Sunday, August 21, 2011

The Girl in the Picture : வியட்நாம் சிறுமிஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' பெற்ற இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர்.

வியட்நாம் போர்:

நவம்பர் 1,1955 ஆம் ஆண்டு துவங்கிய இப்போர் ஏப்ரல் 30,1975-இல் முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடையே இப்போர் நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்கா போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன என்பதனால் இது ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக பார்க்கப்பட்டது/நடத்தப்பட்டது. அதனால் தெற்கு வியட்நாமில் உருவான 'வியட்காங்' (Viet Cong) என்னும் கொரில்லா படை, (முறையான படைப்பிரிவும், அரசியல் தலைவர்களும் அதற்கு உண்டு) தெற்கு வியட்நாம் அரசாங்கத்தையும் அதன் ஆதரவு வட அமெரிக்கப் படைகளையும் எதிர்த்தது.

இரண்டு புறமும் பல தேசங்கள் பங்கு பெற்றன. பொதுவுடமை கருத்தாக்கத்திற்கு எதிரான அணியில் 'தெற்கு வியட்நாம், வட அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிபைன்ஸ், நியூஸ்லாந்து, தாய்லாந்து' போன்ற நாடுகளும் பொதுவுடமை ஆதர பிரிவில் 'வடக்கு வியட்நாம், மக்கள் குடியரசு சீனா, சோவித்யூனியன் மற்றும் வட கொரியா' போன்ற நாடுகளும் ஆதரவு கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் வட அமெரிக்காவின் போர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வடக்கு/ தெற்கு வியட்நாமிற்கு இடையேயான போரானாலும் இதில் வட அமெரிக்காவின் பங்கு அதிகம். ஒரு வகையில் இது வட அமெரிக்கா தொடுத்த 'பொதுவுடமை சித்தாந்தத்திற்கு' எதிரானப் போர்களில் ஒன்று. போரில் அடிமேல் அடிபட்ட வட அமெரிக்கா, இதைத் தன் மதிப்புக்கு வந்த சவாலாக எடுத்துக் கொண்டது. பெரும் ஆயுதபலம் மற்றும் பணப்பலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் வட அமெரிக்கர்களுக்குத் தோல்வியைக் கொண்டு வந்தது. 1973-இல் வட அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறியது. இன்றுவரை வட அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று.

பல லட்சம் மக்களைப் பலி கொண்ட இப்போர் 1975-இல் தெற்கு வியட்நாமின் தலைநகரான 'சாய்கான்' (Saigon) வடக்கு வியட்நாம் படையால் பிடிக்கப்பட்டப் பிறகு முடிவுக்கு வந்தது. இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டன.

இப்போர் அதன் உச்சக் கட்டத்தை அடைந்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் ஜூன் 8, 1972-இல் 'Trang Bang' என்னும் சிறு கிராமத்தின் மீது தெற்கு வியட்நாம் படையால் போடப்பட்ட 'நேபம்' (napalm) குண்டால் துளைக்கப்பட்ட இடிபாடுகளிலிருந்துதான் அந்த ஒன்பது வயதுச் சிறுமி ஓடி வந்தாள்.

அச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. அவளோடு அவளுடைய சகோதரர்களும் உறவினர் குழந்தைகளும் ஓடிவருகிறார்கள். குண்டுகளால் உண்டான தீ, அவளின் உடைகளை எரித்து அவளின் தோல்களிலும் பரவி இருந்தது. அவளின் கன்னங்கள் மற்றும் உதடுகள் கூட தீயினால் கருகி இருந்தது.  ஓடி வரும் போது "too hot, too hot" என்று அவள் தாய் மொழியில் கத்திக்கொண்டே வந்தாளாம்.


Nick Ut


அப்போது அங்கே இருந்த புகைப்படக்காரர் 'நிக்' (Nick Ut) அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். படைவீரர்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவளது அவயங்கள் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. புகைப்படக்காரர் நிக் அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த இராணுவ மருத்துவ முகாமிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவளுக்கு முதலுதவி தரப்பட்டு, பதினாலு மாதங்கள் சிகிச்சையில் பதினேழு தையல்கள் போடப்பட்டன.

இதன் இடையே இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில் போருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இப்படம் பெரிதும் உதவியது. அப்போது வட அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. இது ஒரு தேவையற்ற போர் என்று வட அமெரிக்க மக்கள் கருதினார்கள். வீணாகத் தன் இளைஞர்களை வட அமெரிக்கா பலி இடுகிறது என்ற கருத்தோட்டம் பரவி தேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அச்சமயத்தில் வெளியான இப்படம் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. அப்போதைய அதிபர் நிக்சன் இது ஒரு சித்தரிக்கப்பட்ட போலி புகைப்படம் என்பதாகக் கூட விவாதித்தாராம்.

சிறுமிக்கு உதவும் படையினர்

ஆனால் இது உண்மையானப் படம்தான். அதைப் பலரும் உறுதி செய்தார்கள். இப்படம் எடுக்கப்பட்ட போது உடனிருந்த மற்ற செய்தியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கூட இதை உறுதி செய்தார்கள். செய்தியாளர்கள் கண் முன்னால் குண்டு வீசுவதற்கான ஆணை இடப்பட்டு அக்கிராமம் குண்டுகளால் துளைக்கப்பட்டதை அவர்கள் பதிவு செய்தார்கள்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பிழைக்க மாட்டாள் என்றுதான் முதலில் மருத்துவர்கள் சொன்னார்களாம். பதினான்கு மாத கால மருத்துவதிற்குப் பிறகு பிழைத்து அவள் தன் கிராமத்திற்குத் திரும்பினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதும் அதன் பின் கிராமத்திலும் அவளைச் சென்று பார்த்து வந்திருக்கிறார் புகைப்படக்காரர் நிக். மூன்று வருடங்களுக்கு பின் போர் முடிவடைந்த போது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மற்றொரு புகைப்படக்காரால் எடுக்கப்பட்டப் படங்கள்

சில வருடங்களுக்கு பிறகு ஒரு ஜெர்மன் பத்திரிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண் மீண்டும் செய்தி ஆனாள். அதன் பின் வியட்நாம் அரசாங்கம் அவளை 'போரின் அடையாளச் சின்னமாக' பயன்படுத்தத் துவங்கியது. அதனால் அவளது மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கு படிக்கச் சென்றாள். அங்கே தன் சக மாணவனோடு நட்பு ஏற்பட்டு அவனை திருமணம் செய்துக்கொண்டாள். பிறகு கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

இடையே பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு போரின் அவலங்களை உலகத்திற்கு எடுத்துச் சொன்னாள். ஒருமுறை அவளின் இந்த நிலைக்கு காரணமான குண்டு வீச்சை நடத்திய இராணுவ அதிகாரி, அவளைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அவளை அவர் பார்த்த நொடியிலிருந்து தொடர்ந்து தன்னை மன்னிக்குப்படி கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவள் அவரின் கையை பிடித்து நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்றுச் சொன்னப் பிறகுதான் அவர் நிம்மதி அடைந்ததாக அவரே சொல்கிறார்.


1997-இல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம். பிறகு பல கிளை நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இப்போது அது 'Kim Phuc Foundation International' என்றப் பெயரில் இயங்கி வருகிறது.

1997-இல் 'UNESCO Goodwill Ambassador' ஆக நியமிக்கப்பட்ட அவர். பல பட்டங்களை பெற்றுள்ளார்.

அதில்..

'honorary Doctorate of Law from York University'

'Order of Ontario'

'honorary degree in Law from Queen's University in Kingston, Ontario'

'honorary degree of Doctor of Laws from the University of Lethbridge' ஆகியவையும் அடங்கும்.1999 -இல்
The Girl in the Picture: the Story of the Story of Kim Phuc, the Photograph and the Vietnam War by Denise Chong என்னும் புத்தகம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதத்தில் வெளிவந்து புகழ்ப்பெற்றது.

'Haunted a whole generation of Americans and helped turn America's public opinion against the Vietnam War. Today, that picture is still considered by the world as one of the most important images of the 20th century'
'ஒரு தலைமுறையையே உலுக்கிய அந்தப் புகைப்படம் அமெரிக்க மக்களை வியட்நாம் போருக்கு எதிராக ஒன்று திரள உதவியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானப் புகைப்படங்களில் ஒன்றாக அது இன்று கருதப்படுகிறது' 

ஏதும் அறிய அந்த ஒன்பது வயதுச் சிறுமியின் மீது படர்ந்த அந்தத் தீ இன்றும் பல இடங்களில் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. போரின் கொடூர முகத்திற்கு சாட்சியாக அந்தப் பெண் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.Friday, August 19, 2011

இருபதாம் நூற்றாண்டின் மோனலிஸா


'ஆப்கான் பெண்' (Afghan Girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985-ஆம் ஆண்டின் 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' (National Geographic) இதழில் அட்டைப் படமாக வெளி வந்தது. இப்படம் 1980-இல் ஆப்கானிஸ்தானின் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டது. இன்றுவரை உலகில் 'மிகவும் அறியப்பட்ட' புகைப்படமாக இது இருக்கிறது. அவளின் கடல் பச்சை வண்ணக் கண்களும் அது சொன்னச் செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது. அந்த கண்களுக்குப் பின்னே உறைந்து கிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  'Amnesty International'-ஆல் அதிகமுறை அவர்களின் சுவரொட்டிகளிலும் காலண்டரிலும் அச்சிடப்பட்டது. 

"ஆப்கன் மோனலிஸா" (the Afghan Mona Lisa) என்று அழைக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் 'ஸ்டீவ் மெக்கரி' (Steve McCurry) என்ற புகழ்பெற்ற 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' புகைப்படக்காரர்.


யாரிந்த 'ஆப்கான்' பெண்?

உண்மையில் அப்படத்தை எடுத்த ஸ்டீவ் மெக்கரிக்கேக் கூடத் தெரியவில்லை. அவர் 1984- டிசம்பரில் ஆப்கான் போரைப் புகைப்படமெடுக்கச் சென்றிருந்தபோது, ஆப்கான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறார். அப்போது பன்னிரெண்டு வயதே நிரம்பிய இந்தப் பெண்ணை பார்த்தபோது, அவளின் கண்களில் இருந்த ஈர்ப்பு அவரை படமெடுக்கத் தூண்டியிருக்கிறது. அவளின் அனுமதியோடு சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். பெயரைக்கூட கேட்க வில்லை.

பின்னர், அப்படம் அட்டைப்படமாக வெளியாகி உலகத்தின் கவனத்தைப் பெற்றபோது கூட, அந்தப் பெண்ணைப்பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அப்படம் உலக முழுவதும் பல பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டது. அகதிகளின் நிலையை விவரிக்கும் ஒருவித 'குறியீடாக, அடையாளமாக' (symbol) பயன்படுத்தப்பட்டது.


முதலில் இந்தப் பெண்ணின் படத்தை 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்'' பத்திரிக்கையின் ஆசிரியர் பிரசுரிக்க வேண்டாம், அது ரொம்பக் கஷ்டப்படுத்துகிறது என்றாராம். பிரசுரித்தபோது உலகின் பல பகுதிகளிலிருந்து கடிதங்கள் வந்ததன, அந்தப் பெண்ணைப்பற்றிய தகவல் கேட்டு, பண உதவி செய்வதாக, அவளை தத்தெடுத்துக்கொள்வதாக, அவளை திருமணம் செய்து கொள்வதாகக் கூட.

பல முறை ஸ்டீவ் அந்தப்பெண்ணைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றபோதும், அது முடியாமல் போனது. காரணம், சோவியத்தை வெற்றிக்கொண்ட தாலிபான்களின் ஆட்சி ஆப்கானில்  நடந்துக்கொண்டிருந்ததும் வெளியார்கள் செல்ல முடியாததாக இருந்ததும். பிறகு 2001-இல் பில்லேடனை பிடிக்கறேன் பேர்வழி என தாலிபான்களின் ஆட்சியை வட அமெரிக்கர்கள் ஒழித்துக்கட்டியது நாம் அறிந்ததுதான்.

அதன்பின் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ஸ்டீவ் மெக்கரி அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பி, அவளைத்தேடி ஆப்கான் சென்றார். அது நடந்தது 2002 ஆம் ஆண்டு. அவளை முதன் முதலில் பார்த்த அதே அகதிகள் முகாமிற்கு சென்றார். அகதிகள் பொதுவாக இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பார்கள் என்பதனால் அவளைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமம் என்பதை அவர் அறிந்துதான் இருந்தார். என்றாலும், முயன்று பார்க்க விரும்பினார். 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' பத்திரிக்கையும் இதில் ஈடுபட்டது. அங்கே அகதி முகாமில் அவளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பல தவறான நபர்கள் அடையாளம் காட்டப்பட்டு, பின்பு ஒரு வயதானவர் மூலம் அவளது இருப்பிடம் தெரிந்தது. அந்தப் பெரியவர் 1984-இல் அந்த முகாமில் சிறுவனாக இருந்தபோது அவளோடு பழகியவர், இவர்கள் கொண்டு போன புகைப்படத்தைப் பார்த்து அவரால் அடையாளம் சொல்ல முடிந்தது.

(முதலில் பல தவறான தகவல்கள் கிடைத்தன. அவள் இறந்துப் போய் விட்டாள், கனடாவிற்குச் சென்று விட்டாள். ஏன்... பின்லேடனுக்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தாள் என்பதாய்)

அந்தப் பெரியவரின் மூலம் தெரிந்த தகவல், அவள் 'தோரா போரா' (Tora Bora - பின்லேடனை தேடி குண்டு வெடித்தார்களே அதே மலைதான்) மலைப்பகுதியைச் சார்ந்தவள் என்பதும், அப்போதைய ஆப்கான் மீது சோவியத்தின் படையெடுப்பிலிருந்து தப்பித்து அகதியாக வந்தவள் என்பதும்தான். ஸ்டீவ் அவளைத்தேடி மூன்று நாள் பயணம் செய்து தோரா போரா சென்றார். அவளிருந்த கிராமம் ஆறு மணிநேர வாகனத்திலும் பிறகு மூன்று மணிநேரம் நடையாகவும் செல்லும் தூரத்தில் இருந்தது. அது ஒரு எல்லையோர கிராமம். ஸ்டீவ் அவளை முதன் முதலில் பார்த்தபோதே தெரிந்துக் கொண்டார் 'அது அவள் தான்'!


அவள் பெயர் 'ஷர்பாத் குளா' (Sharbat Gula), பஸ்தூன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவள். அவளுக்கு அப்போது வயது 28 அல்லது 29 அல்லது 30 ஆகக் கூட இருக்கலாம், சரியாகத் தெரியவில்லை. அவளுக்குக் கூட தெரியவில்லை. பதினேழு ஆண்டுகளுக்கு முன் 12 வயது சிறுமியாக இருந்த அவள் இப்போது மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாள்.

ஸ்டீவ் 1984-இல் ஆப்கான் வந்திருந்தது, ஆப்கனும் சோவியத் யூனியனும் போரிட்டுக்கொண்டிருந்த நேரம். அப்போதைய சோவியத் யூனியன் ஆப்கானின் மீது படை எடுத்திருந்தது. காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்,  எண்ணைய்க் குழாய் பாதை, அமெரிக்காவோடு பனிப்போர், அரேபிய தேசங்களோடு உறவு மற்றும் பகை போன்ற உலக அரசியல்!

டிசம்பர் 24, 1979-இல் துவங்கிய இப்போர் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்தது. ஆப்கன் போராளிகள் மற்றும் தன்னார்வ அரேபிய இளைஞர்களின் கூட்டுப்படை ருஷ்யர்களை எதிர்த்தது. ஆப்கனுக்கு ஆதரவாக பல தேசங்கள் உதவி புரிந்தன. வட அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தைவான், இந்தோனேசியா, சீனா, யூ.கே மற்றும் இந்தியா ஆகியவை அதில் அடக்கம். சொல்லப்போனால் இது பனிப்போரின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த ஒருவித 'proxy war'-ஆகவே பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனின் 'வியட்நாம் போர்'* என அழைப்பட்ட இந்தப் போர் பிப்ரவரி 15,1988-இல் முடிவுக்கு வந்தபோது இருபுறமும் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போனார்கள். ஆப்கானிஸ்தானில் மட்டும் ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஐம்பது லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபது லட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது லட்சம் மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.

(*வியட்நாம் போரில்-1955 to 1975 அமெரிக்கா தோற்றது - இங்கே சோவியத் தோற்றது)

அதன் பிறகு ஆப்கானின் உள்ளாட்டுப் போர் துவங்கியதும், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், அவர்களின் கொடுங்கோல் ஆட்சியும் உலகம் அறிந்த துயரக் கதை.

தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளைக் கடந்து எல்லைத்தாண்டி பாகிஸ்தான் முகாம்களில் அடைக்கலம் அடைந்தவள் அவள். அவளுடைய மூத்த சகோதரனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறாள். போரின் முடிவுக்கு பின் நாடு திரும்பி திருமணம் செய்து கொண்டாள். கணவன் (Rahmat Gul) சிறு வேலைகள் செய்து பிழைப்பவன். மூன்று பெண் குழந்தைகள் முறையே 1,3,13 வயது. ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டது.


அவளுடைய பதினாறாவது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. அவள் அண்ணன் சொன்னாராம், அவளின் திருமண நாள் மட்டும்தான், வாழ்நாளில் அவள் சந்தோசமாக இருந்த நாள் என்று.

இஸ்லாமிய முறைப்படி வாழும் பெண் அல்லவா, அவள் முகத்தை அவள் கணவனைத் தவிர மற்ற ஆடவர் பார்க்கக் கூடாது என்பதற்காக பர்தா கொண்டு மூடிக்கொண்டிருப்பவள்.  கணவனிடம் அனுமதி பெற்று, அவளது இப்போதைய உருவத்தை ஸ்டீவ் புகைப்படம் எடுத்தார்.

அவளின் புகைப்படம் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதையும், அகதிகளுக்கு உதவுவதிற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

இத்தனை ஆண்டுகாலப் போருக்கும், பெரும் அழிவுக்கும் பின்பும், தான் பிழைத்திருப்பதைப் பற்றி அவள் சொன்னாளாம். "அது கடவுளின் விரும்பம்' (“will of God”) என்று.

அவளின் விருப்பம் ஒன்றாக மட்டும் தான் இருந்திருக்கிறது. 'அவள் தவற விட்ட பள்ளிப் படிப்பு மகள்களுக்குக் கிடைக்கவேண்டும்' என்பதுதான் அது.

1984-இல் ஸ்டீவ் மெக்கரி அவளை எடுத்த புகைப்படம் தான், அவள் வாழ்நாளில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம். அதன் பிறகு 2002-இல் அதே ஸ்டீவ் எடுத்தப் புகைப்படங்கள் தான் அவள் இரண்டாவதாக எடுத்துக்கொண்டப் புகைப்படம். ஆம் 1984-க்கு பிறகு அவள் புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லை.


ஜனவரி 2002-இல் ஸ்டீவ் அவளிடம் அவளது புகழ் பெற்ற 'ஆப்கன் பெண்' புகைப்படத்தைக் காட்டும் வரை, அதை அவள் பார்த்திருக்கவில்லை.

அவள் தான், அந்த புகழ் பெற்ற 'ஆப்கன் பெண்' என்பதை 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' பத்திரிக்கை பலவழிகளில் சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டது.

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்'' பத்திரிக்கையின் அட்டைப் படத்தை இந்தப் பெண் மீண்டும் அலங்கரித்தாள். 114 வருடங்களில் அந்தப் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இரண்டாம் முறை இடம்பெற்ற முதல் நபர் அவள்தானாம். 'ஆப்கானிய பெண் தேடல்' (The Search for the Afghan girl) என்ற கட்டுரையும், ஆவணப்படமும் உருவாக்கப்பட்டது.


'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' மூலம் நிதி திரட்டப்பட்டு, அவளுக்கும் ஆப்கான் பெண்களுக்கும் கல்வி கிடைக்க, உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

'ஆப்கன் பெண்கள் நிதி' (Afghan Girls Fund) என்றுப் பெயரிடப்பட்ட அந்த அமைப்பு பின் 2008-இல் ஆண் பிள்ளைகளுக்கும் உதவும் விதத்தில் மாற்றப்பட்டு 'ஆப்கன் குழந்தைகள் நிதி' (Afghan Children's Fund) என்று பெயரில் இயங்குகிறது.


இது தான் இந்த இருபதாம் நூற்றாண்டு மோனலிஸாவின் கதை.
'This is the legacy of the ’Mona Lisa of the twentieth century’

பின்குறிப்பு:

ஸ்டீவ் மெக்கரி எடுத்த இப்படம் 'Kodachrome film', Nikon FM2 கேமரா மற்றும் Nikkor 105mm F2.5 lens பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்பிறகும் ஸ்டீவ் Kodachrome film-களையே பயன்படுத்தி படங்களை எடுத்தார். ஜூன் 2009-இல் 'Kodak' இந்த வகை ஃபிலிம் தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்து ஸ்டீவை கடைசி Kodachrome film-இல் படமெடுத்துக் கொடுக்க கேட்டுக்கொண்டது. அப்படங்கள் George Eastman House museum in Rochester, New York-க்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடைசி படச் சுருளின் சில புகைப்படங்கள்:


இங்கே அதைப்பற்றியக் கட்டுரையையும் மற்றப் படங்களையும் பார்க்கலாம்.


Wednesday, August 17, 2011

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்


ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அப்படி பல புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகப்புகழ் பெற்றப் பல படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன.


மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்:

Kevin Carter’s most famous photo Source: The Unsolicited Opinion

1994-ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' (Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டன. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கித் தவழ்ந்து சென்ற ஒரு பெண் குழந்தையையும், அவளைத் தன் உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்தையும் புகைப்படமாக எடுத்தவர் 'கெவின் கார்டர்' (Kevin Carter) என்னும் புகைப்படக்காரர்.

குழந்தை எப்போது இறக்கும், நாம் எப்போது அதை உணவாக்கிக் கொள்ளலாம் என்று பருந்து காத்திருக்கும் இப்படம் வெளியான போது உலகத்தை வெகுவாக பாதித்தது. சூடானின் அப்போதைய நிலைமையை இப்படம் முழுமையாக உலகத்தாருக்கு விளக்கியது. அந்தக் குழந்தை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் புகைப்படமாக எடுத்த கார்டருக்கும் கூட தெரியவில்லை.

இப்படத்தை இப்போது பார்த்தால் கூட நம் மனம் பதைபதைக்கும். இது சொல்லும் செய்தி இன்று கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற இவ்வாழ்வின் குரூர முகத்தை நாம் கண்டு கொள்ள முடியும். இப்படம் சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன.

இப்படத்தோடு சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகளில் ஒன்று இப்படத்தின் களமான சூடானைப்பற்றியது மற்றொன்று இப்படத்தின் புகைப்படக்காரர் கெவின் கார்டரைப் பற்றியது. இரண்டுமே நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியவை.

..............................................................................................................

தெற்கு சூடான்:

வட ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் பல நூற்றாண்டுகளாகவே அந்நிய தேசத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டிருக்கிறது. உலகின் பெரிய நதியான 'நைல் நதி' இந்நாட்டின் ஊடாக பாய்கிறது. இதன் பொருட்டே பல தேசங்கள் இந்நாட்டை வசப்படுத்த முயன்றிருக்கின்றன. அதில் நமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பிரித்தானியர்களும் அடங்குவர். வழக்கம் போல அந்நாட்டையும் பிரித்தானியர்கள் காலனியாக்கி ஆண்டு வந்திருக்கின்றனர். வடக்கு, தெற்கு என இரண்டு பகுதியாக இந்நாடு பிரிந்துகிடக்கிறது. 'சூட்' என்னும் சதுப்பு நிலம் இந்நாட்டை இரண்டாக பிரிக்கிறது. பல நூற்றாண்டு காலம் எகிப்தியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் வடக்குப் பகுதி சூடான், இஸ்லாம் மற்றும் அரேபிய மதத்தை தழுவிய நாடாக இருக்கிறது. தெற்கு சூடான் கிருத்துவத்தையும் பல உள்ளூர் மதங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை பெரியதாக எந்த உள்ளூர் பிரச்சனையும் வரவில்லை. அதன் பிறகுதான் அதன் ஆட்சியாளர்கள் தெற்கு சூடான் மற்றும் அதன் உட்புற நிலங்களின் வளங்களை சுரண்ட முயன்று இருக்கின்றனர். பிரித்தானியர்கள் எகிப்தியர்களோடு* சேர்ந்து ஆட்சி செய்தபோது வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிகளை தனித்தனி நிர்வாகமாகத்தான் நிர்வகித்து இருந்திருக்கின்றனர்.

(*பிரித்தானிய காலனி, எகிப்திய அதிகாரிகள் என்ற ஒரு கூட்டு முறை. காரணம் நைல் நதி மீதான கட்டுப்பாடு - அது ஒரு தனிக் கதை)

வடக்குப் பகுதியில் அரேபியர்களின் ஆளுமையும் தெற்கு பகுதியில் கத்தோலிக்க கிருத்துவர்களின் ஆளுமையும் இருந்திருக்கின்றது. இரண்டு பகுதிக்கும் எப்போதும் ஒரு பிணக்கம் இருந்திருக்கின்றது. 1946-ஆம் ஆண்டுவாக்கில் வடக்கு சூடானியர்களுக்கு அதிகாரம் கிடைத்தபோது இரண்டு பகுதிகளையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தெற்கு பகுதிகளிலும் அரேபிய மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. தெற்குப்பகுதியின் அதிகாரமும் வடக்கு சூடானியர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது தெற்கு சூடான் பகுதியில் கொதிப்பை ஏற்படுத்தியது. அது தொடர்ந்து வளரவும் செய்தது. பிறகு 1953-இல் பிரித்தானியர்கள் சூடானுக்கு விடுதலை தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு 1956-இல் சுதந்திர சூடான் அரசு அமைந்தது. அதில் வடக்கு சூடானியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. தெற்கு சூடானியர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

இதனால் தெற்கு சூடானில் பல போராட்டங்கள் நடந்தன. 1955-இல் துவங்கிய முதல் சூடானிய உள்நாட்டு போர் 1972-வரை நடந்தது. தெற்குப் பகுதிக்கு சுயாட்சியும் கூடுதல் அதிகாரம் வேண்டி நடந்த இப்போர் சரியான தீர்வை எட்டாமல் சமரசங்களால் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பதினேழு ஆண்டு காலப்போரில் ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

 பிறகு 1983-இல் இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர் துவங்கியது. இதில் இருபது லட்சம் மக்கள் வறுமை, பட்டினி மற்றும் பல தொற்று நோய்களால் கொல்லப்பட்டனர். நாடெங்கும் வறுமை தலை விரித்தாடியது. பட்டினிச் சாவுகளைத் தடுக்க அந்நாட்டு அரசால் முடியவில்லை. நாற்பது லட்சம் தெற்கு சூடானியர்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். இதில் பல தடவை இடம் பெயர்ந்தவர்கள் அதிகம். இரண்டாம் உலகப்போருக்கு பின் அதிக மக்களைக் காவு வாங்கியது இப்போர் தான். பிறகு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் 2005-இல் இப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

2005 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி 2011-இல் தெற்கு சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 98.83 விழுக்காடு வாக்குகளைத் தனி நாடாக பிரிவதற்கு பெற்று 9.7.2011 அன்று தெற்கு சூடான் விடுதலைப் பெற்ற தனி நாடாக மலர்ந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் 54 ஆவது நாடாகவும், ஐ.நா மன்றத்தில் 193-ஆவது நாடாகவும் தெற்கு சூடான் இருக்கிறது.

தெற்கு சூடானில், இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர்(1983–2005) நடந்தக் காலகட்டத்தில்தான் நாம் மேலே பார்த்தப்படம் எடுக்கப்பட்டது. விடுதலைக்கானப் போரில் பல இன்னல்களைச் சந்தித்தும், பல லட்சம் மக்களை இழந்தும் அவர்களின் விடுதலைத் தாகம் தொடர்ந்தது. அதன் விளைவாக இன்று அத்தேசம் விடுதலை பெற்ற நாடாக உருவாகியிருக்கிறது.

by Kevin Carter Source: Miko Photo

..............................................................................................

'கெவின் கார்டர்':

தென்னாப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டுத்துறைப் புகைப்படக்காரனாக தன் வேலையைத் துவங்கியவர். பின்பு 1993-இல் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரையும் அதன் பட்டினிச்சாவுகளையும் புகைப்படம் எடுக்க சூடானுக்கு போனார். ஐ.நா திட்டத்தின் மூலம் உணவு கொண்டுசென்ற ஒரு விமானத்தில் கார்டர் சென்றிருக்கிறார்.

கெவின் கார்டர்
அவ்விமானம் தெற்குச் சூடானியப் பகுதியில் ஒரு கிராமத்தில் உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்காக தரை இறங்கி இருக்கிறது. உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முண்டி அடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கின்றார்கள். கார்டர் அதை புகைப்படம் எடுக்கத் துவங்கி இருக்கிறார். பெற்றோர்கள் உணவு பெறுவதில் மும்மரமாக இருந்ததால், கவனிப்பாரின்றி தனித்து விடப்பட்ட ஒரு பெண் குழந்தை உணவிற்காக அவ்வுணவு முகாமை நோக்கி தவழ்ந்து வந்திருக்கின்றாள். அவளுக்கு உணவு முகாமிற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம். பட்டினியில் வாடிய அப்பிஞ்சுக் குழந்தை போராடி தவழ்ந்து வருவதைப் பார்த்த கார்டர் புகைப்படம் எடுக்கத் தயாராகி இருக்கிறார். அந்நேரம் ஒரு பருந்து அவள் அருகே வந்து அமர்ந்திருக்கிறது.

அதன் நோக்கம், அந்த குழந்தையை உண்பது. இதைப்பார்த்த கார்டர் சிறிது நேரம் காத்திருக்கின்றார். அப்பருந்து என்னதான் செய்யப்போகிறது என்பது போல. இப்படி அவர் காத்திருந்தது 20 நிமிடத்திற்கும் மேலாக. பின்பு பருந்து பறந்து போய் விடாத அளவிற்கு மெதுவாக அக்குழந்தைக்கு அருகில் போய் படமெடுத்திருக்கிறார். அதன் பின் அப்பருந்தைத் துரத்திவிட்டு தன் விமானத்திற்கு சென்று விட்டாராம். அக்குழந்தைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.

இப்படம் மார்ச் 26, 1993-இல் 'நியூ யார்க்' பத்திரிக்கையில் வெளிவந்தது. அது வெளிவந்த நாளிலிருந்து பல நூறு மக்கள் அக்குழந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார்கள். ஆனால் பத்திரிக்கைக்கு அக்குழந்தையின் நிலைப் பற்றி தெரியவில்லை. அவள் உணவு முகாமை அடைந்தாளா அல்லது அவள் பெற்றோர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றுதான்.

'அவளுடைய இன்னலை, சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்கத் தன் கேமராவைக் கையாண்டுக்கொண்டிருந்த அப்புகைப்படக்காரரும் ஒரு கொடூர மிருகம்தான், அக்காட்சியின் மற்றொரு பருந்து அவர்' என்று இப்படத்தைப் பற்றி 'St. Petersburg Times' பத்திரிக்கை எழுதியது.

புலிட்சார் விருதைப் பெற்றாலும், இப்புகைப்படத்தால் புகழடைந்தது போலவே பல கண்டனங்களைப் பெற்றார் கார்டர். இதன் விளைவாகக் குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். மன உளைச்சல்கள் அதிகரித்தன.

கெவின் கார்டர் 1960-1994

1994, ஜூலை 27ஆம் தேதி கார்டர், தான் சிறுவயதில் விளையாடிய, வளர்ந்த ஒரு நதிக்கரைக்குப் (Braamfontein Spruit river) போனார். அங்கே தன் காரை நிறுத்தி விட்டு, ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை காரின் புகை வெளியேற்றியில் (exhaust pipe) இணைத்து, மறுமுனையை தன் காருக்குள் கொண்டுச் சென்றார். பின்பு, காரின் பக்கக் கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கத்தில் வைத்தவர், காருக்கு உள்ளாக அமர்ந்து தன் 'Walkman'-ஐ காதில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயு காருக்குள் நிரம்ப துவங்கியது. பிறகு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது 'கார்பன் மோனாக்சைடின்' விஷத்தன்மையால் இறந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

At the start of his career, Carter took this first-ever photo of a necklacing victim burning Source: Miko Photo

அக்குழந்தை சம்பந்தமான கண்டனங்களால் மனசாட்சி உலுக்கப்பட்ட அவர், குற்றவுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் தன்னை மாய்த்துக்கொண்ட போது அவருக்கு வயது 33. புலிச்சார் விருது பெற்று இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.

"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... "


மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில் இப்படி எழுதி இருந்தாராம்.


"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may pray that He will protect this little boy, guide and deliver him away from his misery, I pray that we will be more sensitive towards the world around us and not be blinded be our own selfish nature and interests"

இம்மனிதனின் மரணம் சொல்லும் செய்தி நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாத ஒன்று. பிறிதொரு நாளில் இத்தகைய குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆட்படாமலிருக்க வேண்டுமானால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் ஒரே வழி.
Friday, August 12, 2011

கேட்பது உயிர்ப் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!!திரு.பேரறிவாளன் - நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்_ Thirumurugan Gandhi அவர்களுக்கு நன்றி

1.  தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது 
உயிர்ப் பிச்சையல்லமறுக்கப்பட்ட நீதி!!
பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்குத் தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்
என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதைத் தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

 1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும்  மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
 2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991  அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
 3. அக்கொலைக்கு பயன்பட்ட "பெல்ட் பாம்" செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனால்,  “சிபிஐ யால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த  "பெல்ட் பாம்" ஐ செய்தவர் யார் என்பதே” என்று இந்த வழக்கை விசாரித்த தலைமைப் புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன், தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?
 4. அந்த "பெல்ட் பாமிற்கு" 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பது  நிரூபிக்கப்படவில்லை.
 5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சிதான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
 6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.
அப்படி இருக்கும் வேளையில், எங்களைத் தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 
 1. ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை "தற்கொலை" என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியைத் துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்.. 
 2. தடா சட்டத்தில், சிறப்புத் தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்தச் செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைபட்டுப் போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்தச் சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.?
 3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
 4. அவர் முன்னாள் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
 5. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
 6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

 1. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதி மன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப் பட்டதென்பது தங்களுக்குப் புலப்படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறூத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைப்பட்சமாகவே பார்க்கப்பட்டது.   
இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுநடுநிலையுடன் விசாரிக்கப் பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ? 
 1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு  அத்தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
 2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
 3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமைப் படுத்தப்பட்டேன்??  உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.
செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

2.  முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.
 • ராசீவ் வழக்கை விசாரிக்க  அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்ட்து.
 • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப்பட்டது.
 • மறுவிசாரணை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை
 • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ண அய்யர், திரு.பேரறிவாளனின் மடலையும் , வழக்கையும்  படித்துவிட்டு பேரறிவாளன் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைக்குறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும் சோனியா காந்திக்கும்,  இன்னாள் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
 • முன்னால் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத்மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
 • முன்னாள் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
 • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
 • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
 • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களைக் கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
3.  பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.
இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனைக் குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிக்கைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலை புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனைப் போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும், சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்றுத் தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலகத் தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிகப் பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை..

திரு.பேரறிவாளன் - நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்_ Thirumurugan Gandhi அவர்களுக்கு நன்றி.


Thursday, August 11, 2011

தப்பிப் பிழைத்தக் கலைஞன்


1939ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அது. இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் காலம். போலந்தின் தலைநகரான வார்சாவில் (Warsaw) ஒலிபரப்பில் இருந்த போலந்து நாட்டின் வானொலி ஒலிபரப்பு இடையில் நிறுத்தப்பட்டது. நிலையம் இழுத்து மூடப்பட்டது. போலந்தின் மேல் போர் தொடுத்த ஜெர்மனியின் இராணுவம் நகருக்குள் நுழைந்திருந்ததும் வானொலி நிலையத்தின் மீது குண்டு போட்டதும் அதற்கு காரணம்.

போலந்து வானொலி (Polish Radio) தன் ஒலிபரப்பை இடையில் நிறுத்திய போது, ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது  Chopin’s Nocturne in C sharp minor என்னும் இசைக் கோவை. 'Wladyslaw Szpilman' என்னும் பியனோ இசைக் கலைஞன் அதை அப்போது வாசித்துக் கொண்டிருந்தான்.

தன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது ஒருபுறம், சிதறி ஓடும் மக்கள் ஒருபுறம், தன் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் ஒருபுறம் என மொத்தக் கவலைகளையும் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்கிறான் அவன். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் ஆறுபேர் கொண்ட குடும்பம் அது. போலந்தில் வசிக்கும் யூதக் குடும்பம்.

நாஜிக்கள் போலந்துக்குள் நுழைந்ததும் செய்த முதல் வேலை, வார்சாவில் வசித்த யூதர்களின் பண இருப்பைக் குறைத்ததுதான். குறைந்த அளவுதான் யூதர்கள் பணம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், தாங்கள் யூதர்கள் என்பதைக் குறிக்கும் விதமாகக் கைகளில் 'நீல நட்சத்திரம்' பொறிக்கப்பட்ட அடையாளத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதும் நாஜிக்களின் கட்டளையாக இருந்தது.

நமக்குத் தெரிந்ததுதான், நாஜிக்களின் யூத விரோத மனப்பான்மை. ஹிட்லருக்கு யூதர்களை அழித்தொழிப்பது வாழ்நாள் லட்சியமாகயிருந்தது. அதற்கான வேலைகளை போலந்திலிருந்துதான் துவக்கினார்கள். யூதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்தார்கள். அவர்களின் வாழ்வாதார உரிமைகளைத் தடுத்து, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தத் துவங்கினர்.

பிறகு 1940ஆம் ஆண்டு அக்டோபரில் துவங்கி நவம்பர் மாதத்திற்கு இடைப்பட்டக் காலங்களில், வார்சாவில் வசித்த மொத்த யூதக் குடும்பங்களையும் தனியாகப் பிரித்து, நகரத்தின் ஒருபகுதியில் தனித்து வாழ நிர்பந்தித்தார்கள். அந்தப் பகுதி 'வார்சா கெட்டோ' (Warsaw Ghetto) என அழைக்கப்பட்டது. நான்கு லட்சம் யூதர்களை 1.3 சதுர மைல்களுக்குள் அடைத்தார்கள். நம்முடைய பியானோ கலைஞனின் வீடு அந்தப் பகுதிலேயே இருந்ததனால் தன் வீட்டிலேயே இருக்க முடிந்தது. வேலையின்மை, பணப்பற்றாக்குறை, பசி என அவதிகள் ஒருபுறம் என்றால், தன் உயிரினும் மேலான பியானோவை வாசிக்க முடியவில்லை என்பது அவனுக்கு பெரும் துயரமாகிருந்தது. கையில் இருந்த கொஞ்ச உணவையும் பகிர்ந்து உண்டார்கள். நாஜிக்களின் தொடர் துன்புறுத்தல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருந்தது.


நாஜிக்கள் யூதர்களின் மேல் கொண்டிருந்த வன்மத்தின் கொடூரமுகம் வெளியே தெரிய ஆரம்பித்தது அப்போதுதான். யூதக் குடும்பங்கள் வசித்த கட்டிடத்திற்குள் சோதனை என்ற பெயரில் புகுந்த நாஜிப்படை, ஒரு யூதக் குடும்பத்தின் உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொன்னது. அக்குடும்பத்தில் ஒரு பெரியவர் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தார், அவரால் எழுந்து நிற்க முடியாது. அதைக்கண்ட ஒரு நாஜி வீரன், அந்தப் பெரியவரை அப்படியே வீல்சேரோடு தூக்கி வெளியே எறிந்தான். அவன் எறிந்தது அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து. மீதமிருந்த குடும்பத்தினரை சாலைக்கு இழுத்துவந்துச் சுட்டுக் கொன்றார்கள். சாலையில் சிதறிக்கிடந்த பிணங்களின் மீது நாஜிக்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றார்கள். இந்த படுகொலைகள் ஒரு தொடக்கம்தாம் என்பது பின்வந்த நாட்களில் யூதர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்நிலையில் ஒருநாள் மொத்த யூதக் குடும்பங்களையும் வீட்டை விட்டு வெளியேறி வரும் படி நாஜி இராணுவம் அழைத்தது. அவர்களை நாஜிக்களின் மரண முகாம்களுக்கு (Extermination camps or death camps) அழைத்துச் செல்ல இரயிலில் ஏற்றத் துவங்கினார்கள். கடைசி நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் உதவியால் 'பியானோ கலைஞன்' மட்டும் தப்பிக்கிறான். தன் அன்புக்குரிய குடும்பத்தாரிடமிருந்து பிரிந்த அவன் ஒரு அடிமைத் தொழிலாளியாக கட்டிட வேலையில் சேர்கிறான். பிறகு அங்கே இருந்து தப்பித்து, தன் முன்னால் ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் (யூதர்கள் அல்லாதவர்கள்) உதவியுடன் 'கெட்டோவிற்கு' வெளியே மறைந்து வாழத் துவங்குகிறான்.

யூதப் பகுதிக்கு வெளியே, யூதர்கள் அல்லாதவர்கள் வாழும் ஒரு கட்டிடத்தில் மறைந்து வாழுகிறான். அவனுக்குத் தேவையான உணவுகளை, நண்பர்கள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அங்கே அவன் வாழ்வது வெளியே தெரியாமல் இருக்க வேண்டும். நண்பர்கள் கதவை வெளியே பூட்டி விட்டு சென்று விடுவார்கள். ஒருநாள் பக்கத்து வீட்டுகாரப் பெண்மணி இவனைப் பார்த்துவிடுவதனால், அந்த வீட்டிலிருந்து தப்பித்து, வேறொரு இடத்தில் தங்குகிறான்.

இரண்டாவது வீட்டில் தனித்து விடப்படும் அவன், அங்கே ஒரு பியானோ இருப்பதைக் காண்கிறான். ஆனால் அவன் அதை வாசிக்க முடியாது, வாசித்தால் சத்தம் அவனைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனாலும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை, எவ்வளவு நாள் ஆயிற்று, பியானோவை வாசித்து? அடங்கா ஆசையில் வாசிக்கத் துவங்குகிறான். உண்மையில் அவன் விரல்கள் பியனோவைத் தொடவே இல்லை. பியனோவில் விரல்கள் படாமல், அதன் கட்டைகளுக்கு மேலாக பியனோவை இசைப்பதைப் போன்ற பாவனையில் ஈடுபடுகிறான். அவன் மனதெங்கு இசை நிறைகிறது.

இப்படி பியானோவை மனதிற்குள் இசைத்தும் கையில் இருக்கும் உணவை உண்டும் சன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தும் நாட்களைக் கழிக்கிறான். சன்னல் வழியாகப் பார்ப்பதெல்லாம் நாஜிக்களால் துரத்தித் துரத்திக் கொல்லப்படும் யூதர்களின் அவல நிலையையும், அவன் வாழ்ந்த நகரம் குண்டுகளால் துளைக்கப்படுவதையும் தான்.

சிறிது நாட்கள் அப்படியே நகருகிறது. நீண்ட நாள் ஆன உணவில் காளான் பூத்துவிடுகிறது, அதை உண்பதனால் நோய்வாய்ப் படுகிறான். கவனிப்பாரின்றி பெரும் இன்னல்களை அனுபவிக்கிறான். பசியும் நோயும் அவனை பாதி உடம்பாக்குகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நண்பனால் காப்பாற்றப்பட்டு, மறைந்து வாழும் வாழ்க்கை அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்கிறது.

இதனிடையே நாஜிக்களை எதிர்த்து யூதக் குழு (Polish resistance) ஒன்று போராடிக்கொண்டிருக்கிறது. 1944 ஆகஸ்டில், இவன் மறைந்து வாழ்ந்த பகுதியில் ஒருநாள், நாஜிக்களுக்கும் யூதக் குழுவிற்கும் சண்டை நடக்கிறது. இவனிருந்த கட்டித்தின் மீது குண்டுகள் போடப்படும் சூழ்நிலையில் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். போலந்தின் எதிர்ப் புரட்சியினால் தோல்வி அடைந்த நாஜிப்படையின் பெரும்பகுதி அந்நகரத்தை விட்டு வெளியேறி விடுகின்றது. நகரம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

தனித்து விடப்பட்ட பியானோ கலைஞன், உணவைத்தேடி அலைகிறான். இறுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கே கீழே கிடக்கும் ஒரு உணவுக் குடுவையை (Food can) திறக்க முயற்சிக்கும் போது 'Wilm Hosenfeld' என்ற ஒரு ஜெர்மானிய அதிகாரியின் பார்வையில் படுகிறான். மீதமிருந்த நாஜிப் படையின் அதிகாரி அவர். அவரைக் கண்டு பயந்து பின்வாங்குகிறான். அவர் இவனை யார் என்று கேட்க, தான் ஒரு பியானோ கலைஞன் என்று சொல்கிறான்.  

அவர், அங்கே இருந்த பியானோவைக் காட்டி அதை வாசித்துக் காட்டும்படி சொல்லுகிறார். "Ballade in G-Minor, Op. 23" என்னும் இசைக் கோவையை வாசித்துக் காட்ட, அவனது திறமையைக் கண்டு மயங்கிய அந்த அதிகாரி, அவன் அங்கே மறைந்திருக்க அனுமதித்துவிட்டு சென்று விடுகிறார். பியானோ கலைஞன் அதே கட்டிடத்தின் உடைந்த மேல் மாடியில் பதுங்கி வாழுகிறான். அந்த அதிகாரி அவனுக்கு உணவுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இப்படி ஒரு வாரம் கழிந்த நிலையில், ருஷ்ய படைகள் முன்னேறி வரும் தகவல் அறிந்து மீதமிருந்த நாஜிப்படையும் வார்சாவை விட்டு வெளியேறுகிறது. அந்த அதிகாரி இவனிடம் விடைப்பெற்றுச் செல்ல வருகிறார். தன்னுடைய மேல் அங்கியை அவனுக்கு குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள கொடுக்கிறார். விரைவில் ருஷ்யப்படை அவனை காப்பாற்றும் என்றும், பின்னாளில் அவனது பியானோ இசையை தான் கேட்கிறேன் என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

சில நாட்கள் கழித்து போலந்துப் படை கண்ணில் தென்படுகிறது. மகிழ்ச்சியின் உற்சாகத்தில் இவன் அவர்களை நோக்கி ஓடுகிறான். இவன் அணிந்திருக்கும் ஜெர்மனிய உடுப்பைப் பார்த்தவுடன் இவனை நோக்கிச் சுடத் துவங்குகிறார்கள். இவன் பதறிப் பதுங்கி, தான் ஒரு போலந்துகாரன் என்று கத்துகிறான். பிறகு சுடுவதை நிறுத்தி இவனைக் காப்பாற்றுகிறார்கள்.

பிறகு ஊர் திரும்பும் வழியில் ருஷ்யபடைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளில் அந்த ஜெர்மன் அதிகாரியும் இருப்பதைக் காண்கிறான். அவர் தன்னைக் காப்பாற்றினார் என்று இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுக்கிறான். ஆனாலும் அவர் தொடர்ந்து போர்க் கைதியாக வைக்கப்பட்டிருந்து 1952ஆம் மரணம் அடைகிறார்.

போருக்குப் பின், 1945-இல் மீண்டும் போலந்து வானொலியின் ஒலிபரப்பு துவங்கப்பட்டபோது, நம் பியனோ கலைஞனின் இசையோடு துவங்கப்பட்டது. 1939-இல் பாதியில் நிறுத்தப்பட்ட இவனுடைய இசையே, கடைசி நிகழ்ச்சியாக போர் முடியும் வரை இருந்தது. அதே இசைக் கோவையையே இப்போதும் வாசித்து, ஆறு ஆண்டுகளுக்கு பின், தான் விட்ட இடத்திலிருந்தே தன் இசைப் பயணத்தைத் தொடங்கினான் அவன்.

1950-களில் குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினான். 1935 முதல் 1972 வரை ஐநூறுக்கும் அதிகமான பாடல்கள் இயற்றி இருக்கிறான். அதில் நூறுக்கும் மேலான பாடல்கள் இன்றுவரை போலந்தில் பிரபலமாக இருக்கின்றது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1945-இல் தான் தப்பி பிழைத்த கதையை 'Death of a City' என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதினார். பிறகு 1998-இல் ஆங்கிலத்தில் 'The Pianist' என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. முப்பதுக்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜூலை 6, 2000ம் ஆண்டு, நம்முடைய பியானோ கலைஞன் 'Wladyslaw Szpilman' தன்னுடைய எண்பத்துயெட்டாவது வயதில் காலமானார்.


புகழ்பெற்ற இயக்குனரான 'ரோமன் பொலன்ஸ்கி' (Roman Polanski) 2002-இல் 'The Pianist' புத்தகத்தை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். 'Adrien Brody' என்னும் மிகத் திறமையான நடிகனின் மூலம் 'தப்பிப் பிழைத்த' அந்தக் கலைஞனின் வாழ்க்கை நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. பல சர்வதேச விருதுகளையும் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் பெற்றது.


போரால் விளையும் துன்பத்தையும் துயரத்தையும் நாம் அறிவோம். போரிலிருந்து ஓர் உயிர் பிழைத்து வருவதென்பது, மறுபிறப்பிற்குச் சமம். இதில் இந்தக் கலைஞன் படும் துயரமும் வேதனையும் நம் மனமெங்கும் வடுக்களை ஏற்படுத்துகிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வை போர் எவ்விதத்தில் பாதிக்கும் என்பதை இப்படம் பார்க்கும்போது நம்மால் உணரமுடியும். பல கோடி உயிர்களைப்பறித்த இரண்டாம் உலகப்போரின் அழிவுக் குவியலிலிருந்து பிழைத்து வந்த இந்தக் கலைஞனின் வாழ்க்கை சொல்லும் நம்பிக்கைச் செய்தி, இன்று நமக்குத் தேவையானது. 'பெரும் அழிவுகளிலிருந்தும் நம் வாழ்க்கையை நாம் மீட்டெடுத்துவிட முடியும்' என்பதுதான் அது.

The Pianist படத்தின் முன்னோட்டம்:


பின்குறிப்பு:
ஜூன் 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு பியானோ கலைஞனைக் காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரிக்கு (Wilm Hosenfeld) 'Righteous among the Nations' என்ற பதக்கம் கொடுத்து கவுரவித்து நன்றி தெரிவித்திருக்கிறது.Tuesday, August 9, 2011

180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி


180 Degree Rule: ஒரு அறிமுகம்.

திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதரா வண்ணம் கதையோடு ஒன்றியிருக்கச் செய்வதென்பது கடினமான காரியங்களில் ஒன்று. அதற்காக ஒரு படைப்பாளி, பல யுத்திகளைப் பயன்படுத்தி, தான் சொல்லவரும் உணர்ச்சிகளைப் பார்வையாளனுக்கு சிரமமின்றி கொண்டு சேர்க்க முயன்றான்/முயலுகிறான். அப்படி முயற்சிக்கப்பட்டு, பெரும்பயன் தந்த யுத்திகள், பிற்பாடு 'விதிகளாக' (Rules) மாற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. அப்படி திரைப்பட ஆக்கத்தில் பல விதிகள் ஒழுங்கமைக்கப்பட்டு, பயன்பாட்டிலிருக்கிறது.

அவ்வகையில் இந்த '180 Degree Rule' என்பது மிக ஆதாரமான விதிகளில் ஒன்று. திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், பேட்டிகள் என எதுவாகிருந்தாலும் இந்த விதி பயன்படும். ஆகையால் அதை கொஞ்சம் அறிமுகப்படுத்தி வைத்துக்கொள்வது நலம் (நமக்கும் நம் படைப்புக்கும் ).

180 Degree Rule என்பது..

A,B என இரண்டு நடிகர்களை எடுத்துக்கொள்வோம். 'A'-வும் 'B'-யும் எதிரெதிராக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படம் பிடிக்க கேமராவை, இருவருக்கும் பக்கவாட்டில் சிறிது தூரம் தள்ளி வைக்கிறோம். இதன் மூலம் A,B நின்றிருக்கும் நிலையையும், அவர்கள் இருக்கும் இடத்தையும் (உணவு விடுதி, பூங்கா, அலுவலகம், கடற்கரை..etc) பார்வையாளனுக்கு தெரிய வைத்துவிட முடியும் அல்லவா?    

கடற்கரையில் நின்றிருக்கும் இருவர்

இது அந்த காட்சியின் 'மாஸ்டர் ஷாட்'(Master shot) எனப்படுகிறது. அதாவது ஒரு காட்சியின், நிகழ்தளம், பங்குபெரும் நடிகர்கள் மற்றும் சூழ்நிலையை விவரிக்கும் ஷாட் அக்காட்சியின் மாஸ்டர் ஷாட்டாகும். பெரும்பாலும் மாஸ்டர் ஷாட் என்பது 'வைட் ஷாட்'(Wide shot)-ஆக இருக்கும்.

இப்போது 'A' கேமராவிற்கு இடது புறமும் 'B' வலதுபுறமும் இருப்பதாகக் கொள்வோம்.


'A'-வையும் 'B'-யையும் இணைக்கும் விதத்தில் ஒரு நேர் கோடு போடுவோம். இதற்கு 'இமாஜினரி லைன் -Imaginary line' (கற்பனைக்கோடு) என்று பெயர். இக்கோட்டைத் தாண்டி கேமராவைக் கொண்டுச் செல்லுவது குழப்பத்தை ஏற்படுத்தும். அது எப்படி என்றுப் பார்ப்போம்.


இந்தக் கோட்டின் இருமுனைகளையும் இணைக்கும் விதத்தில் ஒரு அரை வட்டம் கேமரா இருக்கும் பக்கத்தில் போட்டுக்கொள்வோம்.


இதுவே அவர்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டால், அது 360 டிகிரி அல்லவா. அதில் பாதியான இந்த அரை வட்டம் 180 டிகிரி. புரியும் என்று நினைக்கிறேன்.
இப்போது கேமராவானது இந்த 180 டிகிரி அரை வட்டத்தின் மீதுதான் பயணிக்க வேண்டும். நீங்கள் கேமராவை இடம் மாற்றி வைக்க நினைத்தால், குறிப்பாக நடிகர்களின் 'over-the-shoulder shot' (O.S) எடுக்கும் போது இந்த விதி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.


அதாவது 'A'-வின் 'over-the-shoulder' ஷாட்(O.S) எடுக்கும்போது, 'A' கேமராவின் இடதுபக்கமும் 'B' வலது பக்கமும் இருக்கும் படி கேமராவை வைக்க வேண்டும். அதனால் கேமரா 'A' நடிகரின் வலது தோள்பட்டைக்கு நேராக வைக்க வேண்டும். அதைத் தவிர்த்து இடது பக்க தோள்பட்டைக்கு நேராக வைத்தால் 'A' நடிகர் இப்போது கேமராவின் வலது புறம் வந்து விடுவார். இதை தவிர்க்கவேண்டும். அதே முறையைத்தான் 'B' நடிகரின் 'O.S' ஷாட்டின் போதும் பயன்படுத்த வேண்டும்.


'A'-வின் OS shot
'B'-வயின் OS shot
'இமாஜினரி லைனை' கேமரா கடந்துவிட்டது - தவறு


 'Look' கொடுத்தல் :

இப்போது 'B' நடிகர் 'A'நடிகரைப் பார்ப்பதாக குளோசப் ஷாட் எடுத்தால், 'B' நடிகர் கேமராவின் இடது புறத்தில் பார்க்க வேண்டும். ஏனெனில் 'A' நடிகர் இடதுப் புறத்தில் அல்லவா இருந்தார். (இங்கேதான் 'Look' கொடுத்தல் வருகிறது)

அதேப்போல் 'A' நடிகர் 'B' நடிகரைப் பார்ப்பதாக குளோசப் ஷாட் எடுத்தால், 'A' நடிகர் கேமராவின் வலது புறத்தில் பார்க்க வேண்டும்.

இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால். ஒரு காட்சியில், நடிகர்களை முதன் முறையாகக் காட்டும்போது அவர்கள் எந்த பக்கத்தில் (இடது அல்லது வலது) இருந்தார்களோ அதே பக்கத்தில் அவர்களைத் தொடர்ந்து காட்டுவது தான். ஏன் என்றால் அப்போதுதான் பார்வையாளனால் எந்த நடிகன் எங்கே இருந்தான் என்பதை நினைவில் கொள்ள முடியும்.  

அது மட்டுமல்லாமல், அப்போதுதான் எதிரெதிராக நின்றிருக்கும் (உட்கார்ந்திருக்கும்) இரு நடிகர்களும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல் இருக்கும். இல்லை என்றால் இருவரும் ஒரு திசையில் பார்ப்பதைப் போல் ஆகிவிடும்.

முதலில் காட்டிய மாஸ்டர் ஷாட்டின் எதிர்பக்கத்தைக் காட்ட விரும்பினால், அந்தப் பக்கத்தின் மாஸ்டர் ஷாட் ஒன்று காட்டிவிட்டு, பின் அதன் தொடர் ஷாட்டுகளாக 'OS' ஷாட்டோ அல்லது குளோசப் ஷாட்டோ காட்டலாம். இப்போது Aவும், Bயும் கேமராவிற்கு இடது வலம் மாறி இருப்பார்கள்.
மாஸ்டர் ஷாட்டில் நடிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று காட்டி விடுவதனால், அதன் அடிப்படையில் OS-யிலும் குளோசப்பிலும் பார்வைக் கோணம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதேதான் இரண்டுக்கு மேற்பட்ட நடிகர்கள் காட்சியில் இருக்கும் போதும். மாஸ்டர் ஷாட்டில் அவர்கள் கேமராவிற்கு எந்தப் பக்கத்திலிருந்தார்களோ அங்கேயே எல்லா ஷாட்டுகளிலும் அவர்கள் காட்டுவது. மாற்ற நினைத்தால் மற்றொரு மாஸ்டர் ஷாட் காட்ட வேண்டும். அவ்வளவுதான்.

180 டிகிரிக்குள்ளாக கேமராவின் இயக்கம் இருப்பதை கட்டுப்படுத்துவதனால் இந்த விதியை '180 Degree Rule' என்று அழைக்கிறோம்.


---------


இதைப் புரிந்துக்கொள்ளுங்கள். 'Crossing the Line' என்றொரு விதி இருக்கிறது, அதை வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கேச் சொன்னால் குழம்பி விடும்.


You TubeVideo: Moviemaking Techniques180 Degree Rule
Sunday, August 7, 2011

இருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'கார்டன் வில்லிஸ்'


காட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் 'கார்டன் வில்லிஸ்' (Gordon Willis). அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.

காட்ஃபாதர் படங்களில் இவர் அமைத்த ஒளியமைப்பு முறை இன்று வரை பேசப்படுகிறது, பின்பற்றப்படுகிறது. 'காட்ஃபாதர் லைட்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஒளியமைப்பில் பல முறைகள் உள்ளன. 'ஹை கீ' (High Key), 'லோ கீ' (Low Key),' பட்டர்ஃபிளை லைட்டிங்' (Buttery Fly Lighting) ..etc, என்பதில் 'காட்ஃபாதர் லைட்டிங்' (Godfather Lighting) என்பதும் ஒன்று, என கொடாக்கின் (Kodak) ஒரு கையேடு குறிப்பிடுகிறது.

காட்ஃபார்தர் படத்தில் இவர் அமைத்த ஒளியமைப்பு எப்படியானது?

-ஒளி மேலிருந்து வரும், அந்த ஒளி 'Diffuse' செய்யப்பட்ட 'மென்மையான ஒளியாய்' (soft light) இருக்கும்.

-நடிகர்களின் கண்களுக்கு 'Eye Light' பயன்படுத்தாமல், 'மார்லன் பிரண்டோ' போன்ற நடிகர்களின் கண்களை இருட்டில் இருக்கும்படி செய்தார்.

கண்கள் இருட்டில் இருக்கின்றன

('Eye Light' என்பது, நடிகர்களின் கண்களுக்கென தனியாக செய்யப்படும் ஒரு ஒளியமைப்பு முறை, அதாவது நம் கண்ணில் கருப்பு பகுதியான 'பாப்பா' (eye pupil)-வில் ஒளி பிரதிபலிக்கும் படி செய்ய வேண்டும், அப்போதுதான் கண்களுக்கு ஒரு உயிர்ப்புத் தன்மையும், 'Depth'-ம் கிடைக்கும். இல்லையென்றால், கருப்பான பகுதி தெரியாமல் போகும். கண்ணை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கும் இந்த ஒளியமைப்பு பயன்படும். ஒளிப்பதிவில் முக்கியமாகப் பின்பற்றப்படும் முறை இது)

'பாப்பா'

அதுநாள் வரை எல்லாப் படங்களிலும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் கூட பின்பற்றப்படுகிறது. அதை 'கார்டன் வில்லிஸ்' தவிர்த்தார். காரணம் கேட்டதற்கு, 'மார்லன் பிராண்டோவின்' கதாப்பாத்திரமான 'விட்டோ கோர்லியானின்' (Vito Corleone) 'புரிந்துக்கொள்ள முடியாத ஆழ் மனதை உணர்த்தும் விதமாக' என்றார். (கண்களைப் பார்த்து மனதைப் படித்துவிடலாம் அல்லவா, அதைத் தவிர்க்கத்தான்)


காட்ஃபாதர் படங்களில் ஒளியையும் இருளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தி இருப்பார். பெரும்பான்மையான காட்சிகளில் ஒளியை குறைவாகவே பயன்படுத்தினார். இருளையும் (Shadow) 'அண்டர் எக்ஸ்போஸ்ட் ஃபிலிம்' (underexposed film) முறையையும் பயன்படுத்திக் காட்சிகளை உருவாக்கினார். அதுநாள் வரை 'கலர் ஃபிலிம்' ஒளிப்பதிவில் கைகொள்ளப்படாத 'அண்டர் எக்ஸ்போஸ்ட்' முறையை நுட்பமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பயன்படுத்தினார், என்று கார்டன் வில்லிஸ் புகழப்படுகிறார்.

கார்டன் வில்லிஸ்சின் சமகாலத்து ஒளிப்பதிவாளரான 'கானட் ஹால்' (Conrad Hall - மூன்று முறை ஆஸ்கர் வாங்கியவர்) 'இருளின் இளவரசன்' ("The Prince of Darkness") என்று இவரை அழைத்தார்.

கார்டன் வில்லிஸ், மிக நீண்ட ஷாட்டுகளுக்குப் பெயர் பெற்றவர். காட்ஃபாதர் முதல் பாகத்தின் ஆரம்பக் காட்சியே, ஒரு மிக நீண்ட 'Zoom Back' ஷாட்டாகத்தான் துவங்கும். மூன்று நிமிடம் நேரம் வரும் அந்த ஷாட், கணினியோடு இணைக்கப்பட்ட zoom lens-ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாம்.

மாலை நேர பொன்னிற வெயிலைப் (Magic hour - நம்ம ஊரில் 3 மணியிலிருந்து 5 அல்லது 5.30 மணிவரை - Twillight க்கு முன்பாக ) பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர். காட்ஃபார்தர் படங்களின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப் படமாக்கப்பட்டன.

மற்ற எந்த ஒளிப்பதிவாளரை விடவும், 'கார்டன் வில்லிஸ்' எழுபதுகளின் 'cinematic look'-ஐ வரையறுத்தார் என்கிறார்கள்.

'காட்சிக் கதைசொல்லலில் அவர் ஒரு மைல்கல்' என்றார் ' William Fraker' என்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்.

-----------------------------------------------

கார்டன் வில்லிஸ்சின் முன்கதை சுருக்கம்:

வில்லிஸ் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார் (May 28, 1931). அவரது பெற்றோர்கள் பிராட்வே தியேட்டரில் நடனக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். பிறகு அவருடைய அப்பா வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஒப்பனைக் கலைஞராக சேர்ந்திருக்கிறார். சிறுவயதிலேயே திரைப்படத்தின் மீது வில்லிஸுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. நடிகனாக வேண்டும் என்பது அவரின் முதல் ஆசை, பின்பு அரங்கிற்கு ஒளியமைத்தலில் ஆர்வம் வந்து, அதுவே புகைப்படத்துறை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.

கொரியப் போரின் (1950-53) போது விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். அங்கே போர்க் காட்சிகளைப் படம் பிடிக்கும் பிரிவில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒரு படத்தை உருவாக்கும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாக வில்லிஸ் சொல்லுகிறார்.


போருக்கு பின்பு நியூ யார்க்கில் உதவி ஒளிப்பதிவாளராக தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய அவர் பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிறகு, பதிமூன்று ஆண்டுகளுக்கு பின் End of the Road (1970) என்னும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக உருவெடுக்கிறார்.

தொடர்ந்து பல சிறந்த இயக்குனர்களிடம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். அதில். Woody Allen, மற்றும் Alan J. Pakula வும் அடக்கம்.

1972-இல் காட்ஃபாதர் முதல் பாகம்.
1974-இல் காட்ஃபாதர் இரண்டாம் பாகம்.
1990-இல் காட்ஃபாதர் மூன்றாம் பாகம்.

1971 முதல் 1977 வரை ஏழு வருடங்களில் கார்டன் வில்லிஸ் ஒளிப்பதிவு செய்த ஆறு படங்கள், 39 தடவை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு, 19 ஆஸ்கர் விருதுகள் பெற்றிருக்கின்றன. அதில் மூன்று சிறந்த படங்களுக்கான விருதுகளும் அடங்கும். ஆனால் வில்லிஸ் ஒருதடவைக்கூட பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு காரணம் வில்லிஸின் 'ஹாலிவுட் மறுப்பு' என்று சொல்லப்படுகிறது.

(அதுநாள் வரை ஹாலிவுட் பின்பற்றிய முறைகளை அவர் மீறினார். லோ கீ லைட்டிங்கைக் கொண்டு கதை சொல்லலில் அவர் முன்னோடியாக இருந்தார். சன்னல்களை 'blow-out' செய்தார், விளக்குகளை 'Flare' அடிக்கச் செய்தார், அண்டர் எக்ஸ்போஸ் செய்து 'forced processing' மூலம் காட்சிக்கான தன்மையைக் கொண்டுவந்தார்.

கண்கள் இருட்டில் இருக்கின்றன

காட்ஃபாதரில் மார்லன் பிராண்டோவின் கண்களைப் பார்வையாளர்கள் பார்க்கமுடியாத படி செய்ததைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு: ஏன் அவரின் கண்களைப் பார்க்க வேண்டும்? எதன் அடிப்படையில்?  என்று எதிர் கேள்வி கேட்டாராம், அதற்கு கிடைத்த பதில் ..'That's the way it was done in Hollywood.'.. இந்த பதில் தனக்கு போதுமானதாக இல்லை என்றாராம்.

பிறகு பின்னாளில் Woody Allen-னின் 'Zelig' (1983) படத்திற்காகவும், காட்ஃபாதர் மூன்றாம் பாகத்திற்காகவும் (1990) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார். விருது கிடைக்கவில்லை.


2009-இல் வாழ்நாள் சாதனையாளர் விருது (Academy Honorary Award) அவருக்கு வழக்கப்பட்டது.

2003-இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 'Top 10 Most Influential Cinematographers'-இல் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

1980-இல் 'Windows' என்றப் படத்தை இயக்கி இருக்கிறார். The Devil's Own (1997) அவரின் கடைசிப்படம்.

-----------------------------------------------

பணிபுரிந்தப் படங்கள்:

End of the Road (1970)
The Landlord (1970)
Klute (1971)
The Godfather (1972)
The Godfather Part II (1974)
The Paper Chase (1973)
The Parallax View (1974)
All the President's Men (1976)
Annie Hall (1977)
Interiors (1978)
Manhattan (1979)
Stardust Memories (1980)
Pennies from Heaven (1981)
Zelig (1983) — Academy Award nomination.
Broadway Danny Rose (1984)
The Purple Rose of Cairo (1985)
Presumed Innocent (1990)
The Godfather Part III (1990) — Academy Award nomination.
Malice (1993)
The Devil's Own (1997)

----------------------------------------------

கார்டன் வில்லிஸ்சின் சில வார்த்தைகள்:


"I wasn't trying to be different; I just did what I liked"

"நான் வேறு மாதிரியாக இருக்க முயலவில்லை, நான் விரும்பியதைச் செய்தேன்"

-----

"You're looking for a formula; there is none. The formula is me."

"நீங்கள் ஒரு சூத்திரம் தேடுகிறீர்கள்; அப்படி எதுவும் இல்லை. சூத்திரம் என்பது நான்தான்"

அவர் பல இயக்குனர்களிடம் பல விதமாகப் பணி செய்ததைப்பற்றி, ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கான பதில் இது.

-----

"You learn to eliminate, as opposed to adding,"

"சேர்ப்பதைப் போன்றே நீ, அகற்றுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்"

-----