முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருபதாம் நூற்றாண்டின் மோனலிஸா


'ஆப்கான் பெண்' (Afghan Girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985-ஆம் ஆண்டின் 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' (National Geographic) இதழில் அட்டைப் படமாக வெளி வந்தது. இப்படம் 1980-இல் ஆப்கானிஸ்தானின் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டது. இன்றுவரை உலகில் 'மிகவும் அறியப்பட்ட' புகைப்படமாக இது இருக்கிறது. அவளின் கடல் பச்சை வண்ணக் கண்களும் அது சொன்னச் செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது. அந்த கண்களுக்குப் பின்னே உறைந்து கிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  'Amnesty International'-ஆல் அதிகமுறை அவர்களின் சுவரொட்டிகளிலும் காலண்டரிலும் அச்சிடப்பட்டது. 

"ஆப்கன் மோனலிஸா" (the Afghan Mona Lisa) என்று அழைக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் 'ஸ்டீவ் மெக்கரி' (Steve McCurry) என்ற புகழ்பெற்ற 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' புகைப்படக்காரர்.


யாரிந்த 'ஆப்கான்' பெண்?

உண்மையில் அப்படத்தை எடுத்த ஸ்டீவ் மெக்கரிக்கேக் கூடத் தெரியவில்லை. அவர் 1984- டிசம்பரில் ஆப்கான் போரைப் புகைப்படமெடுக்கச் சென்றிருந்தபோது, ஆப்கான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறார். அப்போது பன்னிரெண்டு வயதே நிரம்பிய இந்தப் பெண்ணை பார்த்தபோது, அவளின் கண்களில் இருந்த ஈர்ப்பு அவரை படமெடுக்கத் தூண்டியிருக்கிறது. அவளின் அனுமதியோடு சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். பெயரைக்கூட கேட்க வில்லை.

பின்னர், அப்படம் அட்டைப்படமாக வெளியாகி உலகத்தின் கவனத்தைப் பெற்றபோது கூட, அந்தப் பெண்ணைப்பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அப்படம் உலக முழுவதும் பல பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டது. அகதிகளின் நிலையை விவரிக்கும் ஒருவித 'குறியீடாக, அடையாளமாக' (symbol) பயன்படுத்தப்பட்டது.


முதலில் இந்தப் பெண்ணின் படத்தை 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்'' பத்திரிக்கையின் ஆசிரியர் பிரசுரிக்க வேண்டாம், அது ரொம்பக் கஷ்டப்படுத்துகிறது என்றாராம். பிரசுரித்தபோது உலகின் பல பகுதிகளிலிருந்து கடிதங்கள் வந்ததன, அந்தப் பெண்ணைப்பற்றிய தகவல் கேட்டு, பண உதவி செய்வதாக, அவளை தத்தெடுத்துக்கொள்வதாக, அவளை திருமணம் செய்து கொள்வதாகக் கூட.

பல முறை ஸ்டீவ் அந்தப்பெண்ணைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றபோதும், அது முடியாமல் போனது. காரணம், சோவியத்தை வெற்றிக்கொண்ட தாலிபான்களின் ஆட்சி ஆப்கானில்  நடந்துக்கொண்டிருந்ததும் வெளியார்கள் செல்ல முடியாததாக இருந்ததும். பிறகு 2001-இல் பில்லேடனை பிடிக்கறேன் பேர்வழி என தாலிபான்களின் ஆட்சியை வட அமெரிக்கர்கள் ஒழித்துக்கட்டியது நாம் அறிந்ததுதான்.

அதன்பின் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ஸ்டீவ் மெக்கரி அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பி, அவளைத்தேடி ஆப்கான் சென்றார். அது நடந்தது 2002 ஆம் ஆண்டு. அவளை முதன் முதலில் பார்த்த அதே அகதிகள் முகாமிற்கு சென்றார். அகதிகள் பொதுவாக இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பார்கள் என்பதனால் அவளைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமம் என்பதை அவர் அறிந்துதான் இருந்தார். என்றாலும், முயன்று பார்க்க விரும்பினார். 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' பத்திரிக்கையும் இதில் ஈடுபட்டது. அங்கே அகதி முகாமில் அவளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பல தவறான நபர்கள் அடையாளம் காட்டப்பட்டு, பின்பு ஒரு வயதானவர் மூலம் அவளது இருப்பிடம் தெரிந்தது. அந்தப் பெரியவர் 1984-இல் அந்த முகாமில் சிறுவனாக இருந்தபோது அவளோடு பழகியவர், இவர்கள் கொண்டு போன புகைப்படத்தைப் பார்த்து அவரால் அடையாளம் சொல்ல முடிந்தது.

(முதலில் பல தவறான தகவல்கள் கிடைத்தன. அவள் இறந்துப் போய் விட்டாள், கனடாவிற்குச் சென்று விட்டாள். ஏன்... பின்லேடனுக்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தாள் என்பதாய்)

அந்தப் பெரியவரின் மூலம் தெரிந்த தகவல், அவள் 'தோரா போரா' (Tora Bora - பின்லேடனை தேடி குண்டு வெடித்தார்களே அதே மலைதான்) மலைப்பகுதியைச் சார்ந்தவள் என்பதும், அப்போதைய ஆப்கான் மீது சோவியத்தின் படையெடுப்பிலிருந்து தப்பித்து அகதியாக வந்தவள் என்பதும்தான். ஸ்டீவ் அவளைத்தேடி மூன்று நாள் பயணம் செய்து தோரா போரா சென்றார். அவளிருந்த கிராமம் ஆறு மணிநேர வாகனத்திலும் பிறகு மூன்று மணிநேரம் நடையாகவும் செல்லும் தூரத்தில் இருந்தது. அது ஒரு எல்லையோர கிராமம். ஸ்டீவ் அவளை முதன் முதலில் பார்த்தபோதே தெரிந்துக் கொண்டார் 'அது அவள் தான்'!


அவள் பெயர் 'ஷர்பாத் குளா' (Sharbat Gula), பஸ்தூன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவள். அவளுக்கு அப்போது வயது 28 அல்லது 29 அல்லது 30 ஆகக் கூட இருக்கலாம், சரியாகத் தெரியவில்லை. அவளுக்குக் கூட தெரியவில்லை. பதினேழு ஆண்டுகளுக்கு முன் 12 வயது சிறுமியாக இருந்த அவள் இப்போது மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாள்.

ஸ்டீவ் 1984-இல் ஆப்கான் வந்திருந்தது, ஆப்கனும் சோவியத் யூனியனும் போரிட்டுக்கொண்டிருந்த நேரம். அப்போதைய சோவியத் யூனியன் ஆப்கானின் மீது படை எடுத்திருந்தது. காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்,  எண்ணைய்க் குழாய் பாதை, அமெரிக்காவோடு பனிப்போர், அரேபிய தேசங்களோடு உறவு மற்றும் பகை போன்ற உலக அரசியல்!

டிசம்பர் 24, 1979-இல் துவங்கிய இப்போர் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்தது. ஆப்கன் போராளிகள் மற்றும் தன்னார்வ அரேபிய இளைஞர்களின் கூட்டுப்படை ருஷ்யர்களை எதிர்த்தது. ஆப்கனுக்கு ஆதரவாக பல தேசங்கள் உதவி புரிந்தன. வட அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தைவான், இந்தோனேசியா, சீனா, யூ.கே மற்றும் இந்தியா ஆகியவை அதில் அடக்கம். சொல்லப்போனால் இது பனிப்போரின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த ஒருவித 'proxy war'-ஆகவே பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனின் 'வியட்நாம் போர்'* என அழைப்பட்ட இந்தப் போர் பிப்ரவரி 15,1988-இல் முடிவுக்கு வந்தபோது இருபுறமும் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போனார்கள். ஆப்கானிஸ்தானில் மட்டும் ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஐம்பது லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபது லட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது லட்சம் மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.

(*வியட்நாம் போரில்-1955 to 1975 அமெரிக்கா தோற்றது - இங்கே சோவியத் தோற்றது)

அதன் பிறகு ஆப்கானின் உள்ளாட்டுப் போர் துவங்கியதும், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், அவர்களின் கொடுங்கோல் ஆட்சியும் உலகம் அறிந்த துயரக் கதை.

தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளைக் கடந்து எல்லைத்தாண்டி பாகிஸ்தான் முகாம்களில் அடைக்கலம் அடைந்தவள் அவள். அவளுடைய மூத்த சகோதரனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறாள். போரின் முடிவுக்கு பின் நாடு திரும்பி திருமணம் செய்து கொண்டாள். கணவன் (Rahmat Gul) சிறு வேலைகள் செய்து பிழைப்பவன். மூன்று பெண் குழந்தைகள் முறையே 1,3,13 வயது. ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டது.


அவளுடைய பதினாறாவது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. அவள் அண்ணன் சொன்னாராம், அவளின் திருமண நாள் மட்டும்தான், வாழ்நாளில் அவள் சந்தோசமாக இருந்த நாள் என்று.

இஸ்லாமிய முறைப்படி வாழும் பெண் அல்லவா, அவள் முகத்தை அவள் கணவனைத் தவிர மற்ற ஆடவர் பார்க்கக் கூடாது என்பதற்காக பர்தா கொண்டு மூடிக்கொண்டிருப்பவள்.  கணவனிடம் அனுமதி பெற்று, அவளது இப்போதைய உருவத்தை ஸ்டீவ் புகைப்படம் எடுத்தார்.

அவளின் புகைப்படம் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதையும், அகதிகளுக்கு உதவுவதிற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

இத்தனை ஆண்டுகாலப் போருக்கும், பெரும் அழிவுக்கும் பின்பும், தான் பிழைத்திருப்பதைப் பற்றி அவள் சொன்னாளாம். "அது கடவுளின் விரும்பம்' (“will of God”) என்று.

அவளின் விருப்பம் ஒன்றாக மட்டும் தான் இருந்திருக்கிறது. 'அவள் தவற விட்ட பள்ளிப் படிப்பு மகள்களுக்குக் கிடைக்கவேண்டும்' என்பதுதான் அது.

1984-இல் ஸ்டீவ் மெக்கரி அவளை எடுத்த புகைப்படம் தான், அவள் வாழ்நாளில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம். அதன் பிறகு 2002-இல் அதே ஸ்டீவ் எடுத்தப் புகைப்படங்கள் தான் அவள் இரண்டாவதாக எடுத்துக்கொண்டப் புகைப்படம். ஆம் 1984-க்கு பிறகு அவள் புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லை.


ஜனவரி 2002-இல் ஸ்டீவ் அவளிடம் அவளது புகழ் பெற்ற 'ஆப்கன் பெண்' புகைப்படத்தைக் காட்டும் வரை, அதை அவள் பார்த்திருக்கவில்லை.

அவள் தான், அந்த புகழ் பெற்ற 'ஆப்கன் பெண்' என்பதை 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' பத்திரிக்கை பலவழிகளில் சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டது.

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்'' பத்திரிக்கையின் அட்டைப் படத்தை இந்தப் பெண் மீண்டும் அலங்கரித்தாள். 114 வருடங்களில் அந்தப் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இரண்டாம் முறை இடம்பெற்ற முதல் நபர் அவள்தானாம். 'ஆப்கானிய பெண் தேடல்' (The Search for the Afghan girl) என்ற கட்டுரையும், ஆவணப்படமும் உருவாக்கப்பட்டது.


'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' மூலம் நிதி திரட்டப்பட்டு, அவளுக்கும் ஆப்கான் பெண்களுக்கும் கல்வி கிடைக்க, உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

'ஆப்கன் பெண்கள் நிதி' (Afghan Girls Fund) என்றுப் பெயரிடப்பட்ட அந்த அமைப்பு பின் 2008-இல் ஆண் பிள்ளைகளுக்கும் உதவும் விதத்தில் மாற்றப்பட்டு 'ஆப்கன் குழந்தைகள் நிதி' (Afghan Children's Fund) என்று பெயரில் இயங்குகிறது.


இது தான் இந்த இருபதாம் நூற்றாண்டு மோனலிஸாவின் கதை.
'This is the legacy of the ’Mona Lisa of the twentieth century’

பின்குறிப்பு:

ஸ்டீவ் மெக்கரி எடுத்த இப்படம் 'Kodachrome film', Nikon FM2 கேமரா மற்றும் Nikkor 105mm F2.5 lens பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்பிறகும் ஸ்டீவ் Kodachrome film-களையே பயன்படுத்தி படங்களை எடுத்தார். ஜூன் 2009-இல் 'Kodak' இந்த வகை ஃபிலிம் தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்து ஸ்டீவை கடைசி Kodachrome film-இல் படமெடுத்துக் கொடுக்க கேட்டுக்கொண்டது. அப்படங்கள் George Eastman House museum in Rochester, New York-க்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடைசி படச் சுருளின் சில புகைப்படங்கள்:






இங்கே அதைப்பற்றியக் கட்டுரையையும் மற்றப் படங்களையும் பார்க்கலாம்.


கருத்துகள்

  1. சூப்பர் பாஸ்! அருமையான தகவல்கள்!

    பதிலளிநீக்கு
  2. கண்கள் சொல்லத்தெரியாத ஒர் உணர்வைத்தருகிறது. நல்ல பதிவு..!!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் ஆச்சர்யமான விஷயம் !! அந்த கண்கள் ,,என்னை ,,என்னமோ செய்கிறது

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பர்களே..(ஜீ...ஆதி.. சேலம் தேவா ..udanpirappe )

    பதிலளிநீக்கு
  5. ஒரு வளமான தேசம் வல்லரசு வல்லூறுகளால் வதை செய்யப்பட்டதுக்கு சாட்சியாக இந்தப்படம் ஒன்று போதும்.

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் உலக சினிமா ரசிகன். நன்றி.

    நன்றி ஜாக்கி.

    பதிலளிநீக்கு
  7. வலிமிகுந்த வேதைனையையும்
    அகம் குமுறும் சினத்தின் நெருப்பையும்
    மாந்தநேயம் அற்ற மனிதர்களின் மீது
    விழியால் காறி உமிழும்..
    வார்த்தைகள் கடந்த வெளிப்பாடாய்
    '' இந்த எளியவளின் பார்வை ''
    எண்ணிலடங்கங்கா துண்பக்காடாய்
    உணர்வுகளை அள்ளி வீசுகின்றது..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கட்டுரை. மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. எப்படி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. மோனாலிசாவின் மௌனத்தைவிட, இவள் கண்களில் இருக்கும் சோகம் வலிமையாக தெரிகிறது. கட்டுரை ஆவணப்படம் என்பதை தாண்டி அகதிகளின் வாழ்க்கை பிண்ணணியில் ஒரு அருமையான திரைக்கதை இருப்பது தெரிகிரது, saving private ryan போல......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...