முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னுரை: இரத்தமும் சினிமாவும்




இரத்த ஆறுகள் பலவற்றைப் பார்த்த பூமியிது. காலம் தோறும் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கொள்ளை, கொலை என ஆரம்பித்து அடக்குமுறை, அடிமைத்தனம் என பல வடிவங்களில் வளர்ந்து ஆதிக்கம், காலனியாதிக்கம் என்று உருவெடுத்த உலகமிது. இன்று, நேற்று அல்ல, என்று மூன்றாவது மனிதன் தோன்றினானோ அன்றே துவங்கிவிட்ட பழக்கமிது. தேவையென்றால் எவனையும் எதையும் அடித்துப் பிடுங்கலாம் என்பது நியதியாயிற்று. 'வலியது மிஞ்சும்' என்ற உயிரியல் விதி, உயிர் வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தை வலிவுறுத்த வந்தது. மனிதனுக்கு அதுவே சௌகரியமாய்ப் போயிற்று.

தன் உயிருக்கும், இருப்பிற்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் எதிர்க்கத் தெரிந்திருந்த உயிரினம், தன் உடைமைக்கும் உணர்வுக்குமாக தன் போராட்டத்தை நீட்டியது. அங்கே தான் இது துவங்கிற்று. உடைமையென்பது கொள்ளை கொள்வது, உணர்வு என்பது மிதிக்கப்படுவது என்ற புதிய சித்தாந்தம் நடைமுறைக்கு வந்தது. எதை எதையோ மறந்துபோன மனிதக் கூட்டம், இதை மட்டும் மறந்ததே இல்லை. தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

நாகரீகம் என்ற ஒன்று உருவானபோதே துவங்கிய போர் இது. எங்கெல்லாம் கூடி வாழும் பழக்கம் உண்டானதோ, எங்கெல்லாம் கலாச்சாரம் என்ற ஒன்று உருவானதோ, எப்போதிருந்து மொழி மனிதனை இணைத்ததோ, என்று மதம் மனிதனின் அடையாளமாயிற்றோ, அன்றே துவங்கிய யுத்தம் இது.

உயிர்த்திருத்தலுக்குத் தேவை என்பதையும் தாண்டி, ஆண்டான் அடிமைக் காலம் கடந்து, ஆள்பவன் ஆளப்படுபவன் என்பது போய்,  தன் சுகபோகத்திற்காக மனிதன் மற்றவனை அடிக்கத் துவங்கினான்.  அடிப்பதே நியாயமாயிற்று. உயிர் வாழ்வதே நோக்கமென்பது போய் வெற்றியே பிரதானமாயிற்று. இவ்வெற்றிப் போதைக்கு பல உயிர்கள் பலியாயின. பல கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டன.

எதிர்ப்பு எப்போதும் இருந்திருக்கிறது. எதிர்த்து அழிந்து போதல் நம் வரலாற்றில் பல இடங்களில் காணக்கிடைக்கிறது. எதுயெதற்கோ மனிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. எதையெதையோ காப்பாற்ற மனிதன் போராடி மாண்டுபோயிருக்கிறான்.

மனிதன் தன்னை மொழி, குழு, மதம் என்று என்னவெல்லாமோ கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறான். எதையெல்லாம் அடையாளமாகக் கொண்டானோ அதைக்கொண்டே, அதன் பொருட்டே அழிக்கவும் பட்டிருக்கிறான்.

நீண்ட காலங்களுக்குப் பிறகே இம்மனிதர்கள் ஒன்றைக் கண்டு கொண்டார்கள். அது, அவர்களின் உயிர், உடைமை, உணர்வு, உணவு, இருப்பிடம், மொழி, காலாச்சாரம், பண்பாடு, மதம், விடுதலை என அனைத்தையும் உட்கொண்டது. அதையே தங்களுக்கான அடையாளமாகக் கொண்டார்கள். அதைக்கொண்டே தங்களை ஒருங்கிணைத்தார்கள். அதைக்கொண்டே போராடினார்கள். அதைக்கொண்டே தங்களைப் காத்துக்கொண்டார்கள். மனிதர்கள் தங்களின் அந்தப் புதிய அடையாளத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டார்கள்.

ஆம்.. இனமே மனிதக்கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது. ஒரு இனமென்றால் அதற்கென்று ஒரு மொழி, கலாச்சாரம், பண்பாடு, நிலம், நாடு இருக்கிறது. அதற்கும் மேலாக அவ்வினத்திற்கென்று தனியாக உணர்வும், குணமும் உண்டு. அதற்கு  எப்போதும் சுதந்திரமாக வாழ வேட்கையும் உரிமையும் உண்டு. அச்சுதந்திரத்திற்காகவே இங்கே பல போர்கள் நடந்துள்ளன.

நாடு கடந்து, தேசம் கடந்து, கண்டம் கடந்து மனிதக் கூட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல இனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பல இனங்கள் விடுதலையைப் போராடி வென்றிருக்கின்றன. இதையெல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. எழுத்தாக, ஓவியமாக, இலக்கியமாக, பாடலாக, நடனமாக, நாடகமாகப் பதிவு செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் இத்தகைய வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்ந்து/போராடி/வென்ற/மறைந்த மாமனிதர்கள், அப்பாவி மனிதர்கள் திரைப்படங்களில் இரத்தமும் சதையுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே ‘திரைப்படம்: உண்மைச்சம்பவம்’ என்னும் இக்கட்டுரைத் தொடரை எழுதத் துவங்குகிறேன்.

கருத்துகள்

  1. நண்பா!

    கண்டிப்பாய் நீங்கள் சொன்ன மனித இனச் சுதந்திரப் போராட்டப் படங்களையும், அழிக்கப்பட மனித இனங்களைப்பற்றிய திரைப்படங்களையும் அறிமுகப்படுத்துங்கள், வாசித்து மகிழ்கிறோம். உங்களின் எழுத்து நடை அருமையாக இருக்கிறது. கமெண்ட் Embeded ஆக இருக்கிறது. Popup or New Window ஆக மாற்றுங்கள். அலுவலகத்தில் இருக்கும் பலரால் இந்த Option-ல் கமெண்ட் செய்ய இயலாது.

    வாழ்த்துக்கள்...

    பிரபாகர்...

    பதிலளிநீக்கு
  2. பிரபாகர் உங்களின் கருத்துகளுக்கு நன்றி. இது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.
    விஜய் ஆம்ஸ்ட்ராங். ஒளிப்பதிவாளர்

    பதிலளிநீக்கு
  3. ஒரு விபத்தாக உங்கள் பக்கத்திற்கு வந்து சேர்ந்தேன்.. வெளியேற சில மணிநேரம் ஆனது..
    சிறப்பான புகைப்படங்கள்..
    தொடர்ந்து உங்களது திரைப்பட அறிமுகங்களையும் எதிர்நோக்குகிறேன்.
    நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. Your blog not shown in Google reader.. pls make this to show...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...