முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பிப் பிழைத்தக் கலைஞன்


1939ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அது. இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் காலம். போலந்தின் தலைநகரான வார்சாவில் (Warsaw) ஒலிபரப்பில் இருந்த போலந்து நாட்டின் வானொலி ஒலிபரப்பு இடையில் நிறுத்தப்பட்டது. நிலையம் இழுத்து மூடப்பட்டது. போலந்தின் மேல் போர் தொடுத்த ஜெர்மனியின் இராணுவம் நகருக்குள் நுழைந்திருந்ததும் வானொலி நிலையத்தின் மீது குண்டு போட்டதும் அதற்கு காரணம்.

போலந்து வானொலி (Polish Radio) தன் ஒலிபரப்பை இடையில் நிறுத்திய போது, ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது  Chopin’s Nocturne in C sharp minor என்னும் இசைக் கோவை. 'Wladyslaw Szpilman' என்னும் பியனோ இசைக் கலைஞன் அதை அப்போது வாசித்துக் கொண்டிருந்தான்.

தன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது ஒருபுறம், சிதறி ஓடும் மக்கள் ஒருபுறம், தன் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் ஒருபுறம் என மொத்தக் கவலைகளையும் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்கிறான் அவன். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் ஆறுபேர் கொண்ட குடும்பம் அது. போலந்தில் வசிக்கும் யூதக் குடும்பம்.

நாஜிக்கள் போலந்துக்குள் நுழைந்ததும் செய்த முதல் வேலை, வார்சாவில் வசித்த யூதர்களின் பண இருப்பைக் குறைத்ததுதான். குறைந்த அளவுதான் யூதர்கள் பணம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், தாங்கள் யூதர்கள் என்பதைக் குறிக்கும் விதமாகக் கைகளில் 'நீல நட்சத்திரம்' பொறிக்கப்பட்ட அடையாளத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதும் நாஜிக்களின் கட்டளையாக இருந்தது.

நமக்குத் தெரிந்ததுதான், நாஜிக்களின் யூத விரோத மனப்பான்மை. ஹிட்லருக்கு யூதர்களை அழித்தொழிப்பது வாழ்நாள் லட்சியமாகயிருந்தது. அதற்கான வேலைகளை போலந்திலிருந்துதான் துவக்கினார்கள். யூதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்தார்கள். அவர்களின் வாழ்வாதார உரிமைகளைத் தடுத்து, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தத் துவங்கினர்.

பிறகு 1940ஆம் ஆண்டு அக்டோபரில் துவங்கி நவம்பர் மாதத்திற்கு இடைப்பட்டக் காலங்களில், வார்சாவில் வசித்த மொத்த யூதக் குடும்பங்களையும் தனியாகப் பிரித்து, நகரத்தின் ஒருபகுதியில் தனித்து வாழ நிர்பந்தித்தார்கள். அந்தப் பகுதி 'வார்சா கெட்டோ' (Warsaw Ghetto) என அழைக்கப்பட்டது. நான்கு லட்சம் யூதர்களை 1.3 சதுர மைல்களுக்குள் அடைத்தார்கள். நம்முடைய பியானோ கலைஞனின் வீடு அந்தப் பகுதிலேயே இருந்ததனால் தன் வீட்டிலேயே இருக்க முடிந்தது. வேலையின்மை, பணப்பற்றாக்குறை, பசி என அவதிகள் ஒருபுறம் என்றால், தன் உயிரினும் மேலான பியானோவை வாசிக்க முடியவில்லை என்பது அவனுக்கு பெரும் துயரமாகிருந்தது. கையில் இருந்த கொஞ்ச உணவையும் பகிர்ந்து உண்டார்கள். நாஜிக்களின் தொடர் துன்புறுத்தல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருந்தது.


நாஜிக்கள் யூதர்களின் மேல் கொண்டிருந்த வன்மத்தின் கொடூரமுகம் வெளியே தெரிய ஆரம்பித்தது அப்போதுதான். யூதக் குடும்பங்கள் வசித்த கட்டிடத்திற்குள் சோதனை என்ற பெயரில் புகுந்த நாஜிப்படை, ஒரு யூதக் குடும்பத்தின் உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொன்னது. அக்குடும்பத்தில் ஒரு பெரியவர் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தார், அவரால் எழுந்து நிற்க முடியாது. அதைக்கண்ட ஒரு நாஜி வீரன், அந்தப் பெரியவரை அப்படியே வீல்சேரோடு தூக்கி வெளியே எறிந்தான். அவன் எறிந்தது அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து. மீதமிருந்த குடும்பத்தினரை சாலைக்கு இழுத்துவந்துச் சுட்டுக் கொன்றார்கள். சாலையில் சிதறிக்கிடந்த பிணங்களின் மீது நாஜிக்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றார்கள். இந்த படுகொலைகள் ஒரு தொடக்கம்தாம் என்பது பின்வந்த நாட்களில் யூதர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்நிலையில் ஒருநாள் மொத்த யூதக் குடும்பங்களையும் வீட்டை விட்டு வெளியேறி வரும் படி நாஜி இராணுவம் அழைத்தது. அவர்களை நாஜிக்களின் மரண முகாம்களுக்கு (Extermination camps or death camps) அழைத்துச் செல்ல இரயிலில் ஏற்றத் துவங்கினார்கள். கடைசி நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் உதவியால் 'பியானோ கலைஞன்' மட்டும் தப்பிக்கிறான். தன் அன்புக்குரிய குடும்பத்தாரிடமிருந்து பிரிந்த அவன் ஒரு அடிமைத் தொழிலாளியாக கட்டிட வேலையில் சேர்கிறான். பிறகு அங்கே இருந்து தப்பித்து, தன் முன்னால் ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் (யூதர்கள் அல்லாதவர்கள்) உதவியுடன் 'கெட்டோவிற்கு' வெளியே மறைந்து வாழத் துவங்குகிறான்.

யூதப் பகுதிக்கு வெளியே, யூதர்கள் அல்லாதவர்கள் வாழும் ஒரு கட்டிடத்தில் மறைந்து வாழுகிறான். அவனுக்குத் தேவையான உணவுகளை, நண்பர்கள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அங்கே அவன் வாழ்வது வெளியே தெரியாமல் இருக்க வேண்டும். நண்பர்கள் கதவை வெளியே பூட்டி விட்டு சென்று விடுவார்கள். ஒருநாள் பக்கத்து வீட்டுகாரப் பெண்மணி இவனைப் பார்த்துவிடுவதனால், அந்த வீட்டிலிருந்து தப்பித்து, வேறொரு இடத்தில் தங்குகிறான்.

இரண்டாவது வீட்டில் தனித்து விடப்படும் அவன், அங்கே ஒரு பியானோ இருப்பதைக் காண்கிறான். ஆனால் அவன் அதை வாசிக்க முடியாது, வாசித்தால் சத்தம் அவனைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனாலும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை, எவ்வளவு நாள் ஆயிற்று, பியானோவை வாசித்து? அடங்கா ஆசையில் வாசிக்கத் துவங்குகிறான். உண்மையில் அவன் விரல்கள் பியனோவைத் தொடவே இல்லை. பியனோவில் விரல்கள் படாமல், அதன் கட்டைகளுக்கு மேலாக பியனோவை இசைப்பதைப் போன்ற பாவனையில் ஈடுபடுகிறான். அவன் மனதெங்கு இசை நிறைகிறது.

இப்படி பியானோவை மனதிற்குள் இசைத்தும் கையில் இருக்கும் உணவை உண்டும் சன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தும் நாட்களைக் கழிக்கிறான். சன்னல் வழியாகப் பார்ப்பதெல்லாம் நாஜிக்களால் துரத்தித் துரத்திக் கொல்லப்படும் யூதர்களின் அவல நிலையையும், அவன் வாழ்ந்த நகரம் குண்டுகளால் துளைக்கப்படுவதையும் தான்.

சிறிது நாட்கள் அப்படியே நகருகிறது. நீண்ட நாள் ஆன உணவில் காளான் பூத்துவிடுகிறது, அதை உண்பதனால் நோய்வாய்ப் படுகிறான். கவனிப்பாரின்றி பெரும் இன்னல்களை அனுபவிக்கிறான். பசியும் நோயும் அவனை பாதி உடம்பாக்குகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நண்பனால் காப்பாற்றப்பட்டு, மறைந்து வாழும் வாழ்க்கை அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்கிறது.

இதனிடையே நாஜிக்களை எதிர்த்து யூதக் குழு (Polish resistance) ஒன்று போராடிக்கொண்டிருக்கிறது. 1944 ஆகஸ்டில், இவன் மறைந்து வாழ்ந்த பகுதியில் ஒருநாள், நாஜிக்களுக்கும் யூதக் குழுவிற்கும் சண்டை நடக்கிறது. இவனிருந்த கட்டித்தின் மீது குண்டுகள் போடப்படும் சூழ்நிலையில் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். போலந்தின் எதிர்ப் புரட்சியினால் தோல்வி அடைந்த நாஜிப்படையின் பெரும்பகுதி அந்நகரத்தை விட்டு வெளியேறி விடுகின்றது. நகரம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

தனித்து விடப்பட்ட பியானோ கலைஞன், உணவைத்தேடி அலைகிறான். இறுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கே கீழே கிடக்கும் ஒரு உணவுக் குடுவையை (Food can) திறக்க முயற்சிக்கும் போது 'Wilm Hosenfeld' என்ற ஒரு ஜெர்மானிய அதிகாரியின் பார்வையில் படுகிறான். மீதமிருந்த நாஜிப் படையின் அதிகாரி அவர். அவரைக் கண்டு பயந்து பின்வாங்குகிறான். அவர் இவனை யார் என்று கேட்க, தான் ஒரு பியானோ கலைஞன் என்று சொல்கிறான்.  

அவர், அங்கே இருந்த பியானோவைக் காட்டி அதை வாசித்துக் காட்டும்படி சொல்லுகிறார். "Ballade in G-Minor, Op. 23" என்னும் இசைக் கோவையை வாசித்துக் காட்ட, அவனது திறமையைக் கண்டு மயங்கிய அந்த அதிகாரி, அவன் அங்கே மறைந்திருக்க அனுமதித்துவிட்டு சென்று விடுகிறார். பியானோ கலைஞன் அதே கட்டிடத்தின் உடைந்த மேல் மாடியில் பதுங்கி வாழுகிறான். அந்த அதிகாரி அவனுக்கு உணவுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இப்படி ஒரு வாரம் கழிந்த நிலையில், ருஷ்ய படைகள் முன்னேறி வரும் தகவல் அறிந்து மீதமிருந்த நாஜிப்படையும் வார்சாவை விட்டு வெளியேறுகிறது. அந்த அதிகாரி இவனிடம் விடைப்பெற்றுச் செல்ல வருகிறார். தன்னுடைய மேல் அங்கியை அவனுக்கு குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள கொடுக்கிறார். விரைவில் ருஷ்யப்படை அவனை காப்பாற்றும் என்றும், பின்னாளில் அவனது பியானோ இசையை தான் கேட்கிறேன் என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

சில நாட்கள் கழித்து போலந்துப் படை கண்ணில் தென்படுகிறது. மகிழ்ச்சியின் உற்சாகத்தில் இவன் அவர்களை நோக்கி ஓடுகிறான். இவன் அணிந்திருக்கும் ஜெர்மனிய உடுப்பைப் பார்த்தவுடன் இவனை நோக்கிச் சுடத் துவங்குகிறார்கள். இவன் பதறிப் பதுங்கி, தான் ஒரு போலந்துகாரன் என்று கத்துகிறான். பிறகு சுடுவதை நிறுத்தி இவனைக் காப்பாற்றுகிறார்கள்.

பிறகு ஊர் திரும்பும் வழியில் ருஷ்யபடைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளில் அந்த ஜெர்மன் அதிகாரியும் இருப்பதைக் காண்கிறான். அவர் தன்னைக் காப்பாற்றினார் என்று இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுக்கிறான். ஆனாலும் அவர் தொடர்ந்து போர்க் கைதியாக வைக்கப்பட்டிருந்து 1952ஆம் மரணம் அடைகிறார்.

போருக்குப் பின், 1945-இல் மீண்டும் போலந்து வானொலியின் ஒலிபரப்பு துவங்கப்பட்டபோது, நம் பியனோ கலைஞனின் இசையோடு துவங்கப்பட்டது. 1939-இல் பாதியில் நிறுத்தப்பட்ட இவனுடைய இசையே, கடைசி நிகழ்ச்சியாக போர் முடியும் வரை இருந்தது. அதே இசைக் கோவையையே இப்போதும் வாசித்து, ஆறு ஆண்டுகளுக்கு பின், தான் விட்ட இடத்திலிருந்தே தன் இசைப் பயணத்தைத் தொடங்கினான் அவன்.

1950-களில் குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினான். 1935 முதல் 1972 வரை ஐநூறுக்கும் அதிகமான பாடல்கள் இயற்றி இருக்கிறான். அதில் நூறுக்கும் மேலான பாடல்கள் இன்றுவரை போலந்தில் பிரபலமாக இருக்கின்றது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1945-இல் தான் தப்பி பிழைத்த கதையை 'Death of a City' என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதினார். பிறகு 1998-இல் ஆங்கிலத்தில் 'The Pianist' என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. முப்பதுக்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜூலை 6, 2000ம் ஆண்டு, நம்முடைய பியானோ கலைஞன் 'Wladyslaw Szpilman' தன்னுடைய எண்பத்துயெட்டாவது வயதில் காலமானார்.


புகழ்பெற்ற இயக்குனரான 'ரோமன் பொலன்ஸ்கி' (Roman Polanski) 2002-இல் 'The Pianist' புத்தகத்தை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். 'Adrien Brody' என்னும் மிகத் திறமையான நடிகனின் மூலம் 'தப்பிப் பிழைத்த' அந்தக் கலைஞனின் வாழ்க்கை நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. பல சர்வதேச விருதுகளையும் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் பெற்றது.


போரால் விளையும் துன்பத்தையும் துயரத்தையும் நாம் அறிவோம். போரிலிருந்து ஓர் உயிர் பிழைத்து வருவதென்பது, மறுபிறப்பிற்குச் சமம். இதில் இந்தக் கலைஞன் படும் துயரமும் வேதனையும் நம் மனமெங்கும் வடுக்களை ஏற்படுத்துகிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வை போர் எவ்விதத்தில் பாதிக்கும் என்பதை இப்படம் பார்க்கும்போது நம்மால் உணரமுடியும். பல கோடி உயிர்களைப்பறித்த இரண்டாம் உலகப்போரின் அழிவுக் குவியலிலிருந்து பிழைத்து வந்த இந்தக் கலைஞனின் வாழ்க்கை சொல்லும் நம்பிக்கைச் செய்தி, இன்று நமக்குத் தேவையானது. 'பெரும் அழிவுகளிலிருந்தும் நம் வாழ்க்கையை நாம் மீட்டெடுத்துவிட முடியும்' என்பதுதான் அது.

The Pianist படத்தின் முன்னோட்டம்:


பின்குறிப்பு:
ஜூன் 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு பியானோ கலைஞனைக் காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரிக்கு (Wilm Hosenfeld) 'Righteous among the Nations' என்ற பதக்கம் கொடுத்து கவுரவித்து நன்றி தெரிவித்திருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...