச விரும்புகிறேன்


சொன்னால் சிரிப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். நான் முதன் முதலில் கடவுள் இருப்பின் அவசியத்தை உணர்ந்த அல்லது உணர்த்திய சூழலை கண்டு கொண்டது ஒரு திரைப்படத்தில்தான்


ஆம்திரைப்படத்தில்தான்


அமீர்கான் நடிப்பில், அஷுதோஷ் கோவரிகர் (Ashutosh Gowariker) இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படம்லகான்’. அது வெளியான போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். வாழ்வை குறித்தான கனவுகளும், அதற்கான தயாரிப்புகளும் கொண்டிருந்த காலமும் கூட


சுதந்திரத்திற்கு முன்னால் நிகழும் அக்கதையில், நாயகனின் ஊர்க்காரர்களுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதில் ஜெயித்தால்தான்வரியில்’(Tax) இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை. எப்படியேனும் ஜெயித்தே ஆகவேண்டிய சூழல் நாயகனுக்கு. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஊர்க்காரர்களை கூட்டி, பயிற்சிக்கொடுத்து போட்டியில் வென்றுவிட போராடுகிறார். ஊரே சேர்ந்து முயற்சிக்கிறது, என்றாலும் வெள்ளையர்களை ஜெயித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை பொய்த்து போகும் சூழல் ஒன்று ஏற்படுகிறது. விடிந்தால் போட்டி, அதில் ஜெயித்தே ஆகவேண்டும், அதுவே அவர்களுடைய வாழ்வை நிர்ணயிக்க போகும் கடைசி நாள்


இரவுஊரே அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போதுதான் அக்காட்சி வருகிறது. இல்லை இல்லைஅந்தப்பாடல் வருகிறது. தோற்று துவண்டு கிடக்கு அவ்வூருக்கு, நம்பிக்கை தரும் விதமாக, எல்லோரும் சேர்ந்து கிருஷ்ணனிடம் வேண்டுகிறார்கள், முறையிடுகிறார்கள். இறைவா எங்களால் ஆன அத்தனையும் நாங்கள் செய்துவிட்டோம், இனிமேல் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை, எங்களுக்கு துணையாக வா, எங்களை காப்பாற்றுஎன்ற பொருளில் வரும் அப்பாடல்தான், நான் முதன் முறையாக கடவுள் இருப்பின் அவசியத்தை உணர்ந்த கணம். ஆம்கலையே நமக்கு வழிகாட்டி.  


மனித முயற்சிகள் எல்லாம், ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகிற அக்கணத்தில்கடவுளின் துணைஎன்ற ஆதரவு கரம் தேவைப்படுகிறது. திரையில் அக்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, இங்கே என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கடவுள் என்று ஒருவர் இருந்தார் எனில், இத்தகைய சூழலுக்குத்தான் தேவைப்படுகிறார். அல்லது இத்தகைய சூழலுக்காகத்தான் அவர் படைக்கப்பட்டிருக்கிறார். மனித மனதிற்கு ஒரு பிடிப்பு அது. நம்பிக்கைக்கொடுக்கும் ஒரு உணர்வு அது. அது எல்லா மனித மனதிற்கும் தேவைப்படுகிறது. இதன் பொருட்டே, கடவுள் என்ற ஒன்றைப்பற்றி இத்தனை நூற்றாண்டுகள் பேசிவந்திருக்கிறோம்


இருங்க…. இருங்க…. அப்படி எல்லாம் இல்லை. அதற்காக நான் உடனே ஆத்திகனாகிவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். அப்படி இல்லை. இது கடவுள் இருப்பின் அவசியத்தை உணர்ந்த கணம் அவ்வளவே. இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அப்படியேதான் இருக்கிறது. நான் முன்பே சொன்னது போல, இது ஒரு கேள்வி ஞானம். பார்த்து தெரிந்துக்கொண்டது. அனுபவம் அல்ல


இதேப்போலான, இன்னோரு படமும் கடவுள் இருப்பை எனக்கு உணர்த்தியது. அது ஜேம்ஸ் கேமரோன் இயக்கத்தில் வந்தஅவதார்திரைப்படம். வேரொரு கிரகத்தில் நிகழும் கதை அது. கணிமம் ஒன்றைத்தேடி, பூமியிலிருந்து செல்லும் மனிதக்கூட்டத்திற்கும், அங்கே வாழும் பூர்வகுடிகளுக்குமான போராட்டம் அது. மனிதனின்கொடும் தாக்குதலைசமாளிக்க முடியாது, கலங்கி நிற்கும் ஒரு கணத்தில், அக்கிரகத்தில் உயிர் வாழும் அத்தனை விசித்திர உயிரினங்களும், அக்கிரகத்து மனிதர்களுக்கு துணை நிற்கும் சண்டைக்காட்சி ஒன்று அப்படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த உயிரினங்களும்ஒன்றை புள்ளியில்இணைந்து, ஒரேப்படையாக, ஒரே சக்தியாக எதிரியை பந்தாடும் அக்காட்சி, இப்போது நினைத்தாலும் பரவசப்படுத்துகிறது, உடபெல்லாம் பூரிக்கிறது. அக்காட்சியே, கடவுள் இருப்பை மீண்டும் என்னுள் ஏற்படுத்திய காட்சி எனலாம்


என்னடா இது, எல்லாம் திரைப்படமாக இருக்கிறது. வாழ்வில் கடவுள் இருப்பை உணரும் கணங்களை உனக்கு ஏற்படவே இல்லையா? அத்தகைய சூழலை கடந்தோ, கேட்டோ வளரவில்லையா? என்ற கேள்வி உங்களுக்கு உண்டாகலாம்


இதற்கு பதில், ஆம்இல்லைஇரண்டும்தான்



(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால