முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'கார்டன் வில்லிஸ்'


காட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் 'கார்டன் வில்லிஸ்' (Gordon Willis). அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.

காட்ஃபாதர் படங்களில் இவர் அமைத்த ஒளியமைப்பு முறை இன்று வரை பேசப்படுகிறது, பின்பற்றப்படுகிறது. 'காட்ஃபாதர் லைட்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஒளியமைப்பில் பல முறைகள் உள்ளன. 'ஹை கீ' (High Key), 'லோ கீ' (Low Key),' பட்டர்ஃபிளை லைட்டிங்' (Buttery Fly Lighting) ..etc, என்பதில் 'காட்ஃபாதர் லைட்டிங்' (Godfather Lighting) என்பதும் ஒன்று, என கொடாக்கின் (Kodak) ஒரு கையேடு குறிப்பிடுகிறது.

காட்ஃபார்தர் படத்தில் இவர் அமைத்த ஒளியமைப்பு எப்படியானது?

-ஒளி மேலிருந்து வரும், அந்த ஒளி 'Diffuse' செய்யப்பட்ட 'மென்மையான ஒளியாய்' (soft light) இருக்கும்.

-நடிகர்களின் கண்களுக்கு 'Eye Light' பயன்படுத்தாமல், 'மார்லன் பிரண்டோ' போன்ற நடிகர்களின் கண்களை இருட்டில் இருக்கும்படி செய்தார்.

கண்கள் இருட்டில் இருக்கின்றன

('Eye Light' என்பது, நடிகர்களின் கண்களுக்கென தனியாக செய்யப்படும் ஒரு ஒளியமைப்பு முறை, அதாவது நம் கண்ணில் கருப்பு பகுதியான 'பாப்பா' (eye pupil)-வில் ஒளி பிரதிபலிக்கும் படி செய்ய வேண்டும், அப்போதுதான் கண்களுக்கு ஒரு உயிர்ப்புத் தன்மையும், 'Depth'-ம் கிடைக்கும். இல்லையென்றால், கருப்பான பகுதி தெரியாமல் போகும். கண்ணை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கும் இந்த ஒளியமைப்பு பயன்படும். ஒளிப்பதிவில் முக்கியமாகப் பின்பற்றப்படும் முறை இது)

'பாப்பா'

அதுநாள் வரை எல்லாப் படங்களிலும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் கூட பின்பற்றப்படுகிறது. அதை 'கார்டன் வில்லிஸ்' தவிர்த்தார். காரணம் கேட்டதற்கு, 'மார்லன் பிராண்டோவின்' கதாப்பாத்திரமான 'விட்டோ கோர்லியானின்' (Vito Corleone) 'புரிந்துக்கொள்ள முடியாத ஆழ் மனதை உணர்த்தும் விதமாக' என்றார். (கண்களைப் பார்த்து மனதைப் படித்துவிடலாம் அல்லவா, அதைத் தவிர்க்கத்தான்)


காட்ஃபாதர் படங்களில் ஒளியையும் இருளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தி இருப்பார். பெரும்பான்மையான காட்சிகளில் ஒளியை குறைவாகவே பயன்படுத்தினார். இருளையும் (Shadow) 'அண்டர் எக்ஸ்போஸ்ட் ஃபிலிம்' (underexposed film) முறையையும் பயன்படுத்திக் காட்சிகளை உருவாக்கினார். அதுநாள் வரை 'கலர் ஃபிலிம்' ஒளிப்பதிவில் கைகொள்ளப்படாத 'அண்டர் எக்ஸ்போஸ்ட்' முறையை நுட்பமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பயன்படுத்தினார், என்று கார்டன் வில்லிஸ் புகழப்படுகிறார்.

கார்டன் வில்லிஸ்சின் சமகாலத்து ஒளிப்பதிவாளரான 'கானட் ஹால்' (Conrad Hall - மூன்று முறை ஆஸ்கர் வாங்கியவர்) 'இருளின் இளவரசன்' ("The Prince of Darkness") என்று இவரை அழைத்தார்.

கார்டன் வில்லிஸ், மிக நீண்ட ஷாட்டுகளுக்குப் பெயர் பெற்றவர். காட்ஃபாதர் முதல் பாகத்தின் ஆரம்பக் காட்சியே, ஒரு மிக நீண்ட 'Zoom Back' ஷாட்டாகத்தான் துவங்கும். மூன்று நிமிடம் நேரம் வரும் அந்த ஷாட், கணினியோடு இணைக்கப்பட்ட zoom lens-ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாம்.

மாலை நேர பொன்னிற வெயிலைப் (Magic hour - நம்ம ஊரில் 3 மணியிலிருந்து 5 அல்லது 5.30 மணிவரை - Twillight க்கு முன்பாக ) பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர். காட்ஃபார்தர் படங்களின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப் படமாக்கப்பட்டன.

மற்ற எந்த ஒளிப்பதிவாளரை விடவும், 'கார்டன் வில்லிஸ்' எழுபதுகளின் 'cinematic look'-ஐ வரையறுத்தார் என்கிறார்கள்.

'காட்சிக் கதைசொல்லலில் அவர் ஒரு மைல்கல்' என்றார் ' William Fraker' என்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்.

-----------------------------------------------

கார்டன் வில்லிஸ்சின் முன்கதை சுருக்கம்:

வில்லிஸ் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார் (May 28, 1931). அவரது பெற்றோர்கள் பிராட்வே தியேட்டரில் நடனக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். பிறகு அவருடைய அப்பா வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஒப்பனைக் கலைஞராக சேர்ந்திருக்கிறார். சிறுவயதிலேயே திரைப்படத்தின் மீது வில்லிஸுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. நடிகனாக வேண்டும் என்பது அவரின் முதல் ஆசை, பின்பு அரங்கிற்கு ஒளியமைத்தலில் ஆர்வம் வந்து, அதுவே புகைப்படத்துறை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.

கொரியப் போரின் (1950-53) போது விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். அங்கே போர்க் காட்சிகளைப் படம் பிடிக்கும் பிரிவில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒரு படத்தை உருவாக்கும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாக வில்லிஸ் சொல்லுகிறார்.


போருக்கு பின்பு நியூ யார்க்கில் உதவி ஒளிப்பதிவாளராக தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய அவர் பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிறகு, பதிமூன்று ஆண்டுகளுக்கு பின் End of the Road (1970) என்னும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக உருவெடுக்கிறார்.

தொடர்ந்து பல சிறந்த இயக்குனர்களிடம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். அதில். Woody Allen, மற்றும் Alan J. Pakula வும் அடக்கம்.

1972-இல் காட்ஃபாதர் முதல் பாகம்.
1974-இல் காட்ஃபாதர் இரண்டாம் பாகம்.
1990-இல் காட்ஃபாதர் மூன்றாம் பாகம்.

1971 முதல் 1977 வரை ஏழு வருடங்களில் கார்டன் வில்லிஸ் ஒளிப்பதிவு செய்த ஆறு படங்கள், 39 தடவை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு, 19 ஆஸ்கர் விருதுகள் பெற்றிருக்கின்றன. அதில் மூன்று சிறந்த படங்களுக்கான விருதுகளும் அடங்கும். ஆனால் வில்லிஸ் ஒருதடவைக்கூட பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு காரணம் வில்லிஸின் 'ஹாலிவுட் மறுப்பு' என்று சொல்லப்படுகிறது.

(அதுநாள் வரை ஹாலிவுட் பின்பற்றிய முறைகளை அவர் மீறினார். லோ கீ லைட்டிங்கைக் கொண்டு கதை சொல்லலில் அவர் முன்னோடியாக இருந்தார். சன்னல்களை 'blow-out' செய்தார், விளக்குகளை 'Flare' அடிக்கச் செய்தார், அண்டர் எக்ஸ்போஸ் செய்து 'forced processing' மூலம் காட்சிக்கான தன்மையைக் கொண்டுவந்தார்.

கண்கள் இருட்டில் இருக்கின்றன

காட்ஃபாதரில் மார்லன் பிராண்டோவின் கண்களைப் பார்வையாளர்கள் பார்க்கமுடியாத படி செய்ததைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு: ஏன் அவரின் கண்களைப் பார்க்க வேண்டும்? எதன் அடிப்படையில்?  என்று எதிர் கேள்வி கேட்டாராம், அதற்கு கிடைத்த பதில் ..'That's the way it was done in Hollywood.'.. இந்த பதில் தனக்கு போதுமானதாக இல்லை என்றாராம்.

பிறகு பின்னாளில் Woody Allen-னின் 'Zelig' (1983) படத்திற்காகவும், காட்ஃபாதர் மூன்றாம் பாகத்திற்காகவும் (1990) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார். விருது கிடைக்கவில்லை.


2009-இல் வாழ்நாள் சாதனையாளர் விருது (Academy Honorary Award) அவருக்கு வழக்கப்பட்டது.

2003-இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 'Top 10 Most Influential Cinematographers'-இல் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

1980-இல் 'Windows' என்றப் படத்தை இயக்கி இருக்கிறார். The Devil's Own (1997) அவரின் கடைசிப்படம்.

-----------------------------------------------

பணிபுரிந்தப் படங்கள்:

End of the Road (1970)
The Landlord (1970)
Klute (1971)
The Godfather (1972)
The Godfather Part II (1974)
The Paper Chase (1973)
The Parallax View (1974)
All the President's Men (1976)
Annie Hall (1977)
Interiors (1978)
Manhattan (1979)
Stardust Memories (1980)
Pennies from Heaven (1981)
Zelig (1983) — Academy Award nomination.
Broadway Danny Rose (1984)
The Purple Rose of Cairo (1985)
Presumed Innocent (1990)
The Godfather Part III (1990) — Academy Award nomination.
Malice (1993)
The Devil's Own (1997)

----------------------------------------------

கார்டன் வில்லிஸ்சின் சில வார்த்தைகள்:


"I wasn't trying to be different; I just did what I liked"

"நான் வேறு மாதிரியாக இருக்க முயலவில்லை, நான் விரும்பியதைச் செய்தேன்"

-----

"You're looking for a formula; there is none. The formula is me."

"நீங்கள் ஒரு சூத்திரம் தேடுகிறீர்கள்; அப்படி எதுவும் இல்லை. சூத்திரம் என்பது நான்தான்"

அவர் பல இயக்குனர்களிடம் பல விதமாகப் பணி செய்ததைப்பற்றி, ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கான பதில் இது.

-----

"You learn to eliminate, as opposed to adding,"

"சேர்ப்பதைப் போன்றே நீ, அகற்றுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்"

-----


கருத்துகள்

  1. நண்பரே!
    மிக..மிக..நன்றி.
    என் போன்ற பாமரனுக்கு புரியும் விதமாக எளிய தமிழில்...
    உயரிய கருத்தை திணித்து விட்டீர்கள். கார்டன் வில்லிஸ் என்ற கேமரா ஒவியனுக்கு ஆகச்சிறந்த அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி உலக சினிமா ரசிகன்..

    //கேமரா ஒவியனுக்கு ஆகச்சிறந்த அஞ்சலி.// அஞ்சலி என்ற வார்த்தையை மரணத்திற்கு பின் நினைவு கூறல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

    கார்டன் வில்லிஸ் உயிருடன் தான் இருக்கிறார். இது மற்றவர்களுக்கான தகவலாக.

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுரேஷ் கண்ணன் சார்..

    பதிலளிநீக்கு
  4. மன்னித்து விடுங்கள் விஜய்.

    //1980-இல் 'Windows' என்றப் படத்தை இயக்கி இருக்கிறார். The Devil's Own (1997) அவரின் கடைசிப்படம்.//

    அவரின் கடைசிப்படம் என்ற வரிகள்....கடைசியாக பணி புரிந்த படம் என்று என்னுள் பதிவாகவில்லை.
    ‘டெவில்ஸ் ஓண்’படத்துக்குப்பிறகு இற்ந்துவிட்டதாக நினைத்துதான் அஞ்சலி என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தினேன்.
    தவறுதான்.
    மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உலக சினிமா ரசிகன்..மன்னிப்பெல்லாம் எதற்கு. தெரிந்துக்கொள்கிறோம்/பகிர்ந்துக்கொள்கிறோம் அவ்வளவே. நன்றி

    பதிலளிநீக்கு
  6. கிரேட் டெக்னீஷியன்ஸ் இல்ல.! படிக்க பிரமிப்பா இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக நல்ல பதிவு விஜய். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி சார்லஸ் சார்..180 Rule பற்றிய பதிவுக்கு உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஒளிவல்லுனன் பற்றிய அற்புதமான தகவல்கள்... நன்றி..!

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    பதிலளிநீக்கு
  10. உங்களுடைய எல்லா கட்டுரையையும் படித்துகொண்டு வருகிறேன். முகவும் பயனுள்ளதாகவும் படிப்பதற்கு எளிதாகவும் உள்ளது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,