டிஜிட்டல் சினிமா (Digital Cinema) தொடர்ந்து முன்னோக்கி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்டே வருகிறது.
அண்மையில் (16/09/2012) கேனான் நிறுவனம் (Canon) சென்னையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தது. அதன் நோக்கம் தன்னுடைய புதிய சினிமாக் கேமராக்களையும் அதற்கான லென்ஸுகளையும் தமிழ் படைப்பாளிகளிடையே அறிமுகப்படுத்துவது.
திடீர் அதிருஷ்டம் (தமிழில் என்ன? நல்லூழ்..!) அடித்ததனால் எதிர்பாராமல் திரைத்துறையில் நுழைந்த கேனான், தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. செய்தியாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கூடுதல் பயனாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கேனான் புகைப்படக் கேமராக்களில்
தரமான HD விடியோக்கள் எடுக்கும் வசதியை கொண்டுவந்தது. இதன் மூலம் புகைப்படக்காரர்களே செய்தி சேகரிப்பின் போது தேவைப்பட்டால் விடியோவும் எடுத்துக்கொள்ளலாம் என்று கருதப்பட்ட அவ்வசதி கேனான் நிறுவனத்திற்கு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது.
'Canon EOS 5D Mark-II' கேமராவில் கொண்டு வந்த அவ்வசதி (Full HD Video capture at 1920 x 1080) திரைப்படத்துறைக்கும் போதுமானதாக இருந்ததும், சிறிய கேமராவாக இருப்பதனால் அதன் சாத்தியத்தைப் பயன்படுத்த திரைத்துறை முயன்றதும்தான் இடையே நடந்த திருப்புமுனை. அது கேனான் நிறுவனத்திற்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது.
திரைத்துறை தன் கேமராக்களைப் பயன்படுத்தத் தயாராகயிருப்பதைக் கண்டு கொண்ட கேனான் தொடர்ந்து தன்னுடைய கேமராக்களை மேம்படுத்தி சினிமா கேமராக்கள் (Canon Cinema EOS cameras) என புதிய மாடல்களைக் கொண்டுவரத்துவங்கியது. ஒருபுறம்
'EOS 7D, EOS 5D Mark-III' என அறிமுகப்படுத்தியது. மறுபுறம் புகைப்படத்திற்கென வடிவமைக்கப்பட்ட கேமராவிலிருந்த குறைகளைக் களைந்து View finder,Video Out போன்றவற்றை மேம்படுத்தி
‘EOS C100’,‘EOS C300’ என இரண்டு கேமராக்களை சினிமாவிற்கெனவே அறிமுகப்படுத்தியது. அண்மைக் கால வரவாக
'EOS C-500' மற்றும்
'EOS-1D C'ஆகிய கேமராக்களை 4K தரம் கொண்ட கேமராக்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் புதிய தளத்திற்கு கேனான் நகர முயற்சிக்கிறது.
|
Red Scarlet X |
இதுவரை
‘RedOne’ கேமராவிற்கு மாற்றாக கேனான் பார்க்கப்பட்டது. ரெட்டின் இடத்தைதான் கேனான் தக்க வைத்துக்கொள்ள முயன்றது. அதற்கு போட்டியாக ரெட் தன்னுடைய புதிய மற்றும் சிறிய மாடலான
'RED SCARLET-X'-ஐ களத்தில் இறக்கியதையும். மறுபுறம்
'RED EPIC' என்ற கூடுதல் வசதிகள் (5K,120fps) கொண்ட கேமராவை ரெட் அறிமுகப்படுத்தியதையும் நாம் அறிவோம். (அண்மையில் வெளியான பில்லா-2 'RED EPIC'கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்டது)
|
Red Epic |
இந்நிலையில் தான் கேனான் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிருக்கிறது. 4K -வை கொண்டு வந்திருப்பதன் மூலம் தன் இடத்தில் வலுவாகக் காலூன்ற முயல்கிறது. மேலும் தன்னையும் இத்துறையில்(சினிமா) ஒரு ஜாம்பவானாக மாற்றிக் கொள்ள முயல்கிறது. டிஜிட்டல் சினிமாவைப் பொருத்த வரை
SONY, PANASONIC போன்ற நிறுவனங்கள் தான் முன்னோடியாக இருந்திருக்கின்றன. இத்துறையில் காலூன்ற நீண்ட காலமாக இந்நிறுவனங்கள் முயன்று வந்திருக்கின்றன. சோனி தன்னுடைய
‘CineAlta’ வரிசை கேமராக்களையும் பேனாசோனிக்
‘VariCam’ வரிசைக் கேமராக்களை தொடந்து முன்னிறுத்தியும், மேம்படுத்தியும் வந்திருக்கின்றன, வருகின்றன. இடையே கேனான் புகுந்து ’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’ என்று சொல்லத் துவங்கிருக்கிறது.
கேனான் தன்னுடைய
'EOS C-500' மற்றும்
'EOS-1D C' கேமராக்களுக்கு அதிக விலை வைத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அதாவது, திரைத்துறையைச் சார்ந்தும் தன்னை ஒரு ‘Professional’-ஆக மாற்றிக் கொள்ள முயல்வதாகப் படுகிறது. புகைப்படத்துறையில் கேனான் எப்போதும் ‘Professional’தான். வீடியோ கேமராத் தயாரிப்பிலும் (டிவி, ஆவணப்படம் எடுக்க உதவும் கேமராக்கள்) கேனான் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பினும் திரைத்துறையில் அதற்கென்று எந்த இடமும் இல்லாமல் தான் இருந்தது. அவ்விடத்தைத்தான் இப்போது கைப்பற்ற கேனான் முயல்கிறது என்பதை உணரமுடிகிறது.
சிறிய, விலை குறைந்த கேமராக்களின் மூலம் ரெட் கேமராக்களுக்கு மாற்றாகயிருந்த கேனான் தன்னுடைய விலை அதிக கேமராக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் பிம்பத்தை மாற்ற முயல்கிறது என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. எத்துறையானாலும் விலை அதிகரிக்க அதிகரிக்கத்தானே அதன் மதிப்பு கூடும்?! அதைத்தான் கேனான் செய்கிறது. அட.. அப்படி விலை கூடினால் அது தன் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வராதா? என்ற கேள்வி எழலாம். அப்படி ஆக வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் விலை குறைந்த கேமராக்களும் ('EOS 7D,EOS 5D Mark-II, EOS 5D Mark-III') ஏற்கனவே கேனான் வைத்திருக்கிறது அல்லவா.. அதிக விலை கொடுக்கத் தயாரில்லாத வாடிக்கையாளர்களை அக்கேமராக்கள் சரிகட்டி விடும். ஆகவே கேனான் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோம் என்று தயங்க வேண்டியதில்லை என நினைத்திருக்கலாம். இதன் மூலம் இந்தியா, தைவான், கொரியா போன்ற ‘குறைந்த முதலீடுகளுக்கு’ முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் கேனான் தன் வேர்களை ஆழமாக பரப்பிவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது.
அங்கே.. ரெட் ஒன் நிறுவனம் தன்னுடைய
‘RED EPIC’ கேமராவிற்கு ‘Upgrade’ அறிவித்திருக்கிறது.
'DRAGON SENSOR' மேம்படுத்தல் மூலம்
6K Resolution,15+ Stops Native Dynamic Range, 120 fps @ Full 5K என அடுத்த தளத்திற்கு நகர்ந்திருக்கிறது.
கண்னை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டு விட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே. தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது.
ஆயினும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர.. வளர, அது கொடுக்கும் வசதிகள் படைப்பாக்கத்திலிருக்கும் சுமைகளைக் குறைத்து இலகுவாக்கும். அதேநேரம் அது கொடுக்கும் சவுகரியத்தில் படைப்பின் தரம் குறைந்து போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. குறைந்த முதலீடு என்பதை அனுகூலமாக்கி தரமற்ற பல படைப்புகளும் உருவாகிட வாய்ப்புகள் உண்டு. அத்தகைய நிலை எப்போதும் முதலீட்டார்களையும் ரசிகர்களையும் தவறான முடிவுக்கும் நிலைப்பாட்டுக்கும் கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆகையால் காலமும், தொழில்நுட்பமும் வழங்கும் வாய்ப்புகளைப் படைப்பாளிகள் சரியான விதத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமான படைப்புகளை உருவாக்கிட வேண்டும். ஆரோக்கியமான படைப்புகள் உருவாக்க தகுதியான படைப்பாளிகள் வேண்டும். தகுதியான படைப்பாளி என்பவன் தகுந்த அறிவும் அனுபவமும் கொண்டு, அதன் வழி பெற்ற படைப்பாளுமை கொண்டவனாகிருப்பான். அத்தகைய படைப்பாளிகளாலேயே நேர்த்தியான படைப்புகளை உருவாக்கிட இயலும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அருமையான கட்டுரை தலைவரே
பதிலளிநீக்குநன்றி தலைவரே.. :)
பதிலளிநீக்குபல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுரைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.எனக்கும் ரொம்ப நாளா கெனொன் கேமரா வாங்க ஆசை.இந்த பதிவு தெளிவாக்கி இருக்கு...
பதிலளிநீக்குபல புதிய விவரங்களை அறியத் தந்த இடுகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஹலோ பாஸ், உங்கள் தளத்தை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது வேண்டுகோள் ஒன்று. நீங்கள், விலை குறைந்த கேமராக்கள்(குறும்படம் & திரைப்படம் எடுப்பதற்கு போதுமான கேமராக்கள்) தொடர்பாக ஒரு பதிவு எழுதவேண்டும். அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி ராஜா சார். முந்திய கட்டுரைகளில் அவற்றை எழுதிருக்கிறேன்.
பதிலளிநீக்கு