முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"

ஐரோப்பாக் கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்துத் தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916, ஈஸ்டர் நாளில் துவங்கப்பட்ட "Easter Rising" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலின்ஸ்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Féin' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கெரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்தத் துவங்கினார். இவரின் 'கெரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டங்களில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்' (Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பப்பட்டு வந்த இளம் ஏழைத் தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.

இந்தப்போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்று அழைக்கப்பட்ட அந்த நாள். பிரிட்டீஷ் உளவாளிகளாலேயே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடனம் செய்தார்.  12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு (IRA) அவர்களைக் கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரிட்டீஷ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரிட்டீஷ் இராணுவம் 'Croke Park'  நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியொரு நபர்களைப் பலி கொண்ட அந்த ஞாயிறை, சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுச்செய்து வைத்திருக்கிறது. இது நடந்தது அயர்லாந்தின் தலைநகர் 'டப்லினில்' (Dublin)1920 நவம்பர் மாதம் 21 நாள்.

Dublin-1920
போராட்டம், பேச்சுவார்த்தை உடன்படிக்கை என நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் நடந்தது. 'மைக்கேல் காலின்ஸ்' என்ற சிறந்த தலைவனை அந்த தேசமே கொன்றது. 'Irish Free State' என அழைக்கப்பட்ட பகுதி 1922-இலிருந்து பிரிட்டீஸ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அயர்லாந்து பாராளும் மன்றம் என்ற இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. 1937க்குப் பிறகு அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உருவாகியது.



பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் 'Protestant' கிருத்துவர்கள் அதிகம். கத்தோலியர்கள் சிறுபான்மையினர்கள். இரு பிரிவனர்களிடையே அரசியல் உரிமை சார்ந்து முரண்பாடுகள் இருக்கிறது. 1960-70-களில் 'Northern Ireland Civil Rights Association' என்ற இயக்கம் சிறுபான்மையினர்களான 'கத்தோலிக்க கிருத்துவர்களின்' உரிமைக்காகப் போராடி வந்தது. இந்த இயக்கம் 1972 சனவரி 30இல் ஒரு 'பொது எதிர்ப்பு ஊர்வலத்தை' ஏற்பாடு செய்தது. இதில் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த ஊர்வலத்தைத் தடுக்க இராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதில் கலவரம் வெடிக்கும், அதை தடுக்க இந்த ஏற்பாடு என சொல்லப்பட்டது.


நேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கூட்டம் மெதுவாக குறிப்பிட்டப் பாதையில் முன்னேறியது. இராணுவம் தனக்குத்தேவையான சிறு சலசலப்புக்காகக் காத்திருந்தது. எதிர்பார்த்தபடி இளவட்டங்களின் கூச்சல், ஆர்பாட்டம் அதிரிகரித்தது. இதுதான் காரணம் என்று இராணுவம் செயலில் இறங்கியது. ஆர்பாட்டக்காரர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், அது தங்களை நோக்கிப் பிரயோகிக்கப்பட்டது என்று காரணம் காட்டி 'இருபத்தியாறு ஊர்வலக்காரர்களை' இராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த 'படுகொலைகள்' நடந்ததும் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான். சரித்திரம் இந்த நாளையும் 'இரத்த ஞாயிறு' என்றுதான் குறித்து வைத்திருக்கிறது.


1972-ல் நடந்த இரண்டாவது 'இரத்த ஞாயிறு' நாளில் நடந்த சம்பவங்களை 'இரத்த ஞாயிறு' (Bloody Sunday) என்ற இந்தப் படம் நம் கண்முன்னே கொண்டுவருகிறது. இந்தப் படம் சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் உண்மையில் நடந்ததைப்போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. ஒரு பரபரப்பான கலவரத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை இந்தப்படம் நமக்குத் தருகிறது.

'மைக்கேல் காலின்ஸின்' வாழ்க்கையை 'மைக்கேல் காலின்ஸ்' என்னும் படம் விவரிக்கிறது. வழி நடத்தும் தலைவன், அவன் முடிவுகளில் இருக்கும் உறுதி, தெளிவு, பிடிவாதம் என ஒரு தேர்ந்தத் தலைவனின் எல்லா குணாம்சங்களையும் இந்தப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. 1920இல் நடந்த 'இரத்த ஞாயிறு' சம்பவங்கள் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


ஆயுதப்போராட்டமோ அல்லது அரசியல் போராட்டமோ இரண்டையும், ஆளும் வர்க்கம் தடுக்கும் நசுக்கும் என்பதை இந்த இரண்டு 'அயர்லாந்து அரசியல்' படங்கள் நமக்குச் சொல்கின்றன.

'மைக்கேல் காலின்ஸ்' திரைப்படத்தில் 'மைக்கேல் காலின்ஸ்'-இன் மறைவுக்குப் பின்னர் அவரைப்பற்றி அவரின் நண்பர் 'ஜோ' குறிப்பிடும்போது இப்படிக் குறிப்பிடுகிறார், "சில மனிதர்கள் காலவோட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"


இப்படி காலவோட்டச் சக்கரத்தில் 'தனக்கானயிடத்தில்' சரியாகப் பொருந்தி, வாழ்க்கையை நகர்த்தி வைத்துவிட்டுப்போன பல மனிதர்கள், தலைவர்கள் உண்டு. அவர்கள் இல்லாமல் அந்தச் சக்கரம் நகர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சில சமயம் வாழ்க்கை அப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப்பிடிக்கிறது. சூழல் அதைத் தீர்மானிக்கிறது. சில சமயங்களில் மனிதர்கள், மாமனிதர்கள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையைத் தேடிப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்கானது மட்டுமல்ல. தன்னோடும் தனக்குப் பின்னால் வருபவர்களுக்குமானது அது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால