Friday, December 28, 2012

‘முகம் மாறும் தமிழ் திரைப்படங்கள்’‘முகம் மாறும் தமிழ்த் திரைப்படங்கள்’ என்பதே தற்போது பேச்சாகயிருக்கிறது. சிற்றிதழ்களிலிருந்து பெரும் வணிக இதழ்கள் வரை தமிழ் சினிமாவின் அண்மைக்கால மாறுதல்களைப் பற்றி பேசுகின்றன. கதை, களன், உள்ளடக்கம், அழகியல், படைப்பாளுமை எல்லாம் மாற்றம் கண்டிருக்கின்றன என்றும், அவை எதிர்காலம் நோக்கிய நற்பார்வையை ஏற்படுத்துகின்றன என்றும் மகிழ்ந்து செய்தி வெளியிடுகின்றன. உண்மைதான், அண்மைக்காலமாய் தமிழ் சினிமா கவனிக்கத்தக்க மாறுதல்களை நோக்கி நடைபோடுகிறது. நல்ல, சிறந்த, நேர்த்தியான சில படங்கள் வெளியாகியிருக்கின்றன.

‘வழக்கு எண் 18/9’, ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனத் தொடரும் அதன் பட்டியல், தமிழ்த் திரையின் ஆரோக்கியமான முகத்தை வெளிக்காட்டுகின்றன. அதே நேரம் ‘ஏழாம் அறிவு’, ‘பில்லா-2’, ‘சகுனி’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’ போன்ற பெரிய படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. எளிய உள்ளடக்கமும், பொருட்செலவைக் குறைத்தும் எடுக்கப்பட்ட சிறிய, புதிய முகங்களால் உருவாக்கப்பட்டப் படங்கள் நிறைவான வசூலைக் கொடுப்பதும் அதிகப் பொருட்செலவில் பெரிய நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்ட மெகா படங்கள் அடிவாங்கியதையும் கவனிக்க வேண்டும். இது காலம் காலமாய் தமிழ் திரையுலகம்  உணர்த்தும் ஒரு செய்தியைத்தான் மீண்டும் நிரூபிக்கிறது. அது, ஒரு நல்ல நிறைவான திரைப்படம் என்பது நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் எளிய நேர்த்தியான ஒரு படைப்பு, அது எத்தகைய சிறிய முதலீடானாலும் அதன் செய்நேர்த்தியின் மேன்மையில் தகுந்த கவனிப்பையும், வெற்றியையும் அடையும் என்பதையும்தான். இதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்களை நாம் அறிவோம்.

சிறிய படங்கள் ஆரோக்கியமான ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பல காரணங்களிருந்தாலும் முக்கிய காரணமாய் இன்றைய ‘டிஜிட்டல்’ தொழில் நுட்பம் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு திரைப்படம் உருவாக காரணமாகிருக்கும் எல்லா துறையிலும் டிஜிட்டல் நுழைந்துவிட்டது. இசையில் ‘கீ போர்டு’, ‘சிந்ததைசர்’, ‘மல்டி டிராக்’ போன்றவையும் படத்தொகுப்பில் ‘AVID’, ‘FCP’ போன்றவையும் வந்து சேர்ந்து பல காலம் ஆகிவிட்டது. அதேபோல படம்பிடிக்கத் தேவையான கேமரா, திரையிடத் தேவையான ‘புரஜக்டர்’ போன்றவற்றிலும் இன்று டிஜிட்டல் அதன் ஆதார தேவையை எட்டி விட்டதை சில வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். ‘Red One’, ‘Alexa’, ‘Canon EOS 5D/7D’ என்றும் ‘QUBE', ‘RDX’, ‘UFO’, ‘dts’, ‘dolby’, ‘Surround Sound, ‘dolby atmos’, ‘aura 3D’ என்றும் நாம் அறிந்து வைத்திருப்பவை அனைத்தும் டிஜிட்டலின் வளர்ச்சியைத்தான் குறிக்கின்றன.

ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராக்களின் மீது பல அவநம்பிக்கைகள் இருந்தன. அது தரமானதா? செலவை குறைக்க கூடியதா? படச்சுருளுக்கு மாற்றாக அவை இருக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அத்தகைய கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு டிஜிட்டல் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் அத்தகைய கேள்வியிலிருக்கும், அவநம்பிக்கையை டிஜிட்டல் முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது என்று சொல்லுவதற்கில்லை. ஆயினும் டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்பத் தகுந்த இடத்தை அடைந்து விட்டது என்பதற்கு ஆதாரம் நாம் மேலே குறிப்பிட்டப் படங்கள் தான். ஆமாம். வழக்கு எண், அட்டகத்தி, மதுபானக்கடை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற சிறியப் படங்கள் மட்டுமல்ல தாண்டவம், பில்லா-2, மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற பெரிய படங்களும் டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்திதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்தாத படங்களே இல்லை எனலாம். முழுமையாக இல்லாவிட்டாலும் தேவைக்கருதி பல காட்சிகள் டிஜிட்டல் கேமராக்களால் எடுக்கப்படுகின்றன.

டிஜிட்டலின் இந்த வளர்ச்சி பல புதிய பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது. நொடிக்கு இரண்டாயிரம் ஃபிரேம்கள் எடுப்பது, குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிப்பது, இடமில்லா சிறிய இடங்களிலும் கேமராவை வைக்க முடிவது (குளிர்ச்சாதனப்பெட்டி, மிதிவண்டி கைப்பிடியில், வாகனச் சக்கரங்களின் இடுக்கில்), உடம்போடு கேமராவை இணைத்துவிடுவது என பல சாத்தியங்களை அது கொடுத்திருப்பதைப் போலவே பொருட் செலவையும் அது குறைத்திருக்கிறது. டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி பெரிய படங்களையும் பல கோடிகள் செலவழித்து எடுக்கலாம், சிறிய படங்களையும் எடுக்கலாம். நாம் இங்கே கவனிக்க வேண்டியது சிறிய படங்களில் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தினால் தரம் இருக்குமா? அது ஒரு நேர்த்தியான படமாக உருவாகுமா? என்பதைத்தான்.

இக்கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாது எனினும் ஒற்றை வார்த்தையில் பதிலாக சொல்ல வேண்டுமானால்,  ‘இருக்கும்’ என்றுதான் சொல்ல வேண்டும். நேர்த்தியாக, நேர்மையாக, தகுதி வாய்ந்த கலைஞர்களால், தொழில்நுட்பாளர்களால் உருவாக்கப்படும் டிஜிட்டல் திரைப்படம் தரமானதாக, நேர்த்தியானதாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், திரைப்பட உருவாக்கத்திலிருக்கும் பல படி நிலைகளை குறைக்கிறது. உதாரணமாக.. படச்சுருளைப் (Film) பயன்படுத்தி படம் பிடிக்கும்போது, படம்பிடிக்கப்பட்ட படச்சுருள்,  லேபிற்கு (Lab) அனுப்பப்பட்டு, டெவலப் செய்யப்பட வேண்டும். பின்பு அவற்றை பிரதி (Print) எடுத்து அல்லது டெலிசினி செய்துதான் பார்க்க முடியும். அதாவது இன்று பதிவு செய்யப்பட்ட காட்சியைப்பார்க்க குறைந்தது ஒருநாள் அவகாசமாவது தேவைப்படும். ஆனால் டிஜிட்டலில் எடுத்த காட்சியை, அடுத்த கணத்திலேயே பார்க்க முடியும். மேலும் அதற்குத் தேவையான செலவுகளையும் குறைக்க முடியும். இவ்வகையில் டிஜிட்டல் என்பது பயனுள்ளதாகிருக்கிறது. மேலும் படத்தொகுப்பு, வண்ணம் நிர்ணயித்தல், பிரதி எடுத்தல் என எல்லா நிலைகளிலும் டிஜிட்டல் அடைந்திருக்கும் முன்னேற்றமும் வளர்ச்சியும், அதன் வாயிலாகக் கிடைக்க கூடிய சாத்தியத்தையும், வசதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் தடுத்துவிட முடியாது/ கூடாது. 1987-இல் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆவிட் தொழில்நுட்பத்தை’ (Avid Technology)1994-இல் மகாநதி படத்தின் மூலம் கமல் இங்கே அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் பலர் இதை எதிர்த்திருக்கிறார்கள். கேலி செய்திருக்கிறார்கள். பின்பு எல்லோரும் ஆவிட்டுக்கு மாற வேண்டியது அவசியமாயிற்று. 2005-இல் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் ‘டிஜிட்டல் சினிமாவை’ கமல் முயற்சிக்கத் துவங்கினார். அப்போது டிஜிட்டல் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கவில்லை. DV தொழில்நுட்பத்தைத்தான் அப்போது பயன்படுத்தினார். உலகம் டிஜிட்டல் யுகமாக மாறிக்கொண்டிருப்பதை கமல் கவனித்ததின் விளைவே அது. கதை இல்லாமல், அரைத்த மாவையே அரைத்து, அரசியல் பேசி, பன்ச் டயலாக் பேசி, ரசிகனை முட்டாள்களாகவே வைத்திருக்கும் சக நடிகர்களின் நிலையைப் போலில்லை கமலின் நிலை. இம்மாற்றங்களை வளர்ச்சியின் முகமாகவே பயன்படுத்த நினைக்கிறார். அவ்வகையில் இப்போதும் ‘DTH’ தொழில்நுட்பத்தின் சாத்தியங்களில் ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர நினைக்கிறார். அதற்கு அவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். ஆயினும் தமிழ் திரையுலம் இன்னும் சில ஆண்டுகளில் இதே டி.டி.எச் தொழில்நுட்பத்தில் தன் படங்களை வெளியிட, ஆள் ஆளுக்கு அடித்துக் கொள்ளப் போகிறார்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.

டிஜிட்டல் சினிமா கொடுக்கும் சாத்தியத்தில் பல படங்கள் உருவாகும். பல தொழில்நுட்பாளர்கள் பலன் அடைவார்கள்.  ஒரே படத்தில்  காதல், செண்டிமெண்ட், அரசியல், நையாண்டி, சமூகம், உறவு, சோகம், குத்தாட்டம் என்று கலந்துகட்டி, எல்லாம் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் நிறைவான படங்களை எடுக்க முடியும். A,B,C தரவரிசை ரசிகர்கள் என்னும் பிரிவு காணாமல் போகப்போகிறது. குறைந்த செலவில் தரமான படங்கள் உருவாகும் அதே நேரம். தரமற்ற பலப்படங்களும் உருவாகும் சாத்தியமிருக்கிறது. எப்போதும், எப்புதிய வளர்ச்சியையும் தவறாகவே பயன்படுத்தும் பழக்கம் நமக்கிருக்கிறது. அவ்வகையில் டிஜிட்டல் சினிமாவை தங்களின் தேவைக்கு, ஆசைக்கு, அரிப்புக்கு பயன்படுத்தும் கூட்டம் ஒன்று உருவாகிறது. இவர்கள் சினிமாவின் தரத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், தரமான கலைஞர்களுக்கான வாய்ப்பையும் தடுத்து விடுகிறார்கள். பல காலமாக திரைதுறையில் பயின்று அனுபவ அறிவு பெற்ற பல கலைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளற்று தவிப்பதைப் பார்க்க முடிகிறது. புதிய தொழில்நுட்பங்களை, முந்தைய தலைமுறை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதற்கு முன்பாக இளம் தலைமுறை கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி விடுகிறது. அதனால் புதியவர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்து கிடக்கிறது.

எந்த தொழில்நுட்பமாகட்டும், அனுபவ அறிவு என்பது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதேப்போலத்தான் இங்கே திரைத்துறைக்கும் தேவைப்படுகிறது. இளைய தலைமுறை தாம் அறிந்து வைத்திருக்கும் தொழில்நுட்ப அறிவை மட்டும் நம்பி களத்தில் இறங்குகிறது. சில சமயம் அது சரியாக வருகிறது, பெரும்பாலும் தவறான முடிவையே அவை அடைந்திருக்கின்றன என்பதை முன் நிகழ்வுகள் காட்டுகின்றன. திரைப்படம் என்பது வெறும் தொழில்நுட்பமல்ல. படைப்பாக்கம், கற்பனை, சமூக அக்கறை, அரசியல், அழகியல், இலக்கியம், உணர்வுகள், மனிதம் என மானுடத்தின் பல மேண்மைகளை உள்ளடக்கியது. ஒரு திரைக்கலைஞன் மற்ற எல்லா கலைசார் கலைஞர்களைப்போலவே மேன்மையுடைவனாக, பக்குவப்பட்டவனாக, அறிவார்ந்தவனாக, ஆன்றோனாக, அனுபவச்சாலியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த கலைஞனே ஒரு படைப்பை படைக்கத் தகுதி வாய்ந்தவனாகிறான். மற்றவர்கள் திரைப்படம் எடுக்கலாம், அது படைப்பாகாது.

தான் இயங்கும் துறையை ஒரு படியேனும் முன்னோக்கி நகர்த்திய கலைஞனைத்தான் காலம் நினைவில் கொள்ளும். அதற்கு தொழில்நுட்பங்கள் துணையாகயிருந்திருப்பதைக் காலம் சுட்டிக் காட்டுகிறது. சிறந்த கலைஞர்களுக்கு தொழில்நுட்பங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு அத்தகைய கலைஞர்கள் பக்க பலமாகயிருக்க வேண்டும். ஒரு தொழில்நுட்பாலனும், ஒரு கலைஞனும் இணைந்து நடை போட வேண்டும். கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் இருவரும் தங்களின் தகுதி கொடுக்கும் கர்வத்தில் தனித்து இயங்க முயல்வது பொருளற்ற, பயனற்ற முடிவையே தரும். படைப்பாக்கமும் தொழில்நுட்பமும் ஒன்றின் ஊடாக ஒன்றை மேம்படுத்திக் கொள்ளும். அதை அறிந்து இயங்குவது நன்மை பயக்கும்.

Wednesday, October 3, 2012

மதுபான கடையின் ஊடாக ஒரு பாதை


‘மதுபான கடை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் அவர்களை வேறொரு பட வேலையாக சந்தித்தபோது, அவர், தான் அப்போது செய்துகொண்டிருந்த படம் இது என சொல்லியதன் மூலம், ‘மதுபான கடை’ படத்தை அறிந்துக்கொண்டேன். அப்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன். மதுபான கடை என்னும் தலைப்பு குடியை ஆராதிக்கும் படம் என்பதாய் எனக்குப்பட்டது. குடியின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை (இதுவரை.. நாளை என்னாகுமோ..? யாருக்குத் தெரியும்.. ). அதனால் அதை தொடாமலேயே இருக்கிறேன். பரிசோதனையாகக் கூட முயற்சித்துப் பார்க்காமலிருக்கிறேன், பல நண்பர்களின் பரிகாசகங்களுக்கிடையேயும். அதனால் குடியைப் பற்றிய படம் என்பதனால், அதன் மேல் எவ்வித நாட்டமும் ஏற்படவில்லை. அப்படம் வெளியாகியபோதும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமற்று இருந்தேன்.

படம் வெளியாகி, நல்ல படம், பார்க்கவேண்டிய படம் என்ற செய்தி நண்பர்களின் மூலமாய் வந்தடைந்த போது, கால தாமதமாகி விட்டிருந்தது. அருகில் எந்த தியேட்டரிலும் அப்படம் ஓடவில்லை. அதற்குள்ளாகத் தூக்கி விட்டிருந்தார்க்ள். அட.. எங்கேதான் பார்ப்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் திருட்டு டிவிடி வாங்குவதில்லை. மேலும் திரைப்படங்கள் சார்ந்த கருத்தரங்குகளுக்குப் போகும்போதெல்லாம் இப்படத்தை பற்றி உயர்வான பல செய்திகள் சொல்லப்பட்டன. தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதாய் ஆராதிக்கப்பட்டதும் என் ஆர்வத்தை அதிகரித்தது. இந்நிலையில்தான் ‘டிஸ்கவரி புத்தக நிலையத்தில்’ மதுபான கடை திரைப்படத்தின் 'Original DVD'-ஐப் பார்த்தேன். மகிழ்ந்து போனேன். இப்படியான சிறிய படங்களைத் திரையரங்கிலிருந்து நயவஞ்சகமாகவோ அல்லது அறியாமையாலோ விரட்டி அடிக்கும் வியாபார சூழலிருந்து தப்பித்துக் கொள்ள, ஒரு பாதையை நாமாகவே அமைத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிறிய படங்களின் முதலீடுகளை இப்படி டிவிடிக்கள் மூலம் மீட்டெடுக்கும் முயற்சி வரவேற்கப் படவேண்டியது என நினைக்கிறேன். இதன் மூலம் தயாரிப்பாளர் காப்பாற்றப்படுவதுடன், திருட்டு டிவிடி வாங்கும் பழக்கதிலிருக்கும் மக்களுக்கும் அத்தகைய வாய்ப்பை வழங்காமலிருக்க முடியும்.

நகர்ப்புரங்களில் குறைந்தது நூற்றிருபது ரூபாய் இல்லாமல் தனி மனிதனொருவன் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட முடியாது. அதுவும் அவன் நடந்து சென்று பார்த்தால்தான். இருசக்கர வாகனத்திலோ நான்கு சக்கர வாகனத்திலோ சென்றால் அது இன்னும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தோடு என்றால் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் வேண்டும். இத்தகைய சூழல்தான் ரசிகனை திருட்டு டிவிடி வாங்க தூண்டுகிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். திரைத்துறையில் இருப்போருக்கும் அது தெரியும். ஆனால் அதற்கான மாற்று வழியை யாரும் முயற்சிப்பதில்லை. தொடர்ந்து திருட்டு டிவிடியால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டும் அதைச் சரி செய்ய தேவையான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதேயில்லை. திருட்டு டிவிடி கிடைப்பதை தடுத்துவிட்டால் இதை சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் அதற்கு எப்போதும் சவாலாகவே இருக்கும். இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் எதையும் திருடி விடலாம், உலக முழுவதும் பரப்பியும் விடலாம். அப்படியிருக்க இந்த திருட்டு டிவிடியை தடுக்க என்னதான் வழி..?

‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்..திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதுபோல, திருட்டு டிவிடியால் பயனடைவோர் திருந்தினால் தான் உண்டு. விற்பவர் வாங்குபவர் இருவரையும்தான் சொல்லுகிறேன். அவர்கள் திருந்த ஒரே வழி, குறைந்த செலவில் திரைப்படம் பார்க்க வழி செய்து தருவது. அதை இரண்டு விதமாக செய்யலாம். திரையரங்கில் குறைந்த விலையில் டிக்கட்டுகளை விற்பது. அப்படி விற்பதன் மூலம் அதிக கூட்டத்தை திரையரங்கை நோக்கி வரவழைப்பது. அப்படி வரவழைத்தால் அதிக நாட்கள் திரைப்படம் ஓடும். அதனால் கொஞ்சம் லேட்டாக பிக்கப் ஆகும் படங்களும் தப்பித்துக் கொள்ளும். அதிக நாட்கள் திரையரங்கிலிருக்கும் படங்களின் மீது மக்களின் கவனம் ஏற்பட்டு மேலும் பலரை திரையரங்கை நோக்கி இழுக்கும். இதன் மூலம் வருமானத்தை பார்க்க முடியும்.

ஆனால் நம்முடைய டிஸ்டிரிபூட்டர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் என்ன சொல்லுகிறார்கள்..“அதிக நாட்கள் எப்படி ஓட்ட முடியும்? அதற்குள்ளாகத்தான் திருட்டு டிவிடி வந்துவிடுகிறதே.. என்ன செய்வது? அதனால்தான் அதிக தியேட்டரில் வெளியிட்டு அதிக டிக்கட் வைத்து குறைந்த நாட்களிலேயே பணத்தை எடுத்து விட முயற்சிக்கிறோம்” என்கிறார்கள். மேலும் தொலைக்காட்சி வந்ததனால் எவனுக்கும் படம் பார்க்கும் ஆர்வம் இல்லை என்கிறார்கள். இந்த கூற்றிலிருக்கும் அபத்தத்தை, கயமையை அல்லது அறியாமையை நாம் கவனிக்க வேண்டும். நீங்கள் அதிக விலை வைப்பதனால்தான் அவன் திருட்டு டிவிடி வாங்க முயல்கிறான் என்பதைம், திரைப்படத்தின் மீதிருக்கும் ஆர்வம் குறையாமல் தான் தமிழன்  இன்னும் இருக்கிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தொலைக்காட்சிகள் வந்ததனால் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் தமிழனுக்கு குறைந்து விட்டது என்ற வாதம் துல்லியமானது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எங்கே போங்கள், திரைப்படத்தைப்பற்றி ஆர்வமாய் விசாரிக்கிற, விவாதிக்கிற பல நபர்களை நான் சந்திக்கிறேன். இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும்.

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி தமிழனின் வாழ்வியலோடு அது கலந்து பல காலம் ஆகிவிட்டதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு தமிழனின் செயலுக்குள்ளும் திரைப்படங்களின் தாக்கமிருக்கிறது (விதிவிலக்குகள் உண்டெனினும்). அவனின் தனிப்பட்ட ரசனைக்கும், வாழ்வியலுக்கும், காதலுக்கும், துயரத்திற்கும், அரசியல்சார் பார்வைகளுக்கும் திரைப்படங்கள் மூலக் காரணியாகிருப்பதை நாம் அறிவோம். அதை அவ்வளவு சுலபமாய் தாண்டி வந்துவிட முடியாது. ‘திரைப்படமும் தமிழனின் வாழ்வியலும்’ என்னும் தலைப்பில் இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதனால் மேலும் அவற்றை இங்கே விவரித்து உங்களை வெறுப்பேற்றாமல்.. சுருக்கமாக நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். இதன் மூலம் சொல்ல வந்தது என்னான்னா.. “தமிழனுக்கு திரைப்படம் பார்க்கும் ஆர்வம் ஒரு கடுகளவு கூட குறையவில்லை” என்பதுதான்.

அப்படி திரைப்படம் பார்க்க ஆர்வமாயிருக்கும் தமிழனுக்கு குறைந்த விலையில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அல்லது அத்திரைப்படத்தையே குறைந்த விலையில் தயாரிப்பது. குறைந்த விலையில் தயாரித்தால் குறைந்த விலையில் படம் காட்டலாமில்ல?. ஆனா அதைச் செய்ய முடியாது. ஏன் முடியாது? அட குறைந்த விலையில் படம் தயாரித்தால் பிரபல நடிகனுக்கு எப்படி பணம் தருவது? பிரபல நடிகனுக்கு பணம் தரவில்லை என்றால் எப்படி படம் எடுக்க முடியும்? ஏன் பிரபல நடிகன்தான் வேண்டுமா? புது நடிகன் போதாதா? எங்கே, புது நடிகனை வைத்து எடுத்தால் நீதான் திரையரங்குக்கே வர மாட்டேங்கிறேயே?.. அட நான் எங்கேயா வர மாட்டேன்னு சொன்னன்.. நீ தான் படத்தை போட்ட மறுநாளே தூக்கிடறேயே?.. நீ வர்ல அதான் நான் தூக்கிட்டேன். நான் வர்லாமுன்னு பார்த்தா நீ அதிக விலை வச்சிருக்க.. அதிக விலை வச்சா தான்யா நான் போட்ட காச எடுக்க முடியும். அப்பதான்யா அந்த பிரபல நடிகனுக்கு கொடுத்த காச பார்க்க முடியும்.. அது சரி இந்த படத்திலதான் பிரபல நடிகன் நடிக்கலையே, புது நடிகன் தானே அப்போ ஏன்யா அதிக விலை டிக்கட் வைக்கற? ஆங்.. ம்ம்ம்ம்ம். இதற்கு பிறகுதாங்க பதிலே வரதில்ல.

அம்மா/செல்வி/முதல்வர் செயலலிதா அவர்கள் தொண்ணூறுகளில் முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது, திரையரங்குகள் ஒவ்வொரு திரைப்படத்திற்கு ஏற்றவிதத்தில் விலைகளை, அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அது என்ன சட்டமென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கமலஹாசன், அச்சட்டத்தைப் பாராட்டி வரவேற்று, இது நல்லதுதான் இதன் மூலம் பெரியபடங்கள் வரும்போது அதிகவிலையும், சிறிய படங்களுக்கு குறைந்த விலையும் திரையரங்கள் நிர்ணயித்துக் கொள்ள முடிவதன் மூலம், தங்களின் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் இதனால் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான அதி அற்புத படங்களை (?!) எடுக்க முடியும் என்றார். நான் கூட அதைக் கேட்டு விட்டு..ஆஹா.. இனி தமிழ் சினிமா அவ்வளவுதாண்டா.. ஒரு கை பார்த்திடலாம் அந்த ஹாலிவுட்டுகாரர்களை.. என்று நினைத்துக் கொண்டேன். அதனால்தான் அது இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன்..அப்போதைய மூளைக்கு அப்படித்தாங்க தோன்றியது..!

பெரிய படம் வந்தா விலை ஏத்தறீங்க சரி.. சின்னப் படம் வந்தா விலையை குறைக்கதானே வேண்டும்.? அதை விட்டுட்டு அந்தப்படத்தையே தூக்கிடுறீங்களே?! என்னங்கப்பா..இது? இதை ஏன் இந்த கமலஹாசன் கேட்க மாட்டேங்கறாரு? ஒன்றை ஆதரிச்சா அதைச் சார்ந்த செயல்களுக்கு தார்மீக பொறுப்பு நமக்கிருக்கிறது என்பதும் சாத்தியமிருப்பின், தேவைப்படின் அதன் செயல்பாடுகளில் நாம் தலையிடவும் வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் படி கமல் மாதிரியான பெரியவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

சரி, நாம நம்ம கதைக்கு வருவோம். இவர்கள் குறைந்த விலையில் படத்தை காட்டவும் மாட்டாங்க. குறைந்த செலவில் படத்தை தயாரிக்கவும் மாட்டாங்க. அதற்குள்ளாக அவங்களுக்கு ஆயிரம் வியாபாரமிருக்கிறது. அந்தக் கதை நமக்கு எதற்கு?!.. ஆனா இவங்க ஒன்னே ஒன்னை மட்டும் புரிஞ்சுகிட்டாங்கன்னா நல்லது. குறைந்த விலையில் படத்தைக் காட்டினா மக்கள் ஏன் திருட்டு டிவிடியில் படம் பார்க்க போறாங்க? என்ற கேள்விக்கு பின்னாலிருக்கும் எதார்த்தத்தை புரிஞ்சிக்கிடனும்.. இல்ல.. இல்ல.. அதைப் பத்தி யோசிச்சா கூட போதும்.

இச்சூழலில் தான் ‘மதுபான கடை’ திரைப்படத்தின் டிவிடி முயற்சியை நாம் வரவேற்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். இதற்கு முன்னால் சில படங்களின் டிவிடிக்குள் வந்திருக்கலாம். ‘பாலை’ திரைப்படத்தின் முதலீட்டைக்கூட டிவிடிக்களின் மூலமாக மீட்டெடுக்க முயன்று வருவதை அதன் இயக்குனர் செந்தமிழன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி எல்லா கடைகளிலும் கிடைக்கும் விதமாக செய்தார்களா என்று தெரியவில்லை. மதுபான கடை திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி அதன் படைப்பாளிகள் இந்த டிவிடி சந்தைப்படுத்தலை வெற்றிகரமானதாக்கி விட வேண்டும். அதன் மூலம் புதியதோர் பாதையை நாம் ஏற்படுத்தி விட முடியும் என்று நினைக்கிறேன்.

படம் திரையரங்கிலிருந்து தூக்கப்பட்ட சில வாரங்களுக்குள்ளாக அதன் 'Original DVD' கிடைக்குமெனில் பெரும்பான்மையான தமிழர்கள் காத்திருந்து வாங்குவார்கள் என நம்புகிறேன். இப்படி ‘மொழி’ திரைப்படத்தை திரையரங்கிலேயே இரண்டு முறை பார்த்த போதும் அதன் 'Original DVD' கடைகளில் கிடைத்த போது நானும் என் நண்பர்களும் வாங்கியதை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்லுகிறேன். நல்ல படங்கள் நம் வீடுகளில் இருப்பதை நாம் விரும்பத்தான் செய்கிறோம்.

இன்னும் ஒருபடி மேலாக, ஒரு திரைப்படம் வெளியாகும் போதே, அதே திரையரங்கில் அப்படத்தின் 'Original DVD' கிடைக்கச் செய்தால் என்ன? திரையரங்கில் பார்க்க விரும்புகிறவன் பார்க்கட்டும். வீட்டிற்கு சென்று பார்க்க விரும்புகிறவன் டிவிடியில் பார்க்கட்டும். டிவிடியிலிருந்து வரும் வருமானத்தையும் (டிக்கட் விலையில் இருந்து வருவது போல) திரையரங்கு உரிமையாளருக்கே கொடுத்துவிடலாமே!? இதன் மூலம் திருட்டு டிவிடியை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.  அட இதில் பெரிய ரிஸ்க் இருக்குப்பா..டிவிடியைக் கொடுத்தா உடனே திருட்டு டிவிடி போட்டு வித்துடுவானுங்கோ என்று சொல்லுவதில் நியாயம் இருக்கிறதுதான்.. ஆனால்.. இப்ப மட்டுமென்ன வாழுதாம்?  குறைந்த பட்சம் பணம் தயாரிப்பாளரைச் சென்று அடையும் வழி இருப்பதாக என அனுபவமற்ற அறிவுக்குத் தோன்றுகிறது. சரியா..தப்பா என்று நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

சரி.. ‘மதுபான கடை’ திரைப்படத்தின் 'Original DVD'-ஐ  ரூபாய்-75 கொடுத்து வாங்கிப் பார்த்ததில், அப்படத்தைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை நமக்கு வந்துவிடுகிறது இல்லையா? அதனால்.. அப்படத்தை பற்றி என் கருத்து..

சிறப்பானப் படம். படத்தின் முடிவில் உண்டாகும் துயரத்தை விவரிக்க முடியவில்லை. படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம்.. அந்த BAR அமைக்க தன் நிலத்தை விற்றுவிட்டு..அங்கேயே குப்பை பொறுக்கும். அக்கதாப்பாத்திரத்தின் சொல்லொண்ணா துயரத்தை போன்றே உணர்கிறேன். சமூகத்தின் ஒரு முகத்தை அதே காலகட்டத்தில் பதிவுசெய்திருக்கும் இப்படம் மிக முக்கியமான பதிவு என நினைக்கிறேன். எத்தனை பாத்திரங்கள். எத்தனை அவலங்கள். எத்தனை நிஜங்கள்.. அத்தனையும் நாம் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்புகள். தனி ஒரு கதையற்று, பாத்திரங்கள் மற்றும் களத்தை அடிப்படையாக வைத்து கதை சொல்லும் இந்த பாணி தமிழுக்கு புதுசு. களங்களே கதையாகும் என்பது ஒரு புதிய பாதைதான். மிகுந்த துயரத்தையும் வலியையும் ஏற்படுத்திய படமாக இது இருக்கிறது. இயக்குனர் கமலக்கண்ணனை மனதாரப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.


பின்குறிப்பு: 1
‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.
பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம்,
நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம்,
பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம்.
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்.
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றா?’’
# நாஞ்சில் நாடன் #

இதை அவர் எங்கே பதிவு செய்தார் என்று தெரியவில்லை. நான் இதை நண்பர் ‘Saro Lama’ முகநூல் பதிவிலிருந்து எடுத்தேன். இருவருக்கும் நன்றி.

பின்குறிப்பு: 2
மதுபான கடை 'Original DVD' கே.கே.நகர் ‘Discovery Book Palace'-இல் கிடைக்கிறது. நண்பர்கள் தவறாமல் வாங்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல படத்தை, நல்ல முயற்சியை நாம் இப்படியேனும் ஆதரிக்க வேண்டும்.

Monday, October 1, 2012

காமிக்ஸ் விதைமிக நீண்ட கால காமிக்ஸ் ரசிகன் நான். பள்ளிப் பருவத்தில் துவங்கிய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. ஒரு நேர்த்தியானப் படத்தை, ஒரு சிறந்த நாவலை எப்படி அணுகுகிறேனோ அதேவிதத்தில் தான் ஒரு காமிக்ஸையும் அணுகுகிறேன் என்பதை அறிந்த என் நண்பர்கள் எப்போதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள்.  “அட என்ன சின்னப்புள்ளையாட்டும் இன்னும் காமிக்ஸ் படிக்கிறீர்கள்..?!” என்று கேட்ட பல நண்பர்கள் எனக்குண்டு. என்ன செய்வது, நண்பர்கள் பலவிதம். .  :)

இருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மதிய நேரம், ‘ஜேம்ஸ்பாண்டு 007’-ஐ நாயகனாகக் கொண்ட ‘அழகியைத் தேடி’ என்னும் ராணிக் காமிக்ஸ் ஒன்று என் கையில் வரமாக வந்து சேர்ந்தது. அவ்வரத்தை தந்தவர், என் பெரிய மாமா ‘கலைவாணன்’ அவர்கள். தன் அக்காவையும் அக்கா மகன்களையும் பார்க்க வந்தவர், எங்களுக்கு அன்பளிப்பாக இக்காமிக்ஸை கொண்டுவந்திருந்தார். அன்று படித்த அந்தக்கதை இன்றும் நினைவிலிருக்கிறது. தமிழை எழுத்து கூட்டியே படிக்கத் தெரிந்த போதும், விடாமல் வாசித்தோம். நண்பர்கள் கூடி வாசித்தோம்.

யோசிக்க.. அந்தப் புத்தகமே என் வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளமாகியிருப்பது புரிகிறது. மேலும் எப்போதும் எங்கள் வீட்டில் புத்தகங்கள் இருக்கும். எங்கள் வீட்டிற்கு, வாரத்தின் எல்லா நாட்களும் ஏதேனும் ஒரு புத்தகம் வந்துக்கொண்டே இருக்கும். என் பெற்றோர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததே அதற்கு காரணம். அப்பா அரசியல் படிப்பார். அம்மா எல்லாவற்றையும் படிப்பார். ஆனந்தவிகடன், குமுதம், சாவி, குங்குமம், கல்கி, கல்கண்டு, ஜூனியர் விகடன், ராணி முத்து என தொடரும் பட்டியலில் எந்த புத்தகமும் விட்டுப்போகாது. வாரத்தின் எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒருபுத்தகம் வெளியாகும். அது அன்றைய மாலைக்குள்ளாக எங்கள் வீட்டிலிருக்கும். அந்த புத்தகக் குவியலே என் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தியது. வீடு என்பது புத்தகங்களும் சேர்ந்ததுதான் என்பது யாரும் சொல்லித்தராமலே வந்துவிட்ட பழக்கமாகிவிட்டது.. அச்சச்சோ..கதை எங்கேயோ போகுதே..?!

ஆங்.. என்ன சொல்ல வந்தேன்னா?.. ராணிக்காமிக்ஸில் துவங்கிய என் காமிக்ஸ் வாசிப்பு, பின்பு எப்படியோ ‘லயன்/முத்து’ காமிக்ஸ் வழியே தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ராணி காமிக்ஸ் ஒரு அற்புதம்ன்னா.. முத்து/லயன் காமிக்ஸ் ஒரு புதையல். எவ்வளவு கதைகள்.!? எத்தனை நாயகர்கள்.!?. மனதெங்கும் நீங்கா இடம் பிடித்த நாயகர்களின் பட்டியல் பெரியது. தமிழ் நாட்டில், எண்பதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள்  புண்ணியவான்கள் என்றுதான் சொல்லுவேன். அக்காலகட்டத்தில் வெளிவந்த பல காமிக்ஸ்கள்தான் எங்களைப் போன்றவர்களை வடிவமைத்தது எனலாம். அத்தகைய காமிக்ஸ் நாயகர்களின் வழியேதான் நாங்கள் நல்லது கெட்டதை அறிந்துக்கொண்டோம். நீதி நேர்மையை படித்துக் கொண்டோம். மனிதம் பயின்றோம். தீயதை அழிக்க நல்லவனொருவன் உண்டு என்பதும் அவன் வல்லவன் என்பதும் மனதில் பதிந்துபோயிற்று. யோசிக்க.. அக்கதாநாயகர்களே இன்றும் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாகயிருக்க முயல்கிறார்கள். அவர்களே நமக்குள்ளிருக்கும் நாயக பிம்பத்தை உயிர்ப்பித்து வைத்திருக்கிறார்கள். அப்பிம்பமே, நீதி, நேர்மை, நியாயம், மனிதம், இரக்கம், உரிமை, விடுதலை போன்றவற்றின் மீதிருக்கும் ஆவலுக்கும் தேடலுக்கும் காரணமாகிருக்கிறது.

ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான். “எப்படி நீ எப்ப பார்த்தாலும் படித்துக் கொண்டேயிருக்கிற..? போரடிக்காதா?”.. அக்கேள்விக்கு நான் இன்றுவரை பதில் சொல்லவே இல்லை. உண்மையில் எனக்கு அக்கேள்வியும் புரியல, பதிலும் தெரியல. எப்படி அவனால் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிந்தது என்ற புதியதொரு கேள்வி தோன்றியதுதான் மிச்சம்.

உண்மையில் நம்மை புத்தகங்களே வடிவமைக்கின்றன என்று கருதுகிறேன். சொல்லித் தரப்பட்ட, கற்பிக்கப்பட்ட, அனுபவித்த எதையும் விட புத்தகங்கள் மூலம் உணரும் புரிந்துக்கொள்ளும் வாழ்க்கையே, நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கவைப்பதும் அதன் வழிப்பெற்ற அனுபவத்தை அர்த்தமுள்ளதாக்குவதும் படிப்பினையாக்குவதும் புத்தகங்கள் தான். புத்தகம் சுட்டிக் காட்டிய பிறகுதான் நாம் கவனிக்கத் துவங்குகிறோம். புத்தகம் சொல்லும் செய்தியை, நம் வாழ்க்கையில் தேடிப் புரிந்துக் கொள்கிறோம்.

புத்தகம் நம்மை வடிவமைக்கிறது எனில், என்னைப் போன்றவனுக்கு காமிக்ஸே அதன் மூலம் என்று நினைக்கிறேன். காமிக்ஸ் படிக்கும் பழக்கமே, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. கிரைம் நாவல், வரலாற்று நாவல், காதல், கவிதை, இலக்கியம், தத்துவம், அரசியல் எனத் தொடரும் அப்பழக்கத்திற்கான விதை காமிக்ஸ் படிக்க துவங்கியதில் விழுந்தது என்பதை மறுக்க முடியாது. அப்படித் தொடர்ந்து காமிக்ஸை படித்து வரும் எண்ணிலடங்கா இளைஞர் கூட்டம் இங்குண்டு என்பதை நாம் அறிவோம். அவர்களில் நானும் ஒருவன். ஆயினும் இது வரை காமிக்ஸ் வாசித்தல் பற்றி நான் எதுவுமே எழுதியதில்லை. இன்று வாசித்த ஒரு காமிக்ஸ் இந்த கட்டுரையை எழுத தூண்டிவிட்டது.

‘Wild West ஷ்பெஷல்’ என்று பெயரிடப்பட்ட ‘முத்து காமிக்ஸின்’ இம்மாத பதிப்பே அப்புத்தகம். இப்புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ‘எமனின் திசை மேற்கு’ மற்றொன்று ‘மரண நகரம் மிசௌரி’.

இதில் ‘எமனின் திசை மேற்கு’என்னும் கதை ஒரு அற்புதம். தமிழில் முதல் முறையாக ஒரு ‘Graphic Novel’ என்ற அடைமொழியோடு வெளியாகிருக்கிறது. அது உண்மைதான். மிக நேர்த்தியாக வரையப்பட்டப் படங்கள், நுணுக்கமாக செய்யப்பட்ட வண்ண வேலைப்பாடுகள் மற்றும் சிறப்பான நகர்வும் கொண்ட ஒரு கதை இது. ஒரு சிறந்த திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை இக்கதை கொடுக்கிறது. ஒரு திரைப்படம் என்பது பல ‘காட்சித் துண்டுகளால் -(shots)’ ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். அதேப்போலத்தான் காமிக்ஸும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வகையில் கதையை நகர்த்த பிரிக்கப்பட்ட இக்காமிக்ஸின் ஷாட்டுகள் மிக நேர்த்தியானவைகள். ஒவ்வொரு காட்சித் துண்டும் அற்புதமானவைகளாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் கதை ஓட்டம் ஒருபுறமெனில், அப்பக்கத்தைத் திருப்ப மனம் வராது கட்டிப்போடும் ஓவியங்கள் மறுபுறம். ஆகா.. படிக்க.. பார்க்க.. ரசிக்க என மிக அற்புதமான ஒரு அனுபவத்தை இக்காமிக்ஸ் கதை தருகிறது. இதுவரை என் காமிக்ஸ் அனுபவத்தில் ஒரு கதையின் முடிவில் கண்ணீர்த் துளி எட்டிப்பார்த்தது இக்கதையில் தான்.

இதைப் படைத்தவர் ‘Jean Van Hamme’ என்று அறிந்த போது மனம் பெரும் மகிழ்ச்சி கொண்டது. ஏற்கனவே அவரின் ‘Largo Winch’ மற்றும்  ‘XIII’ கதைகளுக்கு நான் பெரும் ரசிகன்.இந்தக்கதைக்கு எவ்வகையிலும் குறைவில்லா தன்மைக்கொண்டது  ‘மரண நகரம் மிசௌரி’. என்னுடைய பிரியமான நாயகர்களில் ஒருவரான ‘டைகரின்’ சாகசத்தை வண்ணத்தில் பார்த்து..படித்து.. மகிழ்ந்துபோனேன். இப்படி ஒரு காமிக்ஸை கொடுத்த லயன்/முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்கும் அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து இப்படியான புத்தகங்களை அவர் தந்திட வேண்டும் என்றும் விண்ணப்பம் வைக்கிறேன்.

நண்பர்களே.. இதுவரை நீங்கள் காமிக்ஸ் படிக்காதவர்களாக இருந்தாலும் .. இப்புத்தகத்தின் மூலமாக அதை துவங்கிடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். காமிக்ஸ் தானே என்று அலட்சியமாக கருதாதீர்கள். அதன் பின்னால் இருக்கும் உழைப்பை அறிந்திட்டால்.. மலைத்துப்போவீர்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை ஒரு காமிக்ஸை உருவாக்குவது. கதை எழுதுவது, அதை காட்சித்துண்டுகளாக பிரிப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, நேர்த்தியாக கதை நகர்வை முன்னெடுக்கும் காட்சித்துண்டுகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கேற்ற வசனத்தை எழுதுவது, அதை வடிவமைப்பது/அச்சடிப்பது என பெரும் வேலைகளைக் கொண்டது அது.

குறிப்பாக திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் கண்டிப்பாக காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு காமிக்ஸிலிருந்தும் பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். (கதைகளை என்று புரிந்து கொள்ளாதீர்கள்..  :) )


Wednesday, September 26, 2012

UHDTV..!?இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ‘UHDTV’ என்றொரு பதத்தை பார்த்தேன். அட ‘HDTV’ தெரியும், அதென்ன  UHDTV..!? என்ற ஆர்வம் மேலிட அதைப்பற்றி படிக்கத் தேட , ஆர்வம் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும். அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள்  ‘அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இல்லையெனில் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் ஒரு தடவை அக்கட்டுரையை படித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்போதுதான் மேலே சொல்லப்போகும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சுருக்கமாக HDTV என்பது..
1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame)
1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame)
1440×1080i (approximately 1.6 megapixels per frame)
720p  - 1280×720p  (approximately 0.9 megapixels per frame)

[The letter "p" here stands for progressive scan while "i" indicates interlaced]

4K UHDTV என்பது ..
2160p -  3840 × 2160 (approximately 8.3 megapixels per frame)


8K UHDTV என்பது ..
4320p - 7680 × 4320 (approximately 33.2 megapixels per frame)


1080p HDTV- ஐப் போன்று பதினாறு மடங்கு (yes.. 16 times) அதிக பிக்சல்கள் கொண்டது 8K UHDTV என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு IMAX (15/70mm IMAX) படத்திற்கான தரம் கொண்டது என்கிறார்கள் (ஹப்பா..). ஒலியில்  22.2 surround sound அமைப்பு கொண்டதாம்.

4K UHDTV-ஐ  UHDTV1 என்றும்  8K UHDTV-ஐ UHDTV2 என்றும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.  நொடிக்கு 24, 25, 50, 60 ,120 ஃபிரேம்கள் மாறும் தகுதிக் கொண்டது.

ஜப்பானிய நிறுவனமான ‘NHK Science & Technology Research Laboratories’ 2003-இல் இதற்கான கேமராவை வடிவமைத்து இத்தொழில்நுட்பத்தை பரிந்துரைத்தது. பல கட்ட மாறுதலுக்குப்பிறகு  2007-இல் ‘UHDTV’-க்கான  ‘SMPTE’ தரம் நிர்ணயிக்கப்பட்டது. 2015 - 2020 ஆண்டுகளுக்குள்ளாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலும் சீனாவிலும் 2013-2014 -க்குள்ளாக வீடுகளுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

2006-இல் NHK நிறுவனம்  ‘450 inch’ (11.4m) தொலைக்காட்சித் திரையில் தங்களுடைய UHDTV விடியோவை திரையிட்டு காட்டிவிட்டார்கள். (பெரும்பான்மையாக நம் வீடுகளில் இருப்பது 21inch TV)  

Aptina Imaging, RAI, BSkyB, Sony, Samsung, Panasonic Corporation, Sharp Corporation, Toshiba போன்ற டிஜிட்டல் இமேஜிங் நிறுவனங்கள் 2008-இலிருந்து ‘UHDTV’ தொழில்நுட்பத்தில் ஈடுபடத்துவங்கிருக்கின்றன.

2011-இல் SHARP நிறுவனம் NHK-வுடன் இணைந்து ‘85inch LCD display’(7680 × 4320 pixels at 10 bits per pixel) அறிமுகப்படுத்தியது.

ஏப்ரல், 2012 -இல் NHK நிறுவனம் Panasonic-வுடன் இணைந்து ‘145inch (370 cm) display (7680 × 4320 at 60 fps)-வை அறிமுகப்படுத்திருக்கிறது. இது 33.2 million 0.417 mm square pixels தரம் கொண்டது.


மே, 2012-இல்  NHK நிறுவனம் உலகின் முதல் ‘ultra-high definition shoulder-mount camera’-வை கொண்டுவந்தது. அதே மாதம் ‘33.2 megapixel video at 120 fps’ தரத்தில் இயங்கும் கேமராவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படுவதால் நொடிக்கு 120 ஃபிரேம்கள் என தரம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

2012, ஒலிம்பிக்கின் போது லண்டன் நகரத்தில் ‘15 meter wide screens’ அமைக்கப்பட்டு, போட்டிகளின் காட்சியை UHDTV பிம்பங்களாக திரையிடப்பட்டன. இச்சேவையை BBC நிறுவனம் அளித்திருக்கிறது.

மே, 2012 -இல் Sony நிறுவனம் உலகின் முதல்  ‘Consumer-Prosumer 4K 3D Projector’-ஐ அறிமுகப்படுத்திருக்கிறது.

ஆகஸ்ட், 2012-இல்  LG நிறுவனம் உலகின் முதல் ‘3D UHDTV / 4K system’ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது.மேலும் பல தகவல்கள், தெரிவிக்கும் செய்தி யாதெனில்.. அடுத்த ஆண்டுக்குள்ளாக உலகின் பல நாடுகள் UHDTV ஒளிபரப்பிற்கு மாறிவிடுவார்கள். கொரியா போன்ற நாடுகளில் கூட இவை வந்துவிடும் எனத் தெரிகிறது. பல சேட்டலைட் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை HDTV-லிருந்து UHDTV-க்கு மாற்றத் தயாராகயிருக்கிறார்கள். சில தொலைக்காட்சிகள் நேரடியாக 8K UHDTV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைக்கின்றன. தேவையற்ற இடைச்சொருகளாக 4K UHDTV தவிர்த்து விடுவதற்காக. எப்பூடி..!

உலகின் கதை இப்படிப் போய் கொண்டிருக்க.. இங்கே இந்தியாவில் என்ன கிடைக்கிறது என்பது நாம் அறிந்ததுதான்.

தொலைக்காட்சியே இப்படி என்றால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்கள் எங்கே போகும் என்பதைக் கற்பனை செய்துப்பாருங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லா திரைப்படங்களும் 3D படங்களாக இருக்கும் மேலும் அவை IMAX படங்களாகவும் இருக்கும் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. திரையரங்கில் Projector-மூலம் திரையிடுவது போய், LCD Display-க்களாக மாறிவிடவும் சாத்தியமிருப்பதை இந்த  UHDTV தொழில்நுட்பம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

நம்ம ஊரில் இவையெல்லாம் எப்போது வரும் என்பதும், நாம் அதற்கு எப்போது தயாராகப்போகிறோம், எதிர்பார்க்கப்போகிறோம், தகுதியாக்கிக் கொள்ளபோகிறோம் என்பதெல்லாம் வருங்காலத்திற்கான புதிர்களில் ஒன்றாகக் வைப்போம். எது எப்படியோ.. இப்போதைக்கு சும்மா இதைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்வோம்.  :)
Monday, September 17, 2012

காலம் கனிகிறது..


டிஜிட்டல் சினிமா (Digital Cinema) தொடர்ந்து முன்னோக்கி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்டே வருகிறது.

அண்மையில் (16/09/2012) கேனான் நிறுவனம் (Canon) சென்னையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தது. அதன் நோக்கம் தன்னுடைய புதிய சினிமாக் கேமராக்களையும் அதற்கான லென்ஸுகளையும் தமிழ் படைப்பாளிகளிடையே அறிமுகப்படுத்துவது.
திடீர் அதிருஷ்டம் (தமிழில் என்ன?  நல்லூழ்..!) அடித்ததனால் எதிர்பாராமல் திரைத்துறையில் நுழைந்த கேனான், தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. செய்தியாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கூடுதல் பயனாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கேனான் புகைப்படக் கேமராக்களில் தரமான HD விடியோக்கள் எடுக்கும் வசதியை கொண்டுவந்தது. இதன் மூலம் புகைப்படக்காரர்களே செய்தி சேகரிப்பின் போது தேவைப்பட்டால் விடியோவும் எடுத்துக்கொள்ளலாம் என்று கருதப்பட்ட அவ்வசதி கேனான் நிறுவனத்திற்கு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. 'Canon EOS 5D Mark-II' கேமராவில் கொண்டு வந்த அவ்வசதி (Full HD Video capture at 1920 x 1080) திரைப்படத்துறைக்கும் போதுமானதாக இருந்ததும், சிறிய கேமராவாக இருப்பதனால் அதன் சாத்தியத்தைப் பயன்படுத்த திரைத்துறை முயன்றதும்தான் இடையே நடந்த திருப்புமுனை. அது கேனான் நிறுவனத்திற்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது.

திரைத்துறை தன் கேமராக்களைப் பயன்படுத்தத் தயாராகயிருப்பதைக் கண்டு கொண்ட கேனான் தொடர்ந்து தன்னுடைய கேமராக்களை மேம்படுத்தி சினிமா கேமராக்கள் (Canon Cinema EOS cameras) என புதிய மாடல்களைக் கொண்டுவரத்துவங்கியது. ஒருபுறம் 'EOS 7D, EOS 5D Mark-III' என அறிமுகப்படுத்தியது. மறுபுறம் புகைப்படத்திற்கென வடிவமைக்கப்பட்ட கேமராவிலிருந்த குறைகளைக் களைந்து  View finder,Video Out போன்றவற்றை மேம்படுத்தி ‘EOS C100’,‘EOS C300’ என இரண்டு கேமராக்களை சினிமாவிற்கெனவே அறிமுகப்படுத்தியது. அண்மைக் கால வரவாக 'EOS C-500' மற்றும் 'EOS-1D C'ஆகிய கேமராக்களை 4K தரம் கொண்ட கேமராக்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் புதிய தளத்திற்கு கேனான் நகர முயற்சிக்கிறது.
Red Scarlet X
இதுவரை ‘RedOne’ கேமராவிற்கு மாற்றாக கேனான் பார்க்கப்பட்டது. ரெட்டின் இடத்தைதான் கேனான் தக்க வைத்துக்கொள்ள முயன்றது. அதற்கு போட்டியாக ரெட் தன்னுடைய புதிய மற்றும் சிறிய மாடலான 'RED SCARLET-X'-ஐ களத்தில் இறக்கியதையும். மறுபுறம்  'RED EPIC' என்ற கூடுதல் வசதிகள் (5K,120fps) கொண்ட கேமராவை ரெட் அறிமுகப்படுத்தியதையும் நாம் அறிவோம். (அண்மையில் வெளியான பில்லா-2 'RED EPIC'கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்டது)

Red Epic

இந்நிலையில் தான் கேனான் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிருக்கிறது. 4K -வை கொண்டு வந்திருப்பதன் மூலம் தன் இடத்தில் வலுவாகக் காலூன்ற முயல்கிறது. மேலும் தன்னையும் இத்துறையில்(சினிமா) ஒரு ஜாம்பவானாக மாற்றிக் கொள்ள முயல்கிறது. டிஜிட்டல் சினிமாவைப் பொருத்த வரை SONY, PANASONIC போன்ற நிறுவனங்கள் தான் முன்னோடியாக இருந்திருக்கின்றன. இத்துறையில் காலூன்ற நீண்ட காலமாக இந்நிறுவனங்கள் முயன்று வந்திருக்கின்றன. சோனி தன்னுடைய ‘CineAlta’ வரிசை கேமராக்களையும் பேனாசோனிக் ‘VariCam’ வரிசைக் கேமராக்களை தொடந்து முன்னிறுத்தியும், மேம்படுத்தியும் வந்திருக்கின்றன, வருகின்றன. இடையே கேனான் புகுந்து ’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’ என்று சொல்லத் துவங்கிருக்கிறது.

கேனான் தன்னுடைய 'EOS C-500' மற்றும் 'EOS-1D C' கேமராக்களுக்கு அதிக விலை வைத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அதாவது, திரைத்துறையைச் சார்ந்தும் தன்னை ஒரு ‘Professional’-ஆக மாற்றிக் கொள்ள முயல்வதாகப் படுகிறது. புகைப்படத்துறையில் கேனான் எப்போதும் ‘Professional’தான்.  வீடியோ கேமராத் தயாரிப்பிலும் (டிவி, ஆவணப்படம் எடுக்க உதவும் கேமராக்கள்) கேனான் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பினும் திரைத்துறையில் அதற்கென்று எந்த இடமும் இல்லாமல் தான் இருந்தது. அவ்விடத்தைத்தான் இப்போது கைப்பற்ற கேனான் முயல்கிறது என்பதை உணரமுடிகிறது.
சிறிய, விலை குறைந்த கேமராக்களின் மூலம் ரெட் கேமராக்களுக்கு மாற்றாகயிருந்த கேனான் தன்னுடைய விலை அதிக கேமராக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் பிம்பத்தை மாற்ற முயல்கிறது என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. எத்துறையானாலும் விலை அதிகரிக்க அதிகரிக்கத்தானே அதன் மதிப்பு கூடும்?! அதைத்தான் கேனான் செய்கிறது. அட.. அப்படி விலை கூடினால் அது தன் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வராதா? என்ற கேள்வி எழலாம். அப்படி ஆக வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் விலை குறைந்த கேமராக்களும் ('EOS 7D,EOS 5D Mark-II, EOS 5D Mark-III') ஏற்கனவே கேனான் வைத்திருக்கிறது அல்லவா.. அதிக விலை கொடுக்கத் தயாரில்லாத வாடிக்கையாளர்களை அக்கேமராக்கள் சரிகட்டி விடும். ஆகவே கேனான் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோம் என்று தயங்க வேண்டியதில்லை என நினைத்திருக்கலாம்.  இதன் மூலம் இந்தியா, தைவான், கொரியா போன்ற ‘குறைந்த முதலீடுகளுக்கு’ முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் கேனான் தன் வேர்களை ஆழமாக பரப்பிவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது.


அங்கே.. ரெட் ஒன் நிறுவனம் தன்னுடைய ‘RED EPIC’ கேமராவிற்கு  ‘Upgrade’ அறிவித்திருக்கிறது. 'DRAGON SENSOR' மேம்படுத்தல் மூலம் 6K Resolution,15+ Stops Native Dynamic Range, 120 fps @ Full 5K என அடுத்த தளத்திற்கு நகர்ந்திருக்கிறது.


கண்னை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டு விட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே.  தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது.

ஆயினும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர.. வளர, அது கொடுக்கும் வசதிகள் படைப்பாக்கத்திலிருக்கும் சுமைகளைக் குறைத்து இலகுவாக்கும். அதேநேரம் அது கொடுக்கும் சவுகரியத்தில் படைப்பின் தரம் குறைந்து போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. குறைந்த முதலீடு என்பதை அனுகூலமாக்கி தரமற்ற பல படைப்புகளும் உருவாகிட வாய்ப்புகள் உண்டு. அத்தகைய நிலை எப்போதும் முதலீட்டார்களையும் ரசிகர்களையும் தவறான முடிவுக்கும் நிலைப்பாட்டுக்கும் கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆகையால் காலமும், தொழில்நுட்பமும் வழங்கும் வாய்ப்புகளைப் படைப்பாளிகள் சரியான விதத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமான படைப்புகளை உருவாக்கிட வேண்டும். ஆரோக்கியமான படைப்புகள் உருவாக்க தகுதியான படைப்பாளிகள் வேண்டும். தகுதியான படைப்பாளி என்பவன் தகுந்த அறிவும் அனுபவமும் கொண்டு, அதன் வழி பெற்ற படைப்பாளுமை கொண்டவனாகிருப்பான். அத்தகைய படைப்பாளிகளாலேயே நேர்த்தியான படைப்புகளை உருவாக்கிட இயலும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

Friday, August 17, 2012

அட்டகத்தி
மிக இயல்பாய் ஒரு திரைப்படம். காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசன உச்சரிப்பு என அத்தனையும் மிக இயல்பாய் இருக்கிறது. பதின்பருவத்தில் எல்லா இளைஞனும் இளைஞியும் கடந்து வரும் வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும், அவர்களின் வாழ் சூழ்நிலையைப் பொருத்து, அவர்களுக்கான பதின்ம வயது காதல் அல்லது பாலுணர்ச்சி கடந்து செல்கிறது. இப்படத்தில், சென்னையின் விளிம்பில் பரவி இருக்கும் சிறு கிராமங்களில் ஒன்றைக் களமாகவும், அதன் இளம் பருவத்தினரை பாத்திரங்களாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

படிப்பு, வேலை பொருட்டு தினமும் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பதின்பருவத்தினர், அநேகமாக எல்லோரும் சந்தித்த காதல் நாட்கள் திரையில் விரிகின்றன. பேருந்துக் காதல் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கிறது. இதை தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படியான காதல் காட்சிகளும், விடலைத்தனங்களும் கொண்ட சம்பவங்களால் படத்தை நிறைத்திருக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திரையரங்கு கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அப்படியான நாட்களை கடத்து வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை பெரும்பாலானோருக்கு அந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்படித் தோன்றியது என்பதிலிருந்து இதைச் சொல்லுகிறேன். கதை சொல்லத் தேவையான இடத்தை சம்பவங்களின் மூலம் நிறைத்திருப்பதும், கதை சொல்ல மிகக் குறைவான நேரத்தையே எடுத்துக் கொண்டிருப்பதும் ஒருவேளை குறைகளாகத் தோன்றினாலும், ஒரு சுவாரசியமான படத்தைப் பார்த்த நிறைவு கிடைக்கிறது.

கதாநாயகன் தினேஷ், கதாநாயகி நந்திதா, நாயகனின் குடும்பம் குறிப்பாக அவரின் அப்பா, நண்பர்கள், பெண்கள், அடியாட்கள் என படம் முழுவதும் வரும் கதாப்பாத்திரங்கள் நிறைவாக இருக்கிறார்கள். சரியான பாத்திரத் தேர்வு செய்யப்பட்டு, நல்ல நடிப்பும் வாங்கப்பட்டிருக்கிறது. கதாநாயகன் தினேஷை குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் பாத்திரத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான நடிகரைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. நாயகி நந்திதாவும் அழகாக இருக்கிறார். நடிப்பும் அழகு. இருவரையும் வாழ்த்தி வரவேற்போம்.

துவக்கக் காட்சியிலிருந்து படம் முழுவதும் இயக்குனர் காட்டி இருக்கும் நுணுக்கங்கள் அபாரம். கதைக்கு நேரடியாகத் தேவையற்ற பல ஷாட்டுகள் படத்திலிருக்கின்றன. அவை இல்லாமல் கூட அக்காட்சியை எடுக்க முடியும். அது நிறைவாக கூட இருக்கும். ஆனால் அத்தகைய ஷாட்டுகளை வைத்திருப்பதன் மூலம், கதை நிகழும் களத்தை, காலத்தை நிர்ணயிக்க மட்டுமல்லாமல் அதை ஒரு பதிவாகவே இயக்குனர் கையாண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. காட்சியோடு சம்பந்தப்படாத அட்மாஸ்பியர் ஆட்களின் அசைவுகளையும், சிறு செயல்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இது அவரின் உழைப்பை, ஒரு சூழ்நிலையை அவர் அவதானிக்கும் விதத்தை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வகையில் கதையின் நம்பகத் தன்மையை, இயல்பை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, பின்னணியிசை என எல்லாம் நிறைவாகச் செய்யப்பட்டிருக்கிறது. மிக இயல்பான ஒளியமைப்பைச் செய்திருக்கிறார் பி.கே.வர்மா. நிறைவாக இருக்கிறது. இசையும் இதம். உறுத்தலற்று இயல்பாய் தேவையான அளவு இருக்கிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் கவனிக்கப்பட வேண்டியவர். மிக நேர்த்தியான ஒரு படத்தை அதன் இயல்போடு கொடுக்க முயன்றிருக்கிறார். அதை நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார். மிகக் கடினமான உழைப்பும், செய்நேர்த்தியும், தொழில் ஆளுமையும் கொண்ட இயக்குனராக இருக்கிறார். அநேகமாக இது அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதையாகவே இருக்க முடியும். படித்து, கேள்விப்பட்டு மட்டுமே எடுத்து விடக்கூடிய சாத்தியமில்லா வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. வாழ்ந்திருந்தால் மட்டுமே இது முடியும்.

இத்தகைய படங்கள் ஓடுவதன் மூலம்தான், தமிழ் சமூகம் தமக்கான திரைப்படங்கள் எடுப்பதை நோக்கி நகர முடியும் என நினைக்கிறேன். அண்மையில் திரு.பாலுமகேந்திரா இப்படிக் குறிப்பிட்டார். ‘நாம் வாழும் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை அதாவது நம் கதை, தொழில் புலமை கொண்ட ஒரு படைப்பாளியால் எவ்வித சமரசங்களும் செய்துக் கொள்ளாமல் எடுக்கப்பட்டால், அது நல்ல படமாக இருக்க சாத்தியம் இருக்கிறது’. இதில் சாத்தியம் என்பதை அழுத்திச் சொன்னார். மேலும் இப்படி எடுக்கப்படுகின்ற எல்லா படங்களுமே நல்ல படங்களாக இருந்து விடும் என்பதில்லை, சாத்தியம் மட்டுமே இருக்கிறது என்றார். எனில், எது நல்ல படம்? அதற்கும் அவரே பதில் சொல்லுகிறார்.. அது அம்மாவின் உணவைப்போன்று இருக்க வேண்டும். அக்கறையோடு உடலைக் கெடுக்காத வகையில் சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதேபோல சமூக அக்கறையோடும், தனி மனிதனுக்குள் உறங்கும் மிருகத்தை தூண்டாத வகையிலும் எடுக்கப்பட்ட படத்தை நல்ல படம் என அடையாளம் கொள்ளலாம் என்றார்.

நம் சமூகம் சார்ந்த கதைகளைத் திரைப்படங்களாக்கும் காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அடையாளத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. விடலைக் காதலைப் பற்றி பேசும் படமானாலும் இது வரவேற்கப்பட வேண்டிய படம் என நான் கருதுகிறேன். சினிமாத்தனமான, வாழ்க்கையில் முயற்சித்துக்கூட பார்க்க முடியாத பல காதல்களை நம் திரைப்படங்கள் அரங்கேற்றியிருக்கின்றன. அவை வெற்றிப் படங்களாகக்கூட இருந்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், இப்படம் நம் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டக் காதலைச் சொல்லுகிறது. நம் சக மனிதர்களைப் பற்றி பேசுகிறது. ஒரு இளைஞனின் பதின்ம பருவத்துக் காதலையும், அதற்கான காட்சிகளைக் கொண்டிருப்பினும் ஒரு சமூகத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது. சென்னையின் புறநகர் வாழ்க்கை, அதன் இயல்போடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்துக் கானா முதல் மரண கானா வரை அது விரவிக் கிடக்கிறது. காதல் கதையின் மூலமாகவாவது நம் சமூகத்தை பதிவு செய்யும் இந்த முயற்சி, மெது மெதுவாக ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நம் திரைப்படங்களை நகர்த்தும் என நினைக்கிறேன். ஒருவேளை, இது ஒரு மசாலா படத்தின் வெற்றியால் முறியடிக்கப்படலாம். இருப்பினும் எதிர்காலத் திரைப்படங்களை நோக்கிய நற்சிந்தனையை இப்படம் கொடுக்கிறது.

நம் சமூகம் சார்ந்த கதையை அதன் களனோடும், செய்நேர்த்தியோடும் கொடுத்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தை பெருத்த கரவோசையோடு நாம் வரவேற்கலாம்.

அட்டக்கத்தியானாலும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.
   

Wednesday, August 8, 2012

யுத்த மலர்கள்
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்த இப்போர் வரலாற்றில் மறக்க முடியாத போர்களில் ஒன்று. இரண்டாம் உலகப்போரில் இது நடந்தபோதும், இதற்கெனத் தனியாக சுவடுகள் உண்டு. உலக மானுடத்தின் மீது இப்போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் மறையாதவை. ஜூலை 7, 1937 முதல் செப்டம்பர் 2 ,1945 வரை நடந்த இப்போரை ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ (Second Sino-Japanese War) என அழைக்கிறார்கள்.  1937-இல் துவங்கிய இப்போர் 1941 வரை சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே மட்டும்தான் நடந்துகொண்டிருந்தது. டிசம்பர்  7, 1941-ஆம் ஆண்டு ஜப்பான், வட அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருந்த  ‘பேர்ல் ஹார்பர்’ (Pearl Harbor)-ஐத் தாக்கியதும் அதற்கு பதிலடி கொடுக்கறேன் பேர்வழி என வட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்கியதும் நாம் அறிந்ததுதான். அதன்பிறகு ஜப்பானுக்கு பெரும் எதிரிகள் வந்து சேர்ந்தார்கள்.

சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே முதல் போர் மூண்டது ஆகஸ்டு 1,1894 – ஏப்ரல் 17,1895 காலகட்டத்தில். ‘முதலாம் சீன ஜப்பானியப் போர்’ என அழைக்கப்படும் இப்போர், கொரியாவை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கொரியா நீண்ட காலமாக சீனாவின் ‘குயிங் வம்சத்தின்’(Qing Dynasty) ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அதைத் தட்டிப்பறிப்பதன் மூலம் கொரியாவின் வளங்களைத் தனதாக்கிக் கொள்ள ஜப்பான் விரும்பியது. அதன் பொருட்டே அந்த முதல் போர் அவ்விருநாடுகளுக்கிடையே ஏற்பட்டது.  ஜப்பானுக்கு சாதக‌மாக அப்போர் முடிவடைந்தது.

பின்பு 1931-லிருந்தே இரண்டு நாடுகளுக்குமிடையே அவ்வப்போது சிறிய அளவில் போர்கள் நடந்த போதும், 1937-க்கு பிறகு ஒரு பெரும் போர் உருவெடுத்தது. சீனாவை ஆக்கரமிப்பதன் மூலம் அதன் பரந்து விரிந்த நிலப்பரப்பை அடைவதுடன், அதன் வளங்களையும் தனதாக்கிக் கொள்ள முயன்றது ஜப்பான். குறிப்பாக அதன் மக்கள் மற்றும் உணவு வளத்தை குறிவைத்தே ஜப்பான் போர் தொடுத்தது. ஜப்பானின் ஏகாதிபத்திய கொள்கையின் முகமாகவே இது பார்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த போர்களிலேயே ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ தான் ஆசியாவின் மிகப்பெரிய போர் என பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

1937-க்குப் பிறகு உக்கிரம் அடைந்த இப்போரில், முதலில் ஷாங்காய் நகரை ஜப்பான் கைப்பற்றியது. பின்பு அவ்வாண்டின் இறுயில் (டிசம்பர் 13), சீனாவின் அப்போதைய தலைநகராக இருந்த  ‘நாகிங்’ (Nanking) நகர் ஜப்பானின் கைகளில் விழுந்தது. தாக்குப் பிடிக்க முடியாத சீனக் குடியரசு அரசாங்கம் தன் தலைநகரைக் காலி செய்துவிட்டு  ‘வுகன்’ (Wuhan) நகருக்கு தப்பி ஓடியது. அதன் பின்தான் வரலாற்றில் மறக்க முடியாத அச்சம்பவங்கள் நடந்தேறியன.  ‘நாகிங் படுகொலை’ (Nanking Massacre) என அழைக்கப்படும் அச்சம்பவம் பெரும் துயரங்களைக் கொண்டது. பெரும் எண்ணிக்கையில் படுகொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகள் நடந்தேறின. சீன அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, கேட்க நாதியற்ற அப்பாவி நாகிங் நகர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர். எதிர்த்து நிற்க ஆள் இல்லாதது ஜப்பானியர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகியது. கட்டுப்பாடற்ற பெரும் அராஜகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.

இரண்டரையிலிருந்து மூன்று லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.  இதற்கு சிறுமிகளும், வயதானவர்களும் கூட தப்ப முடியவில்லை. இங்கே எழுத முடியாத அளவிற்கு அவர்கள் துன்புறுத்தபட்டு கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை விருப்பம் போல் துன்புறுத்திக் கொன்றார்கள். ஆறு வாரத்திற்குள்ளாகவே பெரும் எண்ணிக்கையில் படுகொலை நிகழ்ந்தேறியது. ஜப்பானிய அதிகாரிகள் தங்களுக்குள்ளாக பல போட்டிகள் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று, யார் விரைவாக நூறு சீனர்களின் தலைகளை கத்தியால் கொய்வது என்பது. அப்படி போட்டியிட்டுக் கொண்ட இரண்டு ஜப்பானிய அதிகாரிகளின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு அதிகாரிகளும் போரின் முடிவில் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 2, 1945-இல் ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்று, சரணடைந்தப் பிறகுதான் இப்படுகொலைகள் முடிவுக்கு வந்தன‌.

அப்படி ஒரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்று ஜப்பான் இன்று வரை மறுக்கிறது.  கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், அப்போது நாகிங் நகரில் வாழ்ந்துகொன்டிருந்த‌ வெளிநாட்டினரால், அங்கே நடந்த பெரும்பாலானவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன‌.. அரசுகள் ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ, வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துதான் வந்திருக்கிறது.

நாகிங் படுகொலைகள் நடந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  ‘நாகிங்கின் பதின்மூன்று மலர்கள்’ (13 Flowers of Nanking) என்ற நாவலை தழுவி ‘The Flowers of War’ என்றொரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற இயக்குனரான ‘ஜாங் யுமோ’ (Zhang Yimou)-வின் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் மிக உருக்கமான ஒரு சம்பவத்தை நம் கண் முன்னே நிகழ்த்துகிறது.

நாகிங் நகரம் ஜப்பானின் பிடிக்குள் விழுந்துக் கொண்டிருக்கும் நேரம் அது. யுத்த பூமி எங்கும் புகையும், புழுதியும் நிரம்பிக் கிடக்கிறது. நகரமே புகையால் மூடப்பட்டிருக்கிறது. மக்கள் தப்பி ஓடுகிறார்கள். பிழைத்துக் கிடந்த, தனித்து விடப்பட்ட சீன வீரர்கள் தங்களால் முடிந்த மட்டும் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த முயலுகிறார்கள். புகையின் ஊடாக அவ்வப்போது எதிர்ப்படும் மனிதர்கள் யார் என்பதைக்கூட அடையாளம் காண முடியா நிலைமை அது. அப்புகையின் ஊடே சில சிறுமிகள் தப்பி ஓடி வருகிறார்கள். ஒரு குதிரை வண்டியில் சில பெண்கள் தப்பி ஓடுகிறார்கள். ஒரு புறம் ஜப்பானியர்கள் சீனர்களைத் தேடித்தேடி கொல்லுகிறார்கள். ஒரு அமெரிக்க மனிதனும் தப்பி ஓடிவருகிறான். இவர்கள் அனைவரும் பெரும் பாடுபட்டு ஒரு கத்தோலிக்க மடத்தில் அடைக்கல‌ம் அடைகிறார்கள்.

சிறுமிகள் அனைவரும் அக்கத்தோலிக்க மடத்தில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் மதகுரு இறந்து போய்விட்டார். அவர்களுக்கு காவலாக அம்மதகுருவால் தத்தெடுக்கப்பட்டிருந்த‌ சிறுவன் ஒருவன் இருக்கிறான். வண்டியில் தப்பி ஓடி வந்த பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக வாழ்பவர்கள். அந்த அமெரிக்கன் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்பவன். இறந்து போன அம்மடத்தின் குருவிற்கு இறுதிச் சடங்கு செய்யவே அவன் இங்கே வருகிறான். அவர்கள் அனைவருக்கும் இப்போது அம்மடம் மட்டும்தான் ஒரே பாதுகாப்பான இடம்.

சிறுமிகளுக்கு அலங்காரமாக இருக்கும் விபச்சாரிகளைக் கண்டால் பிடிக்கவில்லை. தங்கள் இடத்தில் அப்பெண்கள் இருப்பதை வெறுக்கிறார்கள். தங்கள் உடமைகளையும் குளியல் அறை, சமையல் அறை போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துவதையும் கண்டு வெறுப்படைகிறார்கள். அதை தடுக்கவும் முனைகிறார்கள். அதனால் அவர்களிடையே சண்டை வருகிறது. அப்பெண்களுக்கும் இச்சிறுமிகளைப் பிடிக்கவில்லை. வெளியே ஜப்பானியர்கள் இருப்பதனால் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அமெரிக்கனுக்கோ, தான் எப்படியாவது தப்பிப் போகவேண்டும் என்பதே குறிக்கோள். இந்நிலையில் ஜப்பானிய படைப்பிரிவொன்று மடத்திற்குள் நுழைகிறது. விபச்சாரிகள் அடித்தளத்தில் மறைந்துக் கொள்கிறார்கள். சிறுமிகள் ஜப்பானியர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஜப்பானியர்களால் சூழப்படும் அவர்களைக் காக்க, அமெரிக்கன் தானே இம்மடத்தின் பாதிரியார் என்று பொய் சொல்லுவதோடு இவர்கள் இங்கே படிக்கும் சிறு பிள்ளைகள் எனவும் அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வருவதை தான் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லுகிறான். அங்கே இருந்த பாதிரியாரின் அங்கியை அணிந்துக்கொண்டு அவ்வாறு அவர்களை நம்பச் செய்கிறான். அதை நம்பிய ஜப்பானிய அதிகாரி அம்மடத்தைச் சுற்றி காவல் வைப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வராது என்றும் உறுதி தருகிறார். ஆனாலும் அக்காவல் இவர்களுக்கான பாதுகாப்பிற்கல்ல என்பதும், அது இவர்கள் தப்பி ஓடி விடாதபடி உறுதி செய்யத்தான் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
அமெரிக்கன் தான் எப்படியாவது தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். விபச்சாரிகளின் தலைவியாக இருக்கும் பெண் அவனிடம், தங்களையும் உடன் அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறாள். அப்படிச் செய்தால் அதற்கு தக்க பலன் அவனுக்கு கிடைக்கும் என்றும் ஆசை காட்டுகிறாள். சிறுமிகளையும் அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை வருகிறது. ஆனால் எப்படி? இக்காவலை மீறி எப்படி தப்பிச் செல்வது? அமெரிக்கன் அங்கே இருக்கும் ஒரு பழுதடைந்த வண்டியை சரி செய்து அதில் தப்ப முடிவெடுக்கிறான். ஆனால் அதற்கு பல கருவிகள் வேண்டும். அப்போதுதான் அவ்வண்டியை ஓடச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்வது? அவர்களுக்கு ஒரு வழி பிறக்கிறது. அம்மடத்தில் அடைந்து கிடக்கும் ஒரு சிறுமியின் தந்தை ஜப்பானியர்களோடு நட்பாக இருக்கிறார். அவர் எப்படியாவது தன் மகளை இந்நகரத்திலிருந்து மீட்டு, கொண்டு சென்று விடவேண்டும் என முயல்கிறார். அவரின் மூலம் வண்டிக்கு தேவையானப் பாகங்கள் கிடைக்கிறது. சிறிது சிறிதாக, காவலர்களின் கண்ணில் படாமல் அவ்வண்டியை அமெரிக்கன் சரி செய்கிறான். ஒரு நாள் வண்டி தயாராகி விடுகிறது. இந்நிலையில் திடீரென ஜப்பானிய அதிகாரி அம்மடத்திற்கு வருகிறார். அவரை மகிழ்விக்க சிறுமிகள் அனைவரும் சேர்ந்து பாடல் பாடுகிறார்கள். அப்பாட்டில் மகிழ்ந்த அவ்வதிகாரி, அவர்கள் அனைவரும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஜப்பானிய வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் உயர் அதிகார்களை பாடி மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதை அமெரிக்கன் மறுக்க, அவர் அதை ஒரு கட்டளையாக பிரப்பித்துவிட்டு செல்கிறார்.

நகரம் முழுவதும் சூரையாடப்படும் இந்நிலையில், ஜப்பானிய கூடாரத்திற்கு செல்லுவது தற்கொலைக்கு சமம் என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும் சிறுமிகளை அவர்கள் அழைப்பது பாடுவதற்காக அல்ல என்பதையும், அங்கே சிறுமிகள் சென்றால் என்ன கொடூரம் நிகழும் என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர்.  இச்சிறுமிகள் மொத்தம் பனிரெண்டுபேர், ஆனால் தவறுதலாக விபச்சாரி ஒருவளையும் சேர்ந்து பதிமூன்று பேர்கள் என இராணுவ அதிகாரி கணக்கிட்டுச் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் அடுத்தநாள் கண்டிப்பாக விருந்துக்கு வர வேண்டும் என கட்டளை இடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டிலிருந்து எப்படி விடுபடுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்கிறார்கள். சிறுமிகள் அழத்துவங்குகிறார்கள். விபச்சாரிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தவறுதலாக சிறுமிகளோடு கணக்கிடப்பட்ட விபச்சாரப் பெண் அழுதுக் கொண்டே இருக்கிறாள். மரணம் போல வரும் மறுநாளை எப்படி எதிர்கொள்வது என்ற பெரும் கேள்வியோடு அவரவர் அறைகளுக்குத் திரும்புகிறார்கள். அன்றைய இரவு மொத்த சிறுமிகளும் ஒரு முடிவெடுக்கிறார்கள். அது, மடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்வதாகும். நெஞ்சைப் பதற‌ வைக்கும் இம்முடிவும், அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் நாம் கற்பனை செய்ய முடியாதது. அதை, படத்தில் பாருங்கள். பன்னிரெண்டு விபச்சாரிகள், பன்னிரெண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு அமெரிக்கன். இவர்களை வைத்து நாம் வாழ்வில் கடந்து வரவே முடியாத ஒரு தியாகத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் இயக்குனர்.  இப்படம் மிக அற்புதமான, நெகிழ்வான பல கணங்களைக் கொண்டுள்ள‌து.

தேசம், அரசு, அரசியல், போர், வன்மம், படுகொலைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்த மனித இனம் பிழைத்திருப்பது எப்படி என்பது விடை தெரியாக் கேள்விதான். ஆயினும், மனித வரலாறு அற்புதமான பல கணங்களையும் மறக்க முடியாத பெரும் தியாகங்களையும் கொண்டது.  இம்மனிதக் கூட்டம் இப்பூமிப் பந்தில் வாழ்ந்து கிடப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்குமாயின், அது இம்மாதிரியான தியாகங்களுக்காக மட்டுமே என்ற எண்ணத்தை இப்படம் ஏற்படுத்துகிறது.Saturday, August 4, 2012

புதிய இணையத்தளம்நண்பர்களே ..

புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்..! :)


Saturday, July 21, 2012

The Dark Knight Rises: நம்பிக்கைக்குரிய நாயகன்.!கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே.  ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை.

நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும்,  லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவையற்று, தீயவர்களின் குறுக்கீடு இல்லாமல் அமைதியாக கோத்தம் நகரம் வாழ்ந்து வருகிறது. பேட்மேன் கொலைகாரனாக தப்பி ஓடி எட்டு வருடங்கள் கடந்து போன நிலையில் ‘Bane’ வடிவில் ஒரு புதிய, பெரும் ஆபத்து கோத்தம் நகருக்கு வருகிறது. அது தலைமறைவாகிப்போன பேட்மேனை வெளிக் கொண்டுவருகிறது.  சீரழிந்து கிடந்த ‘கோத்தம்’ நகரை மீட்டெடுக்க பேட்மேன் செய்த அத்தனை செயல்களும் தியாகங்களும் பயனற்றுப்போவதே, இப்படத்தில் பேட்மேன் சந்திக்கும் சவால்.

தன் மக்களுக்காக போராட விரும்பும் எந்த  நாயகனும் தலைவனும், தன் கடமை முடிந்துவிட்டதாக எந்நிலையிலும் விலகி விட முடியாது என்பதும்.. செய்த, செய்கிற எந்த தியாகமும் முடிவல்ல என்பதும் இப்படம் சொல்லும் செய்தி. உலகின் அத்தனை தலைவர்களுக்கும் இது பொருந்தும். அத்தனை சிறந்த புரட்சியாளர்களின் வாழ்விலும் இது நிகழ்ந்திருக்கிறது. அத்தகைய உயர்ந்த நிலையை காமிக்ஸ் கதாப்பாத்திரமான ‘Super Hero’ ஒருவனோடு சம்பந்தப்படுத்தி, அக்கதாப்பாத்திரத்தின் மேன்மையை உயர்த்தி விடுகிறார் நோலன். ஆழ்ந்த பல கேள்விகளும், சிந்தாந்தகளும் பதில்களும் கொண்ட இம்மூன்று பாக பேட்மேன் தொடர்.. முழுமையான, நிறைவான ஒரு முடிவை அடைந்திருக்கிறது. படத்தின் முடிவில் முந்தைய இரண்டு பாகங்களும் மனதில் ஓட.. மீக நீண்ட பெரியதோர் சூழலிலிருந்து வெளிவருவதை உணர முடிந்தது.

இப்படத்தில் இரண்டு சங்கடங்களை நான் காண்கிறேன். ஒன்று, வில்லனான ‘Bane’ பற்றிய தகவல்கள் குறைவாக இருப்பது. அவன் யார், அவன் ஏன் இப்படி இருக்கிறான், ஏன் முகமூடி போட்டுக்கொண்டிருக்கிறான் போன்ற கேள்விகளுக்குச் சரியான போதுமான தகவல்கள் படத்தில் இல்லை. அதனால் அவனைப்பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொண்டு படத்தைப் பார்ப்பது நலம். இரண்டாவது, பேட்மேன் காமிக்ஸை படித்தவர்களுக்கு இப்படத்தில் சொல்லப்படும் பல செய்திகள் காட்சிகள் முன்பே தெரிந்திருப்பதனால் அவர்களைத் திருப்தி படுத்தவும் படம் தவறுகிறது. ஆனாலும் சிறப்பான ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணியிசையும், தேர்ந்த இயக்கமும் நம்மைப் புதியதோர் சூழலுக்கு கொண்டு செல்வதை மறுக்கமுடியாது.

இப்படம், மற்ற இரண்டு படங்களின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய படம். முந்தைய அவ்விரு படங்களையும் பார்க்காமல் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு பல இடங்கள் புரியாமல் போகும். அதனால் நண்பர்களே மற்ற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இப்படத்திற்கு போகவும்.

அல்லது கருந்தேள் எழுதிருக்கும் இப்பதிவுகளைப் படித்து விட்டு, படம் பார்க்கச் செல்லவும்..

Thursday, July 12, 2012

‘மோனோ ரூடோ’ - தைவானின் சின்னம்
1930, அக்டோபர் 27. தைவானின் வாஷா (Wushe) பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பானிய காலனி கிராமத்தின் ஒரு பள்ளிக்கூடம். பள்ளி விளையாட்டு போட்டிகளுக்கான முன் தயாரிப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஜப்பானிய அதிகாரிகளும் குழுமி இருக்கிறார்கள். ஆங்காங்கே காவலாளிகள் நிற்கிறார்கள். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக ஜப்பானியக் கொடி ஏற்றப்படுகிறது. தேசியகீதம் ஒலிக்கத் துவங்குகிறது. கூடி இருந்தோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் துவங்குகின்றனர். அப்போது, திடீரென்று ஒருவன் கத்தியோடு பாய்ந்து வந்து காவல் காத்த ஒரு காவலாளியின் தலையைக் கொய்கிறான். அதைத் தொடர்ந்து நாலாபுறமிருந்தும் பெரும்கூட்டம் ஒன்று ஆரவாரமான சத்தங்களோடு கூட்டத்தின் மீது பாய்கிறது. கூட்டத்தினுள் புகுந்த அக்கும்பல், ஜப்பானியர்களை தேடித்தேடி வெட்டிச் சாய்க்கிறது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், ஆசிரியர்கள், காவலாளிகள் என பலரும் வெட்டி கொல்லப்படுகின்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்தப் பெரும் படுகொலை நிகழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. 136 ஜப்பானிய ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். 215 ஜப்பானியர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது அங்கே 428 சீன தைவானியர்கள் (Chinese-Taiwanese) இருந்தபோதும், அவர்களில் இருவர் மட்டுமே கொல்லப்படுகிறார்கள். அதுவும் தவறுதலாக. அந்த படுகொலைக் காரியம் மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்டது. ஜப்பானியர்கள் மீது மட்டுமே குறிவைக்கப்பட்டது. அது ஏன்? யாரால்?


1895-இல் சீனாவிடமிருந்து ‘ஷிமோனாசகி உடன்படிக்கை’ (Treaty of Shimonoseki) மூலமாக தைவான் தீவு, ஜப்பானின் கைக்கு வருகிறது. அழகிய தீவு (aka Formosa) என அழைக்கப்படும் அப்பகுதியில் உடனடியாக பதட்டம் துவங்கி விடுகிறது. அதற்கு காரணம் அப்பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் பூர்வ பழங்குடிகள். அம்மலைப்பகுதிகளையே தங்களின் பூர்வ பூமியாக பாவித்து வாழ்ந்து வரும் அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய தேவை ஜப்பானியர்களுக்கு இருக்கிறது. காரணம்? ..வழக்கமானதுதான். மண் சார்ந்த கனிம வளங்கள்!

மண்ணின் மைந்தர்களைத் துரத்தி அடித்தால்தானே, வளத்தைக் கொள்ளை அடிக்க முடியும்? அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின. பெரும்பாலான பூர்வ குடிகள் கொல்லப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் அடக்கப்படுகிறார்கள். அப்போது அப்பகுதியில் ஆறு பழங்குடிகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒன்று ‘அட்யல் பழங்குடி’(Atayal tribe). அதன் தலைவராக ‘ரூடோ பாய்’(Rudao Bai) என்பவர் அப்போது இருந்தார். அவருக்கு ‘மோனா ரூடோ’ (Mona Rudao) என்ற மூத்த மகன் இருந்தான். அப்போதைய தைவான் கிளர்ச்சி 1916-இல் அடக்கப்பட்டது. இதில் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். ரூடோ பாய் கொல்லப்பட்டார். அவரின் மகனான மோனோவும் ரூடோ சிறை பிடிக்கப்பட்டார்.

சிறை பிடிக்கப்பட்ட பூர்வ குடிகள் காட்டுமிராண்டிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டன. தடை செய்யப்பட்டன. அதில் முக்கியமானது, அவர்களில் ஆதி உரிமையான வேட்டையாடுதல் மற்றும் முகத்தில் பச்சை குத்திக்கொள்ளுதல். முகத்தில் பச்சைக் குத்திக்கொள்வது என்பது அவர்களின் வீரத்தின் அடையாளம். சிறுவன் ஒருவன் இளைஞனாவதின் அடையாளம் அது. அப்படி நெற்றியிலும் முகவாயிலும் பச்சை குத்திக்கொள்ள அவன் செய்ய வேண்டியது, ஒரு எதிரியின் தலையை வெட்டி எடுத்து வருவதுதான். ஆம், மனித தலை. அடுத்த அல்லது எதிரி குழுவிலிருந்து ஒருவனின் தலையை வெட்டி எடுத்துவருவதன் மூலம் அவ்விளைஞன் ஆண் மகனாகிறான் (Boy to Man) என்பது அவர்களின் நம்பிக்கை. அதே போல, அவர்கள் வேட்டையாடும் பூர்வ நிலத்தை பாதுகாப்பதும், அதை எதிரிகள் கைப்பற்றி விடாமல் தற்காத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வதும் அவர்களின் மரபு. இந்த இரண்டையும்தான் ஜப்பான் அரசு தடை செய்தது.


பின்பு ஜப்பான் அப்பகுதியில் கிராமம் அமைத்தது. பள்ளிக்கூடம், காவல்நிலையம், தபால் நிலையம் என அமைக்கப்பட்ட அக்கிராமத்தின் அனைத்து வேலைகளும் பிடிபட்ட பூர்வ குடிகளைக் கொண்டே செய்யப்பட்டன. எந்த வனத்தை இத்தனை காலமாக வழிவழியாக காத்து வந்தார்களோ அந்த வனம் அவர்களின் கைகளாளேயே அழிக்கப்பட்டது. மரத்தை வெட்டுவது ஒவ்வொரு பூர்வகுடி இளைஞனுக்கும் பெரும் வேதனையை கொடுத்தது. தங்களின் வேட்டை பூமி தங்களின் கைகளாலேயே அழிக்கப்படுவது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை.

காலம் உருண்டோடியது. ஜப்பான் அப்பகுதியில் பல இடங்களில் பாலங்கள் அமைத்தது. இரயில்பாதை அமைத்தது. கனிமங்களைத் தோண்டி எடுத்தது. அதே நேரம் பூர்வ குடிகளுக்கு நாகரிகம் கற்றுத்தருகிறேன் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஜப்பானிய கல்வி போதிக்கப்பட்டது. பூர்வ குடிகளின் கிராமங்கள் முழுவதும் கண்காணிப்புக்கு உள்ளாயின. ஒவ்வொரு கிராத்திற்கும் தனித்தனியாக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அத்தகைய காவல் நிலைய அதிகாரிகள் அக்கிராமத் தலைவரின் மகளை மணக்க ஊக்குவிக்கப்பட்டனர், அதனால் பூர்வ குடிகளோடு ஜப்பானியர்களுக்கு உறவுமுறை ஏற்பட்டு, எதிர் புரட்சி செய்யமாட்டார்கள் என்ற காரணத்திற்காக.

அதே போல, பூர்வ குடிகளின் தலைவர் குடும்பங்களுக்கு ஜப்பானிய கல்வி போதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ‘மோனோ ரூடோ’-வுக்கும் கல்வி போதிக்கப்பட்டது. அவரும் கல்வியில் சிறந்து தேறினார். ஜப்பானிய மொழியில் நன்கு பேசவும் கற்றுக்கொண்டார். நன்மதிப்பைப் பெற்ற அவரையும் சேர்த்து பதினெட்டு பூர்வ குடிகளை  1910-இல் ஜப்பானுக்கும் அழைத்துச் சென்று வந்தது அரசு. அவரின் மூத்த மகளை ஒரு ஜப்பானிய காவல் அதிகாரிக்கு திருமணம் செய்து கொடுத்தார்.  ஜப்பானிய அரசுக்கு இணக்கமாக வாழ்ந்து வந்தார் அவர்.

பல சமயங்களில் இளைஞர்கள் ஜப்பானியர்களுக்கு எதிராக செயல்பட துணியும்போதெல்லாம் அவர்களை அடக்கி அமைதியாக இருக்கும் படி செந்துவந்தார். இப்படியாக காலம் 1930 வரை வந்துவிட்டது. ஒருநாள் அவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. அந்த விழாவை, அவ்வினக் குழுவைச் சார்ந்த அனைவரும் மகிழ்ச்சியாக குடித்தும் ஆடியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காவல் அதிகாரிக்கும் மது கொடுக்க  ‘மோனோ ரூடோ’-வின் மகன் முயல, அது ஒரு சிறிய சண்டையில் போய் முடிகிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் அந்த அதிகாரியை கொல்ல முயல்கின்றனர். அப்போது அங்கே வரும் ‘மோனோ ரூடோ’ அதைத் தடுத்து காவல் அதிகாரியை பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார். மேலும் அடுத்த நாள் காவல் அதிகாரியைத் தேடிச்சென்று மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரி, இவரை வெளி அனுப்புவது மட்டுமல்லாமல் மேலே ஜப்பானிய அரசுக்கும் இதை ஒரு புகாராக அனுப்பி வைக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துகிறது. என்ன விளைவை ஏற்படுத்துமோ என்ற கலக்கம் எல்லாரிடமும் ஏற்படுகிறது.

அதே நேரம், ‘மோனோ ரூடோ’ தன் வீட்டின் தனிமையில் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கிறார். யாருக்கும் தெரியாமல், மிகுந்த இரகசியத்தோடு செய்யும் அச்செயல்.. தீக்குச்சியிலிருக்கும் மருந்தை மெல்லப் பிரித்தெடுத்து சிறிய குப்பியில் சேமிப்பதாகும். நிரம்பிய அக்குப்பியை தன் கட்டிலுக்கு அடியில் வைக்கிறார். அங்கே பல குப்பிகள் மருந்து நிரப்பப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிறு தீப்பெட்டியிலிருந்து இத்தனை குப்பிகள் சேர்க்க அவருக்கு பல காலம் தேவைப்பட்டிருக்கும். அப்போதுதான் இத்தனை குப்பிகள் சேமிக்க சாத்தியம்..! ஆம்.. இதை அவர் பல காலமாகத்தான் செய்துவருகிறார். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வெடிமருத்தை சேமித்து வருகிறார். எதிரியை வீழ்த்த கோபம் மட்டுமிருந்தால் போதாது, வீரமிருந்தால் மட்டும் போதாது, விவேகமும் திட்டமிடலும் வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

தன் தாய் மண்ணின் மீது அந்நியனின் கால் என்று பட்டதோ, எப்போது தன் வேட்டை நிலம் தன் கைவிட்டு போனதோ, தன் இனத்தின் வீரத்தழும்பு மரபு என்று தடுக்கப்பட்டதோ.. அப்போதிருந்தே அவரின் போராட்டம் துவங்கி விட்டது. அப்போதைய போராட்டத்தின் போது, அவரால் கொல்லப்பட்ட ஒரு ஜப்பானிய வீரனுக்கு பதிலாக அவரின் மொத்த குடும்பமும் உயிரோடு கொளுத்தப்பட்டது. அதை அவர் இன்னும் மறக்கவில்லை. அடுத்த மனைவிக்கு பிறந்த தன் மூத்தமகளை திருமணம் செய்துக்கொண்ட ஜப்பானிய காவல் அதிகாரி அவளை விட்டு பிரிந்து நாடு திரும்பியதும், தன் மகள் தனிமையில் தவிப்பதையும் அவர் மறக்கவில்லை. இதை எல்லாம் விட, தன் பூர்வ பூமியை காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய தன் கடமையும், அதற்காக சிந்த வேண்டிய புனித ரத்தத்தையும் அவர் மறக்கவில்லை. அந்த இரத்தக் காவுக்காகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறார். “முன்னோர்களே உங்களுக்கான இரத்தக் காவு விரைவில் கொடுப்பேன், அதுவரை எனக்குத் துணையிருங்கள்” என்பதுதான் அவரின் வேண்டுதலாக எப்போதுமிருந்தது.

இரத்தக் காவு வாங்கும் அந்த நாளும் வந்தது. அதுதான் அக்டோபர் 27, 1930. மற்ற குழுக்களுக்கு செய்தி இரகசியமாகச் சொல்லப்பட்டது. சிலர் இணைந்தார்கள். சிலர் மறுத்துவிட்டனர். 300 போராளிகள், ‘மோனோ ரூடோ’-வின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.  முதலில் கிராமம் தோறும் நிர்ணயிக்கப்பட்டிருந்த காவல் நிலையங்களை தாக்கினர். அங்கே இருந்த ஆயுதங்களைக் கவர்ந்து சென்றனர். பின்னர் மெதுவாக வாஷா கிராமத்தை சூழ்ந்தனர். நேரம் பார்த்து தாக்கத் துவங்கினார்கள். அந்த தாக்குதல்தான் பெரும் படுகொலையில் போய் முடிந்தது. அதை ‘வாஷா புரட்சி’(Wushe Revolution) அல்லது ‘வாஷா சம்பவம்’(Wushe Incident) அல்லது ‘வாஷா படுகொலை’(Wushe massacre) என உலகம் அழைக்கிறது. நாம் அதை ‘வாஷா புரட்சி’ என்று நினைவில் கொள்வோம்.

அங்கே கூடி இருந்த ஒட்டுமொத்த ஜப்பானியர்களும் அழிக்கப்பட்டனர். சீனர்களை யாரும் எதுவும் செய்யவில்லை. ஒரு சீன பெண் ஜப்பானிய உடை அணிந்து இருந்ததனால் தவறுதலாக கொல்லப்பட்டாள். அதேப்போல ஒரு சீனரும் தவறுதலாக கொல்லப்பட்டார். அவ்வளவுதான். மற்றவர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பூர்வ குடிகளும் தங்கள் கிராமங்களை நோக்கி நகரத்துவங்கினர். இதனிடையே ஜப்பான் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அது பெரும் படை ஒன்றை இங்கே அனுப்பி வைக்கிறது. இரண்டாயிரம் பேர் கொண்ட அந்த படையால், பல ஆயுதங்கள் கொண்டு போராடியும் வெறும் முந்நூறு பேர்களை மட்டுமே கொண்ட பூர்வ குடிகளை வெல்ல முடியவில்லை. காடுகள் பெரும் அரணாக இருந்தன. இரவில் தாக்குவது பூர்வ குடிகளுக்கு பெரும் பலமாக அமைந்தது. மேலும் தாக்கு பிடிக்க முடியாத ஜப்பானிய அரசு இரண்டு குறுக்கு வழிகளை கையாண்டது.


முதலாவது, பூர்வ குடிகளுக்கு உள்ளாகவே இருந்த பகை உணர்ச்சியை பயன்படுத்தி அடுத்த குழுவை இவர்களின் மீது ஏவி விட்டது. இரண்டாவதாக, உலகம் அன்றுவரை செய்தே இராத ஒரு பாதகச்செயலை செய்யவும் துணிந்தது. அது.. ‘விஷ குண்டுகளை’ பயன்படுத்துவது. ஆம், அதுவே உலகில் முதன் முதலாக விஷ குண்டுகள் எதிரிகள் மீது வீசப்பட்ட நிகழ்வாகும். காடுகளில் பதுங்கி இருந்த பூர்வ குடிகளின் மீது விஷ குண்டு வீசப்பட்டன. குண்டுகளில் இருந்து வெளிப்பட்ட விஷப்புகைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் மாண்டு விழுந்தனர். கூடவே விமானங்களிலிருந்து துண்டுச் சீட்டுகள் போடபட்டன. அதில் சரணடையச் சொல்லி நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். தாங்கள் இனி தாக்கு பிடிக்க முடியாது என்பதை ‘மோனோ ரூடோ’ உணர்ந்துக்கொண்டார். அவர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

அம்முடிவு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி.. தங்கள் வீடுகளை அவர்களே கொளுத்தத் துவங்கினர். தீக்கிரையாக்கப்பட்ட தங்களின் கிராமங்களிலிருந்து மக்கள் மொத்தமாக வெளியேறினர். காடுகளை நோக்கி அவர்கள் பயணம் இருந்தது. இடையே கர்ப்பிணிப் பெண்களை தனியாக பிரித்து அவர்களை தனி குழுவாக்கி அனுப்பி வைத்தனர், ஜப்பானியர்களிடம் சரணடையச்சொல்லி. மீதம் இருந்தவர்களில் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிந்து சென்றனர். தனித்துச் சென்ற பெண்கள் செய்த செயல் இன்று வரை இவ்வுலகம் கண்டிராதது. அப்பெண்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டார்கள். மரக்கொடிகளில் தூக்கு மாட்டிக் கொண்டு தங்களை மாய்த்துக் கொண்டனர், போராடப் போகும் ஆண்களுக்கு தாங்கள் பாரமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக. அவர்களின் மரணத்திற்கு முன்பாக தங்கள் பிள்ளைகளை தாங்களே கொன்றனர்.


பிரிந்து சென்ற ஆண்கள் பல நிலைகளில் எதிரிகளோடு போராடினர். பீரங்கி, துப்பாக்கி என பல ஆயுதங்கள் கொண்ட பெரும் படையான ஜப்பானியர்களிடம் தாக்கு பிடிக்க முடியவில்லை. பலர் இறந்து போனார்கள். தங்கள் போராட்டம் முடிவை நோக்கி வந்துவிட்டதை உணர்ந்துக் கொண்ட ‘மோனோ ரூடோ’ அடுத்து போராட்டத்தை அவரின் மூத்த மகன் ‘டாடோ மோனோ’(Tado Mouna)-விடம் ஒப்படைத்துவிட்டு காடு நோக்கி செல்கிறார். எதிரியின் கையில் தான் சிக்கி அவமானப்பட அவர் விரும்பவில்லை. ‘டாடோ மோனோ’-வும் ஒரு கட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தன் சகாக்களோடு தற்கொலை செய்துக்கொள்கிறார். இந்த புரட்சி ஐம்பது நாட்கள் நடந்து, முடிவுக்கு வந்தது. இதில் 1200 பூர்வ குடிகள் நேரடியாக பங்கு பெற்றனர். 644 பேர் கொல்லப்பட்டார்கள். 290 பேர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். பிடிபட்டவர்களில் 216 பேர் பின்பு கொல்லப்பட்டனர். 298 பேர் தனித் தீவில் அடைக்கப்பட்டனர்.

காடுகளுக்குள் சென்ற ‘மோனோ ரூடோ’ என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை. காடு முழுவதும் தேடப்பட்டார். ஆனால் அவர் கிடைக்க வில்லை. காலங்கள் கடந்தோடின. ‘மோனோ ரூடோ’-வின் பெயர் அப்போது மிகப் பிரபலமானது.

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு 1934-இல் ஒரு குகையில் அவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பாதி அழுகிய நிலையில் இருந்த அது அவர்தான் என்பதற்கு சாட்சியாக அவரின் ஆயுதங்கள் உடனிருந்தன. அவரின் உடலை கைப்பற்றிய ஜப்பானிய அரசு, மக்களை எச்சரிக்கும் விதமாக, அதை மக்களின் பார்வைக்கு வைத்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் தைவானை விட்டு ஜப்பான் வெளியேறியது. அதன் பின்பு ‘மோனோ ரூடோ’-வின் உடல் மீண்டும் காணாமல் போனது. அந்த உடல் என்னவானது என்று யாருக்கும் தெரியவில்லை. பின்பு 1981-இல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரின் உடல், அது அவருடையதுதான் என்று உறுதி செய்யப்பட்டு அவரின் பூர்வ கிராமத்தில் புதைக்கப்பட்டது. அவரின் மண்ணுக்கே அவர் திரும்ப வந்து சேர்ந்தார்.

நடுவில் இருப்பவர்..
தைவானின் வரலாற்றில் ஜப்பானியர்களை எதிர்த்து நின்ற ஒரே மனிதன் ‘மோனோ ரூடோ’, தைவானின் சின்னமானார் (Taiwanese icon).

இக்கதையை, 2011-இல் வெளியான தைவானிய படமான ‘Warriors of the Rainbow: Seediq Bale’ என்ற படம் பதிவு செய்திருக்கிறது. இரண்டு பாகங்களான இப்படம் மொத்தம் நான்கரை மணி நேரம் ஓடக்கூடியது. ஒரு பூர்வ குடியின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் அழிவையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது. படம் நெடுக நெகிழ்வான, மனதை பதற வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ளன. பல அற்புத காட்சிகளைக் கொண்ட இப்படம், மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தின் முடிவில், மனித இனம் இப்பூமியில் வாழ்வது எதன் பொருட்டு என்ற கேள்வி ஒன்று எழுந்து என் மனதெங்கும் அரிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நீண்ட நேரம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்திருந்தேன். சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்து மறைந்த அம்மனிதர்களும் அவர்களின் தலைவன் ‘மோனோ ரூடோ’-வும் மனதெங்கும் நிறைந்திருந்தார்கள். அம்மாமனிதர்களுக்கு அல்லது அந்த அப்பாவி மனிதர்களுக்கு கண்ணீரைத் தவிர வேறென்ன தந்துவிட முடியும் நாம் இன்று?  

Sunday, July 8, 2012

நான் ஈ - தனித்து நிற்கும் ஈ..!ராஜ்மௌலி என்கிற சிறந்த இயக்குனரைப்பற்றி அறிந்திருந்தும், இப்படத்தின் தமிழ்த் தலைப்பு என்னைக் கவரவில்லை என்பதோடு, அதன் வடிவமைப்பும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கவில்லை. ஒரு நல்ல இயக்குனரின் தோல்விப் படமாக இது இருந்துவிடக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதனாலேயே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமற்று இருந்தேன். வெள்ளிக்கிழமை படம் வெளியானதிலிருந்து இப்படத்தைப்பற்றி வந்த எல்லா கருத்துகளும் ஒன்றை மட்டுமே வழி மொழிந்தன. படம் நன்றாக இருக்கிறது என்பதுதான் அது. இருப்பினும் அடுத்த வாரம் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன் நேற்று இரவு வரை. நேற்று இரவு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது, இப்படம் தவறவிடக்கூடாத படம் என்பது. பெரும்பாலானோர் இதே கருத்தைச் சொல்லி இருந்ததனால், இன்றே படம் பார்த்துவிட்டேன். 

ஒரு இளம் காதல் இணை. வில்லன் காதலனைக் கொன்றுவிட்டு காதலியை அடைய நினைக்கிறான். இறந்து போன காதலன் பழி வாங்குகிறான். அச்சச்சோ.. கதையைச் சொல்லிவிட்டேனோ?!

போப்பா..! இதுதான் கதையா? இதுதான் எங்களுக்குத் தெரியுமே. எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் நண்பர்களே படம் இதுவல்ல, இறந்துபோன காதலன் பழிவாங்க பெற்றுவரும் உருவம்தான் படம். மறுபிறப்பு எடுத்து வந்த கதாநாயர்களை, மனிதனாக, ஆவியாக என.. எத்தனையோ பார்த்திருக்கிறோம்.

சிங்கமாக, யானையாக, அவ்வளவு ஏன்..!? ஒரு சிறு குரங்காகவாவது மறுபிறப்பு எடுத்திருந்தால் மனிதனை பழிவாங்குவது சுலபம். ஆனால் இப்படத்தில் கதாநாயகன் ஒரு ‘ஈ’-ஆக மறுபிறப்பு எடுக்கிறான். பலமற்ற எளிய ஈயாக பிறந்துவிட்ட அவனால் என்ன செய்துவிட முடியும்? தன் இருப்பே பெரும் போராட்டம். எக்கணத்திலும் தான் கொல்லப்பட்டு விடலாம் இம்மனிதர்களால் என்னும் நிலையில் முன் ஜென்மத்துத் துயரத்திற்கு பழி வாங்குவது என்பது எப்படி சாத்தியம்? இயலுமா? அதற்காக.. அதற்காக.. அப்படியே விட்டுவிட முடியுமா? ஒரு எளிய, சிறிய உயிருக்குள்ளாக உறைந்துக்கிடக்கும் காதல் அதை அனுமதிக்கவில்லை. தன் உடல் கொண்டு, தன் பலம் அறிந்து அதன் சாத்தியங்களைப் பயன்படுத்தி பழிவாங்கத் துணிகிறது.. அங்கே, காதல் கொண்ட மனங்கள் அனைத்தும் அந்த எளிய உயிரின் பக்கத்தில் நிற்கின்றன.

அழகான இளம் காதலன் ஒருவன், ஒரு ஈயாக மறுபிறப்பு எடுத்துவரும் போதும் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதற்கு காரணம் ராஜ்மௌலி என்கிற ஒரு சிறந்த படைப்பாளி. தன் காட்சி அமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினால் அதைச் சாத்தியமாக்குகிறார். ஒரு படைப்பாளி, தான் சொல்ல வருவதை பார்வையாளன் மனமொத்து, கேள்விகளற்று ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல வேண்டும். அப்போதே அது முழுமையான படைப்பாகிறது. அதன் பொருட்டே அவன் படைப்பாளியாக அங்கீகரிக்கப்படுகிறான். அதே படைப்பு மனித உணர்வுகளைப் பேசும்போது சிறந்த படைப்பாகிறது. அதைப் படைத்தவன் சிறந்த படைப்பாளியாகிறான்.

‘நான் ஈ’ நமக்கெல்லாம் நன்கு பழக்கமான எளிய ‘காதல் உணர்வை’ அடிப்படையாகக் கொண்டது, மற்ற இந்திய படங்களைப் போலவே. ஆனாலும் புதியது போல நம்மை வசீகரிக்கிறது. மிக எளிய உயிரினமாக பிறந்துவிட்ட ‘ஈ’ கொண்டிருக்கும் காதல் நம்முடைய ‘லாஜிக்கல்’ சிந்தனைகளையும் மீறி ஏற்றுக்கொள்ள முடிகிறது. நான் படம் முழுவதும் அந்த ஈ-ஐ கதாநாயகனாகவேதான் பார்த்தேன். ஆறு, ஏழு சீன்களிலும் ஒரு பாடலிலும் வந்துபோன அந்த இளம் காதலன்தான் படம் முழுவதும் எனக்குத் தெரிந்தான். இதற்கு பின்னாலிருக்கும் காதல் உணர்வே அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது.

ஆங்கில படமான ‘Wall-E’ பார்த்திருக்கிறீர்களா?  எளிய ரோபோ ஒன்று காதல் வயப்படுவதும் அதன் பொருட்டு அது படும் இன்னல்களும்தான் கதை. மிகச் சிறந்த படங்களில் ஒன்று. உலகில் இதுவரை வந்த காதல் படங்களில் சிறந்தவை என எந்த அடிப்படையில் நீங்கள் வரையறுத்தாலும் 'Wall-E'ஐ நீங்கள் தவற விட முடியாது. அப்படியான ஒரு காதல் காவியம் அது.  அப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், அதை உணர்வுப் பூர்வமாக ஏற்றுக்கொள்ள உங்கள் லாஜிக்கல் திங்கிங் இடமளிக்குமென்றால் ‘நான் ஈ’யும் உங்களை வசீகரிக்கும்.


நான்கு அல்லது ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்கள், ஒரு நல்ல நடிகன், சிறப்பான தொழில்நுட்பம், அதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பப் படை இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சிறந்த படைப்பாளி ஒரு நிறைவான படத்தை எடுத்துவிட முடியும் என்பதற்கு இப்படம் சாட்சி.

பெரிய நடிகன், பெரிய நடிகை, பெரிய வில்லன், பெரிய காமெடியன் என பெரும் கூட்டமொன்றைச் சேர்க்க விரும்பவதும், அதன் பொருட்டு கால விரயத்தையும், பொருள் விரயத்தையும் செய்வது நம் இந்திய சினிமாவின் வழக்கம். அதை எல்லாம் ராஜ்மௌலி இயல்பாக தவிர்த்திருக்கிறார் அல்லது தாண்டி வந்திருக்கிறார். ஒரு சிறப்பான படைப்பாளி மட்டும் இருந்துவிட்டால், அற்புத படைப்புகளை கொடுத்துவிட முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்திய சினிமாவிலேயே உண்டு. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜ்மௌலி.

சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் வசனமான ‘பன்னிங்கதான் கூட்டமாக வரும்..சிங்கம் சிங்கிளாத்தான் வரும்..!’ என்ற வசனம் இப்படத்தில் ஒரு காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. ஈயாக வந்திருக்கும் நாயகனின் சார்பாக சொல்லப்படும் அந்த வசனம்.. மிகப் பொருத்தமானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. சிறு மாற்றத்தோடு அதை நாமும் அங்கீகரிக்கலாம்,

‘சிங்கம் மட்டுமில்ல கண்ணா.. ஈ-யும் தனியாத்தான் வரும்.. உன்ன கலங்கவும் அடிக்கும்..!’.


Sunday, June 24, 2012

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..)


கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ்வப்போது சென்றிருந்தாலும் அவை எல்லாம் குறுகிய பயணமாக அமைந்ததனால் சிலரைச் சந்தித்தும், பலரைச் சந்திக்காமலும் இருந்திருக்கிறேன். அப்படிச் சந்தித்த, சந்திக்காது விட்டுப்போன சிலரை இப்பயணத்தில் சந்தித்தேன்.

இந்த பதினெட்டு ஆண்டு கால இடைவெளியில் எங்களிடையே பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. பலர் (ஏன்?!.. எல்லாருமே!) திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்றுவிட்டனர். வேலை, கல்யாணம், பிள்ளை, வீடு கட்டுதல் என சமூக மதிப்பீட்டுத் தளத்தில் நிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக, அதற்கே உரிய இன்ப துன்பங்களின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகான சந்தித்தலில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டிருந்தோம். அவர்கள் வாழ்க்கையில் பல படிகள் கடந்து வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவனான நான் எங்கே நிற்கிறேன் என்ற கேள்வியை எதிர்கொள்ளும் வரை..!

இத்தகைய கேள்வி எழும் சந்தர்ப்பம், பல சந்திப்புகளில் அமைந்தது. ஒன்று நண்பர்கள் அதை நேரடியாக கேட்டார்கள் அல்லது பேசும் தோரணையில் அதே கேள்வியை என் எண்ணத்தில் ஏற்படுத்தினார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் பணிபுரியச் சென்றுவிட்ட ஒரு நண்பர். பள்ளியில் எனக்கு மூத்தவர். ஒரு வகுப்பு முன் கடந்தவர். ஆனாலும் நண்பர். பல வருடங்களுக்கு பின் அவரைச் சந்திக்கிறேன். அவர் இப்படி என்னிடம் கேட்டார், “ஆமாம் நீ சினிமாவில் இருக்கியாமே? ஏண்டா? கோபி சொன்னான். எனக்கு ஆச்சரியம் தாங்கல.. நீ நல்ல பையனாச்சே?!”

இந்த கேள்வியைச் சரியாக புரிந்துக்கொள்ளுங்கள். என் நண்பன் ஒருவன் என்னைப்பற்றி அவரிடம், நான் சினிமாவில் இருப்பதை சொல்லி இருக்கிறான். அதற்கு அவரின் ரியாக்‌ஷன் ‘அட அவன் (நான்) நல்ல பையனாச்சே’ என்பது. அதாவது நல்ல பையனான நான், சினிமாவில் ஏன் இருக்கிறேன்? என்பதும் ஏன் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறேன் என்பதும் அவரின் ஆதங்கம். இதை அவர் என்னிடமே சொன்னபோது அதற்கு நான் என்ன ரியாக்‌ஷன் செய்வது என்று தெரியவில்லை.

அடுத்து, மற்றொரு நண்பர். இத்தனை வருடங்களில் அவ்வப்போது சந்திக்க கூடியவர்தான். பத்தாவதிலேயோ அல்லது பன்னிரெண்டாவதிலேயே படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பத் தொழிலான ஸ்டேஷனரி கடை நடத்திக் கொண்டிருப்பவர். இம்முறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது என்ன படம் செய்கிறேன், வேலை எல்லாம் எப்படிப் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் விசாரித்தவர். கடைசியாக, மெல்லிய குரலில் கேட்டார் “எப்படிச் சமாளிக்கற? இது தேவைதானா?”

இந்த இரண்டு கேள்விகளும், என் வேலை மட்டும் சார்ந்த கேள்விகள் அல்ல. இவ்வளவு நாட்கள் நான் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீது வைக்க பட்ட கேள்விகள் என்பதாய் பார்க்கிறேன். ஏனெனில் எல்லாரையும் போல, கடமையாகக் கொள்ளப்பட்ட பள்ளி படிப்பிற்கு பிறகு என் வாழ்க்கையை முன் நகர்த்த நான் ஈடுபட்ட அத்தனை செயல்களையும் இக்கேள்விகள் அர்த்தமற்றதாக்கிவிடுகின்றன.

ஆம்.. எல்லாரையும் போல், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடுகட்டுதல் என்று இல்லாமல்.. லட்சியம், போராட்டம், புண்ணாக்கு என்று உழலும் நான், அவர்களால் எப்படி மதிப்பிடப்படுகிறேன் என்பதை அறியும் போது, மிகுந்த ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகிறேன்.

இன்று, நான் வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகிறார்கள். ஒருவர் என் தொழிலையே சந்தேகிக்கிறார். ஒழுக்கமற்றதாக, சமூக மதிப்பீடுகளுக்கு அடங்காததாக, நல்ல பையனொருவன் இருக்கத் தகுதி அற்ற இடமாக அதை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் இது ஒரு பிழைப்புக்கு ஆகாத தொழிலாக பார்க்கிறார் எனும் போது, நான் கொள்ளும் மனநிலையை எப்படி விவரிப்பது?

இதற்கா இத்தனை ஆண்டுகள் செலவழித்தேன்? இதற்கா இத்தனை வருட போராட்டம்? இதற்கா இத்தனைத் தகுதியாக்கிக் கொள்ளல்?

மனமெங்கும் பெரும் பாரம் குடி கொண்டது நண்பர்களே.. இச்சமூகம் ஒரு சினிமாக்காரனை (அட்லீஸ்டு.. வெற்றி பெறாதவனை) எப்படி மதிப்பிடுகிறது என்று பார்த்தீர்களா?

இவர்கள் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நண்பனான என்னையே இவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் போதுதான் ஒரு பெரும் கோபம் எழுகிறது. அவர்கள் என் மீது அன்பு கொண்டே கேட்டார்கள் என்ற போதும்.. அக்கேள்விகளுக்கு இரண்டு பதில்கள்தான் இருக்க முடியும்.

ஒன்று.. பிழைக்க வழியில்லாத, கேடு கெட்ட சினிமாவில் உழன்று கிடக்கும் நான், ஒரு துப்பு கெட்ட பிறவியாக இருக்க வேண்டும்.

இரண்டு.. மேற்சொன்னவர்களைப் போன்றோர் அறியாத ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவனாக நான் இருக்க வேண்டும்.

இதில் எது சரி என்பதை, காலமும் நான் கொள்ளும் வெற்றியும்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் நண்பர்களே..

கடமைக்கு படித்து, பணம் மட்டுமே சம்பாதிக்க வேலைக்குப் போய், ஊர் மெச்சும் வாழ்க்கை வாழத் தகுதி அற்றவன் நான். விருப்பமற்றதாலோ, இயலாமையாலோ அத்தகைய ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்காதவன். படிப்பு என்பது அறிதல் பொருட்டு என்று கொண்டவன். வாழ்க்கை என்பது கடமையின் பொருட்டும், அக்கடமை ஒரு இலக்கு நோக்கி ஒழுங்கு செய்யப்படவேண்டியது என்றும் கற்பிக்கப்பட்டவன். அதை நோக்கியே என் பயணம் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சிறுவயது படக்கதை வாசிப்பும், ஓவியப் பயிற்சியும், புகைப்படங்களும் திரைப்படங்களும், புகைப்படத்துறை மீது ஈர்ப்பை ஏற்படுத்தின. புகைப்படத்தின் நீட்சியான ஒளிப்பதிவின் மீது காதல் உண்டானது ‘பெரிதினும் பெரிது கேள்’ வழி வந்தது. பள்ளிப் படிப்பு முடிந்தபோது என் வருங்காலம் எதை நோக்கியது என்பதை முடிவெடுத்து வைத்திருந்தேன். அது திரைப்பட ஒளிப்பதிவாளனாகுவது. ஏன் ஒளிப்பதிவாளனாக ஆக வேண்டும்? சினிமாவின் மீது இருக்கும் மயக்கமா? ஆர்வக்கோளாறா? மோகமா? இவை எல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியும். அப்படி சொன்னால் அது முழு உண்மையாகாது நண்பர்களே.. ஆம், எல்லாரையும் போல சினிமாவின் மீது ஒருவித மயக்கமிருந்தது, மோகம் இருந்தது, ஆர்வம் இருந்தது. ஆனால் அது கோளாறு இல்லை.!

இங்கே சமூகத்தில் பெரும்பாலானோருக்கு ஒன்று புரிவதில்லை, திரைத்துறையில் வெற்றி கொள்வதற்கு எத்தனை முயற்சியும் தகுதியும் வேண்டும் என்பது. அதை வெறும் உல்லாச இடமாக கருதுகிறார்கள். விளையாட்டில், அரசியலில், ஏன் ஒரு பெரும் அரசுப்பணியில் தங்களுக்கான இடத்தை அடைவது எவ்வளவு கடினமோ, அதேவிதமான கடினம் இங்கேயும் உண்டு. ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர், பொறியாளர் வேலைகளுக்கு என்ன தகுதி வேண்டுமோ அதே போன்றதொரு தகுதி திரைத்துறையில் வெற்றி பெறவும் தேவையாக இருக்கிறது. இவ்வேலைகளை விடவும் திரைத்துறையில் இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, கலை இயக்குனராக, படத்தொகுப்பாளராக, இசைப்பொறியாளராக இருப்பதில் எவ்வித தகுதிக் குறைவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒளிப்பதிவாளனாக உருவாக வேண்டும் என்று முடிவெடுத்ததும், நான் ஒன்றும் திரைத்துறையை நோக்கி ஓடி வந்துவிடவில்லை. அது ஒரு நீண்ட நாள் இலக்காகத்தான் நிர்ணயித்திருந்தேன். அதை நோக்கிய படிக்கட்டுகளை செதுக்கும் வேலையைத்தான் இவ்வளவு நாட்களும் செய்துகொண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்புக்கு பிறகு, கல்லூரிப் படிப்பு, அதனோடு சேர்ந்து புகைப்படக்கலையிலும் கிராபிக் டிசைனராக தேர்ச்சி, விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சியும், அது கொடுத்த தன்னம்பிக்கையின் வாயிலாக திரைத்துறை பிரவேசமும் என அது ஏழு வருடங்களை எடுத்துக்கொண்டது. ஐந்து வருடங்கள் உதவி ஒளிப்பதிவாளனாக பயிற்சி பெற்று இறுதியில் ஒளிப்பதிவாளனாக என் இலக்கை அடைந்துவிட்டேன். ஆனால் அது முடிவன்று. ஏனெனில், சினிமாவில் வெற்றி பெற்றவனாகவும் இருக்க வேண்டும். இல்லையேல், அதற்கென்று எவ்வித மதிப்பும் கிடையாது.. பாம்பாக இருந்தாலும் சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்க வேண்டும்.

சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பாக இருக்கதான் எத்தனை போராட்டம்? எத்தனை அவமானங்கள்? எத்தனை இழப்புகள்?

இதற்குத்தான் பதினெட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் பல வருடங்கள் ஊருக்குப் போகாமல் இருக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் பல வருடங்கள் தந்தையின் புறக்கணிப்பை ஏற்க வேண்டியதிருந்தது. இதற்குதான் காதலை விட்டு கொடுக்க வேண்டியதிருந்தது. இதற்குத்தான் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முடியாதவனாக இருக்க வேண்டியிருந்தது. இதற்குதான் முப்பத்தைந்து வயதுக்கப்புறமும் பிரமச்சாரியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தனை நாட்களையும்தான் என் நண்பர்களின் கேள்விகள் அர்த்தமற்றதாக்கி விட்டன. இவ்வளவு நாட்கள் மெனக்கெட்டது அத்தனையும் பயனற்றதோ? வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

வெற்றியைச் சந்திக்கும் முன்னர் வரையான சூழலை ஒருவன் எப்படி எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை நான் அறிந்தவனே ஆனாலும் அதை நேரில் அனுபவிக்கையில், அதையும் நானறிந்த நண்பர்களிடமே பெற்றதும் அதன் வலியை எனக்கு உணர்த்தியது.

ஆனால் நண்பர்களே.. இப்படி வாழ்க்கையை வீணடித்தவன் நான் மட்டுமல்ல. என்னைப்போலவே பல நண்பர்களை நான் அறிவேன். நான் கடந்துவந்த பாதையை இங்கே சொல்லிவிட்டேன். அப்படி சொல்ல வாய்ப்பற்றவர்கள் பலருண்டு. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வேட்கையை அறிவேன். அவர்களின் தகுதிகளை அறிவேன். அவர்களின் முயற்சியையும் இழப்பையும் வேதனையும் அறிவேன். அவற்றுக்குப் பின்னே பெரும் கனவொன்று உண்டு என்பதும் அதை நனவாக்க முயலும் அவர்களின் தகுதியும், இருப்புமே என்னை மீட்டெடுக்கின்றன. இத்தனை பேரின் இருப்பும் முயற்சியும் பொருளற்றவை அல்ல என்பதை உணர்ந்தவனாக, என் அவநம்பிக்கைகளைத் துரத்தி அடிக்கிறேன். அவர்களின் பொருட்டே, அவர்களைக் கொண்டே என் மீது ஏவப்பட்ட அக்கேள்விகளை துடைத்து எறியவும் முற்படுகிறேன்.

நல்லவர்கள் இருக்கத் தகுதி அற்ற இடமாக, பிழைக்க வழி அற்ற துறையாக சினிமா இல்லை என்பதற்கு என் நண்பர்களே சாட்சி. நேர்மையான, தகுதியான பல நண்பர்களை நான் அறிவேன். அவர்களே என்னைப் பலவானாக்குகிறார்கள். அவர்களே என்னை நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். இதே கேள்விகளை அவர்களும் எதிர்கொண்டிருக்கக் கூடும். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்க கூடும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

அவர்களின் பொருட்டும் இக்கேள்வியை இங்கே பதிவும் செய்கிறேன்.

நாங்கள் என்ன.. மதியற்ற, ஒழுக்கமற்ற, பிழைக்கத் தெரியா துப்பு கெட்டவர்களா?