Thursday, June 24, 2010

அடையாளம் அற்றவர்களாகி விடுவோம்..!


இப்படம் எடுப்பதனால் உலகம் மாறிவிடுமென்று நான் எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கே. அப்படத்தை நான் எடுத்ததற்கு காரணம் அக்கதை சொல்லப்படவேண்டும் என்பதனால்தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுசெய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க் 
ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலை செய்ததைப்பற்றி விவரிக்கும் படம். 1972-இல் ஜெர்மானிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் 'கறுப்பு செப்டம்பர் (BSO)' என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனிய போராளிக்குழு, பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் மரணத்தில் முடிந்தது அந்தச் சம்பவம். உலகமே அதிர்ந்தது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் 1979 காலகட்டத்தில் தன்னுடைய உளவு நிறுவனமான 'மொஸாட்டை' பயன்படுத்தி 'கறுப்பு செப்டம்பர்' உறுப்பினர்களை தேடித்தேடிக் கொன்றது. இந்தப் பழிக்குப்பழி வாங்கிய ரகசியச் சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 2005-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த 'மூனிச்' திரைப்படம். இவ்விரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இரண்டு படங்களும் 'யூதர்'களைப் பற்றியது. யூதர்களுக்கு மற்ற இனம் இழைத்த அநீதியும், அதற்கு அவர்களின் எதிர்வினையையும் விவரிக்கின்றன. இதனை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படமாக ஏன் எடுக்கவேண்டும்?. காரணம் மிக எளிமையானது. மிக ஆதாரமானதும் கூட. ஏனெனில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஒரு யூதர். அமெரிக்காவில் பிறந்தவர். அங்கேதான் தொழில் செய்பவர். ஆனாலும் தான் ஒரு யூதன் என்ற அடையாளத்தை எப்போதும் துறக்காதவர். வசூல் மன்னனாக இருந்தாலும், தன் இனத்திற்கு தான் செய்யவேண்டிய கடமையாக தன் இனத்தின் துயர வரலாற்றை படைப்பில் பதிவுசெய்கிறார்.இவ்விரண்டு படங்களும் மிக முக்கியமானவை. ஏனெனில், இதில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் செய்தி இருக்கிறது. அதாவது 'ஷிண்டலர்'ஸ் லிஸ்ட்' படத்தின் மூலம் யூத இனத்திற்கு உலகம் இழைத்த அநீதியை அவ்வினம் மறந்துவிடக்கூடாது என்பதும் 'மூனிச்'படம் மூலம் தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதையும் உலகத்திற்கும் சொல்லாமல் சொல்கிறார். இதை ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியாகவோ அல்லது ஒரு இனத்தின் அங்கத்தினராகவோ அவர் செய்திருக்கலாம். செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
'ஒலிவர் ஸ்டோன்' (Oliver Stone) என்ற புகழ்ப்பெற்ற
இயக்குனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'பிளாட்டூன்', 'வால் ஸ்டீட்', 'JFK', 'ஹெவன் அண்ட் எர்த்', அலெக்ஸ்சாண்டர்' போன்ற படங்களை எடுத்தவர். இவர் வியட்நாம் போரைப்பற்றி மூன்று படங்களை எடுத்திருக்கிறார். 'பிளாட்டூன்' (Platoon), 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' (Born on the Fourth of July) மற்றும் 'ஹெவன் அண்ட் எர்த்' (Heaven & Earth). இம்மூன்று படங்களும் வியட்நாம் போரின் அவலத்தை வெவ்வேறு தளத்திலிருந்தும், மாறுபட்ட பார்வையிலும் சொல்லுபவை. 'பிளாட்டூன்' மற்றும் 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' படங்கள் ஒரு இராணுவ வீரனின் பார்வையில் சொல்லப்படுகின்றன. 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' ஒரு அமெரிக்க இளைஞனின் வியட்நாம் போருக்குப் பின்னாலான அவல நிலையைச் சொல்லி, போரின் குரூரத்தையும் அமெரிக்காவின் போர் வெறியையும் சுட்டிக்காட்டுகிறது. 'ஹெவன் அண்ட் எர்த்' வியட்நாமிய கிராமத்தில் வாழ்ந்த 'Le Ly Hayslip' என்கிற பெண்ணின் போர் அனுபவங்களையும் அதனால் அவள் வாழ்க்கையடைந்த சீரழிவையும் சொல்லுகிறது.  


'ஒலிவர் ஸ்டோன்' அமெரிக்காவில் பிறந்தவர். யூதத் தந்தைக்கும் ஃபிரஞ்ச் தாய்க்கும் பிறந்தவர். அவருக்கு வியட்நாமைப்பற்றி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?. அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை? காரணம் இருக்கிறது.வட அமெரிக்க வியட்நாம் போர் நவம்பர் 1,1955-லிருந்து ஏப்ரல் 30,1975 வரை நடந்தது. 'ஒலிவர் ஸ்டோன்' 1967- 68 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் போர்வீரனாக வியட்நாம் போருக்கு அனுப்பப்பட்டார். அப்போர்க்கால அனுபவமும், அதன் பேரழிவுகளும்தான் பிற்காலத்தில் அவரை வியட்நாம் போரினைப் பற்றியப் படமெடுக்கத் தூண்டின. அப்போரில் வட அமெரிக்கா படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இன்று வரை அதைப் பெரும் அவமானமாக வட அமெரிக்கா கருதுகிறது. ஒரு தேசமே அவமானமாகக் கருதும் போரினைப்பற்றி, அந்நாட்டு குடிமகனே படமெடுப்பதற்கு இவைதான் காரணங்களாக இருக்க முடியும். ஒன்று தைரியம். மற்றொன்று, மனிதம் மீதிருக்கும் அளவுகடந்த அன்பு. 

அந்த அழிவுப்போரில் கலந்துக்கொண்டவன் என்பதனாலையே அதைப்பற்றி படமெடுக்க துணிகிறான் இப்படைப்பாளி. அதைத் தன் தார்மீகக் கடமையாகவும் கருதுகிறான்.


இப்படி எண்ணிலடங்காப் படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிட முடியும். பல நாட்டுப் படைப்பாளிகள் தங்கள் நாட்டின் பிரச்சனைகளை தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அதை உலக கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இங்கே இவ்விரண்டு இயக்குனர்கள் உதாரணமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். அவர்களிருவரும் வட அமெரிக்கர்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பெரும் வணிகமயமான 'ஹாலிவுட்டைச்' சார்ந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் வட அமெரிக்காவின் போர் வெறியும் அதன் வியபார அரசியலும். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க, அதன் மடியில் உட்கார்ந்துக் கொண்டு மனிதம் பேசுவதும், அழிவைச் சுட்டிக் காட்டுவதும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் ஒரு படைப்பாளியாய், மனிதனாய் முடியும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

ஆனால் இங்கே நம் படைப்பாளிகள்? எத்தனை படைப்புகளில் நமது சமூகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்? எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப்படுத்திருக்கிறார்களா? செயல்பாடுகளில்? ஒன்றும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. இங்கே நமக்குக் கருத்துகளே கிடையாது. அப்புறம் எங்கே செயல்பாடு, பதிவு எல்லாம்.?

அரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனையை கண்முன்னே கண்டும் அதை பதிவுசெய்யாதவர்கள் நாம். முப்பது ஆண்டுகால போராட்ட வரலாற்றையும் நம் திரைப்படங்களில் பதிவுசெய்யக்கூடிய தகுதியோ, தைரியமோ அற்றவர்கள் நம் திரைப்படத்துறையினர். ஈழம் வேண்டாம்.. இனம் வேண்டாம்.. மனிதம்? சமூகம்,ஏழ்மை,வாழ்க்கை என எதைப்பற்றியாவது குறிப்பிடும் படியாக நாம் திரைப்படம் எடுத்திருக்கிறோமா?

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. அவரை சந்தித்த ஒரு வெளிநாட்டு அறிஞர் கேட்டாராம், 'உங்கள் நாட்டில் பிரச்சனைகளே இல்லை போலிருக்கிறது, உங்கள் திரைப்படங்கள் காதலைத்தான் எப்போதும் பேசுகின்றன' என்று. அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்ததாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அவர் மட்டுமில்லை, அக்கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் அநேகம் பேர் உண்டு இங்கே.

மத்திய கிழக்கில் ஒரு நாடு துண்டாடப்பட்டதற்கு ஒட்டுமொத்த இனமே இன்று வரை போராடி வருகிறது. நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கே நம் இனம், நாம் பேசும் அதே மொழி பேசும் மக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள் கண்ணுக் கெட்டிய தூரத்தில். காது கேட்கும் தூரத்தில். நாம் என்ன செய்துவிட்டோம்? அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே? மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். படைப்பாளியாய்? நம் படைப்புகளில் அதை பதிவுசெய்ய வேண்டாமா? இந்த அவலத்தை உலகிற்குச் சொல்லவேண்டாமா? நம் மகன்கள் தெரிந்துக்கொள்ள அதைப் பதிவுசெய்வது நம் கடமை அல்லவா.

இங்கே சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். உணர்வோடும் தகுதியோடும். ஆனால் அவர்களால் தமிழ்ப்படங்களில் எதையும் சுதந்திரமாகப் பதிவுசெய்துவிட முடியாது. ஏனெனில் கோலிவுட் என்பது தமிழன் கையில் இல்லை. அது அயல் மாநிலத்தவரின் கைகளில் போய்ச்சேர்ந்து பல காலம் ஆகிறது. நடிகர்களிலிருந்து, தயாரிப்பாளரிலிருந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் 'பைனான்சியர்' வரை எல்லாம் அயல் மாநிலத்தினர்தான். எடுப்பதுதான் தமிழ்ப் படம், அதிலெதிலும் தமிழ்ச் சமூகம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள இங்கு ஒரு கூட்டமே உண்டு. ஒரு இயக்குனரின் படைப்புலகத்திற்குள் இங்கே யார் யாரோ நுழைய முடிகிறது. நடிகன், தயாரிப்பாளர் எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுப்பவன் வரை.

பாவம், நம் தமிழ் படைப்பாளிகள். இலட்சியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு போராடும் போராட்டத்தில், தங்களையே தொலைத்து விட்டார்கள். தாங்கள் யார் என்ற அடையாளமே அவர்களுக்கு தேவையற்றுப் போய்விட்டது. தொலைத்தக் காலமும், தொலைத்த இளமையும், தொலைத்த வாழ்க்கையும் இங்கே ஏராளம் உண்டு.

இதில் எங்கே இனத்திற்காக போராடுவது என்பது உங்கள் பக்க நியாயம் என்பதனால்தான், எல்லாவற்றிக்கும் உங்களை வற்புறுத்தியே அழைத்துவர வேண்டியதாக இருக்கிறது. களத்திற்கு வேண்டாம், அடையாள அணிவகுப்பில் கூட பங்குபெறத் தயங்குகிறோம். எதிரி உன்னை பகைவன் என்று வாள் தூக்கிவிட்ட போதும் நீங்கள் யார் என்று உணராதது உங்களின் சாபக்கேடு.

தமிழர்களாக, படைப்பாளிகளாக நாம் மீட்டெடுக்க வேண்டியது, மிக நீண்ட பட்டியலாக நீளக்கூடியது. ஆயினும், நம் வாழ்வாதாரத் தேவைகளை வென்றெடுத்துவிட்டு மொழியையும் இனத்தையும் மீட்டெடுக்கலாம் என்று நினைத்தோமானால், நாம் அடையாளமற்றவர்களாகி விடுவோம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இனமீட்புக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இரண்டும் ஒரு சேர சமகாலத்தில் நடைபெற வேண்டும். தவறினால் ஒரு அடையாளமற்ற நாடோடி சமூகத்தை உருவாக்குபவர்களில் நாம் முன்னோடிகளாகி விடுவோம்.

சமூகச்சுமையை நீங்கள் தூக்காதபோது, அது உங்கள் பிள்ளைகளின் முதுகில் ஏற்றப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். பாதுகாப்பான தினசரி வாழ்க்கையினை தொலைக்க நீங்கள் தயங்கினால், உங்கள் பிள்ளைகள் தொலைக்க வேண்டிவரும். களத்திற்கு வரவேண்டியது நீங்களா உங்கள் பிள்ளைகளா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் தோழர்களே.

அதுவரை உண்மையை பேசத் தயங்கும் (தவறும்) நம் அறிவு ஜீவிகளின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.


குறிப்பு: ’இந்தப் பதிவுக்கும் ராவணன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது இக்கட்டுரைக்கு முன்பு வைத்த தலைப்பு. அதை இப்போது மாற்றி இருக்கிறேன். குறிப்பாக எந்த காரணமும் இல்லை. இக்கட்டுரை ராவணன் படம் வந்திருந்த சமயம் எழுதப்பட்டது. காலம் கடந்து இப்போது அது பொருளற்றிருப்பதாக உணர்ந்ததனால், மாற்றி இருக்கிறேன். அவ்வளவே.

Tuesday, June 15, 2010

இது பகலும் அல்ல இரவும் அல்ல....

நாம் வாழும் உலகம் அழகானது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.  இயற்கை, தன்னை உருவாக்கிக்கொண்ட போது தன்னை ஒரு அழகு தேவதையாகத்தான் படைத்துக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் அதைப்பற்றிய எந்த அபிப்பிராயமும் இல்லாமல் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். 


’எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்..’ என்பது போல, எத்தனைக்கோடி அழகு வைத்தாய் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி இருக்கும் அழகை நாம் பார்க்கத் துவங்கினால் அதன் எல்லை விரிந்துகொண்டே போகிறது. அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தின் அழகைப் பார்க்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இந்த பதிவுகள். முந்தைய பதிவான 'மாலை வெயில் சிதறிக்கிடந்தது' அப்படி ஒரு முயற்சியே..  

Monday, June 14, 2010

Panoramic- படங்கள் எப்படி எடுப்பது?
பெனோரமிக் படங்கள் என்பது நம்மைச் சுற்றி இருக்கும் வெளியை முழுமையாகக் காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொறுத்துப் பரப்பளவு மாறுபடும்.

Sunday, June 13, 2010

மாலை வெயில் சிதறிக்கிடந்தது
சும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்டும் படாமலும் இருப்பதில் ஒரு தனி அழகு உண்டு. அதை புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். ஒளிப்பதிவில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது 'Back Light'-இல் படம் பிடிப்பது. அதுவும் குறிப்பாக, இலைகளை 'Back Light'-இல் படம் எடுத்தால் அற்புதமாக இருக்கும். 


அதன் சில மாதிரிகள் இங்கே.


இந்தப்புகைப்படங்கள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தில் எடுத்தது. வெளியே எங்கேயும் செல்லவில்லை. 'Photoshop'-இல் கொஞ்சம் சீரமைக்கப்பட்டன, அவ்வளவே! 

Saturday, June 12, 2010

"What's my name, Uncle Tom ... What's my name?"


“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக. 

நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். 

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான். 


அந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான்.  ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லை, அவனது இன எழுச்சியாகவும் இருந்தது.

அது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல, எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.  

ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும்.

அந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது  ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.

பன்னிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியைத் திருட்டுக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலீஸ்காரர், அவனுக்குக் குத்துச்சண்டையைப் பயிற்றுவித்தார்.  உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காகக் கலந்து கொண்டான்.  தொடர்ந்து வெற்றிதான்.  அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக'  இருந்தவன், ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உருமாறுகிறான்.

1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துகொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ். 

அவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே, அது போல.


அதேப்போல மற்றொரு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்ப்பித்தான் அவன்.


“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்


“I won’t be who you want me to be!” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்கிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.
இப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை. 


எதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருக்குலைப்பதும் அவனுக்குக் கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்?' என்று சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். மேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' ("float like a butterfly and sting like a bee,") என்றான். 

இப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான். 

அதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.

1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முதன் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனது வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன்தான். 


தன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கீகாரமாக, மாற்ற முயன்றான்.  ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனது வெளிப்பாடாக இருந்தது.

தான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான்.  அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்க்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா? அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன.

ஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிரூபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா?


தன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரைக் களைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.


ஆம் தோழர்களே! உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி'தான் அவர். அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது.  தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. 


Ernie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார்.  அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதற்கு தண்டிக்க நினைத்தார். 

அந்தப் போட்டி முடியும் முன்பாக "என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும் வரை, ஒவ்வொரு குத்தின் போதும் "What's my name, Uncle Tom ... What's my name?" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

டெரில் மிக மூர்க்கமாகத் தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனைத் தாக்கினார் அலி என்கிறார்கள்.
பெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி? இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த இனத்தின் சார்பாக விழுந்த அடி அது.  இந்த சுதந்திரப் பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.அது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார். 

“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்நாமியரிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.


"இல்லை, நான் போகப்போவதில்லை. 10,000 மைல் தாண்டிபோய், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளைக் கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தொடர்வதற்கு உதவப்போவதில்லை"


"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுபோடச் சொல்கிறார்கள்? இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது.."


இவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார்.  ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.

இந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார்.  மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி, அலியின் முன் வந்து "கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா? அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்" என்றார்.

மறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது. மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.  


தன் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக, போராடிப் பெற்ற பட்டத்தையும்  தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார்.  ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது. அலி மக்களோடு பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.
பிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார்.  ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி "The Rumble In The Jungle" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்புச் சாம்பியன். அவரை வெல்வது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லின. 

அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம்.  எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்கக் கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது. 


அப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாகப் புரியும்.   


“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக. 

நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். 

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.


அச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுக்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துகொண்டு அடிகளைத் தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார். 

ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார். 

இதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி "The Rope-A-Dope" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings' (மன்னர்களாக நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் (1996) விருதையும் பெற்றது.


முன்னோட்டம்..


முழுப்படம்..


1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார்.  அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.


அதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இன மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார்.  மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள். 

1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்கப் பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-லிருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். 


அமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரைச் சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைத்தாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். 


1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு. 

1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கியத் தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவு தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு.  பின்பு 1996-இல் அட்லாண்டா ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்றுத் தங்கப்பதக்கம் இவருக்குத் தரப்பட்டது.
இவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் அலி (Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்'  முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.  

இப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது.

ALI - Trailer - HQ - (2001)

அற்புதமான படம். சிறந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.


ஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுபோக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னைப் பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன்.  ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையாக நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என் வரையறையில் நல்ல படமாகக் கருதுகிறேன்.


சில படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாடச் செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சில படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..! 

இப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது.  அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது. 


இந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாளனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று.  மிகக் கடினமான கட்டுமானத்தைக் கொண்டது இப்படம்.  இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னணியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.  


"நானே மிகச் சிறந்தவன், நான் அறிந்துக்கொள்வதற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்"
 -முகமத் அலி


"நானே மிகச் சிறந்தவன்" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.


தன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை.  தன் வெற்றியைத் தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொலைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும்,  'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.


அலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் "I shook up the world!" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை, மேன்மையும், நன்மையும் பிரகாசிக்கத் தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை. 

அலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான்.  நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.

"மற்றவர்களுக்குச் சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை" -முகமத் அலி        
                                                                                                                                          
    
Saturday, June 5, 2010

வெட்கப்பட வேண்டியவர்கள்

சமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலை செய்து வருவதைக் கண்டித்து நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். 


நமக்கு அந்தப் படுகொலைகளைப்பற்றி தெரிந்ததெல்லாம் கொஞ்சம்தான். மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும், சமீபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாகவும் மட்டும்தான் அறிந்து வைத்திருக்கிறோம்.