"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்"


இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா' (Belorussia)-வை 1941-இல் பிடித்தது. வழக்கம் போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப்படுத்தினார்கள். மிக வேகமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு, தப்பி பிழைத்த நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் முப்பது வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்துப் பன்னிரண்டு வயதுக்காரன். நாஜிப் படையிடமிருந்து தப்புவதற்காக, அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி. வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழி தெரியாது என்பதனால், காடு பாதுகாப்பான இடமாக இருக்கும் என கருதுகிறார்கள். எத்தனை நாள் இந்த காட்டுவாசம் என்பது தெரியாது. உணவுக்கு வழியேதுமில்லை. ஆரம்பத்தில் பழங்களை உணவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அது எத்தனை நாள் முடியும்?!


உணவுக்குக் காட்டைத்தாண்டி வெளியே கிராமத்திற்குத்தான் போக வேண்டும். அப்படி உணவைத்தேடிப் போன போது இவர்களைப்போலவே இன்னும் சில யூதர்கள் தப்பிப்பதற்காகக் காட்டுக்குள் வருகிறார்கள். அவர்களும் இவர்களோடு சேர்ந்து காட்டில் தங்குகிறார்கள். இப்போது அவர்களுக்கும் சேர்த்து உணவு தேட வேண்டியதாகிறது. பக்கத்து நகரத்திலிருந்து தமக்கான உணவுப்பொருள்களைக் கவர்ந்து வருகிறார்கள். இப்படி சில நாட்கள் போகிறது. இன்னும் பலர் தப்பிவந்து இவர்களோடு அடைக்கலம் ஆகிறார்கள். அவர்களையும் சேர்த்து பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு உணவு அளிப்பதும் இச்சகோதர்களின் கடமையாகிறது. அவ்விடம் ஒரு முகாமாக மாறுகிறது. 

இந்நிலையில் தூரத்து கிராமத்தில் இருந்த இரண்டாவது சகோதரனின் மனைவியும் மகனும் கொல்லப்பட்டனர் என, அங்கிருந்து தப்பித்து வந்தவர்கள் மூலம் தெரியவருகிறது. மேலும் நகரத்தில் யூதர்களைக் காட்டிக் கொடுக்கும் காவல்துறை அதிகாரியைப் பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க நினைக்கிறார்கள். அதன்படி, மூத்தவனான 'தூவியா' (Tuvia) தன் பெற்றோர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமான அவ்வதிகாரியைத் தேடிச்சென்று கொல்கிறான். 

வரும் நாட்களில் கையில் ஆயுதமோ உணவோ இல்லாமல் போகவே அருகில் இருக்கும் நகரத்திற்கு சென்று நாஜிக்களைத் தாக்கி உணவையும், ஆயுதங்களையும் கவர்ந்து வருகிறார்கள். இதில் மூன்றாவது சகோதரன் நாஜிகளிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வருகிறது. அவன் காட்டுக்குள் தப்பி ஓடுகிறான். அவனை நாஜிக்கள் துரத்திச்செல்லுகிறார்கள். தம்பியை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மற்றவர்கள் திரும்பி வருகிறார்கள். தப்பி வந்த சகோதர்களிடையே சண்டை வருகிறது. இதற்கெல்லாம காரணம் இரண்டாதவன் 'ஜூஸ்'(Zus) தான் என்று சண்டை வந்து, இரண்டு சகோதர்களும் பிரிகிறார்கள்.

'ஜூஸ்' முகாமை விட்டு விலகி ருஷ்ய படைகளோடு சேர்ந்து போராட சென்றுவிடுகிறான். மூத்தவன் 'தூவியா' அங்கேயே தங்கி முகாமை பாதுகாப்பதில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறான். காலம் ஓடுகிறது. இன்னும் பல யூதர்கள் தப்பி வந்து இவர்களோடு காட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கும் உணவிற்கும் 'தூவியா' பொறுப்பேற்கிறான். நாஜிப்படையால் துரத்தப்பட்ட மூன்றாவது சகோதரனாகிய 'அசேயல்' (Asael) தப்பி வந்து இவர்களோடு இணைந்து கொள்கிறான். பருவகாலம் மாறி பனிக்காலம் வருகிறது. பனியில் உணவின்றி வாடுகிறார்கள். இந்நிலையில் இவர்களைத்தேடி நாஜிப்படை வருகிறது. அவர்களோடு சண்டையிட்டு வெல்கிறார்கள். தொடர்ந்து இனி அவ்விடத்தில் தங்கமுடியாது என்பதனால் வேறு இடம் தேடிச் செல்லுகிறார்கள். அங்கே தங்களுக்குத் தேவையான முகாம்களை அமைத்துக்கொள்கிறார்கள். உணவு பற்றாக்குறை, தொற்றுநோய், பனிப் பொழிவு என பல இன்னல்களுக்கிடையே உயிரைத் தக்க வைத்துக் கொள்ள போராடுகிறார்கள். இந்த மோசமான சூழ்நிலையில் அவர்களிடையே விவாதம் வருகிறது. இங்கே கிடந்து மரணிப்பதைவிட காட்டைவிட்டு வெளியேறி விடலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. அதை மறுக்கும் 'தூவியா' தாங்கள் பிழைத்திருப்பதன் வரலாற்றுத்தேவையை விளக்கச் சொல்லும் வாசகம்.. 
"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்".காலம் கடந்தோடுகிறது. வருடம் முடிகிறது. இந்நிலையில் நாஜிப்படை வீரன் ஒருவனை பிடித்து வருகிறார்கள். அவனை அனைவரும் அடிக்க முற்படுகிறார்கள். கொல்ல வேண்டும் என்கிறார்கள். அவனோ அழுகிறான். தனக்கு மகன் இருப்பதாக கதறுகிறான். தன்னை உயிரோடு விட்டுவிடும் படி மன்றாடுகிறான். மனிதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவனை விடுவிப்பது சார்ந்து அங்கே பெரும் விவாதம் வருகிறது. பெரும்பாலானோர் மறுக்கிறார்கள். மற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி 'தூவியா' அவனை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட அவனோ நன்றி மறந்து, நாஜிப்படையை அங்கே அழைத்து வருகிறான். அவர்களிடம் போராடி தப்பிக்கிறார்கள். இங்கே இருந்து தப்பிப்போகும் சூழ்நிலையில், இளையவன் 'அசேயல்' பின் தங்கி அவர்களுக்கு பாதுகாப்புத் தருகிறான். தப்பி ஓடியவர்கள் அடுத்த முனையில்  ஒரு மிக நீண்ட சதுப்பு நிலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது கடக்க முடியாததாக தோன்றுகிறது. 

அதை கடந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை. இல்லையேல் நாஜிக்களிடம் மாட்டிக்கொண்டு உயிர்விட வேண்டும். இங்கே அம்மொத்தக் கூட்டமும் ஒரு முடிவெடுக்கிறது.. அச்சதுப்பு நிலத்தை கடப்பதென. ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு, குழந்தைகளையும் பெரியவர்களையும் தூக்கிக்கொண்டு ஒரு சங்கிலித் தொடராக அவர்கள் அச்சதுப்பு நிலத்தை பல மணிநேரம் நடந்து கடக்கிறார்கள். இச்சம்பவம் வரலாற்றில் முக்கியமான சம்பவங்களில் ஒன்று. அதீத தன்னம்பிக்கை அல்லது உயிர் வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தின் விளிம்பில் எடுத்த அம்முடிவு எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. போராடிக் கரையேறிய அக்குழுவை நாஜிப்படை தாக்குகிறது. எதிர்த்துப் போராடுகிறார்கள். பீரங்கி கொண்டு தாக்கப்படுகிறார்கள். தாக்குப்பிடிக்க முடியாத நிலை வருகிறது. திடீரென்று எங்கிருந்தோ வரும் இரண்டாம் சகோதரன் 'ஜூஸ்'(ZUS) நாஜிப்படையைத் தாக்கி அழிக்கிறான். தப்பித்த அனைவரும் காடுநோக்கி போகிறார்கள். 


அம்மொத்த குழுவும் அதன் பிறகு இரண்டாண்டுகள் காட்டில் முகாம் அமைத்து தங்கினார்கள். அங்கே மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எல்லா அடிப்படைத் தேவைகளையும் அமைத்து வாழ்ந்தார்கள். ஒருவழியாக போர் முடிந்து வெளியே வந்த போது அவர்கள் மொத்தம் 1200 நபர்களாக இருந்தார்கள். அந்த நான்கு சகோதர்களும் காப்பாற்றியது 1200 நபர்கள், அவர்களுடைய தலைமுறைகள் என இப்போது பல ஆயிரங்களாக பெருகிவிட்டனர். அச்சகோதர்களில் மூன்றாதவனான 'அசேயல்' ருஷ்ய படையில் சேர்ந்து போரிட்டு இறந்துபோனான். அவன் காட்டில் இருந்தபோது மணந்துக் கொண்ட மனைவியின் மூலம் பிறந்த குழந்தையை அவன் பார்க்கவே இல்லை. 'தூவியாவும்' 'ஜூஸ்'-ம் பின்னர் அமெரிக்காவில் முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். இந்த நான்கு 'பெலிஸ்கி சகோதர்களான' (Bielski) 'தூவியா' 'ஜூஸ்' 'அசேயல்' மற்றும் 'அரோன்' செய்த சேவை பின்னர் கண்டு கொள்ளப்படவேயில்லை. அவர்களுக்கான எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. வரலாறு அவர்களை மறந்து போனது.


இவ்வாழ்க்கையைப் பதிவுசெய்யும் 'Defiance' என்கிற இப்படம்  மிகச்சிறந்த நடிப்பையும், உரையாடலையும் கொண்டது. ஜேம்ஸ்பாண்டாக நாம் அறிந்த, 'டேனியல் கிரேக்கின்' மிக அற்புதமான நடிப்பை இதில் காணலாம். இரண்டாம் உலகப்போரையும் நாஜிக்களின் கொலைவெறியையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இப்படம் வேறொரு தளத்தில் இயங்குகிறது. உயிர் வாழ்தலின் தேவையை, அவசியத்தை இப்படம் விவரிக்கிறது. 


ஒரு இனம் அழிக்கப்படும் போது அவ்வினம் தன்னைத் தற்காத்துக் கொள்வதே, உயிர்த்திருப்பதே பகைவனைப் பழிவாங்குவதாகும் என்ற செய்தியை,  வரலாற்று உண்மைச் சம்பவத்தைக் கொண்டு இப்படம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 


படத்தில் பல வசனங்கள் குறிப்பிடப்படவேண்டியவை. 


"நாம் மிருகங்களைப் போல வேட்டையாடப்படலாம், அதற்காக நாம் மிருகங்களாகிவிட முடியாது" 


"நாம் இங்கே மனிதர்களாக வாழ்வோம், உயிர்வாழ முயற்சித்தலில் நாம் மரணிக்க நேர்ந்தாலும் குறைந்தபட்சம் மனிதர்களாக சாவோம்"Comments

ஒரு நல்ல பகிர்வு சார்.. நன்றிகள் பல...
நல்ல அறிமுகம் நண்பரே. படம் பார்க்கத் தூண்டும் உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.
Vijay Armstrong said…
நன்றி நண்பர்களே..
M.S.E.R.K. said…
நானும் பார்த்திருக்கிறேன் விஜய். அருமையான படம் ! அதைப்பற்றிய உங்களின் பதிவு அதைவிட அருமை! சமீபத்தில் நான் பார்த்த, என்னை மிகவும் பாதித்த, 'Brotherhood' என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் தென் கோரிய படத்தி பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கீழுள்ள லிங்கில் சென்றுப் பார்க்கவும்.
http://nammatheater.blogspot.com/2010/10/brotherhood-2004-taegukgi-hwinalrimyeo.html
Vijay Armstrong said…
நன்றி M.S.E.R.K..இன்னும் பார்க்க வில்லை..பார்த்துவிடுகிறேன்.
Vijay Armstrong said…
நன்றி M.S.E.R.K..இன்னும் பார்க்க வில்லை..பார்த்துவிடுகிறேன்.
சமீபத்தில் நான் பார்த்த நல்ல ஹாலிவுட் படம்.உங்கள் பதிவு படத்தை மனதிற்க்குள் மீண்டும் திரையிட்டது.
Vijay Armstrong said…
நன்றி உலக சினிமா ரசிகன்..
ramtirupur said…
இந்த பதிவை படிக்கும் போது, இப்படித்தானே போரின் போது இலங்கை தமிழர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி மறைந்து வாழ்ந்து இறந்திருப்பார்கள் என்று வருத்தப்பட வைக்கிறது.
Vijay Armstrong said…
ramtirupur: அப்படியாவது தப்பித்து இருக்கவேண்டும் என்று எனக்கு ஏக்கம் இருக்கிறது நண்பரே..
அருமையான விமர்சனம் படம் பற்றி உங்கள் மூலம்தான் அறிந்தேன். அவசியம் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிய எழுத்து. குறிப்பாக நீங்கள் சூட்டிய தலைப்பு .. நன்றி விஜய்
Armstrong Vijay said…
Another good review. Let me comment to watch this movie once.
Armstrong Vijay said…
செம்ம படம்ணா. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வரலாறு அவர்களை
மறைந்துவிட்டது என்பது கசப்பான ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. எனக்கு தெரிந்த
காரணம் :
ஒடுக்கப்பட்ட இனம் அதை விளம்பரபடுத்த
அப்போதைக்கு இயலாததும், பின் சுயநலவாதிகளாக சந்தோசத்தை தேடி அலைவதும்தான்
காரணம் என நினைக்கிறேன். மற்றொன்று தன் இனத்தினரைப்பற்றி பெருமையாக அதிகம்
பேச விரும்பவுதும் இல்லை. அவர்களுடைய கெட்ட விசயங்களை பெரிதுப்படுத்தி
பேசுகிற அளவிற்கு, நல்ல விஷயத்தை பேசுவதில்லை. யாரும் 100% நல்லவர்களாக
இருக்கமுடியாது. சுழ்நிலை, ஒரு பகுதியினருக்கு கெட்டவர்களாக காட்ட தளத்தை
ஏற்படுத்துகிறது. வெளியில் இருப்பவர்களை பார்க்கும்போது அவர்களுடைய நல்ல
விஷயத்தை மட்டும் தெரிந்துவந்து இதைப்போல் பெருமையாக பேசுகிறோம்.
ஏன்,
நீங்களே இவ்வளவு பதிவுகளில், ஒரு உள்ளூர் நாயகரின் பதிவைகூட எழுதவில்லை?
யாரும் இல்லையா? வெளிநாட்டினரை பற்றி எழுதினால்தான் மற்றவர்கள்
படிக்கிறார்களா? காமராஜரைப் பற்றி எழுதவேண்டாம். உங்கள் தோழர்கள்
அவரைப்பற்றியும் தவறாக பேசிக்கெள்விப்பட்டிருக்கிரேன். உங்கள் தோழர்
செந்தில், காமராஜரை திட்டும்போது, அவரிடம் என் கருத்தை கேட்க்கும் பொறுமை
இல்லாததால், நான் அவரிடம் வாதிடவில்லை. எனவே, அவரைவிடுங்கள். கட்டபொம்மனைப்
பற்றி எழுதுங்கள். தமிழில் அவரைப்பற்றி தரமான படம்வரவில்லையா?
அனைவருக்கும் தெரிந்த கதையா? உண்மையில் இல்லை. எனக்கே jockson துரை வசனத்தை
தவிர ஏதும் தெரியாது.
வரலாறு எனக்கு அதிகம் தெரியாது. நீங்கள் என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

கூடுதல்
கேள்விகள்: உங்கள் தோழர் செந்தில், காமராஜரை திட்டும்போது, அவரிடம் என்
கருத்தை கேட்க்கும் பொறுமை இல்லாததால், நான் அவரிடம் வாதிடவில்லை.
படிக்காதமேதை செய்த 20% கேட்ட விஷயத்தை சுட்டிக்காட்டுவதையா படித்தமேதைகள்
செய்துக்கொண்டு இருப்பது? நம் தலைமுறைக்கு விட்டுச்சென்ற வேலையாக ஏன்
நேனைக்ககூடாது? ஏன், நாம் அவரைவிட அதிக சேவைசெய்து
ஓய்ந்துவிட்டோமா? தலைவர்களை குறை கூறுவது போராட்டம் அல்ல. மக்களை விழிப்புற
செய்வதே போராட்டத்தின் நோக்கம். அவரின் 80% நல்ல விஷயத்தை
பின்பற்றுவதைவிட 20% கேட்ட விஷயத்தை தவிர்ப்பதால் மக்கள் மலர்ந்திடுவார்கள்
என நினைக்கிறீர்களா? அவரின் நல்ல பழக்கவழக்கங்களை தெரிந்துகொண்டதால் நான்
கொஞ்சம் மாறியிருக்கிறேன். அவர் நல்லவரா? கெட்டவரா? என தெரிந்து நானோ?
அவரோ? ஒன்றும் செய்யப்போவதில்லை.
Armstrong Vijay said…
சீதர்.. உள்ளூர் நாயகர்களைப்பற்றி எழுத கூடாது என்றில்லை. எழுதலாம். இக்கட்டுரைகளை எழுத தொடங்கியதன் நோக்கம், உலகம் முழுவதும் இனப்படுகொலைகள் நடந்துக் கொண்டே இருக்கிறது என்பதையும் அதை பதிவு செய்த திரைப்படங்களும் உள்ளது என்பதையும் அறியாதவர்களுக்கு சொல்லுவதே. திரைதுறையச் சார்ந்தவன் என்பதனால் நான் அறிந்த திரைப்படங்களிலிருந்து இத்தகைய படங்களை மட்டும் எழுதி வருகிறேன். இதன் தொடர்ச்சியாக தேடிப்பார்ப்பதும் அறிவதும் நிகழும் என்பதனால். அவ்வளவுதான்.


கூடுதல் பதில்: தோழர் செந்தில், நாம் அறிந்த, மதிக்கும் தலைவரைப்பற்றி குறை கூறுகிறார், விமர்சிக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். அப்படி விமர்சிக்க கூடாதவர்கள் என்பவர்கள் இங்கே யாரும் இல்லை. சொல்லப்பட்ட, உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு எதிராக கருத்துக்கள் வரும் போது, ஒருவித அதிர்ச்சியும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆயினும் அத்தகைய குற்றச்சாட்டுகளிலிருக்கும் உண்மைத்தன்மையை தேவைப்படின் தேடி தெளிவு பெற வேண்டியது நம் கடமைதான். அல்லது அதை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம். அது அவரவர் முடிவு. ஆயினும், நாம் முன் நகர, மாற்றங்களை ஏற்படுத்த, முந்தைய பிம்பங்களை கருத்தாக்கங்களை உடைத்து பார்ப்பதும் தேவைப்படின் ஒதிக்கி வைப்பதும் அவசியம் தான். அவ்வகையில் காமராஜரைப்பற்றி தேடிப்படித்து தெளிவு பெறுங்கள். முடிந்தால் அதை பகிரவும் செய்யுங்கள். எனக்கு ஐய்யாவைப்பற்றி அதிகம் தெரியாது. மதிப்புண்டு.
Armstrong Vijay said…
அண்ணா, உங்களின் நிதானமான பதிலுக்கு நன்றி. நான் நல்லவரா? கெட்டவரா? என
தெரிந்துக்கொள்ள விரும்புவன் அல்ல. நல்லவற்றை தெரிந்துகொள்ள விரும்புவன்.
துடப்பத்தை ஆராய விரும்பவில்லை, சுத்தபடுத்திக்கொள்ளவே விரும்புகிறேன்.
அதற்க்கு காரணம் துடப்பம்தான் என சொல்லவும் தயங்க தேவையில்லை என
நெனைக்கிறேன்.

1947 வரை ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை
செய்துக்கொண்டிருந்தோம். இப்போது சுதந்திரமாக வேலை
செய்துக்கோண்டிருக்கிறோம். (software companies, FDI, ...மூலமாக)


நாமும்
பல ஆண்டுகளாக அடிமைபட்டிருப்பவர்கள்தான். மற்ற நாட்டால், இனத்தால்,
ஜாதியால், மொழியால், ... அதற்காக போராடிய பலரும் நம்முள்
இருந்தார்கள்/இருக்கிறார்கள். நம்முல் ஒருவரின் மூலமாக சொன்னால் நன்றாக
இருக்கும் என ஆசைபடுகிறேன்.

இங்கிருக்கும் நல்ல
விசயங்களை மேலோட்டமாக பேசும் நாம், வெளியே இருப்பதை ஆராய்ந்து பேசுகிறோம்.
இங்கிருக்கும் கேட்ட விசயங்களை ஆராய்ந்து பேசும் நாம், வெளியே இருப்பதை
மேலோட்டமாக பேசுகிறோம். இவை நம்மை தூண்டுவதில்லை. நமக்குள்
தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும், நாம் அப்படித்தான் என ஏற்றுக்கொள்ள
செய்யும். ஒரு சிறு உதாரணம் தருகிறேன். வெளிநாட்டுக்கு இடைக்கால பணிக்கு
செல்பவன் சாலை விதியை மதிக்கிறான். இங்கு திரும்பியதும், அவனும் பழைய
பழக்கத்திற்கு திரும்பிவிடுகிறான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சரி என சொல்ல விரும்பவில்லை.எது எப்படியோ, நான் பதில் தர முயன்றது கீழே உள்ள இந்த வரிகளுக்காக.


"இந்த நான்கு 'பெலிஸ்கி சகோதர்களான'(Bielski) 'தூவியா' 'ஜூஸ்' 'அசேயல்' மற்றும் 'அரோன்' செய்த சேவை பின்னர் கண்டுக் கொள்ளப்படவேயில்லை. அவர்களுக்கான எந்த அங்கிகாரமும் தரப்படவில்லை. வரலாறு அவர்களை மறந்து போனது."

உலகம் மறுப்பதற்கான, உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளலாமா?


"திரைதுறையச்
சார்ந்தவன் என்பதனால் நான் அறிந்த திரைப்படங்களிலிருந்து இத்தகைய படங்களை
மட்டும் எழுதி வருகிறேன்" என்பதையே சொல்லாதிர்கள். திரைதுறையச் சார்ந்தவர்
என்பதால்தான் உங்களை படைப்பாளியாகவும் எதிர்பார்க்கிறேன்.

உரிமையுடன் ஸ்ரீதர்
Armstrong Vijay said…
ஸ்ரீதர்.. உன் ஆதங்கம் புரிகிறது. நம்மிடையே இருந்தோர் பற்றி பதிவுகள், படைப்புகள் இல்லை என்பது வேதனையான ஒன்றுதான். அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதும், காலத்தால் மறக்கப்பட்டுவிடும் சாதனையாளர்கள் பற்றி காரணம் கேட்டால் என்னவென்று சொல்லுவது?


உனக்கே கூட..இந்த பதிவு படித்தபிறகுதான், இத்தகைய எண்ணம் உருவாகுகிறது அல்லது வெளிப்படுத்த இடம் கிடைக்கிறது. அல்லவா..


அதுதான் என் நோக்கமும். உலகம் சுற்றுவதை சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்மை பார்க்க வைப்பது. அல்லது நம்மிடையே இருக்கும் வெறுமையை உணரவைப்பது.


//உலகம் மறுப்பதற்கான, உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளலாமா?//வேறென்ன? அயோக்கியத்தனம் தான்..அல்லது சோம்பேரித்தனம். எதையும் தேடி தெரிந்துக் கொள்வதில் காட்டும் மெத்தனம். நாம் இங்கே இன்று நிற்கும் இடத்திற்கு வர எத்தனை தூரம் கடந்துவந்தோம் என்பதும் யாரெல்லாம் அதற்கு உதவி இருக்கிறார்கள் என்பதும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஆதாரம் செயல். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. அதற்கு காரணம்..நம் அறியாமை. அறியாமை என்பது ஒன்று சோம்பல் அல்லது மூடத்தனத்தால் வருவது. எனக்கென்னவோ அதன் ஆதிக் காரணம் சோம்பல் என்பதாகத்தான் படுகிறது. அந்த சோம்பல் நம்மை பலவாரு பேச வைக்கிறது. நம் அறியாமையை மறைக்க பல செயல், பல காரணம் கைகொள்ள வேண்டியதாகிறது. அங்கேதான் அயோக்கியத்தனம் உருவாகிறது. அயோக்கியத்தனத்தின் மூலம் நம் செயலை நியாயப்படுத்த முற்படுகிறோம்.

இப்பதிவு உனக்குள் ஏதோ ஒரு வெறுமையை, கேள்வியை ஏற்படுத்துகிறது எனில்.. அவ்வெறுமையை நீயே கூட நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு.. அய்யா காமராசரைப்பற்றி நீ எழுதலாம். உன்னில் இருந்து நான் எவ்விதத்திலும் மாறுபட்டவன் இல்லை என்று நான் நம்புகிறேன். எனில் என்னால் சாத்தியமாகும் என்று நீ நம்பவதையே நான் உனக்கும் பொருத்தி பார்க்கிறேன். தேடு.. காமராசரைப்பற்றியோ அல்லது கட்டபொம்மன் பற்றியோ தகவல்களைத் தேடு.. தேடி கட்டுரையாக்கு. உன்னால் முடியும் என்று நான் மனதார நம்புகிறேன். இது என்னிடம் கேள்வி கேட்ட உன்னை மாட்டி வைக்கும் முயற்சி அல்ல. இந்த சம்பாசனைகளுக்கு முடிவாக ஒரு தொடக்கம் இருக்கட்டுமே..!
Armstrong Vijay said…
உங்களை போல் கருத்துகூறும் பதிவுகள் எழுதும் தெளிவு இன்னும் நான் அடையவில்லை.
அதுமட்டும் இல்லாமல், சுதந்திர இந்தியாவில் வெள்ளயனுகாக வேலை செய்யும் software Engineer-ல் நானும் ஒருவன் என்பதால், இதற்காக நேரம் ஒதுக்க இயலாமல், என் நேர்மையை
வெள்ளையனுக்கு காமித்து, பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கிரேன். என் சமூகத்தின்
எதிர்ப்பார்ப்பை ஏமாற்றாமல், என்னை ஏமாற்றிக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறேன்.எனவே, உணமைகளை தேடி அலைந்து எழுதவும் முற்பட்டதில்லை. முயற்சிக்கிறேன்.

Popular posts from this blog

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

கடக்கமுடியாத வலிகளுண்டு

GIGALAPSE