முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்"


“Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand
---------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது.

ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி.

எது எப்படியோ, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிம்பத்தைப் பதிவு செய்ய இன்னும் இங்கே தயக்கம் இருக்கிறது. அதாவது ஃபிலிமில் படமெடுப்பதற்குப் பதிலாக டிஜிட்டலை பயன்படுத்துவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டப்படுகிறது. இங்கே குறைந்த செலவில் படமெடுப்பதற்காக மட்டும்தான் டிஜிட்டலை பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரம் பிரச்சனை இல்லை என்றால் ஃபிலிமையே எல்லோரும் முன்மொழிகிறார்கள்.

ஒரு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கும், இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதத்தில் இருக்கிறதா? இருக்கிறது என்றால், ஏன் இந்த தயக்கம்? இந்தத் தயக்கம் நியாயமானதுதானா? போன்ற கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கின்றன.

மறுக்க முடியாத உண்மை ஒன்று இருக்கிறது. ஃபிலிம் தரத்தை இதுவரை எந்த டிஜிட்டல் தொழில்நுட்பமும் சந்தேகத்திற்கு இடமின்றி சமன் செய்யவில்லை. ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே, டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்து, நாம் இந்தனை காலமாக அதைத்தான் பயன்படுத்தி வந்திருந்தோமென்றும், இப்போது புதிதாக 'ஃபிலிம்' தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நாம் அத்தனைபேரும் 'ஃபிலிமை' தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம். ஆகா, இது ஒரு அற்புதம் என்று அதிசயப்பட்டிருப்போம்.

உண்மைதான், ஃபிலிம் அத்தனை சக்தி வாய்ந்ததுதான், பல சாத்தியங்களை 'ஒரு காட்சியைப் பதிவுசெய்தலில்' அது கொடுக்கிறது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. என்றாலும் நாம் அதைத்தாண்டி செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். முந்தைய படி எத்தகைய உறுதியானதாகயிருந்தாலும் நாம் அடுத்த படியில் காலெடுத்துவைத்துதான் ஆக வேண்டும், அப்போதுதான் மேலேற முடியும், அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும். அதைத் தவிர்த்து முந்தைய படி பாதுகாப்பாக இருக்கிறது, நான் இங்கேயே நின்று கொள்கிறேன் என்று சொல்வது அவரவர் சவுகரியம். ஆனால் அது விவேகமோ, வளர்ச்சியோ ஆகாது.

இப்படி, நாம் பலவற்றைச் சிறந்தது என்றாலும் கடந்துவந்திருக்கிறோம், நம் வாழ்கையிலேயே எண்ணற்ற உதாரணங்கள் உண்டு, மண்பாண்ட சமையல், கைக்குத்தல் அரிசி, பட்டுப்புடவை, மருத்துவம் என பல நல்ல விஷயங்களை நாம் கால ஓட்டத்தில் தாண்டி வந்திருக்கிறோம். அதற்கான நியாயமான காரணங்களும் உண்டு என்பது நம் நம்பிக்கை.

அதேபோல்தான் ஃபிலிம் எத்தகைய சிறப்பு வாய்ந்ததாகயிருப்பினும் விரைவில் நாம் அதைத்தாண்டி வந்துவிட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இத்தகைய பீடிகையும், சமாளிப்பும், சிபாரிசும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குத் தேவையா? அது அத்தகைய நிலையிலா இருக்கிறது?. அதன் தரம் சிபாரிசு தேடும் நிலையில்தான் இருக்கிறதா? என்று என்னைக் கேட்டால்... அப்படி இல்லை என்றுதான் சொல்வேன்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஃபிலிம் தரத்திற்கு சில காரணிகளில் வேண்டுமானால் ஈடுசெய்யாமல் இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையானவற்றில் ஈடு செய்துவிட்டது என்பதும், சில விதங்களில் ஃபிலிமை விட டிஜிட்டல் மேம்பட்டது என்பதும், பல சாத்தியங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதும் இன்று உலகம் ஒத்துக்கொண்ட உண்மை, அதுவும் குறைந்த விலையில்.

டிஜிட்டல் திரைப்படத்தயாரிப்பைத் தரத்தோடு செய்ய முடியும் என்ற எண்ணம் 'ரெட் ஒன்' (RED ONE) வருவதற்கு முன்பாக வெறும் நம்பிக்கையாக மட்டும்தான் இருந்தது. 'சோனி', 'பேனாசோனிக்' போன்ற நிறுவனங்கள் 'HD' தொழில்நுட்பத்தை முயன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் 'ரெட் ஒன்' அறிமுகப்படுத்தப்பட்டது (2007).

'ரெட் ஒன்' 'HD' தொழில்நுட்பத்தைத்தாண்டி டிஜிட்டல் திரைப்படத்தை நோக்கி நம்மைக் கொண்டு சென்றது, அது 'RAW' format-ஐ பயன்படுத்தி 4K தரத்தை எட்டியது என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.

இப்போது 'SONY' (F35), 'ARRI' (D21, Alexa), 'Panavision' (GENESIS) போன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திவிட்டன.


SONY F35
ARRI Alexa 
ARRI D-21

PANAVISION GENESIS
இதில் இடைச்செருகலாக, எதிர்பாராத ஆச்சரியமாக 'Canon' நிறுவனம் 'EOS 5D/7D'-ஐ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து இன்பஅதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சிறிய வடிவத்தில் போதுமான தரம் என்பது இதன் சிறப்பம்சம்.

CANON 5D

இந்நிலையில் 'ரெட் ஒன்' அது அறிமுகமானபோது ஏற்படுத்திய அதே போன்றதொரு ஆச்சரியத்தோடு அதன் இரண்டு புதிய கேமராக்களை அறிமுகப்படுத்துகிறது.

Red One 'EPIC':

'ரெட் ஒன்' கேமராவில் மூன்றில் ஒருபங்கு அளவு கொண்ட சிறிய கேமரா இது. ஆனால் அதை விட அதிக தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டது.* 5K ரெசுலூஷன்.(5120 x 2700 PIXELS)

*120fps - நொடிக்கு 120 ஃபிரேம்ஸ் வரை படம் பிடிக்கலாம் (5K). 225fps வரை 2K-இல் படம்பிடிக்கலாம் (UP TO 225FPS @ 2K).

* ஒவ்வொரு ஃபிரேமும் 14MP கொண்டது.*புகைப்படம் எடுக்கவும் பயன்படுத்தமுடியும்.

*13 stops 'native dynamic range' கொண்டது.

*3D படப்பிடிப்புக்கும் பயன்படுத்தலாம்.

*'Multi-camera synchronization'

*MYSTERIUM-X® - என்பது அதன் புதிய 'CCD'. ஒளியைப் பதிவுசெய்ய பயன்படும் சென்சார்.

*இதன் format ஆன 'R3D'-ஐ கீழே இருக்கும் எல்லா எடிட்டிங் மென்பொருளையும் பயன்படுத்தி எடிட் செய்யலாம். (Final Cut Pro, Avid DS, Adobe Premiere and After Effects, Sony Vegas, Assimilate Scratch, Filmlight Baselight, Quantel Pablo, Da Vinci, Nuke, REDCINE-X, ROCKETCINE-X, DVS Clipster, Nucoda, Mystika, Storm)


* லென்ஸ் மௌண்ட், பேட்டரி, சேமிக்கும் சிப், ஹார்ட்டிஸ்க் என எல்லாம் பாகங்களையும் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும்.

*எலட்டரானிக் ரெட் லென்ஸையோ அல்லது 'கெனான்' அல்லது 'நிக்கான்' லென்ஸையோப் பயன்படுத்தி 'Auto Focus' 'Auto Exposure' வைக்கலாம்.

*HDRx™ தொழில்நுட்பத்தில் 18 stops ஒளி வித்தியாசம் கொண்ட காட்சிகளை படம்பிடிக்கமுடியும்.

HDRx™ தொழில்நுட்பம் என்பது 'High-dynamic-range imaging' என்பதின் சுருக்கம். அதாவது ஒரு வெளிப்புறப் படக்காட்சியை பதிவுசெய்ய முயற்சிக்கும் போது, அங்கே பல அளவுகளில் ஒளி மாறுபட்டிருந்தால் அதன் எல்லா ஒளி அளவுகளையும் நாம் பதிவுசெய்ய முடியாது. ஏனெனில் அதிக ஒளியை சரியாக பதிவுசெய்ய நாம் முயன்றால் குறைந்த ஒளிப்பகுதி பதிவாகாது, குறைந்த ஒளியை பதிவுசெய்ய முயன்றால் அதிக ஒளிப்பகுதி 'Bleach' ஆகிவிடும்.இந்த குறைய பாட்டை போக்க 'Still Photography'இல் 'HDR' தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தார்கள். இதன் மூலம் பல மாறுபட்ட அளவுகள் கொண்ட ஒளிகளை தனித்தனி படங்களாக எடுத்துக்கொண்டு, பிறகு கணினியை பயன்படுத்தியோ அல்லது அந்த கேமராவில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தியோ ஒரே புகைப்படமாக மாற்ற முடியும். இதன் மூலம் பல அளவுகளில் ஒளியமைப்பு கொண்ட காட்சியைச் சிறப்பாக பதிவு செய்யமுடியும். இந்த தொழில்நுட்பத்தைதான் 'எபிக்' பயன்படுத்துகிறது.


ஸ்கார்லெட் இன்னும் வெளிவரவில்லை-விரைவில்

'Lord of the Rings film trilogy' மற்றும் 'King Kong' போன்ற படங்களின் இயக்குனரான 'Peter Jackson' தன் அடுத்தப்படம் 'THE HOBBIT'-ஐ 'எபிக்'-ஐ பயன்படுத்தி எடுக்கிறாராம். அது ஒரு 3D டிஜிட்டல் படம்.எல்லாம் சரிதான்.. ஆனால், தொழில்நுட்ப அறிவுக்கும், படைப்புத்திறனுக்குமான வித்தியாசத்தை உணர, 'ஐன்ஸ்டினின்' இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

"I am enough of an artist to draw freely upon my imagination. Imagination is more important than knowledge. Knowledge is limited. Imagination encircles the world." -Albert Einstein

கருத்துகள்

 1. அருமையான கட்டுரை விஜய் சார். Red One EPIC.. பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

  இந்தக் கட்டுரைகள் எல்லாம் நூலாக வேண்டும். cinematography யின் நுட்பமான தகவல்கள் அடங்கிய தனித்துவமான நூலாக அது இருக்கும்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அந்த ஸ்டீவர்ட் பிராண்ட் என்பவர் யார்..?!நச்சென்று சொல்லியுள்ளார். :)

  பதிலளிநீக்கு
 3. நன்றி சேலம் தேவா..அவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பருக்கு உங்கள் மூலம் ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டேன்

  ப்ளாக் வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லவும் எனது ப்லோகை பார்க்கவும் எனக்கு ப்ளாக் வடிவமைப்பு தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும் எனது ஈமெயில் sonofcoimbatore@ஜிமெயில்;.com

  பதிலளிநீக்கு
 5. அருமையான, எளிமையானத் தகவல்கள். நன்றி விஜய். நானும் Canon EOS 5D வாங்கலாம் என்று இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி sonofcoimbatore2011..

  //ப்ளாக் வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லவும் எனது ப்லோகை பார்க்கவும் எனக்கு ப்ளாக் வடிவமைப்பு தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும் எனது ஈமெயில் sonofcoimbatore@ஜிமெயில்;.com//

  இதில் நான் சொல்லித்தருவதிற்கு ஒன்றும் இல்லை. இணையத்தில் ' blog Templets' கிடைக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்ததை தேடி கண்டுபிடியுங்கள்.
  அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி M.S.E.R.K.

  //நானும் Canon EOS 5D வாங்கலாம் என்று இருக்கிறேன்.//

  கொஞ்சம் காத்திருங்கள்..அடுத்த 'Version' வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஜப்பான் சுனாமியில் 'canon' நிறுவனம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல். அதனால் அடுத்த மாடல் கொஞ்சம் தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 8. //ஃபிலிம் அத்தனை சக்தி வாய்ந்ததுதான், பல சாத்தியங்களை 'காட்சி பதிவுசெய்தலில்' அது கொடுக்கிறது.//

  ஆனால் டிஜிட்டலில் உள்ள வசதிகள் அதில் இல்லை. அதோடு எப்படி பிலிம் டிஜிட்டலைவிட நல்லது என்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 9. நன்றி தரூமி அவர்களே..

  உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு கட்டுரைதான் எழுத வேண்டும். ஆதாரமாகவே ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பிம்பம் பதிவுசெய்தல், சரியான வண்ணத்தை மீட்டெடுத்தல், பன்முகத்தன்மை, நீண்ட நாள் பாதுகாத்தல் என நீண்ட காரணங்கள் உண்டு. என்றாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதை சமன் செய்ய முயற்சிக்கிறது, சமன் செய்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

  மேலும் டிஜிட்டல் வேலையை சுலபமாக்குகிறது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இது இரண்டும் முக்கியமான காரணிகள்.

  ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்கும் உள்ள ஆதார வித்தியாசத்தை அறிந்துக்கொள்ள இங்கே செல்லுங்கள்.
  http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/03/cinema-film-vs-digital.html

  பதிலளிநீக்கு
 10. your website gives me lot of info abt camera used in films in recent trends i really appreciate your effort in making your blog more useful for readers thank you mr.vijay armstrong

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,