Thursday, April 29, 2010

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:

வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படத் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம்.  நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதாரமான செயலாகிறது.


புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.


Sunday, April 25, 2010

லென்ஸ்: பாகம்-2


'லென்ஸ்'-ஐப் பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது மேலோட்டமாக, ஒரு அறிமுகமாக மட்டுமே எழுதப்பட்டக் கட்டுரை. எந்தத் துறையானாலும், எதைப்பற்றி அறிந்து கொள்வதானாலும் அது பல கட்டங்களாகத்தான் நிகழும். அந்த வகையில் இந்தக் கட்டுரை 'லென்ஸ்'-ஐப் பற்றி அடுத்த கட்டப் பார்வையாக விவரிக்கப்படுகிறது.


முந்தைய கட்டுரையில் விடுபட்ட சில விஷயங்களையும் இந்தக் கட்டுரையில் காணமுடியும். 'ஃபோகல் லெந்த்' (Focal Length), 'லென்ஸ் ஸ்பீட்' (Lens Speed) மற்றும் 'டெப்த் ஆஃப் பீல்ட்' (Depth of Field) போன்ற லென்ஸோடு சம்பந்தப்பட்ட சில காரணிகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

Thursday, April 22, 2010

அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:

அண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதை. இந்த 'HD' என்பது என்ன? அதில் படங்கள் எப்படி இருக்கும்? இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்கும் HD படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை.


Tuesday, April 20, 2010

என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன?

திரைப்படம் எடுக்க பல வகையான கருவிகள் உபயோகிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது 'கேமரா'(Camera) மற்றும் 'ஃபிலிம்' (Film) என்று அழைக்கப்படும் படச்சுருள். அதாவது படத்தைப் பதிவு செய்ய தேவையான கருவிகள். இப்போது இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன? அவற்றில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பதை அறிய உங்களுக்கு ஆர்வம் உண்டா?


நீங்கள் பல பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ARRI, ARRI-III, ARRI 435, Red One, HD, Super 16mm, Super 35mm, HDV எனப் பல வகையான கேமராக்களைப் பற்றியும் 'ஃபார்மேட்ஸ்'(Formats) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றைப்பற்றி ஒரு அறிமுகமாக, சுருக்கமாகச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Monday, April 19, 2010

செலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):

திரைப்படமெடுக்க பொதுவாக 400ft ஃபிலிம் ரோல்கள் பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டு பக்கமும் வரிசையாகத் துளைகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தத் துளைகளுக்கு 'பர்ஃபரேஷன் (Perforation)'என்று பெயர். இந்த 'பர்ஃபரேஷன்'கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.  இந்தத் துளைகள், கேமராவில் லென்சுக்குப் பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில், ஃபிலிமை நிலையாக நிறுத்தப் பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்தத் துளைகளின் (Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதிக்கப்படுகிறது. அதாவது ஒரு frame-க்கு 4 Perforations தேவைப்படுகிறது.


Wednesday, April 14, 2010

The Battle of Algiers: அல்ஜீரியப் போர்
The Battle of Algiers: அல்ஜீரியப் போர்

அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அடுத்து இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக ஃபிரான்ஸின் காலனியாக இருந்து வந்ததிலிருந்து சுதந்திரம் பெற 1954-ல் போராடத்துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கெரில்லா தாக்குதல்கள் மூலம் தங்களுடைய சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார்கள். ஃபிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களைத் தாக்குவது, சித்திரவதைகளைக் கையாள்வது என இராணுவம் ஈடுபட...  வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச்சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடி கொடுத்தது. இரண்டு புறமும் சரிச்சமமாக வன்முறைகள் கையாளப்பட்டன.

முன்னுரை: இரத்தமும் சினிமாவும்
இரத்த ஆறுகள் பலவற்றைப் பார்த்த பூமியிது. காலம் தோறும் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கொள்ளை, கொலை என ஆரம்பித்து அடக்குமுறை, அடிமைத்தனம் என பல வடிவங்களில் வளர்ந்து ஆதிக்கம், காலனியாதிக்கம் என்று உருவெடுத்த உலகமிது. இன்று, நேற்று அல்ல, என்று மூன்றாவது மனிதன் தோன்றினானோ அன்றே துவங்கிவிட்ட பழக்கமிது. தேவையென்றால் எவனையும் எதையும் அடித்துப் பிடுங்கலாம் என்பது நியதியாயிற்று. 'வலியது மிஞ்சும்' என்ற உயிரியல் விதி, உயிர் வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தை வலிவுறுத்த வந்தது. மனிதனுக்கு அதுவே சௌகரியமாய்ப் போயிற்று.

தன் உயிருக்கும், இருப்பிற்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் எதிர்க்கத் தெரிந்திருந்த உயிரினம், தன் உடைமைக்கும் உணர்வுக்குமாக தன் போராட்டத்தை நீட்டியது. அங்கே தான் இது துவங்கிற்று. உடைமையென்பது கொள்ளை கொள்வது, உணர்வு என்பது மிதிக்கப்படுவது என்ற புதிய சித்தாந்தம் நடைமுறைக்கு வந்தது. எதை எதையோ மறந்துபோன மனிதக் கூட்டம், இதை மட்டும் மறந்ததே இல்லை. தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

நாகரீகம் என்ற ஒன்று உருவானபோதே துவங்கிய போர் இது. எங்கெல்லாம் கூடி வாழும் பழக்கம் உண்டானதோ, எங்கெல்லாம் கலாச்சாரம் என்ற ஒன்று உருவானதோ, எப்போதிருந்து மொழி மனிதனை இணைத்ததோ, என்று மதம் மனிதனின் அடையாளமாயிற்றோ, அன்றே துவங்கிய யுத்தம் இது.

உயிர்த்திருத்தலுக்குத் தேவை என்பதையும் தாண்டி, ஆண்டான் அடிமைக் காலம் கடந்து, ஆள்பவன் ஆளப்படுபவன் என்பது போய்,  தன் சுகபோகத்திற்காக மனிதன் மற்றவனை அடிக்கத் துவங்கினான்.  அடிப்பதே நியாயமாயிற்று. உயிர் வாழ்வதே நோக்கமென்பது போய் வெற்றியே பிரதானமாயிற்று. இவ்வெற்றிப் போதைக்கு பல உயிர்கள் பலியாயின. பல கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டன.

எதிர்ப்பு எப்போதும் இருந்திருக்கிறது. எதிர்த்து அழிந்து போதல் நம் வரலாற்றில் பல இடங்களில் காணக்கிடைக்கிறது. எதுயெதற்கோ மனிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. எதையெதையோ காப்பாற்ற மனிதன் போராடி மாண்டுபோயிருக்கிறான்.

மனிதன் தன்னை மொழி, குழு, மதம் என்று என்னவெல்லாமோ கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறான். எதையெல்லாம் அடையாளமாகக் கொண்டானோ அதைக்கொண்டே, அதன் பொருட்டே அழிக்கவும் பட்டிருக்கிறான்.

நீண்ட காலங்களுக்குப் பிறகே இம்மனிதர்கள் ஒன்றைக் கண்டு கொண்டார்கள். அது, அவர்களின் உயிர், உடைமை, உணர்வு, உணவு, இருப்பிடம், மொழி, காலாச்சாரம், பண்பாடு, மதம், விடுதலை என அனைத்தையும் உட்கொண்டது. அதையே தங்களுக்கான அடையாளமாகக் கொண்டார்கள். அதைக்கொண்டே தங்களை ஒருங்கிணைத்தார்கள். அதைக்கொண்டே போராடினார்கள். அதைக்கொண்டே தங்களைப் காத்துக்கொண்டார்கள். மனிதர்கள் தங்களின் அந்தப் புதிய அடையாளத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டார்கள்.

ஆம்.. இனமே மனிதக்கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது. ஒரு இனமென்றால் அதற்கென்று ஒரு மொழி, கலாச்சாரம், பண்பாடு, நிலம், நாடு இருக்கிறது. அதற்கும் மேலாக அவ்வினத்திற்கென்று தனியாக உணர்வும், குணமும் உண்டு. அதற்கு  எப்போதும் சுதந்திரமாக வாழ வேட்கையும் உரிமையும் உண்டு. அச்சுதந்திரத்திற்காகவே இங்கே பல போர்கள் நடந்துள்ளன.

நாடு கடந்து, தேசம் கடந்து, கண்டம் கடந்து மனிதக் கூட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல இனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பல இனங்கள் விடுதலையைப் போராடி வென்றிருக்கின்றன. இதையெல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. எழுத்தாக, ஓவியமாக, இலக்கியமாக, பாடலாக, நடனமாக, நாடகமாகப் பதிவு செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் இத்தகைய வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்ந்து/போராடி/வென்ற/மறைந்த மாமனிதர்கள், அப்பாவி மனிதர்கள் திரைப்படங்களில் இரத்தமும் சதையுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே ‘திரைப்படம்: உண்மைச்சம்பவம்’ என்னும் இக்கட்டுரைத் தொடரை எழுதத் துவங்குகிறேன்.

மைக்கேல் காலின்ஸ்: Michael Collins

படம்: மைக்கேல் காலின்ஸ் (Michael Collins)
திரைக்கு வந்த ஆண்டு:1996
இயக்குனர்: நீல் ஜோர்டன் (Neil Jordan)


"சில மனிதர்கள் கால ஓட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை. இப்போது அவர் இறந்துவிட்டார், ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அவரே அதை சாத்தியப்படுத்தினார்". 


Saturday, April 10, 2010

ஒளியமைப்பு (Lighting)

"ஒளி என்பதும் ஒரு கதாப்பாத்திரம். ஒரு சக்தி. ஒளியமைப்புச் செய்யும் போது அதை மனதில்கொண்டு கையாண்டு பயன்படுத்து. பிறகு பார் அதன் பலனை."  - V.K.மூர்த்திர் ஒளிப்பதிவாளனாக நான் எப்படி ஒரு காட்சிக்கு ஒளியமைப்புச் செய்கிறேன், எதையெல்லாம் காரணிகளாகக் கொள்கிறேன், எவற்றையெல்லாம் கவனிக்கிறேன் என்பதையும், ஒளியமைப்பில் நான் பின்பற்றும் முறையையும், என் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஒளியமைப்புப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ர் ஒளிப்பதிவாளர் என்பவர் இரண்டு விதத்தில் செயல்படவேண்டும். ஒன்று அவருடைய ரசனை மற்றும் கற்பனை சார்ந்த அறிவு (Creative Knowledge) மற்றொன்று தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge). வ்விரண்டு அறிவையும் எப்படிப் பயன்படுத்துகிறார், எப்படி ஒன்றிணைக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய படைப்பின் மேன்மை வெளிப்படுகிறது.

ஒரு காட்சி விவரிக்கப்பட்டவுடன் அவர் முதலில் பார்க்க வேண்டியது, அக்காட்சி நடக்கும் தளத்திற்கு ஒளி எப்படிக் கிடைக்கிறது என்பதைதான். உதாரணமாக ஒரு சிறிய படுக்கை அறை. வடிவமைக்கப்பட்ட அரங்கமாகிருந்தால் ஏதேனும் விளக்கைப் பயன்படுத்தி இருப்பார்கள். அதுவே உண்மையான அரங்கம் (வீடு) என்றால் அவ்வறைக்கு ஒளி எங்கிருந்து வருகிறது என்பதனைப் பார்த்தோமானால்..

பகலாகயிருந்தால்;

1.       கதவு மற்றும் சன்னலின் வழியாக ஒளி உள்ளே வரும். அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கலாம் அல்லது சன்னலுக்கு அருகில் வெளிச்சமாகவும் பாதி அறை இருட்டாகவும் இருக்கலாம்.

2.       உள்ளே கூரையில் உள்ள விளக்கைப் பயன்படுத்தியிருந்தால், அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.

இதுவே இரவு என்றால்;

1.       சன்னலிருந்து வரும் வெளிச்சமானது, நிலவு வெளிச்சமாகவோ, வெளியே எரியும் விளக்கிலிருந்தோ அல்லது சாலையில் செல்லும் வாகனத்திலிருந்தோ வருபவையாக இருக்கும்.

2.       உள்ளே இருட்டாக இருக்கலாம் அல்லது விளக்கு எரிவதால் வரும் வெளிச்சமும் இருக்கலாம்.

3.       இரவு விளக்கைப் பயன்படுத்தியிருந்தால் இருட்டாக, மங்கலான ஒளி இருக்கும்.

சரி வெளிச்சம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பது தெரிந்துவிட்டது. அடுத்து அந்தக் காட்சி நடக்கும் காலம் என்ன? இரவா பகலா? என்பதைக் கொண்டு வெளிச்சம் எங்கிருந்து வரவேண்டும் என்பதையும், அந்தக் காட்சியின் தன்மை, சூழல் போன்றவற்றைக்கொண்டு ஒளியின் தன்மையை நிர்ணயிக்கலாம். மற்றும் படத்தின் தன்மை, வகையைப்பொருத்தும் ஒளியின் வகைமையை நிர்ணயிக்க வேண்டும்.  அதாவது நகைச்சுவைப் படமாகவோ ஜனரஞ்சகமானப் படமாகவோ இருந்தால் வெளிச்சம் மிகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்களின் அங்க அசைவுகள் பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும் என்பதனால். அதுவே ஒரு த்ரிலர் படத்திற்கு குறைந்த அளவு ஒளியை தேர்வுசெய்யவேண்டும். ஏனெனில் காட்சியில் என்ன இருக்கிறது என்பது முழுமையாக காட்டப்படாதப் போதுதான் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். கூடவே, இருட்டு பயத்தையும் கொடுக்கும்.

சரி, நமக்கு கொடுக்கப்பட்ட காட்சியில் காதலர்கள் இருவர் நள்ளிரவில் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெளியே வந்து நிற்கும் காரின் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறார்கள். அது ஒரு த்ரிலர் படம் என்று கொண்டால், இப்போது ஒளியமைப்பிற்கு நமக்கு இருக்கும் சாத்தியங்கள் என்ன?

நள்ளிரவு என்பதனாலும், த்ரிலர் படம் என்பதனாலும் அதிகபடியான ஒளியமைப்பு இருக்க முடியாது எனில்..

1.        காதலர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே இரவு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த மங்கலான ஒளியில் அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. சன்னல் வழியாக எந்த வெளிச்சமும் வரவில்லை. வெளியே கார் வந்து நிற்கும் போது சன்னல் வழியாக காரின் முகப்பு விளக்கின் வெளிச்சம் இவர்கள் மேல் விழலாம் அல்லது விழாமல் போகலாம்.

2.       உள்ளே எந்த விளக்கும் எரிய வில்லை. சன்னல் வழியாக ஏதோவொரு வெளிச்சம் இவர்கள் மேல் விழுந்திருக்கிறது. வந்து நின்ற காரின் வெளிச்சம் இவர்கள் மேல் விழுகிறது அல்லது விழவில்லை.

இதில் எந்த சாத்தியத்தை பயன்படுத்துப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவைச் சார்ந்தது. ஒரு காட்சிக்கு எந்த வித ஒளியமைப்புச் செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவு என்றால் அதை எப்படி ஒளிப்பதிவு செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் தொழில்நுட்ப அறிவைப் பொருத்தது.

  
அதற்கு நீங்கள் சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒளிப்பதிவை, ஒளியைக்கொண்டு படம் வரைவது (Painting with Light) என்பார்கள். இந்த கலைக்கு படச்சுருள்/டிஜிட்டல், ஒளியமைப்புக் கருவிகள், வண்ணம் போன்றவற்றைப் பற்றிய அறிவு இருப்பதோடு, இதன் ஆதார தொழில்நுட்பங்களான எக்ஸ்போஷர் (exposure), வண்ணத்தின் விதிகள் (color theory) மற்றும் ஒளியியல் (optics) பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

ஓர் ஒளிப்பதிவாளர் இருபரிமாண நெகட்டிவில் முப்பரிமாணப் பிம்பத்தைக் கொண்டுவரவேண்டும். அதாவது நாம் இயல்பில் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் முப்பரிமாத்தன்மைக் கொண்டவை. உயரம், அகலம் மற்றும் தூரம் என்ற மூன்று பரிமாங்களைக் கொண்டது. ஆனால் நெகட்டிவ் என்பது உயரம் மற்றும் அகலம் என்ற இரண்டு பரிமாணங்களை மட்டுமே கொண்டது. ஓவியமாகட்டும் புகைப்படமாகட்டும் அதில் இந்த முப்பரிமாணத்தன்மையை கொண்டுவருவதிலேயே அக்கலையின் உன்னதம் அடங்கிருக்கிறது.

இந்த முப்பரிமாண பிம்பத்தைக் கொண்டு வருவதற்கு ஒளியமைப்பில் நாம் கவனிக்க வேண்டியது, ஒரு பிம்பத்தில் இருக்கும் நடிகர்களையும் (Subject), பின்புலத்தையும் (Background) தனித்துப் பிரித்து காட்டுவது. பிம்பத்தில் இருட்டு அல்லது குறைந்தவெளிச்சப்(Shadow) பகுதி மற்றும் அதிவெளிச்சப்(Highlight) பகுதிக்கு இடையேயான வித்தியாசங்களையும் நிர்ணயிப்பதாகும். இந்த வித்தியாசங்களை ஒளியைக் கொண்டோ அல்லது வண்ணத்தைக்கொண்டோ நிர்ணயிக்கலாம்.

ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அப்பொருளின் உருவத்தை காட்டுகிறது. அந்தப் பொருளில் வளைவுகளோ வடிவமோ இருக்க அங்கே உருவாகும் இருட்டோ அல்லது குறைந்தவெளிச்சம்(Shadow) ப்பொருளின் வடிவத்திலிருக்கும் வேறுபாட்டை காட்டுகிறது. மேலும் அதிவெளிச்சப்(Highlight) பகுதியும் இதற்கு உதவுகிறது.

அதாவது வெளிச்சம் (Light), இருட்டு அல்லது குறைந்தவெளிச்சம் (Shadow), அதிவெளிச்சம் (Highlight) இவற்றைக்கொண்டு ஒரு பொருளின் முப்பரிமாணத்தன்மையை நாம் உணர்கிறோம். அதே அடிப்படையிலேயே ஒளிப்பதிவையும் செய்யவேண்டும்.

ஒளியமைப்பிற்கு இரண்டு ஆதார சித்தாந்தங்கள் உண்டு.

1. இயல்புத்தன்மை (Naturalism) - ஒளியை அது இருக்கும் விதத்திலேயே பயன்படுத்துவது. அதாவது இரண்டு நபர்கள் காலை சூரிய ஒளியில் எதிர் எதிராக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒருவர் மீது சூரிய ளி, நேரடியாக முகத்தில் விழும் (Face Light), மற்றவர்க்கு பின்புறம் விழும் (Back Light) அல்லவா? இதை அப்படியே பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யும் முறை ஒன்று.

2. அழகியல் (Pictorialism) - ஒளியை அழகியலுக்காக மாற்றி அமைத்துக்கொள்வது இன்னொரு வகை, அது இயல்பு தன்மையில் இல்லாவிட்டால் கூட. அதே சூரிய ஒளி இரு நபர்கள் உதாரணத்தில் இருவருக்கும் பின்புறத்திலிருந்து ஒளி வரும்படி மாற்றி அமைத்துக்கொள்வது. ஏனெனில் Back light-இல் அழகாக இருக்கும் என்பதனால்.

இந்த Back Light அழகைத் தெரிந்துக்கொள்ள காலையில் பனிபடர்ந்த புற்களின் மீது சூரிய ஒளி விழும் திசையிலிருந்து பார்ப்பதை விட சூரிய ஒளிக்கு எதிர்புறத்திலிருந்து புற்களைப்பாருங்கள். அந்தப் புற்கள் இன்னும் அழகாகத்தெரியும். இதை ஒருமுறை முயன்று பாருங்கள்.

ஒளியமைப்பில் இரண்டு முறைகள் உண்டு.

1. High-Key: காட்சிகளை வெளிச்சமாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை குறைத்தும் ஒளியமைப்பது.

2. Low-Key: காட்சிகளை இருட்டாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை அதிகரித்தும் ஒளியமைப்பது. காட்சியில் மிக குறைந்த இடங்களே ஒளியூட்டப்பட்டிருக்கும்.

ஒளியைப் புரிந்துக்கொள்ள, ஒளி எதனால் ஆனது அல்லது ஒளியில் இருக்கும் காரணிகள் (THE PROPERTIES OF LIGHT) என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

நான்கு முக்கிய காரணிகளைக்கொண்டு ஒளியை விவரிக்க முடியும்:

1. Intensity- ஒளியின் அடர்த்தி அல்லது ஒளியின் அளவு. இதை 'foot-candles' என்ற அலகால் குறிக்கின்றோம். ஒரு foot-candles என்பது ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் ஒளியின் அளவை அந்த மெழுகுவர்த்தியிலிருந்து ஒரு அடி தூரத்தில் இருந்து அளக்கும் போது கிடைக்கும் அளவைக் குறிப்பது.

2. Color- வண்ணம். ஒளி தோ ஒரு வண்ணத்தைக் கொண்டுதான் இருக்கிறது. சூரிய வெளிச்சமோ, மெழுகுவர்த்தி வெளிச்சமோ, அதற்கென்று ஒரு வண்ணம் இருக்கிறது.

3.Quality- ஒளியின் தரம். இங்கே தரம் என்பது Hardlight, Softlight -ஐ குறிக்கிறது.
                Hardlight-  ஒரே திசையில் குவிக்கப்பட்ட (direct) ஒளியான இது அதிக
                shadow-வை ஏற்படுத்தும்.
               
                softlight- திசைகளற்ற (Indirect or diffused) ஒளியான இது குறைந்த அளவே  
                shadow-வை ஏற்படுத்தும். 

4.Angle- ஒளிவிழும் திசை. பொருளின் மீது ஒளிவிழும் திசையைப் பொறுத்து ஒளியின் அளவும் தரமும் மாறும்.


ஒளியை இரண்டுவிதமாகப் பயன்படுத்தலாம்:

ஒரு காட்சியில் ஒளியை சேர்த்து (Additive lighting) fill-அதிகப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது ஒளியைக் குறைத்து (subtractive lighting) negative fill கொடுப்பதன் மூலமாகவோ ஒளியமைப்புச் செய்யலாம்.

மும்முனை ஒளியமைப்பு (THREE-POINT LIGHTING):

மும்முனை ஒளியமைப்பு. அதாவது மூன்று ஆதார இடங்களிலிருந்து ஒரு பொருளையோ அல்லது நபரையோ ஒளியூட்டுவது.

1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது, ஒரு 'Subject'-இன் ஒரு பக்கத்திலிருந்து கொடுக்கப்படும். அதாவது ஒரு நபரின் ஒருபக்கத்திலிருந்து. இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி விழும் போது அவரின் ஒரு பக்கம் ஒளியூட்டப்பட்டும், மறுபக்கம் (வலதுப்பக்கம்) நிழலாகவும் இருக்கும். மேலும் இந்த 'Key Light' ஆனது அந்த 'Subject'-ஐ தெளிவாக வரையறுக்கும். இந்த ஒளியே அப்பொருளை / நபரை படம் பிடிப்பதற்கான ஆதார ஒளியாகும்.

2. Fill Light - துணை ஒளி: இந்த 'Fill Light' என்பது 'Key Light'-ஆல் உருவாகும் நிழலை குறைப்பதற்கு அல்லது முழுமையாக நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'Key Light'-க்கு மறுபக்கத்தில் 'Fill Light' வைக்கப்படும். இந்த 'Fill Light' ஆனது 'Key Light'-ஐ விட அளவில் குறைவாக இருக்கும். மேலும் இது 'Soft Light'-ஆகவும் இருக்கும்.

வ்விரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு பொருளை / நபரை (Subject) தெளிவாக ஒளியூட்டி விடலாம். 'subject'-இன் முழுபரிமாணத்தையும் தெளிவாக படம்பிடிக்க முடியும்.

3.Back Light - பின்புற ஒளி: இரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு 'Subject' ஒளியூட்டப்பட்ட பிறகு, அந்த 'Subject'-ஐ அதன் பின்புலத்திலிருந்து பிரிப்பதற்கு, இந்த மூன்றாவது 'Back Light' பயன்படுகிறது. அதாவது ஒரு 'Subject'-யின் பின்புறத்திலிருந்து (Back Side) இந்த ஒளி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் இது 'Back Light' என அழைக்கப்படுகிறது.

இப்படி பின்புறத்திலிருந்து ஒளி கொடுப்பதனால், அந்த 'Subject'-இன் வடிவத்தை அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனித்து காட்டிவிட முடிகிறது. இதனால் 'Subject', அதன் பின்புலத்தோடு 'ஒன்றிவிடுவதிலிருந்து' (Merge) தவிர்க்க முடிகிறது. இம்முறையை 'High Light' என்றும் சொல்லுகிறார்கள்.

குறிப்பு: நான்காவதாக ஒரு லைட் இருக்கிறது, அது பின்புலத்தை (Background) ஒளியூட்டப் பயன்படுகிறது.

இந்த முறை மிக ஆதாரமான ஒளியமைப்பு முறை, இதை அடிப்படையாகக் கொண்டு பல விதங்களில் ஒளியமைப்புச் செய்யலாம்.

மேலேச் சென்னவைகள் எல்லாம் நீங்கள் ஒளியமைப்புச் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்.


மேலும் ஒரு காட்சியை நீங்கள் எப்படி 'எக்ஸ்போஸ்' (Expose) செய்கிறீர்கள் என்பதும், வ்வகையான லென்ஸ், எந்த வகை திறம் கொண்ட படச்சுருளை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் உங்களின் தொழில்நுட்ப அறிவையும், உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவையும் பொறுத்தது. நீங்கள் எப்படி அவ்விரண்டையும் ஒன்றிணைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் ஒளிப்பதிவின் தரம் நிர்ணயமாகும்